top of page

Anbenum Idhazhgal Malarattume 30,31&32

அணிமா-30


அங்கே கூடி இருந்த அனைவருமே நெகிழ்ச்சியில் உறைந்துபோயிருந்தனர்.


அந்த உறைநிலையை ஜெய்தான் கலைத்தான் தன் உரை மூலமாக.


"கிட்டத்தட்ட இருபது நாட்களுக்கு முன்பாக இரவில் உறங்கும்பொழுது மர்ம நபர்கள் சிலரால் இந்தக் குழந்தை கடத்தப்பட்டிருக்கிறாள்!


தன் புடவை முந்தானையில் குழந்தையின் கையில் முடிச்சுப் போட்டுக்கொண்டுதான் உறங்கியதாக அவருடைய தாய் சராசம்மா விசாரணையின்போது எங்களிடம் சொன்னார்!


குழந்தை காணாமல் போனதை பற்றி அவர்கள் இதுவரை புகார் எதுவும் கொடுக்கவில்லை என்பதுதான் வேதனைக்குரிய செய்தி!


எங்க டிபார்ட்மென்ட் மூலமாக இந்தக் குழந்தையின் பெற்றோரை தேட பலவித முயற்சிகள் எடுத்து வந்தோம்.


இந்த நயன்தாரா பாப்பா வாயை திறந்து ஒரு வார்த்தை கூடப் பேசாத சூழ்நிலையில் எங்களுக்கு ஒரு க்ளூ கூடக் கிடைக்கவில்லை!


அந்தச் சமயத்தில்தான் திருமதி அணிமாமலர் ஜெகதீஸ்வரன் இவளிடம் பேசும்பொழுது இவள் பதில் பேச தொடங்கினாள்!


தொடர்ந்து அவங்க இந்தக் குழந்தையிடம் பேச்சு கொடுத்ததில் இவள் சொன்ன சில அடையாளங்களை வைத்து பார்க்கும் பொழுது இவளோட பேரன்ட்ஸ் பிளாட்ஃபார்ம்ல வசிக்கறவங்களோன்னு ஒரு சந்தேகம் வந்தது.


அவங்களைக் கண்டுபிடிக்க எங்க டிப்பார்ட்மென்டுக்கு மிஸ்டர் ஜெகதீஸ்வரன் அதிகம் உதவி செய்திருக்கிறார்.


அவருடைய ரசிகர்கள் மற்றும் சில தனியார் துப்பறியும் நிறுவனங்களையும் இந்தத் தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தி அவர் இவ்வளவு குறுகிய நாட்களுக்குள் இந்தக் குழந்தையைப் பெற்றோருடன் சேர்க்க உதவி செய்திருக்கிறார்.


அவருக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றிகள்!" என்று அனைத்தையும் விளக்கி முடித்தான் ஜெய்.


"இன்னும் சில குழந்தைகள் பெற்றோரிடம் சேர்க்கப்படாமல் இருக்காங்களே அவங்க நிலைமை என்ன?" என்று ஒரு நிருபர் கேள்வி எழுப்ப,


"அந்தக் குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் பத்திரமாக இருக்காங்க; அவங்க எல்லாருமே வேறு மாநிலத்தைச் சேர்ந்த குழந்தைகள்; அவங்களைப் பற்றிய தகவல்களை எல்லா இடங்களுக்கும் அனுப்பியிருக்கோம்.


"இதைப் பற்றி மேற்கொண்டு எதுவும் சொல்ல இயலாத நிலையில் இருக்கிறேன்; ஸோ கைன்ட்லி எக்ஸ்க்யூஸ் மீ!" என்று கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து நயன்தாரா மற்றும் அவளது பெற்றோருடன் அங்கிருந்து சென்றான் ஜெய்.


அவன் சென்றதும் ஒரு நிருபர் ஈஸ்வரை நோக்கி "எல்லாரும் நமக்கென்ன என்று போய்க்கொண்டிருக்க உங்களுக்கு இப்படிப்பட்ட ஒரு மிகப்பெரிய செயலில் ஈடுபடும் ஆர்வம் எப்படி வந்தது?" என்று கேட்டார்.


"கண் எதிரில் பார்த்த பிறகும் எப்படிச் சார் நம்ம வேலையை மட்டும் பார்த்துட்டு போக முடியும்?


நம்ம நாட்டின் பொக்கிஷங்கள் சார் நம்ம குழந்தைகள்!


போயும் போயும்! பணத்துக்காகஅவங்களைப் பெத்தவங்க கிட்டேயிருந்து பிரித்து உலகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் கடத்தறாங்க!


மொழி கூடத் தெரியாத ஒரு புதிய இடத்தில் விட்டு பிச்சை எடுக்க வெக்கறாங்க.


கொத்தடிமைகளாக, நம்மால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாத வேலைகளிலெல்லாம் ஈடுபடுத்தறாங்க!