19. இதயத் திருடி
வளர்பிறை நிலவு, ஒரு துண்டமாக வானில் ஒளிர்ந்துகொண்டிருக்க, கடற்காற்று இதமாகத் தழுவிச்செல்ல, பால்கனியில் போடப்பட்டிருந்த மூங்கில் கூடை ஊஞ்சலில் அமர்ந்திருந்தாள் மல்லி.
மனம் முழுதும் கேள்விகளே!
முந்தைய நாள் தொலைக்காட்சிச் செய்தியில், குறிப்பிட்டிருந்த எலும்புக் கூடு யாருடையதாக இருக்கும்?
அந்தக் கொலைகள் எப்பொழுது நடந்ததாக இருக்கும்?
அங்கே, அப்படிப் பட்ட கொலைகளைச் செய்து, புதைக்கும் அளவிற்குச் சென்றது யாராக இருக்கும்?
அது பெண்களுக்கான தனிப்பட்டப் பள்ளிக்கூடம். அதுவும் அங்கே வேலை செய்யும் அனைவருமே, உடற் கல்வி ஆசிரியர் உட்படப் பெண்கள்தான்.
அலுவலக பணியாளர்கள், காவலாளிகள் என, ஆண்கள் சிலர் மட்டுமே உண்டு அனைவருமே ஐம்பது வயதைக் கடந்தவர்கள் என்பதுதான் ஞாபகம்.
அந்தப் பள்ளியின் தாளாளரின் மகன்கள் மட்டும் எப்போதாவது அங்கே வருவார்கள். அதுவும் விடுதியின் பக்கமெல்லாம் அவர்கள் வந்ததில்லை. அவர்களை ஒரே ஒரு முறை மட்டும் அதுவும் எதோ ஒரு கலைநிகழ்ச்சி சமயத்தில் பார்த்திருக்கிறாள். அவர்களுடைய முகம் கூட, சரியாக ஞாபகத்தில் இல்லை.
‘காவல் துறையினர், ஆய்வு செய்கிறார்கள்!’ என்று திரும்பத் திரும்ப செய்திகளில் சொல்லிக்கொண்டு இருக்கிறார்களேத் தவிர அதுபற்றி புதிதாக எந்தத் தகவலும் இல்லை.
யோசிக்க யோசிக்க தலையே வெடித்துவிடும்போலிருந்தது மல்லிக்கு.
அப்பொழுது பொறி போன்று ஆதி! தொலைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தது நினைவில் வர, கண்களை மூடி! அவன் பேசிய, ஒவ்வொரு வார்த்தையையும் கோர்க்க முயன்றாள்.
‘டீ என் ஏ.. சோதனை!’
‘எவிடென்ஸ்!’
‘லவர் கூட ஓடி போய்ட்டாங்க!’
‘கேசை கிளோஸ் பண்ணிட்டாங்க!’
‘செல்வியோடதுதானா?’
தூக்கிவாரி போட்டது மல்லிக்கு.
அவள், அங்கே, எட்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த சமயம் விடுமுறை முடிந்து திரும்பியிருந்த பொழுது அம்மு, செல்வி இரண்டு பெண்களுமே அங்கே இல்லை!
‘அப்படியென்றால் செய்திகளில் குறிப்பிட்ட சிறுமியின் எலும்புக்கூடு செல்வியுடையதுதானா?’
‘அது தேவாவிற்கும், தெரியும் போலவே!’
அம்முவின் இறப்பும் நினைவுக்கு வந்துசேர, செல்வியின் மரணம் பற்றிய உண்மை ஏதோ அம்முவிற்குத் தெரிந்திருக்க வேண்டும். அதற்கும் அம்முவின் மரணத்திற்கும், நிச்சயமாக ஏதோ சம்பந்தம் இருக்கிறது என்று தோன்றியது மல்லிக்கு.
அவளைப் போன்ற தெளிவான, தைரியமான ஒரு பெண் தற்கொலை செய்துகொண்டிருக்க நூறு சதவிகிதம் வாய்ப்பே இல்லை. செல்வியைக் கொன்றதுபோல் அம்முவையும் யாரோ கொலைதான் செய்திருக்கிறார்கள். இதைச் சொன்னால், இந்த தேவாதிராஜன் புரிந்துகொள்வானா? நினைக்கும்போதே, மூச்சு திணறுவதுபோல் இருந்தது மல்லிக்கு. முன்தினம் அவள் பார்த்த அவனுடைய கோப முகம், கண்களில் தோன்றி, மறைந்தது.
‘சசிகுமார் வீட்டிற்குச் சென்று வந்ததிலிருந்து கொஞ்சம் உற்சாகமாகவே காணப்படுகிறான். ஏதாவது பேசி மறுபடியும் வேதாளம், முருங்கை மரம் ஏறிவிட்டால்?’
புதிதாக மணம் முடித்தவர் போன்றா இருக்கிறார்கள்? திருமணம் வேண்டாம் என்று இதற்குத்தானே படித்துப் படித்துச் சொன்னாள். கொஞ்சமாவது இசைந்தானா அவன்?!
ஐயோ! என்று இருந்தது மல்லிக்கு!
அவளுடைய சிந்தனையை கலைப்பதுபோல் அவள் மேல், சில்லென்று குதித்து விழுந்தது எதோ ஒன்று. அது என்னவென்று பார்த்தால்... தேரை!.
வீலென்று அலறினாள் மல்லி!.
மடிக்கணினியில் மூழ்கி இருந்தவன் அவளது குரல் கேட்டுப் பதறி அங்கே வர, சுவரோடு சுவராக ஒட்டிக்கொண்டு, கண்களை மூடி நின்றவளைப் பார்த்ததும் முதலில் ஒன்றும் புரியவில்லை ஆதிக்கு.
“என்னாச்சு மல்லி?” என்றவாறே அவளது அருகில் வர, அவனது தோளை இறுக்கப் பற்றிக்கொண்டு முதுகுக்குப்பின் ஒளிந்தவாறு, கையை நீட்டி அவள் காண்பித்த திசையைப் பார்த்தவன் சிரித்தேவிட்டான்.
“அடிப்பாவி! ஒரு நிமிஷத்துல என்ன டென்ஷன் பண்ணிட்டியே! நேத்து அந்தக் கொலைகாரன் கத்தியோட உன்ன கொல்ல வந்தப்ப கூட நீ இப்படி கத்தல. போயும் போயும் ஒரு தேரைய பார்த்து இப்படி பயப்படுவியா என்ன?”
அடக்க முடியாமல் சிரித்துக்கொண்டே இருந்தவனைப் பார்த்து முறைத்தவள் மெல்லிய குரலில், “பயமெல்லாம் இல்ல அத பார்த்தா ஒரு அருவருப்பு, உவ்வேக். மாம்ஸ்! ப்ளீஸ்… அத போகச் சொல்லுங்க” என்றாள்.
தலையில் அடித்துக்கொண்டவன், “போ..ன்னா! போய்டுமா! அத நான்தான் விரட்டணும்” என்றான்.
உள்ளே செல்லும் பாதையில் அந்தத் தேரை அட்டகாசமாக உட்கார்ந்திருக்க, “ப்ளீஸ்… ப்ளீஸ்… மாம்ஸ், அத விரட்டுங்க!” எனக் கெஞ்சினாள்.
அவனைப் பற்றியிருந்த அவளது கரங்களைப் பார்த்தவாறே, “சரி! அத விரட்டினா நீ எனக்கு என்ன தருவ?” என ஒரு நல்ல வியாபாரியாக பேரம் பேசினான் ஆதி.
“வில்லங்கமாக எதையாவது கேட்டு வைப்பானோ?” என யோசித்தவள், “இந்த டீலிங் லாம் சரிப்படாது. நேத்து அந்தக் கொலகாரன அசால்ட்டா பிடிச்ச மாதிரி, இதையும் துரத்திடுங்கப்பா ப்ளீஸ்!” என அதைப் பார்க்கக்கூட பயந்தவளாய் கண்களை மூடிக்கொண்டு சொல்ல, சத்தமாகச் சிரித்தவன், “எவ்ளோ தெனாவெட்டா பேசற! அந்தத் தேரை கிட்ட இருக்கற பயம் கூட எங்கிட்ட உனக்கு இல்லையே!” என அங்கலாத்தான்.
அதற்குள் அவன் சாகசம் செய்ய இடம் கொடுக்காமல் அந்தத் தேரையாரே குதித்து வேறு புறமாகச் சென்றுவிட, ‘வட போச்சே’ என்பதுபோல் அவளைப் பார்த்துவைத்தான் ஆதி.
இழுத்துப் பிடித்திருந்த மூச்சை விட்டவாறே, “உங்கள பார்த்தா பயம் எதுக்கு வரணும்? டன் டன்னா லவ்தானே வரணும்” என்று கூறி விட்டு அவள் உள்ளே சென்றுவிட, “அடிப்பாவி!” என்றவாறு தானாக மூடிக்கொண்ட கதவையே பார்த்திருந்தான் தேவா.
அந்தக் கதவை லேசாகத் திறந்து எட்டிப்பார்த்தவள், “ஆனா! லைட்டா பயமும் வருதுதான்!” என்று கூறி விட்டுப் போனாள் மல்லி.
அடுத்தநாள் காலை டிராக் சூட் அணிந்து நடைப்பயிற்சிக்காகக் கிளம்பி வந்தவன் மல்லியைப் பார்க்க, கால் முதல் தலை வரை இழுத்து மூடியபடி உறங்கிக்கொண்டிருந்தாள்.
“இப்படி முகத்தை மூடிட்டு தூங்காதன்னு சொன்னா கேட்கறாளா பாரு, லூசு! மூச்சு திணறப் போகுது” என்று முனகியவாறே போர்வையைக் கழுத்துவரை இழுத்து விட்டுவிட்டு அங்கிருந்து சென்றான் ஆதி.
திருமணம் முடிந்த இந்த நான்கைந்து நாட்களில் அவன் நடைப்பயிற்சி முடித்து வரும் பொழுது மல்லி கீழேதான் இருப்பாள். ஆனால் அன்று, அவன் திரும்பிய நேரம் மல்லியை அங்கே காணாமல் அன்னையை நோக்கிச் சென்றவன், “மல்லி எங்கம்மா?” என்றான்.
“இன்னும் கீழ வரலப்பா. மணி ஆறுதான ஆகுது. அசந்து தூங்கிட்டு இருப்பா, தொந்தரவு செய்ய வேண்டாம்னு விட்டுட்டேன்” என்றார் லட்சுமி.
மல்லி! என்ன செய்கிறாள் என்று பார்த்துவிட்டே உடற்பயிற்சி செய்யப் போகலாம் என்று நினைத்தவன், அவர்களது அறை நோக்கிச் சென்றான்.
மறுபடியும் முகத்தை மூடியவாறே, தூங்கிக்கொண்டிருந்தாள் மல்லி.
அவள் அருகில் சென்று, போர்வையை இழுக்க மறுபடியும், தூக்கத்திலேயே முகத்தை மூட போர்வையை அவள் இழுக்கவும் அவளது கையை பிடித்த ஆதி, அதிர்ந்தான். அவள் கரம் ஜுரத்தில் தணல்போல் தகித்துக்கொண்டிருந்தது.
“மல்லி” என்று அவளை அவன் அழைக்கவும், “ம்ம்” என்று முனகினாள்.
கைப்பேசியில் லட்சுமியை அழைத்து அவளது நிலையைச்சொல்லி அங்கே வரச்செய்தான் ஆதி.
அவளைத் தொட்டுப் பார்த்தவர், “ஜுரம் ரொம்ப அதிகமா இருக்கு ராஜா! ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயிடலாம்பா” என்று மல்லியை எழுப்பி, தயாராகும்படி சொன்னார்.
அவளுமே முகம் கழுவி வேறு உடைக்கு மாறி வர, தயாராக இருந்த கஞ்சியை, வற்புறுத்தி அவளைச் சாப்பிட வைத்து, பாராசிட்டமால் மாத்திரை ஒன்றையும் போடவைத்தார் லட்சுமி. சிறிது நேரத்தில் கேர் ஃபார் லைஃபில் இருந்தார்கள் ஆதி, மல்லி இஎஉவரும்.
முன்பே தொலைப்பேசியில் தாமரையிடம் தகவல் சொல்லியிருந்ததால், நேரே அவள் புற நோயாளிகளைப் பரிசோதிக்கும் அறைக்குச் சென்றனர்.
உள்ளே நுழையவும், “வாங்கண்ணா!” என்று வரவேற்றாலும் வழக்கமான உற்சாகமின்றி தாமரையின் முகம் வாடிப் போயிருந்ததைக் கண்டு ஆதியின் கண்கள் யோசனையில், சுருங்கின.
அவளது தந்தை மற்றும் அண்ணன் இருவரின் நிலைதான் காரணம் என்று மனதில் நினைத்துக்கொண்டான்.
மல்லி எடுத்துக்கொண்ட மாத்திரையின் விளைவால் காய்ச்சல் கொஞ்சம் மட்டுப்பட்டிருந்தது. ஆனால் குளிர், தலைவலி, கண்களில் எரிச்சல் என்று இருந்ததால், எதையும் கவனிக்கும் நிலையில் அவள் இல்லை.
“அம்மா, அப்பா எப்படி இருக்காங்கண்ணா!” என்று விசாரித்தாள் தாமரை.
“நல்லா இருக்காங்கம்மா” என்று பதில் சொன்னவன் தொடர்ந்து மல்லியைப் பற்றி கூறினான்.
பிறகு, அவளை மேலோட்டமாக பரிசோதித்து சில கேள்விகளையும் கேட்டுத் தெளிவுபடுத்திக்கொண்ட தாமரை, “யூரின் இன்பெக்சன் போலருக்குண்ணா! வெயில்காலம் இல்லையா. இவ தண்ணீ நிறைய குடிக்கலன்னு நினைக்கிறேன்” என்றவள் சில மருத்துவப் பரிசோதனைகளை எழுதிக் கொடுத்து, அதை அங்கேயே எடுக்கச் சொல்லிவிட்டு சில மருந்துகளையும் பரிந்துரை செய்திருந்தாள்.
“ரிசல்ட் பார்த்துட்டு நான் போன்லயே சொல்றேன், மல்லி. மறுபடியும் தேவபட்டா இங்க வந்தா போதும். நிறையத் தண்ணி, ஜூஸ் எல்லாம் எடுத்துக்கோ!” என்று மல்லியிடம் சொல்லிவிட்டு ஆதியைப் பார்த்தாள்.
“என்ன டாக்டரம்மா! உனக்கே உடம்பு சரியில்லையா? ஏன் உன் முகமே தெளிவா இல்ல? உன்ன கவனிக்காம உன் வீட்டுக்காரன் என்ன செய்யறான்?” என்று கேள்விகளாய்க் கேட்டுத்தள்ளினான்.
“இல்லணா அவங்க யூ. எஸ் போயிருக்காங்க. வர இன்னும் ரெண்டு மூணு நாள் ஆகும். ஒடம்புக்கு ஒண்ணுமில்ல ஆனா மனசுதான்ணா கொஞ்சம் சரியில்ல” என்று கூற, அவன் மல்லியைப் பார்க்கவும் அதன் அர்த்தம் புரிந்ததுபோல் புன்னகைத்தாள்.
“அண்ணா! நீங்க மல்லிய கல்யாணம் செஞ்சிருக்கீங்க. உங்க செலக்ஷன் அவ. உங்கள மாதிரிதான இருப்பா? அதனால, எனக்கு ஒரு பிரச்சினையும் இல்ல. இத பத்தி உங்ககிட்ட சொன்னா என் டென்ஷன் கொஞ்சம் குறையும்” எனத் தாமரை சொல்லவும், ஆதியிடம் அவள் கொண்டுள்ள நம்பிக்கையும் அதே போன்று அவள் தன்னையும் சமமாக வைத்துப் பார்ப்பதையும் நினைத்து வியப்புடன் அவளைப் பார்த்துக்கொண்டிருந்தாள் மல்லி.
“என்னம்மா உன் அப்பாவையும் ரத்தினத்தையும் பற்றிய கவலையா?” என்று ஆதி கேட்க, “அவங்கள பத்தி எனக்கு எந்தக் கவலையும் இல்லண்ணா. அப்பாவும் அவனும் செய்யற எல்லா அராஜகமும் எனக்குத் தெரியும். இன்னும் கொஞ்ச நாள் ஆகும்னு நெனச்சேன். சீக்கிரமாவே மாட்டிக்கிட்டாங்க” என்றாள் வேதனையுடன்.
அவளைப் பார்த்து ஆதிக்கு, மிகவும் வருத்தமாகிப்போனது. ‘வேறு வழியில்லை, இந்தமாட்டும் அவள் புரிந்துகொண்டதே போதும்’ என்று நினைத்தவன், “வேற என்ன பிரச்சினைமா?” என்று வினாவினான்.
“நீங்க இங்க வறதுக்கு முன்னால ஒரு பொண்ணு வந்திருந்தாண்ணா. அவ வேற ஒரு பொண்ணுக்கு சினை முட்டை தானம் செய்ய, செக்கப்புக்கு வந்திருந்தா. அவள இதுக்கு முன்னால ஒரு தடவ கூட இங்க பாத்தது நியாபகம் வந்துது. ‘இது மாதிரி அடிக்கடி செய்யக்கூடாது, ஹெல்த்த பாதிக்கும்னு அவசரப்பட்டு திட்டிட்டேன். தாங்காம கதறித் தீத்துட்டாண்ணா” என்று தாமரை சொல்லவும், இருவருமே அமைதியாக அவள் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தனர்.
“அவளோட ஹஸ்பண்ட் அவள போர்ஸ் பண்ணி அடிக்கடி இத செய்யவெக்காறான்னு சொன்னா! அதுக்கு அவ மாமியாரும் உடந்தையாம். எக்கச்சக்க ஹார்மோன் மெடிசின்ஸ் எடுது அவ ஹெல்த் கண்டிஷன் வேற ரொம்ப மோசமா இருக்கு. ஆனாலும் விடமாட்டேங்கறானாம்.
அந்த எக் ரெசிபியன்ட் யாரோ ஒரு புரோக்கர் மூலமா இவங்கள அப்ரோச் பண்ணியிருக்காங்க போலிருக்கு. நாற்பதாயிரம் வரை கொடுப்பாங்களாம்.
இத யார்கிட்டயும் சொல்லிடாதீங்கன்னு கெஞ்சினா அண்ணா! இதெல்லாம் தெரியாம நானும் இங்க பிழைச்சிட்டு இருக்கேன் பாருங்களேன்! வினோத் இங்க வந்த அப்பறம் இத பத்தி அவங்க சொல்லி சொல்லி எதாவது செய்யணும்” என்று முடித்தாள் தாமரை.
தாமரையின் பேச்சில் கவனமாக இருந்த ஆதி அப்பொழுதுதான் மல்லியைக் கவனித்தான் அவள் முகம் ஜிவு ஜிவு எனச் சிவந்து போயிருந்தது.
தெளிவாக இருந்த மல்லியின் முகம் மறுபடி சிவத்திருக்கவும் காய்ச்சல் அதிகமாகிவிட்டதோ எனப் பதறிய ஆதி அவள் நெற்றியில் கை வைத்துப் பார்க்க சூடு அதிகம் இல்லை.
அவன் செயலைப் பார்த்து சிரித்த தாமரை, “அண்ணா அவளுக்கு சாதாரண காய்ச்சல் தான் நீங்க பதறாதீங்க!” என்றாள்.
“இல்லம்மா, காலையில ரொம்பவே கொச்சிட்டு இருந்துது. அதான் பயந்துட்டேன்!” என்றான் ஆதி.
பிறகு அவளிடம் விடைபெற்று, டெஸ்ட்களுக்குக் கொடுத்துவிட்டு வீடு வந்து சேர்ந்திருந்தனர் இருவரும்.
மதிய உணவு உண்டுவிட்டு மருந்துகளையும் உட்கொண்டு அவர்களது அறைக்கு வந்த மல்லி நேராக பால்கனிக்குச் சென்று கூடை ஊஞ்சலில் ஓய்வாக உட்கார்ந்து கொண்டாள்.
“இங்க அனல் காத்து வீசுது, மல்லி. உள்ள வந்து ஏசி போட்டு படுத்துக்கோமா” என்றான் அவளைப் பின் தொடர்ந்து வந்த ஆதி.
“இல்ல மாம்ஸ், எனக்கு இங்கயே கம்பர்டபுலா இருக்கு” என்றவள் கண்களை மூடி வசதியாகச் சாய்ந்துகொள்ள, அவளது விழிகளில் கண்ணீர் வழிந்தவண்ணம் இருந்தது.
“ஏய் மல்லி, என்னப்பா ஆச்சு, ஏம்பா அழற? அம்மா அப்பா ஞாபகம் வந்துடுச்சா” எனப் பதறினான் ஆதி.
“இல்ல தேவா, நான் அந்த பொண்ண பார்த்தேன்” என்றாள்.
“எந்தப் பொண்ண?” என்றவன் அதற்குள் தாமரை குறிப்பிட்டவளைத்தான் அவள் சொல்கிறாள் என்பது புரியவும், “ஓ!” என்றான்.
“உங்க ஃப்ரண்ட் நல்லவர் இல்ல மாம்ஸ்!”
“நீ என்ன சொல்ல வர மல்லி?”
“அந்த பொண்ணக்கு நாமதான் ஹெல்ப் பண்ணனும் மாம்ஸ்!” ஏன்னா அந்த பொண்ணு சொன்ன விஷயம் வினோத்துக்கு தெரிஞ்சுதான் நடந்திருக்கும்! வறுமைல கஷ்டப்படறவங்கள தன்னோட லாபத்துக்குப் பயன்படுத்திக்கும் ஒரு மோசமான ஜென்மம் மாம்ஸ் அவன்” என கொதித்தவளை விசித்திரமாகப் பார்த்தவன், “இல்ல, புரியல” என்றான்.
“நான் அந்த ஹாஸ்பிடலுக்கு இதுக்கு முன்னால ஒரு தடவ போயிருக்கேன்” என்றாள் மல்லி.
“தெரியும்!” என்றவனை ஒரு ஏளனப் பார்வை பார்த்தபடி, “ நீங்க நெனைக்கறமாதிரி நான் மயங்கி விழுந்த அன்னிக்கு இல்ல, அதுக்கு முன்னாலயே ஒரு தடவ அங்க போயிருக்கேன்” என நக்கலாகச் சொன்னவளை உதடுகளில் பூத்த புன்முறுவலோடு பார்த்தவன், கரம் பற்றி, அவளை இழுத்து, தன் மார்புடன் சேர்த்து அணைத்தவாறு, “தெரியும்! ஜூன் 6... 2017!” என்றவன், “அந்த நாள நீ மறந்தாலும் என்னால மறக்க முடியாது. ஏன் தெரியுமா? இரும்பா இருந்த என் இதயத்த இளக்கி, அதைத் திருடி உங்கூடவே நீ எடுத்துப் போன நாள் அது மல்லி!” என புன்னகையோடே சொல்லி முடித்தான் தேவாதிராஜன்.
உறைந்துபோய் அவனையே கண்களை இமைக்காமல்! பார்த்துக்கொண்டிருந்தாள் மரகதவல்லி!


