அணிமா-15
ஜெய்யின் கிண்டலில் 'இவன் சும்மாவே நம்மள கலாய்ப்பான் இனிமேல் கேக்கவே வேணாம்!' என்று எண்ணியவாறு ஈஸ்வரின் அழைப்பை ஏற்றாள் மலர்.
"என்ன பூக்காரி, உன் அதிரடியெல்லாம் எங்க ராணி மங்கம்மா கிட்ட வேலைக்கே ஆகல போலிருக்கே" என்ற ஈஸ்வரின் நேரடித் தாக்குதலில் தன் இயல்பிற்கு வந்தவளாக, "ம்க்கும்... உங்க மங்கம்மா என்கிட்ட சண்டைக்கு வந்திருந்தா அதிரடியா ஏதாவது செஞ்சிருக்கலாம், அவங்கதான் அமைதிப் படையா மாறிட்டாங்களே! ஆமாம், மாமிக்கிட்டயிருந்து இந்தப் பூக்காரியை மட்டும்தான் தெரிஞ்சுட்டீங்களா இல்ல இன்னும் ஏதாவது பாக்கி இருக்கா?" என்று கேட்க,
"அட இன்னும் வேற இருக்கா, அப்படின்னா மாமியை மறுபடியும் பார்க்கும்போது கேட்டு வச்சுக்கணும்" என அவனது கிண்டல் தொடர,
"ஐயோ! வேணாம்! மாமி நேத்துதான் ஒரு லக்ஷார்ச்சனையே நடத்தி முடிச்சாங்க. நீங்க அவங்க கிட்ட எதுவும் கேட்கவே வேண்டாம்'' என்றாள் பாவமாக.
சிரித்துக்கொண்டே, "அதைப் பத்தி அப்பறமா யோசிக்கலாம், பாட்டி உன்ன ஏதாவது நிர்பந்தப் படுத்தினாங்களா மலர்? உனக்கு அன்கம்ஃபர்டபுலா இருந்தா சொல்லு. நான் பாட்டியை கன்வின்ஸ் பண்ணிக்கறேன்" என்றான் தன்மையுடன்.
அதை மறுக்கும் விதமாக, "நாட் அட் ஆல். பாட்டியோட ஆசையும் நியாயம்தான? அதனால எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல" என்றாள் மலர் வேகமாக.
அதில், 'ஹா.. ஹா..' என வாய் விட்டுச் சிரித்தவன், "அப்ப நம்ம கல்யாணத்துல உனக்கு முழு சம்மதம்னு சொல்லு" என நேரடியாக அவளது வார்த்தையாகக் கேட்கும் ஆவலில் ஈஸ்வர் வினவ,
"ம் ஆமாம்!" என்று பட்டெனச் சொல்லி, "ஆனா எனக்கு நீங்க ஒரு ஃபேவர் பண்ணனும் ஹீரோ, நான் கல்யாணத்துக்கு ஓகேன்னு சொன்னதும் உங்க பாட்டி எங்க பாட்டி, தாத்தா எல்லாரும் சேர்ந்து இன்னும் பன்னிரண்டு நாள்ல கல்யாணத்துக்கு டேட் ஃபிக்ஸ் பண்ணிட்டாங்க.
என்ன பிரச்சனைனா, டிரஸ் வாங்க நகை வாங்க அது இதுன்னு என்னால இப்ப அதிகமா டைம் ஸ்பென்ட் பண்ண முடியாது. நம்ம பெரியவங்க, குறிப்பா உங்க மாமியார் என்னை ஃப்ரீயா விட மாட்டாங்க. இந்த இக்கட்டுல இருந்து நீங்கதான் என்னைக் காப்பாத்தணும்" என்று முடித்தாள் மலர்.
'உங்க மாமியார்' என்ற வார்த்தையிலேயே அவளது மனது வெளிப்பட, அதில் திருப்தியுற்றவன், "என் மாமியார் மட்டுமில்ல உன் மாமியாரையும் சேர்த்து" மாமியார் என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்துச் சொன்னவன், "நான் டீல் பண்ணிக்கறேன் நீ முகூர்த்த நேரத்துக்குச் சரியா வந்துடுவ இல்ல!" என அவளை வாற,
தன்னையும் அறியாமல் 'உங்க மாமியார்' என்று சொல்லியதை நினைத்து நாக்கைக் கடித்தவள், "நீங்க இவ்ளோ நல்லவரா இருக்கும்போது வந்துதானே ஆகணும்" என்று மலர் கெத்தாகச் சொல்லவும்,
எதிர் முனையில் கம்பீரத்துடன் ஒலித்த அவனது சிரிப்பில், 'உங்களோட இந்தச் சிரிப்புக்காக என்ன வேணாலும் செய்யலாம் ஹீரோ!' என்று மனதில் எண்ணியவள், "கீழ எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க, நான் அப்பறமா பேசறேன்" என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தாள்.
இரவு நேர பணிக்குச் செல்வது, வேலை முடிந்து வீட்டிற்குத் தாமதமாக வருவது இதையெல்லாம் இனி அனுமதிக்கவே முடியாது என மகளிடம் சூடாமணி திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்.
பகல் நேரத்தில் வேலைக்குச் சென்றே ஆகவேண்டும், ஆகவே தன்னை எக்காரணம் கொண்டும் தடுக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் அதற்கு ஒப்புக்கொண்டாள் மலர்.
மகள் இந்த மட்டும் திருமணத்திற்குச் சம்மதித்ததே போதும், அவள் நேரத்திற்கு உண்டு உறங்கி ஓய்வெடுத்தால் சரி என்ற நிலையில் இருந்ததால் மேற்கொண்டு ஏதும் மறுப்புச் சொல்லவில்லை சூடாமணி.
மலர் கேட்டுக்கொண்டதால் புடவைகள், நகைகள் என வாங்கக் கடை கடையாகச் செல்லாமல், அனைத்தையும் அவள் வீட்டில் இருக்கும் நேரம் பிரபல கடைகளிலிருந்து வீட்டிற்கே வரவழைத்து அனைத்தையும் வாங்க ஏற்பாடு செய்துவிட்டான் ஈஸ்வர். அவனது அக்கறையுடனான புரிதலை நினைத்து பெருமையாக இருந்து மலருக்கு.
ஜெய் இரவு பகல் பாராமல் அவனது பணியில் மூழ்கியிருக்க அவனால் மலருடைய திருமண வேலைகள் எதிலும் ஈடுபட முடியாமல் போனது. அடிக்கடி கைப்பேசியில் அனைத்தையும் கேட்டுக்கொள்வதுடன் சரி.
இன்னும் இரண்டே தினங்களில் திருமணம் என்ற நிலையில் வரவேற்பறையில் அனைவருடனும் அமர்ந்து மலர் பேசிக்கொண்டிருக்கும் சமயம் அவளது கைப்பேசி ஒலித்தது.
மாம்பலத்தில் அவர்களது ஃப்ளாட்டில் குடியிருக்கும் ஜென்னி அழைத்திருந்தாள். கோபாலன் மாமா மாடிப்படியில் வழுக்கி விழுந்து அவரது காலில் அடிபட்டிருந்தது. அந்தத் தகவலை மலரிடம் சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தாள் அவள்.
அதைக் கேள்விப்பட்டவுடன் மலர் பரபரப்பாக மாம்பலம் கிளம்பவும் மகளைத் தடுத்த சூடாமணி, "அங்கயே டாக்டர் இருகாங்க. அக்கம் பக்கம் எப்படியும் உதவிக்கு வருவாங்க. இந்த நிலைமைல நீ போய்தான் ஆகணும்னு எதுவும் இல்லை மலரு" என்று சொல்ல,
"அம்மா மாமி பாவம்மா, இந்த நிலைமைல யாராவது பார்த்துப்பாங்கன்னு அவங்கள தனியா விடறது ரொம்ப தப்பு. அண்ணா இன்னும் கம்பெனியில இருந்தே வரல. அப்பா கல்யாண வேலைல பிசியா இருகாங்க. வேற யாரு மாமிக்கு ஹெல்ப் பண்ணுவாங்க சொல்லுங்க? நான் சும்மாதான இருக்கேன்? மாமாவை ஹாஸ்பிட்டல்ல காண்பிச்சிட்டு நைட்டே வந்துடறேன்" என்றாள் மலர் பிடிவாதத்துடன்.
மறுத்துக் கூற முடியாமல், "சரி… சரி… இராத்திரி நேரத்துலல்லாம் வரவேண்டாம். அங்கேயே இருந்துட்டு காலைல சீக்கிரம் வந்திடு!" என அவளை அனுமதித்தார் சூடாமணி அரை மனதாக.
மாம்பலம் சென்று, மாமி உடன் வர மாமாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாள் மலர்.
அவருக்குக் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்க, அதற்குக் கட்டுப்போட்டுப் பத்திரமாக அவரை அவர்களுடைய வீட்டில் சேர்த்துவிட்டு அடுத்த நாள் காலை தனது வீட்டிற்குத் திரும்ப வந்துவிட்டாள்.
கோபாலன் மாமாவிற்கு ஏற்பட்டது விபத்து அல்ல அது ஒரு திட்டமிட்ட சதி என்பது புரிந்திருந்தால் மேற்கொண்டு மிகப்பெரிய ஆபத்தில் சிக்காமல் எச்சரிக்கையுடன் செயல்பட்டிருப்பாளோ அணிமாமலர்?!
***
ஜெகதீஸ்வரன் அணிமாமலர் திருமண நாள், திருவிழாக் கோலமாக விடிந்தது.
திருநீர்மலை நீர்வண்ணப் பெருமாள் கோவிலில் மலருக்குத் திருமணம் செய்வதாக சூடாமணி வேண்டுதல் வைத்திருக்க, அதிகாலை முகூர்த்தத்தில் கோல்டன் குமார் குடும்பத்தினர் உட்பட மிக நெருங்கிய உறவினர்கள் சூழ அங்கே எளிமையாக நடந்து முடிந்தது அவர்களுடைய திருமணம்.
பஞ்சகச்சமாக உடுத்திய வேட்டியில் தோள்களில் அங்கவஸ்திரம் தரித்து பூமாலைகள் கனக்க மணமேடையில் வந்து அமர்ந்தது முதல் யாரையோ எதிர்பார்த்தவண்ணம் சுற்றிலும் அலைபாய்ந்து கொண்டிருந்தது ஜெகதீஸ்வரனின் பார்வை.
மனம் முழுதும் நிறைந்திருந்த மலரையே மணக்கும் மகிழ்ச்சியையும் தாண்டி அவ்வளவு எதிர்பார்ப்பையும் ஏமாற்றத்தையும் சுமந்திருந்தது அவனது முகம்.
மஞ்சள் நீரில் நனைத்துக் காய வைத்த, சிவப்பு நிற ஒன்பது கஜ பருத்திப் புடவையில் பாந்தமாக மடிசார் உடுத்தி, பின்னல் ஜடை தரித்து எளிய நகைகள் அணிந்து அழகிய வெள்ளைக் கற்கள் பதித்தக் குடை ஜிமிக்கி காதில் ஊஞ்சல் ஆட மணப்பெண்ணிற்கே உரியப் பொலிவுடனும் சிறிய நாணத்துடனும் அவன் அருகில் வந்து மலர் அமரவும், அதன் பிறகு தனது எண்ணங்களை அவள் புறம் திருப்பியவனாக திருமண சடங்குகளில் ஒன்றி, குறித்த சுப வேளையில் அணிமாமலரின் வெண் சங்கு கழுத்தில் மஞ்சள் நாணைப் பூட்டினான் ஜெகதீஸ்வரன்.
திருமணச் சடங்குகள் முடிந்தவுடன் அக்கோவிலில் குடிக்கொண்டிருக்கும் அணிமாமலர்மங்கைத் தாயாரையும் நீர்வண்ணப் பெருமாளையும் தரிசனம் செய்துவிட்டு அனைவரும் ஜெகதீஸ்வரனின் இல்லத்திற்கு வந்து சேர்ந்தனர்.
மணமக்களுக்குப் பாலும் பழமும் கொடுத்து, பின்பு மருமகளை விளக்கேற்ற வைத்தார் சாருமதி.
அங்கேயே அனைவருக்கும் காலை உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருக்க அனைவரும் உண்டு முடித்து ஓய்வெடுக்கச் சென்றனர்.
மலரைத் தனது அறைக்கு அழைத்து வந்த ஜீவிதா அவளது கனமாக ஜடை, மற்றும் மாமி பட்டம், அத்தை பட்டம் என முறைகளுக்காக அவள் நெற்றியில் கட்டப்பட்டிருந்த பட்டம் என்று சொல்லப்படும் மெல்லிய நூலினால் கோர்க்கப்பட்ட வெள்ளித் தகடுகளைக் கழற்ற மலருக்கு உதவிசெய்தபடி, "மூணு மணிக்கு மேலதான் உங்களை ரிசப்ஷனுக்கு ரெடி செய்ய பியூட்டீஷியன் வருவாங்க. அதுவரைக்கும் நீங்க இங்கயே ரெஸ்ட் எடுங்க அண்ணி!" என்றாள்.
"இந்தப் புடவை அன்கம்ஃபர்டபிளா இருக்கு ஜீவிக்குட்டி, சேஞ்ஜ் பண்ணனும். அம்மா கிட்ட சொல்லி வேற சாரி எடுத்துக் கொடுக்க சொல்றியா!" என மலர் கேட்கவும், அவரிடம் சொல்லுவதாக சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள் ஜீவிதா.
சில நிமிடங்களில் அங்கே வந்த சூடாமணி, "அவசரப்படாத மலரு! பெரியவங்க யாராவது உன்ன பார்க்கணும்னு வருவாங்க. மதியம் லன்ச் சாப்பிட்ட பிறகு முகூர்த்த புடவைய மாத்திக்கலாம். அதுவரைக்கும் எதுவும் பேசாம ரெஸ்ட் எடு!" என்று சொல்லிவிட்டார்.
அந்த வீட்டில் அவளது மாற்று உடைகள் எங்கே வைக்கப்பட்டிருக்கிறது என்பது வேறு தெரியவில்லை மலருக்கு. அதை யாரிடம் கேட்கலாம் என அவள் யோசிக்க, அதே சமயம் முகூர்த்த நேரத்தில் யாரையோ எதிர்பார்த்துக் காத்திருந்த ஈஸ்வரின் முகம் அவளது நினைவில் வந்து போனது.
அதைப் பற்றி அறிந்துகொள்ளும் பொருட்டு தனது கைப்பேசியில் குமாரை அழைத்தாள் மலர். "சொல்லுடாம்மா மலரு!" என்று பாசத்துடன் ஒலித்தது அவருடைய குரல்.
"மாம்ஸ்! என்ன ஆச்சு உங்க அபிமான புத்ரனுக்கு?" என்று மலர் கேட்கவும் "யாரைடா சொல்ற?" என்றார் புரியாமல்.
"வேற யாரப்பத்திக் கேட்கப் போறேன்? எல்லாம் உங்க வில்லனத்தான்! காலைல அவரோட முகமே சரியில்ல. யாரையோ எதிர்பார்த்துட்டே இருந்த மாதிரி தெரிஞ்சுது. யாரை மாம்ஸ்?!" என்று கேட்டாள் விளக்கமாக.
சில நொடி மௌனம் காத்தவர், "எல்லாம் அந்த கருணாகரனைதான்டா. வேற யார?" என்று சொல்லி ஒரு பெரு மூச்சை வெளியேற்றினார் குமார்.
"ஓ... அந்த மினிஸ்டரையா?” என்றவள் அவங்களுக்கு அழைப்பு வெச்சாங்களா என்ன?!" என்று அதிசயிக்க,
"ஏன் அழைக்காம? உன் ஹீரோ சொன்னதால நானும் மதியும் நேர்லயே போய் அழைப்பு வெச்சோம்" என்றார் ஆயாசத்துடன்.
"உங்க சொந்த அக்கா மகன்தான மாமா, அவரு? ஏன் இப்படி ஓவர் ஸ்டிஃப்பா இருக்காரு?" என்று ஆதங்கத்துடன் கேட்டுவிட்டு அழைப்பைத் துண்டித்தாள் மலர்.
சில நிமிடத்துக்கெல்லாம், மறுபடியும் மலருடைய எண்ணிலிருந்து அழைப்பு வரவும் கேள்வியுடன் அதை ஏற்று குமார் காதில் பொறுத்த, "மாம்ஸ்! அந்த மினிஸ்டர் இப்ப அவங்க வீட்டுல இருப்பாரா?" என்று மலர் கேட்கவும்,
அதில் இருக்கும் உள் குத்து புரியாமல் அப்பாவியாக "இருந்தாலும் இருப்பான் கண்ணா! அவன் பத்து மணிக்கு மேலதான் வெளியில எங்கேயும் கிளம்புவான். ரெண்டு நாள் முன்னதான் ஏதோ பொதுக் கூட்டத்துக்காக டெல்லியிலிருந்து வந்திருக்கான். எங்கக்காவும் சொன்னாங்க, டிவி நியூஸ்லேயும் பார்த்தேன்!" என்று சொல்லி மலரிடம் வலுவில் வந்து மாட்டிக்கொண்டார் கோல்டன் குமார்.
"அப்படின்னா சரி, நான் எஸ் ஆகி வெளியில வந்துட்டேன். நீங்க உடனே செக்யூரிடி பூத் கிட்ட வாங்க. நாம அந்த மினிஸ்டர் வீட்டுக்குப் போகலாம்!" என்று சொல்லி அவரது இரத்தக் கொதிப்பை எகிற வைத்தாள் அணிமாமலர்!
Comments