Anbenum Idhazhgal Malarattume! 5
Updated: 1 day ago
அணிமா 5
பாட்டியின் முகம் சட்டென மாறிப்போகவும், கதவு வரை சென்ற மலர் மீண்டும் திரும்ப வந்து செங்கமலம் பாட்டியின் கன்னங்களைக் கிள்ளி, "க்யூட் பாட்டி! உம்மா!" என்று சொல்லிவிட்டு,
"பாட்டி, பொண்ணுங்க அவங்கள அழகு படுத்திக்கிறதே மத்தவங்கள அட்ராக்ட் பண்ணத்தானு நினைக்கறவ நான். ஸோ... நான் போடற டிரஸ் என்னோட சௌகரியத்த பேஸ் பண்ணிதான் இருக்கும். அதனால நான் இப்படித்தான் இருப்பேன். நீங்க தப்பா நினைக்காதீங்க. பை பாட்டீஸ்! பை ஆல்!" என்றவாறு சாருமதியைப் பார்த்துப் புன்னகைத்து தலை அசைத்து விடை பெற்றுக்கொண்டு அங்கிருந்து சென்றாள் மலர்.
அவள் சென்ற திசையையே சில நொடிகள் கண் இமைக்காமல் யோசனையுடன் பார்த்துக்கொண்டிருந்தார் செங்கமலம் பாட்டி.
பிறகு மதிய உணவை உண்டுவிட்டு பழைய கதைகளை மாலை வரை பேசிக்கொண்டிருந்துவிட்டு அதன் பின் அங்கிருந்து கிளம்பிச்சென்றனர் செங்கமலம் பாட்டியும் சாருமதியும்.
பழைய சொந்தங்களை சந்தித்த மகிழ்ச்சியில் இரு குடும்பத்தினருமே திளைத்திருந்தனர்.
***
சில தினங்கள் கடந்த நிலையில், அங்கே வருவதாக முன்னதாகவே தகவல் கொடுத்துவிட்டு வெங்கடேசனின் வீட்டிற்கு வந்திருந்தார் ஈஸ்வரின் சித்தப்பாவான கோல்டன் குமார்.
பரஸ்பரம் நலம் விசாரித்துவிட்டு, சூடாமணி அவரை அன்புடன் உபசரிக்க, தனது சொந்த தமக்கையின் நினைவில் அவரது கண்கள் கலங்கின. உடனே தன்னைச் சமாளித்துக் கொண்டவர், அவரது வழக்கமான கலகலப்பான பாணியில், அவரது சித்தப்பா மற்றும் சித்தியுடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்பொழுது மலர் வீட்டிற்குள் நுழையவும் அவளைப் பார்த்தவர், "என்னம்மா பொண்ணு நீ எப்படி இருக்க?” என்று எதார்த்தமாய் விசாரிக்க, அவள் அடையாளம் புரியாமல் திகைத்து விழிக்கவும், "மலர்! குமார் மாமாடா. செங்கமலம் பாட்டி நம்ம எல்லாரைப் பத்தியும் சொல்லியிருக்காங்க, அதான் பல நாள் பழகின மாதிரி உங்கிட்ட இவ்ளோ உரிமையா பேசறான்" என்று சரோஜா பாட்டி சொல்ல, கரம் குவித்து, "நல்லா இருக்கேன் மாமா!" என்று பதில் சொன்னாள்.
பின்பு அவள் சென்று சுந்தரம் தாத்தாவின் அருகில் உட்கார்ந்துகொள்ள, தொண்டையைச் செருமிக்கொண்ட குமார், "சித்தப்பா! ஒரு முக்கியமான விஷயம். அதைப் பேசத்தான் நான் இன்னைக்கு இங்க வந்ததே" என்று பீடிகையுடன் ஆரம்பித்தவர், சுந்தரம் அவரைக் கூர்ந்து கவனிக்கவும் தொடர்ந்தார்.
"நம்ம செங்கமலம் பெரியம்மா வீட்டுல அவங்க பேத்தி ஜீவிதாவுக்கு வரன் பார்த்துட்டு இருக்காங்க. அன்னைக்கு இங்க வந்துட்டுப் போன பிறகு உங்க எல்லாரையும் சந்திச்சதுல, விட்டுப்போன சொந்தம் மறுபடியும் சேர்ந்ததுல பெரியம்மாவுக்கு ரொம்பவே திருப்தி. அதனால அவங்கப் பேத்தியை உங்கப் பேரன் பிரபாகருக்குப் பேசலாமான்னு கேட்டாங்க? எனக்குமே அது சந்தோஷம்தான்! பரந்தாமன் அண்ணா இறந்த பிறகு பெரியம்மா வீட்டுல எல்லா நல்லது கெட்டதும் நான்தான் முன்ன நின்னு செய்யறது”
குமார் தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தாலும் அவரது பார்வை அவ்வப்பொழுது அங்கே கைப்பேசியைக் குடைந்து கொண்டு உட்கார்ந்திருந்த மலரிடம் சென்று மீண்டது.
தொடர்ந்தார் குமார், "அதனாலதான் நானே நேர்லயே கேட்கலாம்னு வந்தேன்! உங்க எல்லாருக்கும் சம்மதம்னா மேற்கொண்டு பேசலாம்!" என்று ஒருவாறு கோர்வையாகப் பேசி முடித்தார்.
அடுத்த நொடி சொல்லி வைத்தாற்போல சுந்தரம், சரோஜா, சூடாமணி, மலர் நால்வரும் சம்மதத்திற்காக வெங்கடேசனுடைய முகத்தைப் பார்க்கவும் யோசனையுடன் அவர்களைப் பார்த்தவர், "அவங்க ரொம்ப பெரிய இடம். எதுக்கும் எனக்கு ஒரு நாலு நாள் யோசிக்க டைம் கொடுங்க மச்சான்!" என்று அப்போதைக்கு அந்தப் பேச்சுக்குத் தொடரும் போட்டுவிட அங்கிருந்து கிளம்பிப் போனார் குமார்.
அடுத்த நாளே மாமனாரைத் தனியே அழைத்துச் சென்ற வெங்கடேசன், "தெரிஞ்சவங்க மூலமா விசாரிச்சேன் மாமா! உங்க ஊருதான அவங்க! அவங்க வீட்டுப் பெரிய பொண்ணு, எல்லா ஏற்படும் செஞ்ச பிறகு கல்யாணத்துக்கு முதல் நாள் பணம் நகை எல்லாத்தையும் எடுத்துட்டு யாரோடவோ ஓடிப் போயிட்டாளாமே. ஊருக்குள்ள அவங்களுக்குப் பெரிய தலை குனிவா போய், ஊரை விட்டே வந்துட்டாங்களாம்! இது வரைக்குமே திரும்ப ஊர் பக்கமே போகலியாமே! இப்ப வசதி வந்துட்டதால எல்லாத்தையும் பூசி மொழுகறாங்களோன்னு தோணுது! அதனாலதான் கொஞ்சம் யோசனையா இருக்கு!" என்று சொல்ல,