top of page

இணை கோடுகள் 7



இணை கோடுகள் 

கோடு - 7


அலுவலக நிகழ்வுகளால் ஓய்ந்து போயிருந்த சூரஜ், வேலைக்காரி விஷயத்துக்காக சண்டை பிடித்த அன்னையை, அக்காவின் உதவியோடு சரி கட்டி, அஞ்சு விஷயம் குறித்து சுப்ரியா எழுப்பிய வினாக்களை சமாளித்து, இவனையே சந்தேகமாக பார்த்திருந்த மனைவி திவ்யாவிடம், “தலைவலி திவி” என புளுகி, உறங்குவது போல கண்ணை வெறுமே மூடி, கெட்ட கனா வரவும் அஞ்சி, எப்படியோ அரைகுறையாக தூங்கி, விடியற்காலையிலேயே முழித்து விட்டான்.


என்றுமில்லா அதிசயமாக சீக்கிரம் எழுந்து வந்ததால் ஆச்சரியம் மேலிட பார்த்த அம்மாவிடம் ஒரு அசட்டு சிரிப்போடு, “குட்டி வாக் போயிட்டு வரேன் ம்மா…” என வெளியே வந்தவன், சடன் ப்ரேக்கிட்டு நின்றே விட்டான். 


பின்னே ஆறு மணிக்கு ஃபிரெஷாக தயாராகி வாசலில் நின்றிருந்தாரே ஸ்டீஃபன். வேகமாக வெளி கேட்டுக்கு வந்தவன், “சா…ர்ர்ர்…” என்றான். 


வெறுமே கண் ஜாடையில் போ என காட்டியவர், அவனோடே நடக்க, அரக்கப்பரக்க உடற்பயிற்சியை முடித்தான். தன் கை கடிகாரத்தை பார்த்து, “அரைமணியில கிளம்பி வந்துடு சூரஜ்”, என்றவர், முன்தினம் பயணித்த காரில் ஏறி விட, அதன் பின் நம் சூரி வேகம் பிடித்தான். 


“ஒரு பத்து நிமிஷத்துல டிஃபன் தயாராகிடும்டா…” என்ற அம்மாவிடம், 


“இதையே நைட்டுக்கு எனக்கு வைங்க, முக்கிய வேலையா போகணும்” என விழுந்தடித்து வந்து காரில் ஏற, வண்டி அஞ்சுவின் வீடு நோக்கி சீறி பாய்ந்தது


காலை எட்டு மணிக்கே ஒரு வீடியோ கான்ஃபெரன்ஸில் அமிழ்ந்திருந்தான் அவ்யுக்த்.


அங்கே அலாரத்தை அணைத்து விட்டு, தலைகாணியை இறுக்கி அணைத்து உறங்க முயன்றுக் கொண்டிருந்த அஞ்சுவை விடாது ஒலித்த மொபைல் தொந்தரவு செய்ததில், ச்சே… என சலிப்பாக அரை கண்ணை திறந்து பேசியை எடுத்தவள் தெரியாத எண்ணில் இருந்து வந்த அழைப்பை ஏற்காமல், மீண்டும் கண்ணுறங்க துவங்கினாள். 


இங்கோ, “அந்த கலை பொண்ணுக்கு கால் போட்டு, அஞ்சனாவை எழுப்ப சொல்லு…” ஸ்டீஃபனின் கட்டளைக்கு அடிபணிவது தவிர வேறு மார்க்கம் அறியாது கலையை தஞ்சமடைந்தான். 


“அண்ணா, அவ ஒன்பதுக்கு முன்ன எழ மாட்டா, கால் பண்றது வீண். ஆமா, காலையில எந்த வேலைக்கும் ஒத்துக்க மாட்டாளே!” 


“அது… பதினோரு மணிக்கு தான் கலை...” 


“அப்போ, நீங்க கவலைப்படாதீங்க சொன்ன நேரத்துக்கு வந்துடுவா. நான் ஒன்பதுக்கு மேல கால் போட்டு ஞாபகப்படுத்தறேன் ண்ணா.”


சுரத்தில்லாமல் சரியென்று வைத்தவனிடம் ஒரு டீ கிளாஸை நீட்டினான் ட்ரைவர்.


“குடுத்து வெச்ச பொண்ணு, நல்லா ஜம்முனு தூங்கறா. எனக்கு தான் இப்படி தெருவுல தேவுடு காக்கணும்னு எழுதி இருக்கு போல!” முனகியவனை ஸ்டீவ் முறைக்க… ஈ என இளித்து வைத்தான். 


வேலை இல்லாமல் காத்திருப்பது சூரஜுக்கு போரடித்தது. ஸ்டீஃபனுக்கு அப்படி இல்லை. போனிலேயே, பல காரியங்களை நிகழ்த்தி கொண்டிருந்தார்.


ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அஞ்சு இரு முறை பேசி ஒலித்தும் எடுக்காமல், மூன்றாம் முறை தான் கண் மலர்த்தி, கலையிடம் இருந்து எனவும், ஸ்பீக்கரை போட்டு, ஒரு கொட்டாவியை வெளியேற்றி “ஹே...ல்லோ” என்றிட,


“எரும, போன் பண்ணா எடுக்க மாட்டியா? அந்த சூரி அண்ணாவோட பதினோரு மணிக்கு ஏதோ முக்கிய வேலையாமே, எழுந்து கிளம்பு.” 


“சரி கத்தாதே, காலையில பார்லர் வர முடியாது கலை.”


“லூசு, இப்போவே மணி ஒன்பதே கால், மத்யானம் வர முடியாதுன்னு சொல்லு.”


“ஹிஹி… அதே அதே… ஈவினிங் பார்க்கலாம், பை கலை” பேசியை வைத்த அடுத்த நொடியே, ‘ஏ தாய் கெழவி ஏ தாய் கெழவி’ என பேசி அலற, அம்மாவுக்கான பிரத்யோக டியூனை மாற்றியிருந்தவள், பேசியை அழுத்தியவாறே “ஏ சிரிச்சாலும் ஏ மொறச்சாலும், நீ என் உசுரு தாய் கெளவி”  என பாடினாள்.


மகளின் நக்கல் பாடலில் எரிச்சல் மூண்டாலும், சுலோ பேச மறந்தவராக மௌனியானார். வழக்கம் போல ஒரு சில முறை அழைத்த பின் தான் அஞ்சு மெதுவே எழும்புவாள், என்ற ப்ளானில் போனை போட்டிருந்தவருக்கு, காலையில் இத்தனை சீக்கிரத்தில் அதுவும் ஒரே ரிங்கில் கால் அட்டென்ட் செய்யப்படவும் அதிர்ச்சி, ஆச்சரியம், குழப்பம் மேலிட, அவரையும் மீறி அக்கறை த்வனியில் “என்னடி, நல்லா தானே இருக்க?” என்றார்.


“ம்ம்… இதுவரை நல்லாத்தான் இருக்கேன். இப்போ நீங்க செஞ்சுட்டீங்களே… இனி நிலவரம் எப்படியோ!”


மகளின் பதிலில் கடுப்பானவர், “இரு அப்பா பேசணுமாம்.” பேசி கைமாற…


எடுத்தவுடன் “TOEFL, GRE ப்ரிபரேஷன் எந்த அளவுல இருக்கு அஞ்சு?” டப்பென்று மேட்டருக்கு வந்தார் கேசவன்.


“அது… படிக்கறேன் ப்பா.”


“அந்த பார்லர்ல சும்மா உக்கார்ந்து டைம் வேஸ்ட் பண்ணாம, லைப்ரரி போய் படி. அப்புறம் இந்த மாசம் ஈபி பில் எவ்வளோ வந்தது?” என துவங்கியவர், செலுத்த வேண்டிய மாத பில்களை நினைவுறுத்தி, சில பல வங்கி வேலைகளை மகளுக்கு இட்டவர், “இனியாவது உருப்படற வழியை பாரு…” என பேசியை வைத்தார்.


“இப்போ காலையில இந்த டார்ச்சர் கால் போடலைன்னு யார் அழுதா? மத்த எல்லாத்துக்கும் அமெரிக்காம்பாங்க! டிஜிட்டல் இந்தியாவுல, பட்டனை தட்டினா, பேமெண்ட் போகிற காலத்துல இன்னமும் வரிசையில வெயில்ல நின்னு, நான் பில் கட்டினா தான் இந்த கேசுக்கு உறக்கம் பிடிக்கும்.” கடுகடுத்தவள், குளித்துக் கிளம்பினாள்.  


முன் தினத்துக்கு இன்றைய அவளின் உடை தேர்வு எத்தனையோ பரவாயில்லை. “ப்ச்… இஸ்திரிக்காரன் வராத நேரமா பார்த்து, காலங்கார்த்தால வெளிய போகற டாஸ்க் வருதே…” முனகியவள், சுலபமாக அயர்ன் செய்ய கூடியது, எது குறைந்த கசங்கலோடு இருக்கிறதென தேடி, ஒரு அடர் நீல நிற காட்டன் குர்த்தியும், வெள்ளை பைஜாமாவும் எடுத்து, இஸ்திரி போட்டு அணிந்தவள், பேருக்கு கூட முகத்துக்கு ஒப்பனை செய்யவில்லை. 


பால் பவுடரில் போட்ட டீயை குடித்து, குளிர் சாதனப்பெட்டியில் இன்னைக்காவது என்னை சாப்பிடேன் என காய்ந்து கிடந்த ரொட்டியை வாட்டி, வெண்ணையும், ஜாமும் தடவி உண்டு முடித்தவள், வீட்டை பூட்டிக் கொண்டு, எதிர் வீட்டை பார்க்க, வெளி கேட் பூட்டியிருக்கவும், வாயில் மணியை அழுத்தினாள்.


கதவு திறக்க படாததில், “எங்க போயிருக்காங்க மைதி டார்லி…” முணுமுணுத்தவாறே, மாமியை அழைத்தாள். 


பேசி எடுக்கப்படவும், பின்னணி சத்தத்தில் மாமி விஷேஷ வீட்டில் இருப்பது புரிபட, கால் கட்டானது. “ஆஹா, பூணல் கல்யாணத்துக்கு போறதா சொன்னாங்களே…” என நினைவு வர, வேலைக்கு செல்வதாக அவருக்கு மெசேஜ் தட்டியவள், அகநக அகநக முகநகையே பாடலை ஹம் செய்து கொண்டே புள்ளி மானாக படிகளில் இறங்கினாள்.


அபார்ட்மென்ட் கார் பார்க்கில் அவளுக்கென காத்திருந்த சூரஜை கண்டு வாயை பிளந்து, சட்டென்று சமாளித்து, காலை வணக்கம் தெரிவித்தாள்.


“குட் மார்னிங் அஞ்சுமா…” 


“ஹுக்கும்… குட் ஆஃப்டர்நூனுக்கு இன்னும் கொஞ்ச நேரம் தான் இருக்கு…” முனகிய ஸ்டீஃபனை கண்டுக் கொள்ளாமல் 


“இந்தாங்க, நீங்க கேட்ட பேப்பர்…” 


அவள் நீட்டிய அந்த காகிதத்தின் பரிதாப நிலையை கண்டவன், “என்ன அஞ்சு, காண்ட்ராக்டை போய் இப்படி கசக்கி வெச்சுருக்க?”


“அட்லீஸ்ட் புக்மார்க்கா அந்த பேப்பர் யூஸ் ஆச்சேன்னு சந்தோஷப்படுங்க. அதான் உங்க பேப்பரை கொடுத்துட்டேனே, இனியும் நான் வரணுமா அண்ணா?”


சூரஜ் முழுதும் பிரிக்கும் முன்பே, ஸ்டீஃபனின் கைகளை அடைந்த அந்த காண்ட்ராக்ட் காகிதத்தை பற்றிய தகவலை முறையாக சிவாவுக்கு தெரிவித்துக் கொண்டிருந்தான் அந்த மெய் காப்பாளன்.


“மிஸ். அஞ்சனா, உங்களை ஆஃபீஸ் வர சொல்லி தான் சின்னவரோட ஆர்டர். சோ டிலே செய்யாம கார்ல ஏறுங்க,” மிடுக்காக உத்தரவிட்டவனை முறைத்தவள்…


“சந்தைக்கு போகணும், ஆத்தா வையும், காசு குடு” பாவனையோடு கேலியாக மொழிந்தவளின் கிண்டல் புரிந்ததில், சூரஜால் மட்டுமல்ல, அதை கேட்டுக் கொண்டிருந்த சிவாவாலுமே சிரிப்பை அடக்க முடியவில்லை. 


சிவாவின் சிரிப்பை கேட்டு “நீங்களுமா சார்…” ஸ்டீஃபன் கொதிக்க, “ஹே ஸ்டீவ் விடுப்பா… ஏதோ சின்ன பொண்ணு, சீக்கிரம் வந்து சேருங்க…” பேசியை வைத்தான்.


“என் ஸ்கூட்டியிலயே வரேன் சார்…” 


“இல்ல மிஸ்…”


“டி.சி.பி.ராகவன் சார், எனக்கு வேற வெளி வேலை இருக்கு. என் வண்டியில வந்தா தான், என் டைம் சேவ் ஆகும். உங்களுக்கு முன்ன அங்க ஹோட்டல்ல இருக்கேன்,” பட்டென்று கமலின் குரலில் மிமிக்கிரி செய்தவள், உர்ரென்று முறைத்து நின்ற ஸ்டீஃபனை கண்டுக் கொள்ளாமல், நேரமாகிவிட்ட படியால், முன் தினம் போல முகத்தை முழுதும் மறைத்து சரியாக முக்காடு இட்டு, கையுறை எல்லாம் அணியாமல், வெறுமே துப்பட்டாவை ஒற்றையாக தலையில் போட்டு, முன் பக்க கழுத்தருகே முடிச்சிட்டவள், அதன் மேல் ஹெல்மட் அணிந்துக் கொண்டு, ஸ்கூட்டியை கிளப்பினாள்.


இரு சக்கர வாகனம் என்பதால் சொன்னது போலவே, அவர்களுக்கு முன்பே அபோடை அடைந்த அஞ்சு, அதே ரிசப்ஷனுக்கு விரைய, முன் தினம் அவளிடம் பேசிய அந்த ரிசப்ஷனிஸ்ட், முன் மாலை சிவாவிடம் நன்றாக மண்டகப்படி வாங்கி, சரியான பயிற்சி இல்லை என மீண்டும் பயிற்சி பெறுபவளாக பணி பதவி இறக்கப்பட்டிருந்தவள், அஞ்சுவை கண்டு விட்டாள்.  


“மிஸ். அஞ்சலி… ஐயோ… ப்ளீஸ் வாங்க மேம்…” உரக்க குரல் கொடுத்தாள்.  


வேறு யாரையோ கூப்பிடுகிறார்கள் என்றெண்ணிய அஞ்சுவோ, அந்த ரிசப்ஷனிஸ்டை கண்டுக்கொள்ளாமல் சுற்றும் பார்வையை ஓட்டினாள். 


“ஐயோ நேத்து வாங்கி கட்டினது போதும். இந்த பொண்ணை அந்த சிவா சார்ட்ட ஒப்படைக்கணும். திரும்ப பழைய வேலையை வாங்கணும்.” புலம்பிக் கொண்டே வேகமாக அஞ்சுவின் அருகே அந்த ரிசப்ஷனிஸ்ட் வருவதற்கும், ஸ்டீஃ[பன் வந்து சேரவும் சரியாக இருந்தது. 


“திஸ் வே மிஸ்,” ஸ்டீஃபன் வழி நடத்தவும் தான் அந்த வரவேற்பாளினி பின் வாங்கினாள். விளையாட்டாக சூரஜிடம் வளவளத்துக் கொண்டு அவ்யுக்த்தின் அலுவலகம் நோக்கி நடந்தவளின் ஜாலி பேச்சில், இயல்பான சூரஜின் துடுக்குத்தனமும் சேர, “நல்ல வேளை கொடுத்தாங்க… வீட்ல எப்படி தான் இவங்களை சமாளிக்கறாங்களோ!” முணுமுணுத்த ஸ்டிஃபனோடு  மின்தூக்கியில் ஏறினர்.


“மிஸர்ஸ் ராகவனை கஞ்சி கொஞ்சமா வெக்க சொல்லுங்க…” அஞ்சுவின் கேலியில் சூரஜ் கலகலத்திட, புரியாமல் முழித்தார் அந்த பாதுகாப்பு அதிகாரி.


“நீங்க ஓவர் விறைப்பா இருக்கீங்கன்னு சொல்றாங்க…” சூரஜ் விளக்கம் கொடுக்க, வந்த சிரிப்பை முகம் திருப்பி மறைத்தார்.

*************************


“மே ஐ கமின் சார்”  கதவு தட்டப்பட,


வாசலுக்கு முதுகு காட்டி அமர்ந்து, ஒரு தொலைபேசி அழைப்பை ஏற்று பேசிக் கொண்டிருந்த அவி, திரும்பி பாராமலேயே, உள்ளே வர சொல்லும்படி பக்கத்தில் முகம் பார்த்து நின்றிருந்த சிவாவுக்கு சைகை செய்து விட்டு, பேசியில் ஆழ்ந்தான்.


முதலாளியின் முன்னே, இருந்த இடத்தில் இருந்து தான் கம்மின் என்று அதிகாரமாக சொல்ல முடியாது என்பதால், தானே சென்று அலுவலக அறைக் கதவை சிவா திறக்க, அவனை கண்ட அஞ்சு, 


“உங்க பாஸ் டெர்ரர் பீஸ்னு கப்சா விட்டீங்களா சூரிண்ணா? இவரை பார்த்தா அப்படி தெரியலையே?” சிவாவை நோட்டம் விட்டவாறே ரகசியம் போல ஆனால் சற்று உரக்கவே அஞ்சு சொல்லவும், 


மானசீகமாக தன்னையே குட்டிக் கொண்டு, ‘ஐயோ ஆண்டவா, இருக்க பிரச்சனை போறாதுன்னு சின்னவர் முன்ன ஆப்படிக்கறாளே! இவட்ட அடக்கி வாசிக்க சொல்லாம போயிட்டோமே’ வழிசல் சிரிப்போடு சூரஜ் நெளிய, சிவாவுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டது. 


அறையினுள் அவி இருந்த படியால், பொங்கிய சிரிப்பை அடக்க சிரமப்பட்ட  சிவா, உள்ளே வருமாறு சொல்லி, முன்னே நடந்தவன், சூரஜ் பக்கம் குனிந்து, மெல்லிய குரலில் “இப்போ தெரியுது நீ ஏன் இப்படி இருக்கேன்னு. உன்னை சொல்லி தப்பில்ல சூரஜ், உன்னை சுத்தி இருக்க எல்லாருமே அப்படி தான் போல.” 


முந்தின நாள் தொலைபேசி உரையாடல்கள் கொண்டு சிவா இப்படி சொல்ல, ஹிஹி அசட்டு சிரிப்பை உதிர்த்த சூரஜுக்கு, இப்போது உள்ளுக்குள் கொஞ்சம் உதறல்… அவ்யுக்தை நினைத்து!


அந்த அலுவலக அறையை கண்களால் அளவிட்டவாறே, ஆண்களை பின் தொடர்ந்தவள், “மிஸ். அஞ்சு ஃப்ரம் அடையார்!” என்ற அழுத்தமான உச்சரிப்பு வந்த திசையில் பார்க்க, தன் கண்கள் காண்பதை நம்ப முடியாமல், திடீரென உலகமே தட்டா மாலை சுழலுவது போல இருக்க, தன்னை மறந்து, எதிரே நின்றவனை வெறித்து பார்த்தாள்.


“யூ மே கோ நவ் சூரஜ்,” “ஸ்டீஃபன், குட் ஜாப் மேன்…” அவர்களை வெளியேறும் படி அவி சொன்னது எதுவும் அஞ்சுவின் மூளையில் பதியவில்லை. ‘ஹப்பா தப்பித்தோம்’ என்ற நிம்மதியில், விட்டால் போதுமென, வெளியேறி விட துடித்த சூரஜ், அஞ்சுவின் நிலை மாறுதலை கவனிக்க தவறினான். 


அஞ்சுவுக்காக பார்த்து, “சார்…” தயங்கி தேங்கி நின்றவனை, அவ்யுக்த் நிமிர்ந்தும் பார்க்கவில்லை. சிவா தான், போ என்பதாக கண் ஜாடை காட்டிட, தயங்கி மறுத்து தலையசைத்தவனுக்கு, அவியை சுட்டி காட்ட, மனமில்லாமல் பார்த்துக்கோங்க சார் என வெறுமே வாயை அசைத்து விட்டு, நகர்ந்தான் சூரஜ்.


அதிர்ச்சியில் உறைந்திருந்தவளோ, ‘இவன்… இவன்… யாரை இனி வாழ்க்கையில் சந்திக்கவே கூடாது’ என்றெண்ணி இருந்தாளோ, யாரால் அவள் எதிர்காலமே கேள்விக்குறியாகி விட்டதோ, அவன்… கண்ணுக்கு முன்னே, கன கம்பீரமாக தோரணையாக அமர்ந்திருப்பதை கண்டு, அஞ்சுவின் இதயத்தில் நூறு எரிமலைகள் வெடித்து சிதறியது!


“மிஸ். அஞ்சனா…” உறைந்து இருந்தவளின் அருகே வந்து குரல் கொடுத்த சிவா, அவள் யோசனையை கலைக்க, மெல்ல மூச்சை விட்டவள் முகத்தில் கோபம் கனன்றது. 


அந்த காண்ட்ராக்ட் பேப்பரை பார்வையிட துவங்கி இருந்த அவ்யுக்த், தன் முன்னே நின்றிருந்தவளின் முறைப்பை கவனிக்கவே இல்லை. அவனின் போக்கை அலட்சியம் என கொண்ட அஞ்சுவின் மூளை, இழந்த செயல்பாட்டை மெல்ல மீட்டுக் கொண்டது.


ஒப்பந்தத்தை மேலோட்டமாக வாசித்த அவி, ‘தன்னால் தேடி வந்த ஒரு அருமையான நல்ல வாய்ப்பை (ஆப்பர்ச்சூனிட்டியை) இந்த பெண் ஏன் முழுதாக பயன்படுத்த தவறினாள்?’ என சிந்தித்தவாறே…


“மிஸ். அஞ்சனா, நீங்க ஏன் இந்த காண்ட்ராக்டை ஹானர் பண்ணலை?’” அவ்யுக்தின் கேள்வி அறையில் இருந்த இருவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 


சிவாவோ, ‘என்னடா இது, அந்த செக் பத்தி விசாரிக்காம, பொசுக்குன்னு காண்ட்ராக்ட் பத்தி பேசறாரு? இவர் எப்போ எப்படி நடந்துப்பார்னு புரியறதுக்குள்ள ரிட்டையர் ஆகிடுவேன் நான்!’ ஆச்சரியம் விலகாமல் முதலாளியை பார்த்தான்.


தன் யோசனையில் அமிழ்ந்திருந்த அஞ்சுவால், ‘என்ன திண்ணக்கம் இவனுக்கு? இவனிடம் இங்கே வேலை செய்வேன் என்று நினைத்தானா?’ என்பதை தவிர வேறெப்படியும் எண்ண முடியவில்லை.


பதில் வராது போக, “லுக் ஹியர் மிஸ்., திஸ் இஸ் அ கிரேட் சான்ஸ். யூ வோண்ட் கெட் ஸச் ஆப்பர்சூனிட்டிஸ் ஈசிலி அகைன். இட் வில் ப்ரபெல் யுவர் கரியர் லீப்ஸ் அண்ட் பவுண்ட்ஸ்.” தன்மையாக பேசியது அவ்யுக்த்துக்கே ஆச்சரியம் தான்.


என்ன இருந்தாலும் விட்டல் அங்கிளுக்கு பெரிதும் உதவியவள், விளையாட்டுத்தனம் மிகுதி என்பது அவளின் முன் தின பேச்சிலும், அந்த கான்டராக்ட் காகிதத்தின் நிலையிலும் தெளிவாக விளங்க, ‘சரி… அங்கிள் ஆசைப்பட்டதற்கு நாம் ஏன் குறுக்கே நிற்க வேண்டும்? சொல்லி புரிய வைப்போம் இவளுக்கு.’ என்பதுவே அந்த க்ஷணம் அவ்யுக்தின் எண்ணமாக இருந்தது.


ஆனால், விதி அஞ்சுவின் நாவினில் ஆங்காரமாக நர்த்தனமாட… அவியை பொறுத்த மட்டில் நல்ல விதமாக துவங்கிய இந்த பேச்சின் திசை மாறத் துவங்கியது.


சிறிதும் தயக்கமின்றி, தன் கண்களை நேரே சந்தித்து, எளிதாக பேசுபவனின் பாவனையில், அவனுக்கு சுத்தமாக தன்னை அடையாளம் தெரியவில்லை என்பதை அந்த சில நொடிகளில் உணர்ந்த போது, அஞ்சுவின் உள்ளம் மொத்தமாக அதிர்ந்து, கொதி நிலையை அடைந்தது என்றால் அது மிகையே இல்லை.


‘எப்படி? என்னை நினைவில்லையா இவனுக்கு? ஆனால்… இவன் செய்தது!! இத்தனை ஆண்டுகள் என்னை உயிரோடு கொன்று தின்னும் அந்த நிகழ்வின் தாக்கம் இவனுக்கு சிறிதும் இல்லையா? இவனுக்கு அதெல்லாம் ஒரு பொருட்டில்லையா? அதானே, ஒரு பெண் என்றால் பரவாயில்லை! என்னை போல எத்தனை அப்பாவிகளின் வாழ்க்கையை அழித்தானோ இந்த பெண் பித்தன்?’ 


பழைய நிகழ்வுகளின் தாக்கத்தில் சுழன்றுக் கொண்டிருந்தவளுக்கு, அவ்யுக்தின் இயல்பான த்வனியைக் கேட்டதில், அடங்காத காட்டு தீ போன்ற கோப ஜ்வாலை கொழுந்து விட்டு கனல ‘இவன் தான் விட்டல் அங்கிளின் மகனா? அந்த நல்ல மனிதருக்கு இப்படிப்பட்ட கேடுகெட்டவன் மகனா? அவர் மட்டுமென்ன சந்தோஷமாகவா இருந்தார்? பேச்சுவாக்கில் ‘சின்ன மகனால கொஞ்சம் பிரச்சனை அஞ்சுமா’ என்றாரே? இவனால் எல்லோருக்கும் பிரச்சனை தான் போலும்!’ யாருமற்ற அனாதரவு நிலையில் இருந்த விட்டலின் நலுங்கிய தோற்றம் மனக் கண்ணில் நிழலாட, தன் நிலை பிரழ்ந்து ஆங்காரமாக வார்த்தைகளை துப்ப துவங்கினாள் அஞ்சனா. 


“உன்னை போல ஒருத்தன்ட்ட வேலை பண்ண வேண்டிய அவசியம் எனக்கில்ல.”


“அஞ்சனா…” இரு ஆண்களும் கோபமாக அழைக்க…


“ச்சே… நீ எல்லாம் மனுஷனாடா? பாவம் விட்டல் சார், அத்தனை மென்மையான ஜீவனுக்கு உன்னைப் போல ஒரு மிருகம் மகன்னு என்னால நம்ப முடியலை. அப்படி என்ன, பெத்தவரை சரியா கவனிக்க முடியாத அளவுக்கு செம பிசியா வெட்டி முறிச்ச நீ? அவர் தனியா ஹாஸ்பிடல்ல கஷ்டப்பட்டுட்டு இருந்தப்ப, எந்த பப்புல கூத்தடிச்சிட்டு இருந்த நீ? உன்னை மாதிரி பொம்பளை பொறுக்கீங்களை...” மேலே அஞ்சனா பேசும் முன்…


“தட்ஸ் இனஃப் மிஸ். அஞ்சனா, யூ ஆர் கிராசிங் ஆல் லிமிட்ஸ். அவ்யுக்த் சார், இஸ் நாட் மிஸ்டர்.விட்டல்ஸ் சன். ஹீ இஸ் தி நியூ ப்ராப்ரைட்டர் ஆஃப் அபோட் ஹோட்டல்.” கோபத்தில் மூச்சு வாங்க தன் முதலாளிக்கு குடை பிடித்தான் சிவா. 


‘ச்சே ச்சே… அந்த ஹரீஷின் குணக்கேடுகளை அவ்யுக்த் மீது சேறாக வாரி இறைப்பதா?’  சிவாவால் பொறுக்க முடியவில்லை. 


அவள் மீது பதித்த விழியை எடுக்கவேயில்லை அவ்யுக்த். அதை கண்டு சிவாவுக்கு குளிரெடுக்க, ‘ச்சே… தப்பு பண்ணிட்டோம். இந்த  பொண்ணோட விளையாட்டு குணம் தெரிஞ்சும், இவளை எச்சரிக்கை பண்ணாம போயிட்டோம். இப்ப என்னவாக போகுதோ?’ பயத்தோடு முதலாளியையே பார்த்துக் கொண்டே இருந்தான்.


இவன் விட்டலின் மகனல்ல… என்பதில் சற்று குழம்பி, தன்னை அஞ்சு மீட்டுக் கொண்டு, நீ எவ்வளவு பெரிய கொம்பனாக இருந்தாலும் எனக்கொன்றும், உன்னிடம் பயமில்லை என்ற பாவனையில் அவ்யுக்த்தின் தீப்பார்வைக்கு சற்றும் குறையாத வகையில் நிமிர்வாக முறைத்தவள்… இனியும் இங்கே நிற்க கூடாதென, சிவாவின் புறம் திரும்பி… “நீங்க கேட்ட செக், காண்ட்ராக்ட் திருப்பி தந்துட்டேன்.” வாயிலை நோக்கி நடக்க அடி எடுத்து வைக்க… 


“இது மூணு வருஷத்துக்கான அன்ப்ரேக்கபில் காண்ட்ராக்ட்…” அழுத்தமாக உச்சரித்த அவ்யுக்த்தின் கூற்றில், அஞ்சு நெற்றியை சுருக்கிட, 


“வெல், அபோட் கூட போட்ட இந்த ஒப்பந்தத்தை நீ நிறைவேற்றாம போனா, நஷ்டஈடா சில கோடிகளை கொடுக்கணும். அப்படி கொடுத்தா மட்டுமே இதில் இருந்து உனக்கு விடுதலை! லீகலி பைண்டிங் கான்டராக்ட்!” நிறுத்தி நிதானமாக, ஆழ்ந்த அழுத்த குரலில் உரைத்த முதலாளியின் குணமறிந்த சிவாவோ அதிர்ந்து நோக்கினான்.


குழப்பம் மேலிட, அவன் கூறிய வாக்கியத்தை உள்வாங்கி, “என்ன?” அதிர்வும் அச்சமுமாக இரு ஆண்களையும் நோக்கிய அஞ்சு, “நான் எதுக்கு அத்தனை பணம் தரணும்? இல்ல… இது சும்மா… ஐயோ விட்டல் சார்… நான், எனக்கு…” வார்த்தைகள் வெளியே வரவில்லை.


“மிஸ். அஞ்சனா, நீங்க வேணா விளையாட்டா கையெழுத்து போட்டிருக்கலாம். ஆனா, பிசினெஸ் பண்றவங்க, எல்லாத்தையும் ஜாலியா செய்ய மாட்டாங்க.” பாவம் பார்த்து சிவா விளக்கம் கொடுக்க, ‘ஐயோ, இதென்னடா தலைவலி’ என குழம்பி உறைந்தாள்.


“ஐ வில் டீல் வித் ஹர்!” அவியின் கூற்றில், “சார்…” சிவா தயங்க, வெளியேறும் படி தலையசைத்தவனின் ஆணையை மீற முடியாமல், அங்கிருந்த இன்னொரு கதவு வழியாக அறையை விட்டு அந்த காரியதரிசி வெளியேறினான்.


“என்ன அஞ்சனான்னு பேர் இருந்தா, எனக்கு பயமில்லைன்னு இஷ்டத்துக்கு வாய்க்கு வந்ததை உலருவியா?”


மெதுவே அவளை நோக்கி வருகிறான் என புரிய, அங்கிருந்து சென்று விடும் நோக்கில் சில எட்டுக்களை எடுத்த அஞ்சனாவுக்கு அடுத்து நடந்தது புரிய சில நொடிகள் ஆனது. 


தனக்கு முதுகு காட்டி நின்ற நிலையில், அவசரமாக வெளியே செல்ல முயன்றவளின் துப்பட்டாவை வேகமாக அவ்யுக்த் இழுத்ததில், அவள் தடுமாற, அவளை நிலைகுலைய செய்தவனே, அஞ்சனா விழாதவாறு, அழுத்தமாக பிடித்தும் நிறுத்தினான். 


அவன் நடவடிக்கையில் திகைத்திருந்த அஞ்சு, “டேய் விடுடா” கத்தி, திமிறி சுதாரித்து அவன் பிடியிலிருந்து விலகும் முன், பிடித்திருந்த கைகளை விடத் துவங்கிய அவி, அதை கவனித்தான்.   


டெய்சி டக் (daisy duck) டாட்டூவை பச்சை குத்தியிருந்த அந்த கரத்தை கண்டவனின் கண்கள் ஒரு க்ஷணம் சுருங்கி, மெல்ல விரிந்த நொடி, தன்னை அவன் கண்டுக் கொண்டான் என அஞ்சனாவுக்கும் விளங்க… தன் கையை அவனிடமிருந்து சரேலென்று இழுத்துக் கொண்டவளின் செய்கையை தொடர்ந்த அவ்யுக்தின் கண்கள் அவள் மேனியின் வாளிப்பில் நிலைத்தது. 


அவன் பார்வை செல்லும் இடமும், அவன் எதை பற்றி நினைக்கிறான் என புரியவும், உடல் கூச, கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக் கொண்டு மறுபுறம் திரும்பியவளின் உடல் மெல்ல நடுங்கத் தொடங்கியது. 


வெளியே ஓட வேண்டும் என மனம் சொன்னாலும், கால்களில் வலுவில்லாமல், விழுந்து விடுவாளோ என அஞ்சியவளின் கண்களில் கண்ணீர் அவளையும் கேளாமல் கரையை உடைத்து கொட்டியது.


“வெல்… வெல்… உன் பேரு அஞ்சனாவா? ஹ ஹா ஹா… என்னமோ நேத்து ஜான்சி ராணி மாதிரி பேசின, கடைசியில நீ டிஸ்னி ஜூனியர்னு…” முடிக்காமல் சிரித்தவனின் முகம் மெல்ல கோபத்துக்கு மாறியது. 


திரும்பி நின்றிருந்தவளின் காதருகே மெல்லிய குரலில், “இன்னும் அந்த மிக்கி அண்ட் மின்னி டாட்டூஸ் இருக்கா… இல்ல?” லேசாக குழைந்திருந்த அந்த குரலில், கோபமாக அவன் புறம் அஞ்சனா திரும்ப, அவியின் பார்வையோ துப்பட்டா மறைத்த பிரதேசத்தில் ஒரு நொடி நிலைத்து, மெல்ல மேல் நோக்கி, அவள் முகத்தில் இகழ்ச்சியாக நிலைத்தது.


அந்த நொடி, அங்கேயே இறந்து விட மாட்டோமா என குறுகி நின்றால் அஞ்சனா என்பதே நிஜம். “அம்மா…” ஆம் எப்போதும், அவளை ஓயாமல் திட்டும் அன்னையை தான் அக்கணம் நினைத்துக் கொண்டாள். 


பன்னிரெண்டாவது பரீட்சை முடிந்து, பொறியியல் கல்லூரி அட்மிஷனில் சில குளறுபடிகள் நடக்க காரணமான தந்தையின் மீது இருந்த எரிச்சலில், அஞ்சு செய்த காரியம் தான்... மிக்கி அண்ட் மின்னி மவுஸ் டாட்டூவை மார்புக்கு மத்தியில் குத்திக் கொண்டது. 


வேண்டுமென்றே சுலோ பார்க்க, உடையை மாற்றியவள், அந்த டாட்டூவைக் கண்டு அவர் திட்டி, அரற்றியதில் அல்ப சந்தோஷம் அடைந்தாள். இருந்தும், டாட்டூ ஆடையின் மறைவில் இருப்பதால், அப்பாவை வெறுப்பேற்ற என, சுலபமாக கண்களில் படுமாறு, மீண்டும் கையில் ஒரு டெய்சி டக் படத்தை குத்திக் கொண்டு வந்து மறுநாள் நிற்க, இந்த முறை கேசவன் ஒரு சிவதாண்டவம் நடத்தி விட்டே ஓய்ந்தார். 


அப்போது பெற்றவர்கள் கொதித்ததைக் கண்டு, அவர்கள் தன் கல்லூரி படிப்பில் செய்த குழப்பத்துக்கு பழி வாங்கிய குரூர சந்தோஷத்தில் குதுகளித்தவளுக்கு, இன்று முகம் கொண்டு அல்லாது அதே டாட்டூக்களை கொண்டு ஒருவன் தன்னை அடையாளம் கண்டு கொண்டான் என்பதை நினைத்து அறுவருப்பில் உடல் கூசியது.


பழைய நினைவுகளில் அஞ்சு மட்டுமல்ல அவியும் கூட தன்னை மறந்து சில நொடிகள் நின்றாலும், சுதாரித்து நடப்புக்கு வந்தவன், “இன்னும் ‘இந்த செக் வேணாம்’னு சொல்லி டிராமா போடுறதை நீ நிறுத்தலையா? என்ன, இப்போ புது பாணியில பணம் பறிக்க முயற்சி செய்யற போல? அதுக்குள்ள ‘அந்த’ தொழில் அலுத்துடுச்சா? ஓ… இதுல ரிஸ்க் இருந்தாலும், செம அமவுண்ட் தேத்தலாம்னு கணக்கு போட்ருந்தியா? அச்சோ, உன் கெட்ட நேரம் என்கிட்டே மாட்டின!” க்ரோதம் வழிந்தோட, கிண்டலாக முடித்தான். 


யார் மீதோ இருந்த கோபத்தை, வெறியை தன் மீது காட்டி, அதில் குளிர் காய்கிறான் என புரியாதவளாக, ‘தப்பு செய்தவன் வாய் கூசாமல் தெனாவட்டாக பேச, அவனால் பாதிக்கப்பட்டு, எதிர்காலத்தை இழந்து நிற்கும் நான் ஏன் தலைக் குனிய வேண்டும்?’ சில வருடங்களாக தனக்கு தானே போதனை செய்து, தன்னை தேற்றி வரும் அஞ்சனா, அப்போதும் அவ்வாறே மீண்டு, நிமிர்ந்து நின்று, “பொறுக்கி ராஸ்கல்… அப்பாவி பொண்ணுங்களை நாசம் பண்ற உனக்கு திமிர் குறையவேயில்ல…” என்றிட,


“ஏய்…” அவ்யுக்த் கர்ஜிக்க…


“போடா கழிசடை… நீ என் மேல விழுந்ததால, இந்நேரம் அவமானம் தாளாம செத்து போயிருப்பேன்னு நினைச்சியா? நீ சாக்கடைன்னு புரிஞ்சதால தான் கழுவிட்டு… என்னை சுத்தப்படுத்திட்டேன். நீயா தான் என்னை அழிச்ச, நான் எதையும் இழக்கவேயில்ல. உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணுடா! பார்த்துடறேன்… நீயா இல்லை நானான்னு!”


மூன்று வருடங்கள்--- பெற்றவர்கள், உற்ற நட்புகள்… அவளின் நலனை மட்டுமே விரும்பும் மாமி போன்றோரிடம் கூட சொல்ல முடியாமல், அணுவணுவாய் தனக்குள் புழுங்கி, நரக வேதனையை அனுபவித்து, அந்த வலியே, ஒரு வகையில் அந்த ரணத்தை ஆற்றி… இதோ இன்று அவளை அந்நிலைக்கு தள்ளியவனை எதிர்த்து நிற்கும் அளவுக்கு பக்குவபட்டிருந்தாள்.


அஞ்சனாவின் இந்த அசுர ரூபத்தில், சில நொடிகள் தடுமாறி விட்டான் அவ்யுக்த். எப்போதும், தனக்கு கீழ் இருப்பவரை மிதித்தே பழகியவனுக்கு, அவளின் இந்த நிமிர்வை கண்டு, சொல்லொணா குரோதம் வளர, அவளை வலிக்க அடிக்க வேண்டி…


“ஒரு டெஸ்ட்… ஒரே டெஸ்ட் போதும். உன்னை பெத்தவங்களுக்கு நீ எதை இழந்துட்டு நிக்கறேன்னு பொட்டுல அறைஞ்ச மாதிரி விஷயத்தை பட்டுன்னு புரிய வைக்க! நீ வேணா எல்லாத்தையும் தொடைச்சு போட்டுட்டு திரியலாம். ஆனா, உன் மிடில் க்ளாஸ் பெத்தவங்க மானம், மரியாதை போச்சேன்னு தூக்கில் தொங்கிட மாட்டாங்க?” 


அவன் வீசிய முதல் குண்டில்… அவளின் தைரியம் கொஞ்சம் குன்ற, அடுத்து அவி சொன்னதை கேட்டு, பொத்தென்று தரையில் மடங்கி அமர்ந்தாள்.


“இந்த நிமிஷம்… இப்போ, அன்னைக்கு பெங்களூரில் என் கூட இருந்த டாலி, தீரஜ், கிரண்கிட்ட, ஒரே ஒரு வார்த்தை நான் சொன்னா போதும். அத்தனை பேரும்… எனக்காக, என் கௌரவத்துக்காக... எங்க வேணாலும், யார் முன்ன வேணாலும், நீ ஒரு கால் கேர்ல்னு கற்பூரம் அடிச்சு சத்தியம் பண்ணுவாங்க. அன்னைக்கு நீ இருந்த நிலைமையை, அப்படியே பத்து மடங்கா இன்னும் ஏத்தி பொய் சொல்ல தயங்க மாட்டாங்க. என்ன நம்பலையா நீ? ஒரு கால் போதும்… போடட்டா?” தரையில் அமர்ந்தவளின் கண்கள் உடைபெடுக்க, அவி விடாமல் தொடர்ந்தான். 


“இல்ல… அந்த லூசுப் பய, அதான் அந்த சூரஜையும், உன்னையும் கோர்த்து… செக் ஃபோர்ஜரின்னு ஒரு கதை கட்டினேன்னு வையேன்... இல்ல, இது பெருசா வியூவ்ஸ் போகாது. யெஸ்… உனக்கு பிசினெஸ் பிடிச்சு தர மாமா பய அந்த சூரஜ். ரெண்டு பேரும் புதுசா, இப்போ ஃபோர்ஜரியிலும் இறங்கி இருக்கீங்க. இது இன்னும் செமையா இருக்கே. ‘கல்லூரி மாணவியை வைத்து வயதான பணக்காரர்களுக்கு வலை விரிக்கும் கூட்டம்.’ க்ளிக் பெயிட் போட்டா போதுமே,  யூடியூப் மொத்தமும் சல்லிசல்லியா அவனவன் இட்டுக்கட்டி அலசிட மாட்டாங்க. எப்படா, எங்க என்ன அசிங்கத்தை வெளிச்சம் போட்டு காட்டலாம்னு துடிக்கற சேனல்காரங்களுக்கு நீ டி.ஆர்.பி ரேட்டிங்கை சும்மா ஜிவ்வுன்னு ஏத்தி விடுவ.” 


அவி கக்கிய சொல்லம்புகளினால், மூன்று வருட விடா முயற்சின் பலனாக அஞ்சனாவினுள் துளிர்த்திருந்த தைரியம், க்ஷணத்தில் இருந்த தடமே தெரியாமல் மறைந்திருந்தது.


பெண்களுக்கு எதிரான வன் கொடுமை உடல் அளவில் ஏற்படுத்தும் வலியும் வேதனையும் ஒரு புறம் எனில், உடனே யோசிக்காமல் கண்மூடித்தனமாக பாதிக்கப்பட்ட பெண்ணின் ஒழுக்கத்தின் மேல் எழுப்பப்படும் கேள்விக்குறியும், அவள் மீது தான் தவறு எனும் ரீதியில் சாட்டப்படும் குற்றச்சாட்டும், நம் நாட்டின் சாபக்கேடு. எப்பேர்பட்ட தைரியசாலி பெண்ணையும் நிலைகுலைய செய்ய வல்லது ஆயிற்றே இப்படிப்பட்ட பேச்சு! இந்த நொடி, அப்படிப்பட்ட நிலையில் இருக்கும் அஞ்சனாவும் அதற்கு விதிவிலக்கல்ல! 


தன் பேச்சுக்கு பயந்து அடிபணியும் நிலையில் அஞ்சு இருப்பதை, தன்னால் தாழ்ந்த அவளின் சிரமே சொல்லாமல் சொல்ல... “மிஸ். அஞ்சனா, இப்போ நீ என்ன பண்ற, இந்த காண்ட்ராக்ட் அக்ஸப்ட் செஞ்சு, இங்க அபோட்ல வேலைக்கு சேருற! மத்ததை சிவா டீல் பண்ணுவான்.”


உதட்டை அழுந்த கடித்து, விரல்களை மடக்கி, தன்னை நிலைப்படுத்த போராடி, மெல்ல தலையை உயர்த்தி, கண்களை துடைத்தவள், அவனுக்கு மரியாதை தர மறுத்து குழறிய நாவை அடக்கி, “இங்க பாருங்க, முடிஞ்சுது முடிஞ்சதாவே போகட்டும். நான் என் வழியில போயிட்டு இருக்கேன். பின் விளைவுகளை ஒழுங்கா யோசிக்காம, விட்டல் சார் விருப்பத்துக்காக அந்த செக், காண்ட்ராக்ட் வாங்கிக்கிட்டேன். எனக்கு இங்க வேலை பண்ண இஷ்டம் இல்ல!”


ஏற்கனவே, ஒரு முறை அவன் தந்த செக்கை அஞ்சனா மறுத்த போதே கொதித்தவன் தான் அவ்யுக்த். அஞ்சனாவின் மறுப்பு, அப்போது மட்டுமல்ல, அவனை இப்போதும் கூட வெறியேற்றியது.


“யூ லீவ் மீ வித் நோ சாய்ஸ் டக்கி! இப்போ, உன் பேரன்ட்ஸ்ட்ட பேசட்டா? ஆர்… ஃபோர்ஜரின்னு கேஸ் ஃபைல் பண்ணட்டா? உன் லெவல்ல யோசிக்கணும்னா, இங்கி பிங்கி தான் போடணும். இங்கி, பிங்கி பாங்கி...” அவ்யுக்தின் குரூர விளையாட்டு பேச்சை கேட்டு, “நோ…” அலறிய அஞ்சுவுக்கு மொத்த உடலும் நடுங்கியதில் நிற்கவே முடியவில்லை. 


அவளின் பாதிப்பை யாரும் அறிய கூடாது என முடிவு செய்து தான், இத்தனை ஆண்டுகள் சாதாரணம் போலவே காட்டிக் கொண்டு வாழ்ந்தாள். இன்று இவன், அதை குலைப்பதா? சூரஜ்! அவர் பாவம்… தன் பிரச்சனையில் அவர் அவதிப்படுவதா? சூரஜுக்கு பிரச்சனை ஆகக் கூடாதென அவள் அங்கே வந்த விஷயம் அப்படியே அந்தர் பல்டி அடித்து அவளுக்கே பாதகமாக திரும்பியது பின்னுக்கு போய் விட்டது அஞ்சனாவுக்கு.


“லுக் மிஸ்டர்… உனக்கும், எனக்கும் எந்த சம்பந்தமுமே இல்ல… அன்னைக்கு நடந்த சம்பவம் தவிர! அது… அது… ஒரு விபத்து! சும்மா, அனாவசியமா ஏன் குழப்பத்தை உண்டு பண்றீங்க? நான் யூ.எஸ் போக முயற்சி பண்ணிட்டு இருக்கேன். வீணா, என்னோட எதிர்கால திட்டங்களை கலைச்சு விடாதீங்க. நான் தான் எனக்கு எதுவும் வேண்டாம்னு சொல்றேனே?” 


பாவம் அஞ்சு! அவளுக்கு புரியாதது, அறியாதது, அது நாள் வரை, பழைய விஷயங்களை ஓரளவுக்கு ஒதுக்கி தான் இருந்தான் அவ்யுக்த். இன்றைய எதிர்பாராத சந்திப்பை அடுத்து அவள் பொங்கவும், புகை மூட்டமாக நினைவுகள் மேல் எழும்ப, அஞ்சனாவின் மறுப்பு, நிமிர்வு, தைரியம்… எல்லாம் அவ்யுக்தின் அடிபட்ட ஈகோவை விசிறி விட்டு, அணைவது போல இருந்த கனலை மூட்டி, பழிவாங்கும் தீயை கொழுந்து விட்டு எரிய செய்து கொண்டிருக்கிறது.


கேயாஸ் தியரியில் வரும் பட்டாம்பூச்சி அவள் என பாவம் அஞ்சனாவுக்கு தெரியாது. வேறு சிலரின் மேல் எழுந்த வஞ்சினம்… திசை மாறி அவள் மீது புயலாக மையம் கொண்டு விட்டது! அறிவை மறைத்த ஆத்திரத்தில், இதை அவ்யுக்த்தும் உணராதது அஞ்சனாவின் துரத்ரிஷ்டமே!


“எனக்கு கொஞ்சம் யோசிக்கணும்…” மொட்டையாக மொழிந்தவளை, கூர்ந்து பார்த்தவன்… 


“நீ இங்க வேலையில் சேர, சரியா இன்னைக்கு ஒரு மணிக்கு புது காண்ட்ராக்ட்ல கையெழுத்து போடற! இல்லையா ஒண்ணு ஒண்ணுக்கு… நான் ஆக்க்ஷன்ல இறங்கிடுவேன்.”


‘ஒரே மணி நேரமா?’ அஞ்சு அதிர்ந்து விழிக்க… “கம் டு மை கேபின் சிவா” அதற்குள் இன்டர்கமை இயக்கி இருந்தான் அவி.


‘ஐயோ… அந்தாள் முன் இப்படி கலங்கியா?’ உடனே சுதாரித்து எழுந்து நின்றவள், கைப்பையில் துழவி எடுத்த ஒரு டிஷ்ஷூவால் முகத்தை அழுந்த துடைத்தாள்.


“மே ஐ கம்மின் சார்…”


“எஸ்…”


உள்ளே நுழைந்தவுடன், அறையின் நிலவரத்தை அவசரமாக நோட்டம் விட்ட  சிவா, தலை கவிழ்ந்து, தனக்கு முதுகு காட்டி நிற்பவள் ஓகே என்பதாக பட, “எஸ் சார்” என முன்னே வந்தான். 


“மிஸ்.அஞ்சனா, வுட் லவ் டு பீ அ பார்ட் ஆஃப் அவர் அபோட் இவன்ட்ஸ் டீம். இந்த பழைய காண்ட்ராக்ட்டை, ஸ்வர்ணகீர்த்தியோடதா மாத்திடு சிவா. பெர்க்ஸ் எல்லாம் டிஸ்கஸ் பண்ணி, ரைட்டிங்க்ல மென்ஷன் பண்ணிடு. ஷி வாண்ட்ஸ் டு சைன் இட் ஷார்ப் அட் ஒன் டுடே இட்செல்ஃப்,  சோ பி க்விக் சிவா.” அத்தனை சரளமாக, அவள் விருப்பம் போல மொழிந்தவனை தடுக்க முடியாத தன் நிலை எண்ணி குமைந்தவளின் உண்மை நிலை அறியாது, செவியில் விழுந்த விஷயத்தை நம்ப முடியாமல், சட்டென அஞ்சுவை ஏறிட்டான் சிவா. அவளோ, குனிந்த தலை நிமிராமல் அசைவற்று நின்றிருந்தாள். 


அவியின் தொண்டை செருமலில் அவர்களை வெளியேற பணிக்கிறான் என்பது புரிந்து, “வாங்க மிஸ். அஞ்சனா” என அவளை அழைத்துக் கொண்டு வெளியேறினான் சிவா.


செல்பவர்களை வெறித்துக் கொண்டிருந்த அவியின் உதடுகள் “ஷன்மதி…” என மெல்ல பிரிந்தன. 


அதே நேரம், அவ்யுக்தின் நினைப்பில் வந்த அந்த ஷன்மதியும், ஜெய்சல்மரில் அமர்ந்தவாறு, பயத்தோடு தன் கைபேசியை வெறித்துக் கொண்டிருந்தாள்.




© KPN NOVELS COPY PROTECT
bottom of page