top of page
Writer's pictureKrishnapriya Narayan

Anbenum Idhazhgal Malarattume 33 & 34

Updated: Apr 13, 2023

அணிமா 33


"ஹலோ! ஹலோ! என்ன ஆச்சு மலர் லைன்லதான் இருக்கியா?" என்று ஜெய் எதிர் முனையில் படபடக்கவும், "ம்... சொல்லு ஜெய், கேட்டுட்டுதான் இருக்கேன்" என்றாள் மலர்.


"நான் எவ்ளோ பெரிய விஷயத்தை பேசிட்டு இருக்கேன், நீ என்னடான்னா இப்படி அசால்ட்டா பதில் சொல்ற" என அவன் அலுத்துக்கொள்ளவும், "ப்ச்… அப்படிலாம் இல்ல, உண்மையிலேயே ஷாக் ஆயிட்டேன்" என்ற மலர், "ஜெய் பாவம் ஜெய் அந்த ஆளு! கண்டுபிடிச்சா கூட அவரை ஒண்ணும் செஞ்சுடாத ப்ளீஸ்!” என்று கெஞ்சலாகச் சொல்லவும்,


"இப்ப இதுக்கு நான் என்ன பதில் சொல்ல முடியும் மலர்! அதைக் காலம்தான் தீர்மானிக்கும்" என்ற ஜெய்யின் பதிலில் கொஞ்சம் கடுப்பானவள்,


“அரசியல் பலம், பண பலம் எல்லாத்தையும் வெச்சுட்டு பல பேரோட குடும்பங்களைச் சீரழிக்கறவனையெல்லாம் விட்டுட்டு சும்மா வேடிக்கை பார்த்துட்டு இருப்பீங்க. இவனை மாதிரி யாராவது கிடைச்சா குற்றவாளியைப் பிடிச்சிட்டோம்னு பெருமை பேசிட்டு அவனை வெச்சு செய்வீங்௧!" என்று அங்கலாய்த்தாள்.


"இதையெல்லாம் ஃபோன்லயே பேசி முடிச்சிடலாமா! நான் இத ஆர்வ கோளாறுல உன்கிட்ட இப்படிச் சொன்னதே தப்பு போல இருக்கே!" என்றான் ஜெய் கோபமாக.


"ப்ச்! நான் என்ன சொல்லிட்டேன்னு உனக்கு கோவம் வருது ஜெய், எதுக்கு டென்ஷன் ஆகற?" என மலர் பதிலுக்கு அவனிடம் எகிறவும்,


"இவ்ளோ டீட்டைலா இதெல்லாம் ஃபோன்ல பேசக்கூடாதுடீ லூசு! நான் ஈவினிங் உங்க வீட்டுக்கே வரேன், நேர்லயே பேசிக்கலாம்" என்று சொல்லி, பட்டென்று அழைப்பைத் துண்டித்தான் ஜெய்.


ஜெய்யிடம் எழுந்த கோபத்தை மறைத்துக்கொண்டு, அவனுடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது ஈஸ்வரின் முகத்தில் ஏற்பட்ட மாறுதலுக்கான காரணத்தை அவனிடம் கேட்க ஈஸ்வரைத் தேடிக் கீழே வந்தாள் மலர். ஆனால் அதன் பிறகு அகற்கான நேரமே அமையவேயில்லை மலருக்கு.


மாலை ஈஸ்வர் அவனுடைய அலுவலக அறையில் தனிமையில் இருப்பதை அறிந்து அவனிடம் அது பற்றிக் கேட்டுவிடலாம் என எண்ணி, அந்த அறை நோக்கிச் சென்றாள்.


அப்பொழுது முரட்டுத்தனமான ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட்டில், ஆஜானுபாகுவான உயரமும், திரண்ட தோள்களும், ரப்பர் பேண்ட் போட்டு அடக்கியிருந்த தலை முடியும், ட்ரிம் செய்யப்பட்ட தாடியும் என, அனாயாசமாக ஒரு மனிதனை தன் ஒரே கையில் தூக்கிவிடுவான் என்பதை உணர்த்தும்படியான, பார்க்கும் பொழுதே பயம் வந்து ஒட்டிக்கொள்ளும் தோற்றத்தில், அங்கே வந்துகொண்டிருந்தான் ஈஸ்வரிடம் வேலை செய்யும் பௌன்சர்களில் ஒருவன்.


ஈஸ்வருடன் பொது இடங்களில் செல்லும் பொழுது அடிக்கடி அவனைச் சந்தித்திருந்த காரணத்தால் உண்டான அறிமுகத்தால், 'ஐயோ! இப்பவும் பேச முடியாது போல இருக்கே!' என மனதிற்குள் சலித்தவரே, "வாங்க மாலிக் அண்ணா! எப்படி இருக்கீங்க?" என்று மலர் கேட்கவும்,


அவளிடம் பேசத் தயங்கியவாறே, சிறிது வெட்கத்துடன் 'நன்றாக இருக்கிறேன்!' என சொல்வதுபோல் தலையை மட்டும் ஆட்டினான் அந்த மாலிக்.


அப்பொழுது அவனுக்காகவே எதிர்பார்த்துக் காத்திருப்பவன் போன்று அறையை விட்டு வெளியே வந்த ஈஸ்வர், "நீ உள்ள வா!" என அவனை அழைத்துவிட்டு மலரை நோக்கி, "நீ வசந்திம்மா கிட்ட சொல்லி ரெண்டு பேருக்கும் காஃபீ அனுப்பு" என்று உள்ளே செல்ல, மாலிக்கும் அவனை பின் தொடர்ந்தான்.


அங்கே போடப்பட்டிருந்த சோஃபாவில் போய் அமர்ந்த ஈஸ்வர், எதிர்புறம் இருந்த இருக்கையைக் கைக் காட்டி, "உட்கார்!" என்று அவனிடம் கட்டளையாகச் சொல்லவும், "பரவாலேது அண்ணையா!" என்று அவன் சங்கடமாய் நெளிய,


"நீ முதல்ல உட்காரு, உன்கிட்ட முக்கியமா பேசணும்!" என்று ஈஸ்வர் சொல்லவும், அந்த இருக்கையின் நுனியில் தயக்கத்துடன் உட்கார்ந்தவன் ஈஸ்வருடைய முகத்தைப் பார்க்க,


அதில் தெரிந்த கடினத்தில் பயந்துபோய், "க்ஷமிஞ்சண்டி அண்ணையா! எந்துக்குக் கோபம் புரிலோ! சொல்லுங்கோ, பணிலோ நேனு என்னா தப்பு செஞ்சனா?!" என்று உள்ளே சென்ற குரலில் கேட்டான் அவன்.


"நீ வேலைல எந்த தப்பும் செய்யல மல்லிக்! ஆனா என்கிட்ட நிறைய விஷயத்தை மறைச்சுட்டியே! எத்தனை வருஷமா உனக்கு என்னைத் தெரியும்? அதுவும் நாலு அஞ்சு மாசமா என் கூடவே தான இருக்க? இருந்தாலும் என் மேல உனக்குக் கொஞ்சம் கூட நம்பிக்கை வரல, அப்படித்தான?" என ஈஸ்வர் ஆதங்கத்துடன் கேட்கவும், "தேவுடா! அட்டனெ செப்ப குடுது அண்ணையா! சாலா பாத பட்துந்தி!" என அவன் கண்கள் கலங்கச் சொல்ல, "அப்படியா? உண்மையிலேயே நீ அவ்வளவு வருத்தப்பட்றியா?” என்று கேட்டுவிட்டு,


அவனை ஆழமாக பார்த்தவாறே, “என் மேல உனக்கு உண்மையிலேயே நம்பிக்கை இருந்திருந்தா டிப்பு காணாம போனதை என் கிட்ட இருந்து மறைச்சிருப்பியா மல்லிக்? முக்கியமா, என்கிட்ட வேலை செய்யாத நேரத்துல நீ என்ன செஞ்சுட்டு இருக்கேன்னு எனக்குத் தெரியாம இருந்திருக்குமா?" எனக் கேட்டான் ஈஸ்வர்.


ஈஸ்வருக்கு எல்லாமே தெரிந்துவிட்டது என்பது புரியவே, அதில் உடைந்தான் மல்லிக். அவனது கண்களிலிருந்து கண்ணீர் பெருகத்தொடங்கியது.


அப்பொழுது வசந்தி காஃபியைக் கொண்டு வந்து அங்கே வைத்துவிட்டுச் செல்லவும், அவசரமாக முகத்தைத் துடைத்துக்கொண்டு, ஈஸ்வருடைய வற்புறுத்தலின் பேரில் அதை எடுத்துப் பருகியவன், "டிப்பு காணாமே போயீ ஒரு வருஷம்மு மேலே ஆச்சு அண்ணைய்யா!" எனச் சொல்ல,


"இல்ல! அதெல்லாம் எனக்குத் தெரியும்! உங்க அண்ணி இப்ப எப்படி இருகாங்க? அதைச் சொல்லு முதல்ல!" என்றான் ஈஸ்வர்.


ஒரு பெருமூச்சை வெளியேற்றியவன், "ஒதினா பாகா உன்னாரு! நிப்புலோ பெட்டுன (நெருப்பில் ஏற்பட்ட) புண்ணு சரியாடிச்சு! கானி மச்சாலு அணி... தளும்பு எக்கச்சக்கம் இருக்கு! பாபம் ஒதினா! பைட்ட... அதான் வெளியிலோ வருதே இல்லோ!" என்றான் மல்லிக் வருத்தம் மேலிட.


"இப்ப சோமண்ணாவும் உங்க அண்ணியும் எங்க இருக்காங்க?” என்று ஈஸ்வர் அவர்களைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன் தொடர்ந்து கேட்கவும்,


அவனிடம் மறைக்க மனமின்றி, "ஒதினா மாம்பலம், வாளதோப்பு ஹவுசிங் போர்டுலோ ஒக்க இண்டிலோ உன்னாரண்டி! அண்ணைய்யா பிச்சி, அணி பைத்தியம் புடிச்சு, டிப்புவோ தேடி ஊரெல்லா சுத்துறாங்கோ!


பணி இல்லாதோ சமயம் நானு தேடி போயி, புடிச்சு இண்ட்லோ வுட்டா, ஒக்க ரோஜு மாத்திரமே அக்கட இருப்பாங்கோ, அடுத்த நாளு மலரம்மா போவாங்கோ லேது அந்த பிளாட் கிட்டோ ஃபிளாட்பார்ம்லோ போயி படுத்துகிடப்பாங்கோ!" என்றான் மல்லிக் சலிப்புடன்.


அதைக் கேட்ட நொடி ஈஸ்வரின் உடல் அதிர்ந்தது. கிட்டத்தட்ட சோமய்யாவை அவன் சந்தித்து ஏழு வருடங்கள் ஆகியிருந்தது. உருவத்தில் மல்லிக்கை ஒற்று இருப்பவன், உருக்குலைந்துபோய், தற்பொழுது இருக்கும் இந்தத் தோற்றத்தில், அவனை அடையாளம் கண்டு கொள்ள இயலவில்லை ஈஸ்வரால்.


ஆனால் அன்று சுபாவின் பொருட்களை எடுத்துவர ஈஸ்வர் அங்கே சென்ற தினம், அவனை நம்பிக்கையுடன் சோமய்யா பார்த்த பார்வையின் பொருள் அவனுக்கு விளங்க, குற்ற உணர்ச்சியில் துடித்துப்போனான் ஈஸ்வர்.


அவன் முதன் முதலாக, ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க ஆந்திராவில் உள்ள ஸ்ரீபுரம் என்ற கிராமத்திற்குச் சென்றபொழுது, அங்கேதான் மல்லிகார்ஜுனுடைய அறிமுகம் கிடைத்தது. மல்லிக் கொஞ்சம் புரியும்படியாக தமிழ் பேசவும், அவனுடன் ஒரு நல்ல நட்பும் ஏற்பட்டது.


சென்னை, மும்பை எனப் பல பகுதிகள் முழுவதிலும் இந்த வேலைதான் என்பது இல்லாமல், கிடைத்த வேலைகளைச் செய்து கொண்டு அவன் சம்பாதிக்கும் தொகையைக் குடும்பத்திற்குக் கொடுத்துவிடுவான் மல்லிக் என்பது தெரிந்தது ஈஸ்வருக்கு.


கல்வியறிவு இல்லாமல் இருந்தாலும் தமிழ், ஒரியா, ஹிந்தி எனப் பல மொழிகளை அவன் அறிந்து வைத்திருப்பது கண்டு வியப்பாக இருந்தது.


ஸ்ரீபுரம், அடிப்படை வசதிகள் கூட இல்லாத ஒரு சிறிய குக்கிராமம். அங்கேயே தங்கி, அந்தப் படத்தைத் தயாரித்தனர்.


அங்கே அவனுக்கு அளிக்கப்படும் உணவு காரம் மிகுந்து இருந்ததால், அது அவனுக்கு ஒவ்வாமல் செரிமான கோளாறுகளை ஏற்படுத்தவும் மிகவும் அவதிப்பட்டான் ஈஸ்வர்.


அதை உணர்ந்து, அங்கே இருக்கும் வரை தான் வீட்டிலேயே சாப்பிடுமாறு அவனை வற்புறுத்தி ஒப்புக்கொள்ள வைத்தான் மல்லிக்.


அதற்காக அவனுடைய வீட்டிற்கு சென்ற சமயம்தான், அவனுடைய அண்ணன், அண்ணி அவர்களுடைய ஆறு வயது மகன் டிப்பு என அனைவரையும் சந்தித்தான் ஈஸ்வர்.


மல்லிக்குடைய ஆதாரமே அவனுடைய அந்தச் சிறிய குடும்பம்தான் என்பது நன்றாக விளங்கியது அவனுக்கு. மல்லிக்கிடம் இருப்பதுபோலவே, ஈஸ்வரிடமும் நன்றாக ஒட்டிக்கொண்டான் டிப்பு.


ஈஸ்வர் சுத்த சைவம் என்பதினால், புதிதாக மண் பாத்திரங்கள் வாங்கி வந்து, தனிப்பட்ட முறையில், காரம் சேர்க்காமல், பக்குவமாகச் சமையல் செய்து கவனித்துக்கொண்டாள் சக்ரேஸ்வரி.


அவர்கள் காட்டிய சுயநலமற்ற அன்பாலும் கரிசனமான நடவடிக்கைகளாலும் சோமய்யாவின் குடும்பத்துடன் ஒரு ஆத்மார்த்தமான பிணைப்பு உருவானது ஈஸ்வருக்கு.


அவன் அங்கிருந்து திரும்பிய பிறகு மறுபடி அவர்களைச் சந்திக்க இயலவில்லை என்றாலும் சென்னையில் தங்கி இருக்கும் சமயம் அவ்வப்பொழுது அவனைத் தொடர்பு கொள்வான் மல்லிக்.


அவனது நிலை மேலே போன பிறகு அந்தத் தொடர்பும் இல்லாமலே போக சில மாதங்களுக்கு முன்பு ஈஸ்வரைத் தேடி வந்தான்.


அவசரமாக வேலை ஒன்று தேவைப்படுவதால் அவனுக்கு ஒரு வேலை ஏற்பாடு செய்து கொடுக்குமாறு அவன் கேட்கவும் அவனைத் தன்னுடனேயே இருந்துவிடுமாறு சொன்ன ஈஸ்வர் ‘பௌன்சர்’ எனப்படும் பாதுகாவலனாகப் பிரத்தியேகமாக அவனை வைத்துக்கொண்டான்.


அவர்கள் வீட்டில் வேலை செய்யும் பூங்காவனம் என்பவருடைய அறையிலேயே அவன் தங்கிக்கொள்ளவும் ஏற்பாடு செய்தான்.


ஜெய் அனுப்பிய அந்த ஒலிப்பதிவில் அவனுடைய குரலைக் கேட்ட சமயம் கூட மல்லிக்கைப் போலவே ஒருவன் பேசுகிறான் என வியந்தானே தவிர மனிதநேயம் மிக்க மல்லிகார்ஜுனை அப்படி ஒரு கொலைகாரனாக எண்ணிப் பார்க்க ஈஸ்வருடைய மனம் இடம் கொடுக்கவில்லை.


ஜெய் மூலமாக, டிப்பு காணாமல் போனதை அறிந்த ஈஸ்வர் மிகவும் மனம் வருந்தினான்.


நடக்கும் கொலைகளுக்குப் பின்னால் மல்லிக்தான் இருக்கிறான் என்பது புரியவும், அவனுடைய பெயர் வெளியில் வந்து அவன் மேற்கொண்டு எந்தச் சிக்கலிலும் மாட்டிக்கொள்ளக்கூடாது என்கிற எண்ணத்தில் அவசர அவசரமாக அவனுடைய படப்பிடிப்பை முடித்துக்கொண்டு சென்னை திரும்பியவன் தன்னை வந்து சந்திக்குமாறு மல்லிக்கிற்கு தகவல் அனுப்பினான்.


அதற்குள் ஜெய் மல்லிக்குடைய பெயரைக் குறிப்பிடவும் நிலைமை கை மீறிச் சென்றுகொண்டிருப்பது புரிந்தது ஈஸ்வருக்கு.


எப்பொழுது வேண்டுமானாலும் ஜெய் அங்கே வரக்கூடும் என்ற எண்ணம் தோன்றவும் திடுக்கிட்டு தன் எண்ணப்போக்கிலிருந்து கலைந்தவனாக எந்த சலனமும் இன்றி தான் எதிரில் அமர்ந்திருக்கும் மல்லிக்கை நோக்கி, "உன்னைப் பத்தி போலீசுக்கு தெரிஞ்சுபோச்சு தெரியுமா உனக்கு? எப்ப வேணாலும் உன்னைத் தேடி போலீஸ் வரும், அது தெரியுமா?" என்று தீவிரமாக ஈஸ்வர் கேட்கவும்,


கொஞ்சமும் அதிராமல், "போலீசு! என்ன பெரிய போலீசு! டிப்புவைக் கடத்திட்டுப் போன குக்காவை உட்டுட்டு என்னைப் புடிப்பாங்கோ? நானும் பாக்கறேன்?" என்றான் மல்லிக் தெனாவெட்டாக.


அவனுடைய பதிலில் எரிச்சல் உண்டாக மேற்கொண்டு அவனிடம் ஏதும் பேசும் மனநிலையில் இல்லாதவனாக, "நீ இப்ப கிளம்பு! நாளைக்கு உங்க அண்ணி இருக்காங்க இல்ல அந்த வீட்டுக்கு வரேன்! மத்ததெல்லாம் அங்கே பேசிக்கலாம்" என்று ஈஸ்வர் சொல்லவும் மறுத்துப் பேசாமல் அங்கிருந்து கிளம்பினான்.


கதவைத் திறந்துகொண்டு அவன் வெளியில் வரவும் சரியாக அதே நேரம் அந்த அறையை நோக்கி வேகமாக வந்துகொண்டிருந்த ஜெய்யின் மேல் எதிர்பாராமல் மோதி நின்றான் மல்லிக்.


'சாரி!" என்று உரைத்துவிட்டு, அவனை எடைபோடுவது போல் ஒரு பார்வை பார்த்துக்கொண்டே உள்ளே சென்றான் ஜெய்.


************


அணிமா 34


மல்லிக் ஈஸ்வரின் வீட்டிலிருந்து வெளியேறிச் சென்றுவிட, அவனது அலுவலக அறைக்குள் நுழைந்த ஜெய்யைப் பார்த்துவிட்டு அவனைப் பின் தொடர்ந்து வேகமாக அங்கே வந்தாள் மலர்.


அவள் வந்த வேகத்தைப் பார்த்துவிட்டு, "என்ன அண்ணா! வீட்டுக்குள்ளேயே சரியான தள்ளுமுள்ளு போல இருக்கு! இங்கயே பவுன்சரெல்லாம் வராங்க!" என, நக்கலுடன் ஜெய் சொல்லவும்,


"ஹா! ஹா! சரியா சொன்ன ஜெய்! என்னாலேயே சமாளிக்க முடியலைன்னா பார்த்துக்கோயேன்!" எனச் சிரித்துக்கொண்டே கிண்டலுடன் பதிலளித்தான் ஈஸ்வர்.


அதில் உக்கிரமாகி, "என்ன ரெண்டு பேரும் ஒண்ணு கூடிட்டு என்னையே கிண்டல் செய்யறீங்களா! இருக்கு உங்களுக்கு!" என்று எகிறியவள், "முக்கியமா உனக்கு!" என்று ஜெய்யைப் பார்த்து முறைத்தாள் மலர்.


"ஏய் லூசு! அடங்கவே மாட்டியா நீ?" என்றவன் ஈஸ்வரை நோக்கி, "பாருங்க அண்ணா! டிபார்ட்மெண்ட் சீக்ரட், நானே தயங்கித் தயங்கி ஃபோன்ல சொன்னா, உணர்ச்சிவசப்பட்டு ஓவரா பேசிட்டே போறா இவ! அதை சொன்னா கோவம் பொத்துட்டு வருது!" என மலரைப் பற்றிக் குற்றப்பத்திரிகை வாசித்தான் ஜெய்.


"விடு ஜெய்! அவ சொன்னா புரிஞ்சுப்பா!" என்றான் ஈஸ்வர் மனைவிக்குப் பரிந்துகொண்டு.


ஜெய் விளையாட்டாகப் பேசிக்கொண்டிருந்தாலும் ஈஸ்வரைப் பற்றிப் பல சந்தேகங்கள் அவன் மனதிற்குள் ஓடிக்கொண்டேதான் இருந்தது.


அவன் ஈஸ்வரிடம் கொண்டிருந்த மரியாதை காரணமாக அதுவும் மலர் அங்கு இருக்கவும் அவளுடைய முன்னிலையில் ஈஸ்வரிடம் விசாரணை நடத்துவதுபோல் தோன்றிவிடக் கூடாது என்று எண்ணியே அந்தச் சூழ்நிலையைச் சகஜமாகக் கொண்டு செல்ல விரும்பினான் அவன்.


மலரோ ஜெய் அங்கே இருக்கும் பொழுது பாதியிலேயே ஈஸ்வர் சென்றதன் காரணத்தைக் கேட்பதா வேண்டாமா எனத் தயக்கத்துடன் உட்கார்ந்திருந்தாள்.


அவளுடைய முகத்தில் குடிகொண்டிருந்த குழப்ப ரேகையைப் படிக்க முயன்றவாறே, "அண்ணா! பை எனி சான்ஸ் உங்களுக்கு அந்த டிப்புவோட ஃபேமிலியைப் பத்தி ஏதாவது தெரியுமா?" என்று எதார்த்தமாகக் கேட்பது போல் கேட்டான் ஜெய்.


அவனிடமிருந்து அப்படி ஒரு மறைமுக விசாரணையை எதிர்நோக்கியே இருந்ததால் கொஞ்சமும் பிறழாமல், "என்ன ஜெய் கிண்டல் பண்றியா? அவங்கள எனக்கு எப்படித் தெரியும்?" என்றான் ஈஸ்வர்.


"இல்ல அன்னைக்கு வீடியோ கால் பேசும் போது, உங்களோட ரியாக்ஷனைப் பார்த்ததும் எனக்கு அப்படி தோனிச்சு, சாரி! டிப்பு காணாம போனது உங்களை ரொம்பவே பாதிக்க மாதிரி எனக்கு ஒரு ஃபீல்! சூட்டோட சூடா கருணா மாமா கிட்ட பேசி என்னவெல்லாம் செஞ்சு முடிச்சிருக்கீங்க! எல்லாமே அந்தப் பையனைக் கண்டுபிடிக்கத்தான?! ஷூட்டிங்க வேற சீக்கிரமா முடிச்சிட்டு, அவசர அவசரமா கிளம்பி இங்க வந்துடீங்களா!" எனச் சரியாக அவனது நாடியைப் பிடித்துப் பார்த்தது போல் சொன்ன ஜெய், தொடர்ந்து, "இன்னைக்கு வேற நான் மல்லிகேஸ்வரனைப் பத்தி சொன்னவுடனே, நீங்க அங்கயிருந்து பாதியிலேயே போடீங்களா... அதுதான்!" என்று இழுக்கவும், அவனுடைய போலீஸ் புத்தியை நினைத்து அதிர்ந்தாள் மலர்.


ஆனால் அதைக் கொஞ்சமும் கண்டுகொள்ளாதது போல், "என்ன ஜெய்! இந்த மாதிரி விஷயங்கள பத்தி கேள்விப்படும்போது எல்லாருக்கும் ஏற்படற வருத்தம்தான் எனக்கும். மத்தபடி வேற எதுவும் இல்ல! அந்தப் பையனுக்காக மட்டும் இல்ல ஜெய், இப்படி அனாமத்தா கடத்தப்படற எல்லா குழந்தைகளுக்காகவும்தான் நான் அதைச் செஞ்சது. பர்டிகுலர்லி ஜீவன் கொடுத்த பிட்டர் எக்ஸ்பீரியன்ஸ்தான் காரணம்!" என வெகு ஜாக்கிரதையுடன் சொல்லி முடித்தான் ஈஸ்வர்.


"ஓஹ், சாரி அண்ணா! நான்தான் அவசரப்பட்டு என்னென்னவோ திங்க் பண்ணிட்டேன்!' என்று விட்டுக்கொடுப்பதுபோல் சொன்ன ஜெய்,


"ஆனா, ஏதாவது சூழ்நிலைல அந்த மல்லிகேஸ்வரன் பத்தியோ இல்ல சோமய்யாவைப் பத்தியோ ஏதாவது உங்களுக்குத் தெரியவந்தா எங்கிட்ட கொஞ்சம் ஷேர் பண்னுங்க! ஏன்னா, அவன் கொலை செய்யறது கெட்டவங்களையா இருந்தாலும் அவன் ஒரு பெரிய நெட்வொர்க் சேனலோட லிங்க்க கட் பண்ணிட்டு இருக்கான்! அதுல ஒருத்தன் கிடைச்சாலும் அதோட மாஸ்டர்ப்ரைன் யாருன்னு ஈஸியா கண்டுபிடிச்சுடலாம்!" என்றான் ஜெய்.


என்னதான் அவன் சுமுகமாகப் பேசுவதுபோல் பேசினாலும், அவனது காவல்துறை விசாரணையும் அதில் அடங்கி இருப்பது ஈஸ்வருக்கு நன்றாகவே புரிய,


மலருக்கோ, 'ஏன் இவன் நம்ம ஹீரோ கிட்ட இப்படியெல்லாம் பேசறான்?!' என்ற கேள்வி எழுந்தது.


'என்ன இருந்தாலும் நீ போலீஸ்தான ஜெய்! உன்னை மாதிரி ஒரே ஒரு நல்ல போலீசும், கருணா மாதிரி ஒரே ஒரு நல்ல அரசியல்வாதியும் மட்டும் நம்ம நாட்டுக்குப் போறாது! நல்லது செய்யணும்னு நீங்க நினைச்சாலும் பக்கத்துல இருக்கறவங்க உங்களைத் தொடர்ந்து செய்ய விடமாட்டாங்க! மல்லிக்கைப் பத்தி உங்கிட்ட சொன்னால், அவனோட உயிருக்கே ஆபத்தா போய் முடியும்! ஸோ, நான் சொல்ல மாட்டேன்! ஆனா அவனுக்கும் உனக்கும் நடுவுல இருந்துட்டு உங்க ரெண்டு பேருக்குமே என்னால நன்மை செய்யமுடியும்!' என மனதிற்குள் எண்ணிய ஈஸ்வர்,


"கண்டிப்பா ஜெய்! இந்த விஷயத்துல நான் உனக்கு முழு சப்போர்ட் கொடுப்பேன்!" என்றான் மனதிலிருந்து.


ஈஸ்வர் அப்படிச் சொல்லவும், "ஜெய் ஒரு வேளை அந்த மல்லிகார்ஜுன் கிடைச்சான்னா அவனை என்ன செய்வீங்க?" என தன் மனதில் எழுந்த சந்தேகத்தை மலர் கேட்க,


"வேற என்ன, இருக்கவே இருக்கு குண்டாஸ்! அதுல அவனை அர்ரெஸ்ட் பண்ணி, கோர்ட்ல ப்ரொட்யூஸ் பண்ணுவோம்! அதுக்கு பிறகு ஜட்ஜ் என்ன சொல்றாரோ அதுபடி அவனுக்கு இரட்டை ஆயுள் தண்டனையோ இல்ல அதுக்கு மேலயோ கிடைக்கும்! அவனுக்குப் பண பலம் அரசியல் பாக்ரவுண்ட் எதுவும் இருக்க வாய்ப்பில்ல! அதனால உணர்ச்சிவசப்பட்டு அவன் செஞ்ச கொலைகளால ஜெயில்லயே அவனோட லைப் முடிஞ்சுபோயிடும்!" என்றான் ஜெய் விரக்தியுடன்.


"ஆனாலும் அவனை நீ அரெஸ்ட் பண்ணியே ஆகணும் இல்ல ஜெய்? நீ சொன்ன மாதிரி அவன் செஞ்ச கொலைகளுக்காக ஜெயில்ல உயிரோட இருந்தால கூட பரவாயில்ல! எப்படியும் இந்த சைல்ட் ட்ராபிக்கிங்ல இன்வால்வ் ஆகி இருக்கறவங்களுக்கு அரசியல் சப்போர்ட் இல்லாம இருக்காது. அதனால வேற வழி இல்லாம அவங்கள தப்ப வைக்க, இந்த மல்லிக்கோட கதையை முடிக்கப்போறீங்க!" என்றாள் மலர் காட்டமாக.


கோபத்தில் அவளது குரல் வேறு ஓங்கி ஒலிக்கவே, அதுவும் அவனுடைய வேலையைப் பற்றி அவள் விமர்சிக்கவும் அதில் அவனது தன்மானம் சீண்டப்பட, "ஷட் அப் மலர்! ரொம்ப அதிகப்படியா பேசற. நான் என்ன செய்ய போறேன்னு, வெயிட் பண்ணி பாரு! இப்பவே எல்லாத்தையும் பேசி முடிச்சிடாத!" என்றான் ஜெய்.


"யாரோ முகம் தெரியாதவனுக்காக நீங்க ரெண்டு பேரும் ஏன் சண்டை போடுறீங்க? முதல்ல உங்க சண்டையை நிறுத்துங்க!" என்றான் ஈஸ்வர், அந்த மல்லிகார்ஜூன் அவனைப் பொறுத்தவரை ஒரு முகம் தெரியாதவன் என்பதை ஜெய்க்கு உணர்த்தும் விதமாய்.


அவனது வார்த்தைகளில் அமைதியானார்கள் இருவரும். ஆனாலும் இருவர் முகத்திலும் எள்ளும் கொள்ளும் வெடித்துக்கொண்டிருந்தது.


அவர்கள் இருவருடைய மனநிலையையும் மாற்ற எண்ணி, "எல்லாமே ஓகேதான், ஆனா எல்லாரும் சேர்ந்து இப்படி என் லைஃப்ல விளையாடுறீங்களே இது எந்த விதத்துல நியாயம் ஜெய்?" எனக் கேட்டான் ஈஸ்வர் தீவிர பாவனையில்.


அதில் திடுக்கிட்டவனாக, "சாரி...ணா என்ன சொல்றீங்கன்னு புரியல!" என தடுமாற்றத்துடன் ஜெய் சொல்லவும்,


"இல்ல, இந்த கேஸெல்லாம் முடிஞ்சு நாங்க எப்பதான் ஹனிமூன் போறது; ம்? அதுக்காகவாவது, நீ இந்த சைல்ட் கிட்னப்பிங் ராக்கெட்டை சீக்கிரம் கண்டுபிடிக்கணும் ஜெய்!" என்று கொஞ்சமும் சிரிக்காமல் சொன்ன ஈஸ்வர்,


"எது எதுக்கோ அவன்கிட்ட சண்டைப் போடற நீ! இதுக்காகவும் கொஞ்சம் அவன்கூட ஃபைட் பண்ணலாமில்ல ஹனி!?" என்றான் மலரைப் பார்த்து கண் சிமிட்டியவாறே!


அவனது பேச்சில் முகம் சிவந்தவளாக, "ஐயோ! விவஸ்தையே இல்லாம இப்படி பேசறீங்களே!" என்று தலையில் அடித்துக்கொண்டு, அவர்களுக்குப் பழரசம் எடுத்துவருவதாகச் சொல்லிவிட்டு நாணம் மேலிட அங்கிருந்து ஓடியே போனாள் மலர்.


"ஐயோ! இந்த ராணி மங்கம்மாவை, செம்மையா டீல் பண்றீங்கண்ணா நீங்க! நீங்கதான் அவளுக்குச் சரியான ஆளு!" என்றான் ஜெய் சிரித்தவாறே.


"இல்லனா அவளை எப்படி சமாளிக்கறது ஜெய்!" என்றவன்,


“மீண்டும் உயிர்த்தெழு படம் ரிலீசான பிறகுதான் இருக்கு என்னோட ரியல் ஷோவே!" என்றான் உண்மையான திகிலுடன்.


அதைக் கேட்டு அதிர்ந்து சிரித்தான் ஜெய் அடக்கமாட்டாமல்.


பிறகு மலர் எடுத்து வந்த பழரசத்தை அருந்திவிட்டு வீட்டில் எல்லோரையும் சந்தித்து நலம் விசாரித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.


அவனை வழி அனுப்ப வந்த மலரிடம், "கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இங்க வந்திருந்தாரே ஒரு பவுன்சர் அவரோட நேம் என்ன!" என்று கேட்டான் ஜெய்.


'எதுக்கு அவரோட பேரையெல்லாம் கேக்கறான் இவன்?' என்ற கேள்வி மனதில் எழுந்தாலும், "மாலிக்!" என்று பதில் சொல்லவும் செய்தாள் மலர்.


"அவரோட ஃபுல் பேரே அதுதானா?" என்று ஜெய் அடுத்த கேள்விக்குத் தாவவும்,


"வேணா அவரோட ஜாதகம் இருந்தா வாங்கிட்டு வந்து தரட்டுமா ஜெய்! கேக்கறான் பாரு கேள்வி!" என்றாள் மலர் நக்கலாக.


"நோ தேங்க்ஸ்! ஏதாவது பொண்ணோட ஜாதகமா இருந்தாலும் பரவாயில்ல! அவரோட ஜாதகத்தை வெச்சிட்டு நான் என்ன செய்ய போறேன்!" என்றான் ஜெய் அதைவிட நக்கலாக.


"அடப்பாவி! இரு இதை இப்பவே ராசா... ரோசா... ரெண்டு பேர் கிட்டயும் சொல்லி உனக்கு ஒரு கால் கட்டுப் போட வழி பண்றேன்!" என்று மலர் தீவிரமாகச் சொல்லவும்,


"தாயே நீ செஞ்சாலும் செய்வ! ஆளை விடு! அப்புறம் உன் ஹீரோ ஃபீல் பண்ற மாதிரி என்னோட ஹீரோயினும் ஃபீல் பண்ணப்போறா! என்ன விட்டுடு!" என்று சொல்லிக்கொண்டே அவன் பைக்கை கிளப்ப,


"அது! அந்தப் பயம் இருக்கணும்!" என்று சொல்லி மலர் கலகலத்துச் சிரிக்கவும், அவளுடைய மலர்ந்த முகத்தைப் பார்த்து நிம்மதி அடைந்தவனாக அங்கிருந்து சென்றான் ஜெய்.


***


அன்றைய இரவு முழுதும், டிப்புவையும், மல்லிக்கையும் நினைத்து உறக்கமின்றி தவித்த ஈஸ்வர், ஒரு முடிவுக்கு வந்தவனாக, அதிகாலை கண் விழித்த மறுகணம், அவர்களைப் பற்றிய அனைத்தையும் மலரிடம் சொல்லிவிட்டான்.


முதலில் அதிர்ச்சியுற்றாலும், "அந்த ஹாப்பி மேன்தான் டிப்புவோட அப்பாவா?!" என நம்பவே முடியாமல் அதிசயித்துப் போனாள் மலர்.


சில தினங்களுக்கு இதைப் பற்றி ஜெய்யிடம் எதையும் சொல்லவேண்டாம் என அவளை எச்சரித்தவன், அவள் சொன்னதன் பேரில் தனியார் மருத்துவமனை ஒன்றில், அதன் மனோதத்துவ மருத்துவ பிரிவில், சோமய்யாவின் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தான்.


சோமய்யா சிகிச்சைக்காக அங்கேயே சில தினங்கள் தங்கியிருக்க வேண்டிய காரணத்தால், அவனுக்குத் துணையாக சக்ரேஸ்வரி அங்கே இருக்கவும் ஏற்பாடு செய்திருந்தான்.


அன்று காலையே கிளம்பி மலரை அழைத்து வந்து சுசீலா மாமி குடியிருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பின் வாயிலில் அவளை இறக்கி விட்டவன், அங்கே சுருண்டு கிடந்த சோமய்யாவை ஒரு பரிதாப பார்வை பார்த்தவாறு,


"இன்னும் கொஞ்ச நேரத்துல அம்புலன்ஸ் வந்துடும் மலர்! சோமய்யாவை ஜாக்கிரதையா அம்புலன்ஸ்ல ஏத்திவிட்டுட்டு நீ மாமி வீட்டிலேயே இரு! நான் என் வேலை முடிஞ்சதும் உன்னை வந்து பிக்கப் பண்ணிக்கறேன்!" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றான் ஈஸ்வர்.


அதன் பின்புதான், சக்ரேஸ்வரியை சந்திக்க, அவர்களுடைய வீட்டிற்கு வந்தான். முன்பே சொல்லி இருந்த காரணத்தால், அங்கேயே காத்திருந்தான் மல்லிக்.


அவனைப் பார்த்தவுடன், மனம் உடைந்து அழுத சக்ரேஸ்வரியை ஆறுதல் சொல்லித் தேற்றியவன், சோமய்யாவின் சிகிச்சையைப் பற்றி அவர்களுக்கு விளக்கமாகச் சொன்னான்.


உடனே அவனது அழைப்பின் பெயரில் அங்கே வந்த தமிழுடன் அவளை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


அதன் பின் தனிமையில், தன்னை பற்றிய உண்மைகள் அனைத்தையும் ஒன்று விடாமல் ஈஸ்வரிடம் சொல்லத் தொடங்கினான் மல்லிக்.


***



Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page