Anbenum Idhazhgal Malarattume! 20*
அணிமா 20
மலர் ஈஸ்வருடைய மார்பினில் முகத்தைப் புதைத்துக்கொள்ளவும், வலியில்தான் அப்படிச் செய்கிறாளோ என்ற எண்ணம் தோன்ற, "என்ன ஆச்சு மலர் தலை ரொம்ப வலிக்குதா ரொம்ப முடியலன்னா பெயின் கில்லர் போட்டுக்கறயா!" என்று அக்கறையுடன் கேட்டான் ஈஸ்வர் மென்மையான குரலில்.
"ப்ச் வலி தலையில இல்ல மனசுல! அதுக்கு பெயின் கில்லரெல்லாம் கிடையாது நம்ம சொசைட்டி போயிட்டு இருக்கற நிலைமையைப் பார்த்தால் நானே கில்லரா மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!" என்றாள் மலர் குழந்தைகள் கடத்தப்படுவதின் பின்னணியை குறித்து ஜெய் சொன்ன தகவல்கள் ஏற்படுத்திய தாக்கத்தில்.
மலர் சொன்ன விதத்தில், 'இன்றைக்கு ஒரே நாளில், இருக்கறவங்க எல்லாரையம் கொலையா கொன்னுட்டு பேசுறா பாரு பேச்சு!' என்ற எண்ணம் தோன்றவும், அவனுக்குச் சிரிப்பு வந்துவிட, நக்கல் கலந்த குரலில்,
"நல்ல தாட் அப்படி எதாவது ஐடியா வந்தால் என்னை உங்க அசிஸ்டண்டா சேர்த்துக்கோங்க கில்லர் குருவே! தனியா போய் மண்டைய உடைச்சுக்காதீங்க!" என்றான் ஈஸ்வர்.
அதற்கு அவனை முறைக்க முயன்று தோற்றவள், "அப்படியே செய்வோம் சிஷ்யா! என் கூடவே வந்து எனக்கு விழ வேண்டிய அடியையெல்லாம் நீங்க வாங்கிக்கோங்க! உங்க உடம்பு தாங்கும்" என்று அவனை ஏற இறங்க பார்த்துக்கொண்டே அவன் சொன்ன பாணியிலேயே மலரும் பதில் கொடுக்க,
"திமிறுதாண்டி உனக்கு!" என்று சொல்லி சத்தமாகசிரித்தே விட்டான் ஈஸ்வர்.
அதற்கு அவளது இதழில் விரலை வைத்தவாறு அவனை முறைத்தவள், கிசுகிசுப்பான குரலில், "ஷ்.. மெதுவா!" என்றாள் மலர், ஜீவன் உறங்கிக்கொண்டிருப்பதைக் குறிப்பிட்டு.
பிறகு தன்னை நிலைப்படுத்திக்கொண்டவன், "ஓகே ஓகே ஜோக்ஸ் அபார்ட்! இப்ப சொல்லு!" என்றான் ஈஸ்வர் மொட்டையாக.
"என்ன சொல்லணும்?" புரியாமல் மலர் கேட்கவும், "கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீதானே எதோ சொல்ல வந்த" என்றான் ஈஸ்வர், சிறிது நேரத்திற்கு முன் அவள் சொல்லவந்ததை அலட்சியப் படுத்த விரும்பாமல்.
சட்டென, அவளுடைய கண்கள் அங்கே உறங்கிக்கொண்டிருந்த ஜீவனைத் தொட்டு மீண்டது.
மென்மையாக அவனுடைய கூந்தலை வருடியவள், "நாம வெளியிலே போய் பேசலாமா?
இவன் தூங்கிட்டு இருக்கானு நம்பவே முடியாது; நாம பேசுவதை கவனிச்சிட்டு காலைல எழுந்தவுடன் கேள்வி மேல் கேள்வி கேட்டு உண்டு இல்லைனு செஞ்சிடுவான்!" என்றாள் இதழில் பூத்த புன்னகையுடன்!
அவள் சொன்னதும், ஈஸ்வரின் பார்வையுமே மருகனிடம் சென்றது கனிவுடன்!
பின்பு மலர் பின்தொடர, அவர்களுடைய அறையை ஒட்டியிருந்த, மிகப்பெரிய பால்கனியை நோக்கிச் சென்ற ஈஸ்வர், அங்கே போடப்பட்டிருந்த திவானில் சென்று அமர்ந்தான்.