26. செல்வியின் நிலை
“கங்கம்மா கொடுத்த அந்த நோட் புக் அதை அன்னைக்கு நான் கவனிக்கல, மல்லி. ஆனா அது உன் தாத்தாவோடதாதான் இருந்திருக்கணும். அம்மு அத உனக்காகத்தான் விட்டுட்டு வந்திருக்கா. அது தெரியாம அந்த அம்மா அத எங்கிட்ட கொண்டு வந்து கொடுத்துட்டாங்க. கங்கம்மா இப்ப நம்ம ஹோட்டல்லதான் தங்கி இருகாங்க” என்றான் ஆதி. திடுக்கிட்டாள் மல்லி.
“என்ன சொல்றீங்க? அவங்க எப்படி இங்க வந்தாங்க?” என அவள் குழப்பத்துடன் கேட்கவும், “அவங்க இங்க வரல. நான்தான் அவங்களை இங்கே அவங்கள இங்க வரவச்சேன். நான் கங்கம்மாவ இங்க வரவச்சது சில விஷயங்களத் தெளிவா தெரிஞ்சுகதான். செல்வி தவிர மத்தரெண்டு பொண்ணுங்களோட எலும்புக்கூடு கிடைச்சுதே, அதுல ஒருத்தங்க பேரு தனலக்ஷ்மி. இன்னொரு பொண்ணோட பேரு மணிமேகலை” என்று சொல்லிவிட்டு, “இவங்களையெல்லாம் உனக்கு ஞாபகம் இருக்கா?” என்று கெ தட்டான்.
நெற்றியைச் சுருக்கி ஒரு நிமிடம் யோசித்தவள், “ஐயோ! அவங்க எங்க மிஸ் ஆச்சே! தனம் மிஸ்! மேகலா மிஸ்! அவங்க தானா?” என அதிர்ச்சி அடைந்தாள் மல்லி.
“கூல் மல்லி, நான் அம்முவ அங்க இருந்து கூட்டிட்டு வந்ததுக்கு அப்பறம்தான் அதுவும் உடனுக்குடனே இல்லாம அதிக நாள் இடைவெளியில அந்த இரண்டு கொலைகளும் நடந்திருக்கு. போஸ்ட் மார்டெம் செஞ்ச அப்பறம், டீ.என்.ஏ டெஸ்ட் பண்ணை அந்த பொண்ணுங்கதாங்கறத கன்போர்ம் பண்ணி இருக்காங்க. அந்த இரண்டு பொண்ணுங்களுமே அங்கயே அக்கம் பக்கம் இருக்கற கிராமங்கள்ல இலிருந்து அந்த ஸ்கூலுக்கு வேலைக்கு வந்தவங்க. அதுமட்டும் இல்லாம ஆதிக்க ஜாதியைச் சேர்ந்தவங்களாம்.
அந்த ஒரெ காரணத்த வெச்சுட்டு, அவங்க யாரையோ காதலிச்சு ஓடிப்போய் கல்யாணம் செஞ்சுக்கிட்டாங்கனு அங்க எல்லாரும் நம்பறமாதிரி கதைகட்டி விட்டிருக்காங்க. என்ன கொடுமனா, அத அவங்கள பெத்தவங்களே கொஞ்சம்கூட சந்தேகப்படாம நம்பியிருக்காங்க” என்றவனின் முகம் வேதனையை தத்தெடுத்து தானும் அதே தவற்றை செய்ததை நினைத்து.
“அதுல மணிமேகலையோட பேரன்ட்ஸ் மட்டும் போலீஸ்ல புகார் கொடுத்தாங்க. இன்னும் கூட பொண்ணு கைல கிடைச்சா கொலை செய்யற மனநிலைலதான் இருக்காரு அந்த தனலட்சுமியோட அப்பா. இதெல்லாம் கங்கம்ம சொல்லிதான் எனக்கு தெரியும்” என்று கூறிவிட்டு, “லீவு முடிஞ்சு அம்மு அங்க போன அடுத்த நாள்தான் அவ அங்க அந்தப் பயங்கர சம்பவத்த பார்த்திருக்கா” என கங்கம்மா மூலமாக தான் அறிந்துகொண்டதையும் அதன் பிறகு அவர்களது வாழ்க்கையில் நடந்தவற்றையும் விவரிக்கத் தொடங்கினான் ஆதி.
விடுதியில் எல்லா மாணவியரும் இரவு உணவு உண்ட பிறகு எட்டு மணிக்கு அவரவர் இடத்திற்குச் சென்றுவிட வேண்டும் என்பது அங்கே இருக்கும் நடைமுறை. அதன்படி எல்லோரும் சென்று படுத்துவிட, மல்லி இல்லாமல் அங்கே இருக்கவே அம்முவிற்கு பிடிக்கவில்லை. தூக்கமும் வரவில்லை.
விடுதிக்குத் திரும்பியதிலிருந்தே லேசான தலைவலி கண்களில் எரிச்சல் உடல் வலி என அவளுக்கு அசதியாக இருந்தது. ஏதாவது மாத்திரை கேட்டுப்பார்க்கலாம் என அலுவலக அறை நோக்கிப் போனாள். ‘இந்த நேரத்துல அந்த வார்டன் கிட்ட போய் நின்னா திட்டித் தீர்க்குமே’ எனத் தயங்கியவாறு சத்தம் எழுப்பாமல் லேசாக அந்த அறை கதவைத் திறந்தாள் அம்மு.
மெல்லிய கோடு போன்ற அந்த இடைவெளி வழியாகப் பார்க்க அங்கே போடப்பட்டிருந்த சோபாவில் அலங்கோலமான நிலையில் செல்வி கிடத்திவைக்கப்பட்டிருப்பது அவளுக்குத் தெரிந்தது. அத்துடன் உள்ளே இருப்பவர்கள் பேசுவதும் தெள்ளத்தெளிவாகக் கேட்டது.
“இப்ப என்ன சொல்றீங்க மேடம் இந்த பொண்ணு இப்படி பொசுக்குன்னு போகும்னு எனக்குத் தெரியுமா என்ன?” என்ற ஆணின் குரலில் அதிர்ந்தாள் அம்மு. ‘ஐயோ! செல்விக்கு என்ன ஆச்சு?’ என்ற பதட்டம் எழுந்தது.
“இல்ல ராஜவேல்! என் பாதுகாப்புல இருக்கற இந்த பொண்ண இப்படி அநியாயமா சீரழிச்சு கொன்னுட்டீங்களே. நீங்க பண்ணது கொடூரமான செயல். இப்ப நான் இதை எப்படி ஃபேஸ் பண்ணுவேன்? இந்த பொண்ணோட பேரன்ட்ஸுக்கு எப்படி பதில் சொல்லுவேன்?” எனப் பதட்டத்துடன் ஒலித்தது வார்டனின் குரல்.
என்னதான் கண்டிப்பும் கறாருமாக இருந்த பொழுதும், அதுவும் நிர்வாக சீர்கேடுகளை கண்டும்காணாமலும் இருந்தாலும் ஒரு பெண்ணாக அவரது மனம் தாங்கவில்லை போலும்.
‘ஐயோ! செல்வி செத்துபோய்ட்டாளா?’ என அம்மு மனதிற்குள் அதிர அதற்குள், “நீங்க வாய மூடிக்கிட்டு அந்த பொண்ணு ஹாஸ்டல்ல இருக்கப் பிடிக்காம இங்க இருந்து தப்பிச்சு போயிடிச்சுன்னு போலிஸ்ல ஒரு கம்ப்ளைண்ட் கொடுங்க போதும். மத்தத நானே பார்த்துக்கறேன். அத விட்டுட்டு நடந்த உண்மையைச் சொல்லுவேன் அது இதுன்னு உளறினீங்கனா; உங்களையும் குழிதோண்டி புதைச்சிடுவேன்” என அகங்காரமாக ஒலித்தது அவனது குரல்.
“மத்தபடி இங்க யாருக்கும் எதுவும் தெரியக்கூடாது. மூவாயிரம் பேருக்கு மேல படிக்கற பள்ளிக்கூடம் இது. அப்பறம் அடுத்த வருஷ அட்மிஷன் பாதிக்கும்” என அடுக்கிக்கொண்டே போனான் அவன்.
செல்வியின் நிலை கண்டு கோபத்திலும் பயத்திலும் அம்முவின் உடல் நடுங்கத் தொடங்கியது. கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே போகும் எண்ணத்தில், அம்மு அந்தக் கதவின் மீது கைவைத்தவாறே ஏதோ சொல்ல வாயெடுக்க, தொண்டை வறண்டு நாக்கு உலர்ந்துபோய் பேச்சே வரவில்லை அவளுக்கு.
அந்த நேரத்தில் வார்டன் அறை நோக்கிப் போன அம்முவைப் பின் தொடர்ந்து வந்த கங்கம்மா அனைத்தையும் கவனித்திருக்க, பதறிப்போய்,“பாப்பா! அவசரப்பட்டு எதாவது பேசி வைக்காதே” எனக் கிசுகிசுத்தபடி பின்னாலிருது அவளது வாயைப் பொத்தி அவளை அங்கிருந்து இழுத்துச் சென்றார்,.
அவள் திமிரவும், “உஷ்.. அமைதியா இரு. இல்லன்னா அந்த செல்விபாப்பா நிலைமைதான் உனக்கும் வரும். உன்ன இங்கிருந்து உயிரோட வெளிய போக விடமாட்டான் அந்தப் படுபாவி. அப்பன் மந்திரிங்கற திமிறுல ஆடறான்” என அவளை எச்சரிக்கை செய்தவர், சிறிய பெண் ஒரு சமயம் இல்லாமல் போனாலும் ஒரு சமயம் எதாவது உளறி வைத்தால் அது அவளுக்கே ஆபத்தாக முடியலாம் என்ற பயத்தில், “பாப்பா! நீ எதாவது செஞ்சு இந்த ஸ்கூலை விட்டே போயிடு” என்றும் சொன்னார்.
பதில் ஏதும் பேசாமல் முகம் வெளிறிப்போய் நின்றுகொண்டிருந்த அந்தப் பெண்ணைப் பார்க்கவே பரிதாபமாகவும், அதே சமயம் திகிலாகவும் இருந்தது அந்த மூதாட்டிக்கு. அதனால் செய்வதறியாமல் கைகளைப் பிசைந்தவர் எதோ யோசனை தோன்றவும், “உனக்கு யார ரொம்ப பிடிக்கும்?” என்று கேட்டார்.
கொஞ்சமும் யோசிக்காமல், “என்னோட ராஜா அண்ணா!” என்றாள் அம்மு அந்த நிலையிலும்.
அடுத்த நொடியே தனது வலது கையை நீட்டி, “இங்க நடந்தத உன் குடும்பத்துல யார்கிட்டயும் சொல்ல மாட்டேன்னு உங்க அண்ணா மேல சத்தியம் பண்ணு!” என்றார் கறாராக.
“ஐயோ ஆயாம்மா! எங்க அண்ணாகிட்ட சொன்னா அந்த ஆளைப் போலிஸ்ல பிடிச்சி கொடுத்திடுவாங்க!” என அம்மு விட்டுக்கொடுக்காமல் மறுக்கவும், ஏனோ அவளது பேச்சை நம்ப முடியவில்லை கங்கம்மாவிற்கு. அவரது அறிவிற்கு எட்டியவரையில் அவளது நன்மையை நாடி எதையெதையோ பேசி கெஞ்சிக் கூத்தாடி கடைசியில் அவளைச் சத்தியம் செய்ய வைத்துவிட்டார்.
அரைகுறை மனதுடன்தான் சத்தியம் செய்து கொடுத்தாள் அம்மு. பிறகு விடாப்பிடியாக அவளை அவளது அறைக்கு அழைத்துவந்து விட்டுவிட்டுச் சென்றார் கங்கம்மா. இரவு நெடு நேரம் ஆகியும் தூக்கம் வராமல் தவித்தவளின் மனதில் பலவித எண்ணங்கள் தோன்றி அவளை மிரட்டியது.
‘ராஜா அண்ணாவிடம் 'இங்கே படிக்க பிடிக்கல' என்று சொல்லி எப்படியாவது வேறு பள்ளியில் சேர்ந்துவிட வேண்டும்!’ என அண்ணனின்மேல் அவள் கொண்ட நம்பிக்கையில் தெளிவான ஒரு முடிவுக்கு வந்தவளின் மனதில் மல்லியின் நினைவு தோன்றியது.
‘ஐயோ! அவள் இங்கே இருந்தால் ஒரு வேளை அவளுக்கும் எதாவது ஆபத்து வந்துவிட்டால் என்ன செய்வது?’ என்ற பயம் எழ, குடும்பத்தில் உள்ளவர்களிடம் சொல்ல மாட்டேன் என்றுதானே சத்தியம் செய்திருக்கிறோம்! மல்லியிடம் சொல்லலாம் அதனால் தவறில்லை! என்ற எண்ணத்தில் ஒரு காகிதத்தை எடுத்து மல்லியை எச்சரிக்கும் விதமாக அன்று அங்கே நடந்த அனைத்தையும் கோர்வையாக எழுதினாள் அம்மு.
அந்தக் கடிதத்தை மல்லியின் தாத்தாவின் நோட் புக்கில் வைத்து, சேஃப்டி பின் கொண்டு அதை இணைத்து, காலை எழுந்தவுடன் மல்லியின் இடத்தில் வைக்கலாம் என்ற எண்ணத்துடன் வந்து படுத்துக்கொண்டாள். வெகு நேரம் கழித்து தன்னையும் மீறித் உறங்கியும்போனாள். ஆனால் அடுத்த நாள் அதிகமான காய்ச்சலில் சுருண்டு படுத்திருந்தவளை கவனித்த கங்கம்மா அவள் நிலையை வார்டனிடம் சொல்ல, அவளை வந்து பார்த்துவிட்டு அவளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற காரணத்தினால் வரதனை அழைத்து வீட்டிற்கு அழைத்துப் போகச் சொன்னார். அம்முவை அழைத்துவர ஆதியை அனுப்பி வைத்தார் வரதன்.
ஜுரம் கொஞ்சம் கூடக் குறையாமல் இருக்கவே வீட்டிற்குக்கூட அழைத்துச்செல்லாமல் மருத்துவக் கல்லூரியுடன் அமைந்திருந்த பிரபல தனியார் மருத்துவனை ஒன்றுக்கு அம்முவை அழைத்துச் சென்றான் ஆதி.
புற நோயாளிகள் பிரிவில் அவளைப் பரிசோதித்த மருத்துவர் டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் இருப்பதால் அங்கே அனுமதிக்குமாறு சொன்னார். அங்கே மருத்துவப் படிப்பின் இறுதியில் ஹவுஸ் சர்ஜனாக இருந்த வினோத்தை கைப்பேசியில் அழைத்த ஆதி விஷயத்தைச் சொன்னான். உடனே அங்கே வந்த வினோத் அம்முவின் சிகிச்சைக்கான அனைத்து உதவிகளையும் செய்தான்.
அவளுக்கு டெங்கு என உறுதிப்படுத்தப் பட அடுத்து வந்த ஒருவார காலமும் அம்மு மருத்துவமனையிலேயே இருக்கவேண்டியதாக ஆகிப்போனது. மறந்தும் அவள் விடுதியில் நடந்த எதையும் யாரிடமும் சொல்லவில்லை.
அவள் கேட்பதற்கு முன்பாகவே அவளது அண்ணன் அவளை வேறு பள்ளிக்கு மாற்றிவிடவே, அந்தப் பள்ளியில் படிக்கத் தனக்கு விருப்பம் இல்லை என அம்மு சொல்லவேண்டிய நிலை ஏற்படவே இல்லை. முல்லையிலிருந்து கொண்டுவரப்பட்ட புத்தகங்கள் எல்லாம் ஒரு அட்டைப் பெட்டியில் வைத்து பரணில் போடப்பட்டது.
மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய பிறகு, மேலும் சில நாட்கள் ஓய்வு என கிட்டத்தட்ட பதினைந்து நாட்களுக்குப் பிறகுதான் புதிய பள்ளியில் சேர்ந்தாள் அம்மு.
அதன் பின் மல்லியைப் பற்றி தெரிந்துகொள்ள அம்மு முயற்சி செய்ய, அவள் விடுதியிலிருந்து சென்றுவிட்டாள் என்பது தெரிந்தது. அவளது அப்பாவின் கைப்பேசி எண்ணிற்கு முயற்சி செய்ய அது உபயோகத்தில் இல்லை என்று வந்தது.
ஆதி அம்முவிற்காக தெரிந்தவர் ஒருவர் மூலம் மல்லியைப் பூவரசந்தாங்கலில் விசாரிக்கவும், அவர்கள் அந்த ஊரிலேயே இல்லை என்பது மட்டும் தெரிந்தது.
***
இதற்கிடையில் அந்த வருடத்திற்கான படிப்பை அம்மு முடித்துவிட, வேல்விழி பன்னிரண்டாம் வகுப்பிற்கான தேர்வுகளை எழுதிமுடித்திருந்தாள். அப்பொழுதுதான் மகளை ஆதிக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என அருளாளனிடம் பிரச்சினையைக் கிளப்பினார் கயல்விழி. ஏனென்றால் ஆதியின் வளச்சியைக் கண்டு சொந்தத்தில் சிலர் அவனுக்குப் பெண் கொடுக்க ஆர்வத்துடன் இருப்பது தெரியவரவும், அவளுக்கு உள்ளுக்குள்ளே பயத்தைக் கிளப்பியது.
உடனே அருளாளன் மருமகனை அழைத்துப் பேசவும், “உங்க பொண்ண பத்திதான் உங்களுக்குத் தெரியுமே, மாமா. நீங்களெல்லாம் சேர்ந்து என்ன முடிவு செஞ்சாலும் எனக்குச் சம்மதம்!” என கழன்று கொண்டார் அவர்.
“வேலுதான் இன்னும் படிப்பையே முடிக்கலையே! அவளுக்கு கல்யாண வயசும் இல்ல. அதனால அவசரப் படவேண்டாம்” என்ற தந்தையின் வார்த்தைகள் அவளது காதுகளில் விழவேயில்லை.
“நம்ம ஊர் பக்கமெல்லாம் இது சகஜம்தான். உடனே கல்யாணத்தை முடிக்கலன்னா அசல்ல யாரையாவது ஆதி கல்யாணம் செஞ்சுக்கிட்டா சொத்து கைவிட்டு போயிடும்.நீங்க சொன்னா ஆதி தட்டமாட்டான்” எனக் கயல் அதிலேயே நின்றாள்.
சொந்தம் விட்டுப்போகக்கூடாது என உறவுமுறைக்குள் நடந்த திருமணங்கள், சொத்து கைவிட்டு போகக்கூடாது என நடக்கும் அவல நிலையை எண்ணி வருத்திய அருளாளன், வேறு வழியின்றி மகனை அருகில் வைத்துக்கொண்டு கயலின் முன்னிலையிலேயே பேரனை அழைத்து அவனது விருப்பத்தைக் கேட்டார்.
“அப்ப சொன்னதுதான். எனக்கு அம்மு எப்படியோ வேல்விழியும் அப்படிதான். என்னால அவள கல்யாணம் செஞ்சுக்க முடியாது” என முன்பு சொன்ன அதே வார்த்தைகளைத்தான் மறுபடியும் சொன்னான் ஆதி.
அவனது விருப்பத்திற்கு மாறாக ஏதும் செய்ய அருளும் வரதனும் விரும்பவில்லை.
அதில் கொதிநிலைக்குப் போன கயல், “அப்படின்னா கமலக்கண்ணுக்கு என் பொண்ண கல்யாணம் செஞ்சுவைங்க” என விடாப்பிடியாக நிற்க, அவர் ஆயாசத்துடன், “ஏம்மா! அவன் இப்பதானே பீஈ மூணாவது வருஷம் படிக்கிறான்? என்று கேட்டார்.
“பரவாயில்ல அவன் நல்லாப் படிக்கற பையன். இப்பவே கேம்பஸ்ல அவனுக்குதான் வேலையும் கிடைச்சுருச்சே!” என்றாள் கயல்.
தன் வார்த்தைகள் அவளிடம் எடுபடாமல் போகவே மனம் நொந்து, “நீங்களே உங்களுக்குள்ள பேசி முடிவெடுத்துக்கோங்க” என்று ஒதுங்கிக் கொண்டார் பெரியவர்.
மனதிற்குள் சில கணக்குகளைப் போட்ட சுலோச்சனா கணவர் மற்றும் மகனைக் குடைந்தெடுத்து திருமணத்திற்குச் சம்மதிக்க வைத்தார்.
“உனக்கு வேற இடத்துல பொண்ணு பாத்து கல்யாணம் பேசலாமா?” என்ற அருளாளனின் கேள்விக்கு “இல்ல. தாத்தா. இப்ப என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். இன்னும் தொழில்ல முன்னேறணும். இப்போதைக்கு அதுதான் என் ஒரே எண்ணம்” என்று சொல்லிவிட்டான் ஆதி.
அதன் பிறகு கமலக்கண்ணன் வேல்விழி திருமணம் தடபுடலாக நடந்தது. திருமணத்தன்று நாத்தனார் முடிச்சு போட மணமகனின் சகோதரியை அழைக்கவும், ஆசையுடன் மேடையின்மீது ஏறிய அம்முவின் கையைப் பிடித்து கீழே இழுத்த சுலோச்சனாவின் தங்கை மகள் ஜோதி, “உன்னோட ராஜா அண்ணாவுக்குக் கல்யாணம் நடக்கும்போது நீ முந்திக்கோ. நான்தான் எங்க கமல் அண்ணாவுக்கு முறை செய்வேன்.” என்று முறையில்லாமல் பேசி விட்டு மணமேடைக்கு செல்ல எத்தனித்தாள்.
“இதோ பாரு ஜோதிக்கா, எங்க எல்லா அண்ணனுக்குமே நானேதான் தாலி முடிவேன். நீ போய் ஓரமா நில்லு” என அவளை முந்திக்கொண்டு அம்மு செல்ல,
அதைப் பார்த்துக்கொண்டிருந்த லட்சுமி அங்கே பிரச்சினை உருவாவதைத் தடுக்க எண்ணி, மகளை இழுத்துச் சென்று தாத்தாவிற்குத் துணையாக இருக்குமாறு பணித்தார்.
மூத்தவன் இருக்க இளையவனுக்குத் திருமணம் நடத்துவது மனதிற்கு ஒவ்வாமல், உடல்நிலை சரியில்லை என்று சொல்லி எந்தச் சடங்குகளிலும் கலந்துகொள்ளவில்லை அருளாளன். எனவே சரியாக முகூர்த்த நேரத்திற்கு மட்டுமே அங்கே வந்திருந்தார். அதனால் அம்மு அன்னையின் சொல்படி அவருடன் இருந்துகொண்டாள்.
ஆதியும் அவனது தாத்தாவை அங்கே அழைத்து வந்துவிட்டு அவருடனேயே திரும்பச் சென்றுவிட்டான். அம்மு அங்கே இருப்பது பிடிக்காமல் அவளையும் தன்னுடனேயே அழைத்துச்சென்றான்.
அதன் பிறகு குடும்பத்தில் நடந்த குழப்பங்களில் மல்லியை நினைக்ககூட முடியவில்லை அம்முவால்.


