top of page

Thirudiya Idhyathai Thirupi Koduthuvidu

Public·5 members

11. கேள்விக் கணைகள்

‘ஆதியின் எண்ணிற்கா அழைத்திருந்தாள்? இது எப்படி சாத்தியம்? சரியாக அவனுடைய எண்ணை எப்படி அழைத்திருக்க முடியும்? அதுவும் அவனுடைய தனிப்பட்ட எண் வேறு!’


குழப்பத்தின் உச்சத்திற்கேச் சென்றாள் மல்லி. பிறகு நிகழ்காலம் அவளுக்கு உறைக்க, இந்தத் திருமணத்தை நிறுத்துமாறு ஆதியிடமே கேட்டுப் பார்க்கலாமா என யோசித்தவள், அதை நிறைவேற்றும் பொருட்டு வாட்ஸாப்பிலிருந்து அவனது எண்ணைத் தேட, அதிலிருந்த முகப்புப் படத்தைப் பார்த்து அதிர்ந்தாள். அது அவளுடைய படம். அன்றைய பார்ட்டியில் நீச்சல் குளத்தின் அருகில் அவள் உட்கார்ந்திருந்த பொழுது அத்தனை அழகாய் ரசனையுடன் எடுக்கப்பட்டிருந்து.


இத்தனை தொடர் அதிர்ச்சிகளை அவள் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை.


தன்னை சமாளித்துக் கொண்டு அவனுக்கு வாய்ஸ் கால் ஒன்றை செய்தாள்.


எதிரில் ஹலோ என்ற அவனது குரல் மிகவும் பரிச்சயமானதாகத்தான் தெரிந்தது மல்லிக்கு. ஆனால் இருந்த குழப்பத்தில், அவள் அதை ஆராய முற்படவில்லை.


“ஹலோ! நீங்க ஆதி சார் தானே?”


“ம்”


“நான் மல்லி பேசறேன்”


“ம்”


“நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்.”

“ம்”


“எனக்கு இந்தக் கல்யாணத்துல கொஞ்சம் கூட இஷ்டம் இல்ல” என்றாள் மல்லி.


“ஏன்” வேகமாக வந்தது ஆதியின் கேள்வி.


“காரணமெல்லாம் என்னால சொல்ல முடியாது. ஆனா எனக்குக் கல்யாணத்துல விருப்பமில்ல, அவ்வளவுதான்” என மல்லி சொல்லிக்கொண்டிருக்கும் சமயம் எதிர் முனையில் எதோ அரவம் கேட்க, “ஜஸ்ட் எ மினிட்” என்று கூறி விட்டு மல்லியிடம், “நான் கொஞ்சம் பிஸி. உன்கிட்ட அப்பறம் பேசறேன்” எனக் அழைப்பை தூண்டித்தான் ஆதி.


சிறிது நிமிடத்திற்கெல்லாம், “சாரி கொஞ்சம் வேலை வந்துடுச்சு. இப்ப சொல்லு, என்ன காரணம்?” எனக் குறுந்தகவலாக அனுப்பியிருந்தான் அவன்.


“இல்ல, காரணமெல்லாம் என்னால சொல்ல முடியாது. தயவு செஞ்சு புரிஞ்சுக்கங்க ” என மல்லி பதில் அனுப்ப, “என்னால கல்யாணத்த நிறுத்த முடியாது. வேணும்னா நீயே உன் அம்மா அப்பா கிட்ட பேசி நிறுத்திக்கோ. இதுக்கு மேல இது சம்மந்தமா என்ன காண்டாக்ட் பண்ண டிரை பண்ணாத!” எனக் கொஞ்சமும் இரக்கமின்றி பதில் அனுப்பினான் ஆதி.


ஓய்ந்துதான் போனாள் மல்லி.


அவனிடம் பேசி எந்தப் பயனும் இல்லை என உணர்ந்தவள் அந்த உரையாடலைத் தொடர விரும்பவில்லை அப்படியே நிறுத்திவிட்டாள்.


அப்படியே இரண்டு நாட்கள் செல்ல திருமண வேலைகளைத் தொடங்கியிருந்தார் பரிமளா.


“மல்லி! அண்ணாவும் அண்ணியும் உன்னப் பார்க்க நாளைக்கு வரட்டுமான்னு கேட்டாங்க. நான் வரச் சொல்லிட்டேன். நீ கொஞ்சம் ரெடியா இரும்மா” என பரிமளா அவளிடம் சொல்ல, “நான் கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டு இருக்கேன், நீங்க என்னம்மா இப்படி செய்யறீங்க” என மல்லியின் வார்த்தைகள் சூடாக வந்தன.


“என்ன மல்லி இப்படி சொல்ற. அம்மா உன் நல்லதுக்குத்தான எல்லாமே செய்யறேன்? நீ என்னவோ பயத்துலதான் இப்படியெல்லாம் பேசறன்னு நெனைச்சா, நீ பேசறத பார்த்தா அப்படி இல்லயோன்னு தோணுதே! உனக்கு என்னதான்டி பிரச்சினை” என்று பதறிப் போனார்.


“அப்பாவோட ஹெல்த் கண்டிஷன் சரியில்ல மல்லி. தம்பியும் சின்னவன்.

உன்ன நல்ல இடத்துல கட்டிக் கொடுத்துட்டா கொஞ்சம் நிம்மதியா அவனைக் கவனிக்கலாம். நீதான் கொஞ்சம் புரிஞ்சு நடந்துக்கணும்மா. நாங்களும் உனக்கு இப்பவே கல்யாணம் செய்யணும்னு முயற்சியெல்லம் செய்யலயே. ஆனா தானாவே நல்ல இடம் நம்ம தேடி வரும்போது, அத விட எனக்கு மனசு இல்லை. அதுவும் நல்ல மனுஷங்க கிடைக்கறது ரொம்ப கஷ்டம்.


நீ இதுக்கு மேல ஏதாவது தடங்கல் சொன்னா, நான் உன் முகத்திலேயே முழிக்க மாட்டேன் சொல்லிட்டேன். அப்பாவும் இப்பதான் ரொம்ப நாளைக்குப் அப்பரமா சந்தோஷமா இருக்காங்க. தயவு செஞ்சு அதைக் கெடுத்துடாத” என நீளமாகப் பேசி முடித்தார் பரிமளா.


அன்னையின் கூற்றில் இருந்த நியாயம் அவள் மனத்தைச் சுட, மறு வார்த்தை பேசவில்லை மல்லி. திருமண ஏற்பாடுகளையும் தடுக்கவில்லை. தேவாவைப் பற்றி ஆதியிடமே சொல்ல அவளுக்கு துணிவும் இல்லை. பிறகு தேவாவிற்கு எதாவது பிரச்சினை ஆகிவிடுமோ எனப் பயந்தாள்.


திருமணத்திற்கு முன்பாக ஆதியை நேரில் சந்திக்க நேர்ந்தால், கடைசி வாய்ப்பாக அவனிடம் ஒருமுறை பேசிப் பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்தாள் மல்லி!


மறுநாள் வரதனும் லட்சுமியும் அவர்களுடைய வீட்டிற்கு வந்தனர்.

மல்லியும் எந்த மறுப்பும் சொல்லாமல் தயாராகி அவர்களை வரவேற்று சகஜமாகவே பேசினாள். லட்சுமியும் வரதனும் மருமகளைப் பார்த்து மனம் நிறைந்தனர். மகளின் இடத்தை நிரப்ப இப்படி ஒரு மருமகளுக்காகக்தானே அந்தத் தம்பதியர் காத்திருந்தனர் .


பிறகு இரு வீட்டார் அழைப்பு என சம்பிரதாய முறைப்படி இவர்கள் சொந்தத்தில் எல்லோர் பெயரையும் கேட்டுத் தெரிந்து கொண்டு எதுவும் விட்டுப்போகாமல் அச்சடிக்கப் பட்டிருந்த எளிமையான மஞ்சள் நிற திருமணப் பத்திரிகைகளையும், மிக ஆடம்பரமாக அச்சடிக்கப் பட்டிருந்த வரவேற்பிற்கானப் பத்திரிகைகளையும் அவர்களிடம் கொடுத்துவிட்டுச் சென்றனர்.


ஜெகன் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு எந்த ஒரு சிரமத்தையும் அவர்களுக்குக் கொடுக்கவில்லை ஆதியின் குடும்பத்தினர்.


மேலும் பத்திரிக்கை கொடுக்க, மற்ற திருமண வேலைகளுக்கு என எந்த நேரத்திலும் பயன்படுத்திக் கொள்ள ஏதுவாக ஓட்டுநருடன் கூடிய கார் ஒன்றை இவர்களின் உபயோகத்திற்கென அனுப்பியிருந்தார் லட்சுமி.


எவ்வளவு மறுத்தும், “ஜெகன் அண்ணனுக்கு இந்த நேரத்தில் அதிக அலைச்சல் வேண்டாம் அண்ணி. தயங்காம இந்தக் காரை பயன்படுத்திக்கோங்க” என்று சொல்லிவிட்டார். திருமணத்திற்கு வேறு சில நாட்களே இருந்ததால் அவர்களாலும் மறுக்க முடியவில்லை.


வங்கியில் இருந்த மொத்தத் தொகையையும்துடைத்து, மகளுக்கும் மருமகனுக்கும் என நகைகள் வாங்கினார் பரிமளா. மல்லி எவ்வளவு மறுத்தும் அவர் கேட்கவில்லை.


“பைக் வாங்கிக் கொடுக்கலாம்ன்னா மாப்பிள பைக் ஓட்டுறதே இல்லையாம். அதனால வேண்டாம்னு சொல்லிட்டாங்க. மத்த சீரெல்லாம் அவங்களுக்குத் தகுந்தமாதிரி நம்மால செய்ய முடியுமாடி மல்லி! முடிஞ்சத செய்யறோம், தடுக்காத” என்று சொல்லிவிட்டார்.


சீர்வரிசை பாத்திரங்களெல்லாம் முன்பே சிறிது சிறிதாக வாங்கி ஊரிலேயே பத்திரப்படுத்தி வைத்திருந்தார் பரிமளா. அவற்றையெல்லாம் எடுத்து, திருமணத்திற்காகத் தயார் செய்து கொண்டிருந்தார்கள்.


பள்ளி விடுமுறை சமயம் என்பதால் பரிமளாவிற்கும் நிம்மதியாகத் திருமண வேலைகளில் ஈடுபட முடிந்தது. பத்திரிகை கொடுக்க பூவரசந்தாங்கலுக்கும், பரிமளாவின் ஊருக்கும் சென்று வந்தனர்.


அவர்கள் பயந்ததுபோல் பரிமளாவின் பெரியப்பா குடும்பத்திலிருந்து எந்த எதிர்ப்பும் கிளம்பவில்லை. மல்லியை தனது மகனுக்கு கொடுக்காத ஆதங்கத்தில், கொஞ்சம் முணுமுணுத்ததோடு நிறுத்திக் கொண்டார் அவர். ஆதியின் குடும்பப் பின்னணிதான் காரணம் என்பது நன்றாகவே புரிந்தது.


மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போயிருந்தனர் மல்லியின் குடும்பத்தினர்.


***


அனைத்தையுமே கவனித்துக் கொண்டுதான் இருக்கிறாள் மல்லி. ஒவ்வொரு செயலிலும் ஆதியின் குடும்பத்தினர் காண்பிக்கும் அக்கறை அவளைக் குற்ற உணர்ச்சியில் ஆழ்த்தியது.


ஊர் உலகத்தில் பெண்களுக்கா பஞ்சம்?


அப்படி என்ன இவள் அவர்களுக்கு, அவ்வளவு முக்கியம்?


இது அனைத்திற்கும் காரணமான ஆதியின் மேல் அவ்வளவு கோபம் வந்தது மல்லிக்கு.


அவன் தன்னை தேர்ந்தெடுத்தற்கான காரணம் என்னவாக இருக்கும்?


அனைவரும் சொல்வது போல் இவள் அழகாகத்தான் இருக்கிறாள் என்று வைத்துக் கொண்டாலும், இவளை விட அழகான பெண்கள் அதுவும் அவர்கள் தகுதிக்கு ஏற்றாற்போல் எத்தனையோ பேர் இருப்பார்களே?


தேவாவை சந்திக்காமல் இருந்திருந்தால் கூட அவளால் இந்தத் திருமணத்திற்கு முழு மனதுடன் சம்மதித்திருக்க முடியாது. காரணம் அம்மு!


அதுவும் இப்பொழுது அவள் மனம் முழுவதிலும் தேவா நிறைந்திருக்க, அவளால் நிச்சயமாக ஆதியை மணக்கவே முடியாது. இதையெல்லாம் அவனிடம் விளக்கவும் முடியாது. தலையே வெடித்துவிடும் போல் இருந்தது மல்லிக்கு.


ஜெகனும் பரிமளாவும் அவளது காதுகளில் ரத்தம் வரும் அளவிற்கு அவன் புகழ் பாடிக் கொண்டிருந்தனர். அப்படி என்ன உலகத்தில் இல்லாத அதிசய மனிதன் இவன்!?


இதுவரை ஆதியினுடைய புகைப் படத்தை அவள் பார்க்கவே இல்லை என்பது அப்பொழுதுதான் அவளுக்கு நினைவில் வந்தது.


உடனே அங்கே மேசையின் மேல் அவள் தூக்கி எறிந்திருந்த அந்தக் கவரை எடுத்துப் பிரித்து, அதிலிருந்த புகைப் படத்தைப் பார்த்து உறைந்தாள் மரகதவல்லி.


தேவாவாக அவளது மனதையும், ஆதியாக அவளது எண்ணங்களையும் அலைக்கழித்துக் கொண்டிருந்தவன், அவளது அத்தனைக் கேள்விகளுக்கும் ஒரே விடையாக, அதில் புன்னகைத்துக் கொண்டிருந்தான் தேவாதிராஜனாக!


‘அவளுடைய தேவாவா அது!’ நம்பவே முடியவில்லை மல்லியால்.


“நீ என்ன இதுக்கு முன்னாடி பா..ர்த்திருக்கியா? குட் ஜோக்”.


“நான் வேற ஆதி வேற இல்ல”.


“ஹேய் என்னைப்பத்தி உனக்குத் தெரியாது… ஐயா வேர்ல்ட் பேமஸ்மா”


“உங்கிட்ட உண்மைய மட்டும்தான் சொல்வேன் மல்லி!”


அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் நினைவில் வந்தது அவளுக்கு.


ராயல் அமிர்தாசில் அவன் கரங்களில் மயங்கியதும், அதற்கு அடுத்த நாளே அங்கே ஏற்பட்டிருந்த மாற்றங்களுக்கான காரணங்களும் இன்று புரிந்தது.


‘அப்படியானால் அங்கே விபரீதமாகத்தான் ஏதோ நடந்திருக்க வேண்டும்.

ஒருவேளைத் தேவா மட்டும், அன்று அங்கே இல்லை என்றால்?’ இப்பொழுது நினைத்தாலும் உள்ளுக்குள்ளே நடுங்கியது அவளுக்கு.


அவளுக்காக அவன் பார்த்துப் பார்த்து செய்யும் ஒவ்வொன்றையும் நினைக்கும் பொழுது அவனை நினைத்து அவளுக்குள் கர்வம் துளிர்த்தது.


அவன் சொன்னது போல் அவளிடம் உண்மையை மட்டுமே அவன் பேசியிருந்தது அவளுக்குப் புரிந்தது. ஆதி வேறு ஒருவனாக அவள் மனத்தில் இருந்தபொழுது அவளுக்கு எழுந்த குற்ற உணர்வு மொத்தமாக மறைந்து போனது.


ஆனால் திருமணத்தைப் பற்றிய நினைவு வந்தவுடன், அடுத்த நொடியே அத்தனையும் மாறிப்போய் கலக்கத்தைத் தத்தெடுத்தது மனம்.


காரணம், அம்மு சொல்லாமல் அவளால் தேவாவை மணக்க முடியாது.


பிறகு ஒரு முடிவுக்கு வந்தவளாய் தேவாவை அழைத்தாள் மல்லி.


அவன் அவளது அழைப்பை ஏற்கவில்லை. ஆனால், ‘இரண்டு நாட்களில் அங்கே வருகிறேன் நேரில் பேசிக்கொள்ளலாம்’ என்று குறுந்தகவல் அனுப்பியிருந்தான்.


‘நான் உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன் தேவா!’ என அவள் பதில் அனுப்ப, ‘இப்பதான் போட்டோவைப் பார்த்தியா?’ என்ற கேள்வியை பதிலுக்கு அனுப்பியிருந்தான் அவளின் தேவாவாகிய ஆதி.


‘இப்பதான் ‘தேவா’ன்ற தேவாதிராஜனைப் பார்த்தேன்!’ என அவள் பதிலுரைக்க, ‘ஓகே! நான் கொஞ்சம் பிஸி. நேரில மீட் பண்ணலாம்?’ என முடித்துவிட்டான் அவன்.


பதிலுக்கு, ஒரு புன்னகைமுகத்தை அனுப்பிவிட்டு அவனுடைய வருகைக்காக காத்திருந்தாள் மல்லி.


***


மல்லியைப் பார்க்க அவர்கள் வீட்டிற்கு வந்தாள் சுமா. எப்பொழுதுமே சூடிதரில் அவளைப் பார்த்திருக்கிறாள். ஆனால் அன்று எளிமையான ஒப்பனையுடன் திருத்தமாக ஒரு காட்டன் புடவையை உடுத்தி இருந்தவளின் தோற்றம் வித்தியாசமாக இருந்தது.


“மல்லி! உங்களால இப்ப நார்மலா நடக்கமுடியுதா?” என்று கேட்டாள்.


“ம்… கட்ட கூட பிரிச்சுட்டாங்களே. நல்லாவே நடக்கறேன்” என மல்லி பதிலுரைத்தாள்.


பரிமளாவிடம், “அத்த, மல்லிய நான் எங்கூட ஹோட்டலுக்கு கூட்டிட்டு போறேன். இன்னும் ரெண்டு நாளுல கல்யாணம் இருக்கறதால இருக்கறதால அங்க இருக்கற ஸ்பாலயே, மல்லியை ஃபேசியல் செஞ்சுக்க சொல்லி லட்சுமி அம்மா சொன்னாங்க” என்றாள் சுமா.


‘ஐயோ! அவள எப்படி அங்க அனுப்புறது’ என பரிமளா சற்று யோசிக்கவும், அதற்குள் அவரைக் கைப்பேசியில் அழைத்து, லட்சுமியும் சுமா சொன்னதையே சொல்ல,


“இல்ல அண்ணி! உங்களுக்கே தெரிஞ்சிருக்கும், மல்லி அந்த எடத்துக்கு எப்ப போனாலும் ஏதாவது பிரச்சனைல மாட்டிக்கிறா. அதனாலதான் எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு” எனத் தயங்கினாள் பரிமளா.


“ஒரு பிரச்சனையும் வராது அண்ணி. இதுவரைக்கும் நடந்ததெல்லாம் எதோ எதிர் பாராமல நடந்ததுதான். இனிமே அவளுக்கு எந்த கெடுதலும் வர ஆதி விடமாட்டான். நீங்க கவலையே படாதீங்க. ஒரு பிரச்சனையும் வராது” என்று சொல்ல அதற்குமேல் மறுக்க முடியாமல், மல்லியை சுமாவோடு ராயல் அமிர்தாசுக்கு அனுப்பிவைத்தார் பரிமளா .


மல்லி காரிலிந்து இறங்கி உள்ளே செல்லவும் அதே நேரம் சரியாக அங்கே வந்து நின்றது வெள்ளை நிற ஆடி கார் ஒன்று.


அதிலிருந்து இறங்கிய ஓட்டுநர் மிகவும் பணிவுடன் அதன் கதவைத் திறந்துவிட, கம்பீரமாக இறங்கி, வேக எட்டுகளுடன் அவளை நோக்கி வந்து கொண்டிருந்தான் தேவா?! ஆதி?! ராஜன்!?


அவனைத் தொடர்ந்து, அவனது வேகத்திற்கு ஈடுகொடுத்தவாறு வந்துகொண்டிருந்தான் விஜித். அவன் வந்த விதத்தைப் பார்க்கும்போதே மல்லிக்குப் புரிந்தது, அந்த விஜித் ஆதியின் பிரத்தியேக பாதுகாவலன் என்று.


அந்த ஓட்டுனரை எங்கோ பார்த்தது போல் தோன்றவும், மின்னல் வெட்டியதுபோல் அவர் முகம் நினைவில் வந்தது மல்லிக்கு.


அன்று அந்த வீராவை தவிர்க்க நினைத்து, அவள் திரும்பும் பொழுது ஏதோ ஒரு காரில் அவள் இடித்துக் கொண்டாளே, அந்த வண்டியை ஓட்டி வந்தவர்தான் இவர். அன்று அவர் பார்த்த அந்தக் கோபப் பார்வை இன்றும் அவள் நினைவில் அப்படியே இருக்கிறது.


அப்படியென்றால் அன்று அந்தக் காரின் உள்ளே இருந்தது அந்த வீராவின் கையை உடைத்து, எல்லாம் இந்த தேவாதிராஜன்தானா!?


தேவாவின் முகத்தைப் பார்த்துக்கொண்டே அவனை நோக்கி வேகமாக எய்வதற்குத் தயாராகக் கேள்விக் கணைகளுடன்.

14 Views

Members

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2026 by KPN Publications

bottom of page