33. சுடும் வினை
இப்படி ஒரு நிலையை உண்மையிலேயே எதிர்பார்க்கவில்லை கோபால். அவனது கண்களில் அப்பட்டமான பயம் தெரிந்தது! தொண்டைக்குழி அடைக்க அவனது வாயிலிருந்து வார்த்தை வருமா என்றே அவனுக்குப் புரியவில்லை.
பேசுவதற்காக அவன் எடுத்துக்கொண்ட சில நொடிகளைக் கூட பொறுக்க முடியாமல் கன்டைனர் மணி, அவனை மேலும் அடிக்கக் கையை ஓங்கினான்.
பதறி, கேவலுடனும் நடுக்கத்துடனும் வந்தன அவனின் வார்த்தைகள். “அடிக்காதிங்க சொல்லிடறேன். தண்ணி குடுங்க ப்ளீஸ்! ப்ளீஸ்!” எனக் கெஞ்சினான்.
ஆதியின் கண்ணசைவில் அவனது கைகளை அவிழ்த்துவிட்டு மணி ஒரு தண்ணீர் பாட்டிலை திணிக்க, ஒரே மூச்சில் குடித்து முடித்தவன் சொல்லத் தொடங்கினான்.
கோபால் ஆதியின் வீட்டில் ஓட்டுநராக வேலைக்குச் சேர்ந்த பிறகு அவனுக்கு ராணியின் மகள் அன்னத்துடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. அது அங்கே யாருக்குமே தெரியாத நிலையில், அம்முவின் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுகள் முடிந்து சில நாட்கள் ஆகியிருந்தபோதுதான் அவர்கள் இருவரும் அவளின் கண்களில் வசமாகச் சிக்கினர். ஆனால் அதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
நாளுக்கு நாள் இது எல்லைகடந்து போகவும், அவளால் அதை சகிக்க முடியவில்லை. தன் வயதையே ஒத்திருந்த அன்னத்தை அவள் மிரட்டி விசாரிக்க, கோபாலை அவள் காதலிப்பதாகவும், தன் கல்லூரிப் படிப்பு முடியும் வரை காத்திருந்து அவன் தன்னை முறைப்படி திருமணம் செய்து கொள்வதாய் சொல்லியிருப்பதாகவும் சொன்னாள். அதுவரை இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லவேண்டாம் என்றும் அன்னம் கேட்டுக்கொண்டதால், அதை அப்படியே விட்டுவிட்டாள் அம்மு.


