top of page

Anbenum Idhazhgal Malarattume!13

Updated: Apr 5, 2023

அணிமா-13


ஈஸ்வர் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று புரியாமல் தனது கையை விடுவித்துக்கொள்ளும் எண்ணத்தைக் கூட மறந்து அப்படியே உறைந்து போய் நின்றாள் மலர்.


அவளைப் பேசவிட்டால் என்ன சொல்வாளோ என்ற எண்ணம் தோன்றவும், "ஓஹோ நான் உன்னோட ஃபேவரைட் ஸ்டார் அதனாலதான் என் பேரைப் பச்சைக் குத்தி வெச்சிருக்கியா மலர்? உன்ன பார்த்தால் அப்படி ஒண்ணும் மெச்யூரிட்டி இல்லாத பொண்ணு மாதிரியும் தெரியலியே!" என்று அவளைச் சீண்டினான் ஈஸ்வர்.


அவன் சொன்ன நொடி சுறு சுறுவென கோபம் ஏற, "யாருக்கு மெச்யூரிட்டி இல்ல எனக்கா?" என்று கொதித்தவள்,


"அன்னைக்கு, 'பார்த்தியா எப்படியும் கையை வாஷ் பண்ணும்போது என் ஆட்டோகிராப்பும் போயிடும், உனக்கு எதுக்கு இது’ன்னு ஃபீல் பண்ணது யாரு, நீங்கதான? அதனாலதான் மனசு கேக்காம இதை டாட்டூவா மாத்திட்டேன்" என்றாள் காட்டமாக.


மனதிற்குள் நெகிழ்ந்தாலும், "நான் அப்படி சொன்னா, அதுக்காக நீ வலியைப் பொறுத்துட்டு அதை டாட்டூவா வரையணுமா என்ன? உனக்கு ஏன் ஃபீல் ஆச்சு?" என்ற ஈஸ்வர், "என்னை உனக்குப் பிடிச்சதுனாலதான்னு ஒத்துக்கோ. அதை விட்டுட்டு சும்மா மழுப்பாத மலர்" என்றவாறே அவளது கையை விடுவித்தான்.


விடுபட்ட கையை உதறிக்கொண்ட மலர் கொஞ்சம் கோபமாக, "ஆமாம் பிடிச்சிருக்கு அதனாலதான் டாட்டூ வரைஞ்சிடேன்! எனக்கு உங்களைப் பிடிக்க உங்களுக்கே தெரியாத பல காரணம் இருக்கு. ஆனா எனக்கு மட்டும் பிடிச்சிருந்தா போதுமா?" என்று நிறுத்த,


அவளை ஒரு வியந்த பார்வை பார்த்துவிட்டு, "இதுக்கு பதிலை நான் முதல்லயே சொல்லிட்டேன். நீ கவனிக்கலேன்னா மறுபடியும் சொல்றேன், தெளிவா கேட்டுக்கோ. எனக்கும் உன்னைப் பிடிச்சிருக்கு. நீ சொன்னது போல, எனக்கு உன்னைப் பிடிக்கறதுக்கு உனக்கே தெரியாத பல காரணம் எங்கிட்டயும் இருக்கு. அதனால வீண் பிடிவாதம் பிடிக்காம கல்யாணத்துக்கு ஓகே சொல்லு" என்று ஈஸ்வர் சொல்லவும் முதலில் அவனுக்கு ஏற்பட்ட வியப்பு மலரையும் தொற்றிக்கொண்டது.


ஆனாலும் சற்று நிதானித்தவள், “பிடிச்சிருக்கு அப்படிங்கற ஒரே காரணத்திற்காக உடனே கல்யாணமெல்லாம் செஞ்சுக்க முடியாது. எனக்கு கொஞ்சம் டைம் வேணும்" என்று கொஞ்சம் இறங்கி வர,


'அப்படி வா வழிக்கு' என்ற எண்ணத்தில் புன்னகை அரும்ப, "எனக்கும் உடனே கல்யாணம் செஞ்சுக்கணும்ங்கற எண்ணமெல்லாம் இல்ல. ஆனா பாட்டி அவசரப் பட்டாங்கன்னா என்னால ஒண்ணும் செய்ய முடியாது. நம்ம முடிவ இப்ப போய் சொன்னா, எண்ணி பத்தே நாளுக்குள்ள கல்யாணத்த முடிக்கச் சொல்லி அவங்க அவசரப் படுத்துவாங்க. அப்பறம் என்னால மறுத்துப் பேச முடியாது" என்ற ஈஸ்வர், "அதனால நாம உடனே கல்யாணத்துக்கு டேட் ஃபிக்ஸ் பண்ணிட்டு மீடியால எல்லாம் ஒரு அனௌன்ஸ்மென்ட் கொடுத்துடுவோம்" என்றான்.


'ஐயோ இப்படி புரிஞ்சுக்காம கொல்றானே' என்ற எரிச்சல் மேலோங்க "இதோ பாருங்க, எனக்கு இப்ப கல்யாணம் செய்துக்கற சூழ்நிலை இல்ல. உங்களுக்குத் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல. நான் ஒரு கொலை கேஸ்ல மாட்டியிருக்கேன். அது ஜெய்யைத் தவிர வேற யாருக்கும் தெரியாது. அது மட்டுமில்ல ஹீரோ, கல்யாணத்துக்குப் பிறகு நமக்குள்ள எந்த ஒளிவு மறைவும் இருக்கக் கூடாதுன்னு நான் நினைக்கிறேன். ஆனா இப்ப இருக்கற நிலைமையில என்னால உங்களுக்கு உண்மையா இருக்க முடியாது. முதல்ல எல்லாப் பிரச்சனையும் சரி செஞ்சிட்டு நிம்மதியா இந்தக் கல்யாணத்தைப் பண்ணிக்கலாம். அதிகம் இல்ல, இன்னும் மூணு மாசம் மட்டும் எனக்கு டைம் குடுங்க போதும்" என்று சொல்லிக்கொண்டே போனாள் மலர்.


அவளது வெளிப்படையான பேச்சை அமைதியாகக் கேட்டுக்கொண்டவன், "கொலை கேஸ் பத்தின கவலையை விடு. நீ வேற எந்தப் பிரச்சனையை இன்னும் சரி செய்யணும்? அதைச் சொல்லு. நானும் உனக்கு ஹெல்ப் பண்றேன்" என்று ஈஸ்வர் மனதிலிருந்து சொல்ல,


'கொலை வழக்கு பற்றிய தகவலை இவன் எப்படி இவ்வளவு சுலபமாக எடுத்துக்கொண்டான்' என்று அதிர்ந்தாள் மலர்.


‘ஒரு வேளை ஜெய் முன்னமே இதைப் பற்றி சொல்லியிருப்பானோ?' என்ற கேள்வி மனதில் எழவும் 'அவனும் கட்சி மாறிட்டான் போலவே' என்ற எண்ணத்தில் அவளது பிடிவாதம் மேலோங்க, "அது என்னோட பிரச்சன. அதை நான்தான் ஹாண்டில் பண்ணனும். சோ ப்ளீஸ்! புரிஞ்சுக்கோங்க என்னை எதுவும் கேட்டு கம்பல் பண்ணாதீங்க" என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டாள்.


உடனே தனது கைப்பேசியில் ஜெய்யை அழைத்த ஈஸ்வர், "எங்க இருக்க ஜெய்?' என்று கேட்க, "மலர் வீட்டுல இருக்கேன்ணா ஏன்?" என்றான் ஜெய்.


"நானும் இங்கதான் இருக்கேன் நீ எப்ப வந்த" என்று வியப்புடன் ஈஸ்வர் கேட்கவும்,


"இப்பதான்ணா, அத்தை உடனே வரச்சொல்லி ஃபோன் பண்ணாங்கண்ணா. அம்மா அப்பாவை அழைச்சிட்டு வந்தேன். காரை பார்க் பண்ணிட்டு இருக்கேன்" என்று ஜெய் சொல்லவும்,


"நேர மாடிக்கு வா முக்கியமா பேசணும்!" என்றான் ஈஸ்வர். சில நிமிடங்கள் மௌனத்தில் கழிய அங்கே வந்தான் ஜெய்.


மலர் நின்றிருந்த தோரணையும் தீவிர யோசனையில் இறுகிய ஈஸ்வரின் முகமும் அவனுள் பல கேள்விகளை எழுப்ப, "என்ன ஆச்சுண்ணா" என்று நேரடியாக ஈஸ்வரிடம் கேட்டான்.


அதில் கொதி நிலையை எட்டிய மலர், "என்ன... புதுசா வந்த இந்த அண்ணா உனக்கு முக்கியமா போயிட்டாங்களா? என்னையெல்லாம் பார்த்தா ஒரு மனுஷியா தெரியலையா உனக்கு" என்று எகிற,


"அடங்குடி, நீ சொன்னதுதான் சரி. மனுஷி இல்ல. நீ ராட்சசிதான். என்னங்கற இப்ப? நான் கேட்ட கேள்விக்கெல்லாம் ஏதாவது பதில் சொன்னியா நீ? நான் மட்டும் உன்கிட்ட எல்லாத்தையும் சொல்லணும்னு ஏன் எதிர்பார்கற?" என்று அவளை மடக்கினான் ஜெய்.


அதில் அவள் வாய் மூடி மௌனிக்க, "நீ சொன்னதெல்லாம் யோசிச்சு பார்த்தேன் ஜெய், யாருக்கும் பிரச்சன வராம இந்த நிலைமைய ஹாண்டில் பண்ணலாம்னுதான் பாட்டிகிட்ட சொல்லி, பொண்ணுக் கேட்டு வந்திருக்கோம்" என்றவன் மலர் சொன்ன அனைத்தையும் சொல்லி முடித்தான் ஈஸ்வர்.


ஏதோ புரிவதுபோல் இருக்கவே, "ஓ என்னை இந்த கேஸ்ல இருந்து வெளியில கொண்டு வரத்தான் இந்த அவசர கல்யாணமா? சத்தியமா இதை நான் உங்க கிட்ட எதிர்ப்பார்க்கல" என்று இருவருக்கும் பொதுவாக மலர் வருத்தத்துடன் சொல்லவும்,


"ஏன் மலர், இன்னும் கொஞ்சம் கூட சீரியஸ்நெஸ் இல்லாம கிறுக்குத்தனமா பேசிட்டு இருக்க. இப்ப இதைத் தவிர நமக்கு வேற ஆப்ஷன் இல்ல, புரிஞ்சுக்கோ" என்று கோபத்துடன் அவளைக் கடிந்துகொண்டான் ஜெய்.


"யாருக்கு எனக்கா சீரியஸ்னஸ் இல்ல? எனக்கு அப்பாற்பட்டு நடக்கற பிரச்சினைக்கெல்லாம் நான் என்ன பண்ணமுடியும் ஜெய்? நான் பர்சனலா சில விஷயங்கள் செஞ்சுட்டுதான் இருக்கேன், இல்லன்னு சொல்லல. ஆனா அதையும் இந்தக் கொலையையும் சம்மந்தப்படுத்தினா, அது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுற மாதிரி.


எனக்கு நல்லாவே தெரியும் இது எனக்கு சம்மந்தமே இல்லாத வேற ஏதோ ஒரு பிரச்சின. அதனால எது வந்தாலும், என்னால எதிர்த்து நின்னு ஃபேஸ் பண்ண முடியும் ஜெய். இப்படிப்பட்ட குறுக்கு வழியிலெல்லாம் போக வேண்டிய அவசியம் இல்ல.


கல்யாணம்ங்கறது இது மாதிரி காரணத்துக்காகல்லாம் நடக்கக் கூடாது. அவர் காதல்னு சொன்னதும் ஒரு நிமிஷம் நானே ஏமாந்துட்டேன் ஜெய்" என்றாள் மலர் குரல் தழுதழுக்க. ஏமாற்றத்தின் வலி அப்பட்டமாகத் தெரிந்தது அவளிடம்.


உறுமாலாக, "ஏய்!" என்ற ஜெய், "என்னடி விட்டா பேசிட்டே போற. எங்க ரெண்டு பேரையும் சேர்த்து வெச்சு இன்சல்ட் பண்றடீ நீ. அவர் உண்மையாகவே உன்னை லவ் பண்றார் லூசு! ஈஸ்வர் அண்ணாவைத் தவிர வேறு யாராலயும் உன்ன இந்த அளவுக்குப் புரிஞ்சுக்க முடியாது மலர். இவங்கள கல்யாணம் செஞ்சுக்க நீ கொடுத்து வெச்சிருக்கணும். இவங்களைத் தவிர நீ வேற யாரைக் கட்டினாலும், அன்னைக்கு நீ சொன்னியே அது போல கோர்ட் வாசல்ல போய்தான் நிக்கணும்" என்று முடித்தான்.


அவனது வார்த்தைகள் அவளது மனதை நெகிழ வைக்க "சாரி!" என்றாள் மலர் மனதிலிருந்து.


சில நொடி அமைதிக்குப் பிறகு, "ஆனா, இவரோட பேர் என்னாலயும் கெடறத நான் விரும்பல ஜெய். இவரை மீடியால, மக்கள் முன்னால சர்ச்சையில் சிக்க வைக்க எனக்கு இஷ்டம் இல்ல. அதனால என்ன வருதோ அதை ஃபேஸ் பண்ணிக்கலாம் ஜெய்" என்றாள் தெளிவாக.


"இல்ல மலர் அதை நம்மளால தாங்க முடியாது. பெரியவங்க எல்லாரையும் கொஞ்சம் நினைச்சு பாரு" என்று ஜெய் எடுத்துச் சொல்ல,


கொஞ்சமும் யோசிக்காமல், "அதுதான் நீ இருக்கியே ஜெய்! நீ தான் ஏ.சி.பி ஆச்சே, நீ பார்த்துக்க மாட்டியா?" என்று கேட்கவும்,


"நீ என்ன நினைச்சிட்டு இருக்க மொத்த போலீஸ் டிபார்ட்மெண்ட்டுக்கும் நான் தான் ஹயர் அத்தாரிட்டின்னா. ஒரு எக்ஸ்டன்ட்க்கு மேல என்னால ஒண்ணுமே செய்ய முடியாது. அதுதான் உண்மை. இப்ப நான் டீல் பண்ணிட்டு இருக்கற குழந்தைகள் மிஸ்ஸிங் கேஸ்ல கூட என்னால ஒரு மண்ணும் பு.." என்றவன் நிறுத்தி, "செய்ய முடியல மலர். எவ்வளவு குறுக்கீடு தெரியுமா? நான் செம்ம லவ்வோட இந்த ஐ.பி.ஸ் படிப்பைப் படிச்சேன். இப்ப வேலையில சேர்ந்த பிறகு எனக்கு எவ்வளவு பெரிய காதல் தோல்வி தெரியுமா உனக்கு? சீக்கிரமே பிரேக் அப் ஆனாலும் ஆச்சரிய படறதுக்கில்ல. ஐ மீன், வேலையையே விட்டுடலாம்னு தோணுது மலர், புரிஞ்சிக்கோ" என்ற ஜெய்,


"இந்த கேஸ்ல நீ இன்வால்வ் ஆகலன்னா நான் எப்பவோ ரிசைன் பண்ணியிருப்பேன்" என்று முடித்தான்.


இடை புகாமல், இருவரின் சொற்போரையும் கவனித்துக்கொண்டிருந்தான் ஈஸ்வர்.


ஜெய் சொன்ன அனைத்தையும் கேட்டதும் ஏனோ மூச்சு முட்டுவதுபோல் தோன்ற, ஏதும் பேசாமல் அமைதியாகப் போய் அங்கே இருக்கும் திண்ணையில் கண்களை மூடி அமர்ந்துகொண்டாள்.


சில நிமிடங்கள் மௌனத்தில் கழிய ஒரு முடிவுக்கு வந்தவளாக நிமிர்ந்து நின்றவள், "ரெண்டு பேரும் வாங்க கீழே போகலாம்" என்று சொல்ல,


"என்ன டிசைட் பண்ண மலர்" என்று கேட்டான் ஜெய் பேராவலுடன்.


"இப்போதைக்குக் கல்யாணத்தைப் பத்தின பேச்சே வேண்டாம். எது வந்தாலும் மோதி பார்த்துடலாம். இதுதான் இப்போதைக்கு என்னோட டெசெஷன், ஓகேவா?" என்றாள் மலர் திண்ணமாக.


ஜெய் எதோ சொல்ல எத்தனிக்கவும், "விடு ஜெய் அவள கம்பல் பண்ணாத. அவ சொன்ன மாதிரியே எது வந்தாலும் மோதி பார்த்துடலாம். கல்யாணம் ஆனாலும் சரி, ஆகலேன்னாலும் சரி, இந்த விஷயத்துல நான் இவ கூடதான் இருப்பேன்" என்று அந்த வாக்குவாதத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தான் ஈஸ்வர்.


அவனை மெச்சுதலுடன் ஒரு பார்வை பார்த்துவிட்டு ஜெய்யை முறைத்தவாறே அங்கிருந்து சென்றாள் மலர்.


மலரைப் பற்றிய ஈஸ்வரின் புரிதலைக் குறிப்பிட்டு, "இதைதான் சொன்னேன் மலர்" என்றான் ஜெய் சத்தமாக. அதைக் கேட்டுப் புன்னகையில் மலர்ந்தாள் மலர்.


"அண்ணா, நீங்களாகப் பொண்ணு கேட்டு வந்திருக்கீங்க. மலர் வேண்டாம்னு சொன்னா வீட்டுல எல்லாருக்கும் சங்கடமாகிப் போகுமே. உங்க பாட்டி என்ன நினைப்பாங்க. இதனால பிரபா அத்தானுக்கும் ஜீவிதாவுக்கும் பிரச்சனை ஆகாம இருக்கணுமே" என்று வருந்தினான்.


"சில் ஜெய், ரொம்ப யோசிக்காத. என்னை இன்சல்ட் பண்ற மாதிரி எதையும் மலர் செய்யவே மாட்டா" என்று சொல்லிவிட்டு கீழே இறங்கி வந்தான் ஈஸ்வர்.


அனைவரும் ஆவலுடன் மலருடைய பதிலுக்காகக் காத்திருக்க, அவள் அங்கே வரவும், "என்ன டிசைட் பண்ண மலர்?" என்று கவலையுடன் சூடாமணி கேட்க,


ஜெய் மற்றும் ஈஸ்வருக்காக காத்திருந்தவள் அவர்கள் வந்துசேர, "எனக்கு ஹீ" என்று தொடங்கி, "ஈஸ்வர் மாமாவைப் பிடிச்சிருக்கு!" என்று உடைத்துச் சொல்லிவிட்டு,


"ஆனா இப்ப கல்யாணத்தைப் பத்தி எதுவும் என்னால டிசைட் பண்ண முடியாது. ஸோ, மூணு மாசம் டைம் குடுங்க. இல்லனா, இந்தக் கல்யாண பேச்சையே எடுக்காதீங்க" என்று மற்றவர் பேச இடம் கொடுக்காமல் சொல்லி முடித்தாள்.


சூடாமணி அவளை முறைத்துக் கொண்டிருக்க ஈஸ்வர் ஜெய்யை 'எப்புடி?' என்பதுபோல் பார்த்து வைத்தான்.


பேரனின் முகத்தில் மிளிர்ந்த தெளிவைக் கண்டுகொண்ட செங்கமலம் பாட்டி மட்டும் சிரித்துக்கொண்டே, "அதுக்குள்ள எங்க ஈஸ்வருக்கு வேற பெண்ணை பார்த்துட்டா என்னம்மா செய்வ மலரூ?" என்று மலரை வம்புக்கு இழுக்க,


"உங்களை கடத்திட்டுப் போய் வெச்சிட்டு, தாலி கட்ட சொல்லி உங்கப் பேரனை மிரட்டுவேன் பாட்டி!" என்றாள் மலர் அடக்கப்பட்ட சிரிப்புடன். அவள் சொன்ன பாவனையில் எல்லோருமே பக்கென்று சிரித்துவிட, அதுவரை அங்கே இருந்த அழுத்தமான சூழல் ஒரு முடிவுக்கு வந்தது.


அனைவரும் அங்கிருந்து சென்ற பிறகு சூடாமணிதான் மகளை வறுத்து எடுத்தார்.


எப்பொழுதும் உதவிக் கரம் நீட்டும் அவளது ராசாவும் ரோசாவும் கூட மகளுடைய கட்சியில் சேர்ந்துவிடவும் மலரின் நிலைதான் பரிதாபகரமாகிப்போனது.


***


அடுத்த நாள் மாம்பலத்தில், அந்தக் குடியிருப்பிலிருந்து வெளியில் வந்துகொண்டிருந்தாள் மலர். அப்பொழுது அங்கே பிள்ளைகளுடன் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் ஓடி வந்து அவளது கையைப் பற்றிக்கொள்ள,


அவளை வழி அனுப்புவதற்காகப் பின் தொடர்ந்து வந்த சுசீலா மாமி, "கடங்காரி, ராட்சசி, அடங்காபிடாரி, சொல்றத எங்கயாவது காதுல வாங்கறாளா பாருங்கோ" என்று மாமாவிடம் அங்கலாய்க்க,


"கண்ணு பெரியவங்க பேசும்போது இங்க இருக்கக் கூடாது. நீ போய் உன் ஃப்ரெண்ட்ஸ் கூட விளையாடு" என்று வாஞ்சையுடன் சொல்லி அந்தக் குட்டியை அனுப்பிவிட்டு, "மாமீ, வெறும் சத நாமாவளின்னு நினைச்சேன், இது லக்ஷார்சனையா இருக்கும் போல இருக்கே. ப்ளீஸ் மாமி, அம்மாவே என்னை வெச்சு செஞ்சுட்டாங்க. நீங்களாவது புரிஞ்சிக்கோங்க... மீ பாவம்" என்று கெஞ்சினாள் மலர்.


"யாரோ செய்யற கொலையெல்லாம் உன் தலையில வந்து விடியறதேடீ கொழந்த. யாரோ யாரையோ கொலை பண்ணி எரிச்சான்னா அதுக்கு உன்னை அரெஸ்ட் பண்ணுவானா அந்த ஜெய் கடன்காரன். நீயாவது அவன் சொல்றத கேட்டுத் தொலையலாம் இல்ல. உனக்கு என்னடி குழந்த தலையெழுத்து" என்று மாமி புலம்பலில் இறங்க, அந்த நேரத்தில் ஒரு பொது இடத்தில் மேலும் பேச்சை வளர்ப்பது சரியில்லை என்ற எச்சரிக்கை மேலிட, "இது இப்போதைக்கு ஒரு முடிவுக்கு வராது போல இருக்கே. அதுவும் பகல்ல பக்கம் பார்த்து பேசணும் மாமி. எனி வே, மீ எஸ்கேப்... பை" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து பறந்து போனாள் மலர் அவளது வாகனத்தில்.


மாமி மறுபடியும் சொன்னதையே சொல்லி தனது புலம்பலை மாமாவிடம் தொடரவும், "மலர் தப்பா சொல்லிட்டாடி" என்று சொன்ன மாமாவை மாமி ஒரு புரியாத பார்வை பார்க்க,


"இல்ல இது லக்ஷார்சனை இல்ல கோடி அர்ச்சனை" என்றவர் நான் கோதண்ட ராமர் கோவிலுக்குப் போய்ட்டு வரேன்" என்று மாமியிடமிருந்து தப்பித்து ஓடியே போனார் கோபாலன் மாமா.


***


இரவுப் பணி முடிந்து வீட்டிற்கு வந்த மலர் அசந்து உறங்கிக் கொண்டிருக்க அவளது கைபேசி ஓயாமல் இசைத்துக் கொண்டே இருந்தது.


முயன்று கண்களைப் பிரித்தவள் கைப்பேசியை எடுத்து காதிற்குக் கொடுக்க, "மலர் முக்கியமான விஷயம். உனக்கு ஒரு வாய்ஸ் அனுப்பியிருக்கேன் கொஞ்சம் கேளு. மீதியை நேர்ல வந்து சொல்றேன்" என்று சொல்லி அவளுக்குப் பேச இடம் கொடுக்காமல் அழைப்பைத் துண்டித்தான் ஜெய்.


அதில் தூக்கம் கலைந்து அவளது கைப்பேசியைப் பார்க்க வாட்சப்பில் ஜெய் ஒரு ஒலிப்பதிவை அனுப்பியிருந்தான். அவள் அதை ஓடவிட, கரகரப்பான குரலில் உடைந்த தமிழில் ஒருவன் பேசிக்கொண்டிருந்தான்.


முதல் முறை கேட்கும் பொழுது சரியாகப் புரியாமல் அதை மறுபடியும் போட்டுக் கேட்டாள் மலர்.


"நான் படிச்ச ஆளுங்க கிடையாது, சாதாரண கூலிங்க. ஆனாக்க எனக்கு கோபம் கொன்சம் அதிகம் வரும் அய்யாக்காரு. அதே கோபத்துலோதாங்க நேனு ஆ குக்காலனு (அந்த நாய்களை) மர்டர் செஞ்ச!


உயிரா இருக்க கொளுத்துனா, அது எப்டி இருக்கோம் தெரியவானா. அதனாலதானு கொளுத்துனே. அந்த மலரு பொண்ணு மஞ்சி வாடு. அனி ரொம்போ நல்லதுங்கோ. அது நா தல்லி. ம்ம் அதுதாங்கோ அம்மா! அத உட்டுடுங்கோ! நீங்கோ போலீசெல்லா தம்முந்தே நன்னு அரெஸ்ட் சேசுக்கோண்டி”(தைரியம் இருந்தால் என்னை கைது செய்யுங்கள்) என்று சவாலாகப் பேசி முடித்திருந்தான் அவன்.


நடப்பது அனைத்தும் நிஜமா அல்லது கனவா என்பது புரியாமல் மலைத்துப் போனாள் அணிமாமலர்.


அதே நேரம் அதே ஒலிப்பதிவைதான் கேட்டுக்கொண்டிருந்தான் ஜெகதீஸ்வரனும்.

Comments


© KPN NOVELS COPY PROTECT
bottom of page