top of page

Anbenum Idhazhgal Malarattume 39 & 40 [Final Episodes]

Updated: Apr 13, 2023

அணிமா-39


ஆரம்பக்கட்ட மகப்பேறு காலத்தில் மிகவும் பத்திரமாக இருக்க வேண்டிய காரணத்தால் ஆபத்தை எதிர்கொள்ளும் எந்த வேலையிலும் ஈடுபட அவளை அனுமதிக்கவில்லை ஈஸ்வர்.


அவள் வெளியில் எங்கே செல்லவேண்டும் என்றாலும் மல்லிகார்ஜூனை அவளுக்குத் துணையாகச் செல்ல ஏற்பாடு செய்திருந்தான்.


ஜெய்யும் அவனுக்குத் துணைப் போகவே ஒன்றுமே செய்ய இயலாமல் தவித்தாள் மலர்.


சூடாமணியின் நேரடி கண்காணிப்பு வேறு.


ஈஸ்வர் முழு நேரமும் தொழிலில் மூழ்கினான் என்றால் ஜெய் அவனுடைய வேட்டையில் மும்முரமாக இருந்தான்.


மனதிற்கு நெருக்கமான இருவரும் வெகு தூரம் போனது போன்ற மாய உணர்வு ஆட்கொள்ள, தேவையற்ற பயமும், நம்பிக்கை இன்மையும் சூழ்ந்துகொண்டு தவித்தாள் மலர்.


அது புரிந்ததாலோ என்னவோ அவளை சில நிமிடங்கள் கூட தனிமையில் விடாமல் அவளுடைய ராசா ரோசா இருவரும் செங்கமலம் பாட்டியுடன் கூட்டணி அமைத்து, அவளை உற்சாகமாக வைத்திருக்கப் பெரிதும் போராடிக்கொண்டிருந்தனர்.


நாட்கள் அதன் வேகத்தில் செல்ல, மகிழ்ச்சிப் பொங்க ஜீவிதாவின் வளைகாப்பு விழாவை நடத்தி முடித்தனர்.


***


சலீமிடம் தொடங்கி ஜெய் மேற்கொண்ட புலனாய்வில், இன்ஃபார்மர் எனப்படும் அடிமட்ட ஆள்காட்டிகள் முதல் ஏஜென்ட்டுகள், அவர்கள் தொடர்பிலுள்ள கூலிப்படைகள், அனாதை இல்லங்களை நடத்தும் முக்கிய புள்ளிகள், அவர்களுக்குத் துணைப் போகும் ட்ராவல் ஏஜென்ட்டுகள், காவல் துறையில் பணிபுரியும் சில அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகள் என ஒவ்வொருவராக மாட்டவும் கொஞ்சம் கொஞ்சமாகக் குழந்தை கடத்தல்கள் கட்டுக்குள் வரத்தொடங்கியது.


அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளைக் கடத்த இயலாத வண்ணம், புதிய கருவிகள் பொருத்தப்பட்டு, அதுவும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.


குழந்தை கடத்தலில் ஈடுபட்டிருந்த முக்கிய புள்ளிகள் சிலரைத் தவிர்த்து ஓரளவிற்கு மாநில வாரியாக, பல 'சில்ரன் ட்ராபிக்கிங் ராக்கெட்ஸ்' எனப்படும் குழந்தைகளைக் கடத்தும் கும்பல்கள் கண்டுபிடிக்கப்பட்டு ஒழிக்கப்பட்டன.


ஆனாலும் போலி பாஸ்போர்ட் போலி விசா மூலமாகக் கடத்தப்பட்ட பல சிறுவர் சிறுமியர்களின் நிலை என்ன என்பதே தெரியாமல் போனது.


பன்னாட்டுத் தூதரகங்கள் மூலமாகக் கூட அவர்களைக் கண்டுபிடிப்பது குதிரைக் கொம்பாக இருந்தது.


இதற்கிடையில் கருணாகரனுடன் இணைந்து ஜெய் செல்லும் வேகத்தையும் அவனது புத்திசாலித்தனத்தையும் தாக்குப்பிடிக்க முடியாமல், அவனை அந்தப் பொறுப்பிலிருந்து விலக்க சில அரசியல் ஊழல்வாதிகளால் நீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு சில தினங்களிலேயே அது பிசுபிசுத்துப் போனது.


காரணம் அவன் கையும் களவுமாகப் பிடித்த ஒவ்வொருவரையும் பற்றிய தகவல்களுடன், அதிக எண்ணிக்கையிலான போலி பாஸ்ப்போர்ட்கள், போலி விசாக்கள், போலீஸ் வெரிஃபிகேஷன் செர்டிபிகேட், கம்ப்யூட்டர், லேப்டாப், பேன் கார்டுகள், வங்கி பாஸ்புக், கடன் அட்டைகள் எனப் பல ஆவணங்களை நீதிமன்றத்தில் சாட்சியமாக அளித்தான், அவனுடைய கடமையில் அவனுடைய தீவிரத்தை விளக்கும் விதமாக.


நேரடியாக அவனிடம் மோத முடியாமல் கூலிப்படையை ஏவி அவனைக் கொல்லும் முயற்சியில் சிலர் ஈடுபட அதிலிருந்தும் மீண்டு வந்தான் ஜெய்.


அனைத்தும் சேர்ந்து மக்கள் மத்தியில் ஜெய் கிருஷ்ணா ஐ.பி.எஸ் என்ற பெயர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.


***


ஜீவிதாவிற்கு, ஆண்குழந்தை பிறந்து, 'பரந்தாமன்' எனப் பெயர்சூட்டினர். அந்தக் குழந்தைக்குப் பெயர் சூட்டும் வைபவமும், அணிமாமலருடைய வளைகாப்பு விழாவும் ஒரே நாளில் சிறப்பாக நடந்து முடிந்தது. வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்திருந்தது.


ஈஸ்வர் கதாநாயகனாக நடித்த படத்தின் டீசர் வெளியாகி, அதைத் தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாக நடிக்க வாய்ப்புக்கள் குவிய அவனை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றிருந்தது.


இந்தச் சூழ்நிலையில் 'மீண்டும் உயிர்த்தெழு’ படம் திரையிடப்பட்டு அதன் முதல் காட்சியைப் பார்க்க குடும்பத்தில் அனைவருடனும் ஒரு பிரபல திரையரங்கிற்கு வந்திருந்தாள் மலர். ஈஸ்வர் மட்டும் அவனுடைய வேலை காரணமாக வரவில்லை.


படம் முடிய சில நிமிடம் இருக்கும் சமயம் அந்தக் காட்சிகளைத் தொடர்ந்து பார்க்கப் பிடிக்காமல், அருகில் உட்கார்ந்திருந்த ஜீவிதாவிடம், "எனக்குக் கொஞ்சம் அன் ஈஸியா இருக்கு நான் வெளியில இருக்கேன்" என்று சொல்லிவிட்டு மலர் எழுந்துகொள்ள,


"நான் வேணா கூட வரட்டுமா அண்ணி?" என்று கேட்ட ஜீவிதாவை,


"பரவாயில்ல இன்னும் கொஞ்ச நேரம்தான" எனத் தவிர்த்துவிட்டு, வெளியில் வந்தாள் மலர்.


அவளுக்கு முன்னதாக வெளியில் வந்து நின்றான் மல்லிக்.


அவனது செயலில் புன்னகைப் பூக்க, "அண்ணா எனக்கு ஒரு காஃபி வாங்கிட்டு வந்து தரீங்களா?" என்று கேட்டாள் மலர்.


அவன் காஃபியுடன் வரவும், அதை வாங்கி பருகியவாறு அங்கே போடப்பட்டிருந்த இருக்கையில் அவள் உட்கார்ந்திருக்க, அவனுடைய பௌன்சர்கள் சூழ அந்த அரங்கினுள் நுழைந்தான் ஈஸ்வர்.


பெரிதாகி இருந்த வயிற்றால், மிகவும் சிரமத்துடன், முகம் சிவந்து அங்கே உட்கார்ந்திருந்த மலரைப் பார்த்ததும், "ஐயோ! கேள்வி மேல கேள்வி கேட்டு உண்டு இல்லனு செய்ய போறா!" என மனதிற்குள் எச்சரிக்கை மணி அடிக்க அவளை நோக்கி வந்தான் ஈஸ்வர்.


அவன் வந்ததையே கண்டுகொள்ளாதவள் போல அவள் உட்கார்ந்திருக்கவும், அவள் அருகில் வந்து உட்கார்ந்தவன், "என்ன மேடம்! ஏன் இங்க வந்து உட்கார்ந்துட்டீங்க? படம் பிடிக்கலையா?" என்று கேட்க,


"படம் பிடிச்சுதான் இருக்கு ஆனா படத்துல நடிச்ச வில்லனைதான் பிடிக்கல!" என்றாள் மலர் பட்டென்று.


"ஏம்மா! அவன் என்ன பாவம் பண்ணான்?" என்று ஈஸ்வர் கேட்க,


அவனை நேர் கொண்டு பார்த்தவள், "நீங்க அதுல வில்லன்தான? திடீர்னு எப்படி ஹீரோவா மாறினீங்க?!" என அவள் சீற,


"ஏய் படம் முழுக்க வில்லன்தானடீ... கிளைமாக்ஸ்ல மட்டும்தான ஹீரோ?!" எனக் கேட்டான் ஈஸ்வர் அடக்கப்பட்ட சிரிப்புடன்.


"அது போறாது?!" என நொடித்தவள், "அந்தக் குட்டி கிளைமாக்ஸ்ல ஹீரோயினைக் கல்யாணம் செய்துக்குவீங்களாம், ரொமான்ஸ் பண்ணுவீங்களாம், லவ் டயலாக் பேசுவீங்களாம், கேட்டா கிளைமாக்ஸ்லதானன்னு கேட்பீங்களாம்! இந்தக் கதையை எழுதின மோனிஷா மட்டும் என் கைல கிடைக்கட்டும், அவங்களுக்கு இருக்கு" என்று அவள் பொரிந்து தள்ள சிரித்தே விட்டான் ஈஸ்வர்.


அதில் அவள் முகம் கோபத்தில் மேலும் சிவந்து போக, "நீ இப்படி கோபப்பட்டா, நான் இனிமேல் ஹீரோவா நடிக்க மாட்டேன்!" என ஈஸ்வர் கிண்டலாகச் சொல்லவும்,


"வேண்டாம்! உங்களை யாரு ஹீரோவா நடிக்க சொன்னாங்க?" என்றாள் மலர் கெத்தாக.


"நீதானடி சொன்ன?" என்றான் ஈஸ்வர் அடக்கப்பட்ட சிரிப்புடனேயே.


"நான் எப்ப சொன்னேன்?" என அவள் வியப்புடன் கேட்கவும், அதற்குள் படம் முடிந்து மக்கள் வெளியே வரத் தொடங்கவே, "நீ வீட்டுக்குப் போ! மத்தத அங்க வந்து சொல்றேன்!" என்ற ஈஸ்வர்,


"மல்லிக்! இவளைப் பத்திரமா காரில் ஏத்திவிடு!" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான்.


***


ஈஸ்வர் வருவதற்குக் கொஞ்சம் தாமதமாகவும், அவர்கள் அறையின் ஜன்னலைத் திறந்து வெளிப்புறம் பார்த்தாள் மலர்.


அங்கே போடப்பட்டிருந்த கல் மேடையில் அமர்ந்தவாறு, இருளை வெறித்துக்கொண்டிருந்த சக்ரேஸ்வரி அவளுடைய கண்ணில் படவும், அவளுடைய பய உணர்ச்சி மேலே எழும்பிக் கலங்க வைத்தது மலரை.


மருத்துவமனையில் சேர்த்த பிறகு, ஒரு மாதத்திற்குள்ளாகவே சோமய்யா தெளிவடைந்திருந்தான். ஆனாலும் மகனை நேரில் பார்த்தால்தான் முழுமையான தெளிவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று மருத்துவர்கள் சொல்லிவிட, தங்கள் வீட்டின் 'அவுட் ஹவுஸ்'சிலேயே அவர்களைத் தங்க வைத்தான் ஈஸ்வர்.


அவ்வப்பொழுது இது போன்ற காட்சிகள் கண்ணில் பட்டு, மலரை வேதனை கொள்ள வைக்கும்.


அப்பொழுது அவளுடைய சிந்தனையைக் கலைக்கும் விதமாகக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்த ஈஸ்வர் அவளை ஒரு பார்வை பார்த்துக்கொண்டே குளியல் அறைக்குள் புகுந்து கொண்டான்.


அவன் குளித்து முடித்துத் திரும்ப வந்த பிறகும், அதே நிலையிலேயே அவள் நின்றுகொண்டிருக்கவும், பின்னாலிருந்து அவளை மென்மையாக அணைத்தவன், "என்ன உண்மையாவே நான் அப்படி நடிச்சது உனக்கு கோபமா?" என ஈஸ்வர் கேட்கவும்,


"ப்ச்... இல்ல ஹீரோ! உங்களுக்கு ஏதாவது ஆகற மாதிரி நெகட்டிவ்வா ஸீன் இருந்தாதான் எனக்கு கோபம் வரும். இந்த ஸீன் எனக்கு ஏனோ பார்க்கப் பிடிக்கல அவ்வளவுதான்!" என்றாள் மலர்.


"நீ தான ஹீரோ ஒர்ஷிப் அது இதுன்னு ஒரு தடவ சொல்லிட்டு இருந்த. அதனாலதான் ஹீரோவா நடிக்கணும்ங்கற எண்ணமே எனக்கு வந்தது!" என ஈஸ்வர் சொல்லவும், தான் எப்பொழுது அப்படிச் சொன்னோம் என யோசித்தாள் மலர்.


அதை புரிந்துகொண்டவனாக, "உன் ஃப்ரெண்ட்ஸ் வெச்சிருக்கற விவசாய பண்ணைக்குப் போனோமே, அன்னைக்கு நீ சொன்ன இல்ல!" என அவன் விளக்கமாகச் சொல்லவும்,


ஒரு நொடி யோசித்தவள், முகம் மலர, "ஐயோ! நான் என்ன சொன்னேன் நீங்க என்ன புரிஞ்சிட்டு இருக்கீங்க?" என்று கேட்டுவிட்டு,


"நீங்க சொன்னதைதான் சொன்னேன் ஹீரோ!


உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்


தொழுதுண்டு பின்செல் பவர்.


இதைத்தான் நான் அன்னைக்கு மீன் பண்ணது. உங்களோட பேஷன் ஆக்ட்டிங் இல்லையே! ஸோ... உங்களுக்குப் பிடிச்ச விவசாயத்தைச் செய்யுங்கன்னு சொன்னேன்!" என்றாள் மலர் விளக்கமாக.


"ப்ச்! அதை விட்டு நான் ரொம்ப தூரமா வந்துட்டேன் மலர்! மறுபடியும் என்னால அதுக்குள்ள போக முடியும்னு தோணல! எனக்கு ஹீரோவா நடிக்க முதல்லயிருந்தே வாய்ப்பு வந்துட்டுதான் இருந்துது. பட் நல்ல ரோல் அமையல! நான் விரும்பற மாதிரி சான்ஸ் இப்பதான் கிடைச்சிருக்கு. ஸோ... பண்றேன். இப்ப இதை விட முடியாது மலர்! புரிஞ்சிக்கோ!" என்றான் ஈஸ்வர்.


"இல்ல ஹீரோ! நீங்க நல்ல படமா சூஸ் பண்ணி நடிங்க. கூடவே விவசாயமும் பண்ணுங்க! இது சம்பந்தமான ரிசர்ச் பண்றவங்களுக்கு ஹெல்ப் பண்ணுங்க. புது டெக்னிக்ஸ் யூஸ் பண்ணி இயற்கை விவசாயம் பண்ணலாம்! உங்களை மாதிரி செலிப்ரிடீஸ் இதுல ஆர்வமா ஈடுபட்டா உங்களைப் பார்த்து நிறையப் பேர் இதில் இன்வெஸ்ட் பண்ணுவாங்க! அதுவும் அங்க அங்க உங்களுக்கு ரசிகர் மன்றம் வேற கிளம்பிட்டு இருக்கே! அவங்களும் இதைப் பார்த்துட்டு செய்வாங்க இல்ல! அதுதான் நம்ம பூர்விக நிலமெல்லாம் மறுபடியும் நம்ம கைக்கே வந்துடுச்சு இல்ல! அதுல இருந்தே ஆரம்பிக்கலாமே?!" என நீளமாகப் பேசி முடித்தாள் மலர்.


"நீ சொல்லிட்ட இல்ல செஞ்சிடுவோம்!" என்று முடித்துக்கொண்டான் ஈஸ்வர்.


***


நாளுக்கு நாள், மலரிடம் இயல்பாகவே இருக்கும் துறுதுறுப்பு முற்றிலும் மறைந்துபோய், அவள் ஏதோ சிந்தனையிலேயே இருப்பது போல் தோன்றியது ஈஸ்வருக்கு. அவனுக்குக் காரணமும் புரியவில்லை. கேட்டாலும் அவளிடம் பதில் இல்லை.


மலருக்கு எட்டு மாதங்கள் முடிந்திருந்த நிலையில், அவன் படப்பிடிப்பிற்காக சில தினங்கள் இலண்டன் செல்லும் சூழ்நிலை ஏற்பட்டிருந்தது.


எப்படியும் அவளுடைய பிரசவத்திற்கு முன்பாக வந்துவிட முடியும் என்ற காரணத்தினால் வேறு வழி இல்லாமல் அதற்கு ஒப்புக்கொண்டவன் அதை அவளிடம் சொல்லவும், பதறினாள் மலர்.


"இல்ல ஹீரோ! நமக்கு இங்க பாதுகாப்பே இல்ல! ஜீவனைக் கடத்தினது போல நம்ம பாப்பாவையும் கடத்தினாங்கன்னா என்ன செய்யறது? அன்னைக்கு மட்டும் அவனை நான் கண்டுபிடிக்கலன்னா டிப்பு மாதிரி ஜீவனும் நமக்கு கிடைக்காமலேயே போயிருப்பான்!" எனத் தன்னிலை மறந்து அரற்றினாள் மலர்.


"நம்ம குடும்பத்துல இருக்கறவங்க எல்லாரோடவும் சேர்த்து நம்ம குழந்தையைப் பார்த்துக்க நாம ரெண்டு பேரும் இருக்கோம் மலர்! ஏன் இப்படி பேசற?" என ஈஸ்வர் கேட்கவும்,


"இல்ல காணாம போனா யாராலயும் கண்டுபிடிக்க முடியாது. ஜெய் கூட ஏதேதோ சொன்னானே. எனக்குப் பயமா இருக்கு. ரொம்ப பயமா இருக்கு!" என அவள் புலம்பவும்,


அவள் நேரில் பார்த்து உணர்ந்த நிஜம் தனது பிள்ளையை நினைத்து பயம் கொள்ளச் செய்து அவளைக் கோழையாக மாற்றியிருந்தது புரிந்தது அவனுக்கு.


அவளைச் சமாதானம் செய்ய முடியாமல் தவித்தவன் ஒரு கட்டத்தில், "நான் என்ன செஞ்சா உனக்கு இந்த பயம் போய் நம்பிக்கை வரும் மலர்?" என அவன் கேட்கவும், "டிப்புவை கண்டுபிடிச்சு அவங்க அம்மாவோட கண் முன்னாடி நிறுத்தினா, நான் நம்புவேன் ஹீரோ!" எனச் சொல்லி அவனை அதிர வைத்தாள் மலர்.


தன்னம்பிக்கை இழந்து, தன் மேல் வைத்திருந்த நம்பிக்கையையும் இழந்து அவள் இப்படி பேசவும், 'சுர்' எனக் கோபம் ஏற, வார்த்தையை விட்டான் ஈஸ்வர்.


"நிச்சயமா நீ சொன்னதை செய்யறேன் மலர்! அதுக்கு அப்பறம்தான் நம்ம பிள்ளையை என் கையிலயே தூக்குவேன்!" என்று சவாலாகச் சொல்லிவிட்டு,


"நீ எப்பவும் போல தைரியமா இருந்தா மட்டும்தான் என்னால நிம்மதியா இருக்கமுடியும்! ஸோ... இனிமேல நீ இப்படி இருக்கக் கூடாது! நம்ம குழந்தைய நல்லபடியா இந்த உலகத்துக்குக் கொண்டு வரவேண்டியது உன்னோட பொறுப்பு" என்று அங்கிருந்து சென்றான்.


பின் ஜெய்யை நேரில் சென்று சந்தித்து மலருடைய நிலைமையை அவனிடம் விளக்கியவன், "நான் வர வரைக்கும் அவளை எமோஷனலி சப்போர்ட் பண்ணு ஜெய்!" எனக் கேட்டுக்கொண்டு, மலரை அவளுடைய பிறந்த வீட்டில் விட்டுவிட்டு அதன் பிறகே இலண்டன் சென்றான் ஈஸ்வர்.


முடிந்த வரையில் மலரை நேரிலோ அல்லது கைப்பேசியிலோ தொடர்பு கொண்டு, அவளுக்குத் தைரியம் அளித்தான் ஜெய்.


நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அவளுடன் பேசிய ஈஸ்வர் இலண்டன் படப்பிடிப்பு முடித்து அவன் திரும்புவதாகச் சொல்லியிருந்த நாளில் அவனால் வரமுடியாமல் போகவும், 'வேலை காரணமாக அவன் திரும்ப வர இன்னும் சில தினங்கள் ஆகலாம்' என அவளுக்கு வாட்சாப் தகவலாக அனுப்பியிருந்தான்.


மேற்கொண்டு அவனைத் தொடர்புகொள்ளவே இயலாத வகையில் அவன் உபயோகிக்கும் கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அவனுடன் சென்ற தமிழையுமே தொடர்புகொள்ள முடியவில்லை.


கொடுக்கப்பட்ட தேதிக்கு முன்னதாகவே, மலருக்குப் பிரசவ வலி வந்துவிட, அவளை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஜெய்யும் உடனே அங்கே வந்து சேர்ந்தான்.


டிப்புவைக் கண்டுபிடிக்காமல் குழந்தையைக் கையில் தூக்க மாட்டேன் எனச் சொல்லிச் சென்றவன், பிறந்த உடன் குழந்தையைப் பார்க்கக் கூட அருகில் இல்லையே என்ற ஏக்கம் மனதில் தோன்றினாலும், 'நம்ம குழந்தையை நல்லபடியா இந்த உலகத்துக்குக் கொண்டு வரவேண்டியது உன்னோட பொறுப்பு' என்று அவன் சொல்லிச்சென்ற வார்த்தை மட்டும் மனதில் நிற்க மருத்துவருக்கு முழு ஒத்துழைப்பையும் கொடுத்து அவளுடைய மன உறுதியால் அழகாக அவர்களது மகளைப் பெற்றெடுத்தாள் மலர்.


குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி, "கங்கிராட்ஸ் மலர்! உனக்கு மகாலட்சுமி வந்திருக்கா!" என்று சொல்லிக்கொண்டே, அந்தப் புத்தம் புது ரோஜா செண்டை அவளது மார்பின் மேல் மருத்துவர் கிடத்த கண்களை உருட்டி, அந்த மழலை தலையைத் திருப்பவும், மகிழ்ச்சி கரைபுரண்டு ஓட, ஈஸ்வர் அவளைப் பார்ப்பது போன்று அவளது உள் உணர்வுக்குத் தோன்றியது.


அடுத்த நொடி குழந்தைக்கு நேராக நீண்ட அவனுடைய கரத்தைப் பார்த்தவள், ஆனந்தமாக அதிர்ந்தாள்.


அருகில் இருந்த செவிலியர் குழந்தையை ஈஸ்வருடைய கரங்களில் கொடுக்கவும், "டிப்பு கிடைச்சுட்டானா ஹீரோ!" என அந்தக் களைப்பிலும் மலருடைய குரல் தெளிவாக ஒலிக்க,


மகளை மார்போடு அணைத்தவன், அப்படியே குனிந்து மனைவியின் நெற்றியில் இதழைப் பதித்து, "நாங்கள்லாம் சொல்றதைதான் செய்வோம்! செய்யறததான் சொல்லுவோம்!" என்றான் கெத்தாக.


இரட்டிப்பு மகிழ்ச்சியில் மலரைப் பீடித்திருந்த துயரமெல்லாம் காற்றோடு கரைந்து காணாமல் போனது.


அணிமா-40


கேனரி வார்ப்! 'ஸ்கை ஸ்க்ராப்பர்ஸ்' எனப்படும் விண்ணைத் தொடும் மிக உயரமான கட்டிடங்களைத் தன்னுள் அடக்கிய பகுதி.


இரு தினங்களாக அங்கேதான் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. ஈஸ்வர் அங்கே சென்ற பிறகு கிட்டத்தட்ட பன்னிரண்டு நாட்கள் இலண்டன் மாநகரத்தில் பல்வேறு பகுதிகளில் படத்தைப் பதிவு செய்தவர்கள், இறுதியாக சில காட்சிகளை அந்த இடத்தில் படமாகிக்கொண்டிருந்தனர்.


படப்பிடிப்பில் கலந்துகொண்ட அனைவருக்கும் அங்கேயே இருக்கும் ஒரு உணவகத்திலிருந்து உணவு வரவழைக்கப்பட்டது.


மதிய உணவை உண்ணும் பொழுதுதான் அவனுக்கு உணவு பரிமாறிக்கொண்டிருந்த அந்த வாலிபனைக் கவனித்தான் ஈஸ்வர்.


ஒரு பதினெட்டிலிருந்து இருபது வயது இருக்கலாமோ என எண்ண வைக்கும் தோற்றம். கிட்டத்தட்ட வெள்ளையர்களுடைய நிறத்திற்கு இணையான நிறத்தில், வெட வெடவென ஆறடிக்கும் வளர்ந்திருந்தான். அவனுடைய முக அமைப்பு அவன் இந்தியன் என்பதைச் சொல்லாமல் சொன்னது.


அவனது முகத்தில், மெல்லிய கோடாக மீசை முளைத்திருந்தாலும் குழந்தைத்தனம் இன்னும் மீதம் இருந்தது. அவனைப் பார்க்கும் பொழுதே மனதை ஏதோ செய்தது ஈஸ்வருக்கு. அவனிடம் ஏதாவது பேசியே தீரவேண்டும் என்ற உந்துதலில், "ஹை யங் மேன்! லெட் மீ நோ யுவர் குட் நேம் ப்ளீஸ்!" என்று ஈஸ்வர் கேட்க,


ஏனோ பதட்டம் கூடியது அவனது முகத்தில். கைகள் நடுங்கியதால் மிகவும் முயன்று அவன் கொண்டு வந்த 'மீசோ சூப்'பைக் கவனத்துடன் ஈஸ்வருக்குப் பரிமாறிக்கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தவாறு, "சாம்! ஐ ஆம் சாம் சர்! என்றான் கொஞ்சம் கொச்சையான ஆங்கிலத்தில்.


பதின்ம வயதில் இருக்கும் பிள்ளைகளுக்கே உரித்தான வித்தியாசமான அவனது குரலால் ஈஸ்வரின் மனதில் ஒரு நெருடல் உண்டானது.


அவன் சென்ற பிறகும் கூட அந்தப் புதியவனின் முகம் ஈஸ்வரின் கண்ணிற்குள்ளேயே நின்றது.


இரவு வெகு நேரம் உறக்கம் வராமல் தவித்த ஈஸ்வர், போராடி ஒரு கட்டத்தில் உறங்க, அவனுடைய கனவு முழுவதும் ஜீவனின் முகமும் சில ஆண்டுகளுக்கு முன்பாக பார்த்த டிப்புவின் முகமும் மாறி மாறி வந்து இம்சித்தது.


தொடர்ந்து, "ஹீரோ! என் பிள்ளையை எப்படியாவது என்கிட்ட கொண்டு வந்து சேர்த்திடுங்க. ப்ளீஸ்! ப்ளீஸ்!" என்ற மலருடைய கெஞ்சலில் பதறி எழுந்தான் ஈஸ்வர்.


அவனுடைய மனதின் நெருடலுக்குக் காரணம் தெள்ளத்தெளிவாகப் புரிந்து போனது.


***


அடுத்த நாள் படப்பிடிப்புக்காக வந்தவன் உணவு இடைவேளைக்காகக் காத்திருந்தான் ஈஸ்வர்.


'ஜூப்ளி பார்க்' என்ற பூங்காவில் அன்றைய படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது.


அவன் எதிர்பார்த்த உணவு இடைவேளையும் வந்தது.


ஆனால் அன்று அந்த சாமுக்கு பதிலாக அவனை விடவே இளையவனாகத் தோன்றிய வேறு ஒருவன் வந்திருந்தான். மனம் குறுகுறுக்க உணவை உண்டு முடித்தான் ஈஸ்வர்.


ஆனால் எதிர்பாராதவண்ணம் அவன் உண்டு முடித்ததும் தட்டுக்களை எடுக்க அங்கே வந்தான் சாம்.


ஈஸ்வர் தன்னைப் பார்க்கிறானா என அவனுடைய முகத்தையே சாம் கூர்ந்து கவனிக்க, கொஞ்சமும் அவனைக் கண்டுகொள்ளாத பாவத்திலிருந்தான் ஈஸ்வர்.


தட்டுக்களை எடுத்துக்கொண்டு தயக்கமும் ஏமாற்றமுமாகி, திரும்பத் திரும்ப ஈஸ்வரைப் பார்த்துக்கொண்டே அவன் அங்கிருந்து செல்லவும், "டிப்பு!" என்றழைத்தான் அழுத்தமாக!


அவனுடைய கையிலிருந்த பீங்கான் தட்டுகள் நழுவிக் கீழே விழுந்து சிதற, "ஈஸ்வர் சின்நாணா (சித்தப்பா)!" என்றவாறு அவனை வந்து அணைத்துக் கொண்டான் அந்தப் பதினான்கு வயது சிறுவன் டிப்பு!


அவன் தட்டுகளைக் கீழே போட்டு உடைத்ததைத் தொலைவிலிருந்து பார்த்த, அந்த உணவகத்தின் மேற்பார்வையாளர் அங்கே வந்து டிப்புவை ஆங்கிலத்தில் திட்டத்தொடங்க, இடை புகுந்த ஈஸ்வர், "இட்ஸ் மை ஃபால்ட்! ஐ வில் பே ஃபோர் இட்!" என்று சொல்லவும், மரியாதையுடன் அங்கிருந்து சென்றான் அவன், டிப்புவைக் கோபப் பார்வை பார்த்தவாறே.


அன்று இரவே, யாருக்கும் தெரியாமல் டிப்புவை, அவன் வேலை செய்யும் உணவகத்தின் அருகிலேயே சென்று சந்தித்தான் ஈஸ்வர்.


ஒரு வருடத்திற்கு முன்பாக, சந்தோஷ்(சந்தீப்) அவர்களுடைய ஊருக்கு வந்த பொழுது, அவன் கையில் வைத்திருந்த கைப்பேசி டிப்புவின் கவனத்தைக் கவரவே அதில் விளையாட கற்றுக் கொடுப்பதாக அவன் ஆசை வார்த்தை காட்டவும், அதற்காகவே அவனுடன் பழகத் தொடங்கினான்.


ஒரு சில நாட்கள் கடந்த நிலையில் அங்கே வந்த புதியவனை டிப்புவிற்கு 'சங்கர்' என்று அறிமுகம் செய்த சந்தோஷ், "அவனுடன் சென்று சில தினங்கள் வேலை செய்தால் அதே போன்ற ஒரு கைப்பேசியை உன்னாலும் வாங்க முடியும்" என்று ஆசை வார்த்தை காட்டவும் வேறு எதுவும் தோன்றாமல் அந்தப் புதியவனுடன் சென்றுவிட, டிப்புவை அஞ்சு மேத்தாவிடம் ஒப்படைத்துவிட்டான் அவன்.


நிலைமையின் தீவிரத்தை உணரும் முன்னதாகவே இலண்டன் வந்து சேர்ந்திருந்தான் டிப்பு. அவனுடன் சேர்த்து சூர்யா என்ற சிறுவனும் அங்கே கொண்டு வந்து வேலைக்காக விடப்பட்டிருப்பதையும் சொன்னான் டிப்பு.


அவனைப் போன்ற மேலும் சிலரும் அங்கே வேலை செய்வதைப் பற்றிச் சொன்னவன், அந்த உணவகத்தின் ஒரு பகுதியிலேயே அவர்கள் தங்க வைக்கப்பட்டிருப்பதாகவும், ஊதியம் எனப் பெயருக்கு ஒரு தொகையைக் கொடுக்கும் அவர்கள் வேலை செய்யும் நிறுவனம், தங்குவதற்கும், உணவிற்கும் என்று அதையும் பறித்துக்கொள்வதாகவும் சொன்னான்.


அவர்களுடைய வயதிற்கு அதிகமாக வேலையைக் கொடுப்பதுடன், அவர்களிடம் மனிதாபிமானம் இல்லாமல் நடந்துகொள்வார்கள் அங்கே இருப்பவர்கள்.


பாஸ்போர்ட் விசா என எதுவும் இல்லாமல் அவர்கள் அங்கே தங்கி இருப்பதால் வெளியில் எங்காவது சென்றால் மிகவும் ஆபத்தாக மாறிப்போகும் சூழ்நிலை இருக்கவே வேறு வழி தெரியாமல் பெற்றோரின் நினைவில் அதிகம் தவிப்பதாகச் சொல்லி முடித்தான் டிப்பு.


அனைத்தையும் வேதனையுடன் கேட்டுக்கொண்டிருந்த ஈஸ்வர், "அஞ்சு மேத்தாவைப் பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா?" என ஆங்கிலத்தில் கேட்க,


"அந்த லேடி கொஞ்ச நாளா லண்டன்லதான் இருக்காங்க! அவங்க ஃப்ரெண்ட்ஸ் கூட நான் வேலை செய்யற ரெஸ்டாரண்டுக்கு அடிக்கடி வருவாங்க!" என்று ஆங்கிலத்திலேயே பதில் சொல்லி முடித்தான்.


அவள் அங்கே வந்தாள் என்றால் தன்னைத் தொடர்பு கொள்ளச் சொல்லிவிட்டு அவனுடைய எண்ணைக் கொடுத்தான் ஈஸ்வர்.


அவர்களுடைய உரையாடலுக்கு இடையில், விபத்தில் இறந்து போன மல்லிக்குடைய நண்பனின் மகன்தான் டிப்புவுடன் வேலை செய்யும் சூர்யா என்பதைப் புரிந்துகொண்டான் ஈஸ்வர்.


டிப்புவை அப்பொழுதே தன்னுடன் அழைத்துச்செல்லும் ஆவல் இருந்தாலும் அது ஆபத்தை விளைவிக்கும் என்பது தெளிவாகப் புரியவும் அதைக் கைவிட்டவன் உடனடியாக ஜெய்யைத் தொடர்பு கொண்டு அனைத்தையும் சொல்லி அங்கே இருக்கும் பிள்ளைகளின் பாதுகாப்பிற்கும் வழிவகை செய்யுமாறு வலியுறுத்தினான்.


அரசாங்கம் சம்பந்தப்பட்ட விவகாரம் அதுவும் இரு நாடுகள் சம்பந்தப்பட்டது என்பதால் பிள்ளைகளை மீட்பதில் தாமதம் ஆகலாம் என்பதினாலும் விஷயம் சிறிது வெளியே கசிந்தாலும் அனைவருக்கும் ஆபத்து ஏற்படலாம் என்ற அச்சத்தினாலும் அவனுடைய படப்பிடிப்பு முடிந்து அந்தக் குழு அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்ட பிறகும் அங்கேயே தங்கியிருந்தான் ஈஸ்வர், உடன் தமிழும்.


அரசாங்கத்தில் மேலிடத்தில் பேசி இரு நாட்டுத் தூதரகத்திலும் இந்த விஷயத்தைக் கொண்டு சென்று இன்டர்போல் உதவியுடன் அந்த அஞ்சு மேத்தாவைக் குறி வைத்துப் பிடித்தனர்.


அவள் மூலமாக அவர்களுடைய கும்பலின் தலைவனின் பெயர் கஜ்ஜூ பாய் என்பதும் தெரிய வந்தது. அதற்குள்ளாகவே சமூக விரோதமாக அங்கே தங்க வைக்கப்பட்டிருந்த பிள்ளைகள் எல்லோரும் மீட்கப்பட்டிருந்தனர்.


அதுவரை அது சம்பந்தமாக அலைந்துகொண்டிருக்கவே கைப்பேசியைக் கூட உபயோகிக்க இயலவில்லை ஈஸ்வரால்.


சட்டரீதியான அனைத்து விதிமுறைகளும் முடித்து அஞ்சு மேத்தா மற்றும் மீட்கப்பட்ட சிறுவர்கள் எல்லோரும் சென்னை வந்து சேர சில தினங்கள் பிடிக்கலாம் என்ற காரணத்தினால் சிறுவர்கள் அனைவரும் பத்திரமாக இருக்கிறார்கள் என்கிற உத்திரவாதத்தின் பேரில் சென்னை வந்து சேர்ந்தான் ஈஸ்வர் மகளைத் தன் கைகளில் ஏந்த.


***


அடுத்து வந்த நாட்கள் அனைத்து திசையிலிருந்தும் மகிழ்ச்சியை வாரி வந்து இறைத்துக்கொண்டிருந்தது ஈஸ்வருடைய வாழ்க்கையில்.


மகளைத் தொட்டிலில் போடும் வைபவம் வெகு சிறப்பாக நடந்தேறியது.


அவர்கள் வாழ்க்கையின் முக்கிய பங்கு வகிக்கும் நல்ல மனிதர்கள் அனைவரும் கருணாகரன் உட்பட அதில் கலந்து கொண்டு அவனது செல்வ மகளை வாழ்த்திச் சென்றனர்.


குமாருடைய மகிழ்ச்சிக்கு அளவே இல்லை எனலாம்.


அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போன்று தெளிந்த மன நிலையில் சோமய்யாவும், முகம் நிறைந்த புன்னகையுடன் சக்ரேஸ்வரியும், தாய் தந்தையைச் சேர்ந்த நிம்மதியில் டிப்புவும், நிறைத்த மனதுடன் மல்லிகார்ஜூனும் அந்த வைபவத்தில் மகிழ்வுடன் கலந்து கொண்டனர்.


அஞ்சு மேத்தாவை ரிமாண்ட் செய்து சிறையில் அடைத்த கையுடன் பிள்ளைகளைப் பெற்றோரிடம் ஒப்படைக்கும் பரபரப்பான வேலைகளுக்கு நடுவிலும் அங்கே வந்திருந்தான் ஜெய்.


அந்தத் தளிரை மடியில் வைத்துக்கொண்டு அதன் நெற்றி, காது, கை விரல்கள், பாதம் என மென்மையுடன் வருடியவன், அதில் மெய் சிலிர்த்துப்போனான்.


பாட்டிகளும், கொள்ளுப்பாட்டிகளும் அத்தைகளுடன் சேர்ந்து அந்தக் குட்டித் தேவதையின் ஜாடை யாரைப் போல இருக்கிறது எனப் பட்டிமன்றமே நடத்திக்கொண்டிருந்தனர்.


கண்டிப்பா அவ ஈஸ்வர் சுபா ஜாடைதான் என அதற்குத் தீர்ப்புக் கூறினார் சுசீலா மாமி.


"இல்ல, பாப்பா என்னை மாதிரிதான் இருக்கா" என அவருடன் சண்டைக்கு வந்தான் ஜீவன்.


அப்பொழுதுதான் நினைவு வந்தவராகச் செங்கமலம் பாட்டி, "மாமி, நீங்க எங்கக் குடும்பத்துக்காக எவ்வளவோ நன்மை செஞ்சிருக்கீங்க. அதுக்கெல்லாம் நான் உங்களுக்கு நிறைய நன்றி சொல்லணும். முக்கியமா ஈஸ்வர் கல்யாணம் நடந்ததுக்கு ஒரு வகைல நீங்கதான் காரணம்!" என்றவர்,


"ஈஸ்வருக்கு மலரிகிட்ட ஒரு விருப்பம் இருக்குன்னு என் மனசுக்கு புரிஞ்சது. ஆனா மலரோட விருப்பத்தைப் பத்தி ஒரு முடிவுக்கும் வர முடியாம நான் குழம்பிட்டு இருந்த சமயம் ஈஸ்வர் மலர் கிட்ட ஃபோன்ல பேசிட்டு அந்த கால் கட் ஆகாம இருந்ததால, நீங்க அவகூட பேசினத கேட்க நேர்ந்தது! மலர் ஜீவனை கொஞ்சிட்டு இருந்தா. அந்த நேரத்தில் ஜீவனைப் பத்தியெல்லாம் எனக்குத் தெரியாது இல்ல. யாரோ ஒரு குழந்தைன்னு நினைச்சேன்.”


”அப்ப நீங்க சொன்னீங்க, 'ஏண்டி பூக்காரி, இந்த வேலையெல்லாம் விட்டுட்டு, உன் மனசுல இருக்கற எல்லாத்தையும் முதல்ல ஈஸ்வர் கிட்ட சொல்லு! அவனைப் பார்த்தா ரொம்ப நல்ல மாதிரி தெரியறது. உன்னை புரிஞ்சிப்பான். சீக்கிரமே உங்க கல்யாணமும் நடக்கும். அதுதான் எல்லாருக்குமே நல்லது!'ன்னு.”


”அதுக்கு 'எல்லாம் நடக்கும்போது நல்ல படியா நடக்கும். இப்ப நீங்க ஃப்ரீயா விடுங்க'ன்னு சொன்னா மலர்" என அதைக் குறிப்பிட்டவர்,


"அதுக்கு பிறகுதான் மலரோட மனசும் எனக்கு புரிஞ்சது! ஈஸ்வர் கல்யாணத்தைப் பத்தி பேச்சை எடுக்கவும், உடனே சம்மதம் சொன்னேன்" என அனைத்தையும் சொன்னார், 'நான் எப்பவுமே கெத்துதான்!' என்பது போல மலரைப் பார்த்தவாறே! 'ராஜமாதா இருங்க உங்களை வெச்சுக்கறேன்!' என மலர் அவரைப் பதிலுக்கு ஒரு பார்வை பார்த்து வைத்தாள்.


அனைவருமே அவரவர் துணையுடன் இருக்க, “இவளைப் பத்தி யோசிச்சாதான் எனக்கு வேதனையா இருக்கு” என சுபாவைப் பற்றி பாட்டி மாமியிடம் குறைபட்டுக்கொள்ளவும்,


அதை உணர்ந்தவளாக ஈஸ்வரிடம் வந்த சுபா அவன் அருகில் உட்கார்ந்துகொண்டு, "எனக்குத் இந்த கல்யாண வாழ்க்கைல பெரிய எதிர்பார்ப்பெல்லாம் இல்ல ஜகா. ஆனா எனக்கு இப்ப அசோக் என் கூட வந்து வாழணும்னு தோணுது! அவன் எதுக்காக என்னை ஏமாத்தி கல்யாணம் செய்தானோ அவனுக்கு இனி அது கிடைக்கக் கூடாது. எதை நினைச்சு அவன் பயந்தானோ அவனுக்கு அதுதான் நடக்கணும். அதாவது அவன் என்னைத் தாண்டி வேற எங்கேயும் போகக்கூடாது. என் பிள்ளைக்கு அப்பாவா மட்டும் என் வாழ்க்கையில அவன் இருக்கனும் ஒழுக்கத்தோட! ஏன்னா என் பிள்ளை நாளைக்கு தலை நிமிர்ந்து இந்த சொசைட்டில வாழணும். அதை உன்னால செய்ய முடியும்னு எனக்கு தெரியும்! ப்ளீஸ் புரிஞ்சிக்கோ!" என்றாள் விளக்கமாக. தெளிவாக. அவளுடைய சகோதரன் அதை செய்து முடிப்பான் என்ற நம்பிக்கையுடன்.


"புரியுது சுபா! உன் விருப்பப்படியே நடக்கும்!" என்று ஒரே வரியில் முடித்தான் ஈஸ்வர்.


***


அந்த மிகப் பெரிய அரங்கமே, மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது.


சிறந்த திரைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது.


அங்கே நடிகர் நடிகையர் தொடங்கிப் பல தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட, சிறந்த வில்லன் நடிகருக்கான விருதைப் பெற ஜெகதீஸ்வரனை மேடைக்கு அழைத்தனர்.


அவனுக்கு விருது வழங்குவதற்கென அவர்கள் அழைத்த நபரின் பெயரைக் கேட்டதும் மனதிற்கு பெருமையாகவும் இதமாகவும் உணர்ந்தான் ஈஸ்வர். காரணம் வர்த்தகத்துறையில் அவருக்கு இருந்த பயம் கலந்த மரியாதையும், வெளி உலகிற்கே தெரியாமல் அவரது தொண்டு நிறுவனம் மூலம் அவர் செய்து வரும் பல நல்ல செயல்களும்.


"இந்த விருதை எனது ஆசான் கோல்டன் குமார் மாஸ்டர் அவர்களுக்குக் காணிக்கை ஆக்குகிறேன்" என்று சொல்லிவிட்டு, 'ஆதி டெக்ஸ்டைல்ஸ் தேவாதிராஜன்' (நம்ம TIK ஹீரோ) கையால் ஈஸ்வர் விருது வாங்கவும், அந்த அரங்கமே கர ஒலியால் அதிர்ந்தது.


மீண்டும் உயிர்த்தெழுப் படத்தைத் தொடர்ந்து, ஆதி புதிதாகத் தொடங்கியிருந்த 'எமரால்ட் சினிமாஸ்’ நிறுவனத்திற்காக ஈஸ்வர் கதாநாயகனாக நடித்திருந்த படம், திரையிடப்பட்டு சக்கை போடு போட்டுக்கொண்டிருக்க, அவன் எது செய்தலும் அதைக் கொண்டாடவென, அவனுக்கென்று தனிப்பட்ட இரசிகர்கள் கூட்டம் மிகப் பெரிய அளவில் உருவாகி இருந்தது.


அதுவும் அன்று அவனுடன் ஆதி வேறு! இருவரும் ஒருவரை ஒருவர் அணைத்தவாறு மரியாதை நிமித்தம் சில வார்த்தைகள் பரிமாறிக்கொள்ளவும், அங்கே எழுந்த ஆரவாரம் அடங்கவே சில நிமிடங்கள் பிடித்தது.


அந்த அரங்கத்திலேயே உட்கார்ந்து, அதை நேரில் பார்த்துக்கொண்டிருந்த குமாருடைய கண்களில் வழிந்த ஆனந்தக் கண்ணீர், காட்சிகளை மறைத்ததென்றால் மலருடன் சேர்த்து வீட்டிலிருந்தவாறே நேரலையில் அதைப் பார்த்துக்கொண்டிருந்த குடும்பத்தினர் அனைவர்க்கும் விண்ணை முட்டும் அளவிற்கு மகிழ்ச்சி! மகிழ்ச்சி! மகிழ்ச்சி மட்டுமே!


***


கடைக்காப்பு


ஐந்து வருடங்களுக்குப் பிறகு.


மனைவியிடம், 'செஞ்சிடுவோம்!' எனச் சொன்னதுபோலவே ஈஸ்வர் விவசாயத்தில் பல புதிய முயற்சிகளைச் செய்து அதில் வெற்றியும் கண்டு பலருக்கும் முன் மாதிரியாக விளங்கினான் திரைப்படங்களில் நடித்துக்கொண்டே.


அந்த வேலைகளில் சுபாவுடன் இணைந்துகொண்டு அவனுடைய மாமனாரும், மாமனாருக்கு மாமனாரும் அவனுக்குத் துணையாக நின்றனர் என்றால் மிகை இல்லை.


சுபா விரும்பியதைப் போலவே அசோக்கை, அவளுடன் பிணைத்து வைத்திருந்தான் ஈஸ்வர் அவனால் அங்கிருந்து மீள முடியாத அளவிற்கு.


சுபாவை மீறிச் செயல்பட இயலாத நிலையில் அசோக் இருந்தான் என்றால் ஈஸ்வரை நேருக்கு நேர் பார்க்கக் கூட பயந்து நடுங்கினான் அவன்.


அவனுடைய வீட்டிற்கு அருகிலேயே ஒரு வீட்டைக் கட்டிக்கொடுத்து அங்கேயே சுபாவைக் குடும்பத்துடன் குடி வைத்து அவளைத் தனது பாதுகாப்பு வட்டத்திற்குள்ளேயே வைத்துக்கொண்டான் ஈஸ்வர்.


தாய்மாமனை மட்டுமே அவனுடைய ஹீரோவாக எண்ணியவன் தகப்பன் அருகிலேயே இருந்த பொழுதும் அவனை ஒரு பொருட்டாகக் கூட மதிக்காமல் தன்னையும் அறியாமல் அவனை உச்சபட்சமாகத் தண்டித்துக்கொண்டிருந்தான் ஜீவன்.


ஈஸ்வர் தொடங்கிய தொண்டு நிறுவனத்தை அதன் நோக்கம் திசை மாறாது திறம்பட நடத்திக்கொண்டிருந்தாள் அணிமாமலர்.


ஜெய் தனது பயணத்தில் நெடுந்தூரம் கடந்திருந்தான்.


நெடிய நான்கு வருட தேடுதல் வேட்டைக்குப் பிறகு அவனிடம் சிக்கினான் 'கஜ்ஜூ பாய்' குழந்தைகள் கடத்தல் கும்பலின் தலைவன்.


படிப்படியாகப் பல வெற்றிகளும் விருதுகளும் பதவி உயர்வும் அவனை தேடி ஓடி வந்தன இந்த ஐந்து வருடங்களில்.


***


பள்ளி வகுப்புகள் முடிந்து பிள்ளைகள் பெற்றோரைத் தேடி ஓடி வர பேருந்துகள் நிறுத்தும் இடத்தை நோக்கிச் சென்றவள் அங்கே ஓரமாகக் குவித்து வைக்கப்பட்டிருந்த கருங்கற்களில் ஒன்றைக் கையில் எடுக்கவும், ‘ஐயோ! இந்த தாமரை ஏதோ ப்ராப்ளம் பண்ணப்போறாபோல இருக்கே!’ என எண்ணியவாறே அவளை நோக்கி ஓடிவந்தான் ஜீவன், "தாமரை! எதுவா இருந்தாலும் பேசி சரி பண்ணிக்கலாம்! வெயிட்!" என்று கத்திக்கொண்டே!


அதற்குள் அவள் வீசிய அந்த கல், பேருத்து ஓட்டுநர் ஒருவரின் நெற்றியைப் பதம் பார்த்து அருகிலிருந்த பேருந்தின் கண்ணாடியையும் நொறுக்கி இருந்தது!


***


மகளுடைய பராக்கிரமத்தைப் பறை சாற்ற உடனே பள்ளிக்கு வருமாறு ஈஸ்வரை அழைத்திருந்தார் அந்தப் பள்ளியின் முதல்வர் பிரச்சினை மிகப்பெரியது என அவர் நம்பியதால்.


செந்தாமரையைப் பற்றி நன்கு அறிந்ததால் கொஞ்சமும் கலவரம் அடையாமல் அங்கே வந்தான் அவளுடைய அப்பா ஈஸ்வர்.


"உங்க டாட்டர் செஞ்ச வேலையை பாருங்க! அவளுக்கு பேரண்ட்ஸ் பிக் அப் தான? அவ ஏன் ஸ்கூல் பஸ் நிறுத்தற இடத்துக்குப் போகணும்?" எனச் சற்றுக் கடுமையுடன் கேட்டார் அந்தப் பெண்மணி.


ஒன்றாம் வகுப்பில் படிக்கும் தாமரையும் ஏழாம் வகுப்பில் படிக்கும் ஜீவனும் அவரது அறையில் அலட்சியத்துடன் நிற்க அங்கே வரவழைக்கப்பட்ட அந்த ஓட்டுநருக்கு நெற்றியில் தையலிட்டுக் கட்டுப் போடப்பட்டிருந்தது. பீதியுடன் நின்றிருந்தான் அவன்.


"உண்மைய சொல்லு! நீ என்ன தப்பு பண்ண?" என ஈஸ்வர் அவனை மிரட்டும் தொனியில் கேட்க,


"அவரை ஏன் சார் மிரட்டுறீங்க!" என்றார் பள்ளி முதல்வர் கொஞ்சம் இறங்கிய குரலில்.


அடுத்த நொடி ஈஸ்வரின் பார்வை மகளின் புறமாகத் திரும்பவும், "அப்பா! அந்த ஆளு!" என்றவள் தகப்பனுடைய பார்வையின் மாற்றத்தால்,


"அந்த பேட் அங்கிள்! என் ஃப்ரெண்ட் ஹர்ஷினி கிட்ட 'பேட் டச்' பண்ணி ‘பேடா பிஹேவ்’ பண்ணாங்கப்பா! அவளோட மாம் கிட்ட அதை சொன்னா லிசன் பண்ணவே இல்லயாம். அவ கிளாஸ்ல அழறா...ப்பா! சுபா அத்தைதானப்பா,


பாதகம் செய்பவரைக் கண்டால் நீ


பயம் கொள்ளலாகாது பாப்பா!


மோதி மிதித்துவிடு பாப்பா அவர்


முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பான்னு சொல்லி கொடுத்தாங்க!


நான் செஞ்சது தப்பாப்பா?!" என செந்தாமரை கேட்கவும் அப்படியே உருகிதான் போனான் தகப்பன்.


'அப்படியே அணிமாமலரோட மினியேச்சர்!' என மனதிற்குள்ளே மகளுடன் சேர்த்து மனைவியையும் கொஞ்சியவாறு, "இல்லவே இல்லடா தங்கம்!" என்றவன்,


தோளை அலட்சியமாகக் குலுக்கியவாறு, "இப்ப புரிஞ்சுதா!" எனத் துளி கடினமாகக் கேட்டவன், “சரியான அவேர்னஸ் இல்லாம, தங்களுக்கு என்ன நடக்குதுன்னு கூட புரியாம, செக்ஷுவல் அபியூஸ வெளியில சொல்லவே தயங்கிட்டு, பயந்து உள்ளுக்குள்ளேயே போட்டு புதைச்சுட்டு நிறைய குழந்தைகள் இப்படி புழுங்கித் தவிக்கறாங்க. கேட்கும் போதே எனக்கு பதறுது.


ஒரு பொறுப்பான இடத்துல இருக்கற நீங்க இப்படி கேர்லெஸ்ஸா இருக்கலாமா? முதல்ல இந்த ஆள் மேல லீகல் ஆக்ஷன் எடுங்க. தென் அந்த சைல்டோட பேரன்ட்ஸ் கிட்ட பேசி புரிய வெச்சு தேவப்பட்டா அந்த பாப்பாக்கு கவுன்சிலிங் கொடுக்க ஏற்பாடு செய்ங்க. நீங்க இதையெல்லாம் செய்யலைன்னா நானே செய்வேன்" என மறுக்க இடமின்றி அன்புக்கட்டளையாகவே சொல்லிவிட்டு, அவனுடைய மக்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.


***


வீட்டிற்குள் நுழைந்தவுடன், யங் பாட்டி! ஓல்ட் பாட்டி! என்றவாறே பிள்ளைகள் பாட்டிகளை நோக்கி ஓடிவிட மனைவியை எதிர்கொள்ள அவனது அறை நோக்கிச் சென்றான் ஈஸ்வர்.


அவன் அங்கே வருவதற்கு முன், மல்லிக் மூலமாக அனைத்தும் மலருக்கு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டிருக்க அவன் எண்ணி வந்தது போலவே கோபம் கொப்பளிக்க ஜன்னல் வழியாக வேடிக்கைப் பார்ப்பது போல் நின்றிருந்தாள் அவனுடைய மனைவி.


அவளுடைய அருகில், அவளை உரசியதுபோல் வந்து நின்றவன், "ஹனீ! நம்ம பொண்ணு ஒரு தப்பும் செய்யலடீ!" எனத் தணிந்த குரலில் சொல்ல,


அவனைத் திருப்பிப் பார்க்காமலேயே, "தப்பைப் பொண்ணு பண்ணல ஆனா அவளோட அப்பாதான் பண்ணியிருக்காரு!" என்று மலர் சீற,


"ஏய் நான் என்னடீ தப்பு பண்ணேன்?" என்றான் ஈஸ்வர் விளங்காமல்.


"அந்த மேடம் ஏதாவது சாக்கு வெச்சு உங்களை அங்க வரச் சொன்னா நீங்க போகணுமா? ஏன் அந்த கம்ப்ளைண்ட அவங்க என்கிட்ட சொல்லி இருக்கலாமே! இதுதான் சான்ஸுன்னு உங்கள சைட் அடிப்பாங்க!" என அவள் பொரிய,


"ஏய் என்ன பேச்சு பேசற நீ. எங்க அம்மா வயசுடி அவங்களுக்கு! உன் பொண்ணு அந்த ட்ரைவர் மண்டையைதான் உடைச்சா! நீ மட்டும் அங்க போயிருந்தா அவனுக்கு சப்போர்ட் பண்ணிட்டு வந்ததுக்கு அந்த அம்மாவையுமில்ல ஒரு வழி செஞ்சிருப்ப! அதுக்கு பயந்துட்டுதான் என்னைக் கூப்பிட்டு இருப்பாங்க!" என்று கிண்டலுடன் சொல்லிச் சிரித்தே விட்டான் ஈஸ்வர்.


அவனுடைய கேலிப் பேச்சில் அவளது கோபம் தணிய ஈஸ்வர் அவளை மேலும் நெருங்க முற்படவும் அதற்குள் அவளை நோக்கி ஓடி வந்து தாவிய மகளைக் கைகளில் அள்ளிக்கொண்டாள் மலர்.


மகளுடன் சேர்த்து மனைவியையும் ஈஸ்வர் அணைத்துக்கொள்ள, "நானு! நானு!" என்றவாறு ஓடி வந்த ஜீவன் அவர்களுடைய அந்த அன்பு வளையத்துக்குள் தன்னையும் சிறைப் படுத்திக்கொண்டான் மகிழ்வுடன்!


அவர்களுடைய அன்பினில் மலர்ந்த வாசம் நிறைந்த அந்த மலர்கள் அழகாய் அங்கே மணம் வீசிக்கொண்டிருந்தன அணிமாமலர் மற்றும் ஜெகதீஸ்வரன் என்ற பாதுகாப்பு அரணுக்குள்!!!


அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்


புன்கணீர் பூசல் தரும்.


அனைவரின் வாழ்க்கையிலும் அன்பெனும் இதழ்கள் மலர்ந்து மணம் வீசட்டும்.

Commentaires

Noté 0 étoile sur 5.
Pas encore de note

Ajouter une note
© KPN NOVELS COPY PROTECT
bottom of page