top of page

Anbenum Idhazhgal Malarattume 29

Updated: Apr 9, 2023

அணிமா-29


மனைவியின் வாய் மொழியாகச் சகோதரியின் நிலையைக் கேட்டு உணர்ந்தவனின் மனம் வேதனையில் துடித்தது.


அந்த நொடி சுபாவை பார்க்க வேண்டும் என்ற உந்துதலில் அவளைத் தேடி பாட்டியின் அறைக்கு வந்தான் ஈஸ்வர்.


அவள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கவும் வாஞ்சையுடன் அவளது தலையை மென்மையாக வருட மெல்லியதாக முளைத்திருந்த அவளது தலை முடி அவனது கையில் குத்தவும் அவனுடைய மனம் வலித்தது.


அவனுடைய ஸ்பரிசம் உணர்ந்து கண் விழித்த சுபா மெல்ல எழுந்து உட்காரவும், "நீ படுத்துக்கோ! நான் சும்மாதான் வந்தேன்" என்றான் ஈஸ்வர்.


அவனுடைய முகத்தில் படர்ந்திருந்த வேதனை அவனுக்கு எல்லாம் தெரிந்துவிட்டது என்பதை அவளுக்குப் புரிய வைக்க,


"மலர் எல்லாத்தையும் சொல்லிட்டாளா?" என்று கேட்டுவிட்டு, "விடு ஜகா! இப்ப இந்த நிமிஷம் நான் நிம்மதியா இருக்கேன்! அதுதான் உண்மை! நம்ம குடும்பத்தோட இருக்கற ஒவ்வொரு நொடியும் எனக்குப் பொக்கிஷம்! இது கிடைச்சதே எனக்கு வரம்! எனக்கு இது போதும்! என்னை நினைச்சு நீ வருத்தப்படாத! இப்போதைக்கு உன்னோட சந்தோஷம்தான் எங்க எல்லாருக்கும் முக்கியம். நீ ஒருத்தன் சந்தோஷமா இருந்தா இந்த குடும்பம் மொத்தமே சந்தோஷமா இருக்கும்!” என வேகமாகச் சொன்னவள், கொஞ்சம் மூச்சை எடுத்துக்கொண்டு தொடர்ந்தாள்.


“ஜீவி கல்யாணம் நடந்ததுல இருந்தே, மலரை உனக்குக் கல்யாணம் செஞ்சு வெச்சா உன் வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கும்னு அடிக்கடி தோனிட்டே இருந்தது. என் ஆசை புரிஞ்ச மாதிரி எப்படியோ உங்களுக்குள்ளேயே ஒருத்தருக்கு ஒருத்தர் பிடிச்சு போய் உங்க கல்யாணம் நடந்து முடிஞ்சுது. மலருக்கும் உனக்கும் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்றாங்கன்னு அவ சொன்ன உடனே, ரொம்பவே சந்தோஷப்பட்டேன் ஜகா! உங்க கல்யாணம் என்னால டிலே ஆகக்கூடாதுன்னு அவகிட்ட ரொம்பவே கெஞ்சினேன்.


அவ எங்க அதை காதுல வாங்கினா? நான் குணமாகி வந்து உங்க கல்யாணத்துல கலந்துக்கணும்ன்னு ஒத்த கால்ல நின்னா. பாட்டி எப்படியோ அவளைச் சம்மதிக்க வெச்சிட்டாங்க. எப்படியோ நான் நினைச்சது நினைக்காதது என எல்லாமே நல்லபடியா நடந்து முடிஞ்சது!!" என்று சொல்லி முடித்தாள் சுபா.


"முதல்ல உன் மேல கோபம் இருந்தப்ப எனக்கு தோனல! ஆனா இப்ப இப்படி உன்னைப் பார்க்கும் போது வேதனையா இருக்கு சுபா! இப்ப ஒரு சகோதரனா நான் உனக்கு என்ன செய்யணும்னு எனக்குப் புரியல! நீயே சொல்லு உனக்கு நான் என்ன செய்யணும்?" என்று ஈஸ்வர் கேட்கவும்,


அதில் முகம் இறுக, "கண்டிப்பா, நேரம் வரும்போது உங்கிட்ட ஒண்ணு கேட்பேன் ஜகா, அப்ப அதை மறுக்காம நீ எனக்கு செய்யணும்!" என்று தீவிரமாகச் சுபா சொல்லவும்,


அவளது முக பாவனையைப் படிக்க முயன்றவாறு, "கட்டாயம் நான் செய்வேன் சுபா! அது என் கடமை!" என்றான் ஈஸ்வர்.


அப்பொழுது உறக்கம் கலைந்து அங்கே வந்த ஜீவன் அன்னையின் அருகில் உக்கார்ந்து அவளது கழுத்தைக் கட்டிக்கொண்டே, "அம்மா உனக்கு வலி எதுவும் இல்ல..ல்ல" என்று அக்கறையுடன் கேட்க,


"இல்லடா செல்லம். அம்மா நல்லா இருக்கேன்" என்றாள் அவள் அவனது கன்னத்தில் இதழ் பதித்து.


இருவரையும் நிறைந்த மனதுடன் ஈஸ்வர் பார்த்துக்கொண்டிருக்க அப்பொழுது ஈஸ்வரைக் கைப்பேசியில் அழைத்த ஜெய், "அண்ணா! இங்க பல்லாவரம் பக்கத்துல இருக்கும் ஒரு குப்பை கிடங்கில் ரெண்டு பேரோட பாடி கிடக்கு. எப்பவும் போல கொலை செஞ்சு எரிச்சிருக்காங்க" என்று சொல்ல,


"ஐயோ! அடுத்த கொலையா?" என்றான் ஈஸ்வர் அலுப்புடன்.


"ப்ச்! ஆமாண்ணா!” என்றவன், “நான் கெஸ் பண்ண வரைக்கும் அந்தக் குழந்தைகள் கடத்தல்ல சம்பந்தப்பட்டவங்களாதான் இருக்கும்! அதாவது மலர் சொன்ன வேதாங்கறவனும் இன்னும் ஒருத்தனும்னு நினைக்கறேன். அவதான் நேர்ல வந்து அந்த பாடிஸை அடையாளம் காட்டணும். நாளைக்கு நான் வீட்டுக்கு வந்து அவளை அழைச்சிட்டுப் போகட்டுமா?" என்று கேட்டான் ஜெய்.


சில நொடிகள் யோசித்தவன் ஒரு முடிவுக்கு வந்தவனாக "வேண்டாம் ஜெய் எனக்கு டூ டேஸ் டைம் கொடு. நானே மலரோட நீ எங்க வர சொல்றியோ அங்க வரேன்!" என்று சொல்லிவிட்டான் ஈஸ்வர்.


"ஓகேண்ணா! எங்க வரணும்னு நான் நாளைக்குச் சொல்றேன்!" என்று சிறு தயக்கத்துடன் அழைப்பைத் துண்டித்த ஜெய், 'ஈஸ்வர் அண்ணா வந்தா, மீடியாவுக்கு நிறைய பதில் சொல்ல வேண்டியதாக இருக்குமே! என்ன செய்யலாம்?' என்று சிந்திக்கத் தொடங்கினான்.


அடுத்த நாளே அவன் நினைத்ததை விட ஒட்டுமொத்த ஊடகங்கள் மற்றும் அனைத்துச் சமூக வலைத்தளங்களின் பார்வையும் ஈஸ்வரை ஆக்கிரமிக்கப் போவதையும், அதன் பின் அவனது ஒவ்வொரு சொல்லும் செயலும் மக்களை முழுவதுமாகத் திரும்பிப் பார்க்க வைக்கப்போகிறது என்பதையும் அவன் அறிந்திருக்க நியாயமில்லையே!


காரணம், அடுத்த நாள்…


எழுத்தாளர் மோனிஷா எழுதி பரபரப்பை ஏற்படுத்திய நாவலைத் தழுவி மிகப் பிரம்மாண்ட பொருட் செலவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மேலும் பல மொழிகளில் பேன் இந்தியா படமாக எடுக்க திட்டமிடப்பட்டிருந்த 'மீண்டும் உயிர்த்தெழு!' திரைப்படத்தின் 'ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்' வெளியிடப்பட்டது!


அறிமுக நடிகர் ஒருவர் கதாநாயகனாக நடிக்க, அனைவருடைய எதிர்பார்ப்பையும் கிளப்பிய முக்கிய கதாப்பாத்திரமான 'ஈஸ்வர் தேவ்!' வேடத்தில் ஜகதீஸ்வரன் கம்பீரமான இளவரசன் தோற்றத்தில் அனல் பறக்கும் விழிகளுடன் குதிரையின் மேல் உட்கார்ந்திருப்பது போன்ற அந்த போஸ்டர் அனைத்து ஊடகங்கள் மற்றும் வலைத் தளங்களிலும் வைரல் ஆகி உலகம் முழுவதும் அதிகப்படியான மக்களைத் திரும்பிப் பார்க்க வைத்தது!


***


இரு தினங்கள் கடந்திருந்த நிலையில் ஜெய்யிடம் சொன்னது போலவே மலரை அழைத்துக்கொண்டு தமிழ் மற்றும் அவனுடைய பௌன்சர்கள் சூழ அந்த பிணங்களை அடையாளம் காண்பிக்கவென அரசு பொது மருத்துவமனையின் சவ கிடங்கிற்கு வந்திருந்தான் ஈஸ்வர்.


செய்தி நிறுவனங்கள் தொலைக்காட்சி ஊடகங்கள் என ஒவ்வொன்றாக அங்கே முற்றுகை இடத் தொடங்கியிருந்தன.


ஜெய் முன்பாகவே அங்கே வந்து அவர்களுக்காக காத்திருந்தான்


எந்த ஒரு கேள்விக்கும் பதில் கொடுக்காமல் அனைத்து நிருபர்களையும் தவிர்த்துவிட்டு நேரே உள்ளே சென்றனர் ஈஸ்வர், மலர் இருவரும்.


அப்பொழுது ஈஸ்வருடைய 'பௌன்சர்' ஒருவன் அவனைப் பின்தொடர்ந்து உள்ளே வரவும், அவனைத் தடுத்தார் ஜெய்யின் கீழ் வேலை செய்யும் ஒரு காவலர்.


"பரவாயில்லை துரை! அவரை விடுங்க!" என்று ஜெய் சொல்ல, ஈஸ்வரின் பாதுகாப்பிற்காக அவர்களுடன் உள்ளே சென்றான் அவன். பின்பு அருகினில் சென்று அந்தப் பிணங்களைப் பார்த்தாள் மலர்.


உடல் முழுதும் கட்டுகள் போடப்பட்டு முகம் மட்டுமே தெரியும்படி வைக்கப்பட்டிருந்தன அந்தப் பிணங்கள் .


எரிந்து போய் அரைகுறையாக இருந்தாலும் கூட அதில் ஒருவனுடைய முகம் மட்டும் தெளிவாக இருந்தது.


அவனைப் பார்த்த மாத்திரமே மலருக்கு அவன் யாரென்பது நன்றாகவே விளங்கியது.


"இது அந்த வேதாவேதான் ஜெய்" என்றவள்,


"ஆனா இந்த ஆளை கரெக்ட்டா என்னால அடையாளம் சொல்ல முடியல. இவன் இந்த வேதாவோட இருந்தவனாதான் இருக்கனும்" என மற்றொருவனைப் பற்றிச் சொல்லவிட்டு ஈஸ்வருடன் அங்கிருந்தது கிளம்பினாள்.


ஆனால் யாருமே எதிர்பாராதவண்ணம், கடத்தல் கும்பலிடமிருந்து குழந்தைகளை மீட்ட அன்று ஆபத்தான நிலையில் அதே மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு அங்கேயே தொடர் சிகிச்சையில் இருக்கும் பெண் குழந்தையை நேரில் சென்று பார்க்கவேண்டும் என்று அங்கே சென்றான் ஈஸ்வர். மலரும் கூட அதை எதிர்பார்க்கவில்லை.


அங்கே சென்று அங்கிருந்த மருத்துவர்களிடம் அந்தக் குழந்தையின் உடல்நலத்தைப் பற்றி ஈஸ்வர் விசாரிக்க,


அங்கே மிரட்சியுடன் கட்டிலில் அமர்ந்துகொண்டிருந்த அந்தக் குழந்தையை நெருங்கி, "செம்ம கியூட்டா இருக்கீங்களே உங்க பேர் என்ன?" என்று மலர் கேட்கவும் பதில் சொல்லாமல் மிரண்டு விழித்தாள் அந்தக் குழந்தை.


அருகே இருந்த செவிலியர், "இந்தப் பாப்பாவுக்கு தமிழ் புரியல. அதனாலதான் எதைக் கேட்டாலும் பதில் சொல்ல மாட்டேங்குது! நாங்களும் எவ்வளவோ கேட்டுப் பார்த்துட்டோம். போலீஸ்காரம்மாவும் ட்ரை பண்ணி பார்த்துட்டாங்க. பேரைக்கூட சொல்லமாட்டேங்குது!" என்று அலுப்புடன் சொல்லி முடித்தார்.


அந்தச் சிறுமியின் உடல்மொழியில் ஏதோ தோன்றவும் மறுபடியும் அவள் புறம் திரும்பி, "பாப்பா! நீங்க ரொம்ப நல்ல பாப்பாவாம், உங்கப் பேரைச் சொன்னா நான் உங்களுக்கு சாக்கலேட் ஐஸ் கிரீம் எல்லாம் வாங்கிக் கொடுப்பேனாம்!" என்று அவளுடைய ஆசையைத் தூண்டும்விதமாகச் சொன்னாள் மலர்.


அவளுடைய கனிவான குரலில் கட்டுண்டு, ‘ஐஸ்!’ என்ற ஒரு வார்த்தையைப் பிடித்துக்கொண்டு கண்கள் மின்ன, “யக்கா! மெய்யாலுமே என் பேர சொன்னாக்க ஐஸ்ஸு வாங்கிக் குடுப்பியாக்கா?" என்று அவள் கேட்க,


"ம்ம் வாங்கிக் கொடுக்கறேன் நீ உன் பேரைச் சொல்லு" என்று கொஞ்சலாகச் சொன்னாள் மலர்.


உடனே, "நயன்தாரா பாப்பா!" என்று தன் பெயரைத் தெளிவாகச் சொன்னாள் அந்தச் சிறுமி.


'எப்படி?' என்பதுபோல் புருவத்தைத் தூக்கி அருகில் இருந்த செவிலியரைப் பார்த்த மலர், "நயன்தாராவா? உன் பேரே மாஸா இல்ல இருக்கு!" என்று குரலில் வியப்பைக் கூட்டிச் சொல்லவும்,


அதில் தயக்கம் கொஞ்சம் விலகி, "எனக்கு குச்சி ஐஸ்லாம் வாணாக்கா! எங்கம்மா எப்பன்னா துட்டு வெச்சிருந்தா குச்சி ஐஸ்தான் வாங்கிக் குடுக்கும்! நீ டக்கரா ஒரு கோன் ஐஸ் வாங்கி குடுக்கிறியா கா?" என்று சென்னை தமிழ் சரளமாக நாவினில் நாட்டியம் ஆட அவள் கேட்கவும் ஆச்சரியத்தில் வாய் பிளந்தனர் அங்கே இருந்த செவிலியரும் காவலுக்கு இருந்த ஒரு பெண் கான்ஸ்டபிளும்.


அது எதையும் கண்டுகொள்ளாமல் மலர் ஈஸ்வர் முகத்தைப் பார்க்க, தமிழிடம் ஐஸ் கிரீம் வாங்கிவரும்படி அவன் ஜாடை செய்யவும் அங்கிருந்து சென்றான் தமிழ்.


"பாருங்க நம்ம நயன்தாரா பாப்பாவுக்கு தமிழ் நல்லாவே புரியுது!" என்று அந்தச் செவிலியரைப் பார்த்து சொன்ன மலர், "பாப்பா உன் அம்மா பேர் என்னடா?" என்று அடுத்த கேள்வி கேட்க அந்த குழந்தையின் முகம் வேதனையில் வாடிப்போனது.


"அம்மா! எனக்கு அம்மாவாண்ட போவணும்! ஒடனே!" என்று அவள் அழத்தொடங்கவும்


"போகலாம் பாப்பா! கோன் ஐஸ் சாப்பிட்டுப் போகலாம் சரியா!" என்று சொல்லி அவளை சமாதானப்படுத்தினாள் மலர்.


அந்தக் குழந்தைக்கு மயக்க மருந்தினால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக சுவாச கோளாறு ஏற்ப்பட்டு தொடர் மருத்துவ சிகிச்சைக்குப் பிறகு சரியாகி இருந்தது. முந்தைய தினம் வரை சாதாரணமாக பேசும் நிலையில்கூட இல்லை அவள்.


மருத்துவர் செவிலியர் பெண் காவலர் என அனைவரையும் கண்டு மிகவும் பயந்த நிலையில் இருந்தவள் மலரைப் பார்த்ததும்தான் வாயையே திறந்தாள் எனலாம்.


முதலில் தயங்கினாலும் பின்பு ஒரே ஒரு ஐஸ் க்ரீம் என்ற நிபந்தனையுடன் அவளை உண்ண அனுமதித்தார் அவளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்.


அதன் பின்பு குழந்தைகளுக்கான அந்தப் பிரிவில் இருந்து அவர்கள் வெளியேறி வரவும் அவர்களைச் சூழ்ந்து கொண்ட பத்திரிகையாளர்கள் குழந்தைகள் கடத்தல் மர்ம கொலைகள் எனக் கேள்விகள் கேட்க தொடங்கவும், "இந்த கேள்விக்கெல்லாம் நம்ம காவல்துறைதான் பதில் சொல்லணும். இந்த விஷயத்தைப் பொறுத்தவரைக்கும் மத்த குழந்தைகளோட பேரன்ட்ஸ் அன்ட் கார்டியன்ஸ் மாதிரிதான் நாங்களும்!" என்று சொல்லிவிட்டான் ஈஸ்வர்.


அடுத்ததாக ஈஸ்வருடைய புதிய திரைப்படங்கள் பற்றிப் பத்திரிகையாளர்கள் கேள்விகளை எழுப்ப, "நான் கொஞ்சம் அவசரமாகப் போக வேண்டிய சூழ்நிலைல இருக்கேன். சீக்கிரத்துல ஒரு பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யறேன். அப்ப நீங்க கேட்கற எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்றேன், அதுவரைக்கும் கைன்ட்லி எக்ஸ்க்யூஸ் மீ!" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து செல்ல எத்தனித்தான்.


"சாரி சார், மலர் மேடம் கிட்ட ஒரு சின்னப் பர்சனல் க்வஸ்டியன் ப்ளீஸ்" என்று கெஞ்சலான குரலில் ஒரு பெண் நிருபர் கேட்கவும் மறுக்க முடியாமல் அவன் மலரைப் பார்க்க,


"என்ன?" என்பது போல் மலர் கேள்வியுடன் அந்த நிருபரை ஏறிட்டாள்.


"நீங்க நிஜத்திலேயே போல்டா இத்தன குழந்தைகளைக் காப்பாத்தி இருக்கீங்க. நம்ம ஜெகதீஸ்வர் சார்கூட உங்களுக்கு ஃபுல் சப்போர்ட் கொடுக்கறார். ஆனா சினிமால மட்டும் அவர் ஹீரோவா நடிக்கற வாய்ப்புகளைத் தவிர்த்துட்டு ஈஸ்வர் தேவ் மாதிரி நெகடிவ் ரோல்ல நடிக்கறதுல உங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லையா?" என்ற அதி முக்கியமான கேள்வியை அவர் கேட்கவும் நொந்தே போனான் ஈஸ்வர்.


'ஏற்கனவே ஹீரோ ஒர்ஷிப் அது இதுன்னு எதோ சொல்லிட்டு இருந்தாளே, என்ன பதில் சொல்லப்போறாளோ?' என்ற எண்ணம் தோன்ற ஆவலுடன் அவள் முகத்தைப் பார்த்தான் ஈஸ்வர்.


உதட்டில் தவழும் புன்னகையுடன் "சினிமால ஹீரோயின யார் ரொமான்ஸ் பண்ணுவாங்க?" என்று மலர் பதிலுக்கு ஒரு கேள்வியை அந்த நிருபரிடம் கேட்க,


சிரித்துக்கொண்டே, "வேற யாரு, ஹீரோதான்!" என்று அவர் சொன்ன பதிலில்,


"ஸோ! அந்தச் சான்ஸெல்லாம் நம்ம வில்லனுக்குக் கிடையாது இல்லையா? அதனால என் ஈஸ்வர் எனக்கு மட்டும் ஹீரோவா இருந்தா போதும். உங்க எல்லாருக்கும் வில்லனாவே இருக்கட்டும்!" என்று கெத்தாகச் சொல்லிவிட்டு அங்கே கொல்லென எழுந்த அனைவரின் சிரிப்பின் சத்தம் பின்தொடர ஈஸ்வரின் கையுடன் தன் கையைக் கோர்த்தவாறு அங்கிருந்து கிளம்பினாள் மலர்.


இதில் இப்படி ஓர் உள் குத்து இருப்பது புரியாமல் 'அடிப்பாவி! மீண்டும் உயிர்த்தெழு படம் ரிலீஸ் ஆனவுடனே இவ நம்மள என்ன பாடு படுத்தப் போறாளோ!’ என்று மனதுக்குள் பதறியவாறு அவளுடைய இழுப்பிற்குக் கட்டுப்பட்டு அவளுடன் சென்றான் ஈஸ்வர் பீதியுடன்.


***


அடுத்து வந்த நாட்களில் படப்பிடிப்பு டப்பிங் என முழு நேரமும் ஈஸ்வர் வேலையில் மூழ்கிவிட அவனைக் கண்களால் காண்பதே அரிதாகிப்போனது மலருக்கு.


இதற்கிடையில் அவர்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் பள்ளியில் ஜீவனைச் சேர்த்தனர். அதைத் தொடர்ந்து சுபானுவை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று கீமோ கொடுத்து அழைத்து வந்தனர் சாருமதி மலர் இருவரும்.


இடையிடையே நயன்தாராவை மருத்துவமனையில் சென்று பார்த்துவிட்டு வந்தாள் மலர்.


கிட்டத்தட்ட ஒரு வாரம் கடந்திருந்த நிலையில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பிற்கு அழைப்பு விடுத்திருந்தான் ஈஸ்வர்.


பிரபல நட்சத்திர விடுதி ஒன்றில் மிக்க எதிர்பார்ப்புடன் ஊடகங்கள் அனைத்தும் குழுமி இருந்தன.


அங்கே கூடியிருந்த மற்றவர்களைப் போலவே ஆவலுடன் அவன் பேசப்போவதை எதிர்நோக்கிக் காத்திருந்தாள் மலர் அவனுக்கு அருகில் அமர்ந்தவாறு.


தனது தொண்டையைச் செருமிக்கொண்டு நேர் பார்வையில் எதிர்புறமாக உட்கார்ந்திருந்த அனைவரையும் நோக்கி, "நான் நடிக்கற திரைப்படங்களைப் பத்தியோ இல்லை திரைப்படத் துறை பத்தியோ பேச நான் இந்த ப்ரஸ்மீட் கொடுக்கல! ஒரு முக்கிய அனௌன்ஸ்மென்ட் கொடுக்கத்தான் உங்க எல்லாரையும் இங்க இன்வைட் பண்ணியிருக்கேன்" என்று சொன்ன ஈஸ்வர் அருகில் நின்றுகொண்டிருந்த தமிழிடம் ஜாடை செய்ய, அங்கிருந்து சென்றவன் சில நிமிடங்களில் பொருளாதார நிலையில் அடி மட்டத்தில் இருப்பவர்கள் போன்று காட்சி அளிக்கும் ஒரு இளம் தம்பதியரை அங்கே அழைத்துவந்தான்.


அவர்களை அங்கே கண்டதும் கூட்டத்தில் சலசலப்பு எழ, “இவங்க யாரு ஈஸ்வர் சார்? சினிமாவைப் பத்தி இல்லன்னா, நீங்க வேற எதைப் பத்தி இங்க சொல்ல போறீங்க?” என அடுக்கடுக்காக எழுந்த கேள்விகளுகெல்லாம்,


"இவர் கந்தசாமி. இவங்க இவரோட மனைவி சரசம்மா. இவங்க ரெண்டு பேரும் வால்-டாக்ஸ் ரோட்ல இருக்கற பிளாட்ஃபார்ம்ல குடி இருக்கறவங்க" என அவர்களைப் பற்றிச் சொன்ன ஈஸ்வர், “ஜஸ்ட் ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணுங்க. மத்தத நீங்களே நேர்ல பார்த்து தெரிஞ்சிக்கலாம்!” என்று அவர்களுடைய கேள்விகளுக்குத் தற்காலிக தடை விதித்தான்.


அனைவரும் அங்கே நடக்கவிருப்பதை ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்க சில நிமிடங்களில் கம்பீர நடையுடன் அங்கே வந்தான் ஜெய். அவனைத் தொடர்ந்து ஒரு பெண் காவலரின் கையைப் பற்றியவாறு அங்கே வந்துகொண்டிருந்தாள் குட்டி நயன்தாரா.


துருதுருவெனச் சுழன்ற அவள் விழிகளில் அந்தச் சரசம்மா என்ற பெண்ணும் அவளது கணவரும் விழுந்த அடுத்த நொடி ‘யம்மா!’ என்ற கதறலுடன் அந்தப் பெண்ணிடம் ஓடிசென்று அவள் கழுத்தை இறுகக் கட்டிக்கொண்டது அந்த இளம் தளிர்.


தாய் மகள் இருவரது உடலும் அழுகையில் குலுங்கிக்கொண்டிருந்தது. அருகில் நின்றிருந்த கந்தசாமி நெகிழ்ச்சியுடன் தன் மகளை தன் கைகளில் தூக்க முயல குழந்தையின் இறுக்கம் மேலும் மேலும் கூடிக்கொண்டே போனது.


விட்டால் எங்கே மீண்டும் தன் தாயைத் தன்னிடமிருந்து பிரித்துவிடுவார்களோ என்ற அச்சம் அதில் அப்பட்டமாய்த் தெரிந்தது.


கேள்வி கேட்கவும் தோன்றாமல் பேச்சற்றுபோய் மூச்சுவிடவும் மறந்து அங்கே குழுமியிருந்த நிருபர்கள் ஒளிப்பதிவாளர்கள் அந்த விடுதியில் வேலை செய்பவர்கள் என அனைவரும் கல்லும் கசிந்துருக்கும் அந்தக் காட்சியைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.


இரண்டு கைகளாலும் வாயைப் பொத்திக்கொண்டு கண்களில் கண்ணீர் திரையிட ஈஸ்வரைப் பார்த்தாள் அணிமாமலர். ஆயிரம் நன்றிகளைச் சுமந்துக்கொண்டிருந்தது அவளது அந்தப் பார்வை.
Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page