Anbenum Idhazhgal Malarattume! 18*
அணிமா-18
'யார் அந்த குழந்தை' என்ற கேள்வி மூளையை குடைந்தாலும், அந்தக் குழந்தையின் முகம் அவன் மேல் கொண்ட நம்பிக்கையை அப்பட்டமாகப் பறை சாற்ற தன் நிலை உணர்ந்தவன் கலக்கத்தைக் கைவிட்டு துரிதமாகச் செயல்பட தொடங்கினான் ஈஸ்வர்.
ஓட்டுநர்களுடன் இணைந்து ஜீவனையும் சேர்த்து முதலில் சில குழந்தைகளை ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பிவிட்டு அவன் கைப்பேசியில் துரிதப்படுத்த சில நிமிடங்களிலேயே காவல் துறையினர் அங்கே வந்துவிட அதற்குள் அனைத்து ஊடகங்களும் பொதுமக்களும் அங்கே குவியத் தொடங்கினர்.
நேரம் கடத்தாமல் மேலும் சில ஆம்புலன்ஸில் மீதமிருந்த குழந்தைகளும் மலரும் ஏற்றப் பட்டனர்.
அந்த ஆம்புலன்ஸை பின் தொடர்ந்து ஈஸ்வரின் வாகனம் அரசு பொது மருத்துவமனை நோக்கி விரைந்தது.
அவன் எப்படி காரை செலுத்தினான் எப்படி மருத்துவமனை வந்து சேர்ந்தான் என்று கேட்டால் அவனால் விடை சொல்ல முடியாத நிலையில் அங்கே வந்து சேர்ந்திருந்தான் ஈஸ்வர்.
இவை அனைத்திற்கும் நடுவில் போலீசார் அந்த இடத்தை முழுவதுமாக சோதனை செய்ய அங்கே இருக்கும் அறையில் பலமாக தாக்கப்பட்ட நிலையில் ஒருவன் மயங்கிக் கிடக்க அவனையும் ஆம்புலன்சில் ஏற்றி அங்கே கொண்டு வந்தனர்.
மலர் மற்றும் அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆரம்பக்கட்ட மருத்துவ பரிசோதனைகள் போய்க்கொண்டிருந்தது.
‘சென்னை புறநகர் பகுதியில் உள்ள மர்ம இடத்தில் பிரபல திரைப்பட வில்லன் நடிகர் ஈஸ்வரின் புது மனைவியுடன் பல பகுதிகளிலிருந்து காணாமல் போன குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்
பின்னணி என்ன? கண்டுபிடிக்குமா காவல்துறை!’ என்ற செய்தியுடன் அனைத்துத் தொலைக்காட்சி அலைவரிசைகளும் அவர்களுக்கே உரித்தான பதறவைக்கும் இசையுடன் நேரடியாக ஒளிபரப்பிக்கொண்டிருந்தன.
ஈஸ்வருடைய முகத்தையும் மலர் ஆம்புலஸில் ஏற்றப்படும் காட்சியையும் மருத்துவமனையையும் மாற்றி மாற்றிக் காண்பித்து தமது ‘டீ.ஆர்.பி’யை எகிறவைக்க போராடிக் கொண்டிருந்தன ஊடகங்கள்.
அந்தச் செய்தியை பார்த்து பதறிப்போய் முதலில் அங்கே ஓடி வந்த தமிழ் பிரச்சினையின் தலையும் புரியாமல் வாலும் புரியாமல் கலங்கிப்போய் உட்கார்ந்திருந்த ஈஸ்வரை தேற்றும் வகை தெரியாமல் அவன் அருகில் வந்து நின்றுகொண்டான்.
தகவல் அறிந்த ஜெய் அடுத்த விமானத்திலேயே அங்கே வந்துவிடுவதாக அவனுக்கு வாட்ஸாப்ப் தகவல் அனுப்பியிருந்தான்.
தொடர்ந்து அடித்துப் பிடித்து அங்கே ஓடி வந்தனர் ஈஸ்வர் மற்றும் மலருடைய குடும்பத்தினர் அனைவருமே.
மலருக்கு தலையில் ஏதோ தகடு கிழித்து அதிக ரத்தம் வெளியேறி இருந்தது. உள்ளுக்குள் மேலும் ஏதாவது காயம் பட்டிருக்கிறதா என்பதைக் கண்டு ப