அணிமா 10
சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டே "நீ எப்ப வந்த மலர்? ரொம்ப நேரமா வெயிட் பண்ணிட்டு இருக்கியா?" என்று கேட்டான் ஈஸ்வர்.
"இல்ல இப்பதான் ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ் ஆச்சு?" என்ற மலர், "என்ன விஷயம் ஹீரோ! ஜீவி பத்தி ஏதாவது பேசணுமா?" என்று நேரடியாக விஷயத்திற்கு வர,
அங்கே எல்லோரின் கண்களும் அவர்களின் மேல் இருப்பதுபோல் தோன்றவும், "வா ரெஸ்டாரண்ட்ல உட்கார்ந்து பேசலாம்" என்ற ஈஸ்வர் அங்கே இருந்த உணவகத்திற்குள் அவளை அழைத்துச் சென்றான்.
மிதமான வெளிச்சத்தில் மெல்லிய இசை கசிந்துகொண்டிருக்க முன்பே பதிவு செய்திருந்த இருக்கையில் போய் உட்கார்ந்தனர் இருவரும்.
அங்கே 'வெல்கம் ட்ரிங்க்' என்று திராட்சைப் பழச்சாறு பரிமாறப்பட 'ஆஹான் க்ரேப் ஜூஸா! நல்ல வேள சூடம்மா இங்க இல்லை நம்மள தடுக்க' என்று மனதில் குதூகலித்தவாறு மலர் அந்தப் பழரசத்தைக் கையில் எடுக்க,
"ஆளே இப்படி அடையாளம் தெரியாம மாறிப்போயிருக்க, பார்க்கவே சகிக்கல, உருப்படியா இருக்கறது உன்னோட குரல் ஒண்ணுதான் அதையும் கெடுத்துக்கப் போறியா” என்றவாறு அவளது கையிலிருந்து அதைப் பறித்த ஈஸ்வர் அங்கே இருந்த பணியாளரை அழைத்து “இதை எடுத்துட்டுப் போங்க" என்று சொல்லிவிட்டு சூப் மற்றும் சில எளிய உணவு வகைகளை ‘ஆர்டர்’ செய்தான்.
'சூடாம்மா, உங்களுக்கு ஆதரவா இங்க ஒரு நல்லவரு கிளம்பியிருக்காரு… ம்" என்று முணுமுணுத்தவாறு அவனை முறைத்தவள், "ஆமாம் எனக்கு கிரேப் ஜூஸ் அலர்ஜினு உங்களுக்கு எப்படித் தெரியும்?" என்று கேட்க,
புன்னகை எட்டிப் பார்த்தது அவனது முகத்தில், "ம்ப்ச் அதெல்லாம் எனக்கு எப்படியோ தெரியும். இப்ப அதைப் பத்தி என்ன?" என்று கேட்டுவிட்டு "எனக்கு இதைச் சொல்லு, நீ வீட்டிலேயே இருக்கறதில்லன்னு ஜீவிதா ரொம்பவே வருத்தப்படுறா... ஏன்?" என்று சுற்றி வளைக்காமல் நேரடியாக விஷயத்திற்கு வந்தான்.
"இதுல அவ வருத்தப்பட என்ன இருக்கு ஏன் வருத்தப்படணும்? நான் இதுக்கு உங்க கிட்ட என்ன எக்ஸ்ப்பிளனேஷன் கொடுக்கணும்னு நீங்க எதிர்பார்க்கறீங்க?" என்று மலர் படபடக்க, அதற்குள் சூப் பரிமாறப்பட அதைச் சாப்பிட்டுக்கொண்டே,
"நீங்க இந்த ஜூஸை சாப்பிட விடாம தடுத்ததுல இருந்து எனக்கு பிடிச்ச ஃபுட் ஐட்டம்ஸ் ஆர்டர் பண்ணதுவரை என்னைப் பத்தி உங்களுக்கு நிறைய விஷயம் தெரிஞ்சிருக்கு. இது எதுவுமே உங்கத் தங்கைக்குத் தெரியாது. அதனால அவ மூலமாக உங்களுக்குத் தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல. சோ நீங்க என்னை ஃபாலோ பண்றீங்கன்னு நான் உங்க மேல கோபப் படலாமா?
இந்த சூப் கூட எனக்குப் பிடிச்சதுதான். என் ஹெல்த்துக்கும் நல்லதுதான். இருந்தாலும் என்னைக் கேட்காம, நீங்கப் பாட்டுக்கு ஆர்டர் செஞ்சீங்கன்னு நான் வருத்தப் படலாம் தானே. அது மாதிரிதான் உங்க தங்கை வருத்தப்படுறதும்.
ஸோ, இதை இப்படியே விட்டுடுங்க, எனக்கும் வீட்டுல இருக்கற எல்லாரோட மனநிலையும் புரியாம இல்ல. நான் நினைக்கறது செய்யறது எல்லாமே என் அறிவைக் கேட்டுதான் செய்யறேன்! என் மனசாட்சி என்னைக் குத்தம் சொல்ற எந்த ஒரு செயலையும் என்னோட அறிவு என்னைச் செய்ய விடாது! அதனால இதைப் பத்தி இனிமேல் எங்கிட்ட எதுவும் கேக்காதீங்க" என்று கத்தரிப்பதுபோல் மலர் சொல்லிக்கொண்டிருக்க, அவளது கைப்பேசி இசைத்தது.
அதில் ஒளிர்ந்த பெயரைப் பார்த்துவிட்டு அந்த அழைப்பைத் துண்டித்து மலர் ஈஸ்வருடன் பேச முனைகையில் மறுபடியும் கைப்பேசி இசைக்கவே, "எக்ஸ்க்யூஸ் மீ, பேசாம இவன் என்னை விட மாட்டான். ஒரு அஞ்சு நிமிஷம் நான் பேசிட்டு வந்துடறேன்" என்றவள் கைப்பேசியை காதில் பொருத்திக்கொண்டு அந்த உணவகத்தை விட்டு வெளியில் வந்து அங்கே காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த வைர நகைகள் அடங்கிய ஷோகேஸ் அருகில் வந்து நின்று, அந்த நகைகளைப் பார்த்துக்கொண்டே பேசத் தொடங்கினாள்.
'ம் சொல்லுடா"
""
"நான் அங்கிருந்து கிளம்பி வந்து இன்னும் கொஞ்ச நேரம் கூட ஆகல அதுக்குள்ள கால் பண்ற?"
""
"ஹனி னு சொன்ன பிச்சுடுவேன் பிச்சு"
""
"இன்னைக்கு நான் வீட்டுக்குதான் போகப்போறேன். உன்னால எங்கம்மா கிட்ட தினமும் என்னால திட்டுவாங்க முடியாது. ஸோ, என்ன அங்க வரச்சொல்லி கம்ப்பல் பண்ணாதடா!"
""
"என்ன ஜீவன் இது, உடனே என்ன ப்ளாக் மெயில் செய்ய ஆரம்பிக்கற" அவளுடைய குரல் உயர்ந்து சற்று கடுமையுடன் ஒலிக்க,
எதிர் முனையில் என்ன சொன்னானோ அந்த ஜீவன், அடுத்த நொடியே அடிபணிவதுபோல, "ஓகே ஓகே, மை டியர்... பாய் ஃப்ரென்ட், சொல்லிட்டேன் ஓகேவா! கண்டிப்பா அங்கயே வரேன் போதுமா?"
""
"ஓகே டார்லிங் உம்மா!" என்று முடித்துவிட்டு அழைப்பைத் துண்டித்து மலர் திரும்ப, அவளுக்குப் பின் புறம் வெகு அருகில் நின்றிருந்த ஈஸ்வர் மேல் மோதிக்கொண்டாள்.
குரலில் அத்தனைக் கொஞ்சலும் குழைவுமாக மலர் பேசிக் கொண்டிருத்தத்தைக் கேட்டு அவனது கண்களில் தீப் பொறி பறந்துகொண்டிருந்தது.
மலருமே தன்னைப் பின் தொடர்ந்து வந்து, தான் பேசுவதை ஈஸ்வர் கேட்டுக்கொண்டிருந்ததைப் பார்த்து முதலில் அதிர்ந்தவள் பின்பு கொதித்துதான் போனாள்.
அந்த நட்சத்திர விடுதிக்குள் நுழைந்தது முதலே அவர்களை யாரோ பின்தொடர்வதுபோல் தோன்றிக்கொண்டே இருந்தது அவனுக்கு.
பொதுவாகவே திரைத்துறை பிரபலம் என்பதால் அவன் தினமும் அனுபவிக்கும் இன்னல்தான். கிசுகிசு எழுவதற்காகவே அவனைப் பின் தொடரும் ஒரு கூட்டமே உண்டு இங்கே. எனவே மலர் உடன் இருக்கவும் அதிகம் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டிய கட்டாயத்திலிருந்தான்.
அதுவும் மலர் அந்த உணவகத்திலிருந்து வெளியேறவும் அவளை ஒருவன் பின் தொடர்வது அவனுக்கு நன்றாகவே புரிந்தது. அதைப் பெரிய அளவிலெல்லாம் அவன் நினைக்காவிட்டாலும் கூட அவளுக்கு எதுவும் தொல்லை நேராமல் தடுக்கவே ஈஸ்வர் மலரைப் பின்தொடர்ந்து வந்தது.
அவள் பேசியது எதையும் கேட்கும் எண்ணமும் அவனுக்கு இல்லை, ஆனாலும் கேட்க நேர்ந்தது. இது மலரின் பார்வையில் தவறாக மாறிப்போனது.
அந்தச் சூழ்நிலையில் தத்தமது கோபத்தை வெளிப்படுத்த விருப்பமால் அங்கிருந்து அமைதியாக உள்ளே சென்று அமர்ந்துகொண்டனர் இருவரும். அதற்குள் அவர்கள் ஆர்டர் செய்திருந்த உணவும் வர மௌனமாக உண்டு முடித்தனர்.
இருந்தாலும் அவளது நிலை பொறுக்கமுடியாமல் அதுவும் அவள் அதிக அளவில் பணம் வேறு வங்கியிலிருந்து எடுத்திருக்கிறாள் என்ற செய்தி மனதை உறுத்த, "மலர் நீ என்னைப் பத்தி என்ன நினைச்சாலும் எனக்குக் கவலை இல்ல. என்ன இருந்தாலும் நீ எங்க வீட்டுப் பொண்ணு! உன்னை இது போல பார்க்க எனக்குரொம்பவே வருத்தமா இருக்கு மலர். உனக்கு வேற ஏதாவது பிரச்சனையா, யாராவது உன்ன ப்ளாக் மெயில் செய்யறாங்களா?" என்று கேட்ட ஈஸ்வர், “வெளியில தெரியாம நான் உனக்கு நிச்சயமா உதவி பண்றேன்”என்று முடித்தான்.
"என்ன என்னை உங்க வீட்டுப் பொண்ணுன்னு நினைக்கிறீங்களா நீங்க? குட் ஜோக்! உங்க வீட்டுப் பொண்ணு, அதுவும் உங்க மனசுக்குப் பிடிக்காத ஒரு விஷயத்தைச் செஞ்சாலும் கூட, எப்படியோ போய் தொலையட்டும்னு விடாம நீங்க அப்படியே சப்போர்ட் பண்ணுவீங்க இல்ல?" மிகவும் மெலிந்து ஒலித்தாலும் அனல் தெறித்தது அணிமாவின் குரலில்.
“என்ன, செய்ய மாட்டேன்னு சொல்ல வரியா? என்னவோ ரொம்ப அதிகமா அப்படியே என்னைப் பத்தி உனக்குதான் எல்லாமே தெரியுங்கற மாதிரி பேசற. உனக்குப் போய் நல்லது செய்யணும்னு நினைச்சேன் பாரு ச்சை!” என்று ஈஸ்வர் கோபத்தில் கொதித்துவிட,
"நான் உங்க்கிட்ட வந்து ஹெல்ப் கேட்டனா? நீங்க யாரு என்னை இவ்வளவு கேள்வி கேட்டு அதிகாரம் பண்ண?" பலவிதமான காரணங்களால் அதுவும் சமீபமாக அவள் அருகில் இருந்து பார்த்து அனுபவித்துக் கொண்டிருக்கும் சில துயரங்களால் தன்னையும் மீறி ஈஸ்வரைக் காயப்படுத்தினாள் மலர்.
அவள் சொன்ன வார்த்தைகள் மனத்தைச் சுட, "செர்பியால இருந்து ஷூட்டிங் முடிஞ்சு திரும்ப வந்த உடனே உங்கிட்ட ஏதேதோ மனம் விட்டுப் பேசணும்னு நினைச்சேன்! அத்தனையும் கெட்டுப் போச்சு. என்னைப் பார்த்து, நீ யாருன்னா கேக்கற? ம்! நான் யாருன்னு உனக்குக் கூடிய சீக்கிரமே புரிய வைக்கறன்" ஆற்றாமையும் கோபமுமாக வந்து விழுந்தன அவனது வார்த்தைகள்.
இதை அவனிடம் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை மலர். அவன் அவளிடம் சவால் விடுவதுபோல் பேசினாலும், "அப்படி என்ன பேச நினைத்திருப்பான்?" என்ற கேள்வி மட்டுமே அவள் மனதில் எழுந்தது.
அன்று அந்தப் பாடலைப் பாடும்பொழுது அவனது முகத்தில் இருந்த அந்தப் பொலிவு சுத்தமாக வடிந்திருந்ததை இப்பொழுதுதான் கவனித்தாள் மலர்.
"சாரி! நான் உங்களைக் காயப்படுத்த அப்படி பேசல. என்னைக் கேட்காமயே ஃபுட் ஆர்டர் பண்ணீங்களே, இதையே வேற யாராவது செஞ்சிருந்தா அப்படியே எழுந்து போயிருப்பேன். நீங்களா இருந்ததாலதான் பேசாம சாப்பிட்டேன். ஏன்னா எனக்கு உங்களைப் பிடிக்கும். ரொம்ப ரொம்ப பிடிக்கும். அதுக்காக நீங்க செய்யற எல்லா செயலையுமே அப்படியே சரின்னும் என்னால ஏத்துக்க முடியது. தட்ஸ் இட்" என்று முடித்தாள் அணிமாமலர்.
'எனக்கு உங்களைப் பிடிக்கும்' என்று அவள் சொன்ன வார்த்தையில் அவனது கோபம் கொஞ்சம் மட்டுப்பட்டிருந்தாலும் முழுவதுமாகக் குறையவில்லை.
‘நேரம் வரும்போது நான் சொல்றத நீ ஏத்துட்டுதான் ஆகணும். ஏத்துக்க வைப்பேன்’ என்று மனதிற்குள் எண்ணி ஒரு முடிவிற்கு வந்திருந்தான் ஈஸ்வர்.
பிறகு உணவிற்கான தொகையைச் செலுத்திவிட்டு இருவரும் வெளியில் வர, ஈஸ்வருடைய கார் அங்கே தயாராக இருந்தது. அதில் ஏறி உட்கார்ந்தவன், "சரி வா! நானே உன்னை வீட்ல ட்ராப் செஞ்சுடறேன்" என்று அவளை அழைக்க,
“இல்ல, நான் மாமி வீட்டுக்குதான் போகப்போறேன். பக்கத்துலதான, ஸோ... நோ ப்ராபளம்" என்று அவனைத் துண்டிப்பதுபோல் மலர் சொல்லவும், மறுபடியும் சுறுசுறுவென்று அவனது கோபம் ஏற அவளைத் திரும்பியும் பார்க்காமல் வண்டியைக் கிளப்பிக்கொண்டுசென்றான் ஈஸ்வர்.
சில நொடிகள் அவன் சென்ற திசையையே வெறித்த மலர் அலட்சியமாகத் தோளைக் குலுக்கியவாறு அவளுடைய பைக்கை எடுக்க இரு சக்கர வாகன நிறுத்தத்தை நோக்கிச் சென்றாள்.
அதையும் அவனது காரின் பின்புற கண்ணாடி வழியாகப் பார்த்துக்கொண்டுதான் சென்றான் ஈஸ்வர் குறையாத கோபத்துடன்.
அடுத்த நாளே அவனுடைய உதவியைத் தவிர்த்ததற்காக வருந்தப் போகிறோம் என்று அப்பொழுது சிறிதேனும் எண்ணியிருப்பாளா அணிமாமலர்?
***
அவளது ப்ராஜக்ட் காரணமாக சில நாட்களாக ஓ.எம்.ஆர். அலுவலகத்திற்குதான் சென்றுகொண்டிருந்தாள் மலர். அன்றைக்கென்று மதியமே அலுவலகத்தை விட்டு வெளியில் வந்தவள், அங்கே தயாராக இருந்த கால் டாக்ஸியில் ஏறி மஹாபலிபுரம் அருகில் இருக்கும் ஒரு விடுதியில் வந்து இறங்கினாள்.
சிறிய தயக்கத்துடன், கடற்கரையை ஒட்டியிருந்த அந்த விடுதியின் பாருக்குள் அவள் நுழைய, முதலில் அந்தச் சூழ்நிலையே பிடிக்கவில்லை.
அங்கே யாரையோ அவள் சுற்றும் முற்றும் தேட, அவளைப் பார்த்துவிட்டு கையைத் தூக்கி அங்கே வருமாறு ஒருவன் ஜாடை செய்யவும் அவனை நோக்கிச் சென்றாள்.
அவனுக்கு எதிர்புறமாக போடப்பட்டிருந்த இருக்கையில் அவள் அமரவும், "என்ன சாப்பட்ற ஹாட் ஆர் கோல்ட்" என உபசரிக்கும் வண்ணம் அவன் கேட்க,
"நத்திங் எனக்கு எதுவும் வேண்டாம். நீ என்னை இங்க வரச்சொன்ன காரணத்த மட்டும் சொல்லு, நான் போயிட்டே இருக்கேன்" என்று மலர் சொல்லவும்,
"ஏன் நான் ட்ரிங்க்ஸ்ல ஏதாவது கலந்து கொடுத்துடுவேன்னு பயப்படுறியா டார்லிங். சாரி எனக்கு அந்த மாதிரி எண்ணமெல்லாம் இல்ல" என்று அவன் நக்கலாகச் சொல்ல,
"நான்சன்ஸ், இப்படி வேற உனக்கு ஐடியா இருக்கா. கொன்னுடுவேன் கொன்னு. உன்னைப் பார்த்து பயந்து நடுங்க நான் ஒண்ணும் உன் பொண்டாட்டி இல்ல, அத ஞாபகத்துல வச்சுக்கோ முதல்ல. ஏதோ என் ஜீவனோட பேரை நீ சொன்னதாலதான் நான் இங்க வந்தேன். இல்லனா வந்திருக்கவே மாட்டேன்" என்று அவள் படபடவென பொரிய,
"என்ன உன்னோட ஜீவனா? அவன்கிட்ட ஃபுல் ரைட்ஸ் எனக்குதான் இருக்கு. என்னைத் தவிர வேற யாருக்கும் இல்ல" என்று, ‘வேற யாருக்கும் இல்ல’ என்பதில் அழுத்தம் கொடுத்து சொன்னவன்,
“அதனால ஏதாவது செஞ்சு, எனக்கு ஒரு பெரிய அமௌன்ட்டா ரெடி பண்ணி கொடுத்திடு. நீ கேட்கற இடத்திலெல்லாம் கையெழுத்துப் போட்டுட்டு நான் என் வேலையைப் பார்த்துட்டுப் போயிட்டே இருக்கேன்" என்று அவன் மிக அலட்சியமாகச் சொல்லவும்,
இருக்கையை விட்டு எழுந்தவள், "இதெல்லாம் வேலைக்கே ஆகாது. உன்னால முடிஞ்சத நீ பாரு, என்னால முடிஞ்சத நான் பார்த்துக்கறேன்" என்று நிமிர்வாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்ப எத்தனிக்க,
"நீ தேவை இல்லாம என் விஷயத்துல விளையாடுறது சரியில்லை" என்று அவன் வஞ்சனை இல்லாமல் மிரட்டவும், கொஞ்சமும் பதட்டப் படாமல்,
"இந்த ஆட்டத்துல, ஜெகதீஸ்வரன் உள்ள வராத வரைக்கும்தான் நீ சேஃப். அவர் உள்ள வந்தா நீ தாங்க மாட்ட ஜாக்கிரதை!" என்று வெகு இயல்பாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியில் வந்தாள் மலர்.
அதுவரை அவளை மிரட்டிக்கொண்டிருந்தவனின் முகம்தான் கருத்து, பேய் அறைந்ததுபோல் ஆனது.
***
அவள் வந்திருந்த இடம் ஒரு கடற்கரை விடுதி. வாரத்தின் வேலை நாள் என்பதால் ஆள் அரவம் இன்றி அந்த இடமே வெறிச்சோடிக் கிடந்தது.
சரியாக அப்பொழுது, மிகவும் கண்ணியமான தோற்றத்துடன் நடுத்தர வயது பெண்கள் இரண்டு பேர், "எக்ஸ்க்யூஸ் மீ இந்த பேக் உங்களோடதா?" என்று கேட்டுக்கொண்டே அவளை நெருங்கி வரவும், ஏதோ உள்ளுணர்வு உந்த சரசரவென சில எட்டுக்கள் பின்னால் நகர்ந்தாள்.
அதற்குள்ளாகவே அவர்கள் தெளித்த திரவத்தின் சில துளிகள் அவளுடைய முகத்தில் தெறிக்க, மூச்சு முட்டுவதுபோல் தோன்றியது. முழுவதுமாக மயங்கவில்லை என்றாலும் தலை சுற்றத் தொடங்கியது. அவர்களை எதிர்த்துத் தாக்கும் நிலையைக் கடந்துகொண்டிருந்தாள் மலர்.
அந்த நிலையைச் சரியாக பயன்படுத்திக்கொண்டு அந்தப் பெண்கள் இருவரும் சேர்ந்து அவளை அங்கிருந்த காட்டேஜ் அறைக்குள் இழுத்துச்சென்று அங்கிருந்த சோஃபாவில் தள்ளி, அந்த அறைக் கதவைப் பூட்டிக்கொண்டு சென்றனர்.
சத்தமாகக் கூப்பிட குரலும் எழும்பாமல் கண்கள் இருட்டிக்கொண்டு வர கொஞ்சம் கொஞ்சமாக மயக்க நிலைக்குச் சென்று கொண்டிருந்த மலரின் காரத்தைப் பற்றி யாரோ ஒருவன் அவளைத் தூக்க முயல, அந்த நிலையிலும் இடது கரத்தில் தனது துப்பட்டாவை பற்றியவள், அவளைத் தூக்க விடாமல் வலது கரத்தால் நகங்கள் அழுந்துமாறு அவனது கையை இறுகப் பற்ற, "மலர்! நான்தான் மா! ஹகூனா மடாட்டா" என்று ஆதரவாக ஒலித்தது அவனது குரல்.
அடுத்த நோடியே அவளது கைகள் மெதுவாகத் தளர அந்தக் குரல் தந்த துணிவில் மிகவும் முயன்று கண்களைத் திறந்தவள், "ஹீரோ! நீங்களா?" என்றாள் அணிமாமலர், அந்த நிலையில் எதிர்பாராமல் அங்கே ஜெகதீஸ்வரனைக் கண்ட வியப்பு மேலிட!
அவனது கண்கள், இரத்தம் வரும் அளவிற்கு அவனது கையைப் பற்றியிருந்த அவளது கையில் போய் நிலைத்து அகல விரிந்தது ஆனந்த அதிர்ச்சியில்!!!
Comments