top of page

Anbenum Idhazhgal Malarattume! 23 & 24

Updated: Apr 9, 2023

அணிமா-23


பூர்வீக சொத்துக்களான அழகான ஓட்டுவீடு, தேவைக்கு வருமானத்தை தரும் விவசாய நிலங்கள், வீட்டில் ஒரு அங்கமாய் இருக்கும் பசுக்கள் என, எளிமையான கிராமத்து வாழ்க்கை பரந்தாமனுடையது.


விவசாயத்தை உயிராக நினைக்கும், தந்தைக்குத் தப்பாத மகனாக ஈஸ்வர். விவசாயம் அவனது சுவாசம். அந்த ஊர் வானம் பார்த்த பூமிதான் என்றாலும், அவர்களுடைய வயல்வெளி கிணறு வற்றாமல் நீர் வழங்க, ஓரளவிற்கு நன்றாகவே விவசாயம் செய்ய முடிந்தது.


அதனை மேம்படுத்தும் ஆசை அவன் மனதில் சிறு வயது முதலே அவனுடன் சேர்ந்தே வளர்ந்தது. பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், அவனுக்கு வேளாண்மை சம்பந்தமாகப் படிக்கவே விருப்பம் இருந்தது.


சுபானுவும் அதே நேரத்தில் பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றிருந்தாள். அதுவும் அவளுக்கு, பொறியியல் படித்து அது சார்ந்த துறையில் வேலைக்குச் சென்று கை நிறைய சம்பாதிப்பது, வெளிநாட்டு வாழ்க்கை என பெரிய அளவில் கனவுகளும் எதிர்பார்ப்புகளும் கொஞ்சம் அதிகமாகவே இருந்தன.


இரண்டு பேருக்கும் ஒரே நேரத்தில் செலவு செய்வது என்பது, தந்தையின் சுமையை பெரும் அளவிற்கு ஏற்றிவிடும் என்பது நிதர்சனமாகப் புரியவே, வேளாண் சம்பந்தமான பொறியியல் படிப்புகள் படிக்க வாய்ப்புகள் இருந்தாலும், அதைத் தவிர்த்து, 'பி.எஸ்.சி அக்ரி' சேர்ந்தான் ஈஸ்வர்.


***


சுபானு, காஞ்சிபுரத்தில் ஒரு கல்லூரியில் பொறியியல் சேர்ந்து படிக்க, சென்னையில், அவனுடைய குமார் சித்தப்பா வீட்டின் அருகிலேயே தங்கிக்கொண்டு, கல்லூரிக்குச் செல்லத் தொடங்கினான் ஈஸ்வர்.


கூடவே, நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம், குமாருடைய வீட்டில் அவர் வைத்திருக்கும் 'ஜிம்'மில் உடற்பயிற்சிகள் செய்வதையும் வழக்கமாக்கிக்கொண்டான். குமாருடன் சண்டைப் பயிற்சிகளிலும் ஈடுபாடு காட்டத்தொடங்கினான்.


குமார் ஏதாவது பண உதவி செய்தால் அதை அவன் தவிர்க்கவே, அவனது தன்மானம் புரிந்து அவன் விடுமுறையில் இருக்கும் சமயங்களில் தான் வேலை செய்யும் திரைப்படங்களிலேயே சண்டைக் காட்சிகளில் நடிக்க அவனுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து அதன் மூலம் அவனுடைய செலவுகளுக்கு வருமானமும் செய்து கொடுத்தார் அவனைத் தனது சொந்த மகனாகவே பாவிக்கும் அவனுடைய சித்தப்பா.


ஈஸ்வர் பயிற்சி செய்யும் அதே நேரங்களில் உடற்பயிற்சி செய்யவென குமாருடைய வீட்டிற்கு வருவான் அவனை விட இரண்டு வயதே மூத்தவனான கருணாகரன்.


செங்கமலம் பாட்டியின் சொந்த சகோதரியின் மகனான குமார் மற்றும் அவருடைய அக்கா நிர்மலா இருவரும் சிறு வயதிலேயே பெற்றோரை இழந்துவிட அவர்களைப் பரந்தாமனுடன் சேர்த்து தமது பிள்ளைகளாகவே வளர்த்து படிக்க வைத்து திருமணமும் செய்துவைத்தனர் செங்கமலம் பாட்டியும் அவருடைய கணவரும்.


நிர்மலாவை மிக வசதியான அரசியல் குடும்பத்தில் திருமணம் செய்து கொடுத்திருந்தனர்.


அப்பொழுது கருணாகரனின் பெரியப்பா இந்திய அளவில் மிகப்பெரிய கட்சி ஒன்றின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று தொழிற்துறை அமைச்சராக இருந்தார்.


அந்தக் கட்சியில் அவரது கை மிகவும் ஓங்கி இருந்தது. அவனுடைய தந்தை அண்ணனுக்குப் பக்கபலமாகத் திகழ்ந்தார்.


கருணாகரன் சிறுவனாக இருந்த பொழுதே அவனுடைய தந்தை ஒரு விபத்தில் இறந்துபோக, திருமணமே செய்துகொள்ளாமல் அரசியலே வாழ்க்கை என்று இருக்கும் அவனுடைய பெரியப்பா அவனது பொறுப்பை எடுத்துக்கொண்டு அவனை தன் அரசியல் வாரிசாகவே மாற்றினார்.


கருணாகரன் அவனுடைய பெரியப்பாவுடன் அரசியலில் ஈடுபட்டுக்கொண்டே கல்லூரியில் சேர்ந்து, 'பொலிட்டிக்கல் சயின்ஸ்' படித்துக்கொண்டிருந்தான்.


அத்தை மகன் என்ற உறவு அவனுடன் இருந்த பொழுதிலும், ஏதாவது விசேஷ சமயங்களில் மட்டுமே சந்திக்கும் வாய்ப்பிருக்க, இந்த சந்தர்ப்பத்தில்தான், ஈஸ்வர் மற்றும் கருணாகரன் இருவரும் அதிகம் நெருங்கிப் பழக ஆரம்பித்தனர்.


காலப்போக்கில் மனதில் இருப்பதை வெளிப்படையாகப் பேசி, அந்தரங்கங்களைப் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு, அழகிய புரிதலும், இணைபிரியாத நட்பும் இருவருக்கிடையில் உருவானது.


***


ஈஸ்வர் இளநிலை பட்டப் படிப்பு முடித்து, முதுகலை படிப்பில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தான்.


சுபா கல்லூரி படிப்பு முடிந்து, அவளுக்கு 'கேம்பஸ் செலக்ஷன்' மூலமாக வேலையும் கிடைத்துவிட, அதற்கான ஆறு மாதப் பயிற்சி முடித்து, பெங்களூருவில் 'பிளேஸ்மென்ட்' ஆகியிருந்தது.


அந்த சந்தர்ப்பத்திலேதான் பொங்கல் பண்டிகை வந்தது. குடும்பத்துடன் அதைக்கொண்டாட ஊருக்கு வந்திருந்தான் ஈஸ்வர்.


அவர்கள் ஊரில் பொங்கல் கொண்டாட்டங்கள் களைக் கட்டியிருந்தது. மாட்டுப்பொங்கல் தினத்தன்று, மந்தைவெளியில், கொம்புகளில் பலவண்ண பலூன்கள் கண்களைப் பறிக்க, அலங்கரிக்கப்பட்ட மாடுகள், வண்டியில் பூட்டப்பட்டு, ஊர்வலத்திற்காகத் தயாராக இருக்க, ஊர்மக்கள் அனைவரும் அதை வேடிக்கை பார்க்க அங்கே திரண்டிருந்தனர்.


கூட்டத்தில் நின்றுகொண்டிருந்த பெண்களைக் கைப்பேசிமூலம் காணொளியாகப் பதிவு செய்துகொண்டிருந்தான் அங்கே திருவிழாவைக் காண்பதற்கென வந்திருந்த புதியவன் ஒருவன்.


அவனுடைய செயல் ஜீவிதாவையும், அவளுடைய தோழிகளையும் எரிச்சல் படுத்த, கால் செய்து அதை அண்ணனிடம் சொல்லிவிட்டாள்.


சில நிமிடங்களில், வேகமாக ஓட்டி வந்த டிராக்டரை, ஓரமாக நிறுத்திவிட்டு, அதிலிருந்து லாவகமாகக் குதித்திறங்கி, கண்களில் தீப்பொறி பறக்க, கூட்டத்தை நோக்கி வேக எட்டுக்களுடன் ஜெகதீஸ்வரன் அங்கே வந்த நொடி அந்தப் புதியவனுடைய கைப்பேசி அவனது கைகளிலிருந்து பறந்தது.


அதிலிருந்த 'மெமரி கார்ட்'டை எடுத்து அதை உடைத்தவன், "நீ எங்க பழனிச்சாமி அய்யா வீட்டு கெஸ்ட்டுங்கறதால விடறேன். இல்லனா இந்த ஃபோனை மாதிரியே உன்னையும் பீஸ் பீசா ஆக்கியிருப்பேன்.


ஃபோட்டோ வீடியோ எடுக்கறதுனா மாடுங்களைத்தான் எடுக்கணும். எங்க ஊரு பொண்ணுங்கள இல்ல!" என்று எச்சரிக்கும் விதமாக ஈஸ்வர் சொல்லிக்கொண்டிருக்க, அவனை நோக்கி வந்தான் அவன் குறிப்பிட்ட அந்த பழனிச்சாமி அய்யாவின் மகன், கைலாஷ்.


"என்ன ஈஸ்வர்! சின்ன விஷயத்தையெல்லாம் பெருசாக்கிட்டு இருக்க, ப்ரவீண் என் கூட வேலை செய்யறவர்தான். அவர் சும்மா ஃபன்னியா வீடியோ எடுத்திருப்பாரு!" என்று கைலாஷ் அவனுக்குப் பரிந்து பேச,


"உனக்கு வெட்க்கமா இல்ல, இந்தக் கூட்டத்துலதான உன் தங்கையும் நிக்கறா. யாரோ எப்படியோ போகட்டும்னு பேசற?" என்று ஈஸ்வர் காட்டமாகக் கேட்க,


"இதெல்லாம் சகஜமான விஷயம். நாலு பேர மாதிரி, சொசைட்டில பழகினா உனக்குத் தெரியும். தெரியலைனா, சுபானுவைப் பார்த்து கத்துக்கோ. சும்மா நானும் படிக்கறேன்னு, வேலைக்கே ஆகாத எம்.எஸ்.சி அக்ரி படிச்சுக்கிட்டு, உங்க சித்தப்பா ஸ்டண்ட் மஸ்டர்ங்கறதால, சினிமால கேவலமா டூப் போட்டுட்டு சுத்திட்டு இருக்க! ஐடீல வேலை செய்யறவங்கள பார்த்தா உனக்கு காம்ப்ளக்ஸ்" என்று நக்கலாக அவன் சொல்லிக்கொண்டே போக, பொறுமை இழந்து, ஓங்கி அவன் முகத்தில் அறைந்தான் ஈஸ்வர்.


அதில் நிலை தடுமாறி அவன் ஓரடி பின்னால் செல்ல, ஈஸ்வர் அடுத்த அடி அவனை அடிப்பதற்குள் அவனை வந்து தடுத்தார் பரந்தாமன், ஈஸ்வருடைய அப்பா.


அனைத்தையும் பார்த்து, பயத்தில் அதிர்ந்துபோய் அந்த ப்ரவீண் நிற்க, ஈஸ்வரின் ஆறடி உயரத்தையும், அவனது உடற்கட்டையும் பார்த்து மிரண்டு போய், அவனைத் திரும்பத் தாக்கும் துணிவு இல்லாமல், அவமானத்தில் முகம் கன்றி, கொதித்துப்போனான் கைலாஷ்.


அவனது படிப்பு, அவன் விரும்பி செய்யும் வேலை என எல்லாவற்றையும் அந்த கைலாஷ் பழித்துப் பேச, ருத்திரமூர்த்தியாக மாறியிருந்த மகனின் கோபத்தைத் தணிக்கும்பொருட்டு, "கண்ணப்பா! வேண்டாம், பழனி ஏதாவது தப்பா நினைக்கப் போறான்! இப்படி எடுத்தோம் கவுத்தோம்னு கோபப்பட்றது தப்புடா!" என்று பரந்தாமன் நிதானமாகச் சொல்லவும், கொஞ்சம் தணிந்தான் ஈஸ்வர்.


அனைத்தையும் கேள்விப்பட்டு, அங்கே வந்த பழனி, பரந்தாமன் சொன்னதைக் கேட்டு, "நான் இங்க இல்லைனாலும், ஈஸ்வர் தப்பான ஒரு வேலையை செய்யமாட்டான்னு எனக்கு நல்லாவே தெரியும். அவனே கோபப்பட்டு கை நீட்டினான்னா, எதிர்ல இருக்கறவன் ஏதோ தப்பு பண்ணியிருக்கான்னுதான் அர்த்தம்" என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே,


"அப்பா!" என்று கைலாஷ் குறுக்கே வர, அவனைக் கை நீட்டித் தடுத்தவர், "அவன் என் மகனாகவே இருந்தாலும் நான் ஈஸ்வருக்குத்தான் சப்போர்ட் பண்ணுவேன்!" என்று மகனைக் கண்களால் எரித்தவாறே சொல்லி முடித்தார்.


ரைஸ் மில், பால் பண்ணை, கோழிப் பண்ணை, விவசாய நிலங்கள் என வசதி படைத்தவர் பழனிச்சாமி. அவர் கர்வமின்றி இயல்பாக இருந்தாலும், கைலாஷ் அகந்தையுடன்தான் நடந்துகொள்வான்.


தந்தையின் பேச்சில் உள்ளுக்குள்ளே குமுறியவனாக, அவரை எதிர்த்துப் பேசும் துணிவின்றி, தலையைத் தொங்கவிட்டவாறு, நண்பனுடன் அங்கிருந்து அகன்றான் கைலாஷ்.


ஆனாலும் அவன் மனதில் வன்மம் கொழுந்துவிட்டு எரியத்தொடங்கியது.


***


பொங்கல் கொண்டாட்டங்கள் எல்லாம் முடிந்து, இன்னும் ஒரு வாரத்தில் வேலையில் சேர வேண்டும் என்ற நிலையில், வீட்டில் முகத்தைத் தூக்கி வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள் சுபா.


சென்னைக்குக் கிளம்பிக்கொண்டிருந்த ஈஸ்வர், சகோதரியின் வாட்டமான முகத்தைக் கண்டு, என்ன என்பது போல் அன்னையிடம் ஜாடை செய்ய, அதைக் கவனித்து, "அங்க என்ன கேள்வி? என்கிட்ட கேளு சொல்றேன்" என்று அமர்த்தலாகச் சொன்ன பரந்தாமன்,


"இந்தப் பொண்ணுக்கு, இங்கயே மெட்ராஸ்ல வேலைக்குப் போட்டிருந்தாங்கன்னா, சரின்னு சொல்லலாம். நீங்க எல்லாரும் அங்க இருக்கீங்க. நான் கவலை இல்லாம இருப்பேன். ஏன் பெங்களூர்ல போட்டுத் தொலைச்சாங்கன்னு தெரியல." என்று சொல்லி பெருமூச்சு ஒன்றை வெளியேற்றி, "வயசு பொண்ண அங்கல்லாம் அனுப்பிட்டு, என்னால வயத்துல நெருப்பைக் கட்டிட்டு இருக்க முடியாது. அவ வேலைக்குப் போய் ஒண்ணும் கிழிக்க வேணாம். காலாகாலத்துல மாப்பிள்ளை பார்க்கறேன், கல்யாணத்தைச் செஞ்சிட்டு, எங்க வேணா போகட்டும்!" என்று சொல்லி முடித்தார்.


அதில் பொறுமை இழந்த சுபானு, தந்தையின் எதிரில் பேச பயந்து கொண்டு, மெல்லிய குரலில், "ஆமாம்! வேலைக்கே ஆகாத படிப்பெல்லாம் படிச்சிட்டு, வெட்டியா சுத்திட்டு இருக்கான் ஆம்பிளை பிள்ளைன்னு! அவனைக் கேள்வி கேட்க, இங்க யாருக்கும் வாய் இல்ல. எனக்கு முட்டுக்கட்டைப் போட்றதிலேயே குறி!" என்று முணுமுணுக்க, அது ஈஸ்வரின் செவிகளில் நன்றாகவே விழுந்து மனதைக் குத்தியது.


ஆனால் பரந்தாமனுக்குப் புரியாமல் போகவே, "என்ன! என்ன முணுமுணுக்கற. எதுவா இருந்தாலும் தெளிவா பேசு!" என்று முறைக்கவும்,


"அப்பா! ப்ளீஸ்பா! ஆறே ஆறு மாசம் மட்டும் நான வேலைக்குப் போய், கொஞ்சம் சம்பாதிச்சுட்டு, கொஞ்சம் என்ஜாய் பண்ணிட்டு, அப்பறம் நீங்க சொல்ற மாதிரி கல்யாணம் பண்ணிக்கறேன் பா!” என கெஞ்சலில் இறங்கினாள் சுபா,


அந்த ஆறு மாத காலம்தான் அவளது வாழ்க்கையையே மாற்றிப் போடப்போகிறது என்பதை அறியாமல்!


அதில் கொஞ்சமும் இணக்கமின்றி, "வேணாம்மா! ஏதாவது தப்பா போச்சுன்னா ஊர்ல தலை நிமிர்ந்து நடக்கவே முடியாம போயிடும். நீ ஒழுங்கா நல்லபடியா இருக்கணும்ன்னு நினைச்சாலும், சுத்தி இருக்கறவங்க உன்னை அப்படி இருக்க விட மாட்டாங்க. மெட்ராஸ்லயே வேற வேலை வேணா தேடிக்கலாம் விட்டுடு!" என்று அவர் தீர்மானமாய் சொல்ல, அவர் சொல்லுவதுதான் சரி என்று, செங்கமலம் பாட்டியும், சாருமதியும் கூட சுபாவிற்குப் புத்தி சொல்லும் விதமாகப் பேசினர்.


சென்னையில் வேலைக்குச் சென்றாலும், அவள் எதிர்பார்க்கும் கட்டுப்பாடற்ற சுதந்திரம் அவளுக்குக் கிடைக்காது என்று சொல்லி அவளுடைய மனது அவளை சஞ்சலப்படுத்த, மேலும் அப்படி ஒரு வேலையை உடனே தேடிக்கொள்வதும் அவ்வளவு சுலபமில்லை என்பதும் புரிய, வீட்டில் எல்லோருமே தனக்கு எதிராக நிற்பதுபோல் தோன்றவும், ஏமாற்றத்தில் அவளுடைய முகம் கசங்கிப் போனது.அணிமா 24


சுபாவின் வேதனையைக் காணச் சகிக்காமல், "அப்பா! சுபா நம்ம வீட்டுப் பொண்ணுப்பா! நம்மள தலை குனிய வைக்கற மாதிரியான செயலை, அவ எப்பவுமே செய்ய மாட்டா! நான் என் தங்கையைப் புரிஞ்சி வெச்சிருக்கிற வரைக்கும், அவளோட எல்லைக் கோட்டை தாண்டி அவ போகவே மாட்டா. அதனால அவ விருப்பப் படி, அவ வேலைக்குப் போகட்டும் தடுக்காதீங்க!" என்று அவளுடைய மனோதிடம் குறையாமல் இருப்பாள் என்று முழுமையாக நம்பி, ஈஸ்வர் தந்தையிடம் சகோதரிக்காக வாதிடவும்,


"நீ சொல்றதால ஒத்துக்கறேன். ஆனாலும் எனக்கு என்னவோ சரியா படல! பார்த்து கவனமா நடந்துக்கச்சொல்லு!" என்று விட்டேற்றியாய் சொல்லிமுடித்து, விருட்டென அங்கிருந்து சென்றுவிட்டார் பரந்தாமன்.


அடுத்த நொடியே, அவளுடைய முகம் பிரகாசிக்க, "தேங்க்ஸ் டா ஈஸ்வர்! என்ன இருந்தாலும், நீ அப்பாவுக்கு ரொம்ப ஸ்பெஷல், அதனால்தான் நீ கேட்ட உடனே ஒத்துக்கிட்டாங்க" என்றாள் சுபா.


இதற்கும் கூட குதர்க்கமாக இப்படிப் பேசுகிறாளே என்ற சலிப்பைப் புறந்தள்ளி, "அவர் ஒண்ணும் முழு மனசோட சம்மதிக்கல சுபா. நீ கொஞ்சம் கவனமா நடந்துக்கோ. கார்ப்பரேட் கல்ச்சர் அப்படிங்கிற பேருல, நம்ம பழக்கவழக்கங்களே மாறிப் போய், நிறையப் பேர் இந்த கைலாஷ் மாதிரி திரியறாங்க. ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கணும் சுபா!" என்று ஈஸ்வர் சொல்லவும்,


அதைக் காதிலேயே வாங்காமல், "எனக்காக நீ இவ்வளவு யோசிக்கற, செய்யற அதனால உன் நன்மைக்காக ஒண்ணு சொல்றேன். எனக்கு இப்பவே நாற்பதாயிரம் சம்பளத்துல வேலை கிடைச்சிடிச்சு. ஆனா உன் நிலம? இப்ப நம்ம ஊர் இருக்கற அழகுல இந்த விவசாயமெல்லாம் சரிப்பட்டு வராது ஜகா. நீ எம்.எஸ்.சி முடிச்சு, அதுக்கு அப்பறம் எம்.பில், பி.எச்டின்னு போய், விவசாயத்தை முன்னேத்த நினைக்கறதெலாம், கொக்குத் தலையில் வெண்ணெய் வெச்சு கொக்குப் பிடிக்கிற சமாச்சாரம். நீ சம்பாதிக்கிற பாதி பணத்தை, அக்ரிகல்ச்சர் ரிசெர்ச் சம்பந்தப் பட்ட புக்ஸா வாங்கி அழிக்கற. வேற நல்ல லைன்ல கொஞ்சம் பணம் சம்பாதிக்கிற வழியைப் பாரு" என்று தனக்கு நன்மை என்று தோன்றியதைச் சுபா சொல்லவும்,


அதில் கோபம் உச்சிக்கு ஏற, "உனக்குப் பிடிச்சதை நீ செய்யற இல்ல! அதுமாதிரிதான் எனக்கு இதுதான் பிடிக்கும்! இந்த திருக்குறளைக் கேள்வி பட்டதில்ல நீ!


உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்


தொழுதுண்டு பின்செல் பவர்.


அவ்வளவு உன்னதமான ஒரு விஷயத்தை எவ்வளவு கேவலமா பேசற சுபா, ப்ச்... பணம் சம்பாதிக்கறதுதான் முக்கியம்னா விவசாயம் செஞ்சும் பணம் சம்பாதிக்க முடியும். என்ன, கொஞ்சம் கால அவகாசம் தேவைப்படும்.


பொண்ணுங்களுக்கு இருபத்திரெண்டு, இருப்பதுமூணு வயசுலேயே கல்யாணம் செஞ்சி கொடுத்துடறாங்க. ஆனா பசங்களுக்கு அப்படி இல்ல.


உங்களுக்கு ரெண்டு மூணு வயசு வித்தியாசத்துல மாப்பிளை வேணும். அதுக்காக பசங்க சீக்கிரம் ப்ரொஃபஷனலா செட்டில் ஆகணும்னு பிரஷர் போடுறீங்க.


'உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்'னு பாரதியார் சொன்னார்.


உங்களுக்கெல்லாம், விவசாயம் செய்யறவனையும், புதுசா தொழில் தொடங்கி முன்னுக்கு வர நினைக்கறவனையும் பார்த்தா..தான் ஆம்பாளையவே தெரியாதே" என்று அவள் முதலில் சொன்ன வார்த்தைகளுக்காக, குத்திக் காண்பித்தவன், “நான் இப்படித்தான். நீ உன் வேலையைப் போய் பார்!" என்று காரமாகச் சொல்லவும்,


"நீ ப்ராக்டிகலா இல்லாம, இப்படியெல்லாம் பேசிட்டு இருந்தா, உன்னை ஒருத்தியும் கட்டிக்க மாட்டா" என்று நாவை அடக்காமல் சுபா சொல்லிவிட,


"பரவாயில்ல கல்யாணம் மட்டும்தான் வாழ்க்கையின் டெஸ்டினேஷன் பாயிண்ட் இல்ல. கருணாவோட பெரியப்பா இல்ல? அதே மாதிரி உனக்கோ இல்ல ஜீவிக்கோ குழந்தை பிறந்தா, அவங்களையே என் சொந்த குழந்தைகளாக நினைச்சுகிறேன்" என்று வருத்தத்துடன் ஆனாலும் திண்ணமாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினான் ஈஸ்வர்.


அனைத்தையும் அருகிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த அம்மா பாட்டி இருவரும் அப்படிப் பேசியதற்காகச் சுபாவை ஒரு பிடி பிடித்துதான் விட்டனர்.


ஒரு வாரத்திற்குப் பிறகு, வயதின் கோளாறினால் உண்டான ஏதேதோ கற்பனையுடன், பெங்களூரு நோக்கிப் பயணப்பட்டாள் சுபா.


அவளை அங்கே பத்திரமாகக் கொண்டுபோய் விட்டுவிட்டு, அவளுடைய தங்கும் இடம், உடன் வேலை செய்பவர்கள் என அனைத்தையும் பார்த்து அறிந்துகொண்டு அங்கிருந்து சென்னை சென்றனர் ஈஸ்வரும் கருணாகரனும்.


முதல் முறை பள்ளி செல்லும் குழந்தைக்குச் செய்வதுபோல், ஈஸ்வர் அங்கே வந்தது அவளுக்குப் பிடிக்கவில்லை என்றாலும், பரந்தாமனின் கோபத்திற்குப் பயந்து அதைப் பொறுத்துக்கொண்டாள் சுபா.


அந்தப் பயணம் முழுமையிலும், புது வித உணர்வு தாக்க சுபாவிடம் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது கருணாகரனுக்கு. அதைச் சுபா மட்டும் உணர்ந்திருந்தால் அவளது வாழ்க்கையை இந்தளவுக்குச் சிக்கலாக்கிக் கொண்டிருக்க மாட்டாளோ என்னவோ!


***


புதிய ஊர், மிகவும் புதுமையான சூழல், கட்டுப்பாடற்ற சுதந்திரம், அதுவும், அவளைப் பொறுத்தவரைச் சம்பளமாக ஒரு மிகப்பெரிய தொகை! என அந்த வாழ்க்கையை மிகவுமே இரசிக்கத் தொடங்கியிருந்தாள் சுபா.


அங்கேதான் அசோக்கை அவள் முதல் முதலில் சந்தித்தாள், அவளது டீம் லீடாக. தொடக்கத்தில் அலுவலக ரீதியான பழக்கமாக மட்டுமே இருந்தது, நாளடைவில் நட்பாக மாறியது.


அங்கே வேலைக்குச் சேர்ந்த முதல் மாதம் மட்டும், வார இறுதி நாட்களில் அளத்துரை சென்று குடும்பத்துடன் இருந்தாள். அடுத்து வந்த நாட்களில், மற்றவர்களைப் பார்த்து ஏற்பட்ட ஆசையில், முதல் காரியமாக அவளுடைய நீளமான கூந்தல் குட்டையாக மாறியிருந்தது.


தொடர்ந்த நாட்களில் உடைகளிலும் மாற்றம் வந்தது. சுடிதார் மட்டுமே அணிந்தவள், அங்கே வேலை செய்யும் மற்ற பெண்களைப் போன்று உடுத்த தொடங்கினாள்.


அவளுடைய டீம் தோழர்களுடன் சேர்ந்து, வார இறுதி நாட்களைக் கழிக்கும் ஆவலில் ஊருக்குச் செல்வதை ஏதேதோ காரணம் சொல்லித் தள்ளிப்போடத் தொடங்கினாள்.


அவர்களுடன் டீம் பார்ட்டி, பிறந்தநாள் பார்ட்டி, இரவு விருந்து எனச் செல்லத் தொடங்கிய பின்பு, பெண்களின் போக்கைப் பார்க்கவும், முதலில் 'திக்!' என்றுதான் இருந்தது. அதுவும், சிகரட் பிடிப்பது, மது அருந்துவது, ஆண் நண்பர்களுடன் தனியாகத் தங்குவது என்பதைப் பார்த்து பயந்துதான் போனாள்.


ஆனாலும் ஒரு சிலரைத் தவிர, எல்லோருமே அப்படி இல்லை என்பதும் புரியவும் கொஞ்சம் தெளிவடைந்தவள், அந்தக் குழப்பங்களிலிருந்து தப்பிக்க அவ்வப்பொழுது ஊருக்கும் சென்றுவந்தாள்.


இந்த முறை சென்றபோது, கூந்தலைக் கத்தரித்ததற்காக, அம்மா மற்றும் பாட்டியிடம் அதிகப்படியான திட்டுகளையும் வாங்கிக்கொண்டாள். பரந்தாமன் அவளிடம் முகம் கொடுத்து பேசவே இல்லை. அதற்கும் அவரிடம் தொலைப்பேசியில் ஈஸ்வர்தான் வாங்கிக்கட்டிக்கொண்டான். அதைக் கண்டு ஜீவிதாதான் மனம் வருந்தினாளே தவிர சுபா தூசி போலத் தட்டிவிட்டுப் போய்க்கொண்டே இருந்தாள்.


முதலில் ஈஸ்வருக்குப் பயந்து, சமூக வலைத்தளங்களை அதிகம் உபயோகிக்காமல் இருந்தவள், 'சுபநிலா' என்ற பெயரில் முகநூல் கணக்கு ஒன்றைத் தொடங்கி, இன்ஸ்டாகிராமிலும் இணைந்தாள்.


அதில் அவள் போடும் அவளுடைய படங்கள், அவளுடைய குடும்ப வட்டத்தில் யாரும் பார்க்க இயலாமல் செய்திருக்கவே, அது ஈஸ்வருக்கோ, கருணாவிற்கோ தெரியாமலேயே போனது.


மொத்தத்தில், அவளுடைய வாழ்க்கையை இருளில் மூழ்கடித்துக் கொண்டிருந்தாள் சுபா, தன்னைச் சுற்றி நடப்பது எதையும் உணராமல்.


உணர்ந்திருந்தால் அசோக் அவளிடம் காதல் என்று சொல்லிக்கொண்டு வந்து நின்றபொழுது அதை நம்பியிருப்பாளா சுபா?


***


ஈஸ்வருக்கும் அவளுக்குமான பிறந்த நாள், என்பதினால், வார இறுதி நாட்களுக்கு முன்பாக இரண்டு நாள் விடுப்பு எடுத்துக்கொண்டு, நான்கு நாட்கள் ஊருக்குக் கிளம்பினாள் சுபா.


அதற்கு முந்தைய தினம், அவளை டின்னருக்கு என்று சொல்லி வற்புறுத்தி, ஒரு நட்சத்திர விடுதிக்கு அழைத்து வந்திருந்தான் அசோக்.


அவர்கள் உணவு உண்டு முடித்ததும், அவன் அருந்தியிருந்த மதுவின் போதையைத் தாண்டிய ஒரு போதை கண்களில் வழிய, "உன் பர்த்டே அன்னைக்கு நீ இங்க இருந்தா நான் இந்த கிஃப்ட்டை அன்னைக்கே உனகிட்ட கொடுத்திருப்பேன். பட் நீ ஊருக்குப் போறதால, இப்பவே கொடுக்கறேன்" என்று சொன்னவன், அவளுடைய கையைப் பிடிக்க, அதில் அவள் அதிர்ந்த நொடி, ஒரு அழகிய மோதிரத்தை அவளுடைய விரலில் அணிவித்து "அட்வான்ஸ்ட் ஹாப்பி பர்த்டே ஏஞ்சல்! வித் லோட்ஸ் ஆஃப் லவ்" என்று அவளை நெகிழ வைக்கும் விதமாகச் சொல்லவும், பயத்தில் உடல் நடுங்கிப்போனாள் சுபா.


அவளுடைய நடுக்கத்தைக் கண்களில் குறித்துக்கொண்டவன், "நீ ஊருக்கு போயிட்டு வந்து எனக்குப் பதில் சொல்லு போதும்! உனக்காக நான் காத்துட்டு இருப்பேன்!" என்று ஏக்கமாகச் சொல்லி முடித்தான்.


எப்படி அவளுடைய விடுதிக்கு வந்தாள், எப்படி ஊருக்கு வந்து சேர்ந்தாள் என்பதுகூட புரியாத மன நிலையில் வீட்டில் இருந்தாள் சுபா.


இந்த முறை ஈஸ்வர் ஊருக்கு வரும்பொழுது, கருணாவும் அவனுடன் வந்திருந்தான். ஏதாவது குடும்ப விழா தவிர, வேறெதற்கும் அங்கே வராதவன், அதிசயிக்கும் விதமாக வந்திருக்கவும் அனைவருக்குமே ஆச்சரியத்தைக் கொடுத்தது. ஈஸ்வருக்குமே இது புதிதாக இருந்தது. ஆனால் அதைப் பற்றி அதிகம் ஆராயாமல் விட்டுவிட்டான்.


ஈஸ்வர், சுபானு இருவரது பிறந்தநாள் அன்று குலதெய்வ கோவிலுக்குச் சென்று வந்து பெரியவர்களிடம் ஆசிப் பெற்று அதன் பின் வீட்டில் சாருமதி தடபுடலாகத் தயாரித்திருந்த உணவை உண்டு அந்த நாளைச் சிறப்பாகக் கொண்டாடினர்.


பிறந்தநாளுக்கென ஒரு புடவையை ஈஸ்வர் பரிசாகக் கொடுக்க, மகிழ்ச்சியாக இருந்தது சுபாவிற்கு. ஜீவிதாவிற்கும் லெஹெங்கா ஒன்றை வாங்கி வந்திருந்தான்.


அப்பொழுதுதான், தான் அவனுக்குப் பரிசாக எதையுமே வாங்கி வரவில்லை என்பதையே உணர்ந்தாள் சுபா. முதன் முதலாக அவள் மனதில் தான் தவறு செய்கிறோமோ என்ற எண்ணம் தோன்றி, அவளைக் குற்ற உணர்ச்சியில் தள்ளியது.


அங்கே வந்தது முதலே, கருணாகரனின் பார்வை, சுபாவையே தொடர்ந்துகொண்டிருக்க அவள் இருந்த குழப்பமான மனநிலையில் அதைக் உணரவில்லை. ஆனால் அதைக் கவனித்த ஈஸ்வர்தான் குழம்பிப்போனான். அவனால் நண்பனிடம் கோபப்படவும் இயலவில்லை. அதே நேரம், அதை அப்படியே விட்டுவிடவும் மனமில்லை.


சுபா விடுப்பு முடிந்து பெங்களூரு சென்றுவிட, சென்னை வந்தனர் ஈஸ்வர், கருணாகரன் இருவரும்.


அடுத்த நாள் உடற்பயிற்சி செய்யும் சமயத்தில் ஈஸ்வர் கருணாகரனிடம் நேரடியாக சுபா குறித்துக் கேட்டுவிட, "ஆமான்டா மச்சான்! எனக்கு உன் தங்கையைப் பிடிச்சிருக்கு! அவ எனக்கு மனைவியா வந்தா, நான் ரொம்ப சந்தோஷப் படுவேன்!" என்று கருணாவும் வெளிப்படையாக ஒப்புக்கொண்டான்.


அவனுடைய குடும்ப அந்தஸ்தை எண்ணி அதிர்ந்து, "நீ என்ன இவ்வளவு ஈஸியா சொல்லிட்ட! நிம்மி அத்தை வேணா இதுக்கு சம்மதிக்கலாம். உங்க பெரியப்பா ஒத்துப்பாரா? இதெல்லாம் சரியா வராது! விட்டுடு!" என்று ஈஸ்வர் சொல்லிக்கொண்டே போக,


அவனைக் கை நீட்டித் தடுத்து, "லூசாடா நீ! எங்க பெரியப்பாவைப் பத்தி எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசற! அவரு எப்பவுமே மனசுக்கு மரியாதை கொடுக்கறவர் தெரியுமா? அதுவும் நான் ஒண்ணைக் கேட்டா, கட்டாயம் மறுப்பு சொல்லவே மாட்டார்!" என ஆணித்தரமாகச் சொல்லிவிட்டு,


"உன் மனசுக்கு சரின்னு பட்டா, நெக்ஸ்ட் டைம் சுபா இங்க வரும்போது அவ என்ன நினைக்கறான்னு அவளோட விருப்பத்தைக் கேட்டு என்கிட்ட சொல்லு. அவளுக்கு முழு சம்மதம்கற பட்சத்துல நான் மாமா, பெரியப்பா ரெண்டு பேர் கிட்டயும் பேசி உங்க அப்பாகிட்ட பொண்ணு கேட்க சொல்றேன். ஒரு வேள அவளுக்கு விருப்பம் இல்லேன்னா என் வேலையைப் பார்த்துட்டுப் போயிட்டே இருக்கேன்! ஏன்னா எதுக்காகவும் ஏங்கிட்டு வாழ்க்கையை அழிச்சுக்கற ஆள் நான் இல்ல!" என்று சொல்லி முடித்தான் கருணா.


"நீ இவ்வளவு தூரம் சொல்லும்போது நான் என்ன சொல்ல போறேன்! ஓகே தான்டா மாப்ள!" என்று அவனை அணைத்துக்கொண்டான் ஈஸ்வர் எப்படியும் சுபா மறுப்பு சொல்ல மாட்டாள் என்ற நம்பிக்கையில்.


பெங்களூரு சென்ற அடுத்த தினமே, அலுவலகத்திலேயே அவளுடைய பதிலுக்காக அவளை நச்சரிக்கத் தொடங்கினான் அசோக். அவளுடைய தந்தையின் வார்த்தைகள் மனதில் தோன்றி அச்சத்தை ஏற்படுத்த, அதன் பின்விளைவுகளைப் பற்றி அறிந்தவளாக அவள் பலவாறாக மறுத்தும், பேசிப் பேசியே அவளைக் கரைத்தான்.


திடமான மனநிலை இல்லாத காரணத்தால் ஒரு சூழ்நிலையில் அவனது காதலை ஏற்றுக்கொண்டாள் சுபா. அதை சாதகமாக எடுத்துக்கொண்டவன், ஓரிரு மாதங்களிலேயே, ஒன்றாக வெளியில் செல்வது தவறில்லை, சாதாரண அணைப்புகள் தவறில்லை, முத்தங்களைப் பரிமாறிக்கொள்வதில் தவறில்லை, கொஞ்சமாக மது அருந்துவது கூட தவறில்லை என்ற நிலைக்கு அவளைக் கொண்டு வந்திருந்தான். அவளை அதற்கெல்லாம் பழக்கியும் இருந்தான்.


ஒரு நாள், நண்பர்களுடன் சென்ற பார்ட்டியில், வேறொரு பெண்களுடனான அவனுடைய அத்துமீறல்களைப் தற்செயலாகப் பார்க்க நேர்ந்து அதைப் பொறுக்கமுடியாமல் பாதியிலேயே வெளியேறியவள் அவளது அறைக்கு வந்து சேர்ந்திருந்தாள் சுபா.


நல்ல குடும்ப பின்னணியும், பாட்டியும் அன்னையும் சொல்லிச் சொல்லி இரத்தத்திலேயே ஊறிப்போயிருந்த ஒழுக்கமும் அவளுடைய அறிவைர்க் தட்டி எழுப்ப குற்ற உணர்ச்சியில் தவித்துதான் போனாள்.


அப்பொழுது அங்கே வந்த அவளுடைய டீம் தோழி சுஜாதா அவளுடைய நிலைப் புரிந்தாற்போன்று, "நீ நினைக்கிற அளவுக்கு, அந்த அசோக் ஒண்ணும் உன்னை உண்மையா லவ் பண்ணல! அவனுக்கு இதெல்லாம் ஒரு டைம் பாஸ். தெரிஞ்சே நிறைய பேர் அவனோட சுத்தறாங்க. ஆனா நீ அப்படி இல்ல. இதை நான் முன்னாலயே உன்கிட்ட சொல்லியிருக்கணும். ஆனா அவனுக்குத் தெரிஞ்சா, என்னோட அப்ரைசல்ல கையை வெச்சிடுவானோங்கற பயத்துலதான் சும்மா இருந்தேன்! இப்ப கூட என்னோட மனசு கேக்காமதான் சொல்லிட்டேன்! இனிமேலாவது கேர்ஃபுல்லா இரு!" என்று அவளை எச்சரிக்கும் விதமாகச் சொல்லி முடித்தாள்.


அதற்கு மேல் அங்கே இருக்கவே பிடிக்காமல், அவளுக்கு அளிக்கப்பட்டிருந்த ப்ராஜக்ட்டும் முடிந்திருந்த நிலையில், விடுப்பு எடுத்துக்கொண்டு அன்னையின் அரவணைப்பைத் தேடி ஊருக்கு வந்தாள் சுபா. இரு தினங்களில், அவளுடைய மனமும் சற்றுத் தெளிவடைந்தது போல்தானிருந்தது.


அவள் அங்கே வந்திருப்பதை அறிந்து, அவளிடம் பேசுவதற்காக சென்னையிலிருந்து அங்கே வந்த ஈஸ்வர், கருணாகரனின் விருப்பத்தைப் பற்றி அவளிடம் சொல்லி, அதற்கு அவளுடைய சம்மதத்தைக் கேட்கவும், தான் செய்த தவறுகளை எண்ணி மிகவும் மனம் வருந்திதான் போனாள் சுபா.


கருணாகரன் போன்ற ஒருவனை வேண்டாம் என்று சொல்லவும் மனம் வரவில்லை, அசோக்கிடம் எவ்வாறு விலகுவது என்பதும் புரியவில்லை சுபானுவுக்கு.


தொண்டையில் சிக்கியிருக்கும் கடந்த காலத்தின் கசப்புகளை விழுங்கவும், வேலையிலிருந்து விடுபடவும் வேறு கால அவகாசம் தேவைப்பட்டது. "எனக்கு ஒன் மந்த் டைம் வேணும் ஈஸ்வர். நான் யோசிச்சு சொல்றேன்!" என்று மட்டும் சொன்னாள் சகோதரனிடம்.


அவள் இருக்கும் சூழ்நிலை தெரியாமல், அவள் எப்படியும் சம்மதம் சொல்லுவாள் என்ற நிம்மதியுடன் சென்னைக்குப் போனான் ஈஸ்வர்.


சுபா சொன்னதுபோலவே, ஒரு மாதம் கடந்து அங்கே திரும்ப வந்தவள், ஈஸ்வரைக் கைப்பேசியில் அழைத்து, கருணாகரனுடனான அவளுடைய திருமணத்திற்குச் சம்மதம் தெரிவித்தாள். அவளுடைய குரல் முழுமையான மகிழ்ச்சியைப் பிரதிபலித்தது.


நண்பனுக்கே சகோதரியைத் திருமணம் செய்து கொடுப்பதால், காலம் முழுதும் அவர்களுடைய பிணைப்பு அப்படியே இருக்கும் என்ற மகிழ்ச்சியில் மனம் நிறைந்திருந்த ஈஸ்வர் அவளது சம்மதத்தை கருணாகரனுக்குத் தெரியப்படுத்தினான்.


ஆனால் அந்தத் திருமணம் நடக்காமல், அவனுடைய நண்பனின் வெறுப்புக்கு அவன் ஆளாகப்போவதையும், ஒட்டுமொத்தமாய் அவனே அவனுடைய சகோதரியை வெறுத்து ஒதுக்கப்போவதையும் அப்பொழுது ஈஸ்வர் அறிந்திருக்கவில்லை பாவம்.
Comentários

Avaliado com 0 de 5 estrelas.
Ainda sem avaliações

Adicione uma avaliação
© KPN NOVELS COPY PROTECT
bottom of page