top of page

Anbenum Idhazhgal Malarattume! 1

Updated: Nov 1, 2019

அணிமா 1


அன்றாயர் குலக்கொடி யோடு


அணிமாமலர்மங்கையொடு அன்பளவி அவுணர்க்கு


என்றானும் இரக்கம் இலாதவனுக்கு


உறையுமிடமாவது இரும்பொழில் சூழ்


நன்றாய புனல் நறையூர் திருவாலி குடந்தை


தடந்திகழ் கோவல் நகர்


நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தாற்கிடம்


மாமலையாவது நீர்மலையே.


திருநீர்மலையில் கோவில் அமைந்திருந்த திக்கை நோக்கி கரம் குவித்து, திருமங்கை ஆழ்வார் அருளிச்செய்த அந்தப் பாசுரத்தை முணுமுணுத்துக்கொண்டிருந்தார் சுசீலா மாமி.


"கிளம்ப மனசே வரல இல்ல மாமி. ம்ப்ச்! ஆனா இப்பவே கிளம்பினாதான் இங்க பெருமாளை சேவிச்ச மாதிரி மத்த எல்லா கோவில்லையும் சேவிக்க முடியும். ம்!" என்ற அவரது தோழி ராஜி மாமியின் கருத்தை கவர்ந்த்து அங்கே நிறுத்திவைக்கப்பட்டிருந்த திரைப்பட படப்பிடிப்பு குழுவினரின் வாகனங்கள்.


உடனே ஈ என்று எல்லாப் பற்களும் தெரியும்படி சிரித்தவாறே அவர், "அட இங்க எதோ சினிமா ஷூட்டிங் நடக்கற்து போலிருக்கே!" என அதிசயிக்கவும்,


"என்னடி ஷூட்டிங் பாக்கணும்கற மாதிரி இழுக்கற; டீ ராஜி! இப்ப கிளம்பினால்தான் இன்னும் சித்த நேரத்துல திருமழிசை போய்ச் சேர முடியும். பேசாம கிளம்பற வழியைப் பாரு!" என்று சொல்லிக்கொண்டே சுசீலா மாமி நடக்கத்தொடங்கவும்,


சர் என வேகமாக வந்த பைக் ஒன்று அவரை இடிப்பது போல் உரசியவாறு நிற்க, அதில் பயந்துபோனவர், தலைக்கவசம் அணிந்து அந்த பைக்கை ஓட்டிவந்தவனைப் பார்த்து,


"அடக் கடன்காரா உனக்குக் கண்ணு மண்ணே தெரியலையா? இப்படி வண்டியை ஓட்டிண்டு வரையே. உனக்கு அறிவு இல்ல?" என திட்டத் தொடங்கினார்.


தலைக்கவசத்தைக் கழற்றியவாறே தொண்டையை செருமிக்கொண்டு, கரகரப்பான குரலில், "கடன்காரா இல்ல மாமி. கடன்காரி! சும்மா உங்களுக்கு ஒரு ஷாக் கொடுக்கலாம்னுதான்!" என்று பைக்கை ஓட்டி வந்த அந்தப் பெண் சொல்ல,


அதில் முகம் மலர்ந்தவர், "அடிப்பாவி! பூக்காரி நீயா? முகமூடி கொள்ளைக்காரி மாதிரி இப்படி மூஞ்சியை மூடிண்டு வந்தா நான் யாருன்னு நினைக்கற்து. ஒரு நிமிஷத்துல எனக்கு மூச்சே நின்னு போச்சு தெரியுமா?" என்று சுசீலா மாமி கேட்கவும்,


தொண்டையை செருமிக்கொண்டே,"மார்கழி மாச குளிருல அதுவும் இந்த எர்லி மார்னிங்க்ல உங்களை இங்க பார்த்ததுல எனக்குக் கூடத்தான் மூச்சே நின்னு போச்சு!" என்ற அந்தப்பெண்,


"இவ்ளோ தூரம் அதுவும் என்கிட்ட சொல்லாம கொள்ளாம இங்க வந்துட்டு எங்க வீட்டுக்கு வராமலேயே எஸ் ஆக பாக்கறீங்க இல்ல? உங்க…ளை!" என மிரட்டும் குரலில் சொல்லவும்,


"ஏண்டி ஃபிரெண்ட்ஸ் கூட சேர்ந்துண்டு கிரேப் ஜூஸ் சாப்டியா? ஏன் இப்படி குரல் கரகரனு இருக்கு?" என்று மாமி கேட்க,


"எப்பவாவது நடக்கறதுதானே மாமி! இதெல்லாம் கண்டுக்காதிங்க!" என்று அவள் சொல்லவும்,