top of page

Anbenum Idhazhgal Malarattume! 12*

அணிமா-12


ஜெகதீஸ்வரன் அவசரமாக அழைத்ததன் பேரில் தனது வேலைகளையெல்லாம் அப்படியே விட்டுவிட்டு ஈ.ஸீ.ஆர் சென்றான் ஜெய்.


சமீப காலமாக மலரின் நடவடிக்கைகள் ஈஸ்வர் சொல்லித்தான் அவனுக்குத் தெரியவந்தது. அவளது இதுபோன்ற வினோதமான நடவடிக்கைகளுக்குக் காரணம்தான் என்ன என்று யோசிக்கத் தொடங்கினான் ஜெய்.


அவளை மாமி வீட்டில் ஒப்படைத்த பின்புதான் அவளது உடைமைகளைப் பற்றிய நினைவு வந்தவனாக ஈஸ்வரை தொடர்புகொண்டு அவன் கேட்க அவனுமே அவசரத்தில் அதைக் கவனிக்கவில்லை. அனிச்சை செயலாக அவளது கைப்பேசியை மட்டும் தனது சட்டைப் பைக்குள் போட்டிருந்தான். அதை ஜெய்யிடம் கொடுக்க மறந்து போனான் ஈஸ்வர்.


மேலும் மலர் பிரச்சனையில் சிக்கக் கூடாதே என்ற அக்கரையில் தன்னை ஒரு காவல்துறை அதிகாரி என்றெல்லாம் அடையாளம் காட்டிக்கொள்ளாமல் அந்த விடுதிக்குச் சென்றான் ஜெய் .


முதலில் அங்கே வரவேற்பில் சென்று அவன் விசாரிக்க அவர்கள் சரியான பதில் ஏதும் சொல்லாமல் மழுப்பவும் தன்னைப் பற்றி சொல்லியவன், "இங்கே நடக்கும் சட்டத்துக்குப் புறம்பான வேலைகளெல்லாம் எனக்குத் தெரியும் இப்ப உடனே நீங்க எனக்குச் சரியான தகவல் கொடுக்கலன்னா இன்னும் கொஞ்ச நேரத்துல இங்கே பக்காவா ரெய்டு நடக்கும் பரவாயில்லையா?" என்று அவன் மிரட்டிலில் இறங்கவும் வேறு வழியின்றி அவர்கள் இறங்கி வந்தனர்.


இரவு நேரம் வேறு நெருங்கிக் கொண்டிருக்க பாலியல் வியாபாரத்திற்குப் பெயர் போன அந்த விடுதியில் அவர்கள் பிரச்சினையை மேலும் வளர்க்க விரும்பவில்லை.


மலரைக் கடத்த முற்பட்ட அந்த பெண்களைப் பற்றி ஜெய் விசாரிக்க கணினியை ஆராய்ந்து அவர்கள் கனகம்மா, ஸ்ரீ துர்கா என்ற ஆந்திராவைச் சேர்ந்த சகோதரிகள் என்றும் ஊரை சுற்றிப் பார்க்க சுற்றுலாப் பயணிகளாக வந்து மூன்று நாட்களாய் அங்கே தங்கியிருப்பதாகவும் சொன்னார் அந்த விடுதியின் மேலாளர். மேலும் மதியம் முதலே அவர்கள் அங்கே இல்லை என்பதையும் தெரிவித்தார் அவர்.


தொடர்ந்து அங்கே பொருத்தப் பட்டிருக்கும் கண் கணிப்பு கேமராக்களின் பதிவுகளைப் பார்க்க அவன் முற்பட்ட போது அந்த கேமராக்களை இணைக்கும் டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டர் (டீ.வீ.ஆர்) சில தினங்களாக பழுதுபட்டிருப்பதாகச் சொன்னார் அந்த மேலாளர்.


பொதுவாகவே இதுபோன்ற சட்டத்துக்குப் புறம்பான வேலைகளுக்கு அந்த விடுதி பேர்போனதால் அவன் முன்பே எதிர்பார்த்து வந்த விஷயம்தான் அது. எனவே மலர் காணொளிகளில் சிக்கி இருக்க வாய்ப்பில்லை என்பதனால் அவன் கொஞ்சம் நிம்மதி அடைந்தான்.


அவருடன் மலரை அடைத்து வைத்திருந்த அறைக்குச் சென்ற ஜெய் அங்கே அவள் தவறவிட்டிருந்த அவளது கைப்பையை எடுத்துக்கொண்டான்.


பின்பு அங்கே பணியில் இருந்த காவலாளியிடம் அவனது கைப்பேசியில் மலருடைய படத்தைக் காண்பித்து அவளைப் பற்றி ஜெய் விசாரிக்கவும் ஈஸ்வரைப்பற்றி நடிகர் என்று தெளிவாகக் குறிப்பிட்டு முழு போதையில் தள்ளாடியபடி நடந்து வந்த மலர் அவனுடன் காரில் சென்றதாகச் சொன்னார் அவர்.


உண்மை தெரிந்திருந்த போதும் அதைக் கேட்டு அளவுகடந்த வேதனை உண்டானது அவனுக்கு. அதே மனநிலையுடன் நேரே அலுவலகம் சென்றான் ஜெய்.


ஆனால் அன்று இரவே அந்த விடுதியை ஒட்டிய கடற்கரை பகுதியில் அந்தப் பெண்கள் இருவரும் கொலை செய்யப்பட்டு அரைகுறையாக எரிந்த நிலையில் சடலமாகக் கிடந்தனர்.


ஏற்கனவே இவனுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் இதே போன்ற கொலை நடந்திருக்கவே இவனை அழைத்த காவல் துறை ஆணையர் அவனை அங்கே நேரில் சென்று ஆய்வு செய்யும்படி சொல்லவும் அங்கே மறுபடியும் சென்றான் ஜெய்.


அவனைக் கண்டு திடுக்கிட்ட அந்த விடுதியின் மேலாளர் அந்தப் பெண்களின் பிணங்களை கனகம்மா ஸ்ரீ துர்கா என்று அடையாளம் காட்டினார்.


அந்த நேரம் அவர் என்ன நினைத்தாரோ அணிமா மலரைப் பற்றி ஏதும் பேசவில்லை. ஆனால் ஜெய்க்கு மட்டும் புரிந்து போனது அந்தக் கொலைக்கு பின்னால் எதோ ஒரு விதத்தில் மலருக்குத் தொடர்பு இருக்கிறது என்று. ஆனால் எவ்வாறு அவள் இதில் சம்பந்தப் படுகிறாள் என்பதுதான் அவனுக்குப் புரியவில்லை.


ஜெய்யுடன் அந்தப் பகுதியின் துணை ஆணையரும் அந்த ஊர் காவல் நிலைய ஆய்வாளரும் கூட அங்கேதான் இருந்தனர்.