Anbenum Idhazhgal malarattume 25
Updated: Sep 15, 2022
அணிமா 25
ஈஸ்வர் சுபாவிடம் கருணாகரனுடைய விருப்பத்தைச் சொன்ன பிறகு, 'இந்த திருமணத்திற்குச் சம்மதம் சொன்னால் அது கருணாகரனுக்குத் துரோகம் இழைப்பது போல் ஆகிவிடுமோ?' என்ற கேள்வி மனதில் எழுந்த்து சுபாவுக்கு.
தான் செய்து வைத்த செயல்களை எண்ணிக் குற்ற உணர்ச்சியில் உழன்றவள், அந்த எண்ணத்திலிருந்து மீளவே, ஈஸ்வரிடம் ஒரு மாத அவகாசம் கேட்டிருந்தாள் அவள்.
அதன் பின், ‘உண்மையில் அசோக்கை எப்படி எதிர்கொள்வது, அவனிடமிருந்து எப்படி விலகுவது, அவள் சொன்னால் அவன் இதை அப்படியே எளிதாக விட்டுவிடுவானா?’ என்ற பலவித சந்தேகங்களுடன்தான் பெங்களூரூ திரும்பினாள் சுபா.
நிச்சயமாகக் கேள்விகேட்டு, அவளை குடைவான் என்று சுபா எதிர்பார்த்திருக்க, எதுவுமே நடக்காதது போன்று, அவள் அவனிடம் கோபம் கொண்டுதான் விலகிச்சென்றாள் என்பதையே உணராதவன் போன்று, வெகு இயல்பாகவே அவளை எதிர்கொண்டான் அசோக்.
மிகவும் குழம்பித்தான் போனாள் சுபா.
ஆனால் ஓரிரு தினங்களிலேயே ஒரு முடிவுக்கு வந்தவளாக, இந்த வாழ்க்கை முறையில் தனக்கு விருப்பம் இல்லை என்பதை அவனிடம் சொன்னவள், தனக்கு அவனிடம் ஏற்பட்ட உணர்வு காதலே இல்லை என்பதையும், அதைத் தொடரவும் தான் விரும்பவில்லை என்பதையும் தெளிவாக அவனிடம் விளகினாள்.
அனைத்தையும் கேட்டுக்கொண்டவன், எந்தவித உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல், தோளைக் குலுக்கி, "உனக்கு விருப்பம் இல்லைனா தென் ஓகே ஐ ஓன்ட் கம்பல் யூ; லெட்ஸ் கன்டின்யூ அஸ் ஃப்ரெண்ட்ஸ்!" என்றவாறு, அதை இயல்பாக ஏற்றுக்கொண்டான் அசோக்.
‘இந்த கலாச்சார முறையில், யாருமே நட்போ அல்லது காதலோ, எந்த ஒரு பந்தத்தையும் ஆழமாக எடுத்துக்கொள்வதில்லை போலும்!’ என்று எண்ணியவன், அதைப் பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
மேலும் அவனுக்கு இது போல் பல சகவாசங்கள் இருப்பதால், அவன் இயல்பாக எடுத்துக்கொண்டான் என்றே நம்பினாள் சுபா.
ஆனால் அவன் இவளை வைத்து ஒரு வலை பின்னிக் காத்திருந்ததை, அந்த சமயத்தில் அவள் அறியாமல் போனது அவளுடைய முட்டாள்தனம்.
கிட்டத்தட்ட ஒரு மாத காலம் அவன், இவளை எந்த விதத்திலும் அணுகவும் இல்லை, கடந்துபோன விஷயங்களைப் பற்றிப் பேசவும் இல்லை.
எனவே, அவன் பிரச்சினை செய்யாமல் நாகரிகமாக விலகிவிட்டான் என்ற முடிவுக்குச் சுபா வந்திருக்க, அவளுடைய குற்ற உணர்ச்சியும் கொஞ்சம் மறைந்திருந்தது.
ஏதோ ஒரு சந்தர்ப்பத்தால் புத்தி கெட்டு, யோசனையின்றி தவறான வழியில் சென்றுவிட்ட போதிலும், சரியான தருணத்தில் அதை உணர்ந்ததால், கருணாகரனைத் திருமணம் செய்துகொள்வதில் தவறு ஒன்றும் இல்லை, என்ற முடிவுக்கு வந்திருந்தாள் சுபா.
கூடவே, அவளுடைய அப்பாவிடம் அவள் கேட்டிருந்த ஆறு மாத கால அவகாசம் முடிவடையவும், தான் வேலையிலிருந்து விலக விரும்புவதாக, நிறுவனத்தின் 'ஹெச்.ஆர்' பிரிவிற்கு மின்னஞ்சல் அனுப்ப, அவள் எதிர்பார்த்ததை விட விரைவாகவே அவளுடைய கோரிக்கை அந்த நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளப் பட்டது.
அவர்களுடைய நிறுவன ஒப்பந்தப்படி, ஒரு மாதத்திற்குப் பிறகு அவள் விடுவிக்கப் படுவதாகத் தகவலும் வந்தது.
சனி ஞாயிறு விடுமுறையில் ஊருக்கு வந்த சுபா, ஈஸ்வரை அழைத்து கருணாகரனுடனான அவளது திருமணத்திற்கு, அவளுடைய விருப்பத்தைச் சொன்னாள் உண்மையான மகிழ்ச்சியுடன்.
ஈஸ்வர், விஷயத்தை குமார் மூலம் குடும்பத்தில் சொல்லவும், செங்கமலம் பாட்டி தொடங்கி, ஒவ்வொருவருக்கும் அதில் அளவில்லாத மகிழ்ச்சியும் மனநிறைவும் உண்டானது.
பெரியவர்களெல்லாம் கூடிப் பேசி திருமணத்தை உறுதி செய்தனர்.
உள்ளாட்சி தேர்தல் காரணமாக, இரண்டு மாதத்திற்குப் பிறகு திருமணம் வைத்துக்கொள்ளலாம் என்று கருணா சொல்லிவிட, அடுத்து வந்த வாரத்திலேயே எளிமையாக நிச்சயதாம்பூலம் செய்து, இரண்டு மாதத்திற்குப் பிறகு திருமணத்திற்கு நாள் குறித்தனர்.