top of page

Anbenum Idhazhgal Malarattume-3

Updated: 3 days ago

அணிமா 3


ஜெகதீஸ்வரன் நடித்த நான்கு படங்கள் பொங்கல் பண்டிகையன்று திரையிடத் தயாராக வரிசையில் இருந்தன.


வெவ்வேறு முன்னணி நாயகர்களுக்கு அவன் வில்லனாக நடித்திருந்தான். அத்துடன் அப்பொழுது வெளிவந்திருந்த அந்தத் திரைப்படமும் வசூலை அள்ளிக் குவித்துக் கொண்டிருந்ததுடன் ஈஸ்வருக்கு மக்கள் மத்தியில் மிக நல்ல வரவேற்பையும் பெற்றுத் தந்திருந்தது.


அவை அனைத்தையும் தாண்டி அன்றைய தினம் பெயர் தெரியாத அந்தப் பெண் அவனிடம் பேசிவிட்டுச் சென்ற விதம் அவனது மனதிற்கு ஒரு இனிமையைக் கொடுத்திருந்தது.


அன்று திரை அரங்கிலிருந்து அவனை 'ஹீரோ' என்று அவள் சொல்லிச் சென்ற ஒரு வார்த்தை அவனைத் திகைப்பில் ஆழ்த்தியிருந்தது. மேலும் அன்றைய நிகழ்ச்சிகள் முடிந்து அவன் வீடு திரும்பும் சமயம் தமிழ் வேறு அங்கே அவள் பேசிய அனைத்தையும் ஒலிபரப்பி முடித்திருந்தான்.


‘ஒரு வேளை இவள் அணிமாமலராக இருந்தால்?!’ என்ற ஐயம் அவன் மனதில் தோன்றிக்கொண்டே இருந்தது.


அடுத்து வந்த நாட்களில் மேலும் அவளைப் பற்றி சிந்திக்க நேரமில்லாமல் அவனது வேலைகளில் மூழ்கிப்போனான் ஈஸ்வர்


* **


தாம்பரம் புறவழிச் சாலையில் போரூர் செல்லும் தடத்தில் காற்றைக் கிழித்துக்கொண்டு அதிவேகமாய் பறந்துகொண்டிருந்தது அணிமா மலரின் சிவப்பு நிற பைக். பைக் ஓட்டும் பொழுது அவள் வழக்கமாக அணியும் உடையில் அணிமா!


வேகமாக வண்டியைச் செலுத்தி வந்தவள் அவளுக்கு முன்பாக சென்றுகொண்டிருந்த பைக்கை வழிமறித்து நிறுத்த, அதை ஓட்டி வந்தவன் நிலை தடுமாறி அப்படியே கீழே சரிந்தான்.


அதற்குள் தனது பைக்கை பிரேக் போட்டு நிறுத்தியவள், தலைக் கவசத்தைக் கழற்றி அதன் மேல் வைத்துவிட்டு ஒரே எட்டில் விழுந்து கிடந்தவனை நெருங்கி, அவன் அடுத்து யோசிக்கத் தொடங்கும் முன்பாகவே பட்டென தூக்கி நிறுத்தி கை முஷ்டியை மடக்கி அவனது முகத்தில் சரமாரியாக குத்தவும், அவனது மூக்கிலிருந்து ரத்தம் வழிய தொடங்கியது.


"என்னடா! பொம்பளைங்கன்னா உனக்கு அவ்வளவு கேவலமா போச்சா நாயே! நீ என்ன செஞ்சாலும் வெளியில சொல்ல மாட்டாங்கன்னு நினைச்சுதான கேவலமான வேலையெல்லாம் செஞ்சிட்டிருக்க?"


சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவளது கால் முட்டி அவனுடைய அடி வயிற்றில் நான்கு முறை இறங்கி இருந்தது. அப்படியே சுருண்டு கீழே விழுந்தான் அவன்.


அடுத்த நொடி அவனுடைய கைப்பேசியை அவனிடமிருந்து பறித்தவள் அவனை மறுபடியும் அடிக்கக் கையை ஓங்க, அவளது கரங்களைப் பிடித்து அவளைத் தடுத்து நிறுத்தினார் அப்பொழுது அங்கே வந்து சேர்ந்த காவல்துறை அதிகாரி 'ஜெய் கிருஷ்ணா ஐ.பி.எஸ்!'


அவர் அந்தப் பகுதியின் காவல் துறை துணை ஆணையராக சில தினங்களுக்கு முன்புதான் பதவியேற்றிருந்தார்.


"ஓஹ் ஸ்டாப் இட். நீ பாட்டுக்கு அவன அடிச்சிட்டு இருக்க. நீ நினைக்கற மாதிரி அவன் அக்யூஸ்டா இல்லாமல வேற யாராவது இன்னசன்ட்டா இருந்தா உனக்குதான் பிரச்சனை" என எச்சரித்தார் ஜெய்.


"ஓ மை காட்! ஒரு செகண்ட் இருங்க மிஸ்டர் ஏசிபி!" என்றவள் அவனிடமிருந்து பறித்த கைப்பேசியை உயிர்ப்பித்து அதில் இருந்த காணொலி ஒன்றை ஓடவிட்டுப் பார்க்க, அருவருப்பில் அவளது முகம் கோணியது. பட்டென்று அதை நிறுத்தியவள் அந்தக் கைப்பேசியை ஜெய்யிடம் கொடுத்து, "இதுல மூணாவதா இருக்கற வீடியோவை நீங்களே பாருங்க. அதில் இருக்கற பெண்ணுதான் என்னோட வேலை செய்யறா. லாஸ்ட் வீக் அவ தனியா இருக்கும்போது அவங்க வீட்டுக்குள்ள நுழைஞ்சு அவளை செக்ஸுவலி அப்யூஸ் செஞ்சு, அதை ஃபோன்ல வீடியோ எடுத்துட்டு, வீட்டில் இருந்த நகை, பணம் எல்லாத்தையும் கொள்ளை அடிச்சிட்டு வெளியில சொன்னா வீடியோவை சோஷியல் மீடியாஸ்ல எல்லாம் அப்லோட் பண்ணிடுவேன்னு மிரட்டிட்டுப் போயிருக்கான் இந்த இன்னசன்ட்! அவ தற்கொலைக்கு ட்ரை பண்ணட்டு இப்ப ஹாஸ்பிடல்ல இருக்கா. அவளோட ஹஸ்பண்ட் இதைப் பத்தி கம்ப்ளைண்ட் பண்ண பயந்துட்டு, அப்படியே விட்டுட சொல்லிட்டாரு. அவளைப் பார்க்க போனப்ப என்கிட்ட சொல்லி ரொம்ப அழுதா" என்றவள்,