Anbenum Idhazhgal Malarattume 35 & 36
அணிமா-35
ஒரு வருடத்திற்கு முன்...
மல்லிகார்ஜூன் மும்பையில் இருக்கும் பிரபல க்ளப் ஒன்றில் பார் பவுன்சராக வேலை செய்துகொண்டிருந்த சமயம் அவனை கைப்பேசியில் அழைத்த சோமய்யா டிப்பு காணாமற்போன செய்தியை பதட்டத்துடன் அவனிடம் தெரிவித்தான்.
பதறிய மல்லிக் உடனே காவல் நிலையம் சென்று புகார் அளிக்குமாறு சோமய்யாவிடம் சொல்லவும் அவன் அதற்கு பயந்து தயங்க அவனை மிகவும் வற்புறுத்தி புகார் அளிக்க வைத்தான்.
அதன் பின் அங்கிருந்து ஸ்ரீபுரம் வந்து சேரவே இரண்டு தினங்கள் பிடித்தது மல்லிக்கிற்கு.
காவல்துறை விரைந்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதில் சற்று எரிச்சலுற்றவன் ஊர்க்காரர்கள் சிலரைச் சேர்த்துக்கொண்டு சுற்றிலும் உள்ள சிறிய டவுன்கள் மற்றும் கிராமங்களில் தானே டிப்புவை தேடிச்சென்றான் அவன்.
ஆனால் எங்கேயும் அவன் கிடைக்காமல் போகவே விரக்தியுடன் வீட்டில் வந்து உட்கார்ந்தான் மல்லிக்.
ஏதோ ஒரு போட்டிக்காகச் சுற்றி உள்ள கிராமங்களில் புகைப்படம் எடுக்கவென சந்தோஷ் என்பவன் அந்த ஊரில் சில நாட்களாகத் தங்கி இருந்ததும் டிப்பு அவனுடன் நெருங்கிப் பழகியதும் பிறகுதான் சக்ரேஸ்வரி மூலமாக அவனுக்குத் தெரியவந்தது.
அவனைப் பற்றி அறிந்து கொள்ளும் பொருட்டு அந்த சந்தோஷ் தங்கி இருந்த வீட்டிற்கு அருகில் சென்று மல்லிக் விசாரிக்கவும் ஒருவர் வைத்திருந்த கைப்பேசியில் அவனுடைய முகம் தெளிவாகப் பதிவாகி இருந்தது.
அந்த கைப்பேசியுடன் காவல் நிலையம் சென்று அந்த தகவலைத் தெரியப் படுத்தினான் மல்லிக். ஆனால் அங்கே அவர்கள் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை என்பதை உணர்ந்து கோபத்தின் உச்சிக்கே சென்றான் அவன்.
ஒரே மகனைப் பிரிந்த ஏக்கம், பெற்றோர் இருவரையும் தாக்க பித்துப் பிடித்த நிலையிலிருந்தனர் இருவரும்.
நாள் முழுதும் காவல் நிலையத்தின் வாயிலிலேயே பழியாய் கிடந்த சக்ரேஸ்வரி ஒரு நிலையில் துயர் தாங்காமல் உடலில் தீ வைத்துக்கொள்ள உடனடியாக அருகிலிருந்தவர்கள் அவளைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அப்படி ஒரு அசம்பாவிதம் நடந்ததே வெளி உலகம் அறியாது அதிகார பலத்தினால் சுலபமாக மூடி மறைக்கப்பட்டது அங்கே.
இடது புறமாகக் கழுத்து, தோள், வயிறு மற்றும் இடை எனத் தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தது சக்ரேஸ்வரிக்கு.
அவளுக்கு அதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
செய்வதறியாமல், மகன் மனைவி இருவரை பற்றிய கவலையில் உழன்றவாறே சோமய்யா மருத்துவமனையில் அவளுடன் இருக்க, அன்னையைப் போன்று தன்னிடம் கரிசனம் காண்பிக்கும் அண்ணி மனதாலும் உடலாலும் அனுபவிக்கும் வேதனையை நேரில் பார்க்கவும் அது கொடுத்த வலியில் அனைத்திற்கும் காரணமானவன் கையில் கிடைத்தால் அவனைக் கொன்று புதைக்கும் கோபத்திலிருந்தான் மல்லிக்.
ஒரு மாதம் கடந்திருந்த நிலையில், அப்படி ஒரு வாய்ப்பு சுலபமாகக் கிடைத்தது அவனுக்கு.
ஆனால் ஒரு வேதனையான சூழ்நிலையில்!
அவனுடைய நண்பன் ஒருவன் இறந்த செய்தி அறிந்து மனம் வருந்தியவனாக அவர்களுடைய ஊருக்கு அருகில் உள்ள நர்சாபுரம் என்ற கிராமத்தில் வசிக்கும் அந்த நண்பனுடைய குடும்பத்தைச் சந்திக்க அங்கே சென்றான் மல்லிக்.
ஒரு இடத்தில் இல்லாமல் டிப்புவை தேடி சுற்றிக்கொண்டே இருந்த காரணத்தால் அவன் இறந்து ஒரு மாதம் கழித்தே அந்த செய்தி அவனுக்குக் கிடைத்தது.
அங்கே அவனுடைய மனைவி மற்றும் வயதான அவனுடைய பெற்றோர்களைச் சந்தித்து ஆறுதல் கூறியவன், அந்த நண்பனின் பிள்ளைகளைப் பற்றி விசாரிக்கவும் புடவை முந்தானையை வாயில் வைத்துப் பொத்