top of page

Anbenum Idhazhgal Malarattume 27

Updated: Apr 9, 2023

அணிமா 27


பரந்தாமனை மருத்துவமனையில் அனுமதித்ததும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டு அதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.


அவர் அங்கிருந்து வீடு திரும்பவே ஏழு தினங்கள் ஆனது. இதற்கிடையில் கருணாகரனை நேரில் சந்தித்து நிலைமையை விளக்கி அவனிடம் மன்னிப்பு கேட்க அவனுடைய வீட்டிற்கு வந்தான் ஈஸ்வர்.


சுபா வீட்டை விட்டுச் சென்ற சில நிமிடங்களிலேயே சுபாவின் மின்னஞ்சல் முகவரியிலிருந்து அசோக்குடன் அவள் இணைந்திருக்கும் சில புகைப் படங்களும் அவளுடைய முக நூல் பதிவுகளும் கருணாகரனுக்கு வந்து சேர்ந்திருந்தது.


அத்துடன் தனக்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும் கருணாகரனின் வசதியை மனதில் கொண்டே அவளைக் கட்டாயப் படுத்தி இந்த ஏற்பாட்டைச் செய்தனர் என்றும் அதனால் வேறு வழி இன்றி அவள் விருப்பப்பட்டே தன் காதலனுடன் சென்றதாகவும் அதில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தாள் சுபா.


ஈஸ்வர் சுபாவைப் பற்றி அறிந்தே அவளைப் பலவந்தப் படுத்தி இந்த திருமணத்திற்கு ஏற்பாடு செய்தான் என்றே முழுமையாக நம்பிவிட்டான் கருணாகரன்.


அவனுடைய நட்பிற்கு ஈஸ்வர் துரோகம் செய்துவிட்டதாகவே எண்ணினான்.


கோபத்துடன் அனைத்தையும் அப்படியே ஈஸ்வரிடம் சொன்னவன், "என்னேட பெரியப்பாவ ஊருக்கு முன்னாடி தலை குனிய வெச்சுட்ட! அதோட இல்லாம கட்சியில வேற என் தனிப்பட்ட வாழ்க்கையை வெச்சு பிரச்சினை கிளப்பறாங்க. நான் இப்ப சென்னை மேயர் ஆகி இருக்க வேண்டியது. அந்தப் பதவியை நானே வேண்டாம்னு சொல்ற நிலைமை உண்டாகிப் போச்சு. எல்லாமே உன்னாலதான? உன்னை நான் நண்பனா நினைச்சதாலதான? உன் இடத்துல வேற யாராவது இருந்திருந்தா என் நடவடிக்கையே வேற மாதிரி இருந்திருக்கும்! உன்னைப் பழிவாங்கி அதுல சந்தோஷப்பட என்னால முடியாது! இனி உன் முகத்தில் விழிக்க கூட விரும்பல நானு! நீ போகலாம்!" என்று ஈஸ்வர் அவன் பக்க நியாயத்தைச் சொல்ல சிறிதும் இடங்கொடுக்காமல் வெடித்துச் சிதறினான் கருணாகரன்.


மேற்கொண்டு ஏதும் பேச வழியின்றி, மனம் நொந்துபோய் குற்ற உணர்ச்சியுடன் அங்கிருந்து அகன்றான் ஈஸ்வர்.


ஈஸ்வருக்குப் பரிந்துகொண்டு வந்த, நிர்மலாவிடமும் குமாரிடமும் கூட, "உங்களுக்கு யார் முக்கியம் நானா இல்ல ஈஸ்வரா? அவன்தான் முக்கியம்ன்னு நினைச்சீங்கன்னா தாராளமா அவன் கூடவே இருந்துக்கோங்க எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்ல!" என்று அவன் காட்டமாகச் சொல்லிவிட,


ஈஸ்வரைப் பற்றி நன்கு அறிந்ததாலும், அவன் நியாயம் புரிந்ததாலும் அவனை இப்படிப் பட்ட இக்கட்டான நிலையில் அநாதரவாக விட மனமின்றி அவனுக்குப் பக்கபலமாக நின்றார் குமார்.


இனி அவர்களுடைய ஊருக்குச் சென்றால் மனம் புழுங்கியே தன் உயிர் போய்விடும் என்று பரந்தாமன் சொல்லிவிட்டதால், சென்னையில் ஈஸ்வர் தங்கியிருந்த வீட்டிற்கே தற்காலிகமாக அனைவரையும் அழைத்து வந்துவிட்டான்.


கருணாகரனுடைய அந்தஸ்திற்குத் தகுந்தாற்போன்று திருமணத்தை ஓரளவுக்கேனும் சிறப்பாகச் செய்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில், தங்களுடைய வீடு மற்றும் நிலங்களின் பெயரில் பழனிச்சாமியிடம் கடன் வாங்கியிருந்தார் பரந்தாமன்.


அதில் சுபாவுக்குக் கணிசமான அளவில் நகைகளை வாங்கியதுடன், திருமணச் செலவுகளையும் செய்திருந்தார். வரவேற்பிற்கான செலவுகளுக்குக் கொடுப்பதற்கென ஒரு குறிப்பிட்ட தொகையை ரொக்கமாகவும் வைத்திருந்தார்.


வீட்டை காலி செய்யும் பொழுதுதான் அந்த நகைகளையும் ரொக்கத்தையும் சுபா தன்னுடன் எடுத்துச்சென்றிருந்தது ஈஸ்வருக்குத் தெரிய வந்தது. அந்த நிலைமையில் வீட்டையும் நிலத்தையும் மீட்க வழியின்றி பழனிச்சாமியிடமே ஒப்படைத்துவிட்டு வந்துவிட்டான்.


மேற்கொண்டு படிப்பைத் தொடர வழி இன்றி அவனது கனவுகளையும் லட்சியத்தையும் கைக் கழுவிவிட்டு குமார் உதவியுடன் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினான் ஈஸ்வர்.


மகள் செய்த செயலினால் அவருடைய வாழ்க்கை முறையே மாறிப்போய், வேதனையில் நீரைப் பிரிந்த மீனாக மூன்று மாதங்களைக் கூட கடக்க இயலாமல் தனது உயிரை விட்டார் பரந்தாமன்.


அளவுகடந்த வெறுப்பு சுபாவின் மேல் இருந்தாலும் கொஞ்சம் ஒட்டிக்கொண்டிருந்த அக்கறையில் அவளைப் பற்றி அறிந்துகொள்ள எண்ணினான்தான் ஈஸ்வர்.


ஆனாலும் தானாகவே விருப்பத்துடன் தேடிக்கொண்ட வாழ்க்கையில் மகிழ்ச்சியுடன்தான் இருப்பாள் என்ற நம்பிக்கையில் அவளைப் பற்றிய சிந்தனையைத் தள்ளிவைத்தான்.


மேலும் மொத்தமாக ஊரை விட்டே வந்து குடும்பத்தைக் கவனிக்க வேண்டிய சூழ்நிலை, தந்தையின் மருத்துவம், ஜீவிதாவின் படிப்பு, தொடர்ந்த நாட்களில் பரந்தாமனின் மரணம், அதற்கான சடங்குகள், இதற்கிடையில் கிடைத்த வேலையைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம் என சுபாவைத் தேடிப்போக இயலாமல் போனது ஈஸ்வருக்கு.


முதலில் கிடைத்த வேடங்களிலெல்லாம் நடித்த ஈஸ்வர் படிப்படியாக உயர்ந்து முக்கிய வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினான்.


வாழ்க்கையில் எல்லா வளங்களும் பெருகினாலும் உள்ளுக்குள்ளே துகள்களாக உடைந்துபோன நிலையிலிருந்தவனின் வாழ்க்கை மலரைச் சந்தித்த பிறகுதான் வண்ணமயமாக மாறத்தொடங்கியது. இறுக்கமான மனநிலையிலிருந்து இயல்பாக வெளிவரத் தொடங்கினான் ஈஸ்வர்.


அனைத்தையும் மலரிடம் கொட்டி முடித்தவன், "சுபா வேலைக்காக பெங்களூரு போக சப்போர்ட் பண்ணதுக்கு, எங்க அப்பாவுக்கு மட்டுமில்ல அம்மாவுக்கும் கூட என் மேல் வருத்தம் இருந்தது. அவங்க பார்வையில ஒரு முட்டாளா நின்னேன்!


கருணா ரொம்ப நல்லவன். உண்மையான ஃப்ரெண்ட்! அவனோட நட்பை இழந்து, நம்பிக்கை துரோகம் பண்ணவன்னு குற்றவாளியா அவன் முன்னாடி நின்னேன்! கருணாகிட்டயிருந்தும் நிம்மி அத்தைகிட்ட இருந்தும் குமார் சித்தப்பாவைப் பிரிச்சேன்!


அந்த நேரம் நான் பட்ட வேதனையை வார்த்தையால சொல்ல முடியாது மலர்! அதை என் நிலைமைல இருந்து உணர்ந்து பார்த்தால்தான் புரியும்!" என்று ஈஸ்வர் சொல்ல அன்று அவன் பட்ட துன்பங்களின் வலி அவன் முகத்தில் இன்னும் மீதம் இருந்தது.


அதைப் புரிந்துகொண்டவளாக, "உங்க இடத்துல இருந்து உணர்ந்து பார்த்ததாலதான் ஹீரோ இன்னைக்கு நான் உங்கப் பக்கத்துல இருக்கேன்!


சுபா அண்ணியைப் பத்தி தெரிஞ்சா நீங்க என்னவெல்லாம் செஞ்சிருப்பீங்களோ அதையெல்லாம் நானே செஞ்சேன்! மேல மேல உங்களுக்கு வலியைக் கொடுக்கக் கூடாதுன்னுதான் அவங்கள நல்லபடியா உங்க முன்னாடி நிறுத்தணும்னு நினைச்சேன்!" என்றவள்,


"நான் உங்க நிலைமையை நேரில் பார்க்கல! ஆனாலும், உங்க நிலைமையை குமார் மாமா மூலமா தெரிஞ்சுகிட்டேன்!


முதன்முதல்ல உங்களைப் பார்த்தபோது உண்டான ஃபீல், அது ஒரு பிஸிக்கல் அட்ராக்ஷனா கூட இருந்திருக்கலாம்! ஆனா உங்களைப் பத்தி முழுசா புரிஞ்சிட்ட பிறகு, உங்க வலியை முழுமையா உணர்த்த பிறகு, உங்களை முழுமையா உணர்ந்த பிறகு, உங்ககூட கடைசி வரைக்கும் இருக்கணும்னு தோணிச்சு! மனைவியாத்தான்னு இல்ல, ஒரு நல்ல ஃப்ரெண்டாவாவது இருக்கணும்னு தோணிச்சு!" என்று சொல்லி மேலும் அவனுடன் நெருங்கி உட்கார்ந்துகொண்டாள் மலர்.


அவளுடைய மனதை உணர்ந்தவனாக அவளைத் தன்னுடன் சேர்த்து அணைத்துக்கொண்டவன், "எனக்கு அப்படி இல்ல ஹனி! உன்னை முதல் முதல்ல பார்த்த அன்னைக்கே நீதான் என் லைஃப்னு முடிவே பண்ணிட்டேன்!" என்று அழுத்தத்துடன் சொல்லிவிட்டு,


"குமார் சித்தப்பாவ நீ எப்ப மீட் பண்ண?" என்று ஆவலுடன் கேட்டான் ஈஸ்வர்.


"அது என் ப்ராஜெக்ட் முடிஞ்சு நான் இங்க திரும்ப வந்த பிறகு!" என்றவள், ஏதோ எண்ணியவளாக,


"ஹீரோ! சுபா அண்ணி வீட்டை விட்டுப் போகும்போது அவங்க லேப்டாப் அண்ட் சர்டிஃபிகேட்ஸ் இதெல்லாம்தான் எடுத்துட்டுப்போனதா சொன்னாங்க! அவங்க நகை பணம் எதையும் எடுத்துட்டுப் போகல!" என்றாள் மலர், அதை அவனுக்கு உணர்த்தும் நோக்கத்தில்.


"நீ சொன்ன போதே யோசிச்சேன் மலர்! அந்தச் சூழ்நிலையில அப்படிதான் நினைக்க தோணிச்சு! ஜீவியும் சுபா எதையோ மறைச்சு எடுத்துட்டுப் போனதா சொல்லவும் அப்படியே நம்பிட்டோம். ஆனா இப்ப யோசிச்சு பார்க்கும்போது, அந்த நேரத்தில் அங்க இருந்த யாரோதான் சிச்சுவேஷனை நல்லா யூஸ் பண்ணி எல்லாத்தையும் திருடிட்டு போயிருக்காங்கன்னு தோணுது! இருக்கட்டும், கூடிய சீக்கிரம் அது யாருன்னு கண்டுபிடிக்கறேன்!" என்றான் ஈஸ்வர் கடுமையாக.


"சில் ஹீரோ! ரிலாக்ஸ்!" என்றவள், "ஒரு வேள சுபா அண்ணி அந்தப் பணம், நகை இதையெல்லாம் எடுத்துட்டுப் போயிருந்தா கூட இவ்வளவு துன்பப் பட்டிருக்க மாட்டாங்க!" என்றவாறு தொடர்ந்து சொல்லத் தொடங்கினாள்.


சுபா மலரிடம் அனைத்தையும் சொல்லிமுடித்த இரு தினங்களுக்குப் பிறகு மலர் அலுவலகத்திலிருந்து வீட்டிற்குத் திரும்பியவுடன் அவளைத் தேடி அங்கே வந்தான் ஜீவன்.


தினசரி வழக்கமாகப் படம் வரைந்து கொண்டிருந்தவன் ஏதோ நினைவில் அதை நிறுத்திவிட்டு, "ஹனீமா! அம்மா அண்ணா எங்க இருகாங்க?" என்று கேட்கவும், அவன் கேட்பது புரியாமல், "அம்மா அண்ணாவா யாருடா அது?" என்று மலர் குழம்ப, "ஈஸ்வர்! அம்மா அண்ணா!" என்றான் அவன்.


அதில் திடுக்கிட்டவளாக, "அவங்களைப் பத்தி உனக்கு எப்படி தெரியும்?" என்று மலர் வியந்து கேட்கவும்,


"அதான் அன்னைக்கு அம்மா கதை சொன்னாங்க இல்ல! அப்ப கேட்டேன்!" என்று சொல்லி அவளை அதிர வைத்தான் ஜீவன்.


சில குழந்தைகள் தூக்கத்திலிருந்தால் கூட சில விஷயங்களை ஆழ்ந்து கவனிப்பார்கள் என்று எங்கோ அவள் படித்தது நினைவிற்கு வரவும், அவன் தூக்கத்திலோ, அல்லது அரைகுறையாக விழித்திருந்த நிலையிலோ சுபா பேசிய அனைத்தையும் கவனித்திருக்கிறானோ என்ற சந்தேகம் எழுந்தது மலருக்கு.


அதே யோசனையுடன் நின்று கொண்டிருந்த மலரின் துப்பட்டாவைப் பிடித்து இழுத்து, அவளுடைய எண்ண ஓட்டத்தைக் கலைத்தவன், "ஈஸ்வர் பத்தி சொல்லு ஹனீமா!" என்று கெஞ்சலாகக் கேட்க,


அவன் அருகில் உட்கார்ந்தவள், அவனைத் தனது மடியில் இருத்தி, "அவங்க ரொம்ப பெரியவங்க இல்ல! ஈஸ்வர்னு பேரெல்லாம் சொல்லக்கூடாது!" என்று மலர் சொல்லவும், "வேற எப்படி சொல்லணும் ஹனீ!?" என்றான் ஜீவன் கேள்வியாக.


"மாமான்னுதான் சொல்லணும் பாய் ஃப்ரண்ட்!" என்றாள் மலர்,


அவன் ஈஸ்வரை அப்படி அழைக்க வேண்டும் என்ற ஆவலுடன். "சரி!" என்று தலையை ஆட்டிய ஜீவன், ஈஸ்வரைப் பற்றியும், ஜீவிதா, சாருமதி, பாட்டி என அனைவரைப் பற்றியும் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டுத் தொடர்ந்து அவளை நச்சரிக்கத் தொடங்கினான்.


வேறு வழி இன்றி அவர்களைப் பற்றி ஒவ்வொருவராக, அனைவருடைய உறவு முறைகளையும் விளக்கமாக அவனிடம் சொல்லிப் புரிய வைத்தாள் மலர்.


அன்று முதலே, அவர்கள் அனைவரையும் நேரில் காணும் ஆர்வம் அவனைத் தொற்றிக்கொண்டது.


நாட்கள் அதன் போக்கில் செல்ல ஒரு நாள் ஜீவன் தொலைக்காட்சியில் கார்ட்டூன் பார்த்துக்கொண்டிருந்த சமயம் அவன் சேனல்களை ஒவ்வொன்றாக மாற்றிக்கொண்டிருக்க, இடையில் ஈஸ்வர் நடித்த படம் ஒன்று வரவும் அதை அவனுக்குச் சுட்டிக் கட்டிய மலர், "இவங்கதான் உன்னோட ஈஸ்வர் மாமா!" என்று ஆவலுடன் சொல்லி, ஜீவனின் முகத்தைப் பார்க்க, திரையில் தெரிந்த மாமனின் முகத்தைக் காட்டிலும் அவனது முகம், கோபத்தில் தகித்தது.


வில்லனாக ஈஸ்வர் காண்பித்த முகம் அவனுடைய தந்தையை நினைவு படுத்த, "இவங்க ஏன் இப்படி பேட் பாய் மாதிரி சண்டைப் போடுறாங்க!" என்று கேட்டு அழவே தொடங்கிவிட்டான் ஜீவன்.


அதன் பின்பு, அது வெறும் நடிப்பு என்று மிக முயன்று அவனுக்கு விளக்கிப் புரிய வைத்தாள் மலர்.


"வில்லன்னா, ஜீவன் அப்பா மாதிரி கெட்டவங்கதான ஹனீமா!" என்று ஜீவன் கேட்க,


அவன் தகப்பனை பற்றி கூறிய விதத்தில் வருந்தியவள், "ஆமாம் டா குட்டி! ஆனா உங்க மாமா சினிமாலதான் வில்லன் நிஜத்துல ஹீரோ டா!" என்று சொல்லவும்,


மகிழ்ச்சியில் குதித்தவன், "ஈஸ்வர் மாமா ஹீரோ! இண்டியா போனா என்னை கோல்ட் பிளேட்ல வச்சுப்பாங்க! எங்க ஹீரோ அம்மாவையும் என்னையும் பத்திரமா பார்த்துப்பாங்க! " என்று அவன் மனதின் ஆழத்தில் பதிந்துபோயிருந்த சுபாவின் வார்த்தைகளையும், அவனது ஏக்கங்களையும் அழகாகச் சொன்னான் ஜீவன்.


அன்றிலிருந்துதான் அவன் ஈஸ்வரை ஹீரோ என்று குறிப்பிடத்தொடங்கினான். மலரும் அப்படியே அழைக்கவேண்டும் என்று அவன் பிடிவாதம் பிடிக்கவே, அவளும் ஈஸ்வரை 'ஹீரோ!' என்றே விளிக்கப் பழக்கப்பட்டுப் போனாள்.


மலர் இந்தியா திரும்பும் நாள் நெருங்க நெருங்க சுபாவையும், தன்னுடன் வந்துவிடுமாறு ஜீவனைக் காரணம் காட்டி மலர் பலவிதமாக அழைத்தும், அதற்கு முற்றிலும் மறுத்துவிட்டாள் சுபா. மேலும் தன்னை பற்றி எக்காரணம் கொண்டும் யாரிடமும் எதுவும் சொல்லக்கூடாது என்றும் சொல்லிவிட்டாள்.


ஜீவனைப் பற்றிக் கொஞ்சமும் எண்ணாமல் சுபா கண்மூடித்தனமாகப் பிடிவாதம் பிடிப்பது போல் தோன்றவும் அதில் கோபம் எல்லையைக் கடக்க, "இப்படிபட்ட ஒருத்தனுக்கு மனைவியா வாழறத விட, நீங்க அவனை டிவோர்ஸ் பண்ணிட்டு ஊருக்கே வந்திடலாம் இல்ல. உங்க மகனைப் பத்தி கொஞ்சமும் நினைச்சுப் பார்க்காம இப்படி இருக்கீங்களே! அப்படி என்ன வைராக்கியம் உங்களுக்கு?" என்று கேட்டேவிட்டாள் மலர்.


மலருடைய வார்த்தையில் மனம் வருந்தியவள், "வைராக்கியம் எல்லாம் இல்லமா. அவன் நானா டிவோர்ஸ் கேக்கணும்னுதான் இப்படியெல்லாம் செய்யறான்! அவனா விவாகரத்துக் கேட்டாக்க ஒரு பெரிய தொகையை எனக்கு காம்பன்சேஷனா கொடுக்கவேண்டியதாக இருக்கும்னு பயம் அவனுக்கு.


நானா கேட்டா அந்தப் பிரச்சனை இல்ல. ஆனா அவங்க குடும்பத்துல ஜீவனைக் கேட்டு நிச்சயம் தொல்லை பண்ணுவாங்க. இது எனக்குப் புரிஞ்சு போச்சு. அதனால அவனாவே டிவோர்ஸ் கேட்கட்டும்னுதான் வெயிட் பண்ணறேன்! ப்ளீஸ் என்னைப் புரிஞ்சிக்கோ!


அப்படி ஒரு விடுதலை எனக்கு கிடைச்சா, நான் ஒரு வேலையைத் தேடிகிட்டு சென்னைக்கே வந்துடுவேன்!" என்று துயரத்துடன் அவளுக்கு தன் நிலைமையை விளக்கினாள் சுபா. இதற்கு என்ன தீர்வு காண்பது எனப் புரியாமல், சுபாவையும் ஜீவனையும் அப்படியே விட்டுவிட்டு தாய் நாடு திரும்பினாள் மலர்.コメント

5つ星のうち0と評価されています。
まだ評価がありません

評価を追加
© KPN NOVELS COPY PROTECT
bottom of page