top of page

தனிக்குடித்தனம் போகலாமா?தனிக்குடித்தனம் போகலாமா?


வழக்கமாக நடைப்பயிற்சிக்குச் செல்லும் பூங்காவில் போடப்பட்டிருந்த கல் மேடையில் ஓய்வாக அமர்ந்திருந்தார் ராஜாமணி.


அவர் முகத்தில் அவ்வளவு யோசனையின் ரேகை படிந்திருந்தது.


அவருக்கு அறுபது வயது முடிந்து, வெகு விமரிசையாக சஷ்டியப்த பூர்த்தி கொண்டாடி ஒரு மாதம்தான் ஆகியிருந்தது.


மத்திய அரசுப் பணியிலிருந்து அவர் ஓய்வு பெற்றும் கூட.


பொறுப்பான மனைவி மைதிலி.


இரண்டு மகன்கள் ஒரு மகள் என நிறைவான குடும்பம் அவருடையது.


பிள்ளைகளை நன்கு படிக்கவைத்தார்.


அவர்களும் பொறுப்பாக படித்து நல்ல வேலையைத் தேடிக்கொள்ள, பொருத்தமான வாழ்க்கைத்துணைகள் வாய்க்கப்பெற்று இப்பொழுது யாவரும் நலம்.


மூத்தவன் சுந்தர் இவர்கள் கூடவே இருக்கிறான். மருமகள் நித்யா ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறாள். அவர்களுக்கு ஒரு மகன். இப்பொழுதுதான் பள்ளியில் சேர்த்திருக்கிறார்கள். இரண்டாவது பெண் குழந்தைக்கு இப்பொழுதுதான் ஒன்பது மாதங்கள் ஆகிறது.


இளையவன் பாஸ்கர் பெங்களூரில் இருக்கிறான்.


அவன் மனைவி ஒரு கல்லூரி பேராசிரியை. இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது.


மகள் சுமதி திருமணம் முடிந்து அமெரிக்காவில் இருக்கிறாள். மாப்பிள்ளை ஒரு மென்பொறியாளர்.


அவர்கள் குழந்தைக்கு ஒரு வயது நிரம்பியிருந்தது.


ஆறு மாதங்கள் அமெரிக்கா சென்று தங்கியிருந்து மகளுக்குப் பிரசவம் பார்த்துவிட்டு வந்திருந்தாள் மைதிலி.


அதன் பிறகு குழந்தையின் முதல் பிறந்தநாளை இங்கே கொண்டாட வந்தவர்கள் அப்படியே இவர்களுடைய அறுபதாம் கல்யாணத்திலும் கலந்துகொண்டு பின்பு அமெரிக்கா திரும்பியிருந்தனர்.


முக்கிய கடமைகளை முடித்தாகிவிட்டது 'அப்பாடா' என மூச்சுவிடலாம் என்று இருக்கும்பொழுது இப்படி ஒரு புதிய பூதம் கிளம்புகிறது.


அவர் தன்னுடைய எண்ணப்போக்கிலிருக்க அவருக்கு அருகில் வந்து உட்கார்ந்த அவரது ஆப்த நண்பர் சுப்புராமன், "என்னடா மந்திரிமணி! ஏதோ கப்பலே கவுந்த மாதிரி இப்படி உட்கார்ந்துண்டு இருக்க?" என்று கேட்க, "ஆமாம்! இன்னும் கப்பல் வேற கவுரணமாக்கும்" என்று அங்கலாய்த்தார் ராஜாமணி.


"ப்ச்... இப்ப எதுக்கு இவ்வளவு சலிப்பு" என சுப்பு கேட்க, "தனி குடித்தனம் போயிட்டா தேவலாம்னு இருக்குன்னு சொல்றாடா அவ!


இருக்கிறதே நாங்களும் பெரிய பிள்ளை குடும்பமும் மட்டும்தான்.


சின்னவன் கூட எங்கயோ இருக்கான்!


இருக்கற காலமெல்லாம் இருந்துட்டு இப்ப ஏன் இப்படி பண்ணிண்டு இருக்கா அவன்னு புரியல" என புலம்பினார் ராஜாமணி.


"யாருடா... உன் மாட்டுப்பொண்ணா! உங்காத்துல அவளுக்கு என்ன குறைச்சலாம்!" சுப்புராமன் சற்று கடுப்புடன் கேட்க, "யாரு... நித்யாவா?


நீ வேற? அவ அப்படி சொல்லியிருந்தா நான் கவலையே பட்டிருக்க மாட்டேன்" என ராஜாமணி சொல்ல, "பின்ன" என்றார் சுப்பு புரியாத பாவத்தில்.


"எல்லாம் இந்த மைதிலித்தான்" என்றார் ராஜாமணி சோகமாக.


'ஹா... ஹா... ஹா..’ என அதிரும்படி சிரித்தவர், "உனக்கு பொழுதுபோகலேன்னா இன்னைக்கு நான்தான் கிடைச்சேனா?' எனக் கேட்டார் சுப்பு.


"அட போடா... நான் ஏண்டா உன் கிட்ட விளையாடப் போறேன்" எனப் பரிதாபமாகச் சொன்னவர், "என்ன ஆச்சுன்னே தெரியல... பார்த்து பார்த்து கட்டின அந்த ஆத்தை பிள்ளைகளுக்கே கொடுத்துட்டு, ரெண்டு தெரு தள்ளி வாடகைக்கு விட்டிருக்கோம் இல்ல அந்த ஃப்ளாட்ககு நம்ம ரெண்டுப் பேர் மட்டும் தனி குடித்தனம் போகலாம்ன்னு ரெண்டு நாளா புலம்பிண்டு இருக்கா" என்று முடித்தார் ராஜாமணி.


"டேய்... ராஜா! இன்னைக்கு நேத்தா பாக்கறேன்; மைதிலியை பத்தி எனக்கு நன்னாவே தெரியும்!


உன்னை கல்யாணம் பண்ணிண்டு உங்காத்துக்கு வந்த நாள்ல இருந்து உன் குடும்பத்துக்காக ஓடா தேஞ்சவடா அவ.


நீ ட்ரான்ஸ்ஃபர்... ட்ரான்ஸ்ஃபர்னு ஊர் ஊரா சுத்திண்டு இருந்தாலும்; உங்க அம்மாவை அனுசரிச்சிண்டு, தெவசம் திங்கள் நல்ல நாள் பெரியனாள்னு எல்லாத்தையும் பார்த்துண்டு, உன் தங்கைகளுக்குக் கல்யாணம் பண்றதுல இருந்து, அவா ரெண்டு பேருக்கும் பிரசவம் பார்த்து, உங்க அம்மா அப்பாவுக்கு கடைசிகாலத்துல செய்யவேண்டியதெல்லாம் செஞ்சு எல்லாம் பண்ணி முடிச்சிருக்கா.


இதுக்கு நடுவுல உன் பிள்ளைகளையும் நல்லபடியா கொண்டுவந்திருக்கா.


அவளே இப்படி சொல்றான்னா ஏதோ காரணம் இருக்கும். பொறுமையா உட்கார்ந்து என்ன ஏதுன்னு அவ சொல்ல வரத கொஞ்சம் காதுகொடுத்து கேளு.


என்ன... வேலை வேலைனு உள்ள என்ன நடக்கறதுன்னு நமக்கு தெரியாமலேயே போயிடறது.


அட்லீஸ்ட் கொஞ்சம் உங்காத்துக்குள்ள என்ன நடக்கறதுன்னு கண்ணை திறந்து பாரு.


அப்பறம் நீயே ஒரு முடிவுக்கு வா" என்றார் சுப்புராமன் தீவிரமாக.


நண்பன் சொல்வது நியாயமாக மனதிற்குப் படவே, "சரிடா பாக்கலாம்" என்று சொல்லிவிட்டு வீட்டிற்குக் கிளம்பினார் ராஜாமணி.


இத்தனைக் காலம் வேலை வேலை என ஓடிக்கொண்டிருந்தார்.


ஓய்வு பெற்ற பின்பும் கூட மழை விட்டாலும் தூறல் விடாது என்பதற்குத் தகுந்தாற்போல சிற்சில வேலைகள் இருந்துகொண்டேதான் இருந்தது அவருக்கு.


இதற்கிடையில் சஷ்டியப்த பூர்த்தி என்கிற பெயரில் வேறு கொஞ்சம் வேலைகள்.


பிள்ளைகள் எல்லா நேரமும் 'பிசி... பிசி' என்று சுற்றிக்கொண்டிருக்க, மண்டபம் பார்ப்பது முதல் உணவு ஏற்பாடு, துணிமணிகள் வாங்குவது, பத்திரிகை அடித்து அதன் விநியோகம் வரை கணவன் மனைவி இருவருமாகத்தான் பார்க்க வேண்டியதாக இருந்தது.


அலுவலகம் சென்றுகொண்டிருந்த பொழுதும் சரி அதற்கு பிறகான இந்த ஒரு மாத காலமும் சரி மைதிலியை, கவனித்துப் பார்க்கவே இல்லையோ என்று தோன்றியது ராஜாமணிக்கு.


'சரி கொஞ்சம் கவனித்துத்தான் பார்ப்போமே' என்ற எண்ணத்துடன் வீட்டை நோக்கி நடந்தார் அவர்.


***


அவர் வீட்டிற்குள் நுழையும்போதே சுந்தரும் நித்யாவும் அலுவலகத்திற்குக் கிளம்பிக்கொண்டிருந்தனர்.


"மா... அவருக்கு லன்ச் பேக் பண்ணிடீங்களா" என கேட்டுக்கொண்டே தன் புடவை மடிப்பை சரி செய்தவாறு அவர்கள் அறைக்குள்ளிருந்து வெளியில் வந்தாள் நித்யா.


"டைனிங் டேபிள் மேல எடுத்து வெச்சிருக்கேன் பாரு.


உனக்கும் குழந்தைக்கும் மட்டும் லஞ்ச் பேக் பண்ணிக்கோ.


ஸ்கூல் பஸ் வந்திடும்; சீக்கிரம்" என்றார் ஒரு தட்டில் இட்லியை வைத்து, பிறந்து ஒன்பது மாதங்களே ஆன பேத்திக்கு அதை ஊட்டிக்கொண்டிருந்த மைதிலி.


அவசரம் அவசரமாக மதிய உணவை பேக் செய்தவள், "சுந்தர்! இன்னும் என்ன பண்றீங்கோ; வேதாந்தை ஸ்கூல் பஸ்ல ஏத்தி விட்டுட்டு வாங்கோ" என அவள் குரல் கொடுக்க, "அம்மா என்ன பண்ணிண்டு இருக்கா; அம்மாவை போக சொல்லு" என அவன் பதிலுக்குக் குரலை மட்டும் வெளியில் அனுப்ப, "அம்மா ஸ்ரீக்கு இட்லி ஊட்டிண்டு இருக்கா; நீங்கதான் போகணும்" என அவள் அவனை நிர்ப்பந்திக்க, "ப்ச்... அந்த இட்லியை நீ ஊட்ட கூடாதா" என அவளைக் கடிந்து கொண்டவாறு வெளியில் வந்தவன், தயாராக நின்றிருந்த மகனை தரதரவென இழுத்துக்கொண்டு வெளியில் சென்றான்.


உள்ளே நுழைந்த ராஜாமணியை இயலாமையின் வெளிப்பாடாக ஒரு பார்வை பார்த்தார் மைதிலி.


அந்த பார்வை ஊசி போல் அவர் இதயத்தைத் தைத்தது என்றால் அது மிகையில்லை.


பிள்ளையும் மாட்டுப்பெண்ணும் அலுவலகம் கிளம்பியதும் வீடே ஒரு புயல் அடித்து ஓய்ந்தது போல் இருந்தது.


அலுவலகம் சென்றுகொண்டிருந்த வரைக்கும் அவர் சீக்கிரமே கிளம்பிவிடுவதால் இந்த கூத்தையெல்லாம் அவர் பார்த்ததே இல்லை.


அவர் குளித்துவிட்டு வரவும், பேத்தியை இடுப்பிலே வைத்துக்கொண்டே அவருக்குக் காலை உணவைப் பரிமாறினார் மைதிலி.


"நீ சாப்பிட்டியா மைத்து" என அவர் வாஞ்சையுடன் கேட்க, "இன்னும் இல்லன்னா... இவளை தூங்க வெச்சிட்டுதான் சாப்பிடணும்" என்றார் மைதிலி.


"பரவாயில்ல... குழந்தையை என் கிட்ட கொடுத்துட்டு நீ சாப்பிடு" என்றார் அவர்.


அவர் சாப்பிட்டு முடித்து குழந்தையைத் தூக்கிக்கொண்டு வெளியில் செல்ல, இட்லியை தட்டில்போட்டுக்கொண்டு உட்கார்ந்தார் மைதிலி.


அதற்குள் குழந்தையுடைய டயாபரை மாற்ற வேண்டிய கட்டாய சூழல் உண்டாகிப்போனது.


அதையெல்லாம் செய்து பழக்கமில்லாத காரணத்தால் சாப்பிட்டுக்கொண்டிருந்தவளைப் பாதியில் கூப்பிடவேண்டிய நிர்ப்பந்தம் உண்டானது அவருக்கு.


அதன் பின் குழந்தையைச் சுத்தம் செய்தார் மைதிலி.


அதற்குள் குழந்தைக்கு உறக்கம் தழுவ, அவள் சிணுங்கவே அவளை மடியில் படுக்கவைத்துத் தட்டி தூங்கச் செய்து படுக்கையில் விட்டுவிட்டு வந்த மைதிலி பாதி சாப்பிட்டு வைத்திருந்த உணவை நோக்கிப் போக, "ஏன் மைத்து அதைப் போய் சாப்பட்ற; தூக்கி கொட்டிட்டு வேற சாப்பிட்றதுதானே" என அவர் கேட்க, "ப்ச்... புதுசா பண்ணிதான் சாப்பிடணும்; போரா இருக்குன்னா" என்று சொல்லிவிட்டு, 'இது எனக்குச் சகஜம்தான்' என்பதுபோல் அதை விழுங்கிவைத்தார் மைதிலி.


அதை பார்த்து உண்மையிலேயே அடித்தான் போனார் ராஜாமணி.


குழந்தை கண்விழிப்பதற்குள் அடுக்களையைச் சுத்தம் செய்தவர், தனக்கும் கணவருக்கும் மதிய உணவைத் தயார் செய்தார்.


இடையில் வீட்டுவேலை செய்யும் பெண்மணி வீட்டைச் சுத்தம் செய்துவிட்டுப் போக, அதற்குள் குழந்தை விழித்துக்கொள்ளவும் அவளுக்கு ஆப்பிளை வேகவைத்து அதைப் புகட்டியவர், அதன்பின் தவழ்ந்து இங்கும் அங்கும் ஓடிக்கொண்டிருக்கும் குழந்தையின் கூடவே ஓடிக்கொண்டிருந்தார் மைதிலி.


சற்று கவனம் குறைத்தாலும் எதையாவது இழுத்துத் தள்ளியது குழந்தை.


அதைச் சரி செய்யும் வேலை வேறு அவருக்குச் சேர்ந்துகொண்டது.


நேரம் பார்த்து குழந்தைக்குச் சாதம் பிசைந்து ஊட்டி விட்டு பின் அவருக்கு மதிய உணவு பரிமாரும்நேரம் கூட குழந்தையை கையைவிட்டு இறக்கவில்லை மைதிலி.


குழந்தை மறுபடியும் தூங்கவும் வாஷிங் மெஷினில் போடப்பட்டிருந்த துணிகளை உலர்த்திவிட்டு வந்தார் அவர்.


பள்ளி முடிந்து பேரன் வீடு திரும்பும் நேரம் ஆகவும், ஒரு தெரு தள்ளி இருக்கும் பள்ளி பேருந்து நிறுத்தும் இடத்திற்குச் சென்று அவனை அழைத்துவந்தார் ராஜாமணி.


ஒரு மாத காலமாக இந்த வேலைகளை அவர் செய்கிறார். அதற்குமுன் இதையும் மைதிலிதான் செய்துகொண்டிருந்தார்.


அதன் பின் அவனுக்கு உணவு கொடுத்து அவனை உறங்க வைத்தார் மைதிலி.


மொத்தத்தில் குழந்தை விழித்திருக்கும் நேரம் முழுதும் குழந்தையைக் கவனித்துக்கொள்வதும் அவள் உறங்கும் நேரம் வீட்டு வேலையை செய்வதுமாக மைதிலிக்குக் கொஞ்சம் கூட ஓய்வே இல்லை என்பது புரிந்துபோனது ராஜாமணிக்கு.


வழக்கம் போல இரவு ஏழு மணி அளவில் சுந்தரும் அதன்பின் நித்யாவும் வீடு திரும்பினார்.


ரெப்பிரேஷ் செய்து கொண்டு உடை மாற்றி அவர்கள் வருவதற்குள் இரவு உணவைத் தயாரித்து வைத்திருந்தார் மைதிலி.


அவரவர் எடுத்துப்போட்டுக் கொண்டு சாப்பிட, பாத்திகளைச் சுத்தம் செய்துபோட்டுவிட்டு, அவர்களுடைய அறைக்குள் பிள்ளைகளுடன் போய் புகுத்துக்கொண்டாள் நித்யா.


சுந்தர் மட்டும் ஹாலில் உட்கார்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்தான்.


நடப்பதையெல்லாம் அங்கே போடப்பட்டிருந்த சோபாவில் உட்கார்ந்தவாறு பார்த்துக்கொண்டிருந்தவர் பின் தங்கள் அறைக்குள் வர, வலி நிவாரணியைக் காலில் தேய்த்துக்கொண்டிருந்தார் மைதிலி.


"ஏன் மைத்து... இவ்வளவு வேலை இருக்கும்போது பேசாம பாத்திரம் தேய்க்கறதுக்கும் குழந்தையை பார்த்துக்கறதுக்கும் யாராவது ஆளை போட்டுக்கலாம் இல்ல" என அவர் கேட்க, "எங்க... யாராவது சரியான ஆள் கிடைச்சா தான.


ஒரு நாள் வந்தா ரெண்டு நாள் லீவ் பேட்டுட்டுப்போறா!


அதுவும் பெண் குழந்தையை யாரையாவது நம்பி விட முடியுமா?" என ஆதங்கத்துடன் சொன்னவர் அப்படியே சரிந்து படுத்துக்கொள்ள, உழைத்த களைப்பில் உடனே உறங்கியும் போனார் மைதிலி.


அத்தநாள் காலை நடைப்பயிற்சிக்கு செல்லாமல் வரவேற்பறையில் செய்தித்தாளை பிரித்துவைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார் ராஜாமணி.


எதிரே போடப்பட்டிருந்த சோபாவில் உட்கார்ந்து கைபேசியை குடைந்துகொண்டிருதான் சுந்தர்.


குளித்துவிட்டு அடுக்களைக்குள் புகுந்த மைதிலி பாலை காய்ச்சி காபிக்கு டிகாக்ஷன் தயார் செய்ய, நித்யா காய்கறிகளை நறுக்கிக் கொண்டிருந்தாள்.


அதன் பின் உணவைத் தயார் செய்தார் மைதிலி.


இடையில் பள்ளி செல்லும் மகனைக் கிளப்பும் பணியில் வேறு ஈடுபடவேண்டியதாக இருந்தது நித்யாவுக்கு.


சுந்தர் எழுத்து குளிப்பதற்காக செல்ல, உறங்கிக்கொண்டிருந்த ஸ்ரீ குட்டி விழித்து அழவும், அதன்பின் முந்தைய தின நிகழ்வுகள் யாவும் மறுபடியும் ரீடெலிகாஸ்ட் ஆனதுபோலவே தோன்றியது ராஜாமணிக்கு.


***


அன்று சனிக்கிழமை.


காலை வழக்கம் போலக் கண் விழித்த மைதிலி எழுத்து உட்கார, "இன்னைக்கு அவா எல்லாருக்கும் லீவு நாள் தான. பேசாம செத்த நேரம் படு மைத்து.


அவாளே ஏதாவது பண்ணிக்கட்டும்" என்றார் ராஜாமணி.


"அவா எல்லாம் வேற ரொடீனுக்கு பழக்கப்பட்டவான்னா; கிச்சன்ல நுழைஞ்சா வேலைக்கே ஆகாது.


காஃபீ ப்ரேக்பாஸ்ட சாப்பிடற நேரத்துக்கும்; லன்ச் சாப்பிடற நேரத்துல டிஃபனும் கிடைக்கும். அப்பறம் சாயங்காலம்தான் லன்ச் ரெடி ஆகும்" என்றார் இகழ்ச்சியுடன்.


"பரவாயில்ல; ஒரு நாள் இருந்துட்டு போகட்டும்; பேசாம படு" என அவர் குரலை உயர்த்த, சில நிமிடங்கள்தான் படுத்திருக்க முடிந்தது மைதிலியால்.


ஆனாலும் கணவரின் வற்புறுத்தலால் நிதானமாக எழுந்து குளித்து அவர் வெளியில் வர, "இன்னைக்கு ஒரு நாள் நீயே பார்த்துக்கோ நித்யா.


அம்மாவுக்கு முட்டிவலியாம். முடியலன்னு சொல்லிண்டு இருந்தா' என மாட்டுப்பெண்ணிடம் சொல்லிக்கொண்டிருந்த ராஜாமணி, மைதிலியை பார்த்ததும், "வா... இன்னைக்கு ஒரு நாள் நீ ரெஸ்ட் எடு.


கிச்சன் குள்ள போக வேண்டாம்" என்றார் மனையாளிடம்.


வேறு வழி இல்லாமல் அவர் வந்து அமர்ந்துகொள்ள அடுக்களை அதகள பட்டது.


அன்று முழுவதும் மைதிலி சொன்னதே நடத்தெரியது.


அடுத்த நாள் பொழுது விடியப் பிள்ளைகளைக் கூடவே அழைத்துக்கொண்டு பிறந்தகத்திற்குச் சென்றுவிட்டாள் நித்யா.


அதன் காரணம் புரியமல்லிலை ராஜாமணிக்கு.


அங்கே நடக்கும் நிகழ்வுகள் எதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதுபோல் தொலைக்காட்சியில் மூழ்கியிருந்த மகனை அழைத்தவர், "உன்னோட சம்பளம் எவ்வளவுப்பா" என்று கேட்டார் எதார்த்தமாகக் கேட்பதுபோல்.


"ஏன் பா... உங்களுக்குத் தெரியாதா என்ன" என்றவன், "அரௌண்ட் செவண்டி கே..ப்பா" என்று முடித்தான்.


"நித்யாவுக்கு" என அவர் கேட்க, "அரௌண்ட் பிப்டி கே ஐ திங்க்" என்றான் மென்று விழுங்கியவாறு.


"நீ இப்படி இழுக்கறத பார்க்கும்போது ஒண்ணு நீ அதை சொல்ல இஷ்ட படல இல்ல உனக்கே தெரியாது. அப்படித்தானே" என்று நேரடியாகக் கேட்டவர், "ஏதா வேணா இருந்துட்டு போகட்டும். இப்ப பிரச்சனை அது இல்ல" என்று சொல்லிவிட்டு, "அந்த காலத்துல... அதாவது நான் உங்க அம்மாவைக் கல்யாணம் பண்ணிண்டு எங்க வாழ்க்கையை தொடங்கின சமயத்துல என் ஒருத்தன் சம்பளத்துலதான் மொத்த குடும்பமும் நடந்தது.


உங்க தாத்தா பாட்டி சேர்த்துவெச்சிருந்ததை வெச்சு உங்க அத்தைகள் கல்யாணத்தை நடத்திமுடிச்சோம்.


அதுக்கு பிறகு உங்க தாத்தா பாட்டியை பார்த்துண்டது நான் மட்டும்தான்.


அப்ப எனக்கு எவ்வளவு சம்பளம் இருக்கும்னு நினைக்கற.


அதுலதான் அவா வைத்திய செலவு உங்க மூணுபேர் படிப்பு எல்லாத்தையும் பார்த்தோம்.


உனக்குத் தெரியாதா என்ன.


எல்லாத்துக்கும் உங்க அம்மா சப்போர்ட் பண்ணலன்னா என் கதி என்ன ஆகியிருக்குமோ.


என்னால நினைச்சுப்பார்க்காம இருக்க முடியல.


அவ பளிச்சுனு ஒரு புடவை கட்டிண்டு வந்து முன்னடி நின்னா கூட 'நன்னா இருக்குன்னு' சொல்ல தயக்கமா இருக்கும்.


பொண்டாட்டி தாசன்னு யாராவது சொல்லிட்டா என்ன பண்றதுன்னு ஒரு அசூயை.


இதுல அவ பண்ற ஒன்னொண்ணையும் எங்கேந்து பாராட்றது.


ரொம்ப பாவம்டா அவ. மாமனார் மாமியார் நாத்தனார் ஆம்படையான் பிள்ளைகள்னு எல்லாருக்கும் அவளோட உழைப்பை கொடுத்திருக்கா.


ஆனா பதிலுக்கு நாம அவளுக்கு என்ன பண்ணியிருக்கோம்.


அன்னைக்கு அவ மாமியார் சொல்றத கேட்டுண்டு அவளுக்கு வளைஞ்சுகொடுத்து போனா!


இப்ப உங்க எல்லாருக்கும்.


மாச குழந்தையை அவ பொறுப்புல விட்டுட்டு போறீங்களே, அவளோட வயசுக்கு அந்த குழந்தையை பார்த்துக்கறது எவ்வளவு கஷ்டம்னு நினைச்சு பார்த்தீங்களாடா நீங்க.


அடிச்சு மிதிச்சு பண்ணாத்தான் குடும்ப வன்முறைன்னு இல்ல. இதெல்லாமும் ஒரு விதத்துல குடும்ப வன்முறைதான்" கடுமையான குரலில் என அவர் சொல்லிக்கொண்டே போக, "என்னப்பா பண்றது. அவளுக்கும் லீவ் இல்ல" என இழுத்தான் சுந்தர்.


"யாராவது ஒருத்தர் வேலையை விடுங்கடா!


பெத்த அம்மாதான் வேலையை விட்டுட்டு குழந்தையை பார்த்துக்கணும்னு சொல்ல மாட்டேன்.


கேட்டா பொருளாதார சுதந்திரம் வேணும்; பெண்களுக்குன்னு ஒரு கேரியர் இருக்கணும்னு பெண்ணியம் பேசுவீங்க.


உன் பொண்டாட்டி பொண்ணுன்னா அப்ப அம்மா யாரு.


அதனால உங்க வேலையை அடஜஸ்ட் பண்ணிண்டு குழந்தையை கவனிச்சுக்கோங்கோ.


நாங்க உங்களுக்கு எங்களால முடிஞ்ச சப்போர்ட்டை கொடுக்கிறோம்!


அவளுக்கும்தான் இது ரிட்டயர்மெண்ட் ஏஜ்.


அவளுக்கும் கூட உடம்புக்கும் மனசுக்கும் ரெஸ்ட் வேணும்.


உன் பொண்டாட்டி கூட பேசி ஒரு முடிவு பண்ணு" என முடித்துக்கொண்டு விருட்டென அங்கிருந்து சென்றுவிட்டார் அவர்.


தந்தையின் இந்த அதிரடியில் அரண்டுபோய் உட்கார்ந்திருந்தான் மகன்.


***


அடுத்து வந்த நாட்களில், பார்த்தால் முகத்தைத் திருப்பிக்கொண்டு போவதும், சுந்தரிடம் கடுமையாகப் பேசுவதும், பிள்ளைகளிடம் இன்னும் மிக மோசமாக விட்டெறிவாயாக இருப்பதுமாக நித்யாவின் நடத்தையிலிருந்தே அவர் பேசிய விஷயங்கள் அவர்களுக்குள் விவாதிக்கப்பட்டிருப்பது தெளிவாகப் புரிந்தது ராஜாமணிக்கு.


ஒரு வாரம் வரை பொறுத்தவர், சனிக்கிழமை மகனை அழைத்தார் ராஜாமணி அவனுடைய பதிலுக்காக.


"சொல்லுங்கோப்பா" என அவன் முன்னால் வந்து உட்கார, "என்ன முடிவு பண்ணியிருக்கீங்கோ" என்று கேட்டார் அவர்.


"இல்லப்பா... அவளால வேலையை விட முடியாதுன்னு சொல்றா" என இழுத்தான் சுந்தர்.


"பரவாயில்ல நீ விட்டுடு" என்றார் அவர் வெகு சாதாரணமாக.


"அது எப்படிப்பா முடியும்?" என்றவன், "இப்பவே மதிக்க மாட்டா... இன்னும் வருமானம் இல்லன்னா சுத்தம்" என்றான் முணுமுணுப்பாக.


"அப்படின்னா இந்த பிரச்சனைக்கு என்னதான் சொல்யூஷன்" என்று கேட்டார் அவர்.


"இல்ல எதாவது க்ரீச்ல குழந்தையை விடலாம்னு" என இழுத்தான் அவன், "ரொம்ப நல்லதுப்பா... இதுவரைக்கும்... உங்க அம்மாவை பத்தின கவலைதான் உங்களுக்கு இல்லன்னு நினைச்சிண்டு இருந்தேன்.


இப்பதான் தெரியறது பெத்த குழந்தையை விட மத்த எல்லாம் உங்களுக்கு முக்கியம்.


ஏண்டாப்பா, இந்த பிள்ளைகளை பெத்துக்க தெரியர்தே... மத்தவா துணை இல்லாம தானா அந்த குழந்தைகள் செயல்படற வரைக்கும், நாலு வருஷமோ அஞ்சு வருஷமோ அவளுக்காக உங்க சௌகரியங்களைக் கொஞ்சம் விட்டுக்கொடுக்கக் கூடாதா.


அவா ரெண்டுபேரையும் நல்ல படியா கொண்டுவரத் தார்மீக கடமை உங்களுக்கு இல்லையா" என்று கேட்டவர், "என்னவோ முடிவு பண்ணிக்கோங்கோ!


அது உங்க பொறுப்பு" என்று சொல்லிவிட்டு, "மைத்து" என்று சத்தமாக அழைத்தவர், அவர் அங்கே வந்து நிற்கவும், "நான் நம்ம பிளாட்ல குடி இருக்கறவாள காலி பண்ண சொல்லிட்டேன்!


அடுத்த மாசம் பால் காய்ச்சிட்டு நாம ரெண்டுபேரும் அந்த ஆத்துக்கு போயிடலாம்" என்றார் செய்தியாக.


மைதிலி பதில் சொல்வதற்கு முன்பாக முந்திக்கொண்டு நித்யா, "இதுக்கெல்லாம் இப்படி ரியாக்ட் பண்ணுவாளாப்பா...


ஹஸ்பண்ட் வைஃப் ரெண்டுபேரும் வேலைக்குப்போகும் பட்சத்துல தாத்தா பாட்டி குழந்தைகளை பார்த்துக்கறது இங்க என்ன அதிசயமா!" என்றாள் தேன் தடவிய குரலில்.


"ட்ரெஸ்ல... சாப்பாட்டுல எல்லாத்துலயும் வெஸ்டர்ன் கல்ச்சரை ஃபாலோ பண்றீங்கள்ல?


அங்க இப்படித்தான் கடைசிக்காலம் வரைக்கும் பிள்ளைகளுக்கு பெத்தவா சேவகம் பண்ணிண்டு இருக்காளா?


எல்லாமே அவா அவா அன்பின் அடிப்படைல தன்னிச்சையா செய்யணும்.


நிர்பந்தத்துல செய்யக்கூடாது.


இவாள்ளாம் குழந்தையா இருந்தப்ப எங்க அம்மாவும் எல்லாரையும் கவனிச்சுண்டாதான்.


ஆனா இப்படி பிள்ளையை பிரசவிச்சவ மாதிரி ராப்பகலா கண் முழிச்சு மொத்தமா அவளே பார்த்துக்கல.


இவளும் பெத்துபோட்டு எனக்கென்னன்னு போகல.


பெத்தவளுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்துக்காவது அந்த பிள்ளைகளை கவனிக்கிற கடமை இருக்கு.


அது இயற்கையே ஒரு பெண்ணின்மேல் சுமத்தியிருக்கிற பொறுப்பு.


அனிமல்ஸ் கூட அந்த கடமையை தனியாத்தான் செய்யறது.


மனுஷ பிறவியா போனதால இந்த கடமையை அப்பா தாத்தா பாட்டின்னு எல்லாரும் ஷேர் பண்ணிக்கலாம்.


ஆனா மொத்தமா எடுத்துக்க முடியாது" என்றவர், "என்னோட முடிவுல எந்த மாற்றமும் இல்ல" என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்.


நித்யா, சுந்தர் இருவருமே வாயடைத்துப் போயினர்.


அறைக்குள் ராஜாமணி தனியாக இருக்கும்பொழுது அங்கே வந்த மைதிலி, "அன்னைக்கு ஏதோ ஆதங்கத்துல தனிக்குடித்தனம் போயிடலாம்போல இருக்குன்னு சொல்லிட்டேன்!


நிஜமா அப்படி ஒரு எண்ணம் எனக்கு இல்ல!


அதுக்காக இப்படியெல்லாம் பண்ணக்கூடாது" என்றார் பதட்டத்துடன்.


“அவா ரெண்டுபேரையும் பார்த்தால் குடும்பம் நடத்தரவா மாதிரியா இருக்கு.


ஏதோ போயிங் கெஸ்ட் மாதிரின்னா இருக்கா.


குழந்தைகளையும் பொறுப்பா கவனிக்கல.


இந்த அழகுல கூட்டுக்குடும்பம் என்ன வாழறது.


சின்னவனை பார்த்தியா, ஒரு கட்டுக்கோப்போட இருக்கான்.


செலிபிஷ்ஷா இருந்து தொலைஞ்சிட்டு போட்டும் தப்பில்ல.


ஆனா இப்படியா இருக்கறது.


நீ சொன்னதுக்காகன்னு இல்ல. இதையெல்லாம் யோசிச்சு பார்த்து நான் எடுத்த முடிவுதான் இது.


நம்ம பிடியை தளர்த்தினாதான், அவாளுக்கு கொஞ்சமாவது பொறுப்புணர்ச்சி வரும்" என்று சொல்லிவிட்டார் அவர்.


அவருடைய இந்த முடிவை மாற்ற இயலாது என்று புரிந்துபோனது மைதிலிக்கு.


***வழக்கமாக நடைபயிலும் பூங்காவின் கல்மேடையில் உட்கார்ந்திருந்தார் ராஜாமணி.


அவரை பார்த்துவிட்டு உற்சாகமாக அவரை நோக்கி வந்த சுப்புராமன், "ஹேய்... எப்படிடா இருக்க" என்றார் உற்சாகமாக.


"சூப்பரா இருக்கேண்டா... நீ எப்படி இருக்க! நாயகராவெல்லாம் சுத்திட்டு வந்திருக்க போலிருக்கு" என்றார் ராஜாமணி அவரது உற்சாகத்தைப் பிரதிபலித்தவாறே.


"ஆமாம்... ஆமாம்" என்றவர், "உன் தனிக்குடித்தனமெல்லாம் எப்படி போயிண்டு இருக்கு" என்று கேட்டார் சுப்பு.


"அமர்களமா போயிண்டு இருக்கு.


நிதானமா தூங்கி எழுந்து, பொறுமையா நானும் அவளுமா மாறி மாறி தளிகை (சமையல்) பண்ணி சாப்டுண்டு, ம்யூசிக் அகாடமில கச்சேரி அட்டென்ட் பண்ணிண்டு... சின்ன சின்ன டூர் போயிண்டு... அப்பப்ப பசங்ககூடல்லாம் வீடியோ கால்ல பேசிண்டு... வயசுக்கு தகுந்த மாதிரி வாழ்க்கையை என்ஜாய் பண்ணிண்டு இருக்கோம்" என்றார் ராஜாமணி.


"அந்த காலத்துல ஹனி மூன் போயிருக்கமாட்ட. இப்ப ஆறு மாசமா இது ஒரு எக்ஸ்டெண்டட் ஹனிமூன்னு சொல்லு"


சுப்பு நண்பனை வாற, "ஆமாம்... ஆமாம்... அமெரிக்காவுக்கு ஹனிமூன் போய்ட்டு வந்த அனுபவத்துல சொல்ற இல்ல" பதிலுக்குப் பதில் நண்பனை ஓட்டினார் ராஜாமணி.


"அதெல்லாம் இருக்கட்டும் பிள்ளை மாட்டுப்பொண்ணு எல்லாரும் எப்படி இருக்கா?" எனக் கேட்டார் சுப்பு.


"எல்லாருமே நன்னா இருக்காடா.


ஆரம்பத்துல பசங்க எல்லாருக்குமே எங்க பேர்ல செம்ம காண்டுதான்.


இப்ப இந்த செட்டப்க்கு பழகிட்டதால கொஞ்சம் புரிஞ்சிண்டு இருக்கா" என்றார் ராஜாமணி.


"இப்ப எப்படி மேனேஜ் பண்றா" என ஆர்வத்துடன் சுப்பு கேட்க, "முதல்ல சின்னதை க்ரீச்ல விட்டா.


அதுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லாம போயிடுத்து.


ஆயிரம் இருந்தாலும் நம்ம குழந்தை ஆச்சே... அப்படியே விட்டுட முடியுமா என்ன?


இங்கயே கூட்டிண்டு வந்து வெச்சுண்டு கொஞ்சநாள் மைதிலி பார்த்துண்டா.


அதுவும் அவாளுக்கு ஒத்து வரல.


இப்ப டே ஷிஃப்ட்... நைட் ஷிஃப்ட்... ஒர்க் ஃப்ரம் ஹொம்னு அவளுக்குள்ளேயே அட்ஜஸ்ட் பண்ணிண்டு குழந்தைகளை கவினிச்சுக்கறா.


நித்யா மட்டும் இல்ல சுந்தரும் கூட நன்னா தளிகை (சமையல்) பண்ண கத்துண்டுட்டான்.


நாள் கிழமைன்னா வழக்கம்போல சின்னவன் குடும்பத்தோட பெங்களூர்ல இருந்து வந்துடுவான்.


பெரிய ஆத்துல ஒண்ணா கொண்டாடறோம்.


மைத்துக்கும் கை தாராளம். கொஞ்சமால்லாம் தளிகை பண்ண வராது.


தினமுமே தாராளமா பண்ணிடுவா.


சுந்தர் வந்து வாங்கிண்டு போவான்.


இதுதான் கதை"


என்று முடித்தார் ராஜாமணி.


அதற்குள் அந்த பூங்காவைச் சுற்றிக்கொண்டு அவர் வயதை ஒற்ற பெண்களுடன் கதை பேசியவாறு அங்கே வந்தார் மைதிலி.


சுப்புராமனை அங்கே கண்டதும் தோழியரிடம் விடைபெற்று அவர்களை நோக்கி வந்தவர், "அண்ணா... அமெரிக்கால இருந்து எப்ப வந்தீங்கோ?


சீதா எப்படி இருக்கா?" என்று விசாரித்தார் குதூகலத்துடன்.


"நாலு நாள் ஆச்சும்மா! இன்னைக்குத்தான் ஜெட்லாக் கொஞ்சம் சரி ஆன மாதிறி இருக்கு.


அதான் இங்க வந்தேன்" என்றார் அவர்.


"நாளைக்கு சுந்தரோட பிறந்தநாள். நம்மாத்துக்கு பசங்களையெல்லாம் சாப்பிட வரச்சொல்லி இருக்கோம்!


நீங்களும் சீதாவை அழைச்சுண்டு வந்துடுங்கோ அண்ணா" என்று அவரை உரிமையுடன் அழைத்தார் மைதிலி.


நிர்ப்பந்தத்துக்காகச் செய்துகொண்டிருக்கும்பொழுது அவ்வப்பொழுது வெளிப்படும் சலிப்பெல்லாம் இல்லாமல், மனம் விரும்பி ஒரு செயலை செய்யும்பொழுது ஏற்படும் உற்சாகம் மட்டுமே இருந்தது மைதிலியிடம்.


"கட்டாயம் வரோம்மா" என்ற நண்பனைப் பார்த்து அர்த்தத்துடன் புன்னகைத்தார் ராஜாமணி.


'நம்மை மாதிரி ஓய்வூதியம் வாங்கும், நல்ல வசதி வாய்ப்போடு இருப்பவர்களுக்கே இந்த நிலை என்றால், ஒரு வேளை மருத்து மாத்திரைக்குக் கூட பிள்ளைகளின் கையை எதிர்பார்த்து இருக்கும் முதியவர்களின் நிலையை என்னவென்று சொல்ல!


கடைசிக்காலம் வரைக்கும் அவர்கள் நிலை வேலைக்காரர்கள் என்பதுதான்.


இதுதான் நிதர்சனம்.


குடும்பத்தில் இருப்பவர்களுடைய சௌகரியங்களை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஓடி ஓடி ஓய்ந்து போய் உண்மையான ஓய்வையும் மன அமைதியையும் நாடும் முதுமை காலத்தில் உள்ள பெற்றவர்களின் மேல் மேலும் மேலும் பொறுப்புகளைச் சுமத்தாமல் இருந்தாலே போதும் மகிழச்சியுடன் அவர்கள் தன்னாலான ஒத்துழைப்பை மற்றவர்களுக்குக் கொடுப்பார்கள் என்பதை எல்லா பிள்ளைகளும் உணரவேண்டும்' என்ற எண்ணம் தோன்றப் பதிலுக்குப் புன்னகைத்தார் சுப்புராமன்.


Ëமுற்றும்Ë

0 comments

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
© KPN NOVELS COPY PROTECT
bottom of page