top of page
Writer's pictureKrishnapriya Narayan

Anbenum Idhazhgal Malarattume 28

Updated: Apr 9, 2023

அணிமா 28


சென்னை திரும்பியது முதல் எண்ணம் முழுதும் ஜீவனின் நினைவிலேயே தவிக்க, மேற்கொண்டு ஏதும் செய்ய இயலாத நிலையில், ஒரு நாள் மன அமைதிக்காக அவள் வழக்கமாகச் செல்லும் மாங்காடு கோவிலுக்குச் சென்றாள் மலர்.


அன்று அவரது திருமண நாள் என்பதனால் தன் குடும்பத்துடன் அங்கே வந்திருந்தார் குமார். முன்பே கூகுளில் தேடல் செய்து, அவரைப் பற்றி அறிந்திருந்ததால், அவரைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர்தான் குமார் என்பது அவளுக்குப் புரிய, ஒரு இரசிகையைப் போன்று அவரிடம் பேசியவள், ஊரில் இருக்கும் பட்சத்தில், வாரம்தோறும் வெள்ளியன்று அவர் அங்கே வருவார் என்பதையும் தெரிந்துகொண்டாள்.


அடுத்த வாரத்திலேயே, மீண்டும் அவரை அங்கே சந்தித்து சுபாவைப் பற்றிய பேச்சை அவள் தொடங்க, அதற்கு மேல் அவளைப் பேசவே விடவில்லை குமார்.


தொடர்ந்து வந்த நாட்களில் அவரை மறுபடி மறுபடி தொடர்புகொண்டு, ஒரு கட்டத்தில் சுபாவின் தற்போதைய நிலையைப் பட்டும் படாமலும் அவரிடம் சொன்னவள், அவளுக்கு குடும்பத்தின் ஆதரவு தேவை என்பதையும் அவருக்குப் புரிய வைக்க முயன்றாள்.


அந்த சந்தர்ப்பத்தில்தான் திருமணத்தை நிறுத்திவிட்டு சுபா மாயமானதற்குப் பிறகு ஈஸ்வர் கடந்து வந்த சூழ்நிலைகளையும் அவனது மன வேதனைகளையும் அவளிடம் விளக்கினார் குமார்.


"எவ்வளவோ துன்பப் பட்டு, இப்பதான் ஈஸ்வர்.ஒரு நல்ல நிலைமைக்கு வந்திருக்கான். நான் எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் இது வரைக்கும் குல தெய்வத்தைக் கும்பிடக்கூட எங்க ஊர் பக்கமே வரல அவன்.


இப்படி ஒரு நிலைமையில் அவனைக் கொண்டுவந்து நிறுத்தி அந்தப் பொண்ணு செஞ்சிட்டுப் போன வேலைக்கு, அவளுக்காகலாம் என்னால ஈஸ்வர் கிட்ட பேசவே முடியாது! அவளையே நேர்ல வந்து அவனைப் பார்க்க சொல்லு. அதுக்குப் பிறகு அவங்க பாடு!" என்று விட்டேற்றியாகச் சொல்லிவிட்டார் குமார்.


சுபாவினுடைய இருண்ட பக்கங்களை அவரிடம் சொல்ல இயலாமல், அங்கிருந்து மௌனமாகக் கிளம்பிப்போனாள் மலர்.


ஆனால், ஈஸ்வரை முதன்முதலில் பார்த்த பொழுது அவனுடைய கரிசனம் நிறைந்த சிறிய செயல் மூலம் அவள் மனதில் அவன் அழுத்தமாக ஏற்படுத்தியிருந்த தாக்கத்தினாலோ இல்லை ஜீவனைப் போலவே, சுபாவின் வார்த்தைகளால் அவளையும் அறியாமல் அவன்மேல் அவள் வளர்த்துக்கொண்டிருந்த அதீத அன்பினாலோ, குமார் சொன்னதன் மூலமாக அவள் அறிந்துகொண்ட அவன் அனுபவித்த துயரங்களைத் தானே அனுபவித்ததைப்போல உணர்ந்தாள் மலர்.


அந்த நொடி அவனுக்கு ஆதரவாக அவனது அருகிலேயே இருந்து தனது அன்பை காதலை மொத்தமாக அவனுக்குக் கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் அவளை முழுவதுமாக ஆட்கொண்டது.


***


சில தினங்களிலேயே அவளைத் தொடர்பு கொண்ட சுபா அவள் எதிர்பார்த்துக் காத்திருந்ததற்கு ஏற்ப அசோக் அவளிடம் விவாகரத்து கோரியதால், மகனுடன் சென்னைக்கே வந்துவிட முடிவு செய்துவிட்டதாகக் கூறி, அவளுக்கு தங்குவதற்கு ஒரு இடம் மட்டும் ஏற்பாடு செய்து கொடுக்கும் படி கேட்கவும், மாம்பலத்தில் அவர்களுடைய பிளாட்டிலேயே அவர்களைத் தங்க வைக்கலாம் என முடிவு செய்தாள் மலர்.


அது ஒரு விதத்தில் அவளுக்கு மகிழ்ச்சியையே கொடுத்தது எனலாம். அவள் மாமியை திருநீர்மலையில் சந்தித்த அன்று மாலைதான் சுபா அவளுடைய ஜீவனுடன் சென்னைக்கு வந்து சேர்ந்தாள்.


அன்று விமான நிலையத்திலிருந்து அவர்கள் இருவரையும் அழைத்து வந்து, மாம்பலம் பிளாட்டில் பத்திரமாகத் தங்க வைத்துவிட்டு, அடுத்த நாள் அவளை, மாமிக்கும் மாமாவுக்கும் தோழி என்று அறிமுகம் செய்து வைத்தாள் மலர்.


அவள் சென்னை வருவதற்குள்ளாகவே அவள் முன்பு வேலை செய்த நிறுவனத்தின் சென்னை கிளையிலேயே சுபாவுக்கு வேலையும் கிடைத்து விடவே, ஜீவனைக் கவனித்துக்கொள்ள மாமியின் உதவி தேவைப்பட்டது. அதை மாமியிடம் மலர் கேட்கவும், மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார் மாமி.


தொடர்ந்து வந்த நாட்களில் குடும்ப நீதி மன்றத்தில் இருவரும் பரஸ்பரம் பிரிய விரும்புவதாக விவாகரத்துக்கு விண்ணப்பித்துவிட்டு, வேலைக்குச் செல்ல தொடங்கினாள் சுபா. அந்த நிலையிலும் பிறந்த வீட்டினரைத் தொடர்பு கொள்ள விரும்பவில்லை அவள்.


ஜீவனை மலரும் ஜெய்யும் படித்த பள்ளியிலேயே சேர்த்தனர். அவர்களுடைய வீட்டின் அருகிலேயே அந்தப் பள்ளிக்கூடம் இருக்கவும், மாமாவே ஜீவனைப் பள்ளிக்கு அழைத்துச்செல்வர். நேரம் கிடைக்கும்பொழுது மலரும் அவர்களுடன் இணைந்து கொள்வாள்.


மறுபடியும் ஒருமுறை மாங்காட்டு கோவிலில், குமாரைச் சந்தித்த மலர், சுபா சென்னைக்கே வந்துவிட்டதை அவருக்குத் தெரியப்படுத்தினாள். அவர் நிதானமாக அதைக் கேட்டுக்கொண்டார் அவ்வளவுதான்.


முதல் முறை அவருக்கு இருந்த கோபம் இல்லை என்றாலும், இறங்கி வரும் மனநிலையில் அவர் இல்லை என்பது மலருக்குப் புரிந்தது. ஆனால் மலரைப் பற்றி அவருக்கு ஒரு நல்லெண்ணம் உருவாகியிருக்கவே அவளுடைய குடும்பத்தினரைப் பற்றி குமார் விசாரிக்கவும், வீட்டில் உள்ள அனைவரைப் பற்றியும் அவரிடம் கூறினாள் மலர்.


அவருடைய ஒன்றுவிட்ட சகோதரியின் மகள் தான் மலர் என்ற அவர்களுடைய உறவு முறை விளங்கவும், மிகவும் மகிழ்ந்து போனார் குமார்.


அதன் பின்பு விட்டுப் போன அவர்களுடைய சொந்தத்தைத் தொடரும் முயற்சியிலும் இறங்கினார். மலர் அவரை சுபாவிற்காகத்தான் தொடர்பு கொண்டாள் என்பது, எக்காரணம் கொண்டும் யாருக்குமே தெரிய வேண்டாம் என இருவருமே எண்ணியதால், ஒருவரை ஒருவர் அறிந்ததாகக் கட்டிக்கொள்ளாமலேயே, பிரபா ஜீவிதா திருமணம் உட்பட அனைத்தையும் நடத்தி முடிந்தனர்.


அந்தத் திருமணம் சுபாவை மகிழ்ச்சியின் உச்சத்தில் கொண்டு நிறுத்தியிருந்தது. நேரடியாக குடும்பத்தினருடன் தொடர்புகொள்ள விரும்பவில்லையே தவிர, மறைமுகமாக அனைத்திலும் மகிழ்ச்சியுடன் பங்கெடுத்துக்கொண்டுதான் இருந்தாள் சுபா.


குமார் மலருடைய வீட்டிற்குத் திருமணம் பேச வந்தது முதல், அனைத்தும் சுபாவுக்கு வீடியோ கால் மூலமாக காண்பித்துக்கொண்டிருந்தாள் மலர். பிரபா ஜீவிதா திருமணத்திற்கு பர்தா அணிந்து கொண்டு வந்திருந்தாள் சுபா.


பிரபா-ஜீவிதா திருமணம் முடிந்த சில தினங்களிலேயே, உடலில் ஏற்பட்ட சில மாற்றங்கள் காரணமாக, சுபா மருத்துவரிடம் செல்ல, அவளுக்கு மார்பக புற்றுநோய் இருப்பதாகச் சந்தேகம் எழுந்தது. மலருடைய அத்தை அவரது மகனுடன் அவளைப் பெண் கேட்டு வந்த தினம், சுபாவின் முழுமையான புற்றுநோய் பரிசோதனைக்கென அவளுடன் மருத்துவமனை சென்று வந்தாள் மலர்.


அதன் பின் அவளுக்குப் புற்றுநோய் இருப்பது உறுதியாகிவிட, ஜீவன் பிறந்த பின்பு இரண்டு முறை சுபா செய்துகொண்ட கருக் கலைப்பு, குழந்தைப் பிறப்பைத் தடை செய்யவென ஆன்லைன் மூலம் வாங்கி தொடர்ந்து அவள் எடுத்துக்கொண்ட மாத்திரைகள் என அவளுடைய புற்று நோய்க்குப் பல காரணங்களைச் சொன்னார் மருத்துவர். இது அனைத்தும் தயக்கத்தினால் சுபா மலரிடம் சொல்லாமல் விட்ட தகவல்கள். ஆடித்தான் போனாள் மலர்.


முற்றிலும் நம்பிக்கை இழந்த நிலையில், தனக்கு ஏதேனும் நிகழ்ந்தால் ஜீவனை ஜெகதீஸ்வரனிடம் ஒப்படைத்துவிடுமாறு சுபா மலரிடம் கேட்க, அதை மறுத்து அவளுக்கு நம்பிக்கை அளித்து முற்றிலும் அவளுக்குத் துணையாக நின்றாள் மலர். சுபாவின் அறுவை சிகிச்சை, அதனைத் தொடர்ந்த மருத்துவம் எனத் துயரத்துடன் சென்றன நாட்கள்.


முழு நேரமும் சுபாவிற்கும் ஜீவனுக்கும் மலருடைய துணைத் தேவைப் படவே, அதிகமாக அவர்களுடன் மாம்பலம் வீட்டிலேயே தங்கவும் ஆரம்பித்தாள். சுபாவின் மருத்துவச் செலவுகளுக்குத் தன்னுடைய பணத்தைக் கொடுத்து உதவி செய்தாள்.


அந்த சந்தர்ப்பத்தில்தான் சுபாவின் நிலைமை அறிந்து மனம் தாங்காமல் அவளை நேரில் வந்து சந்தித்தார் குமார். அதன் பின் அவளுடைய உண்மை நிலையைப் புரிந்து கொண்டவர் கோபத்தை விட்டுக் கொடுத்தார்.


தோற்றத்தில் ஈஸ்வரைப் போன்றே இருந்த ஜீவனை அவர் கொஞ்சி மகிழவும், அதன் தாக்கத்தில் மற்ற அனைவரையும் சந்திக்கவேண்டும் என்ற ஜீவனுடைய பிடிவாதம் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே போனது.


சுபாவின் மருத்துவம் முடிந்து, அவளும் கொஞ்சம் உடல் தேறவேண்டும் என்று எண்ணியவளாக மூன்று மாதம் கழித்து வரவிருக்கும் அவர்களுடைய பிறந்தநாள் அன்று அவனை எல்லோரிடமும் குறிப்பாக அவனுடைய ஹீரோவிடம் அழைத்துச்செல்வதாக அவனுக்கு உறுதி அளித்தாள் மலர். அதன் பின்புதான் சற்று அமைதி அடைந்தான் ஜீவன்.


கட்டாயம் வேலைக்கு வேறு சென்றாக வேண்டிய நிர்ப்பந்தம் இருந்ததால், அனைத்திற்கும் ஈடுகொடுத்து ஓடிக்கொண்டிருந்தாள். வீட்டில் அனைவருடைய கேள்விகளுக்கும் எந்தப் பதிலையும் சொல்ல இயலவில்லை மலரால்.


ஜீவனையும் சுபாவை நல்ல நிலைமையில் அவர்களுடைய குடும்பத்தில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அவளுக்கு மேலோங்கி இருந்தது.


அசோக், அவனுடைய படாடோபமான வாழ்க்கை முறையால், கடனில் மூழ்கி, ஏகப்பட்ட சிக்கல்களில் மாட்டிக்கொள்ளவும், அவனுடைய தந்தையின் உதவி அவனுக்குத் தேவைப் பட்டது. சுபாவை விவாகரத்து செய்துவிட்டு அவர்கள் சொல்லும் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளும் பட்சத்தில் அவனுக்கு உதவுவதாக அவர் சொல்லிவிட, சென்னைக்கே திரும்பியவன், சுபாவை விவாகரத்து செய்ய முதலில் ஒப்புக்கொண்டான்.


ஆனால் சுபாவின், உடல் நிலை அவனுக்கு சாதகமாக போகவும் அதனைக் காரணம் காட்டி ஜீவனை அவனிடம் ஒப்படைக்குமாறு அந்த நிலையிலும் அவளை மிரட்டத் தொடங்கியவன், அவனை விட்டுக்கொடுக்க ஈஸ்வரிடமிருந்து ஒரு மிகப்பெரிய தொகையைப் பெற்றுத்தரும்படி அவளுக்கு நெருக்கடி ஏற்படுத்தினான்.


அதைச் செய்ய விரும்பாமல் சுபா தவித்தத் தவிப்பைப் பார்த்து ஆத்திரத்துடன் அவனை நேரில் கண்டு எச்சரிக்கவே அந்த விடுதிக்குச் சென்றாள் மலர். அதனைத் தொடர்ந்து அங்கே நடந்த குழப்பத்திற்கும் அவனுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்றாலும் மலருக்குப் பக்கபலமாக ஈஸ்வரும் ஜெய்யும் இருப்பது புரிந்ததும் கொஞ்சம் அடங்கி இருக்கிறான் அசோக்.


அதன் பின் நடந்த அனைத்தும் ஈஸ்வருக்கே தெரியும் என்கிற வகையில் அனைத்தையும் அவனிடம் சொல்லி முடித்தாள் மலர்.


"ப்ச் நடந்த எதையும் யாராலயும் மாத்த முடியாது!" என்று வருத்தத்துடன் சொன்ன ஈஸ்வர், "இந்த பொண்ணுக்கு என் மேல கொஞ்சம் கூடவா நம்பிக்கை ஏற்படல? ஒரு வேளை அந்த நம்பிக்கையை நான் அவளுக்குக் கொடுக்கலையா? அவளை பெட்(pet) பண்ணதுக்கு பதிலா உன்னை மாதிரி தைரியமா உலகத்தை ஃபேஸ் பண்ண சொல்லி கொடுத்திருக்கணுமோ? எவ்வளவு கம்ஃபர்டபிலா குடும்பத்துல இருந்தாலும், ஏன் தப்பான ஒருத்தனை இந்த சுபா மாதிரி பொண்ணுங்க நம்பி போறாங்க மலர்? ஏதோ அவசரத்தில் புத்தித் தடுமாறிப்போய் தப்பே பண்ணாலும், அதிலிருந்து தன்னை விடுவிச்சுக்கற அளவுக்கு ஏன் நம்ம பொண்ணுங்க கிட்ட மெச்யூரிட்டி இல்ல? மீள முடியாத சிக்கலில் போய் மாட்டிட்டு துன்பப் படறாங்க?" ஈஸ்வர் தனது ஆதங்கம் முழுவதையும் வார்த்தைகளில் கொட்டவும்,


"ஒரு அப்பாவா சகோதரனா நண்பனா காதலனா கணவனா நான் இருக்கேன் உன்னைப் பாதுகாக்கங்கற நம்பிக்கையை கொடுக்காம, தன்னை நம்பி வந்த பெண்களைச் சீரழிக்கும் ஆண்கள் இந்தச் சமூகத்தின் சாபம்! பொண்ணுங்கள ஏமாத்தி தன் வலையில விழ வைக்கற அசோக் மாதிரி ஆளுங்கள, பார்த்த மாத்திரத்துல நம்பாம, நல்லவன் யாரு கெட்டவன் யாருன்னு அடையாளம் காண நம்ம பொண்ணுங்க கொஞ்சம் முயற்சி செய்யணும். தற்காப்புக் கலைகளை கத்துக்கணும்! எப்படிப்பட்ட சூழ்நிலையையும் கையாள கத்துக்கணும்! நம்ம ஒரு பாதுகாப்பற்ற சமூகத்தை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போது, எச்சரிக்கை உணர்வோட இருக்கறதுல தப்பு ஒண்ணும் இல்ல!" என்று அவனுக்குப் பதில் கொடுத்தாள் அணிமாமலர்.




Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page