top of page

Thirudiya Idhyathai Thirupi Koduthuvidu

Public·5 members

17. சுடும் நிஜம்

பால்கனியில் போடப்பட்டிருந்த இருக்கையை நகர்த்திப் போட்டுக்கொண்டு கடலையே வெறித்தவாறு உட்கார்ந்திருந்தாள் மல்லி.


இருளில், காட்சிகள் எதுவும் கண்களுக்கு புலப்படாவிட்டாலும் தெளிவாக இருந்த வானத்தில் நட்சத்திரக் கூட்டங்கள் ஜொலித்துக் கொண்டிருந்தன. கடல் காற்று, இதமாக வருடிக் கொண்டிருந்தது.


அவை எதையும் ரசிக்கும் மனநிலையில்தான் அவள் இல்லை.


தலை வேறு 'விண் விண்' என்று வெடித்து விடுவது போல் வலிக்கவே கையில் வைத்திருந்த வலி நிவாரணி தைலத்தை எடுத்து நெற்றியில் தடவிக்கொண்டாள்.


கையில் ஒரு கிண்ணத்துடன் வந்த ஆதி, “போதும் மல்லி! இப்பவே பாதி பாட்டில காலி பண்ணிட்ட. முகமெல்லாம் எரிச்சல்ல வெந்து போயிடும்! கத்தரி வெயில் வேற” என அதட்டுவது போல் சொன்னான். ஆனாலும் அதில் அவளிடம் அவன் கொண்ட அக்கறையே மேலோங்கி இருந்தது.


மாலையிலிருந்து அவளைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறான். அன்றைய பொழுதின் தொடர் அதிர்ச்சிகளால் துவண்டு போயிருந்தாள் மல்லி. இரவு உணவைக் கூட பெயருக்குக் கொறித்துவிட்டுத்தான் வந்திருந்தாள்.


“தலவலி தாங்கமுடில தேவா” எனத் தலையைப் பிடித்துக்கொண்டே அவள் சொல்ல, அவன் கையில் வைத்திருந்த கிண்ணத்தை அவளிடம் நீட்டினான்.


அழகிய துண்டங்களாக வெட்டப்பட்டிருந்த மாம்பழங்கள் அதில் நிறைந்திருந்தன. அதன் இனிய மனம் அவளைத் தூண்ட, ஒரு துண்டை எடுத்து வாயில் போட்டாள், “வாவ்! செம்மயா இருக்கு மாம்ஸ்! மாம்பழம் என்னோட ஃபேவரைட் தெரியுமா?”


ஒரு நிமிடத்திற்குள் அனைத்தையும் மறந்து ஒரு குழந்தையின் குதூகலிப்புடன் உற்சாகமானவளைப் பார்த்து ஆதியின் இறுக்கமெல்லாம் தளர்ந்து மின்னல் போன்ற புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது அவனது இதழ்களில்.


“இது படப்பைல இருக்கற நம்ம தோப்புல இருந்து வந்த பங்கனப்பள்ளி மாம்பழம்” என அவன் பெருமையுடன் சொல்லிக்கொண்டே, அவளது பின்புறமாக வந்து நின்றுகொண்டு அவளது நெற்றிப்பொட்டுகளில் தனது கட்டை விரலை வைத்து மெதுவாக அழுத்தம் கொடுக்க சங்கடத்துடன் நெளிந்தாள் மல்லி.


“ஷ்... இப்ப என்ன கிஸ்ஸா பண்ணிட்டேன்? இந்த சீன் போடுற? சும்மா இரு மல்லி! அப்பல்லாம் எனக்கு தலைவலி வந்தா, அம்மு இந்தமாரிதான் செய்வா. தலைவலி நல்லா குறையும்” என்று சொல்லிக்கொண்டே அவன் அதை தொடரவும் சில நிமிடங்களிலேயே அவளுடைய தலைவலி மட்டுப்பட்டது.


“ஆமாம்! தலைவலி கம்மியாயிடுச்சு. தேங்க்யூ” என்றவளுக்கு, அவன் அம்முவின் பிரிவு அவனை எந்த அளவிற்குப் பாதித்திருக்கும் என்ற எண்ணம் எழுந்தது.


“அம்மு உங்களுக்கு எவ்வளவு ஸ்பெஷல்னு எனக்குத் தெரியும், தேவா. நீங்க அவள ரொம்ப மிஸ் பண்றிங்க இல்ல?!” என அவனிடம் கேட்கக்கூடாத ஒரு கேள்வியை மல்லி கேட்டுவிட, எப்படி அவன் தன்னை மறந்து அம்முவைப் பற்றிப் பேசினான் என்று அவனுக்கே புரியாமல், அதுவரை இருந்த சுமுகமான மன நிலை மாறி அவன் முகத்தில் கடுமை குடியேறியது.


“ப்சு.. நான் ஒண்ணும் அவள மிஸ் பண்ணல! ஒரு நொடி கூட எங்கள பத்தி யோசிக்காம, போயும் போயும் எங்கிட்ட வேல செஞ்சுட்டு இருந்த டிரைவரை, அதுவும் ஒன்சைடா லவ் பண்ணிட்டு, அவனுக்கு கல்யாணம்னு தெரிஞ்சதும் டிரைன்ல விழுந்து சூசைட் பண்ணிட்டவள நான் ஏன் மிஸ் பண்ணனும்? தெரியுமா மல்லி! அவ அப்பதான் பிளஸ் டூ முடிச்சிருந்தா! மெடிக்கல் சேர எல்லா ஏற்பாடும் செஞ்சு வெச்சுருந்தேன். அதுவும் அப்ப கால் ஃப்ராக்சர் ஆகி நான் ஹாஸ்பிடல்ல இருந்தேன்! தெரியுமா? ச்ச! கூழ் கூழாகி பொட்டலமா கொண்டுவந்து அவள போட்டாங்க மல்லி!”


அன்று அவனுடைய பெற்றோர்கள் அடைந்த வேதனை, அதுவும் அவனது அம்மா லட்சுமி அழுத அழுகை, அனைத்தும் அவன் கண் முன் வந்து அவனைக் கொன்றது. அது அவனது வார்த்தைகளிலும் வெளிப்பட, இப்படிச் செய்துவிட்டாளே என்ற ஆற்றாமையும் வேதனையுமாக கலந்து ஒலித்தது அவனது குரல்.


“சுயநலப் பேய்! போயும் போயும் அவள நான் ஏன் மிஸ் பண்ணனும்?” என வெடித்தான் ஆதி.


அவளது, தோழியைப்பற்றி ‘சுயநலப் பேய்’ என்று அவன் சொன்ன வார்த்தை மல்லியின் மனதை மிகவும் காயப்படுத்திவிட, “தேவா! நீங்க ரொம்ப தப்பா பேசறீங்க. என்னவோ அவள பத்தி தெரிஞ்சமாதிரி பேசறீங்களே! அம்மு, உண்மையிலேயே உங்களோட தங்கைத்தானா? நான் உங்ககிட்ட இத கொஞ்சமும் எதிர்பார்க்கல?” என்றவளின் முகச்சுளிப்பைப் பார்த்தவனின் கோபம் உச்சிக்கு ஏறியது.


“என்னடி உனக்குத்தான் அவள பத்தி எல்லாம் தெரிஞ்சமாதிரி பேசுற! ம்ம்! என்ன தெரியும் உனக்கு?” என கொதித்தான்.


பல வருடங்களாக அவனுக்குள் மையம் கொண்டிருந்த வேதனை, கோபம், என மன அழுத்தம் மொத்தமும் அவளிடம் கரையை கடந்துகொண்டிருந்தது.


“நான் முழுசா மூணு வருஷம் அவகூட குளோசா பழகியிருக்கேன். எனக்கு அவள பத்தி நல்லாவே தெரியும்!” என்ற மல்லியின் பதிலில், ‘தனது தங்கையைப் பற்றி தனக்குத் தெரியாதது அப்படி என்ன அவளுக்குப் பெரியதாகத் தெரிந்திருக்கப்போகிறது?’ என்ற எண்ணம் தோன்ற அவளது வார்த்தைகள் ஆதிக்கு எரிச்சலை மூட்டியது.


“என்னவோ! எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசறியே, ரியலி எ குட் ஜோக்! வெறும் மூணு வருஷம் அவகூட இருந்திருக்க, அதுவும் இரண்டும்கெட்டான் வயசுல! அவ பொறந்த உடனே, அவள மொதல்ல கைல வாங்கினதே நான்தான் தெரியுமாடீ உனக்கு? அப்ப எனக்குப் பத்து வயசு. என்ன விடஅவள பத்தி யாருக்கு தெரியும்? அவளுக்குப் பொறுமைன்றதே துளி கூட கிடையாது!

அவளோட அவசர புத்தியால எவ்வளவு பிரச்சனைல மாட்டியிருக்கான்னு, தெரியுமா உனக்கு? எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேச வந்துட்ட! போடீ சர்தான்” என மூச்சு விடாமல் பேசிக்கொண்டிருந்தவனை, போதும் என்பதுபோல் கையைக் காட்டி நிறுத்தினாள்.


“நீங்க சொன்ன மாதிரி அவள பத்தி முழுசா எல்லாமே எனக்குத் தெரியுமோ தெரியாதோ! ஆனா ஒன்னு மட்டும் தெரியும். இந்த உலகத்திலேயே அவளுக்கு ரொம்பவும் முக்கியமானவங்க அவளோட அம்மா, அப்பா. அவங்க எல்லாரையும் விட அவளோட ராஜா அண்ணா! அப்படி அவ உயிரை விட்டாலும், அது அவங்களுக்காகத்தான் இருக்குமேத் தவிர, நீங்க சொல்றமாதிரி வேற யாரோ ஒருதனனுக்காக நிச்சயமா இருக்காது” நடுவில் எதோ சொல்ல வந்தவனை பேசவே விடவில்லை அவள்.


“அவளோட லட்சியங்களை பத்தி தெரியுமா உங்களுக்கு? அதையெல்லாம் மறந்து அவ ஒருத்தன ஒன் சைடா லவ் பன்னாளா?! வாய்ப்பே இல்ல! அத அவளே, எங்கிட்ட நேர்ல வந்து சொன்னாகூட நான் நம்ப மாட்டேன். நீங்கதான் உண்மைய புரிஞ்சுக்காம, அவள பத்தி ஏதோ தப்பான ஒருமுடிவுக்கு வந்திருக்கீங்க!”


தோழியிடம் அவள் வைத்திருந்த முழுமையான, நம்பிக்கையே மல்லியை அப்படிப் பேசத்தூண்டியது. அந்த நேரம் சில்லென்ற காற்று அவளது கன்னத்தை உரசிச்செல்ல அவளது உடல் நடுங்கி சிலிர்த்தது.


திருமணம் முடிந்தும் அவனிடம் கணவன் என்ற உணர்வு கொஞ்சம் கூட ஏற்படாமல் தங்கையின் தோழியாக மட்டுமே அவள் பேசும் வார்த்தைகள் சுள்ளென அவன் மனத்தைத் தைக்க, மேலும் அவளிடம் எதுவும் பேசப் பிடிக்காமல் அங்கிருந்து உள்ளே சென்றுவிட்டான் ஆதி.


தோழியைப் பற்றிய நினைவிலேயே உழன்றுகொண்டிருந்தவள், மாம்பழம் நிறைந்த கிண்ணத்தைப் பார்க்க அது அவளது பசியைத் தூண்டவே அதில் இருந்த பழத்துண்டுகளை சாப்பிட்டுக்கொண்டே மல்லி அன்றைய தினத்தில் நடந்த ஒவொன்றையும் நினைத்துப் பார்க்கத் தொடங்கினாள்.


அன்று அதிகாலை கிளம்பி டெல்லி வரை சென்று வந்திருக்கிறான். அதுவும் வந்ததும் வராததுமாக அந்த உச்சபட்ச அதிர்ச்சியிலும் எவ்வளவு வேகமாக அவன் செயல்பட்டிருக்கிறான். எத்தனைப் பெரிய ஆபத்திலிருந்து அவன் தன்னை காப்பாற்றியிருக்கிறான் என்பது அவளுக்குப் புரியவும், அதுவும் மனைவி என்ற உரிமை இருந்தும் அவளது மனநிலை உணர்ந்து ஆண்மையின் இலக்கணமாக அவன் காக்கும் கண்ணியம், அவள் மனதின் மிக உயரத்தில் சிம்மாசனமிட்டு ஆதியை ஆட்சிபுரியச் செய்தது.


அவனது ஒவ்வொரு செயலும் அவளிடம் அவன் கொண்டிருக்கும் காதலையும் அக்கறையையும், பறைசாற்ற, ‘அம்முவைப் பற்றிய பேச்சையே தான் இன்று தொடங்கியிருக்கக்கூடாதோ’ என்ற எண்ணம் தோன்றவும், அடுத்த நொடி அவன் கோபத்துடன் அங்கிருந்து சென்றது அவளது நினைவிற்கு வர, அவனைத் தேடி உள்ளே சென்றாள் மல்லி.


தலையணையில் முகம் புதைத்து வேதனையுடன் அவன் படுத்திருப்பதைக் கண்டு வருந்தியவள் அவன் அருகில் சென்று உட்கார்ந்தவாறே, “சாரி மாம்ஸ்! உங்கள வருத்தப்பட வைக்கணும்னு நான் அப்படி பேசல! உண்மையா என் மனசுல இருந்ததத்தான் சொன்னேன்! எனக்கு, அவ எவ்வளவு முக்கியமோ இப்ப அதவிட நீங்க எனக்கு ரொம்பவே முக்கியம்! அவள எனக்கு எவ்வளவு பிடிக்குமோ அதவிட அதிகமாவே இப்ப உங்கள எனக்குப் பிடிக்குது! ஆனாலும் அம்முவ என்னால விட்டுக்கொடுக்கவே முடியாது. நமக்குச் சண்ட வரும்பட்சத்துல இனிமே நாம அவளபத்தி பேசவே வேண்டாம். என்னால உங்கள இப்படிப் பார்க்க முடியல!” எனத் தன் மனதை மறைக்காமல் அவள் சொல்லவும், அவள் மனதில் தனக்கான காதல் இருக்கிறது என்பது அவனுக்குப் புரிய, அதுவரை அவனுக்கிருந்த கலக்கம் மறைந்து போக, அந்த எண்ணம் தந்த உரிமையில் தலையணையிலிருந்து அவனது முகத்தை அவளது மடிக்கு இடமாற்றம் செய்தான் ஆதி அவளை அணைத்தவாறு.


மல்லிதான் கூச்சத்தில் நெளியத் தொடங்கினாள்.


“ப்சு! கொஞ்ச நேரம் சும்மா இரு மல்லி. இன்னைக்கு எனக்கு ரொம்ப டென்ஷனாவே போச்சுi ஐ நீட் பீஸ் ஆஃப் மைண்ட்! ப்ளீஸ்!” என அவன், கெஞ்சலாகச் சொல்லவும் அவள் சற்று தன்னை சமன்படுத்திக் கொண்டு அமைதி காக்க சில நிமிடங்களில் அப்படியே உறங்கிப்போனான் ஆதி.


அவனது அந்தச் செய்கையே சொல்லாமல் சொல்லியது அவனது நிம்மதி அவளிடம்தான் உள்ளது என்பதை! நேரம் செல்லச்செல்ல கால்கள் வலிக்கத்தொடங்கியது மல்லிக்கு.


ஆனாலும் அவளுக்குத் தெரிந்து இரண்டு நாட்களாக அவன் சில நிமிடங்கள் கூட உறங்கவே இல்லை. எனவே அவனது தூக்கம் தடைப்படாமல் இருக்க அப்படியே நகர்ந்து கட்டிலில் வசதியாகச் சாய்ந்து அமர்ந்தவாறே உறங்கத் தொடங்கினாள் மல்லி.


கைப்பேசி இசைக்கும் ஓசை எங்கோ தொலைவில் கேட்பதுபோல் தோன்றவும் பிரிக்கமுடியாமல் ஓடிக்கொண்டிருந்த இமைகளை மிகவும் முயன்று மெல்லத் திறந்தாள் மல்லி.


உட்கார்ந்த நிலையிலேயே இல்லாமல் இழுத்துப் போர்த்தியவாறு வசதியாகப் படுத்திருப்பது புரியவும் எழுந்து உட்கார்ந்தவள் கைப்பேசியை காதுக்குக் கொடுத்தவாறே பால்கனி நோக்கிப் போய்க்கொண்டிருந்த ஆதியைக் கண்டு மெதுவாக அவனைப் பின்தொடர்ந்து சென்றாள்.


அங்கே அவன் பேசிக்கொண்டிருப்பது நன்றாகக் காதுகளில் ஒலித்தது.


“என்ன விஜித்”


““


“ஓஹோ! செல்வியோடதுதானா?”.


“டி என் ஏ டெஸ்ட் பண்ண கொஞ்சம் டைம் எடுக்குமில்ல? எப்படி அவ்வளவு கன்ஃபர்மா சொல்றாங்க?”


““


“என்ன எவிடென்ஸ்?”


““


“ஓஹோ”


“அப்படினா மத்த ரெண்டும்?”


““


“தோரயமா கெஸ் பண்ணியிருக்காங்க?”


““


“ ம்ஹும்!”


“என்ன? லவ்வரோட ஓடிபோய்ட்டதா கேஸ கிளோஸ் பண்ணியிருந்தாங்களா?”


““


மறுபுறம் விஜித்! எதோ சொல்லவுமே அதைக் கேட்டுக்கொண்டிருந்த ஆதியின் முகம் கடுமையாக மாறிக்கொண்டிருந்தது.


“மை காட்”


““


“சரி விஜித்! நான் பார்த்துக்கறேன் பை!” என கைகள் நடுங்க அழைப்பைத் துண்டித்தவன் அருகில் இருந்த சோபாவில் உடல் தளர்ந்துபோய் தொப்பென! விழுந்தான்.


“தேவா, என்னாச்சு?” எனப் பதறியவாறு ஓடிவந்து அவனது கைகளை பிடித்துக்கொண்டு அருகில் உட்கார்ந்து மல்லி கேட்கவும், “மல்லி, அம்முவ நான் சரியா புரிஞ்சுக்கலன்னு நீ சொன்னதுதான் சரி. என் தங்கைய நான் பாதுகாக்க தவறிட்டேன்” என அவனது முகத்தை அவளுக்குக் காண்பிக்காமல் அவள் தோள்களிலேயே புதைத்துக்கொள்ளவும் அதில் ஈரத்தை உணர்ந்தவள் கொஞ்சம் அதிர்ந்துதான் போனாள்.


“மாம்ஸ்! என்ன பிரச்சன ஏன் இப்படி” அழறீங்க எனக் கேட்கவந்து தயங்கியவள், “ப்ளீஸ்! சொல்லுங்க” என்றாள்.


ஒருநொடியில் உணர்ச்சியின் பிடியில் சிக்கிய தனது நிலையை வெறுத்தவனாக முகத்தை வேறு புறமாகத் திருப்பி, உதடுகளைக் கடித்து தன்னை சமன் செய்துகொண்டு இரு கைகளால் முகத்தை அழுந்தத் துடைத்து தன்னிலைக்கு வந்தவன், “ஒண்ணுமில்ல நீ போய் தூங்கு” என்றான்.


“இல்ல தேவா, உங்களுக்கு எதோ பிரச்சனன்னு எனக்கு நல்லாவே புரியுது. இப்படி உள்ளுக்குள்ளையே வச்சிட்டு வருத்தப்படாதீங்க, ப்ளீஸ்! சொல்லுங்க” என அவள் மேலும் அவனை வற்புறுத்தவும் அவளிடம் சொல்லாமல் தன்னை விடமாட்டாள் என்பது புரிய, “இல்ல மல்லி நீ அம்மு பத்தி சொன்னதுல இருந்தே எனக்கு மனசே சரியில்ல. அதுபோல இப்ப விஜித் சொன்ன, சில தகவல்கள கேட்ட பிறகு அம்முவ யாரோ திட்டம்போட்டு, கொலை செஞ்சிருப்பாங்களோன்னு எனக்குச் சந்தேகம் வருது” என அவன் தடுமாறவும் “மாம்ஸ்! கொலையா!?” என ஆடித்தான் போனாள் மல்லி.


“அம்முவ கொலை செய்யற அளவுக்கு என்ன நடந்திருக்கும்?” அவள் அதிர்ச்சி மாறாமல் கேட்கவும்,


“அம்முக்கு தெரிஞ்சு நெறய நடந்திருக்கு மல்லி!” என்றவன், “அம்முவ கொன்னவந்தான் உன்னையும் கொல்ல துடிச்சிட்டு இருக்கான்னு நினைக்கறேன்! நான் எதிர்பார்க்கற தகவல் மட்டும் கிடைக்கட்டும்!” என அடக்கப்பட்ட கோபத்தில் பல்லைக்கடிதான் ஆதி.


அவனுடைய அந்தக் கோப முகம் மல்லியின் மனதில் கிலியை கிளப்பியது.


இதற்கே இப்படி என்றால் ஆதி நினைத்திருப்பதை விட பிரச்சனை மிகப் பெரியது என அவனுக்குத் தெரிய வரும்போது! எப்படி உணருவாள் மல்லி?

20 Views

Members

Developed By:  Krishnapriya Narayan 

© 2019 - 2026 by KPN Publications

bottom of page