Alangattimazhai - 16
- Krishnapriya Narayan

- Oct 4
- 5 min read
கலி மழை
இடி முதலியவற்றால் உண்டாகும் ஆரவாரத்துடன் பொழியும் மழை ‘கலி மழை’ எனப்படுகிறது.
******
“ஹேய் வர்ஷிணி, என்ன வந்துட்டு அப்படியே திரும்பிப் போற" என அவளைத் தடுத்தான் கிருஷ்ணா.
"உங்கள டிஸ்டர்ப் பண்ண வேண்டாமேன்னுதான். நீங்க இங்க இருப்பீங்கன்னு யோசிக்கல, அதான் வந்துட்டேன், சாரி" என்றாள்.
"சோ வாட்... எனக்கு எந்த பிரச்னையும் இல்ல, ப்ளீஸ் கம்"
அவனுடைய பேச்சில் வியந்தவளாக, "இட்ஸ் ஓகே, தனிமைல இனிமை கண்டுட்டு இருக்கீங்க. கன்டின்யூ என்ஜாய் யுர் ஓன் கம்பெனி" என்று சொல்லிவிட்டு திரும்ப நடந்தாள்.
"ஹேய் கமான் வர்ஷிணி, நீ இன்னும் அந்த பழைய சம்பவத்த மறக்கலியா" என்றபடி அமருமாறு ஜாடை செய்தான்.
'அவ்வளவு ஈஸியா மறக்கக் கூடிய சம்பவமா அது' என எண்ணியவளுக்கு அவளைத் தீண்டிய அவனுடைய உடலின் வெம்மை இன்னும் கூட தகித்தது. எந்த பதிலும் சொல்லும் நிலையில் அவள் இல்லை. தயக்கத்துடன் அவனுக்கு எதிரில் உட்கார்ந்தாள்.
அவளுடைய எண்ணவோட்டம் என்னவாக இருக்கும் என்பது அவனுக்கும் தெளிவாக விளங்கியது.
"ரியலி சாரி வர்ஷிணி, அது ஒரு அன்பிளசண்ட் இன்டாக்சிகேடட் மொமண்ட். ப்ளீஸ், அந்த சம்பவத்த உன் மெமரில இருந்து எரேஸ் பண்ணிடு. ரெண்டு பேருமே ஒருத்தர ஒருத்தர் நல்ல ஆங்கிள்ல பார்க்க ட்ரை பண்ணலாம். லெட்ஸ் ஸ்டார்ட் பிரெஷ்" என்றான் மிகவும் உருக்கமாக.
'நீயா பேசுவது?' என்கிற வியப்புடன் அவனை விழுங்குவது போலப் பார்த்துவைத்தாள். நிலவொளியில் தகதகத்த அவளின் முகமும் மின்னும் விழிகளும் அவனை அடித்துச் சாய்த்தது.
மனம் போகும் போக்கை எண்ணி குற்றவுணர்ச்சியில் விழிகளைத் தழைத்துக் கொண்டான்.
அவனுடைய மனநிலைக்கு மாறாக, அவனுடைய தோற்றத்தைப் பார்த்து அவளுக்குப் பரிதாபம் உண்டானது. ரஞ்சனி அவனைப் பற்றிச் சொன்னது நினைவில் வர, எதற்காகக் கடந்து போனதை எண்ணி இவன் மீது காழ்ப்பைத் தூக்கிச் சுமக்க வேண்டும் என்று தோன்றியது.
"நீங்க சொல்றதும் சரிதான். அத அப்படியே விட்ருவோம்" என்று புன்னகைத்தாள்.
"ஒன்னு தெரியுமா, நீ ஸ்டேட் ரேங்க் வாங்கினது தெரிஞ்சதும் உன்ன விஷ் பண்ணனும்னு நினைச்சேன். அதுக்குள்ள நீ மண்டபத்துல இருந்து கிளம்பி போயிட்ட. சரி பரவாயில்ல, ஒரு தடவ உன்ன நேர்ல பார்த்து ஒரு கிஃப்ட்டாவது கொடுத்துடலாம்னு நினைச்சிட்டு இருந்தேன். பட் முடியாம போயிடுச்சு" என்றான்.
'என்னடா இவன், இவ்வளவு அதிர்ச்சி கொடுக்கறான். நிஜமாத்தான் சொல்றானா, இல்ல அளந்து விடறானா' என்று எண்ணினாலும், "அதனால என்ன இப்ப? நான் இங்கதான இருக்கேன். அப்ப நினைச்சத இப்ப செய்ங்க" என்றாள் பட்டென.
"ரியலி, அப்படினா உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லு, நாளைக்கே வாங்கிக் கொடுக்கறேன்" எனக் குதூகலித்தான்.
"ஓஹ்... நோ... நோ... நான் கிஃப்ட்ட மீன் பண்ணல. ஜஸ்ட், விஷ் பண்ண சொன்னேன்" எனப் பதறினாள்.
அது கூட அவ்வளவு அழகாகத் தோன்றியது அவனுடைய கண்களுக்கு.
"ஸ்டேட் ரேங்க் வாங்கினதுக்கு கங்ராஜுலேஷன்ஸ், வர்ஷிணி. ஜே.ஈ.ஈ க்ளியர் பண்ணி ஐ.எஸ்.ஆர்.ஓ காலேஜ்ல சீட் வாங்கினதுக்கு அடுத்த கங்கிராட்ஸ். எல்லா செம்-லயும் டாப்பாரா வந்துட்டு இருக்கறதுக்கு அடுத்த கங்கிராட்ஸ்" எனக் கை நீட்டினான் விரிந்த புன்னகையுடன். அவளின் இதழ்களும் புன்னகையில் விரிந்தன.
"தேங்க்ஸ்" என்றபடி அவனுடைய விரல்களைப் பட்டும் படாமல் பற்றிக் குலுக்கினாள்.
"பட், நீ வேண்டாம்னு சொன்னாலும், இது எல்லாத்துக்கும் சேர்த்து வெச்சு, நீ உங்க வீட்டுக்கு போறதுக்குள்ள உனக்கு ஒரு கிப்ட் குடுத்தாதான் எனக்கு நிம்மதியா இருக்கும். என்ன வேணும்னு நீ சொல்லித்தான் ஆகணும்" என்றான் விடாப்பிடியாக.
நாசூக்காகக் கையை உருவிக் கொண்டவளுக்கு ஒரு யோசனை உதித்தது.
"நிஜமா நான் என்ன கேட்டாலும் குடுப்பீங்களா?" எனக் கேட்டாள்.
"ம்ம்... அதுல என்ன உனக்கு இவ்வளவு டவுட். என்ன வேணும்னு மட்டும் சொல்லு, இந்த கிருஷ்ணா நிச்சயமா கொடுப்பான்" என்றான் கெத்தாக..
"இந்த கிருஷ்ணாவ எனக்கு இப்படி ஹோம்லெஸ் மாதிரி பார்க்க பிடிக்கல. நான் ஃபர்ஸ்ட் டைம் உங்கள பார்த்தேன் இல்ல, அந்த மாதிரி எந்துவா உங்களை மறுபடியும் பார்க்கணும். அதுதான் நீங்க எனக்கு கொடுக்கற பெஸ்ட் ஃகிப்ட்" என்றாள் எதையும் யோசிக்காமல்.
அவள் சொன்னதில் பொதிந்திருந்த அர்த்தம் அவனை மனதைச் சுருக்கெனக் குத்தியதில் அவனுடைய முகம் மாறிப்போனது. ஆனாலும், உண்மையில் அவளின் எண்ணம் அவனுக்கு உவகையை அளிக்கவே, சட்டென சமாளித்துக்கொண்டான்.
"சந்தடி சாக்குல என்ன பிச்சக்காரன்னு சொல்லிட்ட... ம்ம்"

"ஒ மை காட், எக்சாக்டா அப்படி மீன் பண்ணல, ஆனா கிட்டத்தட்ட அப்படித்தான்"
"ம்ம்… என்னையே கலாய்க்கற. ரைட்டு, என்ன விடு, அதென்ன நீயென்ன இப்படி விழுந்து வாரி, எக்கச்சக்கமா சில்லறையை தேத்திட்டு வந்திருக்க" என்றான் எள்ளலாக.
அவனுடைய பார்வை பதிந்த காயத்தில் கைவைத்து தடவியபடி, "ப்ச்… டிராஃபிக்ல, அதுவும் பிரிஜ் மேல, ஜோன் அவுட் ஆகி கவனம் இல்லாம வண்டிய மீடியன்ல விட்டா இந்த அளவுக்கு கூட சில்லறைய வாரி எடுக்க மாட்டாங்களாக்கும்" எனச் சிரித்தபடி, அங்கே தட்டில் இருந்த மசாலாக் கடலையை அள்ளி வாயில் போட்டுக்கொண்டாள்.
விழியை எட்டாத அவளின் சிரிப்பு அவன் மனதை நெருடியது.
‘எங்கே எனது கவிதை’ பாடல் காட்சி மனத்திரையில் ஒளிபரப்பாக, ‘ஒருவேள இவளுக்கும் ஏதாவது லவ் பெயிலியரா இருக்குமோ’ என்கிற ரீதியில் அவனுடைய யோசனை சென்றது.
"ஏன், உனக்கு ஏதாவது பிரச்சனையா?" என வினவினான்.
இவனிடம் சொல்லலாமா வேண்டாமா என்ற குழப்பத்துடன் அவனை ஏறிட்டாள்.
“ஹேய் வர்ஷிணி, வண்டி ஓட்டும்போது ஜோன் அவுட் ஆகர அளவுக்கு என்ன பிரச்சன. என்கிட்ட சொல்லலாம்னு தோணுச்சுன்னா சொல்லு. நான் இத பத்தி வேற யார்கிட்டயும் பேச மாட்டேன்” என்றான் வேகமாக.
“ஐய, அப்படியெல்லாம் பெரிய ரகசியம் எதுவும் இல்ல. இதப் பத்தி வீட்ல எல்லாருக்கும் தெரியும். மனசுக்கு ரொம்ப நெருக்கமானவங்க ஒருத்தங்களோட ப்யூனரலுக்கு போயிட்டு வரும்போது, அந்த மெண்டல் ட்ராமாலதான்” என்றாள்.
“அவ்வளவு கிளோஸ் ஆனவங்கன்னா, தனியாவா போன? அம்மா, அப்பா யாரும் கூட வரல?”
“ப்ச்… அம்மாப்பாவுக்கு அவங்க யாருன்னு கூட தெரியாது”
அவளுடைய இந்த பதிலில் அது சோகத்தில் முடிந்த காதல்தான் என முடிவுக்கே வந்துவிட்ட கிருஷ்ணா, “வாட்? இறந்து போன அந்தப் பையனுக்கு என்ன வயசு இருக்கும்” என ஜெர்க் ஆனான்.
“பையனா? செத்துப் போனவங்க ஒரு ஆன்ட்டி. ஒரு நாப்பது நாப்பத்தஞ்சு வயசு இருக்கும்” என்றாள் அவனை ஒரு மாதிரியாகப் பார்த்தபடி.
“அதில்ல, யாராவது ஸ்கூல் காலேஜ் ப்ரெண்டா இருக்குமோன்னு கேட்டேன்” என்றான் சமாளிப்பாக.
“ப்ச்… பாவம் கிருஷ்ணா அவங்க. அவங்களுக்கு மூணு பிள்ளைங்க. எல்லாருமே டீன் ஏஜர்ஸ். பாவம், மூணு பேருமே விஷுவலி சேலஞ்ட். அவங்களோட அப்பா அவங்கள அம்போன்னு விட்டுட்டு ஓடி போயிட்டான். வேணிம்மாதான் பூ வியாபாரம் செஞ்சு அவங்கள காப்பாத்திட்டு இருந்தாங்க. இப்ப அவங்களும் இல்ல” என்றாள்.
இந்தச் சோகக் கதைகளைக் கேட்கும் அளவுக்கு அவனுக்கு அக்கறை இல்லை.
“சரி விடு, எதுக்கு இப்ப இதையெல்லாம் பேசிட்டு” என முடித்துக் கொண்டான்.
உண்மையில் அவள் வேணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு திரும்ப வந்தபோது, அந்தப் பிள்ளைகளை எண்ணி மனம் அதிக துன்பத்தில் உழன்றுகொண்டிருந்தது. அத்துடன் கூட, தேவை இல்லாமல் ரஞ்சனியின் நினைவும் சேர்ந்துகொண்டது. அவள் பிள்ளை உண்டாகாமல் போனதற்கு இவள் பேசிய பேச்சுதான் காரணம் என, விடுமுறையில் வந்த நாளிலிருந்து இவளுடைய அம்மா வேறு இவளைக் கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தாள். அனைத்துமாகச் சேர்ந்து ஒரு நொடி கண்ணை மறைத்து விட்டது.
விபத்துக்குள்ளாகி மயங்கிய நிலையில் கிட்டத்தட்ட அரைமணி நேரம் அங்கேயே அப்படியே கிடந்திருக்கிறாள். அந்தப் பக்கம் போனவர்கள் யாரும் இவளைக் கண்டுகொள்ளக் கூட இல்லை. தானே மயக்கம் தெளிந்து எழுந்து, ஒருவாறு சமாளித்து அருகில் இருந்த மருத்துவமனைக்குப் போய் முதல் உதவி பெற்று வீடு போய்ச் சேர்ந்தாள். குளித்து, எதையோ சாப்பிட்டுவிட்டு, வலி நிவாரணியைப் போட்டுக்கொண்டு உறங்கியும் போனாள்.
பிரதோஷம் எனக் கோவிலுக்குப் போய்விட்டு இரவு தாமதமாக வந்த சித்ராவுக்கும் வரதனுக்கும் இந்தக் கூத்தெல்லாம் அடுத்த நாள்தான் தெரியவே வந்தது.
வழக்கம் போல அவளை வசை பாடிவிட்டு, டூர் செல்லும் பரபரப்பில் அப்படியே கடந்தும் போய்விட்டார்கள்.
இது வழக்கம்தான் என்றாலும், இப்படிக் கொஞ்சம் கூட அக்கறையே இல்லாமல் நடந்துகொள்கிறார்களே என அவளுக்கு வேதனையாகத்தான் இருந்தது. வழக்கம் போல அதை மனதுக்குள் போட்டுப் புதைத்துக் கொண்டாள்.
இதைப் பற்றிய பேச்சு எழவும், தனிமை உணர்வு மீண்டும் அவள் மனதை அழுத்தத் தொடங்கியது.
“என்ன மேடம், அப்படியே சைலன்ட் ஆகிட்டீங்க. சோகம் போக வேணா கொஞ்சமா சரக்கடிக்கறீங்களா” என்றான் கிண்டலாக.
இவன் ஆழம் பார்க்கிறானோ என்கிற சந்தேகத்துடன், “இப்ப மூட் இல்ல, வேணாம், சைட் டிஷ் மட்டும் போதும்” என்றாள் இதழின் ஓரம் அடக்கிய சிரிப்புடன்.
இதே போன்ற மொட்டைமாடி சம்பவத்தில், ஏற்கனவே இவளைப் பற்றி இலேசான புரிதல் இருக்கவும், அவனுக்கு சிரிப்பு வந்தது. அதை வெளியில் சொல்ல விரும்பாமல், “நானும் சும்மா ஒரு பார்மாலிட்டிக்குதான் கேட்டேன். எனக்கே இங்க தண்ணிப் பஞ்சம்” என்று சொல்லி வாய் விட்டுச் சிரித்தான்.
“ரொம்ப நன்றி, எனக்குத் தூக்கம் வருது, பை” என்று அங்கிருந்து கிளம்ப எத்தனித்தாள்.
“ஹேய், தேங்க்ஸ்” என்றான் அவசரமாக.
‘எதற்கு?’ என்பது போலப் பார்த்தாள்.
“நான் இப்படி வாய் விட்டு சிரிச்சு மாசக் கணக்காச்சு” என்றான்.
“தட்ஸ் மை பிளெஷர் மிஸ்டர் கிருஷ்ணா” என்று முடித்துக்கொண்டு அங்கிருந்து அகன்றாள் வர்ஷிணி.
அவள் சென்ற திசையையே பார்த்திருந்தான் கிருஷ்ணா.
***
புதிய இடம் என்பதால் சரியான உறக்கம் இல்லை. சீக்கிரமே எழுந்து வெளியில் வந்தாள் வர்ஷிணி. அந்த நேரத்துக்கே சமையல் அறையில் உருட்டிக் கொண்டிருந்த ரஞ்சனியைப் பார்த்துக் கடுப்பானாள்.
“என்ன ரஞ்சி, அதுக்குள்ள ஸ்டார்ட் பண்ணிட்ட, பயங்கரம் போ”
“அத்தான் சீக்கிரமே கிளம்பிடுவாங்க. அதுக்குள்ள அவங்களுக்கு ப்ரேக் பாஸ்ட், லஞ்சு எல்லாமே ரெடி பண்ணனும். இவ்வளவு சீக்கிரம் ஸ்டார்ட் பண்ணாதான் சரியா இருக்கும்”
“அதெல்லாம் சரி, அதுக்கெதுக்கு இவ்வளவு சீக்கிரம் தலைக்கு குளிச்சு முடிச்சு, புடவை கட்டிட்டு, தலைல ஈரத் துண்டோட?”
“இங்க, குளிக்காம கிச்சன் குள்ள வர ஆலோ பண்ண மாட்டாங்கடீ, இன்னைக்கு வெள்ளிக் கிழம இல்ல அதான் தலைக் குளியல். நைட்டி பெட் ரூம் குள்ள மட்டும்தான் அலவ்ட். நம்ம வீட்டுலயும் கிட்டத்தட்ட இதே வழக்கம்தான?”
“அக்கா, நம்ம அம்மா சமயத்துக்கு தகுந்த மாதிரி மாத்திக்கும்”
“அம்மா தனிக்குடித்தனம் பண்றவங்கடீ. அத இங்கலாம் அப்ளை பண்ண முடியாது”
“என்னவோ போ” என்று சொல்லிவிட்டு, அவளுக்கு உதவத் தொடங்கினாள் வர்ஷிணி.
ஸ்ரீதருக்கு பூஞ்சை உடம்பு. அவனுக்கு வீசிங் தொல்லை வேறு உண்டு. எனவே அவனுக்கு குளுமையான பொருள்கள் நீக்கி, உப்பு, புளிப்பு, எண்ணைக் குறைவாக தனிப்பட்ட உணவு. கிருஷ்ணாவுக்கு உப்பு உரைப்புடன் தனியே ஒரு சமையல். இதையெல்லாம் பார்க்கும்போதே கண்களில் பூச்சி பறந்தது வர்ஷிணிக்கு.
“ஆனாலும் இதெல்லாம் ஓவர், ரஞ்சி” எனக் கடுப்பானாள்.
“இதென்ன பிரமாதம். இதைவிட இன்னும் இங்க நிறைய ஸ்பெஷல் அயிட்டமெல்லாம் இருக்கு” என்கிற கிண்டலுடன், “மாமாவுக்கு டயபடிக் டயட். கிருஷ்ணாவுக்கு தினமும் நான் வெஜ் வேணும். அதனால கண்டிப்பா செஞ்சுதான் ஆகணும். கிருத்திகை மாதிரி விரத நாட்கள்ல்ல அத்தை நான் வெஜ் சாப்பிட மாட்டாங்க. அவங்களுக்கு தனி சாப்பாடு’ எனச் சொல்லிக்கொண்டே போனாள் ரஞ்சனி.
“ஏன், உன் மாமியாருக்கு என்னவாம்? ஆம்பளைங்க வேலைய ஷேர் பண்ணக் கூடாதா? வித விதமா சாப்பிடறவங்க சமையல் கட்டுக்குள்ள வரமாட்டாங்களாமா?” எனக் காய்ந்தாள் வர்ஷிணி.
“நல்ல ஆளுங்களப் பார்த்த போ! என் மாமியாருக்கு பில்டிங் ஸ்ட்ராங்கு, பேஸ்மென்ட் வீக்கு. மூட்டுவலி. எல்லாமே உட்கார்ந்த இடத்துலதான். உங்க அத்தானுக்கும் அவங்க அப்பாவுக்கும் காஸ் அடுப்ப பத்த வெக்கக் கூட தெரியாது. ஆனா, கிருஷ்ணா வெளிநாட்டுல தனியா இருந்தாரில்ல! நல்லா சமைப்பாராம். ஆனா இங்க வந்தா கிச்சன் உள்ளக் கூட நுழைய மாட்டாரு. சரக்கடிக்க சைட் டிஷ் உட்பட நான்தான் செஞ்சு கொடுக்கணும்” என்றாள் ரஞ்சனி பெருமையாக.
"மேய்க்கறது எரும, இதுல உனக்கென்ன இவ்வளவு பெரும?
"ஏய்"
“பின்னென்ன ரஞ்சி, உண்மையா சொல்றேன், உன் ஓரவத்தி, இவங்கள பத்தி தெரிஞ்சுதான் இங்க இருந்து தப்பிச்சு ஓடிப் போயிடுச்சு. நீ வசமா சிக்கிட்ட. இப்படியே நாள் முழுக்க கிச்சன்ல கிடந்தா புள்ளய மைக்ரோ வேவ் ஓவன்லையா பெத்தேடுப்ப? வெவஸ்தையோட பேசுக்க்கா. இதெல்லாம் தப்புன்னு நீதான் அவங்களுக்கு புரிய வெக்கணும்” என உக்கிரமானாள் வர்ஷிணி.
"நீ என்ன இப்படி சீரியல் வில்லி மாதிரி பேசற? நம்ம அம்மா அப்பா இப்படியா சொல்லிக் கொடுத்து நம்மள வளர்த்தாங்க? பெரியவங்க கிட்ட நல்ல பேர் எடுக்கணும், வர்ஷிணி"
"நல்ல பேரெடுத்து வெளங்கிடும்"
“குடும்பம்னு இருந்தா இப்படித்தான் இருக்கும். நீ கல்யாணம் ஆன பிறகு என்ன செய்யப் போறன்னு நானும் பாக்கறேன்”
“நிச்சயமா உன்ன மாதிரி இளிச்சவாயா இருக்க மாட்டேன். சமைக்க தெரிஞ்ச ஆளா, எல்லா வேலையும் ஷேர் பண்றவனா, என் கேரியர டிஸ்ட்ரப் பன்னாதவனா பார்த்துதான் கட்டிப்பேன்” என வர்ஷிணி சொல்லிக்கொண்டிருக்கும்போதே வெளிப்புறம் அரவம் கேட்டது.
அண்ணன் தம்பி இருவரும் வரவேற்பறையில் வந்து அமர்ந்தனர்.
ரஞ்சனி தயாரக கலந்து வைத்திருந்த காபியை அவர்களுக்குக் கொடுக்க எடுத்துக்கொண்டு வெளியில் வந்தாள் வர்ஷிணி. “குட் மார்னிங், அத்தான்” என அவனிடம் ஒரு கோப்பையை நீட்டிவிட்டு கிருஷ்ணாவின் பக்கம் திரும்பியவளின் புருவம் உயர்ந்தது.
தாடியை ட்ரிம் செய்து, பளிச்சென்ற தோற்றத்துடன் அவளை அடித்துச் சாய்த்தான்.
அவனுக்கு காபியைக் கொடுப்பதுபோல “தேங்க்ஸ் ஃபார் மை கிஃப்ட்” என்றாள் மெல்லிய குரலில்.
மீசையை நீவிவிட்டபடி ஒரு விரிந்த புன்னகையுடன், “வித் பிளெஷர்!” என அவளுக்குப் பதிலுரைத்தான் கிருஷ்ணா ‘எந்த்து’வாக.


Comments