top of page

Thirudiya Idhyathai Thirupi Koduthuvidu

Public·5 members

13. காரணம் புரிந்தது

இந்த திருமணத்தைப் பற்றி தெரியவந்தால், தோழிக்கு அமைந்திருக்கும் நல்ல வாழ்க்கையை நினைத்து அம்மு மகிழ்ச்சிதான் அடைவாள் என்ற எண்ணம் மல்லியின் மனதில் தோன்றவே அதுவரை இருந்த கலக்கம், தயக்கமெல்லாம் அவளை விட்டுப் போயின.


அதன் பிறகு நடந்த சடங்குகளிலெல்லாம், முழுமையான மகிழ்ச்சியுடனேயே ஆதியுடன் தன்னை இணைத்துக்கொண்டாள்.


பெரியவர்கள் அனைவரிடமும் மணமக்கள் ஆசி பெற்று பிறகு அனைத்துத் திருமண சடங்குகளும் இனிதே ஆரத்தியுடன் முடிந்தன.


பிறகு, அவர்கள் வீட்டிலிருக்கும் பூஜை அறையில் விளக்கேற்ற, ஆதியுடன் மல்லியை அழைத்துச் சென்றார் லட்சுமி.


வரதன் ஜெகன் பரிமளா சசி மற்றும் சில நெருக்கமான உறவினர்களும் உடன் சென்றனர்.


பூஜை அறையின் உள்ளே பளபளவென மின்னிய, நன்கு பெரியதாக இருந்த வெண்கலத்தாலான காமாட்சியம்மன் விளக்கு மஞ்சள் குங்குமமிட்டு எண்ணை ஊற்றி தயாராக வைக்கப் பட்டிருந்தது.


அந்த விளக்கைத் தவிர அங்கிருந்த வேறு எதுவும் மல்லியின் கண்களுக்குத் தெரியவில்லை. மிகுந்த பயபக்தியுடன் விளக்கை ஏற்றினாள்.

அப்பொழுது அங்கே வைக்கப் பட்டிருந்த படங்களின் நடுவில் தனது தங்கையைப் பார்த்த ஆதி, “எதையாவது பேசி மல்லியை டைவர்ட் பண்ணுடா மச்சான்” என சசிகுமாரின் காதில் கிசுகிசுக்க, அடுத்த நொடியே சசி ஆதியிடம், “டேய் புது மாப்பிள, ஹனிமூனுக்கு எங்கடா பிளான் பண்ணியிருக்க?” என்று கேட்டு வைத்தான்.


‘ஐயோ… நாம ஒன்னு சொன்னா இந்த பாக்கி எத பேசுது பாரு’ என பல்லைக் கடித்தான் ஆதி.


“என்னடா அடுத்த வாரத்துல இருந்து ஸ்கூல் யூனிஃபார்ம் சேல்ஸ் ஸ்டார்ட் ஆயிடும். உன்னால தனியா மேனேஜ் பண்ண முடியுமா சொல்லு, நான் இன்னைக்கே கிளம்பறேன்” என நக்கலுடன் பதில் கொடுத்தான்.


மல்லி ஏன் தலை நிமிர்த்து பார்க்கப் போகிறாள்?


தமிழ்நாட்டில் உள்ள கிட்டத்தட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட கிளைகளில் கூட்டம் அலை மோதும். சீருடை மட்டுமின்றி புத்தகப் பைகள் குறிப்பேடுகள் மற்ற எழுதுபொருட்கள் என அனைத்தையும் இருப்பில் வைத்திருக்க வேண்டும். ஆதி இல்லாமல் சமாளிக்க முடியாது. இதை நன்கு உணர்ந்த சசி, “உன் இஷ்டம்டா மச்சான்” எனத் தப்பித்துக் கொள்ள, பிறகுதான் மூச்சே விட முடிந்தது மல்லிக்கு.


பிறகு அனைவரும் உணவு உண்பதற்குச் சென்றுவிட, எல்லாம் முடித்து ஓய்வாக உட்கார மதியம் ஆகிப்போனது.


முத்துராமன் பெரியப்பாவின் குடும்பத்தினர் ஆதியின் பெரிய மாமா குடும்பத்தினர் என ஒரு சிலர் மட்டுமே எஞ்சி இருக்க மற்ற அனைத்து உறவினர்களும் கிளம்பியிருந்தனர்.


பெண்களெல்லாம் அங்கே இருந்த அறையில் உட்கார்ந்திருக்க, மல்லியும் அங்கேதான் இருந்தாள்.


“தாலி கட்டற நேரத்துல உங்க மச்சினன் பொண்ணுக்கு அப்படி மயக்கம் வரவும் அபசகுனம்னு தப்பா எடுத்துப்பீங்களோன்னு பயந்தே போயிட்டேன், அண்ணி” எனத் தயக்கத்துடன் சொன்னார் பரிமளா.


“சரியா, அந்த நேரத்துல அந்த பொண்ணுக்கு மயக்கம் எப்படி வந்துதுன்னே புரியல. ஆனா, அப்படி நடந்ததும் நன்மைக்குத்தான். நீங்க எதாவது நெனச்சிப்பீங்கனுதான் நான் கவலப்பட்டேன், அண்ணி. அவ என் ஓரகத்தியோட சொந்த தங்கை மகளும்தான். அவள் நாத்தனார் முடிச்சு போடுறதுல எனக்கும் உங்க அண்ணாவுக்கும் கொஞ்சம் கூட இஷ்டம் இல்ல. தம்பிக்கும் இதுல கொஞ்சமும் விருப்பமில்ல. சொந்தக்காரங்க வாயிக்கு பயந்துதான், வேற வழியில்லாம இதுக்கு ஒத்துக்க வேண்டியதா போச்சு. நீங்க எதுவும் பீல் பண்ணாதீங்க” என்றார் லட்சுமி.


அப்பொழுது அது அனைத்தையும் கேட்டவாறு மல்லியின் அருகில் உட்கார்ந்திருந்த முத்துராமனின் மனைவி வசந்தா அவளிடம், “பெரியம்மா இப்படி சொல்றேன்னு தப்பா நினைக்காத மல்லிம்மா! உன் வீட்டுகாரோட சித்தி சுலோச்சனா என் பிறந்த வீட்டு வழியில சொந்தம்தான். ஏதாவது பேசி எல்லாரையும் நோகடிச்சிடுவா. அவரோட அத்தையும் அதே டைப்தான். அவங்க பொண்ண வேற சுலோவோட பையனுக்கு கொடுத்திருக்காங்க. நீ எதுக்கும் அவகிட்டலாம் கொஞ்சம் பார்த்து நடந்துக்கோ கண்ணு” என அக்கறையுடன் எச்சரித்தார்.


புதிய சூழலில் எப்படிப் பொருந்தப்போகிறோமோ என்ற அச்சத்துடனேயே, தலையாட்டி அனைத்தையும் கேட்டுக்கொண்டாள் மல்லி.


சிறிது ஓய்விற்குப் பின் சசிகுமார் முத்துராமன் என ஒவ்வொருவர் குடும்பமாக அங்கிருந்து கிளம்பத் தொடங்கினர்.


பரிமளாவும் ஜெகனும் தீபனை அழைத்துக் கொண்டு மகள் மற்றும் மருமகனுக்குப் பாலும் பழமும் கொடுக்க தயார் செய்யவென அனைவரிடமும் விடைபெற்று அவர்களது வீட்டிற்குச் சென்றனர்.


***


“நான் பெரிய வீட்டுக்குப் போய் எல்லா ஏற்பாடுகளையும் கவனிக்கணும். நீ மல்லிய அவங்க வீட்டுக்கு கூட்டிட்டுப்போயிட்டு அப்பறம் அங்க வந்துடு” என்று மகனிடமும், “பத்திரமாக போயிட்டு வாம்மா” என மருமகளிடமும் சொல்லிவிட்டு புது மருமகளை வரவேற்கும் மகிழ்ச்சியில் கணவருடன் அவர்களது பங்களாவிற்குக் கிளம்பினார் லட்சுமி.


நேரே மல்லியின் வீட்டிற்கு இருவரும் செல்ல, ஆரத்தி சுற்றி அவர்களை உள்ளே அழைத்துச் சென்ற பரிமளா பாலும் பழமும் கொடுத்து அவர்களை உபசரித்தார்.


“அத்த, தீபன் சின்னபிள்ளையா இருக்கறதால இந்த மறுவீடு சம்பிரதாயம் அது இதுன்னு இங்க வந்து தங்க வேண்டாம்னு நினைக்கறேன். நீங்க வருத்தப் படமாட்டீங்கன்னா, காலைல வந்துட்டு சாயங்காலம் கெளம்பறோம்” என்றான் ஆதி.


அவருக்கும் உள்ளுக்குள்ளே மறுவீடு பற்றிய கவலை இருந்துகொண்டுதான் இருந்தது. மருமகன் தன்னிடம் நேருக்கு நேராகப் பேசுவதிலேயே கொஞ்சம் அசந்துபோன பரிமளா, அவனது புரிதலான நடவடிக்கையால் மேலும் மகிழ்ந்துதான் போனார்.


திருமணத்திற்கு வந்தவர் வராதவர் என அந்தக் குடியிருப்பில் இருக்கும் அனைவரும் குட்டீஸ் உட்பட மல்லியையும் ஆதியையும் வந்து சந்தித்துவிட்டுச் செல்ல அனைவரிடமும் புன்னகை மாறாமல் பேசிக்கொண்டிருந்தான் ஆதி.


சிறிதுநேரம் அங்கே இருந்துவிட்டுக் கிளம்பினர் இருவரும். கிளம்பும் நேரம் சமையல் அறைக்குள் சென்று கண்ணீர் வடித்தார் பரிமளா.


ஹாலில், ஆதியின் அருகில் உட்கார்ந்திருந்தவாறு அங்கேயே பார்த்துக் கொண்டிருந்தாள் மல்லி, அன்னையின் மனம் அறிந்தவளாக. தீபன் அங்கே இருக்க முடியாமல் அவர்களை வழியனுப்பும் சாக்கில் வெளியில் சென்று நின்றுகொண்டான்.


“மல்லி! கொஞ்சம் பிடிவாதம் பிடிப்பா. ஆனாரொம்ப பொறுப்பான பொண்ணு. இனிமே நீங்கதான் அவள பத்திரமா பார்த்துக்கணும்” என கண்களில் நீர் திரள மருமகனிடம் சொன்னார் ஜெகன்.


“உங்க மகள பத்தி எனக்கு நல்லாவே தெரியும். நீங்க கவலையே படவேண்டாம். அவள எப்ப பாக்கனும்னு தோனினாலும் தயங்காம நீங்க அங்க வரலாம். இல்லன்னா ஒரு வார்த்தை எனக்கு மெசேஜ் செஞ்சா போதும், நாங்களே இங்கே இங்க வந்துடுவோம்” என பரிமளாவிற்கும் கேட்கும் விதமாகச் சொன்னான் ஆதி.


“ரொம்ப சந்தோசம் மாப்பிளை” என்றார் ஜெகன் திருப்தியுடன்.


முகத்தைத் துடைத்துக்கொண்டு வெளியில் வந்த பரிமளாவும் பின்பு சந்தோஷமாகவே மகளையும் மருமகனையும் வழியனுப்பிவைத்தார்.


***


ஆதி மற்றும் மல்லி மட்டும் பின்னால் அமர்ந்திருக்க ஓட்டுநர் வண்டியை ஓட்டிவர கடற்கரைச் சாலையில் காற்றைக் கிழித்து சென்றுகொண்டிருந்தது ஆதியின் வாகனம்.


மற்றவர் மனதைப் புரிந்து நடக்கும் அவனது குணத்தில் பெருமை பொங்க அவனையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மல்லி.


அவளுடன் நெருங்கி உட்கார்ந்த ஆதி அவளுடைய காதின் அருகில் குனிந்து, “இது காரும்மா, ட்ரைவர் வேற இருக்காரு. நீ இப்படியெல்லாம் பார்த்து வெச்சா, எனக்கு என்னென்னவோ தோணுமில்ல!” என கிசுகிசுக்கவும் ‘ஐயோ இப்படி மாட்டிக் கொண்டோமே’ என்று நினைத்தவள் தனது நாணப் புன்னகையை மறைக்க வேடிக்கை பார்ப்பதுபோல் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.


அதைப் புரிந்துகொண்டவன் அவளது கையை இறுக்கப் பற்றிக் கொண்டான். ஏசியின் குளிரிலும் வியர்வை பூக்கத் தொடங்கியது மல்லிக்கு அவனது அருகாமையில்.


***


கடற்கரைக் காற்று இதமாக வீசிக் கொண்டிருக்கும் மாலை நேரம்.


மிகப் பெரிய இரும்பு கேட்டைக் கடந்து பிரமாண்டமான மாளிகையைப் போன்ற அந்தப் பங்களாவின் முன் சென்று நின்றது கார்.


ஆலம் சுற்றி அவர்களை மகிழ்ச்சியுடன் உள்ளே அழைத்துச் சென்றார் லட்சுமி. மகிழ்ச்சியுடன் மகனை அணைத்துக் கொண்டார் வரதன்.


பின்பு, யோசனையுடன் அன்னையை நோக்கியவன், “அம்மா. மல்லிக்கிட்ட முக்கியமா பேசவேண்டி இருக்கு. நாங்க ஆபீஸ் ரூம்ல இருக்கோம். எதாவது ஜூஸ் மட்டும் குடுத்து விடுங்க” என்றான் ஆதி.


“தம்பி” என்று அவர் மகனை இறைஞ்சுதலுடன் பார்க்க, ‘நான் பார்த்துக் கொள்கிறேன்!’ என்று ஜாடை காட்டிவிட்டு, மல்லியின் கைபிடித்து அருகில் இருந்த அலுவலக அறைக்குள் அவளை அழைத்துச் சென்றான் ஆதி.


கொஞ்சமும் மறுப்பின்றி அவனுடன் சென்றாள் மல்லி. ‘இன்னும் என்ன சொல்லப்போகிறானோ?!’ என்ற கேள்வியுடன்.


அங்கே போடப்பட்டிருந்த இருக்கையில் அவளை உட்காரச்செய்து, அருகில் இருந்த மேசையில் சாய்ந்துகொண்டு சற்று அமைதியாக இருந்தவன் பின்பு, “உனக்கு என்கிட்ட முழு நம்பிக்க இருக்கா மல்லி?” என்று கேட்டான்.


அதில் அவனை ஒரு புரியாத பார்வைப் பார்த்தவள், “என்னலாம் செஞ்சு என்ன கல்யாணம் பண்ணியிருக்கீங்க, மாம்ஸ். உங்கள நம்பாம நான் வேற யார நம்பப்போறேன்” எனச் சொல்லவும், அவளது மாம்ஸ் என்ற அழைப்பில் குளிர்ந்தவன், “ஓ ஒரு வழியா தீபன் உனக்கு சொல்லிக் கொடுத்துட்டானா?” என்று அவன் விஷமமாகக் கேட்க, அவன் என்ன சொல்ல வருகிறான் எனப் புரியாமல் விழித்தாள் மல்லி.


அவளின் பார்வையைக் கண்டு சிரித்தவன் “முண்டக்கண்ணி! மாம்ஸ்னு என்னை என்ன கூப்டியே அத சொன்னேன்” என்றான்.


நாக்கைக் கடித்தவள், “அப்படியா சொன்னேன்?” என்று கேட்க, “அப்படித்தானே மேடம் சொன்னீங்க” என அவன் அவளைப்போலவே சொல்லவும் என்ன சொல்வது எனத் தெரியாமல் விழித்தாள் மல்லி.


“ஓகே ஜோக்ஸ் அபார்ட், நீ சொன்னமாதிரி என் மேல உனக்கு நம்பிக்கை ஏற்பட்டிருந்தா எனக்கு ஹாப்பிதான். ஆனா அந்த நம்பிக்கையை எப்பவுமே நீ கைவிடக்கூடாது” என்றான் ஆதி.


“நான் உங்கள நம்பதான் செய்யறேன். ஆனா நீங்கதான் என்ன நம்பல, மாம்ஸ். இல்லனா எனக்கு கொஞ்சம் டைம் கொடுத்திருப்பீங்க” என்றாள்.


“இல்ல மல்லி, நானும் முன்னாலயே உங்கிட்ட பல விஷயங்களப் பேசி க்ளியர் பண்ண டிரை பணனேன். அதக் கேட்கற மனநிலையில நீ கொஞ்சம் கூட இல்ல.

அதுவும் நீ ஏடாகூடமா ஒரு சத்தியத்த அம்முவுக்கு செஞ்சு கொடுத்துட்டு, அதுலயே விடாப்பிடியாக இருக்கும்போது எனக்கும் வேற வழி தெரியல” என்று தன் நிலையை விளக்கினான் ஆதி.


“அதுக்காக இந்த அவசரக் கல்யாணம் தேவையா?” என மல்லி விடாமல் கேட்கவும், “தேவதான். உன்ன முழுசா என் பாதுகாப்புல கொண்டுவர இந்தக் கல்யாணம் அவசியம் தேவதான்” என்று கோபப்பட்டவன், “புரிஞ்சுக்க மல்லி, அன்னைக்கு உனக்கு நடந்தது ஆக்சிடன்ட் இல்ல, கொலை முயற்சி! அதுக்கான காரணத்ததான் என்னால கண்டுபிடிக்க முடியல! முழுசா நாப்பது நாள், உன்ன பிரிஞ்சு நான் பட்ட கஷ்டத்த உன்னால புரிஞ்சிக்க முடியாது மல்லி! ஏன்னா இன்னொரு இழப்ப தாங்கற நிலையில நான் இல்ல! ஏற்கனவே என் தங்கைய இழந்து, நாங்க அனுபவிக்கற வேதன உனக்குத் தெரியாது, மல்லி! அவ தற்கொல பண்ணிட்டு ஒரேடியா போய் சேரந்துட்டா. ஆனா எங்களாலதான் அதுல இருந்து இன்னைக்கு வரைக்கும் கூட மீண்டு வர முடியல” என கண்களில் நீர் திரையிட சொல்லிக்கொண்டே போனான் ஆதி.


அவன் பேசியதைக் கேட்டு உறைந்துபோய் உட்கார்ந்திருந்தாள் மல்லி.


அதற்குள் கதவைத் தட்டிவிட்டு அங்கே வேலை செய்யும் பெண்மணி பழரசத்தை அங்கே வைத்துவிட்டுச் செல்ல, அவளிடம் ஒன்றை எடுத்துக் கொடுத்துவிட்டு தானும் ஒன்றை பருகியவாறே, “இத மொதல்ல குடிச்சு முடி, மல்லி. அப்பறம் பேசலாம்” என்றான்.


மறுபேச்சின்றி அதை முழுவதும் பருகினாள் மல்லி. பிறகு கொஞ்சம் உணர்வு வரப்பெற்றவளாக “என்ன சொல்றீங்க தேவா! ஒண்ணுமே புரியல” என்றாள்.


அங்கே இருந்த டிராவிலிருந்து அம்முவின் செயினை எடுத்தவன், மல்லியின் கைகளில் அதை வைத்துவிட்டு, “நான் சொல்றத கேட்டு ஷாக் ஆகாத மல்லி!” என்று கூறி விட்டு, “உன் க்ளோஸ் பிரெண்ட் அம்முவோட ராஜா அண்ணா வேற யாரும் இல்ல. அது நான்தான்! ஆனா அவ இப்ப உயிரோட இல்ல. இந்த உண்மைய சொன்னா உன்னால தாங்க முடியாதுன்றதால உன்ன என் கண்பார்வைல வெச்சு பாதுகாக்கத்தான் அவசரவசரமா இந்தக் கல்யாணத்த நடத்தி முடிச்சேன்” என்று முடித்தான் ஆதி.


அம்மு உயிருடன் இல்லை என்பதை அறிந்த பிறகு தனக்கு நடந்தது விபத்து இல்லை என்ற விஷயம் கூட மனதில் பதியவில்லை மல்லிக்கு.


தீயினால் சுட்டதுபோல் அந்தச் செயினை கீழே நழுவ விட்டு, “விளையாடாதீங்க தேவா!” என்று கண்களில் கண்ணீர் பொங்க தள்ளாடியவாறு எழுந்து நின்ற மல்லியை தன் கைவளைவிற்குள் கொண்டுவந்தான் ஆதி.


“உனக்கு ஏதாவது செய்யுதா. நீ நார்மலா இருக்கியா மல்லி” என்று கேட்க, “ம்” என்றுமட்டும் சொன்னாள் மல்லி.


“அம்மா, அப்பா ரொம்ப நாளுக்குப் அப்பறம் இப்பதான் கொஞ்சம் நிம்மதியா இருக்காங்க. அதனால கொஞ்சம் புரிஞ்சு நடந்துக்கோ மல்லி” என்றபடி அவளை ஹாலுக்கு அழைத்து வந்தான் ஆதி.


அங்கே பெரியதாக மாட்டப் பட்டிருந்த படத்தில் சிரித்துக் கொண்டிருந்தாள், அவர்கள் வீட்டுச் செல்ல இளவரசி அமிர்தவல்லி.


அந்தப் புகைப் படத்தையும் ஆதியையும் மாறிமாறிப் பார்த்த மல்லிக்கு, அப்பொழுதுதான் தேவாவைப் பார்த்தவுடன் தனக்குப் பிடித்துப்போனதற்கான காரணம் புரிந்தது.


அண்ணன் தங்கை இருவருக்கும் இருக்கும் முக ஒற்றுமையும் ஒரே மாதிரியான காந்தக் கண்களும் சொல்லாமல் சொல்லியது அவளுடைய தேவாவின் முகம் அவளுக்கு மிகவும் பரிச்சயமாக இருந்ததன் காரணத்தை.

16 Views

Members

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2026 by KPN Publications

bottom of page