top of page

இணை கோடுகள் UD 5


கோடு - 5

அபோட் ஹோட்டலில் தான் ஒரு சூறாவளியை கிளப்பி இருப்பதை அறியாத அஞ்சு, பார்லருக்கு திரும்பினாள். சில கஸ்டமர்களை கவனித்து விட்டு, சிறிது ஓய்வு கிடைக்கவும், ஹப்பாடா என, கையில் ஒரு புத்தகத்தோடு உட்கார்ந்தாள்.


தீவிரமாக நோட்ஸ் எடுக்கும் தோழியை பார்த்து பெருத்த அதிர்ச்சி கலைக்கு… இருக்காதா பின்னே? அஞ்சுவை நன்கு அறிந்தவளாயிற்றே!


இதற்கு முன் சில முறை, அமெரிக்கா செல்வதைப் பற்றி அஞ்சு சொன்னதை, ஒரு பொருட்டாக எடுக்காத கலை, இப்போது புதிதாக படிப்பின் மீது அவளுக்கு முளைத்திருக்கும் இந்த திடீர் ஆர்வத்தை கவனித்து, “என்னடீ அதிசயம் இது? புக்கும், கையுமா இருக்க, நீ சீரியஸா படிக்கறியா? அப்போ நெஜமாவே அமெரிக்கா போக முயற்சி பண்றியா?” ஆச்சரியம் தாளாமல் வாயை பிளந்தாள்.


கேள்வி தொடுத்த கலைக்கு “ம்ம்…” என்று அஞ்சு வெறுமே தலையசைக்க, அவள் படிப்பதையே நம்ப முடியாத கலைக்கு, தன் முடிவில் அவள் திடமாக இருப்பது அடுத்த அதிர்ச்சியாக இருக்க, “நல்லாத் தானே இருந்தே! எந்த காத்து, கருப்பு அடிச்சுதோ? அந்த ஜந்து பய உனக்கு வேப்பில்லை அடிச்சு, மூளையை கலங்கடிச்சுட்டானோ?” நடப்பதை தாள முடியாமல் புலம்பினாள்.


“புக்கும் கையுமா என்னை இந்த போஸ்ல ஒரு போட்டோ எடுத்து க்ரூப்ல போடு கொரங்கே… ஜண்டு பய அப்படியே ஷாக்காயிடுவான். இரு உன் முகமே இஞ்சி தின்ன கொரங்கு போல தான் இருக்கு.” என்றவள், கைப்பேசியில் தோழியை படம் பிடித்து, “அண்ணாவுக்கு அனுப்பறேன்” என்றிட…


“எரும எரும, எவ்வளோ சீரியஸா பேசிட்டு கிடக்கேன்…”


“ஒய்… ஷாக்கை குறை, எவ்வளவோ பண்ணிட்டேன். படிக்கறது ஒரு பெரிய மேட்டரா? ஒரு மாறுதலுக்கு அதுவும் ட்ரை பண்றனே!” என்று விட்டு, “உனக்கு தெரிஞ்சவங்க யாராவது இந்த பார்ட்டி சாமானுங்களை செகண்ட் ஹாண்டா வாங்கிக்கறாங்களான்னு கேளு. இனி இந்த தொழில் பண்ணலைன்னு முடிவு செஞ்சாச்சு. அது வேற எதுக்கு வீணா இங்க இடத்தை அடைச்சுக்கிட்டு?”

அஞ்சுவின் அடுத்த கூற்றில் மேலும் அதிர்ந்து, “என்னது செகண்ட் ஹாண்டாவா?” நம்ப முடியாமல் கண்ணை உருட்டிய கலை, ஒரே நேரத்தில் இரு அதிர்வுகள் தாக்கியதில், தோழியை ஆராய்ச்சி பார்வை பார்த்தாள்.


அந்த ஊடுருவும் பார்வையின் பொருள் தெரிந்தாலும், கெத்து குறையாமல் “என்ன லுக்?” அஞ்சனா கேள்வி எழுப்ப…

“டீ… நைட்டுல தனியா போறல்ல, நிச்சயமா கருப்பு அடிச்சிருக்கான். இரு அத்தைட்ட, உன்னை மசூதிக்கு அழைச்சுட்டு போய் ஓதிட்டு வர சொல்றேன். எல்லாம் சரியாகிடும்.”


கலையின் பேச்சில், “ஆமா, அடுத்து பில்லி சூனியம், ஏவல்னு உளறுவ...” கடுத்த அஞ்சனாவிடம்,


“செகண்ட் ஹான்ட் என்ற வார்த்தை தமிழ், தெலுங்கு, இங்லீஷ் மட்டுமில்ல உலகத்துல இருக்க எந்த பாஷையிலயும் பிடிக்காத எங்க அஞ்சுவா நீன்னு சந்தேகமா இருக்கு எனக்கு! உனக்கு தான் அடுத்தவங்க உபயோகிச்ச எதையும் வாங்க, கொள்ள, யூஸ் பண்ண பிடிக்காதே! இப்போ நீயே இதெல்லாம் அப்படி விக்கணும்னு சொல்றதை பார்த்தா, எனக்கு அப்படி தான் நினைக்க தோணுது.” என்ற கலையின் குரலில் இன்னுமே அதிர்வு மிச்சம் இருந்தது.


என்றைக்கு இருந்தாலும் இந்த கேள்வி வரும் என அஞ்சு எதிர்பார்த்தது தான்! ஆனாலும், அதை எதிர்கொள்ளும் சந்தர்ப்பத்தில் நிகழ்வுகளின் கனம் தாளாமல் தளர்ந்தவள், ‘எனக்கு செகண்ட் ஹான்ட் பிடிக்காது!’ அதற்கு மேல் அந்த விஷயத்தை நினைக்கக் கூட விரும்பாமல்… “நாம நினைக்கற எல்லாம் நமக்கு நடக்கறது இல்லை கலை. லைஃப்போட ஓட்டத்துல நான் எதிர் நீச்சல் போட விரும்பல.”


“புதுசா என்னென்னவோ புரியாத விஷயமெல்லாம் பேசுற அஞ்சு! இதெல்லாம் நீ சொல்லும் போது தான் என்னால சத்தியமா நம்ப முடியலை. நான் தான், நடக்கறது நடக்காம போகாதுன்னு எல்லாத்தையும் அப்படியே கேள்வி கேட்காம ஏத்துக்கற ஆள்! எல்லா விஷயத்துலயும், அப்பாம்மா விருப்பத்தை விட, உன் வழிக்கு அவங்க வர தான், நீ எப்போவும் எதிர்த்து போராடுவ? உனக்கு என்ன ஆச்சுடீ? இப்படி பொடீர்னு, அப்பா பேச்சைக் கேட்டு வெளிநாடு போக, படிக்க மெனக்கெடுறது எல்லாம் கொஞ்சமும் நம்பும் படியா இல்ல.”


பதிலேதும் தராமல், தன் கை நகங்களை அஞ்சனா பப்(buff) செய்ய, அவள் செயல்களுக்கு விளக்கம் பெறுவதை விட, அவளை தடுக்க வேண்டும் என்ற உந்துதல் கூட, கெள்விகளை தொடுப்பது விடுத்த கலை, எமோஷனல் அட்டாக்கை துவக்கினாள்.


“அந்த மேஜிக் ஐட்டமெல்லாம் ராகவன் தாத்தா உனக்கு ஆசையா கொடுத்ததுங்கறதை மறந்துட்டியா? அதையா வேற வெளியாளுக்கு விக்க போறேன்னு நீ சொல்ற? எப்படி அஞ்சு உனக்கு மனசு வருது? இதை கேக்கவே எனக்கு தாளலை!”


ராகவன் தாத்தாவின் பேரைக் கேட்டவுடன் அஞ்சுவின் முகம் கனிந்தது. சொந்த பேத்தியை போல் தன் மீது பாசம் வைத்த ஜீவன். எவ்வளவு பொறுமையாக மேஜிக் கலையின் சூத்திரங்களை போதித்தார். எத்தனை மகிழ்ச்சியான நாட்கள் அவை! மேஜிக் ட்ரிக்குகளை காணும் சின்ன குழந்தைகள், ஆச்சரியத்தோடு கண் விரிப்பது ஒரு அழகென்றால், அவர்கள் அடையும் மகிழ்ச்சியை கண்டு, அஞ்சுவின் மனதில் எழும் திருப்திக்கும் அளவே இல்லை.


“ஹும்… ஒரு பட்டனை அழுத்தி, அந்த சந்தோஷ நாட்களுக்கே திரும்ப போயிட முடியும்னா, வாழ்க்கை எத்தனை நல்லா இருக்கும்ல கலை?” மெல்ல அஞ்சனா முணுமுணுக்க,


சிறு வயதின் வறுமை தோய்ந்த கருப்பு பக்கங்களை ஒரு நொடி எண்ணிய கலை, “ஹுக்கும்… எனக்கு போக வேணாம் சாமி. சும்மா, கிழிஞ்ச ட்ரெஸ்ஸும், பழைய சோறும் தான் என் ஞாபகத்துக்கு வருது. நிச்சயம், சந்தோஷமா இருக்க இந்த நிமிஷத்தை விட்டுட்டு, பழைய கஷ்ட ஜீவனத்தை புரட்டற ஆசை எனக்கில்ல. உனக்கு மட்டும் என்னவாம்? உன் பாட்டிட்ட, அம்மாட்ட எந்நேரமும் திட்டும், வசவும் தானே கிடைச்சுது! அப்புறம் எதுக்குடீ சின்னபுள்ளயாகணும் லூசுத்தனமா உளறுற?”


அஞ்சனாவின் மனமோ, ‘என்ன சொல்வேன் கலை? பெரியவங்க என் நல்லதுக்கு சொன்னாங்கன்னு புரிஞ்சுக்காம போயிட்டேனா? இல்ல எனக்கு புரியும் விதமா அவங்க சொல்லையா? இப்படி ஒரு நிலைல நிக்கறேனே!’ உள்ளுக்குள் ஓலமிட்டது.


எதற்கும் அசராத தோழியை எப்படி வழிக்கு கொண்டு வர என புரியாமல் கலை பேசாமடந்தையாக அமர்ந்திருக்க, அவளை அடியோடு புரட்டிப் போடவிருக்கும் புயல் மையம் கொண்டு, தீவிரம் அடைகிறது என அறியாத அஞ்சு, “விடுடீ, ‘எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது’ன்னு நீ எப்போவும் சொல்லுவியே? அதை இப்போ பின்பற்றி, இனியும் அப்பாம்மாவுக்கு கஷ்டம் தரக் கூடாதுங்கற முடிவோட, அவங்க எண்ணம் போல நடக்க நினைக்கறேன்.”


“பெத்தவங்க பேச்சை கேக்குறது தப்பில்ல அஞ்சு. என்னையே எடுத்துக்கோ… ப்ளஸ் டூவுக்கு மேல படிக்க வைக்கல. ஒரு பார்லர்ல வேலைக்கு சேர்த்து விட்டாங்க அம்மா. கைத்தொழில் தான் உதவும்னு சொன்னாங்க. எப்படியோ வேலை செஞ்சுட்டே ஒரு டிப்ளமா கோர்ஸ் செஞ்சுட்டு கிடந்தவளை, அத்தை பையனை கட்டிக்கோன்னு மூச்சு விட நேரம் தராம அடுத்த நிலைக்கு தள்ளினாங்க. இன்னைக்கு, நல்லா தான் இருக்கேன். என் கதையில, எங்களுக்கு வேற வழி இல்ல. வாழ்க்கையோட போக்குல போனேன்.”


“ஆனா, உனக்கு அப்படி இல்ல. நிறைய தனித்திறமை உள்ளவ நீ. உன் விருப்பத்தை மதிக்காம, உன்னோட ப்ளஸ் பாயிண்டை மேருகேத்தாம, சும்மா உனக்கு பிடிக்காத ஒண்ணை பண்ண சொல்லி, அவங்க வற்புறுத்தறது தான் தப்பு. ஒவ்வொரு குழந்தையும் ஒரு விதம். அதனோட போக்குல போய் குழந்தைக்கு விருப்பமான, அதுங்களுக்கு கை வர துறையில, அவங்களை மேலே கொண்டு வரணும். அதை விட்டுட்டு, வெறுமே இஞ்சினியர்… டாக்டர் மட்டும் தான் ஒசத்தின்னு அந்த படிப்பை திணிக்க பார்த்தாங்க. மனசு ஒப்பாம அதெல்லாம் செய்ய முடியாம போராடுனவ, இப்படி பொசுக்குன்னு விட்டு கொடுத்தது… எனக்கு நிஜமா ஏத்துக்க முடியலை அஞ்சு.”


“விடு கலை… நம்ம ஜெனரேஷன் முடிஞ்சுடுச்சு. இப்போ சொன்னதை நீ என்னைக்கும் மறக்காத. நாளைக்கே குட்டி ஷ்ரவன், ‘நான் ஒரு பெயிண்டர் ஆகணும்’ இல்ல ‘ரேஸ் கார் ஓட்டணும்’னு, வித்தியாசமான துறையை தேர்ந்தெடுக்கும் போது, நீ கண்டிப்பா அவனை என்கரேஜ் பண்ணனும்.”

“நிச்சயமா அஞ்சு…” அவர்கள் பேச்சு குழந்தை ஷ்ரவனை நோக்கி சற்று திசை மாற, துவங்கிய விவாதம் பாதியில் நின்று, சின்ன வாண்டை குறித்த பேச்சில் ஆழ்ந்தனர்.


இங்கே நுங்கம்பாக்கத்திலோ, மேற்கே சூரியன் மறையும் நேரம் அவ்யுக்தின் ஆடி கார் அபோடினுள் நுழைய, அனைவரும் மரியாதையாக வணக்கம் தெரிவித்தனர்.


சிவாவிடம் ஹோட்டல் விஷயங்கள் பேசிக் கொண்டே தன் அறைக்குள் நுழைந்தவன், தன் கேள்விக்கு பதில் வராமல் போகவே “சிவா…” என்று குரல் கொடுத்தான்.


“சார்…” என்று தன் முன் முழிப்பவனை முறைத்த அவி, “வாட்டர் சப்ளையர் பத்தி கேட்டேன்!”


விடை தர சிவா தடுமாற, “வாட் ஹேப்பன்ட் (what happened) சிவா?”


“சார்…” தயங்கியவன், மெதுவே செக் விஷயத்தில் அன்றைய நிகழ்வுகளை பகிர்ந்து, “அந்த பொண்ணு, நம்ம சூரஜ் கூட பார்கிங்ல பேசிட்டு இருந்தா சார். நமக்கு சூரஜை அத்தனையா தெரியாது. ஆரம்பத்துல விசாரிச்ச வரை அவனுக்கு நல்ல பேரு தான். பட்…”


“சோ ப்ளாக் ஷீப்(so…black sheep) மாட்டிடுச்சு!” அந்த வாக்கியத்தின் த்வனியில் சிவாவுக்கே வேர்த்து கொட்டியது.


“ரிசெப்ஷன்ல தன்னை பத்தின விவரங்களை சொல்லாம அந்த பொண்ணு கவனமா மறைச்சுட்ட மாதிரி இருக்கு சார். சி.சி.டி.வியிலும் இமேஜ் க்ளியரா விழாத படிக்கு, முகமெல்லாம் கொஞ்சம் மறைச்சு தான் உடுத்தி இருக்காங்க.”


அஞ்சனாவின் கேஷுவல் தோற்றமும், ரிசெப்ஷன் பெண் சரி வர கேட்டு பெறாத விவரங்களும் அவளுக்கு எதிராக திரும்பி, பாவம் அனாவசியமாக பிரச்சனையில் மாட்டி கொண்டாள்.


இன்றைய நவீன கருவிகள் படம் பிடித்த ஆதாரங்களை, அவர்களுக்கு சாதகமாக வேறு விதமாக திரித்ததில், சந்தர்ப்பவசமாக செய்யாத குற்றத்தில்… முதலில் அது குற்றமே இல்லையே! அப்படியிருக்க, குற்றவாளியாக சித்தரிக்கப்பட்டு வசமாக சிக்கி கொண்டாள்.


“நாம இத்தனை சீக்கிரம் செக் விஷயம் கண்டு பிடிப்போம்னு அந்த சூரஜ் எதிர்பார்த்து இருக்க மாட்டான்னு நினைக்கறேன் சிவா. ஒரு வேளை என்கேஷ் பண்ண சரியான சந்தர்ப்பத்துக்கு வெயிட் பண்ணிட்டு இருந்தானோ? இன்னும் இந்த அவியை பத்தி அவனுக்கு தெரியலை. நாம விசாரிக்க ஆரம்பிச்சவுடனே பயந்து, செக்கை ரிட்டர்ன் செஞ்சுட்டான் போல.”


“எஸ் சார், ரினவேஷனப்ப, பில்டிங் ஃபுல்லா நாம சி.சி.டி.வி ஃபெசிலிட்டிசை என்ஹான்ஸ் பண்ணது சூரஜுக்கு தெரியலை போல. கார் பார்க்ல, அந்த பொண்ணு கூட பேசினான்னு சொல்லறதை விட அவன் முகத்துல ஒரு ஷாக் ஃபீல் கொஞ்சம் தெரியுது. ஏதோ விவாதம் பண்ணின மாதிரியும் இருக்கு சார்.”


“ஓ… ஒரு வேளை களவாணிங்களுக்குள்ள சண்டையோ? ஹ ஹா… பார்த்தியா சிவா… திருடறப்ப மாட்டல, திருடினதை திரும்ப வைக்கும் போது மாட்டியிருக்கான். சரியான இடியட், உண்ட வீட்டுக்கே துரோகம் பண்ண துணிஞ்ச அவனுக்கு… இந்த அவ்யுக்த் யாருன்னு காட்டறேன். முதல்ல அந்த சி.சி.டி.வி இமேஜை எனக்கு போடுங்க. கம்மான், க்விக்” அவி வேகம் பிடிக்க,... அடுத்த சில நிமிடங்களில் அந்த சி.சி.டி.வியில் பதிவாகி இருந்த படத்தை பார்த்தான்.


காணொளியில் பெண்ணின் முகம் சரியாக தெரியவில்லை. இருவரும், சிறிது நேரம் பேசி விட்டு, அந்த பெண் ஸ்கூட்டியில் பறந்து விட, வியர்வையை துடைத்துக் கொண்டு சூரஜ் நடக்க ஆரம்பிப்பது வரை பார்த்த அவி, சிறிது நேரம் மெளனமாக இருந்தான்.


பாவம் கொளுத்திய வெயிலால் வேர்த்து கொட்டியது கூட தனக்கு பாதகமாக மாறும் என கனவிலும் நினைத்து இருக்க மாட்டான் சூரஜ்.


“யூ ஆர் ரைட் சிவா… சம் ஆர்கியுமென்ட் போல தான் இருக்கு. பாரு, டென்ஷன்ல அவனுக்கு எப்படி ஸ்வெட் (sweat) ஆகுதுன்னு! சூரஜை கேபினுக்கு வர சொல்லுங்க, சாரையே கேட்டுடுவோம்.” அந்த குரலில் சிவா மிரண்டு தான் போனான்.


சில நிமிடங்கள் கழித்து, தான் கொத்துக் கறியாகப் போவது அறியாத சூரஜ், “மே ஐ கம் இன் சார்?” உற்சாகமாக கதவை தட்டினான்.


“எஸ், கம் இன்…” என்ற அவி, கைகளை தலைக்கு மேலே உயர்த்தி, சோம்பல் முறிப்பது போல அமர்ந்தான்.


“எஸ் சார்” என சூரஜ் பவ்யமாக நிற்க, தன் முன்னிருந்த மானிட்டர் ஸ்க்ரீனை அவன் புறம் திருப்பி விட்டான்.


என்ன என்பதாக, கண்களை சுருக்கி திரையை பார்த்த சூரஜ், வாகனங்கள் நிறுத்துமிடத்தில் பொருத்தியிருக்கும் கேமராவின் படங்கள் என புரிந்துக் கொண்டு, தான் ஸ்க்ரீனில் தெரிவதை பார்த்து விட்டு, எதற்கு என புரியாதவனாக, “அட, நம்மை தான் பிடிச்சு இருக்கு!” மெதுவே சொல்லிக் கொண்டே, ‘எதுக்கு இந்த படத்தை ஓட்டுறாங்க?’ என விளையாட்டாக மனதில் எண்ணிக் கொண்டே, என்ன சார் என்பதாக சிவாவை கேள்வியாக பார்த்தான்.


“யாரு சூரஜ் அந்தப் பொண்ணு?” அவியின் கேள்வியில் துணுக்குற்ற சூரஜ், ஒரு வேளை சிவா இப்படி கேட்டிருந்தால் உடனே சரியான பதில் தந்திருப்பானோ!


இன்னொரு களவாணி யார் என்றறியும் நோக்கில் அவி கேள்வி எழுப்பிய த்வனி அறியாமல், அவன் கேள்வி கேட்ட விதத்தில் ஏதோ பேதமாக படவும், அதுவரை உறங்கிக் கொண்டிருந்த சூரஜின் மூளை உஷாராக… “சார்… அவங்களை பத்தி ஏன் கேக்கறீங்க?” பதில் தராமல் இவன் ஒரு கேள்வியை எழுப்பினாலும் குரல் கொஞ்சம் தந்தி அடித்தது.


மிகவும் அழகான பெண்ணான அஞ்சுவை சுட்டி, திடீரென ஒரு ரூத்லஸ் பிசினெஸ் மேன் யாரென கேட்கவும், முன்பு ஹரீஷ் ஆடிய ஆட்டங்கள் வேறு சமய சந்தர்ப்பமாக நினைவுக்கு வரவும், தெரிந்த பெண்ணான அஞ்சு மீதிருந்த அக்கறையில், அவள் நலனை மட்டுமே மனதில் நிறுத்திய சூரஜ் உண்மையில் பயந்து விட்டான். சூரஜின் எண்ணவோட்டத்தை அவி அறியான்.

அதே போல் அவியின் கேள்விகளுக்கான காரணங்களை சூரஜ் அறியான். ‘ஐயோ… இந்தப் பொண்ணு இங்க ஏன் வந்தான்னு கேக்காம போயிட்டோமே! இந்த மாதிரி ஆள் கண்ணுல மாட்டிட்டாளே…’ என தவித்தவன், மௌனம் சாதித்தான்.


அவனிடம் சம்பளம் வாங்குபவன், விடையளிக்காமல் அவன் கேள்விக்கு பதில் கேள்வி கேட்பதா? என்ற ஆதிக்க மனப்பான்மை தலை தூக்கி விட, “கேட்டதுக்கு பதில் மிஸ்டர்.சூரஜ்.” என்ற அவியின் குரலில் அழுத்தம் கூடியது.


சிவாவுக்கோ, ‘இந்த இடியட், ஒழுங்கா பதில் சொல்லாம… ஏற்கனவே கோபமா இருக்கறவரை சொறிஞ்சு விட்டுட்டு இருக்கானே’ என மனம் அடித்துக் கொண்டது.


“சார், என்னோட சிஸ்டர் போல சார் அவங்க!”


“ஓ சிஸ்டர்…” சுழல் நாற்காலியில் ஒரு முறை சுழன்றவன், “அதென்ன சிஸ்டர் மாதிரி? அந்த அவங்களுக்கு பேர் இல்லையா? அனாமிகாவா!” அவன் நக்கலாக கேட்டது புரியாமல், அவனின் கடைசி சொல்லை மட்டும் கொண்டு,...


“அனாமிகா இல்ல சார்… அஞ்சனா!” அவனையும் அறியாமல் சொல்லி விட்டான் சூரஜ்.


“சோ அஞ்சு ஃப்ரம் அடையார் இஸ் அஞ்சனா!” என சிவாவை அர்த்தம் பொதிந்த பார்வை பார்த்து கூறினான் அவ்யுக்த்.


அதை கவனியாமல், “உங்களுக்கும் அஞ்சுவை தெரியுமா சார்?” அவள் வீடிருக்கும் இடம் அவிக்கு தெரிந்திருக்க, ஒரு வேளை அஞ்சுவை அறிந்தவனோ என தப்புக் கணக்கு போட்டு உளறிக் கொட்டினான்.


சிவாவை மீண்டும் ஒரு பார்வை பார்த்த அவியின் முகத்தில் ஒரு அலட்சிய சிரிப்பு குடியேறியது. ‘இதான் போட்டு வாங்குறது! அதான், அவர் முதலாளி, நாமெல்லாம் செக்ரட்டரி’ என சிவா நினைத்துக் கொண்டான்.


இந்த சில நிமிட சூரஜின் உடற்கூறும் மொழியைக் கொண்டு அவன் குற்றவாளி என்பது போல சிவாவுக்கு இப்போது தெரியவில்லை. ‘சி.சி.டி.வீயில் பார்த்த போது அவன் முகத்தில் கொஞ்சம் அதிர்ச்சி இருந்தது போல தெரிந்தது. ஆனால், இங்கே அந்த ஸ்க்ரீனை அவன் பார்த்த போது, முகத்தில் பெரிதாக எந்த மாறுதலும் இல்லையே!’ சூரஜ் கொஞ்சம் விளையாட்டுதனமாக பேசுவான் என்பது அறிந்தவனாக, ‘நிஜமாகவே இவன் வெகுளியா? இல்லை கை தேர்ந்த நடிகனா? மாட்டி விட்டோம் என அறிந்து, சமாளிக்கும் வழியை தேடி இழுத்தடிக்கிறானோ?’ என்ற ரீதியில் சிவாவின் ஆராய்ச்சி நீண்டது.


“அந்த அஞ்சனாவை பத்தி கொஞ்சம் சொல்றது சூரஜ்!”


மீண்டும் முழித்தான் சூரஜ். கார் பார்க்கில் அஞ்சுவிடம் பேசிய சொல்ப நேரத்தில், பரஸ்பர நல விசாரிப்புக்கு பின், அவர்கள் குடும்பம் இப்போது அடையாரில் வசிப்பதுவும், இப்போதெல்லாம் அஞ்சு, பார்ட்டி பிளானிங் செய்வதில்லை என்பது மட்டுமே அறிந்திருந்தான்.


அதை சொல்லும் போது அஞ்சுவின் குரலில் பிசிறு தட்டி, தன்னை தேற்றிக் கொண்ட தொனி தெரிய, ஏனென்று கேட்டதற்கு, தோளை குலுக்கி, “சுப்ரியா மிஸ்ஸை விசாரிச்சதா சொல்லுங்க அண்ணா” என்று கிளம்பி விட்டாள். ‘அவ தான் பார்ட்டி ப்ளான் பண்ணலை அண்ணான்னு சொன்னாளே! இவர் என்னடானா டீட்டெயில்ஸ் கேக்கறார்? ஒரு வேளை இங்க ஏதாவது ஜாப் ஆபர்ச்சூனிட்டிஸ் தேடி வந்தாளோ? இருக்கும் இருக்கும்… இவன்ட் பிளானிங் டீம் ஒண்ணு புதுசா வரதா சிவா சார் நாலு நாள் முன்ன சொன்னாரே? அது சம்பந்தமா தான் அவி சார் விசாரிக்கிறார் போல. இன்டர்வியுவ்ல சொதப்பிட்டளோ? அதான், அப்செட்டாகி அப்படி விரக்த்தியா என்கிட்டே பேசியிருப்பா!’ கேள்வியையும், பதிலையும் தானே மனதில் ஓட்டிப் பார்த்து, ஒரு முடிவுக்கு வந்தவன், அவளுக்கு வரும் வேலை வாய்ப்பை கை நழுவ விடாமல் எப்படியாவது பெற்று தரும் நல்ல நோக்கில் மேலும் உளறினான். தானே கைமா ஆக போவதறியாத சூரஜ்!


“அஞ்சனா, இஸ் வெரி டேலண்டெட் சார். ஆக்சுவலி, என் அக்காவோட எக்ஸ் ஸ்டூடன்ட் தான். அப்படி தான் எங்க ஃபேமிலிக்கு அறிமுகம். அதான், சிஸ்டர் மாதிரின்னு சொன்னேன். என் அக்கா பொண்ணுங்க பர்த்டேஸ்க்கு ஒரு மூணு வாட்டி பார்ட்டி ப்ளானரா எல்லாம் ஃபென்டாஸ்டிக்கா அரேஞ்ச் பண்ணா. இந்த சின்ன வயசுலேயே செம கிரியேட்டிவ் சார். நீங்க இவன்ட் கோவார்டினேட்டரா கண்டிப்பா அஞ்சுவை சூஸ் பண்ணலாம் சார். ஷீ வில் பீ மோஸ்ட் சூட்டட் ஃபார் தி ஜாப்.” சூரஜின் பேச்சைக் கேட்டு அவி, சிவா இருவருமே திடுக்கிட்டு, லூசா இவன் என தமக்குள் பார்வை பரிமாறிக் கொண்டனர்.


விட்டலிடம் எப்போதும் சகஜமாக, மிக ஃபிரெண்ட்லியாக பேசுவான் சூரஜ். அவருமே, ‘நீ என்ன நினைக்கற சூரஜ்?’ என்று பெரும்பாலும், அவன் வாயை பிடுங்கி, அவனுடைய கருத்தையும் கேட்டறிவார். அந்த பரிந்துரையை ஏற்கிறார் இல்லை என்பது எல்லாம் இரண்டாம் பட்சம். அவனை குறைத்து நினைக்காமல், அவன் பேச்சுக்கும் மதிப்பு தரும் விட்டலின் பாங்கு சூராஜுக்கு மிகவும் பிடிக்கும். முதல் நாளே சிவா கூறிய அறிவுரை எல்லாம் காற்றில் பறந்திருக்க, சூரஜ் வாய் பூட்டை அவிழ்த்திருந்தான்.


“ஓகே சூரஜ்… இந்த செக் எப்படி உங்க உடன்பிறவா தங்கை அஞ்சனாவோட கைக்கு போச்சு?” அவள் கொடுத்து விட்டு சென்ற செக்கை நீட்டினான் அவ்யுக்த்.


“என்ன செக் சார்?” என அதைக் கையில் வாங்கிய சூரஜுக்கு சில நொடிகள் சென்ற பின் தான், அவர்கள் முன்பு விசாரித்த காசோலை விவகாரம் என்று புரிய துவங்கியது.


“இது… என்ன கேட்டீங்க? அஞ்சனா கைக்கு? அப்போ வானவில் அஞ்சுவோட கம்பெனியா சார்? கம்பெனி துவங்கின விஷயத்தை இந்த பொண்ணு சொல்லவே இல்ல! கம்பெனி வெச்சுருக்கவ ஏன் இவன்ட்ஸ் செய்ய போறதில்லைன்னு சொன்னா? குழப்பி அடிக்கறா இல்ல?” தன் போக்கில் பேசியவனை, கொலை வெறியாக முறைத்த அவிக்கு பொறுமை பறந்து விட்டது.


“இனஃப் சூரஜ்…” கர்ஜனையாக இருந்த இருக்கையை பின்னோக்கி தள்ளி அவி எழுந்த பாங்கில், சிவாவுக்கே உள்ளம் தடதடத்தது எனில் சூரஜை பற்றி கேட்கவும் வேண்டுமா?



“உன்னையும், உன் கூட்டாளியையும் கையும் களவுமா பிடிச்சு இருக்கோம். எப்போ, எப்படி விட்டல் அங்கிளோட செக் லீஃபை திருடினே? அஃப்கோர்ஸ் அதுக்கான ஆபர்ச்சூனிட்டி அவரோட செகரட்டரியான உனக்கு நிறையவே இருந்தது! விட்டல் அங்கிள் கையெழுத்தை நீ ஃபோர்ஜ் பண்ணியா இல்லை உன்னோட அந்த க்ரியேடிவ் சிஸ்டர் செஞ்சாங்களா? தப்பை செஞ்சுட்டே ஓகே! ஏன் என்கேஷ் பண்ணலை இல்ல அக்கவுண்ட்ல போடல?”

“போட்டா மாட்டிக்குவோம்னு திடீர் ஞானோதயம் வந்துடுச்சோ? அப்படியே விட்டுருந்தா கூட மாட்டியிருக்க மாட்டியே! பட் இப்போ எதுக்கு உன்னோட அந்த... ‘மாதிரி சிஸ்டர்’ செக்கை ரிட்டர்ன் செஞ்சா? ஒரு வேளை பயந்து போய், உனக்கு தெரியாம குடுத்துடலாம்னு தான், இங்க மாறு வேஷத்துல வந்தாளா? கார் பார்க்ல என்ன வாக்குவாதம் செஞ்சீங்க? இது முதல் முறையா இல்ல இதுக்கு முன்னவும் இந்த வேலை செஞ்சுருக்கியா? டெல் மீ சூரஜ்… அவுட் வித் எவ்ரிதிங்…” கையில் இருந்த பேனாவை பொறுமையில்லாமல் மேஜையில் தட்டிக் கொண்டே அடுக்கிய அவ்யுக்த்…

“இவன் பேங்க் அக்கவுண்ட்டை இங்க இவன் வேலைக்கு சேர்ந்த நாள் முதல் தரோவா செக் பண்ண சொல்லு சிவா. சம்பளம் கொடுக்கற முதலாளி மடியில கை வைப்பானா?” வர்க்க பேதம் தலை தூக்க… சூரஜை பஸ்பமாக்க காரியங்களை முடுக்கி விட்டான்.

சின்ன முதலாளியின் ‘செக் லீஃபை திருடினே’ என்பதிலேயே இருதயம் நின்று விடும் போல இருக்க, அடுத்தடுத்த அவியின் கேள்விகள், பேச்சு எதுவும் சூரஜ்ஜின் செவிகளை எட்டக் கூட இல்லை.

“அய்யோ சார்… சார்…” என்றவன், “சார்… எனக்கொன்னும் தெரியாது. விட்டல் சாருக்கு உடம்பு முடியாதப்ப நான் லீவ்ல இருந்தேன்னு, ஏற்கனவே உங்ககிட்ட சொன்னேனே சிவா சார்.” அவனை தனக்கு துணையாக அழைத்தான்.

சிவா… முகம் திருப்பவும், “அந்த தங்கமான மனுஷனோட பணத்தை நான் திருடினேனா? ஐயோ… இல்லவே இல்ல… கிட்டத்தட்ட ரெண்டு மூணு வருஷம் கழிச்சு இன்னைக்கு தான் நான், அஞ்சுவை மீட் பண்றேன். அஞ்சுகிட்ட அந்த செக் எப்படி போச்சுங்கறது எனக்கு தெரியாது சார். நீங்க அவளை கேட்காம, என்னை சந்தேகப்படறது, நல்லா இல்ல சார்…” கிட்டத்தட்ட புலம்பி கதறியவனை பார்க்கவே சிவாவுக்கு பாவமாக போனது.

“ஓகே சூரஜ்… உனக்கு எதுவும் தெரியாது. அந்த அஞ்சுவோட அட்ரெஸ் மட்டும் சொல்லு. இங்க வர வெச்சு அவளையே கேட்டுடலாம்.”

“அஞ்சுவோட அடையார் அட்ரெஸ் எனக்கு தெரியாது சார். இங்க இண்டர்வியூவுக்கு கொடுத்த சீ.வியில் இருக்குமே?”

“ஷட்டப் சூரஜ். ஐ ஹாவ் ஹேட் இனஃப் ஆஃப் திஸ் நான்சென்ஸ். innocent until proven எல்லாம் அவ்யுக்த்தோட கோர்ட்ல செல்லாது. இங்க you will be treated as guilty until proven otherwise. So end that act and spit out the truth… and only the truth!” அவி கர்ஜிக்க, முழுதும் உடைந்து நொறுங்கினான் சூரஜ்.

“டீல் வித் ஹிம் சிவா… அடுத்த முறை என் முன்ன இவன் நிக்கும் போது, எல்லா விவரமும் வந்திருக்கணும்.” என்ற அவி வெளியேற, யாருக்கோ சிவா கைப்பேசியில் அழைப்பு விடுக்க,

“சார்… சார் சத்தியமா எனக்கொண்ணும் தெரியாது” செல்பவனை தொடர்ந்து போன சூரஜ் கெஞ்சி கொண்டிருக்க, அறைக்குள் ஆஜானுபாகுவான நான்கு ஆட்கள் மளமளவென நுழைந்தனர்.

“உங்களுக்கு ஒரு மணி நேரம் டைம்!” என்று விட்டு அவி போய் விட, அவர்களுடைய செக்யூரிட்டி டீம் ஆட்களிடம் கட்டளை பிறப்பித்திருக்கிறான் என்பது உரைக்கவும், பேந்த பேந்த மிரண்டு விழித்த சூரஜ்ஜின் புஜம் பற்றிய சிவா,

“என் ரூமுக்கு போகலாம்” என முன்னே நடக்க, “ம்ம்…” என்று அதில் ஒரு ஆள் உறும, மறுக்கும் எண்ணத்தை கை விட்டு சிவாவை தொடர்ந்தான் சூரஜ்.

சிவாவின் அறையை அடைந்ததும், “நீங்க இங்கேயே இருங்க ஸ்டீஃபன், தேவைன்னா கூப்பிடறேன். வா சூரஜ்” என அறையினுள் நுழைந்தான்.

“உக்காரு” என இருக்கையை காட்டியவன், அங்கிருந்த காப்பி மெஷினில் இருந்து சூடான காப்பி ஒன்றையும், ஒரு கண்ணாடி க்ளாசில் குளிர்ந்த நீரையும் கொண்டு வந்து சூரஜ்ஜின் முன் வைத்தான்.

“ம்ம்… முதல்ல குடி,” என்றவன் தனக்கும் ஒரு காப்பியை நிரப்பிக் கொண்டு வந்து தன் சேரில் அமர்ந்து அங்கிருந்த கேமராவை சூரஜ்ஜை நோக்கி திருப்பி வைத்தான்.

“தப்பு செஞ்சுட்ட சூரஜ். நீ திருடினே இல்லைங்கறது ஒரு பக்கம் இருக்கட்டும், உனக்கு முதல்லயே நான் அட்வைஸ் செஞ்சேன். ‘விட்டல் சார் பீரியட் இஸ் ஓவர். இப்போ நீ ஸ்வர்ணகீர்த்தியோட எம்ப்ளாயீ, அதுக்கு தக்க மாதிரி நடந்துக்கோ’ன்னு வார்ன் பண்ணியும், இன்னைக்கு சின்னவர்ட்ட அப்படி மரியாதை இல்லாம பேசிட்டே!”

“ஏற்கனவே உன் மேல கொலை வெறியில இருந்தவரை இன்னும் உசுப்பேத்திட்டே. துரோகிகளை அவர் எப்படி நடத்துவார்னு நான் சொல்லவும் வேணுமா? விட்டல் சார் பையன் பட்ட பாட்டை நேர்லயே பார்த்தும் புத்தி வராம ஆழம் தெரியாம காலை விட்டுட்டே.” பேசி முடித்த சிவா ஊடுருவும் கூர் பார்வை பார்க்க… உண்மையில் சூரஜ்ஜின் நிலை பெப் பெப் பேவாக தான் இருந்தது.

அவனுக்கு தலை, வால் புரியவில்லை. “எப்போவும் போல இன்னைக்கு காலையில வேலைக்கு கிளம்பினேன். கொடுத்த வேலையை சிவனேன்னு பார்த்துட்டு, சீட்ல இருந்தவனை இவங்களா கூப்பிட்டாங்க. இப்போ என்னென்னமோ சொல்லி, என்னை பெரிய குற்றவாளி ரேஞ்சுக்கு அடியாள் வெச்சு மிரட்டுறாங்களே! ஐயோ கடவுளே… இது நிஜமா?” தன்னை கிள்ளி கொள்ள, வலிக்கவும், “அப்போ நிஜமாவே வம்புல மாட்டிட்டேனா? ஆண்டவா, என்னை காப்பாத்து" மனதுக்குள் புலம்புவதாக எண்ணி, வாய் விட்டு கதறி விட்டான்.

“உன் நடிப்பு நம்பி நான் ஏமாந்தது போதும் சூரஜ். ஒழுங்கா நடந்ததை மறைக்காம சொல்லிடு. ஆயிரம், ரெண்டாயிரம் இல்ல… இது, இருபத்தியஞ்சு லட்சம் பண மோசடி. செக் ஃபோர்ஜரி எல்லாம் பெரிய அஃபன்ஸ். இனி, நீ வேற எங்கேயும் வேலை பண்ண முடியாத மாதிரி அவி சார் செஞ்சுடுவார். ஜஸ்ட் உண்மையை சொல்லு, உன் மேல கேஸ் ஃபைல் ஆகாம பார்த்துக்க முடியுதான்னு பார்க்கறேன். அட்லீஸ்ட் வேற எங்கானும் வேலையாவது கிடைக்கும், நீ பொழைச்சுக்கலாம்!”

“சார்,” என சடாரென கீழே விழுந்தவன், மேஜையின் அடியில் சிவாவின் காலை கெட்டியாக பற்றி, “எனக்கொண்ணும் தெரியாது சார். வெச்சு செஞ்சுடுவாருன்னு பயமுறுத்தாதீங்க. நான் டம்மி பய… காப்பாத்துங்க,” நிறுத்தாமல் அதையே திருப்பி சொன்னான்.

“ஏய் சூரஜ்… எழுந்திரி… கம்மான் கெட் அப் மேன்…” சிவாவின் குரலுக்கு எதிர்வினையே இல்லை… “யூ லீவ் மீ வித் நோ சாய்ஸ்… செக்யூரிட்டி டீம் கூப்பிட போறேன்.”

இதில் கலவரமுற்று, “வேணாம் சிவா சார்…” என்ற அலறலோடு ஒரு வழியாக சூரஜ் எழ, “முதல்ல உக்கார்…” நீரை அருந்துமாறு அவன் புறம் கிளாசை நகர்த்தியவன், சூரஜ் நீரை பருகி, கைக் குட்டையில் முகத்தை அழுந்த துடைக்கும் வரை அமைதி காத்தான்.

கேமராவை இயக்கும் முன், “நான் கேட்கற கேள்விக்கு உண்மையான பதிலை மட்டும் சொல்ற, இந்த ரெக்கார்டிங்கை சின்னவர் பார்ப்பார்…” மிரட்டி விட்டு, மீண்டும் விட்டல் தாசின் இறுதி நாட்களை சுற்றி கேள்விகளை துவக்கினான்.

“சிவா சார், நான் உங்க அளவுக்கு எல்லாம் சின்சியர் சிகாமணி இல்ல. இந்த வேலையே எங்க தாத்தா முகத்துக்கு பார்த்து தான் விட்டல் சார் போட்டு தந்தார். என் தாத்தா இங்க சவுத் குக்கிங் செக்க்ஷன்ல, நாப்பது வருஷமா வேலை பண்ணவர். பி காம் படிச்சுட்டு, பேருக்கு ஒரு எம்.பி.ஏ., முடிச்ச எனக்கு பெருசா வேலை ஏதும் செட் ஆகலை. ஒரு முறை விட்டல் சார்ட்ட, என் பேரனுக்கு வேலை ஏதாவது தாங்கன்னு என் தாத்தா கேட்டார்.”

“அப்போதைக்கு ஏதோ செக்ரட்டரி வேலை மட்டும் தான் காலியா இருக்குன்னு, முன் அனுபவம் இல்லாத என்னை நேரா அதுல உக்கார வெச்சுட்டாங்க. விட்டல் சார், எப்போவும் லீனியன்ட். நான் சரியா வர்க் பண்ணலைன்னாலும், அவருக்கு ரொம்ப வருஷமா பெர்சனல் டைபிஸ்ட்டா இருக்க கலா மேம் கொஞ்சம் சமாளிச்சுப்பாங்க. கொஞ்சம் கொஞ்சமா வேலையை கத்துட்டு ஓரளவுக்கு தேறிட்டேன். ஆறு மாசம் முன்ன, தாத்தாவுக்கு கொஞ்சம் உடம்பு முடியலைன்னு, அவர் காலத்துலேயே எனக்கு கல்யாணம் செஞ்சுடலாம்னு… வீட்ல தீவிரமா இறங்க, அடிக்கடி பொண்ணு பார்க்க அதுக்கு இதுக்குன்னு கொஞ்சம் லீவும் போட்டேன்.”

“அப்படியே நான் வரலைன்னு சார் காதுக்கு போனாலும், என் தாத்தாவை பேச வெச்சு, சார் எதுவும் என் மேல ஆக்ஷன் எடுக்காம பார்த்துப்பேன். இப்படி இருக்க, எனக்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆச்சு. நிச்சயத்தார்த்தம், பத்திரிக்கை கொடுக்கன்னு நிறைய பர்மிஷன் எல்லாம் எடுத்தேன். சார், பெருசா கண்டுக்க மாட்டார். என் தாத்தா முகத்துக்கு பார்த்தார். என் விளையாட்டுத்தனம் என்னை மாற விடலை. கல்யாணத்துக்கு நேர்ல வந்து விட்டல் சார் ஆசிர்வாதம் செஞ்சப்ப, ‘குடும்பஸ்தன் ஆகிட்ட. இனியாவது ஒழுங்கா வேலையை பாரு’ன்னு என்னோட நெருங்கின சொந்தங்க முன்ன சொல்லிட்டாரா...”

“ஹனிமூன் மட்டும் போயிட்டு உடனே வேலைக்கு சேர சொல்லி என் அம்மா ரொம்ப ப்ரஷர் போட்டதுல, நானும் ஒழுங்கா இருக்கத் தான் நெனச்சேன். ஆனா, அதுக்குள்ள தாத்தாவுக்கு உடம்பு முடியாம போகவும்… ஹனிமூன் ட்ரிப்பை பாதியோட கட் ஷார்ட் செஞ்சு, சென்னைக்கு திரும்பி ஹாஸ்பிடல், வீடு, அப்பப்ப வேலைன்னு சுத்தினேன்.”

“இந்த சமயத்துல விட்டல் சார் சொல்லித் தான், தாத்தாவை கேரளாவுல ஒரு ஆயுர்வேதா சென்டருக்கு கூட்டிட்டு போனோம். சாரே, அங்க கால் செஞ்சு, எங்களை நல்லா கவனிக்க சொல்லி கேட்டிருந்தார். மூணு வாரம் லீவ் சாங்க்ஷன் செஞ்சார். அப்படி பட்ட கருணை உள்ளம் கொண்டவர் அட்மிட்டான விஷயமே எனக்கு ரெண்டு நாள் கழிச்சு தான் தெரியும்.”

“அது கூட, இங்க ஆஃபீஸ்ல இருந்து போன் வந்த பின்ன தான். அதுக்குள்ள தினேஷ் சார், வக்கீல் சார் எல்லாம் வந்து டேக்கோவர் அது இதுன்னு இங்க பேசினதுல, என் லீவ் கேன்சல்னு சொல்லிட்டதுல, கேரளாவுல இருந்து கிளம்பி வந்தேன்.”

“வர்க்கர்ஸ் யூனியன் யாருக்கும் வேலை போக கூடாதுன்னு போராட்டம் செஞ்சதுல ஒரு ரெண்டு நாள் இங்க ஏக களேபரமா இருந்தது. நிச்சயம் ஹோட்டல் கை மாறுது, எல்லா பேப்பர் வர்க்கும் உடனே ஹான்டோவர் பண்ணுங்கன்னு தினேஷ் சார் எம்பலாயிஸ்கிட்ட பேசின பிறகு, அதுல பிசி ஆகிட்டேன்.”

“அப்புறம் புது க்ரூப் முழு பொறுப்பும் எடுக்க போற நேரத்துல சார் தவறிட்டார். அதுல டேக்கோவர் கொஞ்சம் டிலேயானப்ப தான் என் தாத்தாவுக்கும் ரொம்ப சீரியஸ் நிலைமை. எப்படியும் போறவரை பிடிச்சு நிறுத்த முடியாது. பட், பாட்டி எவ்வளோ முடியுமோ அத்தனை ட்ரீட்மெண்ட்டும் பண்ண சொல்லி அவங்க எங்களை ரொம்ப படுத்தினதுல, என் பங்கு வேலை முடிச்சுட்டேன், லாஸ் ஆஃப் பே போட்டுக்குங்கன்னு ஜி எம்கிட்ட சொல்லி லீவ் போட்டேன். ட்ரீட்மென்ட் பயனளிக்காம என் தாத்தா போய் சேர… எல்லா துக்க வேலையும் முடிஞ்சு ஹப்பாடான்னு டியூட்டிக்கு வந்தா, இங்க எல்லாமே புது ஆளுங்க. நீங்க ஏதேதோ பேசி பயமுறுத்துனீங்க.”

“விட்டல் சார் பாவம் பார்த்து கொடுத்த வேலையை, நான் பொறுப்பா பார்க்கலைன்னு, என் தப்பை ஒத்துக்கறேன். ஆனா, இத்தனை லீவ் போட்டேனே, இன்னும் நான் மறுவீட்டு சம்பிரதாயத்துக்கு என் மாமியார் வீட்டுக்கு கூட போகலை சார். அது வேற என் பொண்டாட்டி, என்னை காரி துப்பாத குறையா தினமும் புருஷன் பொண்டாட்டி சண்டைன்னு நடக்குது. என் வீட்டாளுங்க உங்களுக்குள்ள என்ன பிரச்சனைன்னு கேக்குற கேள்விகளுக்கு வெளிப்படையா என் நிலைமையை சொல்ல முடியாம, ஒரே திண்டாட்டமா ஓடுது சார்.”

சொல்வதெல்லாம் உண்மை என்பது போல மளமளவென கொட்டியவன், ‘முடியலை வலிக்குது, விட்டுடுங்க’ என்ற ரேஞ்சில் பாவமாக பார்த்ததை கண்டு சிவாவுக்கு சிரிப்பு வந்தது.

கேமரா ரெக்கார்ட் செய்வதால், தன்னை அடக்கிக் கொண்டு, போனை எடுத்து, “மலர்… சூரஜ் ரூம்ல அவரோட அப்பாயிண்ட்மெண்ட் டைரி, ப்ளானர் எல்லாம் எடுத்துட்டு வந்து, என் ரூம் வாசல்ல இருக்க ஸ்டீஃபன்ட்ட குடுங்க.”

போனில் உத்தரவிட்டவன், சூரஜை பார்த்து, “ஓகே உனக்கு செக் விஷயம் தெரியாது. பட் விட்டல் சார் செக்ரட்டரி நீ தானே? அப்பாயிண்ட்மெண்ட் டைரி நீ தானே மெயின்டெயின் செஞ்ச? அந்த அஞ்சுவோட எதுவும் சாருக்கு ஆஃபீசியல் மீட் இருந்ததா?”

“சில வருஷம் கழிச்சு இன்னைக்கு தான் அந்தப் பொண்ணை பார்க்கறேன். எனக்கு ஞாபகம் இருக்கற வரை அப்படி ஏதும் அப்பாயின்மென்ட் இல்ல சார். ஆனா சார், நீங்க என்னை கேக்குறதை விட கலா மேம்மை கேக்குறது பெட்டர்.”

“வாங்குற சம்பளத்துக்கு ஒழுங்கா வேலை செய்யாததால தான் இன்னைக்கு மாட்டிட்டு முழிக்கற!” கோபத்தை கட்டுப்படுத்த முடியாத சிவா, கடிந்து விட்டான்.

மீண்டும் தன் காரியதரிசிக்கு அழைத்து, “விட்டல் சாரோட எக்ஸ் டைப்பிஸ்ட் மிசர்ஸ். கலாவோட கால் போடுங்க.” என்றான். அழைப்பில் காத்திருந்து அந்த கலா தொடர்பில் வரவும், மேலோட்டமாக விசாரித்தான்.

“ஓகே மிஸஸ் கலா, முக்கியமான விஷயம், இப்போ கார் அனுப்பறேன், ஒரு ஒன் ஹவர் வேலை தான் இருக்கும். சிரமம் பார்க்காம கொஞ்சம் வந்து போங்க.” என்றான்.

அந்த அழைப்பை துண்டித்தவன், காரியதிரிசிக்கு அழைத்து, “மிஸஸ் கலாவுக்கு உடனே கார் அனுப்பி வைங்க. அப்படியே இந்த வருஷத்தோட முதல் நாலு மாச அப்பாயின்மென்ட் லிஸ்ட் சிஸ்டெம்ல இருந்து கேதர் பண்ணுங்க மலர்.” என்ற சிவா, இப்போது தன் முன் இருந்த மானிட்டரை இயக்கினான்.

அந்த ஸி.ஸி.டி.வி படத்தை போட்டு, மீண்டும் பார்க்க துவங்கினான். சில நொடிகளுக்கு பின், ஸ்க்ரீனை சூரஜ் புறம் திருப்பி… மீண்டும் திரையை இயக்கி, “பாரு, அந்த பொண்ணை பார்த்து உன் முகத்துல அதிர்ச்சி தெரியுது. வேர்த்துக் கொட்டுது.”

“ஸாஆஆஅர்…” அலறி விட்ட சூரஜ், “வேகாத வெயில்ல, நீங்க முடிக்க சொன்ன லிக்கர் பர்மிட் விஷயமா அலைஞ்சுட்டு வர்றவனுக்கு வேர்த்து கொட்டாம, ஜில்லுனு ரோஸ் வாட்டரா சார் கொட்டும்?” எவ்வளவு தான் பொறுப்பான் அந்த அப்பாவி? பொறுக்க முடியாமல் பொங்கி விட்டான்.

“சூரஜ்!” சிவா அதட்டவும்…

“சாரி சார். மது விலக்கு ஆணைய கமிஷனரை பார்க்க காத்திருந்து, அது நடக்காம, திரும்ப நாளைக்கு போய் நிக்கணும்னு செம கடுப்புல, சுட்டெரிக்கற வெயில்ல பைக்ல இங்க வந்தா நீங்க வேர்க்கறது கூட குத்தமா பார்த்தா எப்படி சார்?” ஆதங்கப்பட்டவனை கண்டு கொள்ளாமல்,

“நான் தான் போன்ல ஜாயிண்ட் கமிஷனர்கிட்ட பேசி, நாளைக்கு நீ போனா கையோட வேலை முடிக்க ஏற்பாட்டை செஞ்சுட்டேனே! உன்னால நையா பைசாவுக்கு பிரயோஜனமில்லை. அந்த விஷயம் விட்டுட்டு, இந்த பொண்ணு பத்தி சொல்லு.”

காலையில் ஏற்கனவே கைப்பேசியில் தொடர்பு கொண்ட போது இதற்காக மண்டகப்படி வாங்கி இருந்தான் சூரஜ். முகத்தை தொங்க போட்டு கொண்டு, “நீங்க கிளம்பி வர சொன்னதால தான், இப்ப நாரா கிழிஞ்சு தொங்கறேன். பேசாம அங்கேயே வெயில்ல கருவாடா போயிருக்கலாம்.”

“சூரஜ்….” சிவா அதட்டல் போடவும்…

“ஹான் என்ன கேட்டீங்க? திடீர்னு நம்ம ஹோட்டல் கார் பார்க்ல அஞ்சுவை பார்க்கவும் கொஞ்சம் ஷாக் ஆயிட்டேன். எனக்கு தெரிஞ்ச அஞ்சு, இந்த மாதிரி எடத்துக்கு வர கூடிய ஆளு இல்ல. அப்புறம் ரொம்ப வருஷம் கழிச்சு பார்த்ததுல, ஆச்சரியமா தான் சார் அஞ்சுகிட்ட நீ எங்க இங்கன்னு விசாரிச்சேன்!”

“ஸ்க்ரீன்ல க்ளாரிட்டி இல்ல. சோ, நீ சொல்றதை ஓரளவுக்கு ஒத்துக்கறேன். சில வருஷம் கழிச்சு பார்க்கற பொண்ணுகிட்ட என்ன ஆர்கியுமெண்ட் உனக்கு? சின்னவர், ‘களவாணிங்கக்குள்ள சண்டை’ன்னு சொல்லறார்!”

“ஐயோ சார், அப்படி அசிங்கமா பேசாதீங்க. அஞ்சு, என் அக்காவோட ஸ்டுடென்ட் சார். படிப்புல சுமார் ரகம். ஆனா, இந்த பார்ட்டி பிளானிங்ல ஆள் செம கெட்டி. சின்னதா ஃபங்ஷனுங்களுக்கு செஞ்சுட்டு இருந்த அஞ்சுவுக்கு, பெரிய லெவல் இவன்ட் மேனேஜர் ஆக ஆசைன்னு என் அக்கா சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். தெரிஞ்ச பொண்ணு, அதுவும் ஸ்டார் ஹோட்டல்ல பார்க்கவும், ஒரு வேளை, அவ கனவு நிஜமாயிடுச்சோன்னு அதைப் பத்தி விசாரிச்சேன். கொஞ்சம் அப்செட்டா பதில் சொல்லவும், எனக்கு ஒண்ணும் புரியலை.”

“அக்கறையா ‘என்னமா’ன்னதுக்கு, கொஞ்சம் முகத்துல அடிச்சாப் போல பதில் தந்துட்டா! எனக்கு தான் இந்த மான ரோஷம் கம்மியாச்சே… வாய் மூடிட்டு என் வேலையை பார்க்காம, ஏன், என்னன்னு விடாப்பிடியாக நான் கேக்கவும், அவளும் கோபமா, ‘விடுங்கன்னு சொல்றேன்ல ண்ணா’ன்னு எரிச்சலா அந்த டாபிக்கை தவிர்த்துட்டு, என் வீட்டு ஆளுங்களை நலன் விசாரிச்சுட்டு கிளம்ப பார்த்தா.”


“அப்பவும் போற சனி பகவானை வாலண்டரியா கூப்பிட்டு டென்ட் போட வெச்ச அப்பிராணி சார் நான். அவக் கூட பேசினதால, இங்க என் டவுசர் கிழிய போறது தெரியாம, நாமும் இங்க பெரிய ஆளுங்கற தோரணையில, ‘வேணா இங்க எதாவது இவன்ட் மேனேஜ்மென்ட் வேலைக்கு உதவட்டா அஞ்சு’ன்னு நல்லெண்ணத்துல கேட்டதுக்கு, ‘மைன்ட் யுவர் பிஸ்னெஸ்’னு பொட்டுட்டு சொல்லிட்டு போயிட்டா சார்.”


“எனக்கு தெரிஞ்ச அஞ்சு இப்படி மரியாதையில்லாம பேசக் கூடிய ஆளு இல்லை. இந்த சின்ன பொண்ணுகிட்ட அசிங்கப்பட்டியே… உனக்கு இதெல்லாம் அவசியமா சூரின்னு… என்னை நானே கேட்டு, மனசை தேத்திக்கிட்டேன். இவ்வளவு தான் நடந்துச்சு. மத்தபடி அந்த செக் பத்தி எனக்கு எதுவும் தெரியாது, என்னை விட்டுடுங்க எசமான்!” ஸி.ஸி.டி.வி. ரிக்கார்டிங்கில் தன் முக மாறுதலுக்கான காரணங்களை அடுக்கி கெஞ்சலாக முடித்தான்.


விட்டலின் செக்ரட்டரியாக சூரஜ் இருந்த நாளில் பயன்படுத்தப்பட்ட அவருடைய தினப்படி அப்பாயின்மென்ட் டைரியை ஒரு முறை அலசி பார்த்து விட்டு, அந்த கலாவின் குறிப்பேட்டையும் ஆராய்ந்து பார்த்து, ‘அஞ்சு, அஞ்சனா… வானவில்’ என எந்த பெயரிலும் அப்பாயின்மென்ட்டும் இல்லாதது தெரிய வர, அவர்கள் பேசுவதை ரெகார்ட் செய்துக் கொண்டிருந்த கேமராவை அணைத்த சிவா, அவர்களுக்கு அவன் மேல் சந்தேகம் வர காரணம் என்ன என்று விளக்கினான்.


“ஆஃப் தி ரிகார்ட் உன்கிட்ட வெளிப்படையா பேசுறேன் இப்போ. பாரு சூரஜ், ரிசப்ஷனிஸ்ட் அந்த செக்கை கொடுக்கவும், நான் கூட சரி, பிரச்சனை முடிஞ்சுது, மேல தோண்டி துருவாம விட்டுடலாம்னு தான் இருந்தேன். அப்ப தான் ‘ஸி.ஸி.டி.வியில் அந்த பொண்ணோட முகம் தெரியலாம்’னு அந்த ரிசப்ஷனிஸ்ட் சொல்லவும், ஒரு வேளை இங்க இருக்க பழைய ஸ்டாஃப் யாருக்கேனும் அந்த ஆளை அடையாளம் தெரியுமோன்னு தான், நான் ரிகார்டிங்கை பார்த்தேன்.”


“அப்ப தான் நீங்க கார் பார்க்ல பேசுனது தெரிஞ்சுது. ஏற்கனவே இங்க இருக்க எம்ப்ளாயீஸ் மேல தான் எங்க சந்தேகமே. ரிகார்டிங்க்ஸ் பார்த்த எங்க எல்லாருக்குமே நிறைய கேள்விகள். சம்திங் ஃபிஷின்னு தான் பட்டுச்சு. இதை சின்னவர்ட்ட மறைக்க முடியாது. சோ விஷயத்தை அவர் பார்வைக்கு கொண்டு போய், இப்போ உன்னை குடையறோம்.”


ஆம்! கேமரா ஆங்கிள் சூரஜின் முகத்தை மட்டுமே படம் பிடித்து இருந்தது. அஞ்சு கேமராவுக்கு முதுகு காட்டி நின்றிருக்க, அவளின் உடல் கூறு மொழி மட்டும் பதிந்து இருந்தது. மற்றொரு கோணத்தில் சற்று தொலைவில் இருந்து பக்கவாட்டு தோற்றமே பதிவாகி இருந்த படத்தில் அவர்கள் விவாதிப்பது போல தெரிவதே சூரஜின் மேல் சந்தேகம் கூடியதற்கான காரணங்களென அடுக்கிய சிவா,...


“இந்த பொண்ணை இங்க இருக்க வாட்ச்மேன் முதல் ரிசப்ஷன் ஸ்டாஃப் வரை யாருக்குமே யார்னு அடையாளம் தெரியலை. ஹரிஷ் சார் குணத்தை பத்தி நான் சொல்லவே வேணாம். உனக்கே தெரியும்… சோ, அப்படி எதாவது இருக்குமோன்னு கூட திங்க் பண்ணோம்...”


“ஐயோ சிவா சார், அப்படிப்பட்ட பொண்ணு இல்ல அஞ்சு" சிவாவை முடிக்க விடாமல் அலறியே விட்டான் சூரஜ்.


“லுக் சூரஜ், இதுக்கு முன்னயும் பல முறை, பொண்ணுங்க விஷயத்துல ஹரிஷ் சார், இழுத்து விடற பிரச்சனைகளுக்கு விட்டல் சார் நிறைய பணம் கொடுத்து ப்ராப்ளம் வெளிய வராம செட்டில் பண்ணியிருக்கறதா ஜி. எம் சொன்னார். பட், எல்லாமே விட்டல் சாரோட பெர்சனல் அக்கவுண்ட்ல இருந்து தானாம். இதுவும் அவர் பெர்சனல் அக்கவுண்ட்ல இருந்து போயிருந்தா, இங்க யாருக்குமே எதுவும் தெரிய வந்து இருக்காது. பெர்சனல் மேட்டர்ஸ் யாரும் தோண்டி துருவவும் போறதில்ல. இதை ஹரிஷ் சார் விஷயம்னு விட்டுருப்பாங்க. இப்போ அப்படியும் நினைக்க வழியில்லாம கம்பெனி கணக்குல இல்ல செக் கொடுத்து இருக்கார்!”


“சார், அஞ்சு இஸ் அ வெரி நைஸ் கேர்ள். ப்ளீஸ் ஹரிஷ் சார் கூடவெல்லாம் சின்ன பொண்ணை இணைச்சு, ச்சே ச்சே… தங்கமான பொண்ணு சார்.”


“அஞ்சு நீ சொல்றது போலவே தங்கமாவே இருக்கட்டும்! வழக்கத்துக்கு மாறா விட்டல் சார் நடக்க வேண்டிய அவசியமென்ன? அப்படியே ஹரிஷ் சார் விவகாரம் இல்ல… வேற அவசியத்துக்குன்னா… ஜி.எம்., இல்ல உன்கிட்ட கம்பெனி அக்கவுண்ட்ல இருந்து அவசரத்துக்கு எடுத்ததா தகவல் கொடுத்து, அவர் பெர்சனல் அக்கவுண்ட்ல இருந்து டிரான்ஸ்ஃபர் செஞ்சு பணத்தை திருப்பி கொடுத்திருப்பார்.”


“ஒரே ஒரு வாட்டி ரெண்டு வருஷத்துக்கு முன்ன ஒரு லேன்ட் டீலிங்ல எக்கச்சக்க பணம் முடங்கி போனதால அப்படி முறையா செஞ்சதா, ஆடிட்டர்ஸ் குறிப்புல இருக்கறதை நாங்க அலசி பார்த்திட்டோம். இந்த வாட்டி, இந்த செக் கொடுத்ததை ஏன் யாருக்குமே தெரியப்படுத்தலை பெரியவர்? செக் கொடுத்த தேதிக்கும், அவர் இறந்ததுக்கும் நடுவுல டைம் இருந்துச்சு. முக்கியமா, அவருக்கு உடம்பு முடியாததால, தினேஷ் சார் இங்க கூடவே இருந்தார். மகன்கிட்ட சொல்லி இருப்பாரே."


"தினேஷ் சார்கிட்ட நம்ம அவி சார் விசாரிச்சுட்டார். அங்கேயும் எந்த விஷயமும் தெரிய வரலை. விட்டல் சார், செக் இஷ்யூ செஞ்சுருந்தா, இப்படி அவர் சார்ந்த யாருக்குமே தெரிய வராம இருக்க முடியாது. ஃபோர்ஜரி என்ற ஒரே முடிவுக்கு தான் வரணும். இப்ப, இதுல நீ சம்பந்தப்பட்டிருக்க… அப்ப நீ செய்யலைன்னு நிரூபிக்க வேண்டியது உன் கடமை.”


“சார், உண்மையா… நான் அந்த அளவுக்கு ரவுடி எல்லாம் இல்ல… இப்படி பண்ணியிருக்கலாம், எனக்கு வாய்ப்பு இருந்துச்சுன்னு எல்லாம் இப்போ நீங்க சொல்லி தான் எனக்கே தெரியுது… நான் டம்மி டீயூப்லைட் சார்.” என்றவன் பேச்சில் சிவாவுக்கு சிரிப்பே. ஆனால், தன்னை அடக்கி கொண்டு,


“சாரி சூரஜ், இப்போ காலம் ரொம்ப மாறி போயிடுச்சு. உனக்கு ஜீரணிக்க கஷ்டமா இருக்கலாம். ஆனா, ஆடம்பர செலவு செய்ய, பாக்கெட் மணி வேணுங்கறதுக்காக இப்போலாம் யங்ஸ்டர்ஸ்… பொதுவா பசங்களும், சரி பொண்ணுங்களும் சரி, ரெண்டு பேருமே நிறையவே கீழ்த்தரமா செயல்களில் ஈடுபடறதா தினம் தினம் பேப்பர்ல நியூஸா நாம பாக்கலை? அப்படி ஹரீஷ் சார் விஷயம் இல்லைன்னா, ஊரு பேர் தெரியாத ஒரு பொண்ணுக்கு, அதுவும் அந்த கம்பெனி ரிஜிஸ்டர்ட் கூட இல்ல, பண சிக்கல் இருந்த நேரத்துல அதுவும் விட்டல் சார் ஹாஸ்பிடல் ஐ.ஸி.யூவில் சீரியஸா இருந்த நேரம், இத்தனை பெரிய தொகைக்கு, எல்லாத்துக்கும் மேல கம்பெனி கணக்கில் இருந்து செக் எப்படி இஷ்யூ ஆகும்?”


“மானமரியாதைக்கு பங்கம் வரும் பட்சத்தில், குடும்ப கவுரவத்தை காப்பாத்த கம்பெனி பணத்துல வேற வழி தெரியாம விட்டல் சார் கை வைக்க வாய்ப்பிருக்கு. அப்போ கூட, இவ்வளவு கணக்கு வழக்கை ஒழுங்கா நம்ம க்ரூப்கிட்ட டேக்கோவர் சமயத்துல ஒப்படைச்சவர், அட்லீஸ்ட் அவி சார் காதுல இப்படினு நிச்சயம் தெரியப்படுத்தி இருப்பார். அப்படி நடக்காதப்ப, அந்த செக்கை ரிட்டர்ன் பண்ண இந்த பொண்ணுக்கும், நம்ம ஹோட்டலுக்கும் உள்ள ஒரே லிங்க் நீ மட்டும் தான். உன் மேல நாங்க சந்தேகப்படறதுல என்ன தப்பு சொல்லு? ஆன்சர் மீ?”


“இல்லவே இல்ல… நீங்க சொல்ற மாதிரி நிச்சயம் அஞ்சு இல்ல. காலேஜ் படிக்கறப்பவே சொந்தமா வேலை செஞ்சு பணம் சம்பாரிச்ச, உழைப்பாளி அவ.” அஞ்சுவை அப்படி தவறானவளாக கற்பனை செய்ய முடியாத சூரஜுக்கு தலை விண்விண்னென்று தெரித்தது.


“அந்த பொண்ணு கேரக்டருக்கு நற்சான்றிதழ் கொடுக்க எங்களுக்கு எந்த அவசியமும் இல்ல. அவ தனிப்பட்ட வாழ்க்கை பத்தி இங்க யாருக்கும் அக்கறை இல்ல. சின்னவருக்கும் விட்டல் சாருக்கும் மனவருத்தம் இருந்ததை வெச்சு நீ எந்த தப்பான முடிவுக்கும் வராத. என்னைக்கும் அவங்க முதலாளிங்க, அவங்ககிட்ட கை கட்டி சம்பளம் வாங்குற உழைப்பாளி நாம. விட்டல் சாரை நீ ஏமாத்தினியாங்கறது மட்டுமே அவி சாருக்கு குடையுது. எனக்கு தெரிஞ்சு இவ்வளவு எல்லாம் நிதானமா விசாரிக்காம நேரா தீர்ப்பு எழுதறவரு, இப்போ கொஞ்சம் பொறுமையா அலசறதே எனக்கு ஆச்சரியமா இருக்கு.”


“ஐயோ சார்… நீங்க எப்படி கேட்டாலும் தெரிஞ்சா தானே நான் சொல்ல முடியும்?”


“அந்த பொண்ணு அட்ரஸ் குடு, நேர்ல அந்த பொண்ணை கேட்டு, க்ளாரிஃபை செஞ்சுக்கலாம். மேட்டர் ஓவர். ஆமா… அந்த பொண்ணு இங்க இன்டர்வியூவுக்கு வந்தது மாதிரி என்ன சின்னவர்ட்ட ஏதோ உளறிட்டு இருந்த?”


சிவாவின் கேள்வியில், மீண்டும் முழித்தவன், சில நொடிகள் கழித்து… “அது, வந்து… அஞ்சு அப்செட்டா இருந்தாளா? நீங்க வேற மொட்டையா அவளை பத்தி கேக்கவும், ஒரு வேளை நீங்க அன்னைக்கு சொன்னீங்களே, ‘புது இவன்ட் மானேஜ்மென்ட் டீம் வருது’ன்னு, அதுக்கு இன்னைக்கு இங்க ஏதோ இன்டர்வியூ எதுவும் நமக்கு தெரியாம நடந்துச்சோ! அதுல சொதப்பினதால, அந்த வருத்தத்துல அப்படி விரக்தியா பேசினாளோன்னு நானா அடிச்சு விட்டது சார். அஞ்சுவுக்கு என்னை தெரியுங்கறது உங்களுக்கு எப்படி தெரியும்னு கூட யோசிக்கலை நான்.” என்ற சூரஜை பார்க்க நிஜமாகவே பாவமாக இருந்தது


இவன் பேச்சில் உண்மை இருக்கிறது என சிவாவுக்கு தெளிவாக, புதிருக்கான விடை அஞ்சுவிடம் என புரிய, சில நொடிகள் யோசனையில் ஆழ்ந்தான்.


“என்னை வேலையில இருந்து தூக்கிடுவீங்களா சார்?” அழுது விடும் தொனியில் கேட்டவனிடம்,


“இதுக்கு நான் பதில் சொல்ல முடியாது சூரஜ். எல்லாம் சின்னவர் கையில்…”


“இப்போ என்ன சார் பண்ண? அஞ்சு பொண்ணு தான் செக்கை திருப்பி கொடுத்துட்டா… பணம் அப்படியே விட்டல் சார் அக்கவுண்ட்ல இருக்கு. இன்னும் எதுக்கு இந்த விஷயத்தை நோண்டுறார் சின்ன சார்? தலைக்கு வந்தது தலைப்பாகோட போச்சுன்னு விடாம, இதென்ன எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்னு பிடிவாதம் பிடிக்கிறார்?”


“ம்ம்… நீ நல்லவனா, கெட்டவனான்னு தெரியணும்ல?” நக்கலாய் மொழிந்த சிவா, ‘இவனுக்கு பாவம் பார்த்தே, உன்னை புதைகுழியில தள்ளிடுவான்!’ தனக்கே சொல்லிக் கொண்டவன்,

“அட்ரெஸ் கேட்டேனே சூரஜ்?” கருமமே கண்ணாக கேட்டான்.


“நிஜமா எனக்கு தெரியாது சார். அவங்க ஃபிளாட் மாறி போயிட்டாங்களே! பேச்சுவாக்கில் அடையார்னு மட்டும் சொன்னா!”


“உங்க அக்கா ஸ்டுடென்ட் தானே?”


“அது அப்போ சார். என் அக்காவே இப்போ மூணு வருஷமா பெங்களூர்ல இருக்கா! ப்ளீஸ் சார்… எனக்கொண்ணும் தெரியாது. இப்போ குடும்பஸ்தன் வேற சார். வேலையில இருந்து தூக்கிட்டா… வீட்ல பிரச்சனை ஆகிடும் சார். ஏற்கனவே நித்ய கண்டமா என் கல்யாண வாழ்க்கை ஓடுது. இதுவரை சரியா வேலை பண்ணாததுக்கும் சேர்த்து இனிமே ஒழுங்கா, பொறுப்பா நடந்துக்கறேன்.”


“ஐயோ, வேலை போயிட்டா என் மாமியார் வீட்ல என்னை காறி துப்புவாங்களே. நானும் சும்மா இல்லாம, ஸ்டார் ஹோட்டல் வேலை, நான் எவ்வளோ பிசி தெரியுமா? நான் பார்க்காத செலிப்ரிட்டி இல்ல… இவங்களை தெரியும், அவங்களை தெரியும்னு கொஞ்சம் இல்ல… ரொம்ப ஓவராவே பந்தா வேற விட்டிருக்கேனே. இப்போ, இப்படி திருட்டு பட்டம் எல்லாம் கொடுத்தா, எனக்கு ரொம்ப அசிங்கமாயிடும் சார்.” சூரஜ் கெஞ்ச,

“அஞ்சனாவோட அட்ரெஸ் கண்டு பிடிக்க ட்ரை பண்ணு சூரஜ்.” ஒரே விஷயத்தில் நிலை கொண்ட சிவா, அப்போதே அவ்யுக்தை அழைத்து, தான் விசாரித்து அறிந்துக் கொண்டதை தெரிவித்தான்.


அவ்யுக்த் என்ன சொன்னானோ, எல்லாவற்றுக்கும் “எஸ் சார், ஓகே” போட்டு, தலையசைத்தவன், பேசியை வைத்தான்.


“இன்னைக்கு நைட் வரை டைம் தராராம். அஞ்சனாவோட அட்ரஸ் கண்டுபிடிச்சு, இங்க கூட்டிட்டு வருவியாம். அவரே நேர்ல அந்த பொண்ணுட்ட விசாரிச்சுக்கறாராம். நீ தனியா எங்கேயும் போக அனுமதி இல்ல. ஸ்டீஃபனும் அவரோட ஆளுங்களும் உன் கூட வருவாங்க.”


“சார்… சார்… அவங்கல்லாம் எதுக்கு சார்? என்னை நம்புங்க சார். வீட்ல விஷயம் தெரிஞ்சா… நான் காலி சார்.”


“சாரி சூரஜ்… நோ சாய்ஸ்…”


ஸ்டீஃபனை அழைத்த சிவா, சில ஆணைகளை பிறப்பிக்க… பலி கடா போல அந்த அறையில் இருந்து வெளியே அழைத்து வரப்பட்ட சூரஜ், இந்த சிக்கலில் இருந்து மீள்வானா? அஞ்சனாவை கண்டுபிடிப்பானா?


© KPN NOVELS COPY PROTECT
bottom of page