top of page

Anbenum Idhazhgal Malarattume! 2

Updated: Nov 2, 2019

அணிமா 2


முந்தைய தினம் மதியம் தொடங்கிய படப்பிடிப்பு மறுநாள் அதிகாலை வரை தொடர்ந்தது.


படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு வேறு. வேறு வழியில்லை, முடித்தே ஆகவேண்டும் என்ற சூழ்நிலையில் இரு மடங்கு உழைப்பைக் கொடுக்க வேண்டியதாக ஆகிப்போனது ஈஸ்வருக்கு


அதுவும் அந்தப் படத்தின் கதாநாயகன் கால்ஷீட்டுக்கு தகுந்தாற்போல் அனுசரித்துப் போக வேண்டிய கட்டாயம் வேறு அவனுக்கு.


அதனால் எழுந்த சலிப்புடன் தொடர் சண்டைக்காட்சிகளால் ஏற்பட்ட களைப்பும் தூக்கமின்றி சிவந்த கண்களுமாக கேரவனில் நுழைந்தவன் அதில் போடப்பட்டிருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்து கண்களை மூடி சாய்ந்துகொண்டான்.


தூக்கத்தில் அப்படியே கண்கள் சொருகவும், அதைக் கலைப்பதுபோல் வெளியில் எதோ அரவம் கேட்க, உறக்கம் தடைப்பட்ட எரிச்சலில் கேரவனின் கண்ணாடியைத் தள்ளி வெளிப்புறம் பார்த்தான்.


அங்கே அதிகாலையிலேயே சுற்றுலா பயணிகளின் வருகை தொடங்கியிருந்தது.


அப்பொழுதுதான் அவனது கேரவனை ஒட்டி இரண்டு பெண்மணிகள் நடந்து வரவும், வேகமாக பைக்கில் வந்தவன் அவர்களை உரசியது போல் நின்றதைப் பார்த்து பதட்டமடைத்தவன் கீழே இறங்க நினைக்க, அதற்குள் அவனே இல்லை! இல்லை! அவளே தலைக்கவசத்தை கழற்றியிருந்தாள்!


உடல் முழுவதும் மறைக்கும் ஜெர்கின், ஜீன்ஸ் பான்ட், ஸ்போர்ட்ஸ் ஷூ அணிந்திருந்தாள்! அவளது கூந்தலும் அவள் அணிந்திருந்த ஜெர்கினுக்குள் மறைந்திருந்தது.


அந்த நபர் ஒரு பெண் என்பதை.அவன் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை!


அங்கே சூழ்ந்திருந்த இருளையும் புகை மூட்டமாய் சூழ்ந்திருந்த பனியையும் தனது ஆயிரம் கரம் கொண்டு விரட்டப் போராடிக்கொண்டிருந்தான் பகலவன்.


அவன் வாரி இறைத்துக்கொண்டிருந்த கொஞ்சமே கொஞ்சமான ஒளியில் அவளது விழிகள் இரண்டும் விண்ணிலிருந்து தெறித்த நட்சத்திரம் போன்று ஜொலித்துக் கொண்டிருந்தன.


மற்றபடி அந்த மாமி அவளை விளித்ததைப் போன்றே முகமூடி கொள்ளைக்காரி போல் அவளது முகம் முழுவதையும் துணியினால் மூடியிருந்தாள்.


முதலில்வேகமாக பைக்கை ஓட்டி வந்து அந்த மாமியை அதிரவைத்த வீரம்; பிறகு குறும்பு; பின்பு கோபம்; அதைத் தொடர்ந்து பொய்யான ஒரு பயம்; ஒரே ஒரு நொடி தோன்றி மறைந்த கருணை; மொத்தத்தில் ஆனந்தம்! என நவரசங்களில் பல ரசங்களை சில நிமிடங்களிலேயே வாரியிறைத்துக் கொண்டிருந்தன அவளது அந்த அழகான விழிகள்!


அவள் அந்த பைக்கை கிளப்பிச்சென்ற லாவகம், அவளது தன்னபிக்கையின் அளவைச் சொல்லாமல் சொன்னது.


அவள் அங்கிருந்து சென்றபிறகும் அவள் விட்டுச்சென்ற உற்சாகம் அவனிடம் மிச்சமிருந்தது.


அவனது களைப்பும் சோர்வும் அவனை விட்டு மொத்தமாகப் பறந்திருந்தது.


அப்பொழுது அவனது உதவியாளன் அவனது வலதுகை; கண்; காது; மூக்கு; எல்லாமுமான தமிழ்க்கதிர், சுருக்கமாக தமிழ் சுடச்சுட காஃபியை கொண்டுவந்து அவனுக்கு முன் நீட்டவும், புன்னகை முகமாக அதை வாங்கிப் பருகத்தொடங்கினான் ஈஸ்வர்.


அவனது முகத்தில் தோன்றியிருந்த புன்னகையைப் பார்த்து மயக்கம் வராத குறைதான் தமிழுக்கு.


"அண்ணா! என்ன மாஜிக் நடந்தது இங்க?" வியப்பு மாறாமல் தமிழ் கேட்கவும்,


"என்னடா உளர்ற!" கோபமின்றி மிகவும் குழைந்தே ஒலித்தது ஈஸ்வரின் குரல்.


"ஐயோ! சிட்டி சிரிக்குது எல்லாரும் பாருங்க இந்த அதிசயத்த!" உண்மையிலேயே ஈஸ்வரது மகிழ்ச்சி தமிழையுமே தொற்றிக்கொண்டது.


கனவிலிருந்து விழித்தவன் போல் அங்கிருந்து சென்றான் அவன்.


அந்த மாமி சொன்னத போல் அந்த சில நிமிடங்களில் அவன் மனதில் வர்ணஜாலங்களை அள்ளித்தெளித்துச் சென்றிருந்தாள் அந்த மலர்காரிகை.


அந்த இதம் அந்த வாரம் முழுதும் உற்சாகமாக அவனைத் தொடர்ந்தது என்றால் மிகையில்லை.


அதைத்தான் அன்றைய தினம் அந்தத் தொலைக்காட்சி நிருபர் மொத்தமாகக் குலைத்திருந்தான்.