top of page

Anbenum Idhazhgal malarattume! 21

அணிமா-21


வியப்பு மேலிட "ஹேய்! ஸ்டாப்! ஸ்டாப்! நீ அப்பவே ஈஸ்வர் அண்ணாவை சைட் அடிச்சியா; நான் அதைக் கவனிக்கவே இல்லையே!" என்றான் ஜெய்.


ஈஸ்வருக்குமே அவள் சொன்ன செய்தி ஆச்சரியத்தைக் கொடுக்க அதைத் தொடர்ந்து கேட்கும் ஆர்வம் கூடியது.


ஜெய்யின் கேள்விக்கு "நீ என்னை எங்க கவனிச்ச! நீயும்தானே அவரைப் பார்த்து ஜெர்க் ஆகி ரன்னிங் கமெண்ட்ரிலாம் கொடுத்துட்டு இருந்த!" என்று சொன்ன மலர், "இப்படி நடுவில பேசினா எனக்குச் சொல்ல வராது ஸோ ப்ளீஸ்!" என்றவள் வாயை 'ஜிப்' போடுவதுபோல ஜாடை செய்ய, "சரி! சரி! இனிமேல் பேசல யூ கன்டினியூ!" என்று அவன் சொல்லவும் தொடர்ந்தாள் மலர்.


ஜெய் ஈஸ்வரின் தோற்றத்தைப் புகழ்ந்து கொண்டிருக்க, "என்ன அவர் ஃபிலிம் ஆக்டரா? நான் யாரோ பிசினஸ் மேன்னு இல்ல நினைச்சேன்" என்ற மலர், "எந்த படத்துல நடிச்சிருக்கார்?" என்று கேட்க,


"இப்ப வந்து செம்ம போடு போட்டு இருக்கே "ப்ளூ டூத்! னு ஒரு சைன்ஸ் ஃபிக்ஷன் படம் அதுலதான்!" என்றான் ஜெய்.


"வாட்! அதுல அந்தத் தேவாங்கு அனுபவ்தானே ஹீரோ! அதனாலதான் அந்தப் படத்தை பார்க்கணும்னு கூட எனக்கு தோணல!" என்றாள் மலர் சலிப்புடன்.


"ஹா! ஹா! நீதான் அவனை தேவாங்குன்னு சொல்ற அவனுக்குனு ஒரு பெரிய மாஸ் கூட்டமே இருக்கு" என்று சொன்ன ஜெய் தொடர்ந்து, "இவர் அந்த படத்தோட வில்லன் பேரு ஜெகதீஸ்வரன்!" என்று முடித்தான்.



"ஜக..தீஈஈ..ஸ்வரன்!" ஒருமுறை சொல்லிப்பார்த்தவள், "பார்க்க இவ்ளோ கெத்தா இருக்காரு; பிறகு ஏன் வில்லனா நடிக்கணும்? ஹீரோவாவே நடிக்கலாமே!" என்று அவள் மனதில் எழுந்த சந்தேகத்தை மலர் கேட்கவும்,


"வேணா அவர்கிட்டயே கேளேன்; நீ போகப்போற ப்ளைட்லதான் ட்ராவல் பண்ணப்போறார்னு நினைக்கிறேன்; எப்படியும் வெய்டிங் ரூம்லதான் இருப்பார்!" என்றான் ஜெய் நக்கல் கலந்த குரலில்.


அவன் சொன்ன செய்தியில் அவளையும் அறியாமல் குதூகலம் மேலிட, "ஓஹ்! நான் போற ப்ளைட்லதான் வருவாரா" என்றவளின் மனம் 'எப்படியும் பிசினஸ் கிளாஸ்லதான் ட்ராவல் பண்ணுவார் இல்ல?' என்று ஏமாற்றத்துடன் கேள்வி எழுப்பியது.


அதற்குள் லாவண்யா அவள் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் சஞ்சீவன் அனிதா ரஞ்சனி என அவளுடன் பயணம் செய்யவிருக்கும் நால்வரும் அங்கே வந்துவிட ஜெய்யிடம் விடைபெற்று அங்கிருந்து உள்ளே சென்றாள் மலர்.


மலர் நினைத்தது போல் இன்றி அவர்கள் பயணம் செய்யும் 'எகானமி கிளாஸ்' பகுதியில்தான் உட்கார்ந்திருந்தான் ஈஸ்வர் ஓய்வாகக் கண்களை மூடியவாறு.


அவன் உட்கார்ந்திருந்த இருக்கைக்கு எதிர்புறமாக ஒரு வரிசைக்குப் பின்னால் இருந்தது மலருக்கான இருக்கை. அவளுக்கு அருகில் ரஞ்சனி உட்கார்ந்திருந்தாள்.


எதோ ஒரு புதுவிதமான உணர்வு மேலிட அவனை நோக்கிச் சென்ற பார்வையை விலக்கத் தோன்றாமல் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் மலர்.


அவளுடைய இயல்பிற்கு மாறான இந்தச் செய்கையில் தோழியைக் கண்டு அதிசயித்த ரஞ்சனி, "என்ன மலர்! உன் சிஸ்டம்ல எதாவது எர்ரர் ஆகிப்போச்சா? அந்த வில்லனை இந்த லுக்கு விடுற?" என்று கிண்டலாக கேட்கவும்தான் தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதையே உணர்ந்த மலர் பார்வையை மாற்றினாள்.


பொதுவான அறிவிப்புக்களைத் தொடர்ந்து விமானம் பறக்கத்தொடங்கி சில நிமிடங்கள் கடந்திருந்தது. விமான பணிப்பெண்கள் மட்டும் சுறுசுறுப்பாய் இயங்கிக்கொண்டிருக்க மற்ற பயணிகள் அனைவரும் சூழ்நிலைக்குப் பொருந்தியிருந்தனர்.


கண்களை உறக்கம் தழுவ அதன் பிடிக்குள் மெள்ள மெள்ள சென்றுகொண்டிருந்தாள் மலர். அப்பொழுது அங்கே குடிகொண்டிருந்த அமைதியைக் கிழித்துக்கொண்டு வந்தது பிறந்து வெகு சில மாதங்களே ஆகியிருந்த குழந்தையின் அழுகை.


அவளுக்கு நேர் புறமாக இருந்த இருக்கையில் தனியாகக் கைக்குழந்தையுடன் பயணிக்கும் வடகத்தியவர் போன்று தோற்றம் அளிக்கும் இளம் பெண் அந்தக் குழந்தையின் அழுகையை நிறுத்த பலவாறு போராடிக்கொண்டிருக்க குழந்தையின் அழுகை மேலும் அதிகரித்ததே தவிர குறையவேயில்லை.


அவளுக்கு அருகில் உட்கார்ந்திருந்த முதிய பெண்மணி ஒருவர் முயன்று பார்த்தும் ஏதும் மற்றம் இல்லை.


அந்தச் சூழ்நிலையில், அந்த இரைச்சல் பலரது முகத்தையும் சுளிக்க வைத்துக்கொண்டிருந்தது. விமான பணிப்பெண் வேறு குழந்தையின் அழுகையை நிறுத்துமாறு அந்தப் பெண்ணிடம் பணிவுடன் சொல்லிவிட்டுப் போனார்!


அந்தப் பெண்ணை பார்க்கவே பரிதாபமாக இருந்தது மலருக்கு


மிகவும் சிறு குழந்தைகளைத் தூக்கி பழக்கமில்லாத காரணத்தால் என்ன செய்வது என்று முதலில் தயங்கியவள் பின்பு முயன்று பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் இருக்கையை விட்டு எழுந்தாள் மலர்.</