top of page
Writer's pictureKrishnapriya Narayan

Anbenum Idhazhgal Malarattume! 19

Updated: Apr 7, 2023

அணிமா-19


அன்றைய ஒட்டுமொத்த அதிர்ச்சியையும் தாண்டி தாய்மாமனான அவனுடைய ஹீரோ ஜெகதீஸ்வரனை நேரில் பார்த்ததில் ஒரு பரவச நிலையை எட்டியிருந்தான் ஜீவன். அது அப்படியே அவனது முகத்தில் பிரதிபலித்து.


முதல் முறை அவனை தனது கையில் ஏந்தியபொழுது உண்டான சிலிர்ப்பை அப்பொழுது இருந்த மனநிலையில் புறந்தள்ளியவன் ஜீவனின் அணைப்பில் மறுபடி நன்றாக உணர்ந்தான் ஈஸ்வர்.


பெண் குழந்தை போல் உடை அணிந்திருந்ததால் ஜீவனின் தோற்றம் சிறு வயது சுபானுவை நினைவு படுத்தியதால்தான் 'சுபா!' என்ற பெயரை அவனையும் அறியாமல் உச்சரித்திருந்தான்.


ஜீவனுடைய மயங்க வைக்கும் சிரிப்பினில், சுபானுவால் முன்பு அடைந்த ஏமாற்றம், பட்ட அவமானம், துக்கம் துயரம் அவை அனைத்தும் சேர்ந்து அவனுக்குள் ஏற்படுத்தியிருந்த குரோதம் எல்லாமும் பின்னுக்குச் சென்னறுவிட, அன்பு மட்டுமே மேலோங்கி அவனைத் தன்னுடன் அணைத்துக்கொண்டான் ஈஸ்வர். அவனது கண்களின் ஓரம் ஈரம் கசிந்தது.


அங்கிருந்து சற்று தொலைவில் சுபானுவைக் கட்டிப்பிடித்து செங்கமலம் பாட்டியும் சாருமதியும் கண்ணீர் வடித்துக்கொண்டிருந்த காட்சி அவனை வேதனையின் விளிம்பில் கொண்டு நிறுத்தியது.


சுபானுவின் உருக்குலைந்த தோற்றம் வேறு அவனைச் சொல்லொணா துயரத்தில் ஆழ்த்தி அவனுடைய சிந்தனையைச் செயலிழக்கச் செய்தது.


அவனது மனநிலையை முற்றிலும் உணர்ந்தவளாக மலர், "ஹீரோ! இந்த மாதிரி ஒரு சூழ்நிலைய உங்களுக்குக் கொடுக்க கூடாதுன்னுதான் ரொம்பவே முயற்சிப் பண்ணேன். என்னையும் மீறி இப்படி நடந்துபோச்சு. ரியலி ஐம் வெரி சாரி!" என்று தவிப்புடன் சொல்லவும், ஏதும் பேசும் நிலையில் கூட இல்லை ஈஸ்வர்.


ஒரு கையால் ஆதரவாக அவளைத் தன்னுடன் சேர்த்து அணைத்தவன் மௌனத்தையே அவளுக்குப் பதிலாகக் கொடுத்தான்.


தமிழ் வாங்கி வந்த உடையை ஜீவனுக்கு அணிவித்தாள் மலர்.


அப்பொழுது குமார் சுபானுவை சக்கர நாற்காலியுடன் அவன் அருகில் கொண்டு வந்து நிறுத்தினர்.


ஜீவனே இல்லாத வெறுமையான கண்கள் கண்ணீரில் நிரம்பியிருக்க உதடுகள் துடிக்க, "ஜகா! உனக்கு நான் செஞ்ச பாவத்துக்கு என்னை மன்னிச்சுடுடா!" என்றாள் சுபா. அவள் பேசக்கூட முடியாமல் மிகவும் முயன்றுதான் பேசுகிறாள் என்பது அவனுக்கு நன்றாகவே புரிந்தது.


ஜீவனை அணைத்திருந்த கையை அப்படியே நீட்டி ஆறுதலாக அவளது கையை அழுந்தப் பிடித்துக்கொண்டான் ஈஸ்வர். 'இனிமேல் நான் இருக்கிறேன் உனக்கு!' என்பதைச் சொல்லாமல் சொல்லியது அவனுடைய செயல்.


அப்பொழுது ஜெய் அவர்களை நோக்கி வரவும் அவனை கட்டிப்பிடித்துக் கொண்டிருந்த ஜீவனை மலருக்கு அருகில் உட்கார வைத்துவிட்டு ஜெய்யிடம் வந்தவன், "நீ போலீஸா ஏதாவது என்கொய்ரி பண்ணணும்னா மலர் கிட்ட தாராளமா பணமிக்கோ. மத்தபடி அவகிட்ட பர்சனலா பேசணும்னா, ஐ வோண்ட் அலவ் யூ" என்று அவன் அறைந்ததினால் மலரின் கன்னத்தில் பதிந்திருந்த விரல் தடத்தைப் பார்த்துக்கொண்டே சொல்லவும்,


"…ணா!" என்றவாறு அதிர்ந்தான் ஜெய்.


இவ்வளவு நேரம் அமைதி காத்தவன், இப்படி கோபமாகப் பேசுவது விளங்காமல், மலர் ஈஸ்வரை ஒரு பார்வை பார்த்து வைத்தாள்.


"என்ன நடந்திருக்கும்னு கொஞ்சம் கூட யோசிக்காம, அதுவும் என் கண் முன்னாடியே நீ மலர கையை நீட்டினது எனக்குக் கொஞ்சம் கூட பிடிக்கல. அவ தலையில காயம் பட்டு ரத்தம் வழிஞ்சதைப் பார்த்து என் உயிரே போயிடிச்சு ஜெய்!


எனக்குமே முதல்ல கோபம்தான் வந்தது! ஆனா! அவ மட்டும் துணிஞ்சு இதை செய்யலன்னா அத்தனைப் பிஞ்சுக் குழந்தைகளோட நிலைமையும் என்ன ஆகியிருக்கும்னு நினைச்சு பார்த்தியா?


எனக்கு வந்த கோவத்துக்கு அப்பவே இதைச் சொல்லியிருப்பேன். உனக்கு கீழ வேலை செய்யறவங்க எதிர்ல உன்னை இறக்கிக் காமிக்க விரும்பாமதான் கன்ட்ரோல் பண்ணிட்டு சைலன்ட்டா இருந்தேன்!" என்று பட படவென பொரியவும்,


"…ணா! சாரி …ண்ணா; நீங்க எல்லாரும் அவ பக்கத்துலேயே இருக்கீங்க. ஆனா நான் இந்தத் தகவல் கேள்விப்பட்டதுல இருந்து இங்க வந்து அவளை நேர்ல பார்க்கற வரைக்கும் என் உயிர் என் கைல இல்லண்ணா. அந்த ஆதங்கத்துலதான் யோசனை இல்லாம அவளை அடிச்சிட்டேன்" என்று சொன்ன ஜெய்,


மலரிடம் திரும்பி "சாரி மலர்!" என்று சொல்லவும், மலர் இறைஞ்சுதலுடன் ஈஸ்வரின் முகத்தைப் பார்க்க, போனால் போகிறது என்பதுபோல்,


"இதுவே கடைசியா இருக்கட்டும் ரெண்டு பேருக்கும்!" என்றான் ஈஸ்வர் தன் கெத்தை விட்டுக்கொடுக்காமல்.


“டாக்டர் மலரை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகச் சொல்லிட்டாங்க. மத்தபடி தேவைப் படும்போது மலர் கிட்ட விசாரணை செய்ய வேண்டி இருக்கும். அவளுக்கு ஸ்ட்ரைன் இல்லாம நான் அதை கவனிச்சுக்கறேன். நீங்க அவளை அழைச்சிட்டுப் போங்க!" என்று தான் ஈஸ்வரிடம் சொல்ல வந்த விஷயத்தைச் சொல்லி முடித்தான் ஜெய்.


யோசனையுடன் மலரைப் பார்த்த ஈஸ்வர், "அதுக்குள்ள வீட்டுக்கு அனுப்பறாங்க? உனக்கு தலைல ஏதும் வலி இருக்கா மலர்! நாம வேணா வேற ஹாஸ்பிடல்ல பார்த்துக்கலாமா?" என்று ஈஸ்வர் சந்தேகத்துடன் கேட்கவும்,


"என்ன, இங்க ஓசில செஞ்சதையெல்லாம் அங்க காசு வாங்கிட்டு மறுபடியும் ஒரு தடவ என்னை வெச்சு செய்யவா? அதெல்லாம் வேண்டாம். நாம முதல்ல வீட்டுக்குப் போகலாம்" என்றாள் மலர் நக்கலும் கிண்டலுமாக.


அவள் பேசிய விதத்தில் எழுந்த சிரிப்பை அடக்கியவாறு, ஈஸ்வரின் கோபத்தையும் அக்கறையையும் உணர்ந்து, "அண்ணா! இங்கயே எல்லா செக்கப்பும் செஞ்சுட்டாங்க. நல்லாத்தான் ட்ரீட்மெண்ட் செஞ்சிருக்காங்க. நானும் விசாரிச்சுட்டேன் வீட்டுக்குப் போங்க!" என்றான் ஜெய்.


அனைத்தையும் மிரட்சியுடன் பார்த்துக்கொண்டிருந்த சுசீலா மாமி அவர்களை நெருங்கி, "மலர், நீ இனிமேல எல்லாத்தையும் மேனேஜ் பண்ணிப்ப இல்ல! நான் கிளம்பட்டுமா? தப்பா நினைச்சுக்காதடி குழந்த!" என்று மலரிடம் சங்கடத்துடன் இழுக்கவும்,


"ஐயோ மாமி! ஏன் இப்படியெல்லாம் சொல்றீங்க. நான்தான் உங்கள ரொம்ப தொந்தரவு பண்ணிட்டேன். மாமா வேற வீட்டுல தனியா இருப்பாங்க. நீங்க கிளம்புங்க" என்றாள் மலர் அவருக்குத் தேவை இல்லாத அலைச்சலை ஏற்படுத்திய குற்ற உணர்ச்சியுடன்.


அங்கே இருந்த பிரபாவிடம் "அண்ணா! மாமியை வீட்டுல ட்ராப் பண்ண முடியுமா?" என்று மலர் கேட்கவும் மறுப்பேதும் கூறாமல்அவன் மாமியை அழைத்துக்கொண்டு அங்கிருந்து கிளப்பினான்.


தொழிற்சாலையில் முக்கிய வேலையில் இருந்த பொழுது சூடாமணி கைப்பேசியில் அழைத்து தகவலைச் சொல்லவும் வேலையைப் பாதியிலேயே விட்டுவிட்டு பதறி அடித்து அங்கே வந்திருந்தான் பிரபா.


வீட்டில் யாருக்குமே தெரியாமல் மலர் செய்து வைத்திருக்கும் செயல்களால், அவளிடம் கோபமே கொள்ளாதவன் அன்று அவ்வளவு கோபத்தில் இருந்தான். ஆனாலும் சூழ்நிலை கருதி அதை வெளியில் காண்பிக்கவில்லை அவ்வளவே.


அவனுடைய உச்சபட்ச மௌனத்திலிருந்தே அண்ணனின் கோபத்தைப் புரிந்துகொண்டாள் அணிமாமலர்.


மாமி கிளம்புவதற்குள் சூடாமணி, செங்கமலம் பாட்டி, சாருமதி மூவரும் மாமிக்கு ஆயிரம் முறை அவர்களுடைய நன்றியைச் சொல்லியிருந்தனர்.


ஜீவிதாவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவளை அங்கே வர அனுமதிக்கவில்லை சூடாமணி. மலருடைய ராசாவையும் ரோசாவையும் அவளுக்குத் துணையாக வைத்துவிட்டு, அவரும் வேங்கடேசனும் மட்டுமே வந்திருந்தனர்.


அதனால், பிரபா கிளம்பவும் அவனைத் தொடர்ந்து சூடாமணியும் வெங்கடேசனும் கிளம்ப எத்தனிக்க, "மாப்பிளைதான் மாமியை ட்ராப் பண்ண போயிட்டாரே. நீங்க எப்படி போவீங்க, பேசாம எங்க கூடவே வந்துடுங்க" என்று சாருமதி சொல்லவும்,


"பரவாயில்ல அண்ணி! அங்க ஜீவி, அம்மா, அப்பா எல்லாரும் கவலைபட்டுட்டு இருப்பாங்க. நாங்க ஜெய் கார்லதான் வந்தோம் அதனால பிரச்சனை இல்ல!" என்று சொல்லிவிட்டு வெங்கடேசனுடன் அங்கிருந்து கிளம்பிப்போனார் சூடாமணி மகளை முறைத்துக் கொண்டே.


தொலைக்காட்சியில் அந்தச் செய்தியைப் பார்த்துவிட்டு, சுபா உதவிக்கு அழைத்ததன் பெயரில் மாமியுடன் அவளையும் அழைத்துக்கொண்டு அங்கே வந்திருந்த குமாரும், "பார்த்துக்கோ ஈஸ்வர்! நான் நாளைக்கு வீட்டுக்கு வரேன்" என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.


***


ஒரு வழியாக அனைத்துக் குழப்பங்களும் முடிவுக்கு வந்து வீடு வந்து சேர்ந்தனர் அனைவரும்.


அவனிடம் வந்து சேர்ந்தது முதல் ஒரு நொடி கூட அவனைப் பிரியாமல் மாமனிடம் ஒட்டிக்கொண்டான் ஜீவன். அவனை மடியில் வைத்துக் கொண்டுதான் காரையே ஓட்டி வந்தான் ஈஸ்வர்.


வீட்டில் வேலை செய்யும் வசந்தி ஆரத்தி தட்டுடன் தயாராக இருக்க, செங்கமலம் பாட்டி தனது மூத்த கொள்ளு பேரனான ஜீவனை ஆலம் சுற்றி வீட்டிற்குள் அழைத்துச்சென்றார்.


உள்ளே நுழைந்ததும், "இப்ப இருக்கற நிலைமைல யாரும் எதுவும் பேச வேண்டாம். எதுவா இருந்தாலும் காலைல பார்த்துக்கலாம். நேரத்துல சாப்பிட்டு படுங்க எல்லாரும். சுபாவும் குட்டிப் பையனும் என் கூட என் ரூம்ல படுத்துக்கட்டும்" என்று யாரும் மறுத்துப் பேச இடம் அளிக்காமல் சொல்லிவிட்டுச் சென்றார் பாட்டி.


பிறகு அலுப்பு தீர குளித்துவிட்டு ஈஸ்வர் கீழே வரவும், உணவு மேசை மேல் ஜீவனை உட்கார வைத்து அவனுக்கு உணவை ஊட்டிக்கொண்டிருந்தாள் மலர். அருகில் சுபா சூப் நிரம்பிய கிண்ணத்தைப் பார்த்துக்கொண்டே இருக்க, "அண்ணி! பிடிக்கலேன்னாலும் மெதுவா சாப்பிட ட்ரை பண்ணுங்க. பிளட் கௌண்ட் சரியா இல்லனா அடுத்த கீமோ கொடுக்க டிலே ஆகும்" என்று மலர் சொல்லவும்,


"வயித்த பெரட்டுது மலர். முடியலம்மா!" என்று சன்னமாக ஒலித்தது மார்பகப் புற்றுநோயிலிருந்து மீண்டு கொண்டிருக்கும் சுபாவின் குரல்.


மலர் அந்தக் கிண்ணத்தை எடுக்க வரவும் அதை தன் கையில் எடுத்துக்கொண்ட ஈஸ்வர் அந்தச் சூப்பை மெதுவாகச் சகோதரிக்குப் புகட்டத் தொடங்கினான்.


அதைப் பார்த்துக்கொண்டே அங்கே வந்த சாருமதியின் கண்கள் குளமானது.


***


அசதியில் அவன் மீதே சாய்த்து தூங்கிப்போன ஜீவனை அவர்களது அறைக்குத் தூக்கி வந்த ஈஸ்வர் அவனைக் கட்டிலில் படுக்க வைத்துவிட்டு தானும் அவன் அருகிலேயே ஓய்வாகச் சாய்ந்து உட்கார்ந்தவாறு அங்கே இருந்த தொலைக்காட்சியை உயிர்ப்பித்தான்.


அவனைப் பின் தொடர்ந்து வந்த மலர் அவனுக்கு அருகில் உட்கார்ந்து ஏதோ சொல்ல வரவும் 'பேசாதே' என்பது போல் ஜாடை செய்து தொலைக்காட்சியைச் சுட்டிக் காண்பித்தான்.


அதில் காவல்துறை சார்பாக ஜெய் அளித்துக்கொண்டிருக்கும் பத்திரிகையாளர் சந்திப்பு நேரலையாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.


"இத்தன குழந்தைகள் ஆபத்தான நிலைமையில் இருந்திருக்காங்க, என்ன சார் செஞ்சுகிட்டு இருக்கு காவல் துறை?" என்ற ஒரு பத்திரிகையாளரின் காரமான கேள்விக்கு,


"எங்களுக்குன்னு ஒரு ப்ரோடோகால் இருக்கு அது படி சிறப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது காவல் துறை. அடி மட்ட லெவல்ல இருந்து ஆரம்பிச்சு இந்த சைல்ட் கிட்னாப்பிங் ராக்கெட் இன்டர்நேஷனல் லெவல்ல பெரிய நெட்வொர்க்கா இயங்கிட்டு இருக்கு.


பிறந்த குழந்தை முதல் பல வயதிலும் குழந்தைகள் கடத்தப்படுறாங்க.


பல கேஸஸ்ல, கடத்தப்பட்ட குழந்தைகள துரிதமா கன்டுபிடிச்சு அவங்க பேரன்ட்ஸ் கிட்ட ஒப்படைச்சிருக்கு காவல்துறைங்கறது மறுக்க முடியாத உண்மை.


ஸ்டேட் கிரைம் ரெக்காட்ஸ் பியூரோ தகவலின் படி 2011 முதல் 2015 வரை நடத்தப்பட்ட சர்வேயின் அடிப்படைல, தமிழ்நாட்டில் மட்டும் 14,716 குழந்தைகள் காணாம போனதாகப் பதிவாகி இருக்கு.


அதுல 14174 குழந்தைகளை வெற்றிகரமாக மீட்டுப் பெத்தவங்க கிட்ட சேர்த்திருக்காங்க நம்ம காவல்துறை!" என்று தெளிவான விளக்கங்களுடன் பதில் கொடுத்தான் ஜெய்.


“குழந்தைகள் காணாமல் போவதில் சென்னைதான் முதல் இடத்தில் இருக்குன்னு சொல்றாங்களே அதுக்கு உங்களோட பதில்!" என்று அடுத்த கேள்வி அவனை நோக்கிப் பாய்ந்தது.


"எஸ் அது மறுக்க முடியாத வெட்கப்படும்படியான உண்மை! நாள் ஒன்றுக்குத் தமிழ்நாட்டில் பன்னிரண்டு குழந்தைகள் காணாமல் போறாங்கன்னா, அதுல சென்னையில் மட்டுமே ஐந்து முதல் ஏழு குழந்தைகள் அடக்கம்" என அதை ஒப்புக்கொண்டான் ஜெய்.


“என்ன காரணங்களுக்காக குழந்தைகள் கடத்தப்படுறாங்க" அடுத்ததாக ஒருவர் கேட்ட கேள்விக்கு,


"வெரி அஷேம்ட் டு சே குழந்தைகளைத் தத்து எடுக்கறதுல தொடங்கி இதுக்குதான்னு வரையறுக்க முடியாத ஆயிரம் காரணங்கள் இதுக்குப் பின்னால இருக்கு.


ஆர்கன் ட்ரேட், செக்ஸ் ட்ரேட், புதிதாகக் கண்டு பிடிக்கும் மருந்துகளைச் சோதிக்க, தீவிரவாதத்திற்கு இப்படிப் பல காரணங்கள் இருக்கு" என்று பதறவைக்கும் உண்மையைப் பதிலாகச் சொன்னான் ஜெய்.


இன்றைக்கு மீட்டுக் கொண்டுவரப்பட்ட குழந்தைகளின் நிலைமை என்ன?" என்ற ஒரு நிருபர் கேட்க,


"தேங்க்ஸ் டு மீடியா, குழந்தைகள் யார் யார் என்பதைக் கண்டுபிடிக்க அவர்களுடைய படங்கள் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட காரணத்தினால் அதில் தம் பிள்ளைகளை அடையாளம் கண்டு கொண்ட சில பெற்றோர்கள் அவர்களாகவே வந்துட்டாங்க.


குழந்தைகள் ஒவ்வொருவராக மயக்கம் தெளிந்து கொண்டிருக்க, அவர்களுடைய பெற்றோரை அடையாளம் கண்டுபிடித்து ஒப்படைக்கும் வேலைகளும் தொடங்கியிருக்கு.


முன்பே காவல்துறைக்கு வந்திருந்த புகார்களின் அடிப்படையில் தேடிக்கொண்டிருந்த குழந்தைகள் பலரும் அதில் இருக்கவே பெற்றோரைக் கண்டுபிடித்து குழந்தைகளை ஒப்படைக்கும் வேலை ஈசியாக இருக்கு!


உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து ஸ்டேபில் ஆன குழந்தையேட சேர்த்து மேலும் ஐந்து குழந்தைகளைப் பற்றிய தகவல்கள் கிடைக்காத காரணத்தால் அவங்களைப் பற்றிய விவரங்களை மற்ற மாநில காவல் நிலையங்களுக்கும் அனுப்பியிருக்கோம்.


கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைகளில் ஒருவன் நடிகர் மிஸ்டர் ஜெகதீஸ்வரனோட தங்கை மகன். அவன் அங்கே இருந்ததால்தான் மத்த குழந்தைகளைக் கண்டுபிடிக்க முடிஞ்சது. அது எல்லாருக்குமே தெரிஞ்சிருக்கும்” என்று முடித்தான் ஜெய்.


தொடர்ந்து அன்று காலை மலரால் தாக்கப்பட்டு அவர்களிடம் சிக்கியவனைப் பற்றிய கேள்விகள் எழுந்தால் அது மேற்கொண்டு விசாரணையைக் கொண்டு செல்வதில் குழப்பம் ஏற்படுத்தும் என்பதை உணர்ந்த ஜெய் அதைத் திசை திருப்பும் விதமாக குழந்தைகளைப் பெற்றோரிடம் ஒப்படைக்கும் காட்சிகளை ஒளிபரப்ப அனுமதி அளிக்கவும், அந்தக் காட்சிகள் உணர்ச்சிப்பூர்வமாக ஊடகங்களில் பரபரப்பாகிக் கொண்டிருந்தன.


ஜெய் அளித்த பேட்டியை பார்த்தப் பிறகு பேச்சே வரவில்லை அணிமாமலருக்கு. துயரத்துடன் ஜெகதீஸ்வரனின் மார்பினில் முகத்தைப் புதைத்துக்கொண்டாள்.


அவளுடைய தலையில் இருந்த காயத்தைப் பார்த்த ஈஸ்வரின் மனதில் முள் தைத்தது.


இதற்குப் பின் இருக்கும் கூட்டத்திக்கே நிரந்தரமாகச் சமாதி கட்டவேண்டும் என்று மனதிற்குள் கோபத்துடன் சூளுரைத்துக்கொண்டான் மலரின் ஈஸ்வரன்.




Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page