பக்தி
டேவிட் ஜென்னியை தன் காரில் அழைத்துவந்து கொண்டிருந்தான். கடற்கரையில் இருந்து புறப்பட்டு வரும் போதுதான் ஜென்னியின் கைப்பேசி ஒலித்து புகழ் அவளிடம் பேசியிருந்தான்.
உடனே அவள் மருத்துவமனைக்குப் போக வேண்டுமென்று சொல்ல, அவர்கள் இருவரும் அங்கே வந்தனர்.
அங்கே வந்து மகிழை பார்க்கும் வரை டேவடிற்கு தெரியாது. அவனின் தந்தைக்காகத்தான் ஜென்னி வந்திருக்கிறாள் என்று. அவனுக்கு அதிர்ச்சிகரமாய் இருந்தது என்னவெனில் மகிழ், மாயா இருவரின் முகத்தைக் கூட பார்க்காமல் ஜென்னி தவிர்த்துவிட்டு வந்ததுதான்.
மயக்கநிலையில் கூட மகிழ் என்று புலம்பியவளுக்கு அந்த மகிழ் இப்போது கண்ணுக்குத் தெரியவில்லையா? அவனால் அவன் கண்களையே நம்ப முடியவில்லை.
ஜென்னியோ ஒரு வார்த்தை கூட பேசாமல் அழுத்தமாய் அமர்ந்திருந்தாள். உணர்ச்சிகள் துடைத்த அவளின் முகத்தின் பின்புலத்தில் அவள் என்னதான் சிந்திப்பாளோ?
இந்த யோசனைகளோடு அந்த கார் ஜென்னியின் வீட்டின் வாசலை வந்தடைய, டேவிட் காரின் இயக்கத்தை நிறுத்திவிட்டு அவள் புறம் திரும்பினான்.
எதுவும் பேசாமல் அவள் பாட்டுக்கு காரிலிருந்து இறங்கி நடக்க டேவிடும் காரை விட்டு இறங்கி,
"ஜென்னி நில்லு" என்றான். அவள் மௌனமாய் அவன் புறம் திரும்பினாள்.
"நீ செஞ்சது உனக்கே சரின்னு படுதா?"
அவள் புருவங்கள் சுருங்க, "என்ன செஞ்சேன்?" என்றாள்.
"மகிழையும் மாயாவையும் ஏன் அவாயிட் பண்ண? அப்படி என்ன பிடிவாதம் உனக்கு?"
"அவாயிட்லாம் பண்ணல... அவங்ககிட்ட பேச எனக்கு எதுவும் இல்ல... நான் பேசல"
"ஓ... அப்போ ஏன் மகிழ் அப்பாவுக்கு உடம்பு முடியலன்னதும் அவ்வளவு பதட்டப்பட்ட"
"புகழ் அழுதுகிட்டே சொல்லும் போது மனசுக்கு கஷ்டமாயிடுச்சு... அதான் போய் பார்க்கலாம்னு... அதுல என்ன தப்பு?"
"போய் பார்த்தது தப்பில்லை ஜென்னி... அங்கே போய் மகிழையும் மாயாவையும் பார்க்காம பேசாம வந்ததுதான் தப்பு"
"தப்பில்லை டேவிட்... நான் பேசியிருந்தாதான் தப்பா போயிருக்கும்"
"ஏன்?"
"ஏன்னா?" என்று தயக்கமுற்று அவள் யோசிக்க,
"சொல்லு ஜென்னி" என்று டேவிட் அழுத்தம் கொடுத்தான்.
அவள் வேதனையோடு, "மகிழ் என்னை இன்னும் காதலிக்கிறாரு டேவிட்" என்றாள்.
டேவிடின் முகம் லேசாக மாற்றமடைந்து மீண்டவன் சற்று நிதானித்து, "ஏன்? நீ அவரை இன்னும் காதலிக்கல?!" என்று கேட்டான்.
"அது" என்று தடுமாறியவள், "நான் காதலிக்கிறேனா இல்லையாங்கிறது இப்ப முக்கியமில்லை... மகிழ் மாயாவோட ஹஸ்பெண்ட்... அதுதான் முக்கியம்" என்றாள்.
டேவிட் யோசனையில் ஆழ்ந்திட ஜென்னி அவனிடம், "காலையில நான் மகிழை உங்க ஆபிஸ்ல பார்த்தேன் டேவிட்... என்னை பார்த்துட்டு நீங்கதான் ஜெனித்தா விக்டரான்னு கேட்டாரு" என்க,
"நீ என்ன சொன்ன?" என்று டேவிட் அதிர்ச்சியை கேட்டான்.
"எஸ்னு சொன்னேன்... ரொம்ப உடைஞ்சு போயிட்டாரு... அந்த நிமிஷம் அவர்கிட்ட தெரிஞ்சது வெறும் ஏமாற்றம் இல்ல... வலி... அப்பதான் தோணுச்சு... மகிழ் மாயாவை கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் இரண்டு பேரும் சந்தோஷமா வாழலன்னு"
"அதெப்படி சொல்ற?"
"மகிழால என்னை மறக்க முடியலன்னா... மாயாவோடு அவரால சந்தோஷமா எப்படி வாழ முடியும்?... மகிழால ஒரு பொய்யான வாழ்க்கையை வாழ முடியாது... ஐ நோ அபௌட் ஹிம்...
கடலும் வானமும் தூரத்தில சேர்ந்திருக்கிற மாதிரி தெரியும்... ஆனா அது வெறும் பிம்பம்தான்... நிஜமில்லை... அவங்க இரண்டு பேரும் அப்படிதான் இருக்காங்க...
இந்த நேரத்தில நான் சாக்ஷியா அவங்க வாழ்க்கையில நுழைஞ்சா... எல்லாமே தப்பாயிடும்... ஏன்? மகிழ்கிட்ட இரண்டு வார்த்தை பேசிட்டா கூட என் கட்டுப்பாடு உடைஞ்சு போயிடும்னு எனக்கே பயமா இருக்கு... அப்புறம் மாயாவோட லைஃப் மொத்தமா ஸ்பாயிலாயிடும்"
"நீ சொல்ற மாதிரி பார்த்தா... மகிழ் ரொம்ப பாவம் ஜென்னி... அவர் இன்னும் உன்னை நினைச்சிட்டிருக்காருன்னா அவரோட காதலை என்ன சொல்றதுன்னே தெரியல" அவன் ஜென்னியை காதலித்தாலும் அந்த வார்த்தை அவன் மனதிலிருந்து வந்ததே.
"சாக்ஷியை அந்தளவுக்குக் காதலிக்க மகிழால மட்டும்தான் முடியும்... ஆனா சாக்ஷிக்குதான் அந்த கொடுப்பனை இல்லையே" என்று விரக்தியோடு புன்னகைத்தவளை ஆச்சர்யமாய் பார்த்தான் டேவிட்.
அவளே மேலும், "ஆனா அந்த கொடுப்பனை என் மாயாவுக்கு கிடைச்சிருக்கு... ஷீ இஸ் ரியலி லக்கி" என்றாள்.
"நீ மாயாவைப் பத்தி மட்டும் யோசிக்கிற ஜென்னி"
"உண்மைதான்... இந்த சூழ்நிலையில நான் இரண்டு பேர்ல யாராச்சும் ஒருத்தருக்காகதான் யோசிக்க முடியும்... ஸோ மகிழா மாயாவான்னு பார்த்தா... எனக்கு மாயாதான் முதலிடம்... எனக்கு கண்ணு போன நாள்ல இருந்து நான் இந்த உலகத்தைப் பார்த்ததே அவளோட கண்களாலதான்... எனக்கு அவ வெறும் தோழி இல்ல... அம்மா... என்னை அந்தளவுக்கு கண்ணுக்குள்ள வைச்சு பார்த்துகிட்டவ... நான் மட்டும் மாயாவை விட்டுட்டு தனியா அன்னைக்கு போகாம இருந்திருந்தா எனக்கு எதுவும் ஆகியிருக்காது... அப்படி ஒரு மோசமான நாள் என் வாழ்க்கையில வந்திருக்காது”
“கரெக்டா சொல்லணும்னா... மகிழ் எனக்கு வானம் மாதிரி... ரொம்ப வண்ணமயமா என் வாழ்க்கையை மாத்தினவர்... ஆனா மாயா என்னோட மூச்சுக் காற்று... நான் எப்படி அவளை விட முடியும்?
அதான்... அவளுக்காக என் காதலை விட்டுகொடுத்துட்டேன்... அதுல ஒண்ணும் தப்பில்லை... இன்னும் கேட்டா மகிழுக்கு என்னை விட அவதான் பெட்டர் பேர்... இன்னைக்கு மகிழ் இந்த இடத்தில இருக்குறாருன்னா அவதான் அதுக்கு காரணம்... அவளுக்குதான் அதோட மொத்த கிரெடிட்டும்... நான் வேண்டிக்கிறதெல்லாம் ஒண்ணே ஓண்ணுதான்... எந்த காரணத்தைக் கொண்டும் எந்த சந்தர்பத்திலயும் மகிழை மட்டும் நான் சந்திச்சு பேசிடவே கூடாது" என்று அவள் கண்ணீர் சிந்தி வேதனையுற, டேவிடின் கண்களிலும் அவனை அறியாமல் கண்ணீர் நிரம்பியது.
அந்த நேரம் அங்கே ஒரு மௌன நிலை சூழ்ந்து கொள்ள டேவிட் அதை கலைத்தபடி, "இவ்வளவு யோசிச்ச நீ ஹாஸ்பிடல் போகணுங்கிற முடிவை எடுத்திருக்க வேண்டாமே" என்றான்.
"அதெப்படி டேவிட்? மகிழ் அப்பாவுக்கு ஏதாவதாயிருந்தா என் மனசாட்சியே என்னைக் கொன்னுடுமே"
"ஏன்?” என்று கேட்டு அவன் ஆழமாய் பார்க்க சற்று தடுமாறியவள்
"விஷயம் தெரிஞ்சு போகாம இருந்தா கில்டியா இருக்காதா?" என்று மழுப்பினாள்.
"நீ சொல்றதும் சரிதான்" என்று அவள் சொல்வதை ஏற்றுக் கொண்டவன்,
"நான் கிளம்பட்டுமா?" என்று கேட்டு அவளைத் தவிப்பாய் பார்க்க,
"ஹ்ம்ம்ம்" என்றாள்.
காரில் ஏற திரும்பியன் மீண்டும் அவள் புறம் திரும்பி, "கிளம்பறேன் சொன்னதும் சரின்னுட்ட... உள்ளே கூப்பிட மாட்டியா?" என்று கேட்டு ஏக்கமாய் அவளைப் பார்க்க,
அவள் அவன் எண்ணம் புரிந்து, "லேட்டாயிடுச்சு... உங்க அப்பா தேவையில்லாம ஏதாவது கற்பனை பண்ணிப்பாரு... நீங்க கிளம்புங்க" என்றாள்.
"ஏதாவது நினைச்சுக்கட்டும்... பரவாயில்லை" என்றவனுக்கோ இன்னும் சில நிமிடங்கள் அவளோடு இருக்க மாட்டோமா என்றிருந்தது.
அவள் தீர்க்கமான பார்வையோடு, "எனக்கு பரவாயில்லை இல்லை... நீங்க கிளம்புங்க" என்று அழுத்தமாகச் சொல்ல,
"ஷுவரா சொல்றியா?" என்று போகாமல் நின்றவனை அவஸ்தையோடு பார்த்தவள்,
"என்னாச்சு டேவிட் உங்களுக்கு?" என்று சலிப்போடு கேட்டாள்.
"அதான் எனக்கும் தெரியல ஜென்னி... நீதான் சொல்லணும்... அன்னைக்கு காதலைப் பத்தி அவ்வளவு க்ளாஸ் எடுத்தியே... உனக்கு புரியலயா என் ஃபீலிங்ஸ்?" என்றான் முகத்தை பரிதாபமாய் மாற்றிக் கொண்டு!
"பீலிங்ஸா" என்றவள் தவிப்போடு,
"நான் தப்பு செஞ்சுட்டேன்... வாயை வைச்சிட்டு சும்மா இல்லாம... காதல் கத்திரிக்காய்னு... ஏதேதோ பேசி உங்க மனசைக் கெடுத்துட்டேன்... நான் சொன்னதை எல்லாத்தையும் வாபஸ் வாங்கிக்கிறேன் ப்ளீஸ் கிளம்புங்க" என்று கரத்தைக் கூப்பியபடி கெஞ்சாத குறையாக அவள் கேட்க,
அவன் கோபத்தோடு,"அப்போ நான் ப்ரீஸ்ட்டாகிறதுதான் உனக்கு விருப்பமா?" என்றான்.
அவள் புன்னகைத்துவிட்டு, "கரெக்ட் டேவிட்... கர்த்தருக்கு சேவை செய்ற பாக்கியம் எல்லோருக்கும் கிடைக்குமா என்ன? நீங்கெல்லாம் கோடில ஓருத்தர்... ஒருத்தர் இரண்டு பேர் காதலிக்காததால இந்த உலகம் ஒண்ணும் ஸ்தம்பிச்சிடாது... பேசாம நீங்க ஆசைப்பட்டதையே செய்யுங்க" என்றாள்.
அவளை விழிகள் இடுங்கப் பார்த்தவன், "ஆனா எங்க அப்பாவுக்கு அதுக்கு விருப்பமில்லையே" என்றான்.
"ஆனா கர்த்தரோட விருப்பம் அதுவா இருக்கே டேவிட்"
"அப்படின்னு உனக்கு யாரு சொன்னது?"
"இப்ப எனக்கு அந்த ஆசை இல்லை... என்னோட ஆசை விருப்பம் எல்லாம்... நீ என் வாழ்க்கையில இருக்கணும்... எப்பவும் இருக்கணும்... என் கூடவே இருக்கணும்... டில் மை டெத்"
"டேவிட் என்ன பேசுறீங்க.?.. அதெல்லாம் முடியாது... அதுவும் உங்க ஃபீலிங்ஸ் நீங்க நினைக்கிற மாதிரி காதல் எல்லாம் கிடையாது" என்று மறுத்தாள்.
"அப்புறம் எது காதல்?விட்டுட்டுப் போறதும் விட்டுக் கொடுக்கிறதுமா?" என்று கேட்க அந்த வார்த்தை அவளைக் குத்தி காயப்படுத்தியது.
அவளின் வேதனையைப் பார்த்தவன், "ஸாரி ஜென்னி... உன்னை குத்திக் காட்ட அப்படி பேசல... தோணுச்சு கேட்டுட்டேன்" என்றான்.
"நீங்க கேட்டது தப்பில்லை.. ஆனா டேவிட்... என்னை ப்ளீஸ் புரிஞ்சுக்கோங்க... உங்களை என்னால ஃப்ரெண்ட்டா மட்டும்தான் பார்க்க முடியும்... நாட் ஹேஸ் அ பெட்டர் ஹாஃவ்...
நான்... உங்களுக்கு வேண்டாம்... உங்க தகுதிக்கும் உங்க கேரக்டருக்கும் ஏத்த மாதிரி ஒரு பெஸ்ட்டான பொண்ணு நிச்சயம் கிடைப்பாங்க... என்னை விட்டுடுங்க" என்றவள் அவன் பதிலை எதிர்பாராமல் திரும்பி வீட்டை நோக்கி நடக்க,
"யூ ஆர் ரைட் ஜென்னி... நான் கல்யாண பண்ணிக்க போற பொண்ணு இந்த உலகத்திலயே ரொம்ப ரொம்ப பெஸ்டான பொண்ணு.... அந்த பொண்ணு நீதான்... நீ மட்டும்தான்" என்று அவள் காதில் கேட்கும்படி சத்தமாய் உரைத்தவன் தன் காரில் ஏறி விரைந்தான்.
ஜென்னி டேவிடின் வார்த்தைகளைக் கேட்டு ஒரு பக்கம் ஆச்சரியப்பட்டுப் போனாள். மறுபுறம் அதிர்ச்சியும் அடைந்தாள்.
சிலரைப் பார்க்கும் போது நட்புணர்வு வரும்.
சிலரைப் பார்க்கும் போது அன்புணர்வும் காதலும் வரும்.
ஆனால் ரொம்பவும் குறுகிய சிலரின் மீது மட்டுமே பக்தி வரும்.
அவன் மீது அவள் கொண்டது பக்தி.
கடவுளாய் பார்த்தவனைக் காதலன் என்று ஸ்தானத்தில் எப்படி வைத்துப் பார்க்க முடியும். அதுவே அவளின் தயக்கம்.
Comments