அணிமா 4
"உன்னோட போலீஸ் ஆஃபிசர் கெத்த எங்கிட்டயே காமிக்கிறயா? அந்த நாய பார்த்தா, உனக்கு இன்னசண்ட்டா தோணுதா? என்னையே மிரட்டுவியா நீ? அங்கேயே உன்னையும் ரெண்டு போட்டிருப்பேன். நீ யூனிஃபாம்ல இருந்ததால தப்பிச்ச!" என்று சொல்லிக்கொண்டே அவனை மலர் அடிக்கவும்,
ஒரு பூனை, அதன் குட்டியின் கழுத்தில் கவ்வித் தூக்கும் இலாவகம் அவள் அவனை அடித்த அடியில் இருந்தது போலும்! "காந்தக் கண்ணழகி! ஆங் லெஃப்ட்ல பூசு! ஆங் ரைட்ல பூசு!" எனச் சொல்லிக்கொண்டே ஜெய் இப்படியும் அப்படியுமாகத் திரும்ப,
"அட ஈஈஈஸ்வராஆஆ! ஜெய்! நீ அடங்கவே மாட்டியா?" என்று கேட்டுக்கொண்டே அவள் இன்னும் இரண்டு அடி அடிக்கவும், அவளுடைய கையைப் பிடித்து தடுத்தவன், "ஏய் என்ன! நீ செஞ்சு வெச்ச வேலைக்கு நான் அத்தைக்கிட்ட மட்டும் சொல்லியிருந்தா நீ இந்த ஆட்டம் ஆட மாட்டடி" என அவன் குறிப் பார்த்து அடிக்கவும்தான் சற்று மலையிறங்கினாள் மலர்.
அதற்குள் அந்த மின்தூக்கி. நான்காவது தளத்தை எட்டிவிடவும் அதிலிருந்து வெளியேறினர் இருவரும். அங்கே அச்சுதனின் வீடு பூட்டப்பட்டிருக்கவும், "ஒண்ணுமில்ல! பாட்டி ஒரு வாட்ஸாப் க்ரூப்ல இருக்காங்க. அவங்க எல்லாரும் சேர்ந்து இங்க ஃபர்ஸ்ட் ஃப்ளோர்ல ஒருத்தங்க வீட்டுல மார்கழி பஜனை ஏற்பாடு பண்ணியிருக்காங்க. அங்கேதான் அம்மா, பாட்டி, தாத்தா மூணு பேரும் போயிருப்பாங்க. நீ இங்க வரப்போரது அவங்களுக்குத் தெரியும் அதனால சீக்கிரம் வந்திடுவாங்க. வா, அதுவரைக்கும் மொட்டை மாடில இருக்கலாம்" எனக்கூறிவிட்டு, அவனுடைய அம்மாவும் அச்சுதனின் மனைவியுமான சாவித்ரிக்கு அவர்கள் வந்துவிட்டதைத் தெரியப்படுத்தி குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பிவிட்டு மலருடன் மொட்டை மாடி நோக்கிச் சென்றான் ஜெய்.
"டிராக் சூட்ல இருக்க, ஜிம்முக்குப் போயிட்டு வரியா என்ன?" எனக் கேட்டுக்கொண்டே மாடிப்படியில் ஏறினாள் மலர்.
"ம்!. ஒரு அர்ஜன்ட் வேலை இருக்கு. இன்னும் அரைமணி நேரத்துல கிளம்பனும் அதனால ஒர்கவுட்ட பாதில விட்டுட்டு வந்துட்டேன்" என்றவன் நினைவு வந்தவனாக,
"உனக்கு எவ்ளோ தில்லு மலர்! பைபாஸ்ல அதுவும் நூறுல பைக்கை ஓட்டிட்டுப் போற, ம்... அவனைப் போட்டு அந்த அடி அடிச்சிருக்க. இந்த அழகுல என்னை வேற நக்கலா ஒரு பார்வை பார்க்கற, ம்..! அவன் இப்ப என்ன நிலைமையில இருக்கான்னு உனக்குத் தெரியுமா? அடி வயத்துல சிவியரா அடிபட்டிருக்கு. அவன் நிமிர்ந்து நடக்கவே மூணு வாரம் ஆகுமாம்" கோவமாகப் பேசத் தொடங்கி சிரித்துக்கொண்டே முடித்தான்.
"அவனை நான் அவ்ளோ ஸ்பீடா போய் பிடிக்காம இருந்திருந்தா, அப்படியே எஸ் ஆகியிருப்பான். அன்னைக்கே இன்னும் ஒரு சம்பவத்தையும் நடத்தி முடிச்சிருப்பான். என்ன செஞ்சு என்ன பிரயோஜனம்? இன்னும் ரெண்டு மூணு நாள்ல ஜாமீனில் வெளியில வந்துட போறான். நான் போட்ட எஃபோர்ட் மொத்தம் வீணாதான் போக போகுது" ஆயாசமாக வந்தன மலரின் வார்த்தைகள்.
தனது டிஷர்ட்டில் இல்லாத காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டே கண்கள் மின்னச் சொன்னான் ஜெய், "சான்ஸே இல்லம்மா! இந்தத் தடவை அவன உள்ள தள்ளியிருக்கறது ஜெய்கிருஷ்ணா ஐ.பி.எஸ் ஆச்சே! அதுவும் அவன் செஞ்சு வச்சிருக்கற கேவலமான வேலைக்கெல்லாம் அந்தக் கடவுளே நினைச்சாலும் அவனால ஜாமீன்ல வெளியில வர முடியாது!”
"ஏய், ஜாமீன்ல கூட வெளியில் வர முடியாத அளவுக்கு அப்படி என்னடா செஞ்ச?" என மலர் வியந்தவண்ணம் கேட்கவும்,
"ஐபிசி செக்ஷன் 376, 384, 392, 306, 307 அத்தனையிலும், அதாவது பெண்களை பாலியல் வன்கொடுமை செஞ்சது, கொள்ளை அடிச்சது, உன் ஃப்ரெண்ட் மாதிரி சில பேரைத் தற்கொலைக்குத் தூண்டினது, கொலை முயற்சி, இது எல்லாத்தையும் சேர்த்து அவனோட செல்ஃபோன்ல இருக்கற வீடியோவை ஆதாரமா வெச்சு... வெச்..சு செஞ்சிட்டேன்.
இதுல இருந்தெல்லாம் ஒரு வேளைத் தப்பிக்க முடிஞ்சா கூட, நார்கோடிக்ஸ் கேஸ்லேயும், அதாவது நாங்க, கமர்ஷியல் குவான்டிட்டின்னு சொல்லுவோம் அந்த அளவு போதை மருந்தோட அவனைப் பிடிச்சதா கேஸ் புக் பண்ணியிருக்கேன், மினிமம் பத்து வருஷத்துக்கு அவனால வெளியில வரவே முடியாது கண்ணம்மா!" என ஜெய் சொல்லி முடிக்கவும்,
"ஹுர்ரே!" என்றவாறு துள்ளிக் குதித்த மலர் அவளுக்கே உரித்தான இயல்பின் படி அவனது கன்னங்களை இரண்டு கைகளாலும் கிள்ளி "உம்மா!" என்றவாறு, "என்னோட ஜெய்ன்னா ஜெய்தான்! ச்சோ ஸ்வீட் டா!" என்று மகிழ,
"இதெல்லாம் வேண்டாம், உனக்காக இவ்ளோ செஞ்சிருக்கேன் இல்ல என்னை ஒரே ஒரு தடவை மாமான்னு கூப்பிடு!" என ஜெய் அனாயாசமாகச் சொல்லவும்,
"இதெல்லாம் போங்கு! நீ உன் ட்யூடியைத்தான செஞ்ச. அதுக்காகவெல்லாம் உன்னைப் போல சின்ன பசங்களையெல்லாம் என்னால மாமான்னு கூப்பிட முடியாது. நீ வேணா என்னை மச்சின்னு கூப்பிடு!" என்றாள் மலர் கொஞ்சமும் விட்டுக்கொடுக்காமல்.
"அடிங்க! என்னோட ப...த்த்த்து மணி நேரம் சின்னவ நீ. உயரத்துலகூட நீ என்னோட ஒரு இன்ச் கம்மிதான்! உன்னை நான் முறை வச்சு மச்சின்னு கூப்பிடணுமா? போடி போ! போய் உருப்படியா ஏதாவது வேலை இருந்தா பாரு" என்றான் ஜெய்.
அவன் உயரத்தைப் பற்றி பேசவும், அன்று நெடிய உருவத்துடன் ஜெகதீஸ்வரன் அந்தத் திரை அரங்கத்தினுள் நுழைந்த காட்சி ஒரு நொடி ஏனோ அவளையும் அறியாமல் அவளது மனத்திரையில் மின்னி மறைத்தது.
அப்படியே திகைத்து நின்றவள் தலையைக் குலுக்கி அந்த நினைவை விரட்டித் தன்னைச் சமாளித்துக்கொண்டு, அவனுக்குத் திருப்பிக்கொடுக்கும் வகையில்,
"ஓய் இந்தப் பத்துமணி நேரக் கணக்கெல்லாம் செல்லாது! செல்லாது! நம்ம ரெண்டு பேரோட பிறந்த தேதியும் வேணா ஒண்ணா இருக்கலாம். ஆனா நீதான் அவசர குடுக்கையாட்டமா குறை பிரசவத்துல எட்டாவது மாசமே பிறந்துட்ட. இல்லன்னா என்னோட ரெண்டு மாசம் சின்னவனா இருந்திருப்ப. அதனால நம்ம ரெண்டு பெரும் ஈக்வல்! ஈக்வல்!" என அவள் சொல்லிக்கொண்டிருக்க, சாவித்ரி அவர்களைக் கீழே அழைக்கவும் ஒருவரை ஒருவர் இடித்துத் தள்ளிக்கொண்டே இருவரும் இறங்கிச் சென்றனர்.
அங்கே படி இறங்கும் இடத்தில் அவர்களையே யோசனையுடன் பார்த்தவாறு நின்று கொண்டிருந்தான் தமிழ்.
ஆராய்ச்சியாக அவனைப் பார்த்தவாறே, முதலில் ஜெய் படிகளில் இறங்க, இவனை எங்கோ பார்த்ததுபோல் இருக்கிறதே என்ற என்ற எண்ணத்துடன் அவனைப் பின் தொடர்ந்து இறங்கிப் போனாள் மலர்.
தன் நண்பன் ஒருவனைக் காண்பதற்காக அங்கே வந்திருந்தான் தமிழ். அவனது கைப்பேசியில் இணைப்பு கிடைக்காமல் போகவும் மொட்டைமாடிக்கு வந்திருந்தான் அவன்.
ஜெய் மற்றும் மலர் இருவரும் பேசிக்கொண்டது எதுவும் அவனுக்குக் கேட்கவில்லை. ஆனால் அவர்களது செயல்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருந்தான்.
மலருக்கு அவன் முகம் நினைவில் இல்லையே தவிர, தமிழுக்கு மலரை நன்றாகவே அடையாளம் தெரிந்தது. எதிர்வரும் காலத்தில் அதுவே அவளுக்கு இடைஞ்சலாக மாறிப் போகுமோ?
***
வீட்டிற்குள் நுழைந்த பத்தாவது நிமிடத்திற்குள் தனது சீருடையில் கிளம்பி வந்த ஜெய், அதுவரை இருந்த இலகு நிலை மறைந்து பை! என்ற ஒற்றை வார்த்தையுடன் அங்கிருந்து சென்றான், முழுமையான காவல்துறை அதிகாரியாக.
சில நிமிடங்களில், ஜெய்யின் தம்பி விஜய் கல்லூரி முடிந்து வந்துவிட, அவனிடம் வம்பளத்தபடி சாவித்திரி கொடுத்த ராகி தோசையைச் சாப்பிட்டு முடித்தாள் மலர். அதற்குள் தாத்தாவும் பாட்டியும் தயாராகி வரவும், அவர்களை அழைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினாள்.
***
மிதமான வேகத்தில் காரைச் செலுத்திக்கொண்டு வந்தவள், போக்குவரத்து சிக்னலுக்காக வண்டியை நிறுத்தவும், முன் இருக்கையில் சுந்தரம் தாத்தா உட்கார்ந்திருந்த பக்கமாகக் கண்ணாடியைத் தட்டி ஒரு பெண் குழந்தைப் பிச்சைக் கேட்க, காசு எடுப்பதற்காக தனது சட்டைப் பையில் கையை விட்ட தாத்தா மலர் பார்த்த பார்வையில் அப்படியே பின்வாங்கினார்.
"ராசா! வேண்டாம் இப்படி பிச்சைப் போட்றதால ஒரே நேரத்தில் நீங்க எத்தனை கிரிமினல் குற்றங்களுக்கு சப்போர்ட் பண்றீங்க தெரியுமா?"
சிக்னல் கிடைத்துவிட காரைக் கிளப்பிக்கொண்டே தொடர்ந்தாள் மலர், "பிச்சை எடுக்கறதே சட்டப்படி க்ரைம்தான். ஆனாலும் கூட அது நம்ம நாட்டோட ஒரு மூலை முடுக்கு பாக்கி இல்லாம எல்லா இடத்துலயும் நல்ல அமோகமா நடந்துட்டுதான் இருக்கு. அதுக்கு காரணம் உங்களை மாதிரி ஆளுங்கதான். அத்தோட இப்படி பிச்சைக் கொடுக்குற ஒவ்வொருத்தரும் குழந்தைக் கடத்தல் மாதிரி பல குற்றங்களுக்கு மறைமுகமா துணை போறோம்ங்கறது உங்களுக்குத் தெரியுமா?" என மிகவும் தீவிரமாக மலர் சொல்லவும், சுந்தரம் பேசத்தொடங்கும் முன்பே,
"அப்படின்னா தருமம் செய்யறதே தப்புனு சொல்றியா மலரு! ஈவது விலக்கேல், அதாவது ஒருத்தர் தருமம் செய்யும் போது தடுக்காதேன்னு ஒளவையார் சொல்லியிருக்காங்க. நீ இப்ப அதைத்தான் செஞ்சிட்டு இருக்க மலரு" காட்டமாக சரோஜா சொல்ல,
"நானும் 'இயல்வது கரவேல்’னு அந்த பாட்டிம்மா சொன்னது மாதிரிதான், என்னால செய்ய முடிஞ்ச நல்ல காரியத்த இந்தச் சமூகத்துக்காகச் செஞ்சிட்டு இருக்கேன் ரோசாம்மா! தருமம் செய்யனும்தான். அதுக்காக இப்படி போகற போக்குல ஒரு ரூபா ரெண்டு ரூபாவைப் பிச்சையா போடணும்னு அவசியம் இல்ல.
நம்மால முடிஞ்ச அளவுக்கு நம்ம அக்கம்பக்கத்துல, கஷ்ட நிலைமையில் இருக்கறவங்களுக்கு நம்ம வீட்டுல வேலை செய்யறவங்களுக்குன்னு... மருத்துவ செலவுக்கு, அவங்க குழந்தைங்க படிப்பு செலவுக்கு, இந்த மாதிரி உருப்படியா ஏதாவது செஞ்சாலே போதும். ஓரளவுக்கு நம்ம சமூகம் முன்னேறும். அதை விட்டுட்டு இந்தக் கருமத்தையெல்லாம் தருமம்னு பேசாதீங்க ரோசாம்மா!" என மலர் முடிக்கவும்,
"தோ பாரு சரோஜா! என் பேத்தி எது சொன்னாலும், செஞ்சாலும் அது நியாயமானதாத்தான் இருக்கும். அதோட உன்னால அவக்கிட்ட பேசி ஜெயிக்க முடியாது. அதனால கொஞ்சம் சும்மா இரு" என சுந்தரம் பேத்திக்காக வரிந்துகட்டிக்கொண்டு வரவும், ‘ம்ம்க்கும்’என்று தலையை ஆட்டி நொடித்துகொண்டார் சரோஜா. இப்படி எதையெதையோ வளவளத்துக்கொண்டே வீடு வந்து சேர்ந்தனர் மூவரும்.
சில தினங்கள் கடந்து அவர்கள் இங்கே வந்திருக்கவும் எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்க, சரோஜா பாட்டியினுடைய கைப்பேசி தகவல் வந்ததற்கான ஒலியை எழுப்பவும், அதை எடுத்துப் பார்த்தவரின் முகம் புன்னகையைப் பூசிக்கொண்டது.
"சூடாம்மா! உனக்கு நம்ம குமார் ஞாபகம் இருக்கா?" என்று மகளிடம் கேட்க, ‘விலுக்’என்று நிமிர்ந்து அவரது முகத்தைப் பார்த்தாள் மலர்.
"யாரைம்மா சொல்றீங்க?" எனச் சூடாமணி புரியாமல் கேட்கவும்,
"இந்தச் சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் மா" என்ற சரோஜா, "ஏங்க! சினிமால அவன் பேரு என்ன?" என்று கணவரைக் கேட்க, "ம்! அதாம்மா கோல்ட் குமாரு!" என்றார் சுந்தரம்.
"அட ஆமாம் நம்ம குமார் அண்ணனா? தெரியுமே உங்க ஒண்ணு விட்ட அக்கா பையன்தானே? எப்பவோ பார்த்தது இல்ல அதான் சட்டுனு தோணல?” என்றார் சூடா.
"ஆமாம்மா! போன வாரம் அவனை முப்பாத்தம்மன் கோவிலில் வச்சு பார்த்தோம். எங்களை அடையாளம் கண்டுபிடிச்சு அவனே வந்து பேசினான் தெரியுமா. உங்க எல்லாரையும் ரொம்ப விசாரிச்சான். எங்க குடும்ப வாட்ஸ் ஆப் க்ரூப்ல கூட என்னைச் சேர்த்து விட்டிருக்கான்" என்று சரோஜா சொல்லவும், "போற போக்குல எனக்குத்தான் ஆப்படிச்சுட்டான். எந்நேரமும் ஃபோனும் கையுமா இருக்கா உங்கம்மா, ம்!" என்று முணுமுணுத்தார் சுந்தரம்.
"என்ன சொன்னீங்க? சரியா காதுல விழல" என சரோஜா புரியாமல் கேட்கவும், "ஒண்ணுமில்ல, நீ எப்பவும் பிசியா இருக்கேன்னு சொன்னேன்!" என்றார் பெரியவர் பேத்தியைப் பார்த்து விஷமமாகச் சிரித்துக்கொண்டே.
நேரமாகவும் இரவு உணவு உண்டுவிட்டு, உறங்கச் சென்றனர் அனைவரும்.
மலர் மட்டும் தூக்கம் வராமல், தொலைக்காட்சியை உயிர்ப்பித்து ஒரு செய்தி சேனலை ஓட விட, ‘தாம்பரம் பைப்பாசில் காருடன் பாதி எரிந்த நிலையில் பெண் பிணம்! திட்டமிட்ட கொலையா? துணை ஆணையர் ஜெய் கிருஷ்ணா ஐ.பி.எஸ் அவர்கள் சம்பவ இடத்தில் நேரடியாக ஆய்வு செய்தார்’என முக்கியச் செய்தியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.
அண்ணனை அழைத்து அந்தச் செய்தியை காண்பித்த மலர், பின்பு கைப்பேசியில் தொலைக்காட்சித் திரையை படமெடுத்து, "நீ கலக்கு மாமு” என்ற வாசகத்துடன் அதை வாட்ஸப்பில் அனுப்ப, "தேங்க்ஸ் டா மச்சி" என்று ஜெய்யிடமிருந்து பதில் வந்தது.
***
அடுத்த நாளே மகளுக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்ற பேச்சை சூடாமணி தொடங்க, இப்போதைக்குத் திருமணம் வேண்டாம் என்று மலை ஏறியிருந்தாள் மலர்.
"இப்பவே இருபத்திநாலு வயசு ஆச்சு. இதுக்கு மேல தள்ளிப்போட முடியாது” என்று சூடாமணி அதிலேயே நிற்க,
சரோஜாவும், "அம்மா சொல்றது சரிதான் கண்ணு. நீ இப்படி பிடிவாதம் பிடிக்கறது சரியில்ல”என்று மகளுக்கு ஆதரவு தெரிவிக்க,
"பாட்டி! முதல்ல அண்ணா கல்யாணத்த முடிங்க. அண்ணி வந்த பிறகு கொஞ்ச நாள் நான் இங்க ஃப்ரீயா இருந்துட்டு, அப்பறமா கல்யாணம் செஞ்சுக்கறேன், ப்ளீஸ்!" என்று பேத்தி இறங்கிவர,
"இப்பவே என்ன, இதைப் பத்தி நேரம் வரும்போது பார்த்துக்கலாம்!" என்று அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் வெங்கடேசன்.
அதற்குள் கைப்பேசி இசைக்கவே, பேசிக்கொண்டே அங்கிருந்து சென்ற சரோஜா சில நிமிடங்களில் திரும்ப வந்து, "சூடாம்மா செங்கமலம் பெரியம்மா நாளைக்குப் பெருமாள் தரிசனம் பண்ண அவங்க மருமகளோட திருநீர்மலை வராங்களாம். அப்படியே நம்ம வீட்டுக்கு வரேன்னு ஃபோன் பண்ணாங்க” என்றார்.
‘யார் அது?’ என்பதாக மலர் சூடாமணியை ஒரு பார்வை பார்க்கவும், "செங்கமலம் பெரியம்மா, உங்க பாட்டியோட ஒண்ணு விட்ட பெரியப்பா மக! உனக்குப் பாட்டி முறை வரும். தாத்தாவுக்கும் அவங்க தூரத்துச் சொந்தம்தான். நேத்து சொன்னாங்களே குமார் அண்ணா, அவங்களோட சொந்த பெரியம்மா. சினிமால வில்லனா நடிக்கறானே ஜெகதீஸ்வரன்! அவன் இவங்களோட பிள்ளை வயிற்றுப் பேரனாம்!" அடுக்கிக்கொண்டே போனார் சூடாமணி.
"நமக்கு புதுசா சொந்தக்காரங்களெல்லாம் வராங்கல்ல ம்! அதுவும்... அவ்ளோ பெரிய செலிபிரிட்டி வேற ம்..ம்... ராசா, பார்த்திங்களா இந்த ரோசாவுக்கு எவ்ளோ சந்தோஷம்னு. நீ கலக்கு ரோசாம்மா!” என மலர் பாட்டியைப் பார்த்து கண் சிமிட்டிக்கொண்டே சொல்லவும்,
"புது சொந்தமெல்லாம் இல்ல. எல்லாம் விட்டுப்போன பழைய சொந்தம்தான். இப்ப தொடருது” என்றதோடு முடித்துக்கொண்டார் சுந்தரம்.
***
அடுத்த நாள் சரோஜா சொன்னதுபோல் அவர்களுடைய வீட்டிற்கு மருமகள் சாருமதியுடன் வந்து இறங்கினார் செங்கமலம் பாட்டி.
அலுவலகம் செல்ல வேண்டியிருந்ததால், மரியாதை நிமித்தம் அவர்களை சந்தித்துவிட்டுச் செல்ல அங்கே காத்திருந்தாள் மலர்.
மகிழ்ச்சியுடன் அவர்கள் இருவரையும் வரவேற்ற சரோஜா, வீட்டில் அனைவரையும் அவர்களுக்கு அறிமுகம் செய்துவைத்தார்.
ஜீன்ஸ் பேண்ட், முழுக்கை சட்டை அணிந்து, கண்களுக்குப் புலப்படாத அளவுக்கு சிறிய வெள்ளை நிற கல் வைத்த தோடு, சிறிய மூக்குத்தி அணிந்து, நெற்றியில் மிகச்சிறிய பொட்டு வைத்து, தலை முடியைத் தூக்கி கிளிப் செய்து, கையில் பைக் சாவியுடன் நின்றுகொண்டிருந்த மலரை விசித்திரமாகப் பார்த்து வைத்தார் செங்கமலம் பாட்டி.
அவர்களுடன் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்துவிட்டு மலர் விடை பெற்றுக் கிளம்பவும், சரோஜா பாட்டியை நோக்கி மெல்லிய குரலில், "இப்படியேவா ஆஃபிஸ் போறா உன் பேத்தி? பார்க்க பையன் மாதிரியில்ல இருக்கு!" என்று கேட்கவும்,
அது மலரின் காதுகளில் நன்றாக விழுந்துவிட செங்கமலம் பாட்டியின் காதருகில் குனிந்து, "பாட்டி! பொண்ணு மாதிரி அழகா டிரஸ் பண்ணிட்டு போனா, இந்த பசங்க பயங்கரமா சைட் அடிக்கறானுங்க. அத அவாய்ட் பண்ணத்தான் இப்படி போறேன்”
மிகவும் மெதுவான குரலில் சொன்னாலும், அவ்வளவு நக்கல் வழிந்தது மலரின் குரலில்.
முதல் சந்திப்பிலேயே தீப் பற்றிக்கொண்டது செங்கமலம் பாட்டிக்கும் அணிமாமலர்க்காரிகைக்கும்.
Comentários