top of page

Anbenum Idhazhgal Malarattume! 22

Updated: Apr 8, 2023

அணிமா-22


அப்பொழுது சரியாக ஜெய்யுடைய கைபேசி ஒலிக்க பால்கனியில் சென்று பேசிவிட்டு வந்தவன், "சாரி மலர்! ஒரு எமர்ஜன்சி, நான் உடனே கிளம்பனும். நீ சுபா அக்காவ எப்படி மீட் பன்னன்னு தெரிஞ்சுக்கற க்யூரியாசிட்டிலதான் வந்தேன். அது தெரிஞ்சு போச்சு. மத்ததெல்லாம் லீஷரா ஒரு நாள் கேட்டுத் தெரிஞ்சுக்கறேன்… நீ கன்டினியூ பண்ணு” என்று சொல்லிவிட்டுக் கிளம்பிப்போனான் ஜெய்.


அதே நேரம் கதவைத் திறந்துகொண்டு செங்கமலம் பாட்டி பின் தொடர உறக்கம் கலையாமல் தள்ளாடியபடி உள்ளே நுழைந்த ஜீவன் மலரிடம் வந்து ஒட்டிக்கொண்டு, "தேனே பாட்டு பாடு ஹனி!" என்றான் பிடிவாதம் மேலோங்க.


"ஜீவன்! நீ தூங்கு அந்தப் பாட்ட நான் அப்பறமா பாடறேன்!" என்று மலர் சொல்லவும்,


"ஜீவன் சொல்லாத ஹனி!" என்றான் அழுகையினுடே.


"சரீஈஈ, சொல்லல... பாய் ஃபிரென்ட்! ஓகேவா! இப்ப தூங்கு" என்று சொல்லி மலர் அவனைக் கட்டிலில் படுக்க வைக்க, வாயில் விரலை வைத்துக்கொண்டு "பாடு ஹனி!" என்றான் ஜீவன் பிடிவாதத்தை விடாமல்.


அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த செங்கமலம் பாட்டி ஈஸ்வர் அருகில் போய் உட்கார்ந்துகொள்ள, பாடத்தொடங்கினாள் மலர்.


தேனே தென்பாண்டி மீனே


இசை தேனே... இசைத்தேனே!
பால் கொடுத்த நெஞ்சிலே


ஈரம் இன்னும் காயலே...


பால் மணத்தைப் பார்க்கிறேன்


பிள்ளை உந்தன் வாயிலே...
பாதை கொஞ்சம் மாறிப் போனால்


பாசம் விட்டுப் போகுமா?


தாழம்பூவை தூர வைத்தல்


வாசம் விட்டு போகுமா?
ராஜா நீ தான்


நான் எடுத்த முத்துப் பிள்ளை!
அன்று மலருடைய மென் குரலில் அந்தப் பாடலைக் கேட்கும் பொழுது அது அவனுக்குச் சொல்லாத செய்தியெல்லாம் இன்று மொத்தமாக ஈஸ்வரிடம் சொன்னது அந்தப் பாடல்.


அது ஜீவனுக்கென்றே மலர் பாடிய பாடல் என்பது தெளிவாகப் புரிந்தது.


குழந்தைகள் படிக்கும் 'ஹான்செல் அண்ட் கிரேட்டல்' கதைப் புத்தகத்தில் மலர் அவனுடைய 'ஆட்டோக்ராப்' வாங்கியதன் காரணம் புரிந்தது.


‘இன்னும் கொஞ்ச நாள்ல, தாய்மாமன் முறையெல்லாம் செய்ய வேண்டியிருக்கும். தயாரா இருங்க!’


‘உங்க மருமகனை நீங்க நேர்ல பார்க்கும்போது எப்படி ஃபீல் பண்ணுவீங்கன்னு பார்க்க இப்பவே வெயிட் பண்ண ஆரம்பிச்சுட்டேன்னா பார்த்துக்கோங்க!’


‘அது ஜீவன்னு ஒண்ணு இருக்கு… எப்பவுமே அது என்னைத் தொல்லை பண்ணிட்டே இருக்கும். அவனை வெறுப்பேத்ததான்’


மலர் கடத்தப்பட்டதற்கு முந்தைய தினம் அந்த நட்சத்திர விடுதியில், குரலில் அத்தனை கொஞ்சலும் குழைவுமாக மலர் பேசிக்கொண்டிருந்தது என ஜீவனைக் குறிப்பிடாமல் அவனை மனதில் வைத்து மலர் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் ஈஸ்வர் மனதில் வந்துபோனது.


தனக்காக தன்னைச் சேர்ந்தவர்களுக்காக அவள் செய்த ஒவ்வொரு செயலிலும் அவளது காதல் மேலோங்கித் தெரிய அவளிடம் மேலும் மேலும் மதி மயங்கிதான் போனான் ஈஸ்வர்.


அவர்களையே புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்த செங்கமலம் பாட்டி, "ஈஸ்வரா உங்க அம்மாவ போல உன்னைப் பத்தி யோசிக்கிற நல்ல பெண் உனக்கு கிடைச்சிருக்கா. அவளைப் பத்திரமா பார்த்துக்கோ!" என்று நெகிழ்ந்துவிட்டு அங்கிருந்து சென்றார்.


எண்ண ஓட்டத்திலிருந்தவன், அப்பொழுதுதான் அவள் பாடி முடித்திருந்ததையே உணர்ந்தான் ஈஸ்வர்.


ஏற்கனவே அரைகுறை உறக்கத்திலிருந்த ஜீவன் ஆழ்ந்த தூக்கத்திற்குச் சென்றிருக்க, 'வெளியில் போய் பேசலாம்' என ஜாடை செய்துவிட்டு அங்கிருந்து சென்றான்.


ஜீவனை நேராகப் படுக்க வைத்து அவனுக்குப் போர்வையைப் போர்த்திவிட்டு, அவன் விரல் சப்புவதற்குத் துணையாகப் பற்றியிருந்த அவளது துப்பட்டாவை அவனுக்கு அணைவாக வைத்துவிட்டு மலர் ஈஸ்வரைத் தேடி வர அவர்களுடைய அறையை ஒட்டிய பால்கனியில் போடப்பட்டிருந்த சோஃபாவில், கண்களை மூடி படுத்திருந்தான் ஈஸ்வர்.


சிந்தனையுடன் அவனைப் பார்த்துக்கொண்டே மலர் அவனுக்கு அருகில் வந்து உட்காரவும், கணைகளைத் திறந்து அவளைப் பார்த்தவன், "சுபா இப்படி மொத்தமா உருக்குலைஞ்சு போற அளவுக்கு என்ன நடந்தது மலர்? இவ, அவனை காதலிச்சுதான கல்யாணம் செஞ்சிட்டுப் போனா? அப்பறம் ஏன் அவளுக்கு இந்த நிலை? சுபா விவரம் இல்லாத, இரண்டுங்கெட்டான் பொண்ணெல்லாம் இல்ல! ஒரு இன்பாக்சுவேஷன்ல போய் மாட்டிட்டு இருப்பான்னு என்னால நினைக்க முடியல?" என்று வேதனையுடன் கேட்டான் ஈஸ்வர்.


"ப்ச்! காதல் கல்யாணமா? அவங்க ரெண்டு பேருக்குள்ளயும் காதலும் இல்ல, அவங்களுக்கு நடந்ததுக்கு பேரு கல்யாணமும் இல்ல" என்றவள் தொடர்ந்து, "ஃபர்ஸ்ட் டைம் அவங்கள மீட் பண்ண அன்னைக்கு, சுபா அண்ணிக்கும், அந்த அசோக்குக்கும், ஏதோ மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்ன்னுதான், நானும் நினைச்சேன்! ஆனா அப்படியில்ல, இது வேறன்னு பிறகுதான் தெரிஞ்சது!" என்றவள் தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தாள்.


மேலோட்டமாகப் பார்க்கும்பொழுது, ஏதும் தவறாகத் தோன்றவில்லை என்றாலும், ஜீவனால், சுபாவுடன் கொஞ்சம் நெருங்கிப் பழகத் தொடங்கிய பிறகு, நிறைய கேள்விகள் எழுந்தன மலருக்குள்.


சாதாரணமாக குழந்தைகள் சொல்லும் 'ரைம்ஸ்'ஸை கூட அவனுக்கு சொல்லிக் கொடுத்திருக்கவில்லை சுபா.


மலர் அவனுடன் பழகத்தொடங்கிய பிறகு, அவள் வீட்டிலிருக்கும் நேரமெல்லாம், மலருடனேயே இருக்க ஆரம்பித்தான் ஜீவன்.


எப்பொழுதுமே ஏதாவது பாடலை முணுமுணுத்துக்கொண்டே வேலைகளைச் செய்யும் பழக்கம் அவளுக்கு இருந்ததால், ஜீவன் அவளுடன் இருக்கும் சமயம் எல்லாம், குழந்தைகளுக்கான பாடல்களை மலர் பாடவும், இயல்பிலேயே கற்பூரம் போன்ற புத்தியைக் கொண்டிருந்ததால், சுலபமாக அவற்றைக் கற்றுக்கொண்டு, அவளுடன் சேர்ந்து பாட ஆரம்பித்தான்.


அப்படியே பல்வேறு கதைகளையும் அவனுக்குச் சொல்லத் தொடங்கினாள் மலர். அப்பொழுதுதான் குடும்ப உறவுமுறைகள் கூட அவனுக்கு எதுவுமே சரிவரத் தெரிந்திருக்கவில்லை என்பதும் அவளுக்குப் புரிந்தது.


பொதுவாக பிள்ளைகளுக்கு இரண்டு வயதானாலே, பொறுமை இழந்து 'ப்ரீ ஸ்கூல்'லில் அவர்களைச் சேர்த்துவிடுகின்றனர். ஆனால் ஜீவனுக்கு ஐந்து வயது நிரம்பியிருந்தும், அவன் வீட்டிலேயே இருப்பது புரியவும், அவளுடைய மனதிற்கு நெருடலாக இருந்தது.


அவள் டால்லஸ் வந்து, முழுதாக ஒரு மாதம் கடந்திருந்த நிலையில், ஒரு நாள் முன்னிரவு நேரத்தில், வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பியிருந்தாள் மலர்.


அப்பொழுது பதட்டத்துடன் அழுகையில் கண்கள் சிவந்திருக்க, மலரைத் தேடி அவர்களுடைய வீட்டிற்கு வந்தாள் சுபா.


அவளுடைய அந்த நிலை கண்டு அதிர்ந்த மலர், அவளிடம் விசாரிக்க, ஜீவன் பூங்காவில் விளையாடிக்கொண்டிருக்கும் பொழுது, கீழே விழுந்து, அவனது கையில் அடிபட்டிருக்க, முதலில் அது பெரியதாகத் தெரியவில்லை. எனவே வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டாள்.


ஆனால் நேரம் செல்லச்செல்ல, அவனது கை வீங்கி, வலியில் அவன் அழுது துடிக்கவும்தான் நிலைமையின் தீவிரம் உறைத்தது அவளுக்கு.


அவனை மருத்துவமனை அழைத்துச் செல்ல, துணை வேண்டி மலரைத் தேடிவந்திருந்தாள். அதைவிட, மேலும் அவள் சொன்ன தகவல்தான் மலரைக் கோபத்தின் உச்சிக்கே கொண்டு சென்றது.


மருத்துவமனைச் செல்ல, செலவிற்கே அவளிடம் போதுமான பணம் இல்லை என்பதும், நீண்ட நேரமாக அவள் அசோக்கைத் தொடர்பு கொள்ள முயல, அவளுடைய அழைப்பை அவன் ஏற்கவே இல்லை என்பதும்தான் அது.


அந்த நேரம் அவளுடைய கோபத்தையும், ஆற்றாமையையும் வெளிப்படுத்த விரும்பாமல், சுபாவுடன் ஜீவனை அழைத்துக்கொண்டு, மருத்துவனைச் சென்ற மலர், ஜீவனுக்கு ஏற்பட்டிருந்த எலும்பு முறிவுக்குக் கட்டுப்போட்டு, மருத்துவம் செய்து, அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்தாள்.


அசோக் வேலை செய்யும் நிறுவனத்தின்மூலம் எடுக்கப்பட்டிருந்த மருத்துவ காப்பீடு இருந்ததால், மருத்துவச் செலவு ஓரளவிற்குக் கட்டுக்குள் வந்திருந்தது. ஆனாலும் போக்குவரத்து போன்ற மற்ற செலவுகளுக்காகக் கையிலிருந்து சில டாலர்களைக் கொடுத்திருந்தாள் மலர்.


அந்தச் சூழ்நிலையைக் கடப்பதற்குள், மகனைவிட அதிகம் களைத்துப்போயிருந்த சுபாவைப் பார்க்கவும் பாவமாகதான் இருந்தது மலருக்கு.


அடுத்து வந்த மூன்று தினங்கள், வாரத்தின் வேலை நாட்கள் என்பதினால், காலை மாலை என சில நிமிடங்கள் ஜீவனைச் சென்று பார்ப்பதுடன் சரி, மேற்கொண்டு எதுவும் பேசவில்லை மலர்.


சனிக்கிழமையன்று, வழக்கம்போல அவளது தோழர்கள் அனைவரும் ஊரைச் சுற்றிப்பார்க்கக் கிளம்பிவிட, ஜீவனுடன் இருப்பதற்காகவே எங்கேயும் செல்லாமல், அவனைத் தேடி அவனுடைய வீட்டிற்கு வந்தாள்.


வெறும் கஞ்சியை மட்டும் காய்ச்சி மகனுக்குக் கொடுத்துவிட்டு, அங்கே போடப்பட்டிருந்த சோஃபாவில், தொய்ந்து போய் படுத்திருந்தாள் சுபா.


தொலைக்காட்சியில் ஏதோ கார்ட்டூன் படத்தில் மூழ்கியிருந்த ஜீவன், மலரைக் கண்டதும் அவளிடம் ஓடிவர, கட்டுப் போடப்பட்டிருந்த வலது கையைப் பார்த்துக்கொண்டே, இடது கையால் அவளது காலைக் கட்டிக்கொண்டான்.


மகன் இந்த நிலையில் இருக்கும்பொழுது கூட அசோக் அங்கே வந்ததற்கான அறிகுறியே இல்லை. இருவரையும் பார்க்க, வேதனையாக இருந்தது.


"அக்கா, நீங்க இன்னும் சாப்பிடலையா?" என்று மலர் சுபாவிடம் கேட்க, முந்திக்கொண்டு அவளது மகன்தான் பதில் கொடுத்தான்.


"இல்ல ஹனீமா!" என்றவன், விரல் விட்டு எண்ணி,


"டூ டேசா அம்மா குக்கிங் செய்யல! பிரட் சாப்பிட்டாங்க. எனக்கு மட்டும் நூடுல்ஸ்!" என்றான் அன்னையைக் குற்றம் சாட்டும் விதமாக.


"ஏன் சுபா அக்கா இப்படி இருக்கீங்க? உங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா, இவனை யாரு கவனிப்பாங்க" என்று மலர் கேட்க, என்ன பதில் சொல்வது என்று விளங்காமல், பரிதாபமாக அவளை ஒரு பார்வை பார்த்து வைத்தாள் சுபா.


அவளுடைய மனதில் பெருகியிருக்கும் துன்பம்தான் அவளுடைய தொய்விற்குக் காரணம் என்பது புரியவும், அசோக்கை நினைத்து மனதில் எழுந்த சலிப்பை வெளிக்காட்டாமல்,


"சரி, இங்க இருந்தது போதும், வாங்க எங்க வீட்டுக்குப் போகலாம்" என்று சொல்லிவிட்டு அவளுடைய அனுமதியைக்கூட எதிர்பார்க்காமல், ஜீவனைத் தூக்கிக்கொண்டு, அவர்களுடைய வீட்டிற்குப் போனாள் மலர். வேறு வழி தெரியாமல், வீட்டைப் பூட்டிக்கொண்டு அவளைப் பின்தொடர்ந்து வந்தாள் சுபா.


வீட்டைத் திறந்து, நேராக சமையற்கட்டிற்குள் புகுந்தவள், ஜீவனை அங்கே இருக்கும் மேடையில் உட்கார வைத்துவிட்டு, "நீ சொல்லு பாய் ஃப்ரெண்ட், உனக்கு என்ன டிஷ் பிடிக்கும்? நாம ரெண்டு பேரும் சேர்ந்து செய்யலாம்!" என்று மலர் சொல்ல, அதில் குதூகலமானவன், சாம்பார் சாதம் அண்ட் பொட்டேட்டோ ஃப்ரை பண்ணலாமா ஹனீமா?" என்றான் ஆவலுடன்.


அப்பொழுது அங்கே வந்த சுபா, "பரவாயில்லைங்க, நானே செஞ்சு கொடுத்துக்கறேன், உங்களுக்கு ஏன் வீண் சிரமம்" என்று சொல்ல,


அரிசியைக் களைந்து குக்கரில் வைத்தவாறே, "இதுல என்ன சிரமம் இருக்குக்கா. சிம்பிள் மேட்டர்!" என்று சொல்லிவிட்டு, சமையல் செய்யத்தொடங்கினாள் மலர்.


உதவி செய்ய வந்த சுபாவை, "நீங்க ரெஸ்ட் எடுங்க, பரவாயில்ல" என்று தவிர்த்தவள், கூடவே ஜீவனைச் சேர்த்துக்கொண்டு, அவன் கேட்ட உணவைச் செய்துமுடித்தாள்.


ஜீவன் அதை ரசித்து ருசித்துச் சாப்பிட, சுபாவை வற்புறுத்திச் சாப்பிடவைத்தாள்.


ஜீவனுக்காக அதிக காரம் சேர்க்காமல் சமைத்திருந்தாள். ஆனாலும் சுவையாக இருந்தது.


உணவின் சுவையை விட மலருடைய அன்பும், கரிசனமும் மனதைக் கரைக்க, சுபாவின் கண்கள் பனித்தது. அதையும் கவனித்துக்கொண்டுதான் இருந்தாள் மலர்.


அவளுக்கே உண்டான குண இயல்பில், சுபாவிற்கு, அதைவிட முக்கியமாக ஜீவனுக்கு ஏதாவது நன்மை செய்தே தீர வேண்டும் என்ற எண்ணம், அந்த நொடி மலருடைய மனதில் ஆழமாகத் தோன்றியது.


உண்டு முடித்து, சிறிது நேரம் மலருடன் விளையாடிக்கொண்டிருந்த ஜீவன் களைத்துப்போய் உறங்கிவிட, அவனைத் தன்னுடைய படுக்கையில் படுக்க வைத்துவிட்டு அருகில் உட்கார்ந்திருந்த சுபாவிடம், "நீங்க தப்பா நினைக்கலேன்னா" என்று தொடங்கியவள்,


சற்று நிறுத்தி, "தப்பா நினைச்சாலும் பரவாயில்ல, நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்" என்று அவளுடைய பதிலைக் கூட எதிர்பார்க்காமல்,


"நீங்க எல்லாரை மாதிரியும் ஒரு நார்மல் லைஃப் வாழலைன்னு உங்களைப் பார்க்கும்போதே தெரியுது! உங்கப் பிரச்சினை என்னனு சொன்னீங்கன்னா, என்னால உதவி செய்ய முடியும்ங்கற நம்பிக்கை எனக்கு இருக்கு. அந்த நம்பிக்கை உங்களுக்கு இருந்தா, எங்கிட்ட தயங்காம சொல்லுங்க!" என்று சொல்லி முடிக்க,


மலருடைய கேள்வியில் உடைந்தவள், அழுகையில் தொண்டை அடைக்க, "இது என்னோட திமிரால, நானே தேடிகிட்ட வாழ்க்கை! இதுல யாராலயும் எனக்கு உதவி செய்ய முடியாது! செய்யவும் வேண்டாம்!


என்னோட குடும்பத்துல எல்லாரோட சந்தோஷம், நிம்மதி, முக்கியமா என் கூடப் பிறந்தவன் எங்கிட்ட வெச்சிருந்த நம்பிக்கை எல்லாத்தையும் கொன்னுட்டு, நான் வந்ததுக்கு, இந்த துன்பம் எனக்குத் தேவைதான். அந்தப் பாவத்துக்கான தண்டனையா இதைத் தெரிஞ்சேதான் அனுபவிக்கிறேன்!" என்று துயரத்துடன் சொன்னாள் சுபா.


அவளுடைய கூற்றில், சுறுசுறுவென்று காரம் ஏற, "நீங்க என்ன தப்பு பண்ணீங்கன்னு எனக்குத் தெரியாது. அதுக்கு நீங்க சொன்ன மாதிரி நீங்க வேணா தண்டனை அனுபவிக்கலாம்" என்ற மலர்,


ஜீவனைச் சுட்டிக் காண்பித்து, "இந்தப் பச்சை மண்ணு என்ன பாவம் செஞ்சுது? இவனை ஏன் தண்டிக்கிறீங்க?" என்று கேட்க,


அவளது வார்த்தையில் பொதிந்திருந்த நியாயம் மனதைச் சுட, "எனக்கு பிள்ளையாப் பிறந்ததுதான் அவன் செஞ்ச பாவம்!" என்று சொல்லிவிட்டு வாயை மூடிக்கொண்டு அழுத்தவள், சில நிமிடங்களில், தன்னை நிலைப்படுத்திக்கொண்டு, அவளுடைய குடும்பத்தைப் பற்றிச் சொல்லத்தொடங்கினாள் சுபா.


"திருவண்ணாமலை மாவட்டத்துல இருக்கற 'அளத்துரை' கிராமம்தான் எங்க ஊர். அப்பா ஒரு குறு விவசாயி. ரொம்ப இன்னசண்ட்டான அம்மா. அன்பை மட்டுமே காண்பிக்க தெரிஞ்ச பாட்டி. க்யூட்டா, அழகா ஒரு குட்டித் தங்கச்சி ஜீவிதா.


எல்லாருக்கும் மேல, கள்ளம் கபடம் இல்லாத, எதார்த்தமான, கொஞ்சம் அதிகமாகவே முரட்டுத்தனம் நிறைஞ்ச என்னோட ட்வின் பிரதர் ஜெகதீஸ்வரன்! செம்புகூட கலக்காத சுத்த தங்கம் அவன்" என்று சகோதரனைப் பற்றி அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவளுடைய முகம் பெருமையில் மின்னியது.Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page