top of page

Aalangattimazhai - 17

17. நள்ளென் யாமத்து மழை


"நள்ளென் யாமத்து மழை" என்பது நள்ளிரவில் பெய்யும் மழை என்பதைக் குறிக்கிறது. இது சங்க இலக்கியப் பாடல்களில், குறிப்பாக குறுந்தொகை, அகநானூறு போன்ற பாடல்களில், இரவு நேரத்தில் ஏற்படும் மழை மற்றும் அதனால் ஏற்படும் சூழலைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் ஓர் அழகான தமிழ் சொல்லாடல் ஆகும்.


*******


சுற்றுப்புறம் கூட உணராமல் கைப்பேசியில் ஏதோ ஒரு கணக்கைச் சரிபார்த்த படி காபியைப் பருகிக் கொண்டிருந்தான் ஸ்ரீதர்.


மற்ற இருவரின் கிசுகிசுப்பு அவன் காதில் விழவில்லை என்றாலும் ஏதோ ஓர் உந்துதலில் தலை நிமிர்ந்து தம்பியைப் பார்த்தான்.


வியப்பில் புருவம் மேலே உயர, “ அட யாருடா அது புதுசா நம்ம வீட்டு ஹால்ல வந்து சட்டமா உட்கார்ந்துட்டு இருக்கான்” என்று உற்சாகமாக சீழ்க்கை அடித்தான்.


அடக்கப்பட்ட சிரிப்புடன் ஓரக்கண்ணால் வர்ஷினியை பார்த்தபடி அவனை முறைக்க முயன்று தோற்றான் கிருஷ்ணா.


அவளோ மிக முயன்று தன்னை இயல்பாகக் காண்பித்துக் கொண்டிருக்க, “ஏய் என்னடா வந்துருச்சு இப்ப, நம்ம வர்ஷிணிதான” என்றவனுக்கு, அன்று கிருஷ்ணாவின் பிறந்தநாள் என்பதே அப்பொழுதுதான் நினைவில் வந்தது.


“ஹே மறந்துட்டேன் பாரேன், சாரிடா! ஹாப்பி பர்த்டே டூ யூ” என்று வாழ்த்தினான்.


“ தேங்க்யூ!” என்றான் கிருஷ்ணா.


“மார்னிங் எழுந்துக்கும்போது கூட ஞாபகம் இருந்துச்சு, விஷ் பண்ணனும்னு நெனச்சேன். வேலையில மறந்துட்டேன், ஹேப்பி பர்த்டே கிருஷ்ணா” என்றாள் இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டே அங்கே வந்த ரஞ்சனி.


அவளுக்கு நன்றி நவின்றுவிட்டு, “இன்னைக்கு சீக்கிரம் வந்துடு ஸ்ரீ, நாம எல்லாரும் டின்னருக்கு வெளியில போகலாம்” என்றான் கிருஷ்ணா.


ரஞ்சனியின் முகம் மாறியது. வேண்டாம் என்பதாக ஸ்ரீதரிடம் ஜாடை செய்தாள். இதைக் கிருஷ்ணா கவனிக்கவில்லையே தவிர, வர்ஷிணி கவனித்துவிட்டாள். அவன் என்ன பதில் சொல்லப் போகிறான் என்கிற ஆவல் அவளுக்கு உண்டானது.


மனைவியின் கோரிக்கைக்கு மதிப்பளித்து, “இல்ல சாரிடா, எனக்கு இன்னைக்கு நிறைய வேலை இருக்கு. ஒரு புது கிளையன்ட்ட மீட் பண்ண அப்பாயின்ட்மென்ட் கேட்டிருந்தேன். ஈவினிங் போற மாதிரி இருக்கும்” என நாசூக்காய் மறுத்தான் ஸ்ரீதர்.


“தென் ஓகே, இந்த வீக் என்ட் வேணா பிக்ஸ் பண்ணிக்கலாம்” என்றான் கிருஷ்ணா உற்சாகம் வடிந்துபோய். அதன்பின் ஒரு நொடி கூட அங்கே நிற்காமல் சமையலறை நோக்கிப் போய்விட்டாள் ரஞ்சனி.


"உன் மச்சினன் பாவம், ஆசையா கூப்ட்டாரு. ஏன் வேணாம்னு சொன்ன ரஞ்சி" எனக் கேட்டாள் அவளுக்கு வால் பிடித்துக் கொண்டு பின்னோடே சென்ற வர்ஷிணி.


"ஓ... நீ அத கவனிச்சிட்டியா?"


"ம்ம்... அட்லீஸ்ட் நைட் சமயலையாவது ஸ்கிப் பண்ணிட்டு ஜாலியா போயிருக்கலாம்ல, ஏன் வேண்டாம்னு சொன்ன?"


"விடு, அதெல்லாம் சொன்னா உனக்கு புரியாது"


"சொல்லு, புரிஞ்சிக்க ட்ரை பண்றேன்"


"அது, அவங்க அம்மா சுருக்குனு எதையாவது சொல்லிடுவாங்க"


"அவங்கதான் இங்க இல்லையே, அப்பறம் என்ன?"


"ஒண்ணா வெளியில போனா, இந்த கிருஷ்ணா செல்ஃபி எடுத்து ஃபேமிலி க்ரூப்ல போடுவாரு. இல்லன்னாலும் அவங்க அம்மா போன் பண்ணும்போது அத்தானோ இல்ல அவரோ சொல்லிடுவாங்க. நான் ஸ்ரீதர் கூட வெளியில போனாலே அவங்களுக்கு காண்டாயிடும். கிருஷ்ணா கூட சேர்ந்து போனோம்னு சொன்னா இன்னும் சிக்கல்தான். எல்லாரும் ஒண்ணா போகும்போது மட்டும்தான் சைலன்ட்டா இருப்பாங்க"


"சத்தியமா முடியல... கேக்கும்போதே கொலை காண்டாகுது. நீ எப்படித்தான் டாலரேட் பண்ணிட்டு போறியோ"


"குடும்பம்னா இப்படித்தான் இருக்கும் வர்ஷிணி. எல்லாத்துக்கும் சண்டை போட்டுட்டு நிக்க முடியாது. நாம இதையெல்லாம் சகிச்சிட்டு போகலன்னா, வாழ்க்கையே நரகமா போயிடும்"


"உன் இடத்துல நான் இருந்தா தெரிஞ்சிருக்கும்"


"ஒண்ணும் புடுங்க முடியாது! ஏன் தெரியுமா? நமக்குப் பிறந்த வீட்டு சப்போர்ட் கிடையாது"


"உண்மைதான், ஆனா யாரோட சப்போர்ட்டும் இல்லாம நம்மளால இயங்க முடியும்ங்கிற இடத்துக்கு வந்துட்டுதான் கல்யாணம் பண்ணிக்கணும் ரஞ்சி. இதை நான் அப்பவே சொன்னேன். நீதான் காதுலயே வாங்கலியே"


"போதும் வர்ஷிணி. தேவையில்லாத பேச்செல்லாம் பேசாத. எனக்கு இதெல்லாம் ஓகேதான்" என அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு தன் வேலையைத் தொடர்ந்தாள் ரஞ்சனி.


இதையெல்லாம் பார்த்துக்கொண்டு அங்கேயே இருக்கப் பிடிக்கவில்லை வர்ஷிணிக்கு. ஆனாலும் ரஞ்சனிக்காக இருந்தே ஆகவேண்டிய கட்டாயம்.


அவளுக்குத் திருமணம் ஆன ஓராண்டுக்குள் அவளுக்கு இரண்டு முறை கருவுண்டாகி, சில நாட்கள் கூட நீடிக்காமல் கலைந்துபோனது. அதன்பின் குழந்தை நிற்கவே இல்லை. ஸ்ரீதரிடம் குறை இல்லை என்பது தெளிவாகத் தெரிந்திருக்க, பொறுமை இல்லாமல் ஸ்ரீதரின் அம்மா சித்ராவுக்கு அழைத்து, அவளை ஏதாவது ஒரு கருத்தரிப்பு மையத்துக்கு அழைத்துப் போய் மருத்துவம் பார்க்கும்படி திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்.


ரஞ்சனியின் வாழ்க்கை குறித்த பயத்தில், அவர்களும் அதைச் சிரமேற்கொண்டு தட்டாமல் செய்தனர்.


சில இலட்சங்கள் செலவு செய்து, ஐ-யு-ஐ முறையில் முயற்சி செய்து கருவுற்றாள். அதுவும் கலைந்து போனது. இதே போல மேலும் இரண்டு முறை முயன்று தோல்வியில் முடிய, ரஞ்சனியின் உடல்நிலை மோசமாகிப் போனது.


இப்படிக் கரு உண்டாகிக் கலைந்து போக என்ன காரணம் என ஆராய, ஏதேதோ பரிசோதனைகள் செய்திருக்கிறார்கள். அதன் அறிக்கைகள் இன்னும் ஓரிரு நாட்களில் வந்துவிடும்.


ஆன்மிகச் சுற்றுலா முடிந்து எல்லோரும் வந்ததும், மேற்கொண்டு சிகிச்சையைத் தொடரலாம் என்று முடிவு செய்திருக்கிறார்கள்.


அதுவரை ரஞ்சனிக்கு உதவியாக இருப்பதற்குத்தான் வர்ஷிணியை இங்கே வந்து இருக்கச் சொன்னார் வரதன்.


விருப்பம் இல்லை என்றாலும், அக்காவுக்காக வர்ஷிணி எதையும் செய்வாள் என்பது நாம் அறிந்ததே. மறுக்காமல் கிளம்பி வந்துவிட்டாள்.



ree

'நாம நினைச்சத விட இந்த டாஸ்க் கொஞ்சம் டஃப்பாதான் இருக்கும்போலிருக்கே' என்ற எண்ணத்துடன் சிங்கில் நிரம்பி வழிந்த பாத்திரத்தைத் துலக்கத் தொடங்கினாள் வர்ஷிணி.


"என்ன வர்ஷிணி, இந்தப் பாத்திரத்தை எல்லாம் விட்டெறிஞ்சு பந்தாட கை பரப்பரங்குதா? அப்படி எதுவும் செஞ்சு வெச்சிடாத. இதெல்லாம் என் மாமியாரோட பொக்கிஷம். ஒரு சின்ன கீறல் விழுந்தா கூட தாங்க மாட்டாங்க" என்றாள் ரஞ்சனி கிண்டலாக.


"ஸ்க்ரப்பர் வெச்சி தேய்ச்சா கூட தேஞ்சி போயிடும். வேணா இதையெல்லாம் பட்டுத்துணி - அன்னச் சிறகு இதுமாதிரி எதாலயாவது சாஃப்ட்டா துடைச்சு ஷோ கேஸ்ல பூட்டி வெச்சிக்க சொல்லு" என அதே தொனியில் வர்ஷிணி பதில் கொடுக்க, பக்கெனச் சிரித்தாள் ரஞ்சனி.


ஒரு வழியாகச் சமையல் வேலைகள் முடிந்து அண்ணன் தம்பி இருவரும் உண்டு முடித்தனர்.


ஸ்ரீதர் அலுவலகம் கிளம்பிச் சென்று விட, தன் அறைக்குள் புகுந்து கதவை அடைத்துக் கொண்டான் கிருஷ்ணா.


அதன் பிறகுதான் வர்ஷிணியை சாப்பிடவே அழைத்தாள் ரஞ்சனி. வீட்டு ஆண்கள் எல்லோரும் சாப்பிட்டு முடித்த பிறகுதான் பெண்கள் சாப்பிடுவது அங்கே வழக்கம். குறிப்பாக மருமகள்கள்.


முந்தைய இரவு கிருஷ்ணா இல்லாமல் ஸ்ரீதர் மட்டும் இருக்கவே மூவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடும்படி சந்தர்ப்பம் அமைந்தது.


சாப்பிட்டு முடித்ததும் பாத்திரங்களை ஒதுக்கும் நேரம் இதையும் இவளுடைய காதுக்குள் ஓதி இருந்தாள் ரஞ்சனி.


இந்தக் குடும்ப அமைப்பை நினைத்து கிலி பிடித்துக் கொண்டது வர்ஷிணிக்கு. இவர்களுடைய சாதியக் கட்டமைப்புக்குள் பெரும்பாலும் இப்படித்தான். இதிலிருந்து மாறுபட்டு மாற்றி யோசிக்கும் ஒருவன் கிடைப்பது என்பதெல்லாம் அரிதினும் அரிதுதான்.


உண்மையில் தன்னுடைய படிப்பு, வேலை, அதில் தன் வளர்ச்சி, தன் லட்சியம் தொடர்பான எதிர்காலத் திட்டங்கள் என அதை நினைத்தே வாழ்பவளுக்குத் திருமணம் ஒரு மிகப் பெரிய தடையாகத் தோன்றுகிறது.


ரஞ்சனியைப் போல ஒரு திருமணத்தைச் செய்துகொண்டு தினமும் சமைத்துத் துவைத்து ஆசையாகப் பிள்ளைகளைப் பெற்றுக்கொண்டு பொறுப்புடன் குடும்பம் நடத்துவதெல்லாம் இவளுக்கு ஒத்துவரும் என்றே தோன்றவில்லை.


யாரோ ஒருவனைத் திருமணம் செய்துகொண்டு அவன் போக்குக்குப் போவதிலோ அல்லது அவனைத் தன் சூழ்நிலைக்கு இழுப்பதிலோ அவளுக்குச் சற்றும் உடன்பாடில்லை.


வேறு எந்த வேலை வெட்டியும் இல்லாமல் பெட்டி படுக்கையைக் கட்டிக்கொண்டு இவள் எங்கெல்லாம் போகிறாளோ அங்கெல்லாம் இவளுடன் பயணிப்பவன் யாராவது சிக்கினால்தான் சரிப்பட்டு வரும். இதெல்லாம் நிதரிசனத்துக்குச் சற்றும் பொருந்தாத எதிர்பார்ப்புகள் அல்லவா? அதனால் இப்படியே இருந்துவிடலாம் என்கிற எண்ணமே அவளுக்கு அழுத்தமாக வந்துவிட்டது.


காலையிலிருந்து வேலை செய்த களைப்பில் சாப்பிடவே பிடிக்கவில்லை. அதைச் சொல்லிப் பார்த்தும் ரஞ்சனி அவளை விடுவதா இல்லை. வேறு வழியில்லாமல் சாப்பிட்டு முடித்து அவள் தங்கி இருக்கும் அறைக்குள் வந்தாள்.


அங்கே சார்ஜரில் போடப்பட்டிருந்த கைப்பேசியை நோக்கித்தான் அவளின் கை அனிச்சையாகச் சென்றது. அது வாட்சாப் செயலிக்குள் இழுத்துச் சென்றது.


'என்ன டியூட், நீங்கதான் மிஸ் சின்சியாரிட்டி ஆச்சே. ரெக்கார்ட் எழுத ஸ்டார்ட் பண்ணியிருப்பீங்க. அப்படியே அத போட்டோ எடுத்து எனக்கும் அனுப்புறது' எனக் கல்லூரித் தோழி ஒருத்தியிடமிருந்து குறுந்தகவல் வந்திருந்தது.


'எங்கிருந்து' என்ற சலிப்புடன், 'இன்னும் இல்ல டியூட்' என பதில் அனுப்பினாள்.


'ரியலி' என வாய் பிளந்த இமோஜியுடன் துரிதமாக பதில் வந்தது.


'நீ நம்பலன்னாலும் அதுதான் நிஜம். எழுதின உடனே போட்டோ எடுத்து அனுப்பறேன். பை.' என முடித்துக்கொண்டு, கைப்பேசியை லாக் செய்தாள்.


ரெக்கார்ட் எழுத சில பொருள்கள் தேவையாக இருந்தது. உடனே போய் வாங்கி வந்தால் எழுத ஆரம்பித்துவிடலாம் என முடிவு செய்து உடை மாற்றி, வண்டி சாவியையும் ஹேண்ட் பேக்கையும் எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.


வாகனத்தை நிறுத்தி வைத்திருக்கும் இடத்திற்கு வர, அங்கே நின்றிருந்தான் கிருஷ்ணா. அவன் கையிலும் பைக் சாவி.


அவளைப் பார்த்துவிட்டு, “ஹாய், வெளியில எங்கேயாவது போக போறியா?” என்று கேட்டான்.


"ம்... கொஞ்சம் திங்ஸ் வாங்கணும். மெயின் ரோட் வரைக்கும் போகலாம்னு" என்றாள்.


"உஃப் நல்லதா போச்சு. அங்க டோனி அண்ட் கய்ல என்ன ட்ராப் பண்ணிட்டு, நீ போ" என்றான் சுவாதீனமாக.


லேசாக கடுப்பானது அவளுக்கு. அவனுடைய பைக்கை வெறித்தாள்.


"பைக் பஞ்சர்... அதான்" என்றான்.


ஒரு தலை அசைவுடன் பைக்கில் சாவியை போட்டு சுழற்றப்போனாள்.


"நான் ஓட்டறேன், நீ பின்னால உட்காரு" என பைக்கை நெருங்கினான்.


அதில் மேலும் கடுப்பாகி, "சாரி, என் பைக்கை யாரை ஓட்டினாலும் எனக்குப் பிடிக்காது. நீங்க உட்காருங்க நான் ஓட்றேன்" என்றாள் வெடுக்கென.


சுறுசுறுவென ஏறியது கிருஷ்ணாவுக்கு. 'அதான, இவளோட திருமிரு மட்டும் அடங்கவே அடங்காதே" என எண்ணினாலும், 'சரி, பரவாயில்ல போய்த் தொலையலாம்’ என்கிற முடிவுக்கு வந்தான்.


அவள் வாகனத்தை நகர்த்தி எடுத்து நிலையாக நிறுத்தியதும் பின்னால் அமர்ந்தான்.


அவன் சொன்ன இடத்தில் அவனை இறக்கிவிட்டு, "முடிய எவ்வளவு நேரம் ஆகும்" என்று கேட்டாள்.


"ஐடியா இல்ல. நீ முடிச்சிட்டு வீட்டுக்கு போயிடு. நான் வந்துக்கறேன்" என்று சொல்லிவிட்டான்.


"ஓகே" என்று சொல்லிவிட்டு அந்தப் பகுதியிலிருக்கும் ஒரு டிபார்ட்மென்டல் ஸ்டோரில் தனக்கு தேவையான பொருள்களை வாங்கினாள்.


முடித்துக்கொண்டு வெளியில் வந்தவளின் கண்களின் பட்டது அங்கே இருந்த ஒரு நடைப்பாதைக் கடை.


அழகான வடிவங்களில் மரத்தாலான கீச்செயின்கள் கடைவிரிக்கப் பட்டிருந்தன. அதில் அவரவர் விரும்பும் வாசகங்களைக் கடைக்காரர் பொறித்துக் கொடுக்க, பிறந்தநாள் பரிசாக கிருஷ்ணாவுக்கு இதை வாங்கினால் என்ன என்று தோன்றியது.


யோசித்து, ஒரு வாசகத்தை முடிவு செய்து, ஒரு வட்ட வடிவ கீச்செயினில் அதை பொரித்து வாங்கிக்கொண்டாள்.


வீட்டிற்கு வந்ததும் அதை ரஞ்சனியிடம் காண்பித்துவிட்டு, அழகாக கிஃப்ட் பேக் செய்து எடுத்துவைத்தாள்.


அதன் பிறகு தன் ரெக்கார்ட் வேலையில் மூழ்கிவிட, அதைப் பற்றி மறந்தே போனாள்.


இடையில் மூன்று நான்கு முறை ரஞ்சனி அவளைச் சாப்பிட அழைத்தும் கூட, இடத்தை விட்டு நகரவில்லை.


ஒரு கட்டத்தில் கடுப்பாகி ரஞ்சனி முழு சந்திரமுகியாக மாறிய பிறகுதான் சுய உணர்வு வந்து எழுந்து வந்தாள்.


மீண்டும் எழுத அமர்ந்தவள், இரவு உணவு தயாரிக்கத்தான் வெளியில் வந்தாள்.


எல்லாம் முடித்து மீண்டும் அறைக்குள் வந்தவள், புத்தகக் குவியலுக்கு அடியில் சிக்கி இருந்த கிஃப்ட் பேக்கை பார்த்தாள்.


"ஐயோ, இதை இன்னைக்கு கொடுக்கலன்னா நல்லா இருக்காதே! ரஞ்சி சொல்ற மாதிரி, நீ சரியான மறதி மகாதேவிதான், வரூ' என தன்னைத் தானே திட்டிக்கொண்டு, 'நேற்று போல அவன் மாடியில் இருக்கிறானா பார்க்கலாம்?' என அங்கே வந்தாள்.


அவளை ஏமாற்றாமல் அங்கேதான் இருந்தான் கிருஷ்ணா, சரக்கு சைட் டிஷ்ஷுடன்.


ஹேர் கட் செய்து இன்னும் சூப்பராக காட்சியளித்தவன் அவளைப் பார்த்ததும், "ஹாய்" என்று புன்னகைத்தான்.


"ஹாய்" என்றபடி அருகில் அமர்ந்தவள் 'களுக்' எனச் சிரித்தாள்.


"ஓய்... என்ன" என்றான்.


"இல்ல, நேத்து கூட ஓகே, ஆனா இன்னைக்கு உங்க பார்த்டே அன்னைக்கு கூட ப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்து ஃபன் பண்ணாம, இப்படி தனிமைலயே இனிமை கண்டுட்டு இருந்தா! எப்புடி? இவ்ளோ பெரிய இன்ட்ரோவெர்ட்டா நீங்க?"


"ஹேய்... அதெல்லாம் இல்ல. என் ப்ரெண்ட்ஸ் எல்லாரும் அண்டை மாநிலத்துல இல்ல இருகாங்க, அதான்"


"ஆங்..."


"ம்ம்... சின்ன வயசுல ஸ்ரீதருக்கு அடிக்கடி உடம்பு சரி இல்லாம போயிடும். அதனால அவனுக்கு ஸ்பெஷல் கேர் கொடுக்க வேண்டி இருக்கும். ஊர் வழக்கப் படி, பெரிய அண்ணன் ரொம்ப கொயட். நான்தான் சரியான அருந்த வாலு"


"இஜ் இட்"


"ரொம்பத்தான்"


"சரி... சரி சொல்லுங்க" என்று சைட் டிஷ்ஷாக இருந்த கேரட் துண்டை எடுத்துக் கடித்தாள்.


"அம்மாவால என்ன ஹேண்டில் பண்ண முடியல. அப்பாவும் ரொம்ப பிசி. அதனால என்ன எங்க பெரிய அத்த இருகாங்க இல்ல, அவங்க வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. அப்ப மாமாக்கு கேரளால வேல. அதனால என் ஸ்கூல் எஜூகேஷன்ஸ் எல்லாம் அங்கதான். அப்பறம் பிட்ஸ்ல டிகிரி முடிச்சேன். ஜாப் பெங்களூர்ல. தென் யூஎஸ். அதனால இங்க எனக்கு ப்ரெண்ட்ஸே கிடையாது. என் பெஸ்ட் ப்ரெண்ட் கேரளாலதான் இருக்கான்"


"ஓஒ... அப்ப வேற வழி இல்லதான்"


"ஆமா, நீ என்ன இந்தப் பக்கம்?"


"ஆங்... மறந்துட்டேன் பாருங்க! உங்க பர்த்டேக்காக ஒரு சின்ன கிஃப்ட் வாங்கினேன். நீங்க இங்க இருந்தா கொடுக்கலாம்னு வந்தேன்" என்றபடி அதை அவனிடம் நீட்டினாள்.


"ஹேய், இதெல்லாம் எதுக்கு?"


"பர்த்டேன்னா கிஃப்ட் எல்லாம் குடுப்பாங்கதான. ஏதோ என்னால முடிஞ்சது ?"


"ஹேய்... நான் உனக்கு கிஃப்ட் கொடுக்கணும்னு சொன்னா, நீ முந்திட்ட. எனிவேஸ் தேங்க்ஸ்" என்றபடி அதை வாங்கிப் பிரித்தான்.


'ஸ்டம்பிளிங் இஸ் நாட் ஃபாலிங்' என அதிலிருந்த வாசகம் அவனை வெகுவாக இளக வைத்தது.


"எக்சலண்ட்... தேங்க்ஸ்" என்றான் உளமார.

ree

"மால்கம் எக்ஸோட ஒரு பேமஸ் கோட்" என்றாள்.


எப்படி ஒரு சிறு விளக்கிலிருந்து பரவும் ஒளி இருளை விரட்டுமோ அதைப் போல அவனை ஆட்கொண்டிருந்த விரக்தி நிலை அவனை விட்டு விலகுவது போலத் தோன்றியது.


நீர் திரையிட்ட அவனுடைய விழிகளுக்குள் ஒளிர்ந்தாள் அமிர்தவர்ஷினி.

1 Comment

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Guest
Oct 05
Rated 5 out of 5 stars.

Nice update dear

Like
© KPN NOVELS COPY PROTECT

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2024 by KPN Publications

bottom of page