விதை பந்து - 2
கதை பிறந்த கதை!
பாரத தேசத்தோட தென் பகுதில 'மகிலாரோப்பொயம்' அப்படின்னு ஒரு நகரம் இருந்தது. அதை 'அமரசக்தி'ன்னு ஒரு ராஜா ஆட்சி பண்ணார்.
அந்த ராஜாவுக்கு பகுசக்தி, உக்கிரசக்தி அப்பறம் அனந்த சக்தின்னு மூணு பிள்ளைகள்.
அவங்க மூணுபேரும் சரியான குறும்புக்காரங்க, படிப்பில் கொஞ்சம் கூட ஆர்வம் இல்லாதவங்க, சொல்பேச்சு கேக்காத சரியான முரட்டு முட்டாளுங்க!
அந்த ராஜாவும் பல குருமார்களை அவங்களுக்காக நியமிச்சு பார்த்தார்.
ம்ஹும் ஒண்ணுமே வேலைக்கு ஆகல!
அவங்களோட அட்டகாசம் தாங்காம எல்லாரும் தெறிச்சு ஓடினாங்க.
அந்த சமயத்துல ராஜா தன்னோட கவலையை அவரோட அரசவைல சொல்லி ரொம்பவே வருத்தப்பட்டார்.
அவரோட அந்த நிலைமையை நினைச்சு வருந்தின விஷ்ணு சர்மா அப்படிங்கற ஒரு பண்டிதர் முன்வந்து, "உங்க பிள்ளைகளை ஒரு ஆறு மாசத்துக்கு என் கிட்ட விடுங்க!
நான் அவங்களுக்கு கல்வியை போதிக்கறேன்" அப்படின்னு சொன்னார்.
அந்த அரசவைல இருந்தவங்க எல்லாரும் அவரை நினைச்சு உள்ளுக்குளேயே சிரிச்சாங்க.
வெளிப்படையா சிரிச்சா ராஜா தண்டனை கொடுத்தா என்ன பண்றது?
அவர் மேல உண்மையான அக்கறை இருக்கற சில பேர் வேண்டாம் அப்படிங்கற மாதிரி ஜாடை செஞ்சாங்க.
ஆனா அவர் அதை பத்தியெல்லாம் கவலை படல, நம்பிக்கையோட பிள்ளைகளை அனுப்பச்சொல்லி ராஜாகிட்ட கேட்டார்.
அந்த ராஜா அந்த ஏற்பாட்டுக்கு சந்தோஷமா ஒப்புக்கொண்டார்.
சந்தோஷமா அவரோட அந்த முட்டாள் பிள்ளைங்கள அந்த விஷ்ணுஷர்மாவோட அனுப்பி வெச்சார்.
அந்த அரச குமாரர்களை தன் வீட்டுக்கு கூட்டிட்டுவந்த விஷ்ணு சர்மா அவங்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கல.
ஏன்னா அவங்க அதை காதுகொடுத்து கேக்க மாட்டாங்கன்னு அவருக்கு தெரியும்.
அதனால அவர் ஒரு புது யோசனையை கடைபிடிச்சார்.
அந்த குமாரர்களுக்கு எளிமையா புரியற மாதிரி சில கதைகளைச் சொல்ல ஆரம்பிச்சார்.
அவங்களுக்கு அது பொழுதுபோக்காவும் வேடிக்கையாவும் இருந்ததால அந்த கதையை ஆர்வமா கேட்டாங்க அந்த பிள்ளைங்க.
அந்த கதைகள் ரொம்பவே எளிமையா இருந்ததால அவங்க மனசுல ஆழமா பதிஞ்சுது.
ஆனா அந்த கதைகள் மூலமா அவங்களே அறியாம அவங்க அரசியல் தந்திரங்களை கத்துக்கிட்டாங்க.
அவங்களுக்கு மன முதிர்ச்சி ஏற்பட்டது.
ஒரு அரசாங்கத்தை நிர்வகிக்கற திறமை அந்த கதைகளால அவங்களுக்கு வந்து சேர்ந்தது.
முட்டாளா கூட்டிட்டு போன அந்த அரச குமாரர்களை நாலும் தெரிஞ்ச மேதாவிகளா அவங்க அப்பா கிட்ட ஒப்படைச்சார் விஷ்ணு சர்மா!
ராஜா சந்தோஷத்துல திக்குமுக்காடி போய் பல பரிசுகள் கொடுத்து அவரை கோரவித்தார்.
இப்படி உருவானதுதான் காலம் காலமாக நாம் நம் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொண்டிருக்கும் பஞ்ச தந்திர கதைகள்.
கி.மு மூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த விஷ்ணு சர்மாவால் சமஸ்க்ரிதத்தில் எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பே இந்த பஞ்ச தந்திர கதைகள் என்பது.
இது மொத்தம் எண்பத்து ஆறு கதைகள் கொண்ட ஒரு தொகுப்பு ஆகும்.
முதலில் வாய்மொழியாகச் சொல்லி செவி வழியாகச் சென்றடைந்த இந்த கதைகள் இன்றளவும் பல மொழிகளிலும் புத்தகங்களாகச் சிரஞ்சீவியாக வாழ்ந்து வருகிறது.
இந்த பஞ்சதந்திர கதைகளைப் படித்து ரசிக்கவென ஒரு பெரிய கூட்டமே இருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை.
இவை விலங்குகளை முக்கிய கதாபாத்திரங்களாகக்கொண்டு சொல்லப்படும் பொழுதுபோக்கு கதைகளாக இருந்தாலும் நீதியின் குறிப்பாக அரச நீதியின் விளக்கமாகவே இருக்கிறது.
***
அடுத்ததாகவும் இதில் ஒரு கதை இருக்கிறது. அது ஒரு ராணியின் கதை.
தமிழ்ச் சமூகத்தையே குறிப்பாகப் பெண்களை தன் எழுத்தின் ஆளுமைக்குள் கட்டுப்படுத்தி வைத்திருந்த ஒரு ஜெகன்மோகினியின் கதை.
இன்றைய காலகட்டத்தில் ஒரு நவீன ரக கைப்பேசியும் இணையத் தொடர்பும் இருத்தல் போதும் வெகு சுலபமாக ஒருவர் கதை எழுதிவிட முடியும்.
ஆனால் ஒரு நூற்றாண்டு பின்னோக்கிப் போனோமானால் ஒரு எழுத்தாளராக ஆவது என்பது அவ்வளவு ஒன்றும் சுலபமாக இருந்திருக்கவில்லை.
குறிப்பாகப் பெண்களுக்குக் கல்வி என்பதே மறுக்கப்பட்ட பொழுது அவளால் ஒரு நாவல் ஆசிரியராக ஆகமுடியும் என்பதெல்லாம் கற்பனையின் உச்சம்.
அதுவும் நாவல் ராணி எனப் போற்றப்படுவதெல்லாம் ஒரு பெண் கனவிலும் கூட எண்ணிப்பார்க்க முடியாத ஒரு அதிசயம்.
அந்த அதிசயத்தை நிகழ்த்திக்காட்டிய ஒரு சிங்க பெண்மணிதான் பின்னாளில் அனைவராலும் 'நாவல் ராணி' எனக் கொண்டாடப்பட்ட வை.மு.கோதை நாயகி அவர்கள்.
காலத்தின் ஓட்டத்தில் பலரும் அவரை மறந்துவிட்டோமோ என்று தோன்றுகிறது.
அவரை பற்றித் தெரியாத ஒரு தலைமுறை கூட உருவாகிவிட்டது.
பாரதியார், பாரதிதாசன் போன்ற புரட்சிக் கவிகளை இன்றும் புகழ்ந்து பாடிக்கொண்டிருக்கும் நாம் இவரை எப்படி மறந்தோம் என்பது புரியவேயில்லை.
வை.மு.கோ அம்மாவைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள...
அவர் 1901இல் பிறந்தவர்.
அவருடைய திருமணம் நடைபெறும் போது அவருக்கு வயது ஐந்து.
அவருக்கு எழுதப் படிக்கவே தெரியாது.
ஆனால் அழகாகக் கதை சொல்லும் திறன் இயல்பிலேயே அவருக்கு கை சேர்ந்திருந்தது.
வீட்டில் உள்ள பிள்ளைகளுக்கு அழகாகக் கதை சொல்லுவார்.
வழக்கமாக எல்லோரும் சொல்லும் கதைகளிலிருந்து மாறுபட்டு, அவர் தன் சொந்த கற்பனையில் உருவான கதைகளைப் பிள்ளைகளுக்குச் சொல்லவும் அவரது திறமையை உணர்ந்த அவரது கணவர் திரு வை.மு.பார்த்தசாரதி அதை ஊக்குவித்தார்.
அவர் கற்பனையில் முதன் முதலில் உருவான 'இந்திர மோகனா' என்ற நாடகத்தை அவர் சொல்லச் சொல்ல அவரது தோழி பட்டம்மா எழுதினார்.
(இந்த நாடகம் 1924 இல் புத்தகமாக வெளிவந்தது)
அதன் பிறகுதான் இவர் தமிழ் எழுதப் படிக்க கற்றுத் தொடர்ந்து தமிழில் தீவிரமாக எழுதத்தொடங்கினர்.
பின் வந்த காலத்தில் 'ஜெகன்மோகினி' என்ற பத்திரிகையைத் தொடங்கி, நடத்தினார்.
115 படைப்புகளை கொடுத்து 'நாவல் ராணி' 'கதாமோகினி' என்றெல்லாம் போற்றப்பட்டார்.
மேலும் அவர் சிறந்த மேடைப் பேச்சாளராக விளங்கினார். ராஜாஜியுடன் இணைந்து விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டார்.
அன்று இருந்த காலகட்டத்தில் இந்த சமுதாயம் மலர் தூவி அவரை வாழ்த்தவில்லை.
மாறாக இச்சமூகத்தால் அவர் அனுபவித்த இன்னல்கள் கொஞ்சம் நஞ்சமில்லை.
நேரடியான அவமதிப்புகளை மிதித்துத் தள்ளித்தான் அவர் மேலே வந்தார்.
அதுவும் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வருவதையே பாவமாகக் கருதிய காலத்தில் அவர் விதவை திருமணத்தைப் பற்றிய கதைகளை எழுதினார். அதைத் துணிச்சலுடன் மேடையில் பேசவும் செய்தார்.
வை.மு.கோ அம்மாவை பற்றி எண்ணிப்பார்க்கும்பொழுது இப்பொழுது உள்ள எழுத்தாளர்களுக்கு வாய்ப்புகள் அதிகமாக கொட்டிக்கிடப்பதாகவே தோன்றுகிறது.
ஆனால் அந்த அளப்பரிய வாய்ப்பை பயன்படுத்தி நாம் இந்த சமுதாயத்திற்காக என்ன செய்யப்போகிறோம் என்ற கேள்வி என் முன்னே மலையென வளர்ந்து நிற்கிறது.
இந்த விதை பந்து தொடரில் இந்தக் கதைகளை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், கதைகள் வெறும் பொழுதுபோக்கு அம்சமாக மட்டும் இருக்கக் கூடாது என்பதைக் குறிப்பிடத்தான்.
வாசிப்பு என்பது நம்மை நெறிமுறை படுத்தும் வகையில் பயனுள்ளதாகவும் இருக்க வேண்டும்.
குறிப்பாகப் பெண்களின் வாசிப்பு என்பது மெல்லினமாக ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் அடைந்துபோகக் கூடாது.
ஏனென்றால் ஒரு வலிமையான இளைய தலைமுறையை உருவாக்கும் மிகப்பெரிய பொறுப்பு நம் பெண்களின் கையில்தான் இருக்கிறது.
'என்னால் அழுத்தமான விஷயங்களைப் படிக்க முடியாது' என்ற எண்ணத்திலிருந்து கூடுமான வரையிலும் வெளியில் வரவேண்டும் நாம்.
காரணம் நாம் எதை உணர்கிறோமோ அதைத்தான் நம்மால் நாம் பிள்ளைகளுக்குக் கொடுக்க முடியும்.
அடுத்த தலைமுறையினருக்கு வழி காண்பிக்கும் சிறந்த கலங்கரை விளக்கமாக ஒரு அம்மாவும் இருக்க வேண்டுமென்றால் அவள் முதலில் தெளிவான சிந்தனையோடு இருக்க வேண்டும்.
முட்டாள் பிள்ளைகளையே மாற்றி நல்வழிப் படுத்தும் வல்லமையைக் கதைகள் பெற்றுள்ளது என்றால் இன்றைய காலத்தில் பிறக்கும் பொழுதே உயர்ந்த தொழில்நுட்பங்களை தன் அறிவில் பதியவைத்துக்கொண்டே பிறக்கும் அறிவான பிள்ளைகளுக்கு அது எவ்வளவு தூரம் பயன் கொடுக்கும் என்பதை நாம் உணரவேண்டும்.
அதற்கு, பயனுள்ள புத்தகங்களைத நாம் தேடிப் போக வேண்டும்.
அப்படிப்பட்ட ஆரோக்கியமான வாசிப்பைத் தூண்டுவதுதான் இந்த 'விதைப்பந்து' தொடரின் தலையாய நோக்கம்.
படிப்போம்...
புத்தகமாகப் படிப்போம்...
இணையதளங்களில் 'ஆன்லைன்'இல் படிப்போம்...
ஒலிப்புத்தகமாக செவிவழி படிப்போம்...
ஆனால் நம் சிந்தனைக்கு ஆரோக்கியமானதாகப் படிப்போம்!
Commentaires