top of page

Thirudiya Idhyathai Thirupi Koduthuvidu

Public·4 members

9. தவிப்பு

மல்லி கண் விழித்துப் பார்ப்பதற்குள் மூன்று நாட்கள் கடந்திருந்தன.


இடது காலில் பலத்த எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. உடலில் ஆங்காங்கே காயங்கள் ஏற்பட்டிருந்தன. அவளது தலை தரையில் மோதியிருக்க, வெளிப்படையாகப் பெரிய காயம் இல்லையென்றாலும் உள்ளே ஏற்பட்ட அதிர்வினால் பாதிப்பு இருந்தது. தொடர் மருத்துவ சிகிச்சைக்குப் பிறகே கண்விழித்தாள் மல்லி.


அவளுக்கு விபத்து நடந்த, அந்த இடத்துக்கு மிக அருகிலிருந்த மருத்துவக் கல்லூரியுடன் இணைத்த மருத்துவ மனை ஒன்றில் அவளை முதல் கட்ட மருத்துவ உதவிக்காகச் சேர்த்திருந்தான் தேவா. சுமாயாவும் உடனிருந்தாள்.


அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களில் பரிமளாவிற்கு தகவல் கொடுக்கப்பட, ஜெகனுடன் அவர் அங்கு வந்து சேர்த்திருந்தார்.


சுமா நடந்த சம்பவத்தைப் பற்றி அவர்களிடம் விளக்க, கோபம் கொண்ட பரிமளா, அந்த நேரத்தில் அவளை அலுவலகத்திலிருந்து அங்கே அழைத்து வந்திருக்கத் தேவையில்லையே என சண்டைக்குக் கிளம்பினாள்.


அவரைச் சமாதானப்படுத்திய சுமா மல்லி இருந்த அவசர சிகிச்சை பிரிவிற்கு அவர்களை அழைத்துச் சென்றாள்.


மகளின் நிலையைக் கண்டு கதறிய அந்தப் பெற்றோரைக் காண தேவாவுக்கு மிகவும் வேதனையாக இருந்தது . இப்படி ஆகும் என அவன் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லையே!


மல்லியின் அவசர செயலால் வந்ததுதான் என்றாலும், அவன் அவளிடம் பேசிக்கொண்டிருந்த விஷயம் அவ்வளவு நுட்பமானதாக இருந்ததால், ‘அதை இன்னும் கொஞ்சம் கவனமாகக் கையாண்டிருக்கலாமோ’ என்ற எண்ணம் அவனை வெகுவாக கொன்று கொண்டிருந்தது.


தனது குற்ற உணர்ச்சியால் அவர்களை நெருங்கவே அவனுக்கு அவ்வளவு தயக்கமாக இருந்தது. அதனால் அவர்கள் அங்கே வந்த பிறகு அவன் மல்லியின் அருகே செல்லவே இல்லை. எல்லாவற்றையும் சுமாயா மூலமாகவே செய்துகொண்டிருந்தான்.


அவளை, ‘கேர் ஃபார் லைஃப்’ மருத்துவமனைக்கு மாற்ற தேவா சுமாயா மூலமாகக் கேட்ட பொழுது, இந்த மருத்துவமனையே அவர்களுக்கு ராசியாக இருப்பதாக நினைக்கவே, பரிமளா அதற்குக் சம்மதிக்கவில்லை.


வசதி குறைவான மக்களுக்காக குறைந்த செலவில் மருத்துவ உதவிகள் செய்து வருவதால், ஜெகன் உடல்நிலை மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட சமயம், இதே மருத்துவன்மனையில்தான் பரிமளா அவரைச் சேர்த்திருந்தார்.


தொடர்ந்து அவரது மருத்துவ பரிசோதனைகளையும் இங்கேதான் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர் உடல் நலம் தேறி நடமாடிக் கொண்டிருப்பதே இங்கே இருந்த மருத்துவர்களின் திறமையால்தான் என்று அவர் முழு மனதாக நம்பினார்.


அவர்களுக்கு நன்கு பழக்கமான மருத்துவர்களும் இங்கே இருந்ததால், அவருக்கு இங்கேயே திருப்தியாக இருக்கவும் அந்த மருத்துவமனையிலேயே சிகிச்சையை தொடர விரும்பினார்.


அதற்கு மேல் சுமாவால் அவரை வற்புறுத்த முடியவில்லை, தன்னாலான உதவிகளை மட்டும் அருகில் இருந்து செய்யத் தொடங்கினாள்.


மல்லியின் பெற்றோரையும், தீபனையும் தாண்டி அவளை நெருங்க முடியாமல் தவித்துத்தான் போனான் தேவா.


மல்லி இல்லாமல் ஒரு வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே அவனுக்கு அவ்வளவு பயமாக இருந்தது. அவள் கண்விழிக்கும் வரை ஒவ்வொரு நொடியும் அவ்வளவு பயங்கரமானதாக இருந்தது.


அவள் கண் விழித்து, அவளுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என மருத்துவர்கள் சொன்ன பிறகுதான் அவனுக்கு தன்னைப் பற்றிய உணர்வே வந்தது எனலாம். அதுவரை எந்த ஒரு வேலையிலும் முழு மனதுடன் அவனால் ஈடுபட முடியவில்லை. அதனால் சிற்சில சறுக்கல்களை அந்த ஓரிரு நாட்களிலேயே அவன் சந்தித்துவிட்டான்.


அவனுடைய மிகப்பெரிய பலகீனமாக மல்லி இப்படி மாறிப்போனது பெரும் வியப்பாகவும் அதே சமயம் தனது நிலை குறித்து அவனுக்கு வெட்கமாகவும் இருந்தது.


இந்த நிலை அவனுடைய வளர்ச்சியை எந்த அளவிற்குப் பாதிக்கும் என்பதை நன்று உணர்ந்தவனாக, வெகுவாக யோசித்து, தீர்மானமான ஒரு முடிவுக்கு வந்தான் தேவா.


அது மல்லிக்கு மகிழ்ச்சியைக் கொடுக்குமா? இல்லை துன்பத்தைக் கொடுக்குமா? விடை காலத்தின் கைகளில்!


***


மல்லியை ஐ.சி.யூவிலிருந்து ஜெனரல் வார்டிற்கு மாற்றிய பிறகு, பூவரசந்தாங்கலிலிருந்து அவர்களுடைய உறவினர்கள் ஒவ்வொருவராக வந்து, அவளை நலம் விசாரித்துவிட்டுச் சென்றனர்.


அவர்கள் ஒன்றும் பெரிதாக வசதி படைத்தவர்களெல்லாம் கிடையாது. ஆனாலும் மற்றவரிடம் அளவற்ற அன்பும், அக்கறையும் நிறைந்த மனிதர்கள்.


பெரும்பாலானோர் குறு விவசாயிகள். விவசாயக் கூலி வேலை செய்பவர்கள். சமீபமாக விவசாயம் பெரிதும் பாதிக்கப் பட்டிருப்பதால், சிலர் தினக் கூலிக்கு கட்டிட வேலைக்குச் செல்லத் தொடங்கியிருந்தனர்.


அப்படிதான் அவளைப் பார்க்க வந்திருந்தனர் ஜெகனின் நண்பர் கிட்டுவும் அவரது மனைவி தேவிகாவும்,


“நீ உன்னோட நல்ல மனசுக்கு ரொம்ப நல்லா இருக்கணும்னு நான் சாமிய வேண்டாத நாளே இல்ல. உனக்குப் போய் இப்படி ஆயிடுச்சே ராசாத்தி. டிஸ்சார்ஜ் ஆனதும் நீ பேசாம நேரா நம்ம ஊருக்கு வந்துரு கண்ணு. உன்னோட அம்மாக்காரி நிம்மதியா வேலைக்குப் போகட்டும். என்ன பெத்த தாயாட்டமா நான் உன்ன நல்லா பாத்துக்கறேன்” என்று மல்லியின் கைகளை பிடித்துக்கொண்டு அழுதே விட்டார் தேவிகா.


மல்லியின் மீதான அவரது அன்பைப் பார்த்து, அங்கே மல்லிக்குத் துணையாக இருந்த சுமாதான் அதிசயித்துப் போனாள்.


உடல்நிலை ஓரளவிற்கு முன்னேறி மல்லி வீடு திரும்ப பத்து நாட்கள் ஆனது. அவளை மருத்துவ மனையில் அனுமதித்ததோடு சரி அதன் பிறகு தேவா அவளை வந்து பார்க்கவே இல்லை.


மனம் வருந்தினாள் மல்லி.


ஒவ்வொரு நொடியும் அவன் தன்னை வந்து பார்ப்பான் என எதிர்பார்த்து ஏமாந்து போயிருந்தாள்.


எங்கே அவனிடம் இன்னும் கொஞ்சநேரம் நின்று பேசிக் கொண்டிருந்தால் தன் மனதில் இருப்பது வெளிப்பட்டுவிடுமோ என்ற பயத்தில்தான் அவ்வளவு வேகமாக அந்த ஹோட்டலிலிருந்து, அன்று அவள் வெளியேறியதே!


அம்மு சொல்லாமல், தேவாவை அவளால் மணக்க முடியாது.


அறியாத வயதில் விளையாட்டாகச் செய்த அந்தச் சத்தியத்தை மீற முடியாமல் தவித்தாள் மல்லி. மனசாட்சிப் படி உண்மையாக வாழும் மல்லியைப் பொறுத்தவரை விளையாட்டாகச் செய்தாலும் சத்தியம் சத்தியமே!


அவள் அடிப்பட்டு விழுந்த அந்த நேரம், உன்னை விடவே மாட்டேன் என்பதைப் போல, தன்னை இறுகப் பற்றியிருந்த தேவாவின் கரங்களை நன்றாக உணர்ந்தாள் மல்லி. மயக்க நிலைக்குப் போய்க் கொண்டிருந்ந அந்த நொடியில் கூட அவளது உணர்வுகள் சொன்ன செய்தியில் உயிர் உருகித்தான் போனாள்.


முதல் முறை அங்கே வந்த பொழுது அந்த நீச்சல் குளத்தின் அருகினில் மயங்கிய அவளைத் தாங்கிப் பிடித்ததும் இதே கரங்கள்தான்! தேவாவேதான்! சந்தேகமே இல்லை!


அவளேதான் அவன் வேண்டாம் என்று சொல்லிவிட்டு வந்தாள். இப்பொழுது அவளேதான் அவன் நினைவுகளில் ஏங்கிக் கொண்டிருக்கிறாள்.


தேவாவைக் கைப்பேசியில் தொடர்புகொள்ள முயன்ற பொழுது அந்த எண் உபயோகத்தில் இல்லை என்று வந்துவிட்டது. அவனைப் பற்றி சுமாவிடம் விசாரிக்கவும், அவளுக்குத் தயக்கமாக இருந்தது. எழுந்து ஒரு அடி வைக்கவேண்டும் என்றாலும் அடுத்தவர் துணையை எதிர்பார்க்கும் நிலையில் இருக்கிறாள். தனியே சென்று அவனை எப்படிப் பார்ப்பது?


தீபனுக்கு பொதுத் தேர்வுகள் தொடங்கியிருந்தது. அதுவரை மருத்துவமனை வீடு பள்ளிக்கூடம் என மாற்றி மாற்றி அலைந்து கொண்டிருந்தவன், முழுமையாகப் படிப்பதில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தான்.


அவளது அம்மாவும் விடுப்பு எடுக்க இயலாது அவர் வேலை செய்யும் தனியார் பள்ளிக்கு சென்றாக வேண்டிய சூழ்நிலையில் இருந்தார்.


அவளது அப்பா மட்டும் அவளுக்குத் துணையாக வீட்டில் இருப்பார். மகள் மேல் அளவுகடந்த பாசமும் அக்கறையும் இருந்தாலும் அவரால் அதை வெளிக்காண்பிக்க இயலவில்லை.


மேலும், அவரால் சரிவர பேச இயலாத காரணத்தால் புத்தகமும் கையுமாகவே இருப்பார். மாலை பரிமளா வேலை முடிந்து வந்தவுடன் அவர் நூலகம் சென்றுவிடுவார்.


பேச்சுத்துணைக்குக்கூட ஆளில்லாமல் தவித்த மல்லிக்குத் துணையாக அங்கே வந்து சேர்ந்தாள் சுபர்ணா. சுமாயாவின் நாத்தனார், பூனாவில் பொறியியல் படித்துக் கொண்டிருப்பவள். விடுமுறையைக் கழிப்பதற்காக அண்ணனின் வீட்டிற்கு வந்திருந்தாள்.


சுமாவும் விஜித்தும் அலுவலகம் சென்றுவிடுவதால், வீட்டில் தனியாக இருக்கப் பிடிக்காமல் மல்லியுடனேயே பகல் முழுதும் இருப்பாள் அந்த சுபர்ணா. அலட்டல் இன்றி இயல்பாகப் பழகுவதால் அவள் மல்லிக்கு ஒரு நல்ல தோழியாக ஆகிப்போனாள்.


***


லப் டப் என்ற இதயத்தின் ஒலி போன்று தறியில் புடவை நெய்யும் ஓசை மட்டுமே இதமாக ஒலித்துக்கொண்டிருக்க, நிசப்தமாக இருந்தது மல்லியின் கிராமத்தில் அவர்களுக்குச் சொந்தமாக இருந்த வீடு.


அங்கே நிலவிய ரம்மியமான சூழ்நிலையை கலைப்பது போல அமானுஷ்ய குரலில், “மல்லி! ஏய் மல்லி!” என்றவாறே அங்கே வந்த அம்மு, அங்கே புடவை நெசவு செய்து கொண்டிருந்த ஒருவனைச் சுட்டிக் காண்பித்து, “ஏய் அங்க பாருடி, அவங்கதான் என்னோட ராஜா அண்ணா! அவங்ககிட்ட உன் தாத்தாவோட நோட் புக்கை கேளு” என்றாள்.


அந்த திசையில் பார்த்தாள் மல்லி. நல்ல உயரமாக முறுக்கேறிய தோள்களுடன் கம்பீரமாக அங்கே ஒருவன் தறியில், புடவை நெய்து கொண்டிருக்க, அவனது முகம் மட்டும் இருளில் மறைந்திருந்தது.


அவள் கூர்ந்து அவனையே வெறிக்க, அவனுடைய கண்கள் இரண்டும் வைரமென ஒளிர்ந்தது. அப்படியே இருள் மறைய, அந்த முகம் கொஞ்சம் கொஞ்சமாக அம்முவின் முகமாக மாறிப்போனது!


திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தாள் மல்லி. விடியற்காலை மூன்று மணிதான் ஆகியிருந்தது. அருகில் தூங்கி கொண்டிருந்த அன்னையைப் பார்த்தவள், நாள் முழுதும் உழைத்துக் களைத்திருக்கும் அவரைத் தொந்தரவு செய்ய மனமின்றி விடியும் வரை அப்படியே அமர்ந்திருந்தாள்.


ஆம்! சில நாட்களாக அவளுக்குத் தோன்றாமல் இருந்த அம்முவைப் பற்றிய கனவுகள் மறுபடி அவளை இம்சிக்கத் தொடங்கியிருந்தது. அதுவும் அன்றைக்கு இரவு அவளுக்கு வந்த அந்தக் கனவு நன்றாகவே மனதில் பதிந்துபோனது.


***


அவளது காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு கொஞ்சம் கொஞ்சமாக சரியாகிக் கொண்டிருந்தாலும் நன்றாக நடமாட முடியாமல் தேவாவின் நினைவுகளுடன் துன்பமாக நகர்ந்தன அவளின் நாட்கள்.


மேலும் துன்பம் சேர்க்கவென அவளது அலுவலகத்திலிருந்து வந்திருந்தது ஒரு மின்னஞ்சல். அவள் வேலையில் நிரந்தரம் செய்யப்படவில்லை என்பதை அதில் வருத்தத்துடன் தெரிவித்திருந்தனர்.


மிகவும் உடைந்துதான் போனாள் மல்லி.


மாலை சுமாயா வீடு திரும்பிய பிறகு அவளை அழைத்த மல்லி, “என்ன சுமா இப்படி ஒரு மெயில் அனுப்பியிருக்காங்க. உங்களுக்கு எதாவது தெரியுமா?” என்று கேட்டாள்.


முதலில் என்ன சொல்லுவது என்று திகைத்த சுமா பிறகு, “எனக்கு சரியாத் தெரியல மல்லி! ஆனா புதுசா சில பேர வேலைக்கு அப்பாயிண்ட் பண்ணிருக்காங்க !” என்றாள்.


மனதை கட்டுப்படுத்தவே இயலாமல், “தேவா எப்படி இருக்காரு சுமா?” என்றுகேட்டுவிட, “தேவா இப்ப அங்க வேல செய்யல. மத்தபடி அவர பத்தி இனிமே என்கிட்ட எதுவும் கேக்காத மல்லி, பிளீஸ்” என்று முடித்துவிட்டாள் சுமா.


ஆடித்தான் போனாள் மல்லி.


அம்முவைப் பிரிந்து அவள் படும் துயரைத்தைக் காட்டிலும், நூறு மடங்கு துயரம் அவள் மனதை அழுத்த, சுமாவின் முன்னால் அழுதுவிடக் கூடாது என அவளது கண்ணீரை கட்டுப் படுத்தப் போராடித்தான் போனாள். அதற்குமேல் சுமாவிடம் ஏதும் கேட்கவே தோன்றவில்லை.


ஆனால் அவளாகவே, “ நானும் இனிமே அங்க வேலசெய்யப் போறதில்ல. என்ன ராயல் அமிர்தாஸ்க்கு மாத்திட்டாங்க” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றாள்.


ஒரு இயலாமையுடன் அவள் செல்வதைப் பார்த்துக்கொண்டிருந்தாள் மல்லி.


***


அடுத்த நாள் முத்துராமன் பெரியப்பா அவளுடைய உடல் நலத்தைப் பற்றி விசாரிக்கவென அங்கே வந்தார். விபத்துக்குப் பிறகு அடிக்கடி வந்து அவளைப் பார்த்து விட்டுச் செல்வார்தான்.


ஆனால் இந்த முறை வந்திருப்பது அவளின் திருமணத்தைப் பற்றிப் பேசத்தான் என்பது பிறகுதான் அவர்களுக்குத் தெரிந்தது.


“ஜகா இந்த மல்லி பொண்ணுக்கு எப்பதான் கல்யாணம் பண்ணலாம்னு இருக்க?” என்று பேச்சை ஆரம்பித்தார்.


“பண்ணனும்ண்ணா... உங்களுக்குத் என்னோட நெலம தெரியாதா என்ன? இருக்கறத வச்சுதான் சிம்பிளா செஞ்சு கொடுக்கணும்” என்றார் ஜகன் குளரலாக. அதற்கு மேல் அவர் பேசுவது சரியாகப் புரியாததால் பரிமளா தொடர்ந்தார்.


“எங்க நெலமைக்கு ஏத்த மாதிரி எதாவது இடம் இருந்தா நீங்களேதான் பார்த்து சொல்லுங்களேன் பெரியத்தான். என்னோட பெரியப்பா பேரனுக்கு இவள எதிர் பாக்கறாங்க. ஆனா, கொஞ்சம் நிறைய செஞ்சு கொடுக்க வேண்டியதா இருக்கும். அசல்ல பார்த்தாலும் பிரச்சினை செய்வாங்களோன்னு பயமா இருக்கு” என்றார்.


“அதுக்குதான வந்திருக்கேன்” என மிடுக்காக மொழிந்தவர், “நம்ம மல்லிக்கு என்னம்மா, அவளோட பேருக்குத் தகுந்த மாதிரி அவ மரகதமேத்தான். அவளுக்குனு ஒரு நல்ல வரன் அவங்களா கேட்டு வந்திருக்காங்க” என்றார் ஆர்வத்தைக் கிளரும் விதமாக.


அதில் அதிசயித்த பரிமளா, “அப்படியா யாரு அத்தான் அவங்க? நம்ம சொந்தத்திலயா?” என்று கேள்விகளை அடிக்கினாள்.


“உங்கக்கா வசந்தாவோட பிறந்த வீட்டு வழியில தூரத்து சொந்தம்தான். ஊரும் நம்ம பக்கம்தாம்மா. யாருன்னு கேட்டா ஆடிப் போய்டுவீங்க” என்றார் முத்து.


அதே நேரம் வாக்கர் உதவியுடன் தண்ணீர் குடிப்பதற்காக அங்கே வந்த மல்லி, ‘என்ன ஓவர் பில்ட் அப்பா இருக்கே’ என்று எண்ணினாலும் முழுவதையும் கவனிக்கவில்லை.


பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது அங்கே இருக்கக்கூடாது என்பது அவர்களது பழக்கம். அதனால் அங்கிருந்து சென்றுவிட்டாள்.


“ஐயோ! நீங்க சொல்றத பார்த்தாகக அவங்க ரொம்பப் பெரிய இடம் போலத் தோணுதே. பையன் எதாவது பெரிய கம்பெனில வேலை செய்யறாரா என்ன?” என்று பதறினாள் பரிமளா.


“நீ வேறம்மா, காமடி பண்ணாத” என்று சிரித்துவிட்டு, “காஞ்சிபுரத்துல அருள்பரமேஸ்வரி கடை வச்சிருக்காங்கல்ல, அவங்க குடும்பம்” என்று முத்து சொல்லவும், ஒரு சேர அதிர்ந்தனர் ஜெகனும் பரிமளாவும்,


“அவங்களையெல்லாம் இவருக்கு நல்லாவே தெரியுமே. பட்டுக் கூட்டுறவு சொசைட்டியில பழக்கம்தான். ரொம்ப பெரிய இடமாச்சே?” என பிரமித்தாள் பரிமளா.


“கொஞ்சம் மூச்சு விட்டுக்கோமா. அவங்க வீட்டு பெரிய மகன் வரதனோட பிள்ளைக்குத் தான் நம்ம மல்லியை கேட்கறாங்க. மாப்பிள்ளை பையன் யாருன்னு தெரியுமில்ல? ஊரு மொத்தம் ஜவுளி கடை வச்சிருக்காங்களே, அதோட ஓனர் ஆதிதான்!” என்று முத்துராமன் முடிக்க உண்மையிலேயே மூச்சு முட்டிதான் போனது பரிமளாவிற்கு.


“விளையாடாதீங்க, அத்தான். அவங்க கம்பனிலதான் நம்ம மல்லி சம்பளத்துக்கு வேலைக்கு போகுது. அவங்க போய் மல்லியை கேக்கறாங்களா?” என்றாள்.


நான்கு புறமும் மஞ்சள் தடவிய தாளை ஜகனிடம் கொடுத்த முத்துராமன், “நல்லா பாரு. இதுதான் பையனோட ஜாதகம். மல்லி ஜாதகத்தை அவங்ககிட்ட ஏற்கனவே கொடுத்துட்டேன். ரொம்ப நல்லா பொருந்தி இருக்கு. நாலஞ்சு வருஷமா கல்யாணமே வேண்டாம்னு பிடிவாதமா இருந்தவன், மல்லிய எங்கயோ பார்த்து பிடிச்சுப்போக, அவங்கப்பாம்மா கிட்ட சொல்லி பொண்ணு கேக்க சொல்லிவிட்டானாம்! அவங்களுக்கு அவ்வளவு சந்தோசம். நம்ம ஊர்த் தலைவர் மூலமா என்கிட்ட வந்து பேசினாங்க. இதைவிட ஒரு நல்ல சம்பந்தம் மல்லிக்குக்கிடைக்கவே கிடைக்காது, பரி. இத மட்டும் பேசி முடிச்சிட்டா, ஒருத்தனும் உங்ககிட்ட பிரச்சனைக்கு வரமாட்டான்” என்று அடுக்கிக் கொண்டே போனார் முத்து.


பிரமிப்பு விலகாமல் அந்த ஜாதகத்தை பிரித்துப் பார்த்தார் ஜெகன்.


பெயர் என்ற இடத்திற்கு நேராக, “தேவாதிராஜன்” என்று முத்து முத்தான அழகிய கையெழுத்தில் எழுதப்பட்டிருந்தது.

14 Views

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2026 by KPN Publications

bottom of page