top of page

இணை கோடுகள் 6.1




இணை கோடுகள் 

கோடு - 6.1


முதலில் சூரஜின் கைப்பேசியை அலசி, ஆராய்ந்து, அஞ்சனா என்ற பேரில் யாருடனும் எந்த தொடர்பும் இல்லை என்பதை ஊர்ஜிதப்படுத்தி விட்டே  ஹோட்டலின் காரில் ஏற்றினர்.


சினிமாவில் காட்டப்படும் என்கவுண்டர் காட்சிகள் வேறு மூளையில் பளிச்சிட, நெஞ்சு பதறிட, தனக்கு அடுத்து என்னாகுமோ என்ற பதட்டம் சேர, “என்னை எங்க கூட்டிட்டு போறீங்க சார்?” கலவரமாக கேட்டான். 


“அந்தப் பொண்ணோட பழைய வீட்டை காமி, அங்க விசாரிப்போம்.”


“சார்… பாவம் சார், சின்ன பொண்ணு… இப்படி திடுதிப்புன்னு போய் விசாரிச்சா...” திக்கித் திணறினான்.


“உன் நிலைமையே இங்க டப்பா டான்ஸ் ஆடுது. அதனால அட்ரெஸ் மட்டும் சொல்லு.” ஸ்டீஃபனின் கடுத்த பேச்சில் கப்பென வாய் மூடி, விலாசத்தை நினைவு கூர்ந்து சொன்னான். கைப்பேசியை எடுதவனிடம் இருந்து அதை ஒரு ஆள் பிடுங்கினான்.


“சார்… என் சிஸ்டர்ட்ட அந்த அட்ரஸ் விஷயமா பேசணும்.”


“ம்ம்… ஸ்பீக்கரை போடு…” அவர்கள் அதட்டியதால் கைப்பேசியின் ஒலிபெருக்கியை இயக்கி காத்திருந்தான்.


எடுத்தவுடன் அவன் அக்காவோ, “தடியா, என்ன அதிசயமா என் ஞாபகம்?” என கேலியாக துவங்கினார்.


“சும்மா தான் சுப்பி… ஒரு ஹெல்ப் வேணும்!”


“என்ன மறுபடியும் கோச்சுக்கிட்ட திவியை மலையிறக்க ஐடியா வேணுமா?” 


“அய்யோ சுப்பி…” ஸ்பீக்கரின் உபாயத்தில் மற்றவரும் கேட்கும் நிலையில், தன் மானம் பொதுவெளியில் ஏலம் போகவும் அலறினான்.

 

“அதே தானா? அதானே பார்த்தேன், எங்கடா நம்ம தம்பிக்கு திடீர்னு பாசம் வழியுதுன்னு! டெல் மீ… என்ன சண்டை? நான் தீர்த்து வெக்கறேன்.”


“அதெல்லாம் இல்ல, இது வேற விஷயம், உன் ஸ்டூடன்ட் அஞ்சு..”


“யாருடா?” 


“அந்த பார்ட்டி நடத்துற அஞ்சு…”


“ஓ… நம்ம அஞ்சனாவாடா?”


“ம்ம்… அவங்களே தான்!”


“அவளுக்கு என்ன? ஹே, கல்யாணம் முடிவாகி, எனக்கு பத்திரிக்கை கொடுக்க நம்ம வீட்டுக்கு வந்தாளா? இல்ல போஸ்ட்ல அனுப்பிச்சு இருக்காளா? எப்போடா மேரேஜ்? லீவ் டைம்னா, ஜாலியா ஒரு ரவுண்ட் சென்னைக்கு வந்துட்டு போவேன். சத்திரமா இல்ல ஹோட்டலா? இங்க இனிக்கற சாம்பார் சாப்பிட்டு நாக்கு செத்து போச்சுடா. நம்ம ஊரு கல்யாண சாப்பாடு ஒரு கட்டு கட்ட வரேன்.”


விடாது வளவளத்த அக்காவின் பேச்சில் குறுக்கிட ஒவ்வொரு முறையும் முயன்று தோற்ற சூரஜ், வெறுமே வாய் திறந்து மூடும் காட்சியை காண ஸ்டீஃபனுக்கு சிரிப்பாக இருந்தது.


“கேப் விட்டு பேசு சுப்பி!” சூரஜ் முனக, 


“என்னடா முணுமுணுத்த, சத்தமா பேசு.” என்ற சுப்ரியாவிடம்,


“அது எல்லாம் இல்ல சுப்பி, ஒரு பார்ட்டி விஷயமா பேச, கொஞ்சம் அந்த பொண்ணு காண்டாக்ட் டீடெயில்ஸ் கொடேன்.” 


“அதான் எந்த பரதேசியோ ஹேண்ட்பேக்கை ஆட்டைய போட்டு, மொபைல் தொலைஞ்சு போய் நிறைய கான்ட்டேக்ட்ஸ் போயாச்சே.”


“பேக்கப் செய்யலையா நீ?”


“கடுப்பேத்தாதடா…”


“அச்சோ… ஷார்ட் நோட்டிஸ் பார்ட்டி ஒண்ணு இருக்கு. ரொம்ப வேண்டிய கொலிக்குக்காக, கொஞ்சம் அவசரங்கறதால தான் உன்னை கூப்பிட்டேன்.”


“என் தம்பி, தங்கக் கம்பி இத்தனை ப்ளீஸ் போடுறதால, அத்தான் போன்ல அஞ்சு நம்பர் இருக்கான்னு பாத்து அனுப்பறேன். ஹே சூரி… ஞாபகம் வந்துடுச்சு. அந்த அஞ்சு குடியிருக்கற ஃபிளாட் வாட்ச்மேன் இருக்காருல்ல, அவர் நம்ம தேர்ட் ஃப்ளோர்ல இருக்க கிரிஜா ஆன்ட்டி, வீட்ல வேலை பண்ற கனகாவோட ஹஸ்பன்ட் தான்டா.”


“அஞ்சு இப்போ அங்க குடியில்லன்னு கேள்விப்பட்டேன்!”


“அதுக்கென்ன சூரி? அது அவங்க சொந்த அபார்ட்மெண்ட். அந்த கனகாகிட்ட விசாரிச்சா கூட அங்க வேலை பண்ற புருஷன்கிட்ட கேட்டு விவரம் தர போறா!” 


“ஆமாமில்ல…” என உணர்ச்சி வசப்பட்ட சூரஜ்… “தேங்க்ஸ் சுப்பி, மறக்காம அத்தான் போனை செக் செஞ்சு நம்பர் இருந்தா எனக்கு ஃபார்வர்ட் செஞ்சு விடு. வேலையில் இருக்கேன், அப்புறம் பேசுறேன். பை… ” பேசியை வைத்தவனுக்கு சுவாசம் சீரானது.


கார், அஞ்சனாவின் அண்ணா அபிஷேக்குக்கு சொந்தமான நீலாங்கரை ஃபிளாட் பில்டிங்கின் முன் நிற்க, “போய் பேசிட்டு வாங்க” என ஸ்டீஃபன் அனுமதிக்க, அங்கேயோ ஆட்கள் யாருமே கண்ணில் படவில்லை. 


கதவை தட்டி பார்த்தான். உள்பக்கமாக சாற்றி இருக்க, சின்ன கேட்டும் லாக் போட்டிருந்தது. “என்னடா சோதனை இது சூரி? மெயின் கேட்டை சாத்திட்டு இந்த வாட்ச்மேன் எங்க போயிட்டார்?” புலம்பிக் கொண்டு சுற்றும் முற்றும் பார்த்தவனிடம் வந்த ஸ்டீஃபன், “நேரமாச்சு… எதுக்கும் உங்க அம்மாவுக்கு போனை போட்டு, உங்க சிஸ்டர் சொன்ன வீட்ல விசாரிங்க" என்றிட மீண்டும் காருக்கு வந்து ஸ்பீக்கரை போட்டு அம்மாவை அழைத்தவன்,


“ம்மா…” எனவும்


“என்னடா சூரி, திவிக்கு கூப்பிட நினைச்சு, மறந்து எனக்கு போனை போட்டுட்டியா?” அவன் அம்மாவும் கிண்டலடிக்க…


“அம்…ம்மா… உங்ககிட்ட தான் பேசணும்.” 


“என்ட்ட பேசவா போன் பண்ண சூரி? என்னடா ஆச்சு உனக்கு? காலையில நல்லா தானே இருந்த? உடம்புக்கு ஒண்ணுமில்லையே?” மகளுக்கு கொஞ்சமும் சளைத்தவரில்லை என்பது போல அவன் அம்மாவும் படபடக்க… 


ஸ்டீஃபனோ, “மொத்த குடும்பமே கொஞ்சம் மறை கழண்டவங்க போல!” முணுமுணுத்தார்.


“அம்… ம்மா… தேர்ட் ஃப்ளோர்ல கிரிஜா ஆன்ட்டி வீட்ல வேலை பண்ற கனகாவோட  போன் நம்பர் வாங்கி கொடுங்கம்மா.”


“யாரு அந்த சண்டைக்கார கனகாவா?”


ஹாங்… என விழித்தவன், “எனக்கு அதெல்லாம் தெரியாது, கிரிஜா ஆன்ட்டி  வீட்டுல வேலை பண்றவங்க.”


“உனக்கெதுக்கு அவ நம்பர்?” விளையாட்டு மறைந்து ஊடுருவும் கேள்வியாக வந்து விழுந்தது.


“ம்ம்… வேற எதுக்குமா? தெரிஞ்சவங்க ஆள் கேட்டாங்க, அதுக்கு தான்.”


“அடிங்க, நம்ம வீட்ல வேலை பண்ற புஷ்பா சரியா நேரத்துக்கு வரதில்ல. வேற ஆளு பாக்கணும்னு நாலு வாரமா நான் தொண்ட வரள கத்துறதை, காதுல போட்டுக்காம, அடுத்தவங்களுக்கு வேலைக்கு ஆள் பாக்கறியா நீ? இதான்டா பெத்த மனசு பித்து, பிள்ள மனசு கல்லுங்கறது!” 


“ஐயோ அம்மா, என் நிலைமை புரியாம… ப்ளீஸ் கொஞ்சம் நம்பரை வாங்கிட்டு எனக்கு மெசேஜ் பண்ணுங்க.”


“அவ இப்போ எங்க இங்க வேலைக்கு வரா? அவ புருஷனுக்கு எதோ காலேஜுல வாட்ச்மேன் வேலை கிடைச்சு, குடும்பத்தோட திருவள்ளூர் பக்கம் போயிட்டாளே!”


“என்னம்மா சொல்றீங்க?” 


“ஆமாடா, அவ போகவும் தான்… நம்ம புஷ்பாவுக்கு கொண்டாட்டம். பில்டிங்கல எல்லா வீட்லயும் வேலைக்கு ஒத்துட்டு, என் கழுத்தை அறுக்கறா!”


“அதை முதல்ல சொல்லாம…” பல்லைக் கடித்தவன், “சரி… எதுக்கும் அந்த கிரிஜா ஆன்ட்டிட்ட நம்பர் இருக்கான்னு கேட்டு சொல்லுங்க. நான் வேலையில் இருக்கேன். பை…” பேசியை வைத்தவனுக்கு முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது. 


பின்னே எந்தப் பக்கம் போனாலும் தடையாக பாறாங்கல் விழுந்தால், அவனும் தான் எத்தனை தாங்குவான். இந்த சில மணியில் இவனை எடை போட்டு விட்டதில், ஃபோர்ஜரி செய்யும் அளவுக்கு ஆள் இல்லை என புரிந்ததில் ஸ்டீஃபனுக்கு கூட கஷ்டமாக இருந்தது. அப்போது ஒரு ஓட்டை சைக்கிளை உருட்டிக் கொண்டு வந்த ஆள், அந்த சின்ன கேட்டின் பூட்டை திறந்து உள்ளே போனான். 


இந்த யோசனையில் அமிழ்ந்த ஸ்டீஃபனுக்கு அவன் உதவியாள் ஆள் வந்ததை கூற, “இறங்கு சூரஜ், யாரோ வந்து இருக்காங்க, அவங்களை கேட்போம்.” ஸ்டீஃபன் உடன் வர, கேட்டின் முன் போனார்கள். உள்ளே போனவன் வரும் வழி தான் காணவில்லை. கதவை மீண்டும் உள் பக்கமாக தாழ் போட்டு விட்டு போயிருந்தான்!


“சார்… சார்…” இருவருமே சில முறை குரல் தர, பதிலே இல்லை. ஸ்டீஃபன் கடிகாரத்தை பார்க்க, பயப் பந்து சூரஜ்ஜின் தொண்டையை அழுத்தியது.


முழுதாக ஐந்து நிமிடம் சென்ற பின் நெருங்கி வரும் ஆட்களின் பேச்சு குரல் கேட்டது. இரு ஆண்கள் வந்து கதவை திறந்ததும், “அஞ்சனா…” சூரஜ் துவங்க, 


பகல் டியூட்டி முடித்தவனோ, இவர்களை சந்தேகமாக முறைத்தவாறு கையில் ஒரு சாப்பாட்டு கூடையோடு நடையை கட்டிட, தன் கையில் இருந்த ஸ்டூலை வைத்த மற்ற ஆளோ, “யாரு நீங்க?” என்றவனிடம் 


அஞ்சனா குறித்து கேட்டு, “கொஞ்சம் அவங்க புது விலாசம் தரீங்களா?”


இரு ஆண்களையும் ஏற இறங்க பார்த்த அந்த காவலாளி, “அதெல்லாம் சொல்ல முடியாதுங்க…” 


“சார், கொஞ்சம் அவசரம்… போன் நம்பர்… இல்ல அவங்க அப்பா நம்பர் எதாவது தாங்க…” 


“அட போ சாமி… அதெல்லாம் தர முடியாது” என அந்தாள் விரட்ட பார்க்க, அப்போது ஒரு கார் உள்ளே நுழைவதற்காக விடாமல் ஹார்ன் அடிக்க, ஓடிச் சென்று பெரிய கதவை திறந்தார் அந்த வாட்ச்மேன். 


காரில் இருந்து இறங்கிய ஆள், என்ன ஏது என கேட்க, தனக்கு விவரம் சொன்ன வாட்ச்மேனை விடுத்து, சூரஜிடம் வந்த அவர்… ராஜாராமன்!


“யார் சார் நீங்க? எதுக்கு அஞ்சு பாப்பாவை பத்தி விசாரிக்கறீங்க?”


இப்போது ஸ்டீஃபன், தன் பிசினெஸ் கார்டை நீட்டி… “இங்க அஞ்சனான்னு, பார்ட்டி ப்ளானர் பத்தி தெரிஞ்சவங்க சொன்னாங்க. அதான் ஒரு இவன்டுக்கு புக் பண்ண வந்தோம். இப்போ இந்த ஃப்ளாட்ல இல்லைன்னாலும், எதாவது அவங்க காண்டாக்ட் நம்பர் கிடைச்சா நல்லா இருக்கும்னு கேட்டுட்டு இருந்தோம் சார்.”


அந்த பிசினெஸ் கார்டில் ஸ்டீஃபன்… ஸ்வர்ணகீர்த்தி க்ரூப்ஸ் ஹெட் ஆஃப் செக்யூரிட்டி ஆபரேஷன்ஸ் என இருப்பதை படித்து இம்ப்ரெஸ் ஆன ராஜாராமன், “நம்ம ஓனர் பொண்ணு தான். அட, இந்த வேலை தான் பண்ணுதா அந்த குட்டி? இத்தனை நாள் எனக்கு தெரியாம போச்சே! ச்சே... தெரிஞ்சு இருந்தா என் பொண்ணு பர்த்டேக்கு நானும் கேட்டு இருப்பேனே!” சொல்லும் போதே மகளுக்கு அடுத்த பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்த அந்த பெண் பித்தன்,


“இந்தாங்க சார், பெரியவர் நம்பர் தான் இருக்கு. ஆனா, அவர் இப்போ ஊர்ல இல்ல… யூ.எஸ் போயிருக்கார். நானே இமெயில் தான் பண்றது.” என அந்த தகவல்களை தயக்கமில்லாமல் தர, கைப்பேசியில் அதை ஏற்றிக் கொண்டார் ஸ்டீஃபன். 


“அஞ்சு பாப்பாட்ட… இந்த வேலை தவறாம கிடைக்க, ராஜாராமன் தான் ஹெல்ப் பண்ணதா, என்னை பத்தி நல்லதா மறக்காம சொல்லுங்க சார்.” ஈயென  இளித்த ஆள் விடைப் பெற்றான்.


மீண்டும் தடங்கல் என சூரஜ் வாட, அதற்குள் அந்த வாட்ச்மேன் “மன்னிச்சுடுங்க சார், தெரியாதவங்கட்ட ஓனர்ஸ் யார் டீட்டெயில்ஸும் நாங்களா தரக் கூடாது. அதான் அப்படி சொல்லிட்டேன். இருங்க அந்த பாப்பாவோட நம்பர் என்கிட்டே இல்ல. அவங்க ஃபிரெண்டு கடைதுன்னு ஒருக்கா ஒரு லேண்ட்லைன் நம்பரை குடுத்துட்டு போச்சு, அதைத் தரேன். இப்போ பெரியவர் வெளிநாட்டுல இருக்காரு… பாவம் நல்ல பிள்ள. அதுக்கு தானா தேடி வர வேலையை ஏன் விடணும்?” பேசிக் கொண்டே அவர்களை உள்ளே இருந்த ஆஃபீசுக்கு அழைத்து சென்று, அங்கிருந்த டைரியில் குறித்து வைத்து இருந்த கலைவாணியின் பார்லர் எண்ணை தந்தார்.


நன்றி சொல்லி வாங்கியவர்கள் காரில் ஏறி அங்கிருந்து கிளம்பினர். அந்த எண்ணை அழைக்க, யாரும் எடுக்கவில்லை. இரு பெண்களும் வேலையில் பிசி… போனை அட்டென்ட் செய்யவில்லை.


நீலாங்கரையில் இருந்து வாகன நெரிசலில் சிக்கி இவர்கள் ஆர்.ஏ.புறம் நெருங்குவதற்குள்ளாக அந்த எண்ணை வைத்து ஸ்டீஃபன், விலாசத்தையே கண்டு பிடித்து விட, அவர்கள் வேலை செய்யும் அசுர வேகத்தைக் கண்ட சூரஜ் அதிர்ச்சியில் வாயை பிளந்தான். 


இதெல்லாம் சாதாரணமப்பா  என்னும் தோரணையில் கார் பிரின்சஸ் பார்லரை நோக்கி சீறி பாய்ந்தது.


பார்லர் இருந்ததோ, மெயின் ரோட்டை ஒட்டி இருந்த சந்தின் முக்கில். அந்த கட்டிடத்துக்கு எதிரே காரை நிறுத்தி விட்டு, இறங்கினர் சூரஜும், ஸ்டீபனும். சரியாக அப்போது தான் கடையை அடைத்துக் கொண்டிருந்தாள் கலை. அவசரமாக சாலையைக் கடந்து ஓடிய சூரஜ், “ஹலோ மேடம்” உரக்க  அழைத்தான்.


திரும்பிய பெண்ணை கண்டு, “அட… நீ… நீங்க ரவி ஆளு தானே? அச்சோ, சாரி இல்ல வைஃப்” உளறிக் கொட்டினான்.


அவனை கண்ட கலை சிரித்துக் கொண்டே, “சூரி அண்ணா… என்ன ஆச்சரியம்? அஞ்சு கூட இன்னைக்கு உங்களை பார்த்ததா சொன்னா. உங்களுக்கு கல்யாணம் ஆகிட்டுதாமே? எங்களை எல்லாம் இன்வைட் பண்ணவேயில்ல நீங்க. பழைய ஃபிரெண்ட்ஸ் எல்லாம் மறந்துட்டீங்க! இனி தான் அவருக்கு போன் போட்டு விஷயத்தை சொல்லலாம்னு இருந்தேன்.” 


ஸ்கூல் சிநேகிதனான ரவியின் மனைவியாகிய கலைவாணியின் மலர்ந்த முகத்தை பார்த்த பின்னர் தான், சூரஜுக்கு அத்தனை நேர இறுக்கம் கொஞ்சம் தளர்ந்தது. நண்பனின் மனைவி, தன்னை ஓரளவுக்கு அறிவாள் என்ற அடிப்படையில் எப்படியும் அஞ்சுவின் புது விலாசம் கிடைக்கும் எனும் நம்பிக்கை கூட, ஸ்டீஃபனை பார்த்தான். மேல பேசு என்பதாக அவர் கண் ஜாடை செய்ய,


“எப்படிமா இருக்க கலை? ரவி நல்லா இருக்கானா? எப்போ வரான்? இப்போவும் துபாயில தான் இருக்கானா? குட்டி பையன் தானே உங்களுக்கு? குழந்தை நல்லா இருக்கானா?” 


“நாங்க நலம் அண்ணா. இப்போ மஸ்கட்ல இருக்காங்க, இன்னும் ஆறு மாசத்துல வராங்க. வாங்கண்ணா, மேல தான் நம்ம வீடு. உங்களை பார்த்தா அத்தை ரொம்ப சந்தோஷப்படுவாங்க.”


“ஐயோ… இப்போ வேணாம்மா, கமலாம்மாவை விசாரிச்சதா சொல்லு. சாரி, அஃபீசியல் வேலையில் இருக்கேன். உன்ட்ட, அஞ்சு போன் நம்பர் இருக்குமா? ஒரு பார்ட்டி விஷயமா அவசரமா பேசணும். காலையில நம்பர் வாங்க மறந்துட்டேன்.”


“அவ இப்போ பார்ட்டிங்க ஒத்துக்கறது இல்லையேண்ணா!”


“ம்ம்… காலையிலயே சொன்னாம்மா, என்னாச்சு? சூப்பரா பண்ணுவாளே! பெரிய வெட்டிங் ப்ளானர் ஆகணும்னு அக்காட்ட சொல்லுவா!”


“வீட்ல பிரஷர்… அதான் இதை மூட்டை கட்டிட்டா! கேக்க மறந்துட்டேன்… சுப்ரியா டீச்சர் எப்படி இருக்காங்க?” 


“அக்கா நல்லா இருக்கா… கலைவாணி, இஃப் யூ டோன்ட் மைன்ட், அஞ்சு நம்பர் தாயேன். நல்ல ஆப்பர்ச்சூனிட்டி ஒண்ணு இருக்கு, எதுக்கும் ஒருவாட்டி அஞ்சுட்ட கேட்டுடறேனே.”


“இந்தாங்க நம்பர்,” என கலை மளமளவென ஆருயிர் தோழியின் நம்பரை ஒப்பிக்க,  “தேங்க்ஸ் ம்மா…” என்றவனிடம்,


“நான் தான் உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லணும் ண்ணா! எப்படியாவது எங்க அஞ்சுவுக்கு ஒரு நல்ல வாய்ப்பு கிடைச்சா எனக்கும் சந்தோஷம் தான்.” 


“வீட்ல எல்லாரையும் விசாரிச்சதா சொல்லும்மா…”


“கண்டிப்பா ண்ணே, ரோட்ல வெச்சு இன்வைட் பண்றேன்னு தப்பா நினைக்காதீங்க. அவர் ஊர்ல இருந்து வந்தப்புறம், நீங்களும், அண்ணியும் விருந்துக்கு வரணும்.” மறக்காமல் சூரஜ்ஜின் பேசி எண்ணை பெற்றுக் கொண்டு விடை தந்த கலைக்கும், சந்துவை போலவே இந்த அபோட் செக் விஷயம் தெரியும் தான். 


இது போன்றவற்றில் அவள் அதிகம் ஆலோசனை தருவதில்லை. அப்படிப்பட்டவள், ‘செக்கை திருப்பி தந்து விட்டேன்’ என்று அன்று மதியம் அஞ்சு வந்து கூறிய போது, ‘லூசா நீ’ என திட்டினாள். 


அப்படி பேசும் போது தான் இருவருக்கும் அறிமுகமான சூரஜ்ஜை சந்தித்ததை சொல்லி ‘அண்ணாட்ட கொஞ்சம் மரியாதையில்லாம கடுப்பா பேசிட்டேன் கலை. சும்மா, நொய் நொய்னு பார்ட்டி பிளானிங் பத்தி நச்சு எடுத்தார்.’ ஏற்கனவே அஞ்சு மேலோட்டமாக சொல்லியிருந்ததால், இப்போது ஏதோ வேலை விஷயம் என்ற தோரணையில் சூரஜ் சொன்னதை அப்படியே நம்பி விட்ட கலைவாணி, காலையில் அவர்களிடையே நடந்தது, பொதுப்படையான நலன் விசாரிப்பு பேச்சு என அறிந்திருக்கவில்லை.


அஞ்சுவின் எண்ணை தந்து அவ்யுக்த் என்னும் சிங்கத்துக்கு தோழியை தான் இறையாக்கியதை,  பாவம் கலை அறியவில்லை.


காரில் ஏறுவதற்குள்ளாகவே, அஞ்சுவின் பேசி எண்ணை தன் டீமுக்கு அனுப்பி விட்டான் ஸ்டீஃபன். வண்டியை கிளப்பி, ஒரு ரோட்டோர கடையின் முன் நிறுத்தி அனைவருக்கும் டீயை சொல்லி விட்டு சிவாவுக்கு தகவல் பகிர்ந்தான். 


சிவா போட்ட கட்டளைகளை கேட்டுக் கொண்டவன், பொறுமையாக தேநீர் பருகிக் கொண்டே, “ஏன் தம்பி இப்படி விவரம் இல்லாம இருக்கீங்க? அப்போவே உங்க ஃபிரெண்ட் சம்சாரம் அந்த அஞ்சனா பொண்ணுக்கு தோஸ்த்னு சொல்லியிருந்தா… இந்நேரம் நம்ம வேலை சுருக்க முடிஞ்சுருக்கும்ல?” 


ஸ்டீஃபன் அப்படி கேட்கவும், கடுப்பாகி விட்டான் சூரஜ். இப்போது நாவடக்கம் முக்கியம் என்பது தோன்றவும், “சின்னவர் உலுக்கினதுல, என் தலை கிறுகிறுத்து போயிருச்சு. இதுல இந்த வெவரம்லாம் யாருக்கு ஞாபகத்துக்கு வருது?” என்றவனை, இது தேறாத கேஸ் என்பது போல பார்த்து, ஒரு வடையை கடித்தார் அந்த செக்யூரிட்டி.


சூரஜுக்கோ, இப்போது பொறுமை குறைந்தது. இன்று இரவு அவன் வீடு செல்வது இப்போது அஞ்சு சொல்ல இருப்பதை வைத்து தான். ‘கடவுளே, என்னை காப்பாத்து’ என மனம் ஒலமிட்டது. 


சூரஜை மேலும் சோதிக்காமல் அஞ்சுவின் விலாசம் குறுந்தகவலாக வர, அடுத்த நொடி கார் அடையார்  நோக்கி பறந்தது. 


ஸ்கூட்டியில் வீடு வந்து சேர்ந்த அஞ்சு, குளித்து விட்டு, இப்பி நூடில்ஸ் செய்வோம் என சமையலறைக்குள் நுழைந்தாள். மைதி மாமியும், நந்து மாமாவும், ஏதோ கதாக்காலாட்க்ஷேபனைக்கு சென்றிருந்தனர்.


பேசி அடிக்க, கலையின் பேர் வரவும், “இப்போ தானே வந்தோம்! அதுக்குள்ள எதுக்கு கூப்பிடறா?” என பேசியை காதுக்கு கொடுத்தாள்.


அந்த பக்கம் குழந்தை ஸ்ரவனோ, “தூக்கும்மா,” என கலையை நச்சரித்துக் கொண்டிருந்தது காதில் விழுந்தது.


“ஹே லூசு, முதல்ல குழந்தையை கவனி. இப்போ தானே கிளம்பினேன், உடனே எதுக்கு போன் போட்ட?” அஞ்சு திட்டவும்…


“ம்ம்… எல்லாம் வேண்டுதல் எரும. சொல்றதைக் கேளு, சூரஜ் அண்ணா வந்தாங்க, ஏதோ முக்கிய வேலையாம். உன்ட்ட பேசுவாங்க… காலையில போல தாட் பூட்ன்னு சும்மா கத்தாம, ஒழுங்கா பேசு. பை…” மொட்டையாக தகவல் தந்து விட்டு பேசியை வைத்தாள்.


“இந்த லூச, எதுக்கு அவர்ட்ட பேச, சும்மா ஏம்மா பார்ட்டி அரேஞ் பண்ணலைன்னு கேப்பாரே?” முனகியவள், “சரி, வரட்டும் பேசிக் கொள்ளலாம்” என நூடில்ஸ் கிண்ட துவங்கினாள்.


கலைவாணியோ ‘வெளிநாடு போனதுல இருந்து, ரவி தான் அத்தனையா பழைய ஃபிரெண்ட்ஸ் கூட இப்போ கான்டாக்ட்ல இல்லையே, அப்புறம் நம்ம கடை வெச்சதோ, அதோட அட்ரெஸ்சோ இவருக்கு எப்படி கிடைச்சுது?’ என யோசிக்க தவறினாள். ‘நான் பேசி எண் மட்டுமே தந்திருக்கிறேன்’ என்றும் அஞ்சுவிடம் தெளிவாக தெரிவிக்கவில்லை. 


மொட்டையாக ‘பேசுவார்’ என்ற தோழியின் கூற்றை மட்டும் கேட்ட அஞ்சுவும், அடுத்த அரை மணியில்... ‘உன்னை பார்க்க சூரஜ்னு ஒரு தம்பி வந்துருக்கும்மா!’ இன்டர்காமில் வாட்ச்மேன் தெரிவிக்கவும், ஏற்கனவே கலை சொன்னது தானே என நினைத்தாளேயொழிய, வேறு விதமாக சந்தேகப்பட அவசியமில்லாமல், “இதோ வரேன் ண்ணா, கொஞ்சம் உங்க ஆஃபீஸ்ல உக்கார வைங்க,” காவலாளியிடம் சொல்லி விட்டு, அபார்ட்மென்ட் கீழ் தளத்துக்கு விரைந்தாள். 


அந்த அறையினுள் நுழைந்த அஞ்சு, அங்கே சூரஜ்ஜுடன் இன்னொருவரும் அமர்ந்திருப்பது கண்டு, என்ன விஷயம் என யோசனையோடு, “ஹாய் சூரி ண்ணா,” உற்சாகமாகவே வரவேற்றாள்.


“ஹாய் அஞ்சு… சாரி, இந்நேரத்துல தொந்தரவு செய்யறதுக்கு.” அதுவரை எப்படியும் அஞ்சுவை சந்திக்க வேண்டும் என துடித்தவனுக்கு, இருட்டிய பின், இளம் பெண்ணை கேட்டு, அந்த காவலாளியிடம் விசாரிக்கவும், அவரின் முகத்தில் தோன்றிய அதிருப்தி பாவனையில், தப்பு செய்கிறோம் என உறைத்ததில் இப்போது அவனையும் அறியாமல் ஒரு தயக்கம் குடிக் கொண்டது.


“இட்ஸ் ஒகேண்ணா, ஏதோ முக்கியமா பேசணும்னு கலை சொன்னா… என்ன விஷயம்?”


“அது அஞ்சு… இன்னைக்கு காலையில அங்க அபோட்ல…”


டக்கென்று “சாரி சூரிண்ணா. என் மேல இருக்கற அக்கறையில தான் நீங்க விசாரிச்சீங்க. பட், அப்போ ஏதோ ஒரு மூட் ஆஃப். உங்கட்ட கோபமா பேசிட்டேன். வெரி சாரி.” உணர்ந்து மன்னிப்பு வேண்டியவளிடம்,.


“ஆ… தட்ஸ் ஓகே அஞ்சு… நான் அதை பத்தி பேச வரலை…”


“இருங்க… நான் சொல்லி முடிச்சுடறேன். ப்ளீஸ் ண்ணா, பெர்சனல் ரீசன்ஸ்னால நான் இப்போ எந்த மாதிரி ஃபங்க்ஷனும் அரேஞ்ச் பண்றதில்லை. வேற எதுவும் விஷயம்னா பேசுங்க.” 


சூரஜ் அந்த ஹோட்டலில் வேலை செய்வது அஞ்சனாவுக்கு தெரியாது. அஞ்சுவுக்கும், விட்டல் சாருக்குமான தொடர்பு எப்படி என சூரஜ் அறியான். இந்த குழப்பம் தீராமலேயே, இருவருமே தத்தம் பேச்சை வளர்த்தனர்.


“அஞ்சு, ப்ளீஸ் ஒரு டூ மினிட்ஸ் நான் பேசுறதை கேளு. நான் அபோட்ல தான் வேலை பண்றேன். இன்னைக்கு காலையில நீ அங்க ஹோட்டல் வந்து ஒரு செக் கொடுத்தல்ல…” 


“ஹே, நீங்க விட்டல் சார்ட்ட தான் வேலை பார்க்கறீங்களா? எப்படி இருக்கார் சார்? இப்போ உடம்பு பரவாயில்லையா? ப்ச்… கெஞ்சியும் ஒரு வாட்டி பார்க்க விடலை அந்த ரிஷப்சனிஸ்ட். அப்போவே கலை சொன்னா, ‘நீ வேணா பாரு அஞ்சு, நீ செக்கை திருப்பி கொடுத்ததால, உன்னை தேடி வருவாரு அந்த பெரியவர்’னு. நான் கூட நம்பலை… வாவ், நிஜமாவே என்னை பார்த்து பேச, உங்களை விட்டல் சார் தான் அனுப்பிச்சாரா?”  கண்கள் ஒளிர படப்படத்தாள்.


“அப்போ விட்டல் சாரை உனக்கு தெரியுமா அஞ்சு?” “என்னது, விட்டல் சார் ஆள் அனுப்பறதா?” சூரஜ், ஸ்டீஃபன் இருவருமே இரு வேறு கேள்விகளை கேட்க,....


அதை சரியாக காதில் வாங்காமல், “அந்த ரிஷப்சனிஸ்ட் சுத்த மோசம் ண்ணா. சாருக்கு, என்னை நல்லாத் தெரியும்னு சொல்றேன். என் பேச்சை காதுல போட்டுக்கலையே அவ. ஆமா, நீங்க அங்க என்ன வேலை பண்றீங்க சூரிண்ணா?”


“நான் ஒரு மட்டி, நீங்க எங்க இங்கன்னு ஒரு வார்த்தை நல்லவிதமா உங்களை பதிலுக்கு விசாரிச்சிருந்தா, நீங்க ஹோட்டல வேலை பண்ற விஷயம் அப்போவே தெரிஞ்சிருக்கும். நானும் ஒரு ரெண்டு நிமிஷம் சாரை பார்த்துட்டே வந்துருப்பேன்.” அஞ்சு தன் பாட்டில் போட்டு தாக்கிட, அப்போது தான் சூரஜுக்கு விஷயம் பிடிபட்டது.


நால்வருமே ஒரு நிமிடம் வாயடைத்து போயினர். ஆம்… நால்வர் தான்! அஞ்சு, அறையுனுள் நுழைந்த போதே கைபேசியில் சிவாவை அழைத்து விட்ட ஸ்டீஃபனுக்கு இடப்பட்ட கட்டளை அது. ஆஃபீசில் அவ்யுக்த்துடன் வேறு விஷயங்களை ஆலோசித்துக் கொண்டிருந்த சிவா, ஒலிபெருக்கியை போட, இங்கே நடக்கும் பேச்சு முழுதுமே அவர்களிருவருக்கும் நேரலையாக ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது.


முதலில் சுதாரித்த அவ்யுக்த், பேசியில் ஒரு கேள்வியை எழுப்ப, அதை அஞ்சுவிடம் கேட்டான் ஸ்டீஃபன். 


யார் இவர் என்பதாக அவரை அளவிட்ட அஞ்சுவிடம், “சார்… ஸ்டீஃபன், அங்க ஹோட்டல்ல என் கொலீக்.” சூரஜ் இடையிட…


“விட்டல் சாரை எப்படி பழக்கம்?” என்ற ஸ்டீஃபனின் கேள்வி அஞ்சுவை கோபம் கொள்ள செய்ய, 


“ஏன் சார், நைட் இந்நேரத்துக்கு வந்து என்ட்ட பேசற உங்களுக்கு அது தெரியாமையா இருக்கும்! உங்கட்ட எனக்கு என்ன பேச்சு?” என சூரஜ் புறம் பார்த்தவள்,


“பாருங்க ண்ணா, நீங்க வேலை பத்தி பேச போறதா கலை சொன்னா. அங்க ஹோட்டல்ல சேர எனக்கு சுத்தமா இஷ்டம் இல்ல. அப்புறம், அந்த செக் எனக்கு வேணவே வேணாம். சும்மா, இனி இது விஷயமா தொந்தரவு பண்ண வேணாம்னு விட்டல் சார்கிட்ட சொல்லுங்க. சார், என்னை தப்பா நினைக்க கூடாது. இதை நேராவே அவர்ட்ட சொல்லலாம்னு நினைச்சு தான் வந்தேன். அந்த ரிஷப்ஷனிஸ்ட் நந்தி மாதிரி குறுக்க வந்துட்டா.” 


நால்வருக்குமே ஒரு விஷயம் தெளிவாகியது. விட்டலுக்கும், அஞ்சுவுக்கும் ஏதோ தொடர்பு! அது என்னவென புரியாமல், சிவா சில கேள்விகளை தொடுக்க… ஸ்டீஃபன் தன் கடமையில் கருத்தானார்.


© KPN NOVELS COPY PROTECT
bottom of page