அணிமா-17
அழகான ஒரு மலர் மலர்வதைப் போல, சில்லென்ற தென்றல் இதமாக வீசுவது போல, இயற்கையாக இயல்பாக அவர்களுடைய இல்லறத்தைத் தொடங்கியிருந்தனர் மலரும் ஈஸ்வரும்.
திருமணம் முடிந்த அடுத்த தினம் மறுவீட்டு விருந்திற்கென மலருடைய பிறந்த வீட்டிற்கு வந்து சென்றனர் இருவரும். ஜெய்யின் குடும்பத்தினரும் அன்று அங்கே வந்திருந்தனர்.
விருந்து முடிந்து மலர் ஈஸ்வருடன் கிளம்பும் நேரம் அவர்களை வழி அனுப்ப வந்த ஜெய், அவள் காரில் அமர்ந்ததும், ஜன்னல் வழியாக அவளுடைய வலது கையை தனது கைகளுக்குள் பொத்தியபடி, "மலர்! என் மனசு ஏதோ தப்பான சிக்னலா கொடுத்துட்டு இருக்கும்மா! சம்திங் உனக்கு ஏதோ கெடுதல் நடக்க போற மாதிரி! எப்பவும் போல விளையாட்டுத்தனமா இருக்காதடீ!" என்று மலரிடம் இதமாகச் சொல்லவும்,
அவனிடமிருந்து கையை வெடுக்கென இழுத்தபடி, "பார்றா... கல்யாணம், ரிஷப்ஷன் இதுக்கெல்லாம் யாரோ மாதிரி தலையை மட்டும் காட்டிட்டுப் போனவன்தானே நீ! வீட்டுக்கு லஞ்ச் சாப்பிடக் கூட வரல! சும்மா எமோஷனலா பேசினா, நீ சொல்றதெல்லாம் நான் கேட்கணுமா! முடியாது போடா!" என்று துடுக்காகச் சொல்லிவிட ஜெய்யின் முகம் வாடிப்போனது.
"என்ன மலர் இது, எவ்ளோ அக்கறையா சொல்றான். நீ என்ன இப்படி பொறுப்பில்லாம பேசற. அவன் வேலையைப் பத்திதான் உனக்குத் தெரியும் இல்ல" என்று ஈஸ்வர் கடிந்து கொள்ளவும், சட்டென அவளது முகமும் கூம்பியது.
“அவ சொன்னா சொல்லிட்டுப் போறா… விடுங்கண்ணா! உங்களுக்கு ஒண்ணு தெரியுமா அண்ணா? நாங்க ரெண்டு பேரும் கிட்டதட்ட ட்வின்ஸ் மாதிரிதான்! ஏன்னா... ஒரே நாள்ல ஒரே ஹாஸ்பிடல்லதான் பிறந்தோம்! எங்க அம்மாவுக்குப் பிறந்த வீட்டு சப்போர்ட் கிடையாது. அவங்க வேலைக்கு போனதால, மூணு மாசத்துல இருந்து எங்க ரெண்டு பேரையுமே ஒண்ணா சூடா அத்தைதான் வளர்த்தாங்க! ஒரே ஸ்கூல்ல ஒண்ணாவேதான் படிச்சோம்! இவளுக்கு ஏதாவது பிரச்சனைன்னா என் உள்ளுணர்வு எனக்குச் சொல்லிடும்! இவ இப்படிப் பேசினாக்கூட நான் சொல்றது அவளுக்கு நல்லாவே புரியும்” எனப் புன்னகைக்க,
“நண்பேன்டா” என முகம் மலர்ந்தாள் மலர்.
“போடி!” என அவளை முறைத்தபடி, "நான் நாளைக்கே கிளம்பி கேஸ் விஷயமா ஆந்திரா போறேன். எப்ப திரும்ப வருவேன்னு எனக்கே தெரியாது. இவ கொஞ்சம் கூட அடங்கமாட்டா. அதனால நீங்க கொஞ்சம் கவனமா இவளைப் பார்த்துக்கோங்கண்ணா!" என்று மூச்சுவிடாமல் வெகுத் தீவிரமாகச் சொல்லி முடித்தான் ஜெய்.
அவன் அவ்வாறு சொன்னதும் ஏதோ உணர்வு தோன்றி நெஞ்சை அடைக்கவும் கையால் மார்பை நீவியபடி, ஜெய் சொன்னதற்குப் பதில் கூட சொல்லத் தோன்றாமல் தலையை மட்டும் 'சரி!' என்பது போல் ஆட்டிவிட்டு காரைக் கிளப்பிக்கொண்டு சென்றான் ஈஸ்வர்.
அவனது முக மாறுதல்களைக் கவனித்த மலர், "அவன் ஏதோ லூசு மாதிரி உளறிட்டு இருக்கான். நீங்க டென்ஷன் ஆகாதீங்க. தப்பா எதுவும் நடக்காது!" என்றாள் அவனைச் சமாதானப்படுத்தும் விதமாக.
"அது மட்டும் இல்ல மலர்! கொஞ்ச நாளாகவே எனக்கும் இதுபோல ஏதோ சம்திங் டிஸ்டர்ப் பண்ணிட்டே இருக்கு. அது என்னன்னுதான் புரியல!" என்றான் கலக்கத்துடன்.
ஏதோ தீவிர யோசனையுடன் இன்னதென்று விளங்கா ஒரு விசித்திர பாவத்தை அவளது முகம் காண்பிக்க, அவனது முகத்தையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தாள் மலர்.
அவளது பார்வையில் அவனது மனதின் இறுக்கம் குறைய, "நீ இப்படியே கண்ணெடுக்காம என்னை பார்த்து வெச்சா நான் எப்படி கார ட்ரைவ் பண்றது, ம்ம..." என்று ஈஸ்வர் கிறக்கமாகக் கேட்கவும்,
"ம்ம் கையாலதான், நம்ம ஊருல இன்னும் தானா ஓடற ஆட்டோமேட்டிக் காரெல்லாம் புழக்கத்துல வரல!" என்றாள் மலர் தனது நாணத்தை மறைத்தவாறே.
***
புது மண தம்பதியருக்கே உரித்தான செல்லச் சீண்டல்கள், கொஞ்சல்கள் கெஞ்சல்கள், மிஞ்சல்கள், ஊடல், கூடலுடன் இனிமையாகக் கழிந்த நான்கு நாட்களுக்குப் பிறகு ஒரு முக்கிய படப்பிடிப்பிற்காக வந்திருந்தான் ஈஸ்வர்.
கோபாலன் மாமாவிற்குக் காலில் அடி பட்டிருந்ததால், கோவிலில் நடந்த திருமணத்திற்கு மட்டுமே மாமி அவரை அழைத்து வந்திருந்தார்.
அதனால் மாமாவை நேரில் சென்று ஒரு முறை பார்க்க வேண்டும் என்று மலர் கேட்டிருக்க, அன்று அவளை அங்கே அழைத்துப் போவதாக சொல்லியிருந்தான்.
திடீரென்று மிக முக்கிய இந்தச் சண்டைக் காட்சியை எடுக்கவேண்டியதாக இருந்ததால் அங்கே வரவேண்டிய கட்டாய சூழல் உருவாகி, வேலை இழுத்துக்கொண்டே போனது.
அவனது பிரத்தியேக கைப்பேசியை கேரவனிலேயே வைத்திருந்தான். ஒரு வழியாக சிறிது இடைவேளை கிடைக்கவும், கேரவனில் வந்து அமர்ந்தவன் மலரிடம் பேசவேண்டும் என்று கைப்பேசியை எடுக்க, அவளிடமிருந்து இருபது அழைப்புகளுக்கு மேல் வந்திருந்தன.
யோசனையுடன் அவன் அவளது எண்ணுக்கு அழைக்க எத்தனிக்க அதற்குள் பாட்டியிடமிருந்து அழைப்பு வரவும் அதை ஏற்றான். பதட்டத்துடன் ஒலித்தது பாட்டியின் குரல்.
"ஈஸ்வரா! மலர் பொண்ணு என்கூடத்தான் உட்கார்ந்து செல்ஃபோன்ல உங்க கல்யாண ஃபோட்டோலாம் போட்டுக் காட்டிட்டு இருந்தாப்பா. அப்ப திடீர்னு மாமி கிட்டயிருந்து கால் வந்துது. ஏதோ, 'பயப்படாதீங்க, எங்கேயும் போயிருக்க மாட்டான். நான் இப்பவே வந்து பார்க்கறேன்' ன்னு சொல்லிட்டு 'பாட்டி!
முக்கியமா போயே ஆகணும் நான் போயிட்டு சீக்கிரமா வந்துடறேன்'ன்னுட்டு பைக்க எடுத்துட்டுப் போயிட்டாப்பா.
அவ போய் ரெண்டு மணி நேரத்துக்கு மேல ஆச்சு. அவகிட்டேயிருந்து எந்தத் தகவலும் வரல. ஃபோன் போட்டுட்டே இருக்கேன். என்கேஜுடாவே இருக்கு. என்னன்னு கொஞ்சம் பாருப்பா" என்று நீளமாகச் சொல்லி முடித்தார் பாட்டி.
அதற்குள்ளாகவே அவனது கைப்பேசியில் செகண்ட் கால் வருவதற்கான பீப் ஒலி கேட்கவும், "சரி பாட்டி! நான் பார்த்துக்கறேன், நீங்க பயப்படாதீங்க!" என்று சொல்லி ஈஸ்வர் அழைப்பைத் துண்டித்துவிட்டுப் பார்க்கவும் மலரிடமிருந்து வந்த அழைப்பு அது.
அவசரமாக அதை ஏற்று, "சொல்லு மலர்!" என்றான்.
"ஜீ.எஸ்.டீ. ரோட்ல பல்லாவரம் தண்டி வரும்போது புதர் மண்டி பாழடைஞ்ச வீடு ஒண்ணு இருக்கும் தெரியுமா?" என்று மலர் கேட்க, கிணற்றுக்குள்ளிருந்து பேசுவது போல தெளிவின்றி ஒலித்த குரலில் திடுக்கிட்டே போனான்.
"ஏய் மலர்! என்ன ஆச்சுமா. அந்த மாதிரி இடம் அங்க நிறைய இருக்கே!" என்று அவன் பதறவும், சில அடையாளங்களைச் சொன்னவள், “அந்த இடத்துக்கு உடனே வாங்க. எனக்கு ரொம்பவே பயமா இருக்கு, ஹீரோ! நம்ம வீட்டு குட்டி ஜீவனையும் சேர்த்து இங்க நிறையக் குழந்தைங்க ஆபத்தான நிலைமைல இருக்காங்க. அவங்க எல்லாரையும் எப்படியாவது காப்பாத்தியே ஆகணும். ப்ளீஸ் சீக்கிரம் வாங்க. நிறைய ஆம்புலன்ஸ் தேவைப் படும். அதுக்கும் சொல்லிடுங்க" என்று விம்மலுடன் வெடித்து வந்தன அவளது வார்த்தைகள்.
அவளது அருகில் ஒலித்த பலத்த சத்தத்துடன் அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டது.
‘நம்மளால இனிமேல் எதுவுமே முடியாது, வாழ்க்கையே முடிஞ்சு போச்சுங்கற எண்ணம் வந்தா மட்டும்தான் அழுக வரணும்’ என்று மலர் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் அவனது நினைவில் வரவும், மலருடைய அழுகையும் அவள் உச்சரித்த 'பயம்' என்ற வார்த்தையும் ஈஸ்வருக்குச் சொல்லாமல் சொல்லியது பிரச்சினை மிகப் பெரியது என்பதை.
எதையும் யோசிக்கக்கூட முடியவில்லை ஈஸ்வரால். அவள் சொன்னதனால் கைப்பேசியில் அவசர உதவி எண்ணுக்கு அழைத்து, உடனே மலர் குறிப்பிட்ட இடத்திற்கு ஆம்புலன்ஸ்கள் வருவதற்கு ஏற்பாடு செய்தவாறே படப்பிடிப்பைக் கைவிட்டுக் கிளம்பினான்.
அவன் அந்த இடத்தை அடையவே அரைமணி நேரம் பிடித்தது. அதற்குள் தோராயமாக அவன் அழைத்திருந்த நான்கு ஆம்புலன்ஸும் அங்கே வந்திருந்தன.
அங்கே இருந்த இரும்பினால் ஆன சிறிய கேட், பூட்டுப் போட்டு பூட்டப்பட்டிருக்க அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் ஒன்றும் புரியாமல் அங்கே தயங்கி நின்றிருந்தனர்.
நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த ஈஸ்வர் அவனது காரில் இருந்து ஒரு இரும்பு குழாயை எடுத்து வந்து அந்தப் பூட்டை உடைத்து உள்ளே முன்னேறிச் செல்ல, சிறிது தூரம் சென்ற பின் அந்த பாழடைந்த வீட்டின் ஒரு பகுதியில் அரவம் கேட்கவும் அங்கே சென்று பார்த்தவன் அதிர்ந்தான்.
அங்கே... ஐந்து முதல் பத்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் கிட்டத்தட்ட இருபது பேர் மயக்க நிலையில் கிடத்தி வைக்கப் பட்டிருக்க, மடியில் மயங்கிய நிலையில் உள்ள ஒரு பெண் குழந்தையைப் படுக்கவைத்தவாறு சுவரில் சாய்ந்து உட்கார்ந்திருந்தாள் மலர் அரை மயக்க நிலையில்.
சூழ்நிலை ஒருவாறு விளங்கவே, ஈஸ்வரை பின் தொடர்ந்து வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் ஒவ்வொருவராக குழந்தைகளை நிறுத்தி வைக்கப் பட்டிருந்த ஆம்புலன்ஸை நோக்கி தூக்கிச் செல்லத் தொடங்கினர்.
நொடியும் தாமதிக்காமல் மேலும் சில ஆம்புலன்ஸுக்கு அழைத்துவிட்டுப் பின் காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தவாறு மலருக்கு அருகில் வந்து மண்டியிட்டபடி அமர்ந்தவனாக அவளுடைய கன்னத்தில் தட்டி, "மலர்! மலர்!" என்று அழைக்க மெதுவாக கண்களைத் திறந்தவள், "ஹீரோ! வந்துடீங்களா!" என்று கலங்கி, அவள் மடியில் கிடத்தி வைத்திருந்த ‘ஃப்ராக்’ அணிந்து 'பௌன்டைன்' போன்று தலை முடியைக் கட்டி கண்களுக்கு அழகாக மை தீட்டி நெற்றியில் மையால் பொட்டு வைத்து முயல் குட்டி போல் இருந்த அந்த குழந்தையைத் தூக்கி அவனது மடியில் கிடத்தினாள்.
முகம் பார்த்து அவனது பரிதவிப்பை உள்வாங்கியவளாக, முயன்று கோர்த்த வார்த்தைகளுடன், "இவன் என்னோட ஜீவன்! ம்ஹும்... நம்ம ஜீவன்! இவன் என்னோட உயிர்! இவனையும் இவனோட அம்மாவையும் பத்திரமா பார்த்துக்கோங்க" என்றாள் மலர் ஆதுரத்துடன்.
அந்தக் குழந்தையின் முகத்தைப் பார்த்தவனின் உதடுகள் அவனையும் அறியாமல், "சுபா" என்று உச்சரித்துவிட, அது தந்த மகிழ்ச்சியில் அவளது கைகளால் அவனுடைய இரு கன்னங்களையும் கிள்ளி, "லவ் யூ ஹீரோ! உம்மா!" என்றவாறு அவனது மடியில் முழுவதுமாக மயங்கிச் சரிந்தாள் மலர்.
அப்பொழுதுதான் உணர்ந்தான் அவளுடைய கழுத்தில் வழிந்து கொண்டிருந்த இரத்தத்தை. உயர் அழுத்த மின்சாரம் தாக்கியது போன்ற அதிர்ச்சியில் அவனது சிந்தனை முழுதும் வேலை நிறுத்தம் செய்துவிட செய்வதறியாமல் சிலை என அமர்ந்திருந்தான் ஈஸ்வர்.
அவனது நிலையைக் கலைக்கும் விதமாக அந்தக் குழந்தையிடம் மெல்லிய அசைவு தெரியவும், அவன் அந்தச் சிறுமியின்!? முகத்தை உற்றுப் பார்க்க, மெதுவாக தனது விழி மலர்ந்து ஈஸ்வரின் முகத்தைப் பார்த்த அந்த இளம் தளிர், தனது சின்னஞ்சிறு கண்கள் நட்சத்திரமென ஜொலிக்க தன் சக்தியைத் திரட்டி அவனிடம் கேட்டது, "ஹீரோ, வந்துடீங்களா!?" என்று.
Comments