16. பாதுகாப்பு அரண்
இரவு வெகு நேரம் மடிக்கணினியையே குடைந்து கொண்டிருந்தான் ஆதி. அவனையே பார்த்துக் கொண்டிருந்த மல்லி எப்பொழுது தூங்கினாளோ, அதிகாலை வழக்கம் போல் கண்விழித்து தயாராகி கீழே வந்தாள்.
வரதன் நடைப்பயிற்சிக்குச் செல்லாமல் அங்கேயே உட்கார்ந்திருந்தார்.
அவருக்குக் காபி கலந்து எடுத்துவந்தவள், அதை அவரிடம் கொடுத்துவிட்டு, “ஏன் மாமா! வாக்கிங் போகலையா?” என்று கேட்டாள்.
“இல்லமா! ராஜா விடிகாலையே கிளம்பிட்டான் இல்லையா! அதனால தனியாப் போகக் கொஞ்சம் சோம்பலா இருந்துச்சு. அதான் உட்காரந்துட்டேன்” என்றார்.
அவன் கிளம்பிப் போனதைக் கூட அறியாமல் உறங்கிய தனது கவனமின்மையை நினைத்து கொஞ்சம் சங்கடமாகிப் போனது மல்லிக்கு.
“என்ன மாமா அவர் விடிகாலைலயே கிளம்பி போயிட்டாரா?” என்ற அவளது குரல் தெளிவில்லாமல் ஒலிக்க, “இதுக்கு போய் ஏம்மா இவ்ளோ தயங்கற? உன்ன டிஸ்டர்ப் செய்ய வேண்டாம்னு, சொல்லாம போயிருப்பான். அவன் எப்பவுமே இப்படித்தான்மா” என்றவர், “அவன் டெல்லிக்கு எதோ அவசர வேலையா போயிருக்கான்மா சாயங்காலமே வந்திடுவான்” என முடித்தார் வரதன்.


