33. சுடும் வினை
இப்படி ஒரு நிலையை உண்மையிலேயே எதிர்பார்க்கவில்லை கோபால். அவனது கண்களில் அப்பட்டமான பயம் தெரிந்தது! தொண்டைக்குழி அடைக்க அவனது வாயிலிருந்து வார்த்தை வருமா என்றே அவனுக்குப் புரியவில்லை.
பேசுவதற்காக அவன் எடுத்துக்கொண்ட சில நொடிகளைக் கூட பொறுக்க முடியாமல் கன்டைனர் மணி, அவனை மேலும் அடிக்கக் கையை ஓங்கினான்.
பதறி, கேவலுடனும் நடுக்கத்துடனும் வந்தன அவனின் வார்த்தைகள். “அடிக்காதிங்க சொல்லிடறேன். தண்ணி குடுங்க ப்ளீஸ்! ப்ளீஸ்!” எனக் கெஞ்சினான்.
ஆதியின் கண்ணசைவில் அவனது கைகளை அவிழ்த்துவிட்டு மணி ஒரு தண்ணீர் பாட்டிலை திணிக்க, ஒரே மூச்சில் குடித்து முடித்தவன் சொல்லத் தொடங்கினான்.
கோபால் ஆதியின் வீட்டில் ஓட்டுநராக வேலைக்குச் சேர்ந்த பிறகு அவனுக்கு ராணியின் மகள் அன்னத்துடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. அது அங்கே யாருக்குமே தெரியாத நிலையில், அம்முவின் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் முடிந்து சில நாட்கள் ஆகியிருந்தபோதுதான் அவர்கள் இருவரும் அவளின் கண்களில் வசமாகச் சிக்கினர். ஆனால் அதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
நாளுக்கு நாள் இது எல்லைகடந்து போகவும், அவளால் அதை சகிக்க முடியவில்லை. தன் வயதையே ஒத்திருந்த அன்னத்தை அவள் மிரட்டி விசாரிக்க, கோபாலை அவள் காதலிப்பதாகவும், தன் கல்லூரிப் படிப்பு முடியும் வரை காத்திருந்து அவன் தன்னை முறைப்படி திருமணம் செய்து கொள்வதாய் சொல்லியிருப்பதாகவும் சொன்னாள். அதுவரை இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லவேண்டாம் என்றும் அன்னம் கேட்டுக்கொண்டதால், அதை அப்படியே விட்டுவிட்டாள் அம்மு.
இதை கோபால் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, அம்மு இதைப்பற்றி ஒருமுறை தன்னிடம் ஏதோ சொல்ல வந்தது நினைவில் வந்தது ஆதிக்கு.
இதற்கிடையில் கோபாலுக்கு அவனது அம்மா சரசு, திலகாவை பெண் பார்த்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்யவும், அதுவும் நகையும் போட்டு அவன் கால் டாக்சியாக ஓட்டுவதற்கு ஒரு காரும் வாங்கிக் கொடுக்க அவர்கள் தயாராக இருக்கவே அந்த ஏற்பாட்டிற்குச் சம்மதித்துவிட்டான் கோபால்.
அன்னத்திற்குத் தெரியவந்தால் பிரச்சினை செய்வாள் என்பதால் சீக்கிரமாகத் திருமணத்தை முடிக்கும் எண்ணத்தில் திருமண செலவிற்கென ஆதியிடம் அட்வான்ஸாக பணம் கேட்டிருந்தான் அவன்.
அன்றைய தினம் பார்து ஆதிக்கு விபத்து ஏற்பட்டுவிட்டது. அவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சமயத்திலும் கூட, மறக்காமல் அவன் அந்தப் பணத்தை கொடுக்க எண்ணினான் என கோபாலால் நிம்மதி கொள்ள முடியவில்லை. ஆதி அம்முவின் முன்னிலையிலேயே திருமணத்தைப் பற்றி பேசியதுதான் சிக்கலாகிப்போனது.
அம்முவுக்கு அவனுடைய விவகாரம் தெரியும் என்பதை அறியாமல் கோபாலும் சகஜமாக இருந்துவிட, அவளோ கொதிநிலைக்குப்போய்விட்டாள். தன் அண்ணனிடம் இதைப்பற்றிச் சொல்லும் முன்பே அவன் எக்ஸ்-ரே எடுக்க அழைத்துச் செல்லப்படவே, உடனே சொல்லமுடியாத சூழலுக்கு அவளைத் தள்ளி, விதி தன் சதியை அரங்கேற்றியது.
அங்கே தனியாக தன்னிடம் சிக்கிய கோபாலை அம்மு கேள்விமேல் கேள்வி கேட்டு குடைந்து எடுத்தாள். இதை அவன் எதிர்பார்க்கவே இல்லை. ஆனாலும் துணிந்து, அன்னத்துடன் தவறான முறையில் தான் பழகவேயில்லை என சாதித்தான்.
ஒரு கட்டத்தில் சலித்து, “இனிமே எதுவானாலும் ராஜா அண்ணா கிட்ட பேசிக்கோ, இப்ப நீ இங்கிருந்து போகலாம்” என்று சொல்லிவிட்டாள் அம்மு.
“ஐயோ! ஆதி சார் கிட்ட எதுவும் சொல்லிடாதீங்க பாப்பா!” என அவளிடம் கெஞ்சத் தொடங்கியவனின் மனதில் வன்மம் கனன்றது. அவள் பேசுவது அனைத்துமே பணத்திமிரினால்தான், எப்பொழுதுமே இவர்களிடம் பணத்திற்காக கையேந்தும் நிலையில்தான் இருக்கவேண்டுமா எனத் தான் செய்யும் தவறுக்கு நியாயம் கற்பித்துக்கொண்டான்.
அப்பொழுதுதான் அங்கே ஸ்ட்ரெக்சரில் தள்ளிக்கொண்டு வரப்பட்ட ராஜவேலுவைப் பார்த்து அதிர்ந்தாள் அம்மு. பின்பு தன்னை நிலைப்படுத்திக் கொண்டு, “நீ இப்ப இங்க இருந்து போகலாம்” என்று அலட்சியமாக சொல்லிவிட்டு வினோத்தின் அறையை நோக்கி ஓடிய அம்முவை விடாமல் பின் தொர்ந்து சென்றான் கோபால்.
அம்மு அந்த அறையின் கதவைத் திறக்கும் சமயத்தில் கோபாலை பார்த்தவள், “போ!” என்பதுபோல் ஜாடை செய்துவிட்டு உள்ளே நுழைந்துவிட, கதவின் அருகிலேயே நின்று அதில் இருந்த மெல்லிய இடைவெளி வழியாக உள்ளே அவர்கள் பேசுவதையும் கேட்கத் தொடங்கினான்.
“என்ன அம்மு ஆதிக்கு எதாவது பிரச்சினையா, இவ்ளோ அவசரமா வர?” என்ற வினோத்தின் கேள்வியையே காதில் வாங்காமல், “அண்ணா அந்த ஆளுக்கு என்னணா உடம்புக்கு” எனக் கேட்டாள் அம்மு.
“எந்த ஆளை கேக்கற, அம்மு. புரியலையே” என அவன் சொல்ல, யோசித்தவள், “ஆங்... அதான்ணா அந்த ராஜவேலு… அவனுக்குத்தான்” என்றாள்.
“ஏய் என்னம்மா இப்படி மரியாதை இல்லாம பேசற. அவர் மினிஸ்டர் பையம்மா” எனப் பதறினான் வினோத்.
“மண்ணாங்கட்டி மினிஸ்டர் பையன். அவன் ஒரு கொலைகாரன், அண்ணா. பொறுக்கி நாயி!” எனக் கோபத்தில் பொரிந்த்தாள்.
“ஏன் அம்மு நீ இப்படிலாம் பேசமாட்டியே, இப்ப ஏன் இப்படி பேசற” என அவன் கேட்கவும், விடுதியில் நடந்த அனைத்தையும் அவனிடம் சொல்லி முடித்தாள் அம்மு, அவனை முழுமையாக நம்பி.
அனைத்தையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டான் வினோத், அவ்வளவுதான்.
“என்னண்ணா எதுவும் சொல்லாம இப்படி அமைதியா இருக்கீங்க?” எனக் கேட்டாள்.
“ப்ச்… இப்படிக் கூட ஒருத்தன் இருப்பானான்னு யோசிச்சிட்டு இருக்கேன். ஹாரிபிள்” என்றான்.
“அவனுக்கு என்ன ஆச்சுண்ணா? இப்பவாவது சொல்லுங்க” என அம்மு மீண்டும் கேட்க, “ஹார்ட் டோட்டல் ஃபெய்லியர், அம்மு” என்றான் வினோத்.
“அப்ப செத்து போயிடுவானா...ணா!” என மகிழ்ச்சியுடன் கேட்டாள் அம்மு.
“ஏய்! இங்க உட்கார்ந்துட்டு இப்படி லூசு மாதிரி ஒளறிட்டு இருக்காத. இந்த ஹாஸ்ப்பிடலே அவங்களோடதுதான், தெரிஞ்சுக்க. அவங்க பொண்ணுக்காக வாங்கியிருக்காங்க. அந்த மினிஸ்டரும் அவரோட செகண்ட் சன் ரத்தினவேலுவும், அவரை எப்படியாவது காப்பாத்த சொல்லி எங்க சீனியரை படுத்தி எடுத்துட்டு இருக்காங்க. நீ இப்படி பேசறத கேட்டாங்கன்னா, உன் உயிரையே எடுத்திடுவாங்க” என்றான் வினோத் எச்சரிக்கும் தொனியில்.
“அண்ணா இத ராஜா அண்ணாகிட்ட என்னால சொல்ல முடியாது. அதனாலதான் உங்ககிட்ட சொன்னேன். நான் மட்டும் ஒரு வார்த்தை அவங்ககிட்ட சொன்னா, இவனுங்க ஒருத்தரையும் சும்மா விடமாட்டாங்க, அது உங்களுக்கே தெரியும்” என்றாள் கர்வமாக.
“சரி… சரி… நீ கொஞ்ச நேரம் இங்கயே அமைதியா இரு. நான் போய் அவரோட நிலைமையை பார்த்துட்டு வந்துடறேன். அவருக்கு ஹார்ட் டிரான்ஸ்பிளான்டேஷந்தான் ஒரே ஆப்ஷன்னு தோணுது. கரக்ட் மேட்ச் கிடைச்சாதான் அந்தாளோட உசுர காப்பாத்த முடியும். நீ கவல படாத” என பதட்டத்துடன் சொல்லிவிட்டு வினோத் கதவைத் திறக்க, அங்கே நின்று கொண்டிருந்த கோபால் வெலவெலத்துப்போனான்.
“ஏய் நீ யாரு? இஙகல்லாம் இப்படி நிக்கக் குடாது, போ” என அவனை விரட்டிவிட்டு அங்கிருந்து சென்றான் வினோத்.
திக்கித் திணறி கோபால் அனைத்தையும் சொல்லிக்கொண்டிருந்தான் கன்டைனருக்குள் இருந்தவாறே.
அதே நேரம் கொடுக்கப்பட்டிருந்த மாத்திரைகளின் தாக்கத்தினால் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் மல்லி, அவர்களுடைய வீட்டில்.
“வாடி மல்லி வா! வா! நீயே வந்து பாரு!” என்றவாறு அவளது கையை பிடித்து இழுத்துச் சென்றாள் அம்மு. மந்திரத்திரித்துவிட்டவள் போன்று மல்லி அவளுடன் செல்ல, மருத்துவமனையில் தனது அறைக்கதவைத் திறந்து வெளியில் வந்த வினோத் அங்கே நின்றுகொண்டிருந்தவனிடம் அதட்டலாக ஏதோ சொல்ல, அவன் அங்கிருந்துச் சென்றான்.
உடனே ஆதி அனுமதிக்கப்பட்டிருந்த வார்டில் பணியில் இருந்த அவனது உதவி மருத்துவரிடம் ஒரு மருந்தின் பெயரைச் சொல்லி விநோத் அதை ஆதிக்கு செலுத்தச் சொன்னான். “டாக்டர் அது கொஞ்சம் ஹெவி டோஸ் ஆச்சே” என்று தயங்கினார் அவர்.
“பரவாயில்ல, அவருக்கு வலி குறையல, அதனாலதான். சொல்றத செய்ங்க” என்று கட்டளையாக சொல்லிவிட்டு, நேராக அங்கே முக்கியஸ்தர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த சிறப்பு பிரிவிற்குள் நுழைந்து, அங்கே ஒரு அறையில் தங்கியிருந்தவனை நோக்கிச் சென்றான் விநோத்.
“என்ன டாக்டர் இங்க என்ன செஞ்சுட்டு இருக்க. எங்க அண்ணன காப்பாத்தப்போறியா இல்ல அவனோட சேர்ந்து நீயும் உசுர விடப்போறியா?” என அவன் மிரட்டவும், அங்கே போடப்பட்டிருந்த சோபாவில் இறுக்கமான முகத்துடன் உட்கார்ந்திருந்தார் தங்கவேலு.
“ஏய் ரத்தினம் நீ பேசாம இரு” என அவனை அடக்கிவிட்டு, “நீங்க சொல்லுங்க டாக்டர் தம்பி, ராஜவேலுவ காப்பாத்த என்ன செய்யப் போறீங்க?” என்று அவனிடம் கேட்டார்.
“ஹார்ட் டிரான்ஸ்பிளான்டேஷன் அதான் ஒரே ஆப்ஷன். அதாவது, உங்க சன்ன காப்பாத்த அவருக்கு வேற ஒருத்தரோட ஹார்ட்ட பொருத்தணும். ஆனா அதுக்கு டோனர் கிடைச்சாதான் அவர காப்பாத்தவே முடியும். அப்படியே ஹார்ட் கிடைச்சு அவரைக் காப்பாத்தினாலும், அவர் செஞ்ச கொலைக்கு அவருக்குத் தூக்கு தண்டனைதான் கிடைக்கும்” என அவன் கொஞ்சமும் தயங்காமல் சொல்லவும், அதிர்ந்து எழுந்து நின்ற தங்கவேலு, “என்ன டாக்டர் நக்கலா?” என்று பதறினார்.
அவனது உதடுகள் அலட்சியமாக வளையவும், கோபத்துடன் அவனை நோக்கிப் பாய்ந்த ரத்தினத்தை தடுத்தார் தங்கவேலு.
“உங்க மகன் மூணு வருஷத்துக்கு முன்னால, உங்க ஸ்கூல் ஹாஸ்டல்ல தங்கி படிச்சிட்டு இருந்த செல்விங்கற சின்ன பொண்ண கொலை செஞ்சதுக்கு என்கிட்ட சாட்சி இருக்கு. இப்ப நான் இதுல தலையிடலன்னா இனிமே நீங்க உங்க சன்ன மறந்திட வேண்டியதுதான்” என அப்பட்டமாக மிரட்டினான் வினோத்.
அச்சம், “சொல்லுங்க, நான் உங்களுக்கு என்ன செய்யணும்?” என்று மேலிட பணிந்து வந்தார் தங்கவேலு.
“உங்க மகன இந்த கொல கேஸ்ல இருந்து காப்பாத்தவும், அவனுக்கு மாற்று இதயத்துக்கு ஏற்பாடு செய்யவும், அதாவது நேரடியா சொல்லனும்னா உங்க மகனோட உயிருக்கு எவ்வளவு விலை கொடுப்பிங்க” என பேரம்பேசினான் வினோத்.
ஒரு நொடி கூட யோசிக்காமல், “நீ மட்டும் அவனப் பிழைக்க வெச்சுட்டா, இந்த ஹாஸ்பிடலையே உன் பேர்ல எழுதி வைக்கிறேன்” என்றார் தங்கவேலு. மூத்த மகன் மீது கொண்ட கண்மூடித்தனமான பாசம் அவரை அப்படி பேச வைத்தது.
தங்கவேலு சொல்லிக்கொண்டிருக்கும்போதே அதைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத வினோத்தின் கண்கள் ஆச்சரியத்தில் பளிச்சிட்டதென்றால், ரத்தினத்தின் முகமோ பேய் அறைந்தாற்போல் ஆனது.
“உங்க பேச்ச நான் எப்படி நம்ப முடியும்?” என வினோத் கேட்கவும், “இப்பவே இந்த ஹாஸ்பிடலோட ஷேர்ஸ உன் பேருக்கு மாத்தி எழுத ஏற்பாடு செய்யறேன். நீ சொன்ன அந்தச் சாட்சிய அழிச்சிட்டு, என் மகனப் பிழைக்க வெச்ச அடுத்த நொடி அது உன் கைக்கு வரும்” என்றார் உருதியாக.
“அப்பா தாமரைக்காகத்தான இந்த ஹாஸ்பிடல வாங்கினோம்!” என்று பல்லைக் கடித்தான் ரத்தினம். “அதல்லாம் அப்பறம் பார்த்துக்கலாம்” என்று அவன் வாயை அடைத்துவிட்டார் தங்கவேலு.
அவரிடமிருந்த ராஜவேலுவின் மருத்துவ அறிக்கைகளை பெற்றுக்கொண்டு, தீவிற யோசனையுடன் அவனது அறைக்குத் திரும்பினான் வினோத், அங்கே அம்முவைக் காணாமல் திகைத்தவன், எப்படியும் அவள் தன்னைத் தேடி வருவாள் என்று அவளுக்காகக் காத்திருந்தான்.
ஆதியைக் காண அம்மு அவன் அனுமதிக்கப்பட்டிருந்த அறைக்கு வந்தாள். அவனோ ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.
சில நிமிடங்கள் அவனருகில் அமர்ந்திருந்தவள், அவனது உறக்கம் கலையாமல் போகவே மறுபடியும் வினோத்தின் அறை நோக்கிச் சென்றாள், அவனது எண்ணைத்தைப் பொய்யாக்காமல்.
“அண்ணா, நான் சொன்னதப் பத்தி யோசிச்சு பார்த்தீங்களா?” என்று அவள் கேட்க, “நீதான் யோசிக்கணும், அம்மு. இப்ப உன் அண்ணன் மாதிரியே நானும் வாழ்க்கைல மேல வரதுக்கு எனக்கு ஒரு நல்ல சான்ஸ் கிடைச்சிருக்கு. நீ இந்த விஷயத்தை இதோட விட்டுட்டா, எனக்குப் பெரிய புதையலே கிடைக்கும்!” என்றான் வினோத்.
அவன் என்ன சொல்கிறான் என்று புரியவே அவளுக்குச் சில நிமிடங்கள் பிடித்தன.
“அண்ணா, ராஜாண்ணா நேர்மையா கஷ்டப்பட்டு உழைச்சு மேல வந்திருக்காங்க. அப்பாகிட்ட கூட அவங்க பணம் வாங்கல. ஆனா நீங்கச் செய்ய நினைக்கறது அநியாயம்..ணா” என்றாள் அம்மு அதிர்ச்சியுடன்.
வினோத்தின் குரல் உயர்ந்தது. “ரொம்ப பேசற நீ! என்ன நியாயம்? என்ன நேர்மை? உன்னையும் உங்கண்ணன் மெடிக்கல்தான சேர்க்கப் போறான். ஒரு வருஷத்துக்கு எவ்வளவு ஆகும்னு தெரியுமா உனக்கு? மொத்தமா நான் படிச்சிட்டு வரதுக்குள்ள ஒன்றரை கோடி காலி. அதுல எம்.எஸ் பண்ணிட்டு நான் வெளிய வரதுக்குள்ள இன்னும் கொஞ்சம் வருஷம் போயிடுச்சு. நான் நேர்மை நியாயம்னு பேசிட்டு இருந்தா, இந்தமாதிரி ஒரு ஹாஸ்பிட்டல என் வாழ்நாள்ல வாங்க முடியாது” என்று கூறியபடி கதவை நன்றாக அடைத்துவிட்டுத் திரும்பி வந்தான்.
“நான் என்னவோ அந்த மினிஸ்ட்டர்கிட்ட மொத்தமா ஒரு அஞ்சு கோடியாவது தேத்திடலாம்னு பார்த்தா, அந்த ஆளு இந்த ஹாஸ்பிடலயே என் பேர்ல எழுதறேன்னு சொல்றான்! இதை அடைய எந்த எல்லைக்கும் போகலாம்னு நான் முடிவே பண்ணிட்டேன், அம்மு. வீணா என் வாழ்க்கையோட விளையாடாத! நீ என் ஃபிரண்ட்டோட தங்கைங்கறதாலதான் உன்கிட்ட இவ்வளவு கெஞ்சிட்டு இருக்கேன். இல்லனா பாவ புண்ணியமெல்லாம் பார்க்கற மனநிலைல நான் இல்ல!” என்று சொல்லி முடித்தான் வினோத்.
அதற்குள் கைப்பேசியில் அவனுக்கு அழைப்பு வரவும் ஓரமாகப் போய் பேசினான். மறுமுனையில் சொல்லப்பட்ட செய்தி அவனுக்குச் சாதகமாக இல்லாமல் போகவே வெறுப்புடன் கைப்பேசியை அங்கே இருந்த மேஜையின் மேல் விட்டெறிந்து, இயலாமையில் தனது தலையைக் கோதிக்கொண்டான்.
அவனுடன் அதற்குமேல் பேச விரும்பாமல் அம்மு அங்கிருந்து செல்ல எத்தனிக்க, ஒரே கையால் அவளைத் தடுத்து, “உங்கிட்ட கொஞ்சம் பேசணும் போய் உட்காரு!” என்றான்.
அப்பொழுதுகூட அவனிடம் பயமோ சந்தேகமோ கொள்ளவில்லை அம்மு. அமைதியாக உட்கார்ந்தாள்.
“கடைசியா ஒரே ஒரு சான்ஸ். நீ இத இப்படியே விட்டுடு. இனிமே ஒரு பிரச்சனையும் வராது” என்றான் வினோத்.
சில நொடிகள் கண்களை மூடி அம்மு யோசிக்க, அன்று அலங்கோலமாக செல்வி அங்கே கிடந்த காட்சி அவளது மனத்திரையில் வந்து மறைந்தது. ஒரு பெண்ணாக அவளால் அதைச் சகிக்கமுடியவில்லை. அதுவும் அன்று பள்ளி விழாவில் இவர்கள் நடனமாடும்பொழுது, நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக வந்திருந்த ராஜவேலு செல்வியைப் பார்த்த பார்வை! அன்று அவளுக்கு அது புரியவில்லை! இன்று புரிந்தது! மனம் வலித்தது! அவனை விட்டுவிடக் கொஞ்சமும் அவளின் மனம் இடங்கொடுக்கவில்லை.
“முடியாது. முடியவே முடியாது!” என அழுத்தமாகச் சொன்னாள் அமிர்தவல்லி. அதுவே அவளுக்கு வினையாகிப் போனது.


