top of page

இணை கோடுகள் 4





கோடு - நாலு 


சூரியன் மேற்கில் மறைய துவங்கிய இனிய பொன்மாலை பொழுது… 


நாளெல்லாம் சுட்டெரித்த வெயிலுக்கு மாற்றமாக, வங்க கடலில் இருந்து வீசிய மென்காற்று, லேசான இதத்தை சென்னையின் பெசன்ட் நகர் - எலியட்ஸ் பீச் ஏரியாவில் பரப்பிக் கொண்டு இருந்தது. 


மைதிலி மாமி வர விரும்பியதால், அவரை அஷ்டலக்ஷ்மி கோவிலுக்கு தன் ஸ்கூட்டியில், அழைத்துக் கொண்டு வந்திருந்தாள் அஞ்சனா. வெள்ளிக்கிழமை ஆதலால், கோவிலில்  கூட்டம் அலை மோதியது. 


பக்தி பரவசத்தில் மாமி உருகி நிற்க, கோவிலை வேகமாக வலம் வந்த அஞ்சு, வெளியே வந்து, பீச் நோக்கி நடக்க ஆரம்பித்த போது, கோவில் வாசலில் காரில் ஏறிக் கொண்டிருந்த இளம் பெண்ணை கண்டு அதிர்ந்து, நடையை நிறுத்தி, நின்ற இடத்திலேயே சிலையாகினாள். 


சரியாக அதே நேரம் நிமிர்ந்த அந்தப் பெண், அஞ்சுவை பார்த்தவுடன், முகத்தை இளக்காரமாக சுளித்தாள். காரிலிருந்த வேறு யாரோ குரல் கொடுத்திட அப்பெண், உடனே ஏறியதும் கார் விருட்டென கிளம்பியது.


“இந்தாமே… வேன்காரன் ரிவர்ஸ் வர்றது தெரில்ல? சும்மா மரம் மாதிரி வழியில நின்னுக்கிட்டு, ஓரமா போ…” யாரோ வண்டி ஓட்டுநர் கடுப்பாக குரல் கொடுத்ததில் ப்ரக்ஞை வரவும், அவ்விடத்தை விட்டு நகர்ந்த அஞ்சு, வேகமாக கடற்கரையை நோக்கி விரைந்தாள்.


எரிச்சலும், வலியும் ஒன்றோடு ஒன்று போட்டிப் போட்டுக் கொண்டு பேரலையாக உள்ளத்தில் எழும்பியதில் உடம்பும், மனமும் காந்தியது.


இதமான கடல் காற்றினால் கூட அந்த வெக்கையை போக்க முடியவில்லை. ‘கூடாது… நினைக்காதே அஞ்சு! அதான் அமெரிக்கா போக முடிவு செஞ்சுட்டயே, இந்த முடிவை மட்டும் எப்பாடுபட்டாவது செயல்படுத்திடு. அப்புறம்...’ அதற்கு மேல் அவள் எண்ணம் தடை படும் வண்ணம், செல்பேசி ஒலி எழுப்பியது. 


மாமியின் பேரை பார்த்ததும் தான் அவரின் நினைவே வர, வெறுமே அருகிருந்த கடைகளை வேடிக்கை பார்க்க ஆலயத்தை விட்டு வெளியே வந்தவள், காண கூடாதவளை கண்டு விட்ட அதிர்வில் கடற்கரைக்கு நடந்து வந்து விட்டதை எண்ணி, தலையில் தட்டி கொண்டு, தான் பீச்சில் இருப்பதாக கூறியதற்கு, மாமி கேட்ட கேள்விகளுக்கு ஒரு சமாளிப்பான பதிலை கொடுத்து, “வந்துட்டேன் மைது செல்லம்,” என்றிட…


“நானும் சித்த கடல் காத்தை வாங்கிக்கறேன். அங்கேயே இரு, வரேன்…” என்றவருக்கு, அவள் இருந்த இடத்திற்கு அடையாளம் கூறி விட்டு பேசியை வைத்தவள், முகத்தை அழுந்த துடைத்து, சுற்றி இருப்பவர்களை இலக்கில்லாமல் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.


அவள் அருகே வந்து அமர்ந்த மாமி, தொன்னை பிரசாதத்தை அவளிடம் நீட்டியவாறே, “கோவிலுக்கு வந்தா பொறுமையா பகவானை சேவிக்கணும். சும்மா பேருக்கு ஒரு ஹலோ சொல்லிட்டு, இங்க பீச்சுல வேடிக்கை பார்க்க வந்து உட்கார்ந்திட்டியா?” 


“ரொம்ப கூட்டம் மாமி, அது என்னவோ ஜன நெரிசலா இருக்கும் போது, கண்ணை மூடினாலும், மனசை ஒருமுகப்படுத்தி என்னால சாமி கும்பிடவே முடியறதில்லை. சுத்தி கேக்கற பேச்சு, போன் சத்தம்,... பிள்ளைங்க அழுறது… இதுலல்லாம் தான் கவனம் போகுது. அதான் சின்ன ஹலோவோட நான் வெளிய வந்துடறேன்.”


“வாயாடி…” என்ற மாமியும், அவளோடு சேர்ந்து தங்கள் சுற்றுப்புறத்தை ரசிக்க ஆரம்பித்தார். மனம் சற்றே சமன்பட, “கிளம்பலாம் மாமி…” என்றவள், வீட்டை நோக்கி ஸ்கூட்டியை செலுத்த ஆரம்பித்தாள்.


வீட்டுக்கு வந்தவளுக்கு அந்த நாளின் அடுத்த அதிர்ச்சியை சந்து கொடுத்தான். மாமியோடு வீட்டில் நுழைந்தவளின் முன் ஒரு காகிதத்தை சந்து விசிற, அதை எம்பி பறித்த அஞ்சு, அதில் இருந்த செய்தியை ரசிக்கவில்லை.


‘நம்ம ஊரு சிங்காரி… சிங்கப்பூரு போனாளாம்…’ குதூகலமாக சந்து ஹம் செய்ய, மாமி புரியாத பார்வை ஒன்றை அவன் புறம் செலுத்தினார்.


“போதும்டா… வந்த நேரமா, இதே பாட்டை முணுமுணுத்துட்டு, காது புளிச்சுடுச்சு,” நந்து மாமா சலிக்க,...


“நாளைக்கு இந்நேரம்… ஷூ…ஜூம்…. ஃப்ளைட்ல நான் பறந்துட்டு இருப்பேன். ஹுர்ரே…” இம்முறை மகிழ்ச்சி குதூகலத்தில் ஒரு சிறு நடனத்தை ஆடி முடித்தான் சந்து. 


“சிங்கப்பூர் போற விஷயத்தை நீ ஏன் முன்னையே சொல்லல எரும?” அஞ்சுவின் குரலில் வருத்தமும், கோபமும் சேர்ந்தே இருந்தது.


“சாரிடா… போன முறை ஜெர்மனி போக போறேன்னு, ரொம்ப பந்தா விட்டு கடைசில, நிறைய குழப்பம் நடந்து போக முடியாம போயிடுச்சுல்ல, அதான் இந்த வாட்டி… ஐயா கொஞ்சம் அடக்கி வாசிச்சேன்.” 


சந்துவின் தன்னிலை விளக்கத்தில், ‘‘அதுவும் நிஜம் தானே...’ என சமாதானமாக துவங்கிய அஞ்சுவுக்கு, ஏனோ மனம் ஒரு நிலையில் இல்லை. ‘மாலையில் அவளை பார்த்ததால் இருக்குமோ…’ என்று நினைத்தவள், ‘சே… நம்ம ஜண்டு முத முத ஃபாரின் மண்ணை மிதிக்க போறான். இப்போ போய் கண்டதையும் நினைக்கணுமா?’ என்று தெளிவு பெற்று நிமிர்ந்தவள், அவளை  கண்ணெடுக்காமல் ஆராய்ச்சி பார்வை வீசிக் கொண்டு அமர்ந்திருந்த சந்துவை கவனித்து, சஞ்சல மனதை மறைத்து, அவன் கரம் பற்றி தோள் சாய்ந்தாள்.


சந்துவின் அண்ணா சூர்யப்ரகாஷுக்கு ஹைதராபாதில் நல்ல வேலை அமைந்தவுடன், மொத்த குடும்பமும் அங்கே இடம் பெயர்ந்து விட்டனர். ஐ.டி. துறை என்பதால், சந்துவுக்குமே அங்கே சுலபமாக வேலை அமைந்தது. ஆனால், வீட்டினரோடு இருப்பதை விட, உயிர் நட்பான அஞ்சுவை பிரிய மனமில்லாமல், சென்னையிலேயே தங்கி விட்டான். 


ப்ரொஜெக்ட் வேலையாக, உள்நாட்டிலேயே பல்வேறு நகரங்களுக்கு சுற்றும் போது, பல முறை சில வாரங்கள் பிரிந்து இருந்து இருக்கிறான். இப்போது சிங்கப்பூர் செல்வது ஆறு மாதங்களுக்கு! தொடர்ச்சியாக இத்தனை மாதங்கள் பிரிய போவது இது தான் முதல் முறை என்பதால் அவனுக்கும் கஷ்டமாக இருந்தது. ‘கேசவன், சுலோ தம்பதி வேறு ஊரில் இல்லை. அதான், மைதி மாமியும், கலையும் இருக்கிறார்களே! பிறகு என்ன கவலை?’ ஓரளவுக்கு தன்னையே  சமாதானப்படுத்தியவன்,... 


“ஹே பஞ்சுமிட்டாய், கோபமா?” 


“என்னை அமெரிக்கா போக வேணாம்னு தடுத்தவன், எனக்கு முன்ன சிங்கப்பூருக்கு பறக்க போறானேன்னு லைட்டா காண்டாகுதுடா ஜண்டு பாம்!” கேலி போல பேசி நண்பனை திசை மாற்றி விட்டாள்.


“என்ன பண்றது பஞ்சு… நீங்க வந்து தான் எங்க இஷ்யூவை சால்வ் பண்ணணும்னு ஒரே அன்பு தொல்லை!” பெருமையாக காலரை தூக்கியவனை பார்த்து… 


“மதுரையில கேட்டாக, மன்னார்குடியில் கேட்டாக… சிங்கப்பூருல கேட்டாகன்னு காதுல பாம்படத்தை மாட்டி விடாதேடா!”


“ஹி… ஹீ… என் செல்ல காஞ்சனாவை ஏமாத்த முடியுமா? அஞ்சுமா… உன்னை நம்பி தான்டா நாளைக்கே கிளம்ப ஒத்துக்கிட்டேன். நிறைய பேக்கிங் வேலை இருக்கு…” என்று நடப்புக்கு வர, அதன் பின் நால்வருமாக சேர்ந்து சந்துவின் பயணத்தை பற்றி திட்டமிட ஆரம்பித்தனர்.


அன்றிரவுக்குள் ஓரளவுக்கு பெட்டியை அடுக்கிய பின்னர், தன்னையே குறுகுறுவென பார்ப்பவனிடம், “அதான் வேலை ஆச்சுல்ல, இப்போ சொல்லு, நான் அப்போத்துல இருந்து பார்க்கறேன். நீயும் ஏதோ சொல்ல நினைக்கற, அப்புறம் வேணாம்னு முடிவு பண்ணி, வேலையை பாக்கற. என்னடா ஜந்து?” 


சந்துவின் முகம் ஒரு சில நொடிகள் தெளிவில்லாத குழப்ப நிலையை அடைந்து… அவனுக்குள்ளே அவன் ஏதோ போராடுவது போல தோன்ற, “இப்போ சொல்லப் போறியா, இல்ல நான் கௌரிமாவுக்கு போன் போடட்டா? உங்க செல்ல பிள்ளைக்கு இந்தா இருக்க சிங்கப்பூர்க்கு தனியா போக கூட பயமாம்னு சொல்றேன்.”


“ஹே… அம்மாட்ட எதுவும் சொல்லாதே…” 


“அப்போ, ஒழுங்கா விஷயத்தை துப்பு… எனக்கு டென்ஷனாகுது.”


‘இதுக்கே இப்படி பேசுறவ, நான் விஷயத்தை சொன்னப்புறம் எப்படி எடுத்துப்பா?’ மீண்டும் யோசனையில் ஆழ்ந்தான் சந்து.


“கண்டுபிடிச்சுட்டேன்… உன் ஆள் அந்த ரீத்திகா மேட்டர் தானே? ஓ லவ்ஸ்ஸா, நான் எப்போவோ இது லவ்னு சொன்னா… அதெல்லாம் இல்லைன்னு கதை விட்டியா? இப்போ ரீத்திக்காவை விட்டு எப்படி போறதுன்னு சாருக்கு ஃபீலோ?”


“ஐயோ ஆண்டவா! நிலைமை தெரியாம இவ வேற…” என உரக்க புலம்பியவன் அடுத்து சொன்னதை கேட்ட அஞ்சு அதிர்ச்சியில் உறைந்தாள்.


சில்லென்ற நீரை அவள் முன் நீட்டியவன், “பேசமாட்டியா அஞ்சு? என்னை புரியுது இல்ல உனக்கு?” என்றிட, “ம்ம்ம்…” அவன் தோளில் சாய்ந்தாள்.  


பின்னிரவு வரை இருவருமே பேசினர்… பேசிக் கொண்டே இருந்தனர். முடிவில், “இப்போ தான் மைன்ட் ஃப்ரீ ஆச்சு… ஐ லவ் யூ டீ பஞ்சு மிட்டாய்!” என்றவனை தற்காலிகமாக பிரிய போகும் வருத்தம் அழுத்த, கண்களில் மளுக்கென நீர் கோர்க்க, மீண்டும் அவன் தோளில் சாய்ந்தாள். 


சிறு பிராயம் முதல் உடன் இருப்பவளிடம், தன் மனதை பகிர்ந்த நிம்மதியில், உறங்க சென்றான் சந்து. அஞ்சுவுக்கோ, அன்றைய எல்லா அதிர்ச்சிகளும் மெல்ல உள்ளத்துக்குள் இறங்க, உறக்கம் வராமல் போக்கு காட்டியது.


சனி அன்று மாலை தான் சந்துவுக்கு ஃபிளைட். அன்று காலையே சந்துவின் குடும்பத்தினர் ஹைதராபாத்தில் இருந்து வந்து விட, முன் தின நிகழ்வுகளை மூளை, மற்றும் மனதின் ஓரத்துக்கு ஒதுக்கிய அஞ்சுவுக்கும், சில மாதங்கள் கழித்து அவளுக்கு பிரியமானவர்களை கண்டதில் கொண்டாட்டமாகி விட்டது. கேலி, சிரிப்பு என இறகில்லாமல் நேரம் கலகலப்பாக விரைய, அனைவரும் ஏர்போர்ட் கிளம்பினர்.


“இங்க பாரு குரங்கு… நீ அஞ்சா நெஞ்சம்… இளம் சிங்கம், துரைசிங்கம்னு எல்லாம் எனக்கு நல்லா தெரியும்! நானும் துணைக்கு இல்லன்னு ஞாபகம் வெச்சுக்கோ. ‘டேய் ஜந்து’ன்னு நீ மூக்கு உறிஞ்சுட்டே கூப்பிட்ட குரலுக்கு, என்னால உடனே ஓடி வர கூட முடியாது. அதனால... ஒழுங்கா, அடக்கமா இரு. உதவுறேன்னு, நான் மதர் தெரசாவோட கசின் சிஸ்டர்னு கஷ்டப்படுறவங்களை பார்த்ததும் சேவையில இறங்காதே. ஐயோ பாவம்னு சொல்லி, ஊர் பேர் தெரியாதவங்களுக்காக ரிஸ்க் எடுக்காதே.” 


சந்தரப்ரகாஷ் விடாமல் அறிவுறுத்த, “போதும்டா… இதையே நேத்துல இருந்து என் காது புளிக்கற அளவுக்கு சொல்லிட்டே.” அஞ்சு அலுக்க,...


“அந்த செக் வேலையை இன்னும் நீ முடிக்கல இல்ல.” 


“ப்ச்… அது ரொம்ப முக்கியமா இப்போ? நீ இல்லாம எப்படி இருக்க போறேன்னு தெரியலை.” குரலோ, கண்ணோ கலங்கவில்லை என்றாலும், பிரிவு துயர் தெரிந்தது அஞ்சுவின் பேச்சில்.


“நான் ஃபிளைட் ஏறினவுடனே, ‘இம்சை தடியன் ஊருக்கு போயிட்டான்’னு நீ ஆட்டம் போடுவேன்னு எனக்கு தெரியாதா பஞ்சு மிட்டாய்?”


“ஜந்து…” சிணுங்கியவள்… “இப்படியா உண்மையை சத்தமா சொல்லி, என் இமேஜை டேமேஜ் பண்ணுவ?”


“எனக்கு தெரியுமடீ உன் ப்ளான். சரி பேச்சை மாத்தாதே. திரும்பவும் சொல்றேன், அந்த விட்டல் சார்கிட்ட நேர்ல போய் ஒரு முறை அவசியம் பேசு. அதான் மரியாதை…  என்ன இருந்தாலும், சென்னைல ரொம்ப பிரபலமான ஹோட்டலுக்கு சொந்தக்காரர். ஒரு வேளை நாளை பின்ன நீ மனசு மாறி, இவன்ட் மேனேஜ் செய்யற பிசினெஸ் துவங்கி, அவர் கண்ல பட்டா, நல்லா இருக்காது. சொன்னதை கேளு,” சந்து பொறுப்பாக அறிவுறுத்தியதை கேட்டவளுக்கு, எரிச்சல் மூண்டது. 


‘இவன்ட் மேனேஜ்மெண்டாவது, மண்ணாவது...’ மனதில் வலியோடு நினைத்தவள், கிளம்பும் நேரத்தில் நண்பனோடு விவாதிக்க மனமில்லாமல், “சரி சரி… இந்த ஒரு வாட்டி உன் கட்டளையே சாசனம்னு சொல் பேச்சு கேட்டுக்கறேன். அப்புறம் பாம்பு கறி, முதலை கறி எல்லாம் அங்க கிடைக்குமாம். பார்த்து இருந்துக்கோடா…” என்று கேலி செய்தவளை, முறைத்தவன்… 


“இரு திரும்பி வரும் போது உனக்கு வாங்கிட்டு வரேன்…” என்று பதிலடி கொடுத்து விட்டு, “பார்த்து இருந்துக்கோ பஞ்சு… முன்ன விட இப்போ தான் கேசவன் அங்கிள் மேல கொலை காண்டாகுது. அந்த இஞ்சினியரிங் அட்மிஷன்ல அவர் குளறுபடி பண்ணாம இருந்திருந்தா, எப்படியோ ஒரே கம்பெனில சேர்ந்து, ஒண்ணா ஆன்சைட் போயிருக்கலாம். இப்ப பாரு, உன்னை விட்டுட்டு போகவே மனசில்லை.” கிளம்பும் போது புலம்பலாக, ஆறி போன பெண்ணவளின் புண்ணை கீறி, அவளின் வேதனையை அதிகரித்து விட்டவன், அதை உணராது… ”லவ் யூ கொரங்கு… மிஸ் யூ…” லேசாய் அணைத்து விட்டு, திரும்பி பாராமல் நடந்து விட்டான். 


சந்துவின் பிரிவு கொடுத்த வலியை அவனின் இறுதி வார்த்தைகளே ஒன்றும் இல்லாததாக மாற்றி இருக்க, கண்கள் கலங்க… “மிஸ் யூ டா ஜண்டு பாம்!” என அவன் சட்டையின் நிறத்தை கொண்டே கண்கள் அவனை தொடர… அவன் உருவம் மறையும் வரை பார்த்து நின்றாள்.


சந்து கிளம்பிய தனிமை தெரியாத வண்ணம், அவன் பெற்றோரின் இருப்பு இருக்க, வார இறுதி முழுதும் கௌரிமா, மைதி மாமியிடம் செல்லம் கொஞ்சி, அரட்டை அடித்ததில் அஞ்சுவுக்கு பொழுது நல்ல விதமாக செல்ல... திங்களன்று எழுந்தவுடன், சட்டென விட்டலின் நினைவு வந்தது. 


எந்த காரியத்தையும் தன் போக்கில், தன் இஷ்டத்துக்கு மெதுவே ஆற அமர செய்யும் அஞ்சு, இத்தனை நாள் ஒத்தி போட்ட… கிடப்பில் விட்ட விட்டலை சந்தித்து பேசும் எண்ணத்தை அன்றே செயல்படுத்த முடிவு செய்து, தோழிக்கு அழைத்து பார்லருக்கு வர நேரமாகும் என்று தெரிவித்து விட்டு, வேகமாக கிளம்ப பார்க்க, முதல் தடங்கல்- துவைத்த துணி எதுவும் இஸ்திரி செய்யப்படாமல் கிடந்தது.


ஜன்னல் வழியாக பார்க்க, இஸ்திரிகாரனும் கீழே இல்லை. இவள் நேரம், என்றுமில்லா திருநாளாக மின்சாரம் தடைப்பட… “சுத்தம், ஆரம்பமே அமோகமா இருக்குடி அஞ்சு.” என்றவாறு, “அது சரி… வேலை வேணும்னா டிப் டாப்பா போகலாம். நாம தான் இந்த தொழிலுக்கே முக்காடு போட போறோம். ஃப்ரியா விடு செல்லம்!” என அரக்க பறக்க கிளம்பி, காலை பதினொன்றரை மணிக்கு ஹோட்டல் அபோடின் ரிசப்ஷனில் போய் நின்றாள். 


ஆள் பாதி… ஆடை பாதி! அதுவும் நட்சத்திர ஓட்டலுக்கு வரும் கூட்டம் பெரும்பாலும் நன்றாக உடுத்தி இருப்பர். வெளுத்து சாயம் போன ஒரு ஜீன், சரி அது இன்றைய நாகரீக உடுத்தும் போக்கு(ஃபேஷன்) என்று எடுத்து கொண்டாலும்,  அவள் அணிந்திருந்த தொள தொள காட்டன் குர்த்தி, இஸ்திரி செய்யப்படாததால் கசங்கி இருந்த தினுசு, ‘இந்த பொண்ணு தூங்கி எழுந்து, ட்ரெஸ் மாத்தாம வந்திருப்பாளோ!’ என காண்பவரை எண்ண தூண்டும் அளவில் பார்க்கவே சகிக்கவில்லை. 


இதில் ஸ்கூட்டியில் செல்லும் போது வெயிலில் இருந்து காக்க போட்டிருந்த முக்காடு வேறு வேர்வையில் நனைந்திருக்க, அதுவும் அவள் குர்த்திக்கு பொருத்தமான நிறமாக கூட இல்லாத அந்த முக்காட்டை சரி வர கூட முகத்தில் இருந்து கலையாமல், சுற்றுபுறத்தை பற்றி அக்கறை இல்லாமல் இருந்த அஞ்சு, அழகியே என்றாலும்… அவளின் உடையும், பாவனையும் அந்த ஐந்து நட்ஷத்திர சூழலில் கொஞ்சமும் பொருந்தவில்லை. 


மருந்துக்கும் ஒப்பனையில்லாத முகமும் வேர்வையில் குளித்த கோலத்தில் மினுமினுக்க, “மிஸ்டர். விட்டலை பார்க்கணும்.” என்று தன் முன் நிற்பவளை கண்ட நறுவிசாய் உடுத்தியிருந்த அந்த வரவேற்பாளர் பெண், அவளை வேற்றுகிரகவாசி போல் ஏற இறங்க அளவிட்டு, “நீங்க எந்த ஊர்?” என்று விசாரித்த போது,  


“இங்க தான் அடையார்” அஞ்சுவின் வாய் பாட்டில் தன்னிச்சையாக பதில் சொன்னாலும், ‘என்ன இந்த பொண்ணு என் பேர் இல்ல கேக்கணும்! ஒரு வேளை வேலைக்கு புதுசோ… எடுத்தவுடனே ஊர் பேர் கேக்குது?’ என மனதில் கிண்டலாக நினைக்க,


முன்பை விட கூர்ந்த விழி வீச்சோடு, ‘சோ வெளிநாட்டுவாசி இல்ல… லோக்கல் சென்னை ஆளு தான்! அப்போ, விட்டல் சார் இறந்த விஷயம் எப்படி தெரியாம இருக்கும்? அதான் எல்லா முக்கிய பத்திரிகையிலயும் மத்த ஹோட்டல் பிசினெஸ் ஆளுங்க, வணிக சங்கங்கள், தர்ம ஸ்தாபன நிறுவனங்கள், அவருக்கு வேண்டிய ஊரோட முக்கிய புள்ளிங்கன்னு எத்தனையோ பேர் இரங்கல் செய்தி அதுவும் போட்டோவோட போட்டாங்க!’ என்று நினைத்தவள், ஏதோ தோன்ற ‘ஓ… நீ அவளா…’ என்று அலட்சியமாக பார்த்தாள்.


ஆம்… இது போல் மேல் தட்டு இடங்களில், எனக்கு ஓனரை நல்லா தெரியும் என்று சொல்லிக் கொண்டு வரும் ஆட்கள் சிலர் உண்டு. அதுவும் இளைய முதலாளி ஹரிஷை தேடி கொண்டு முன்பெல்லாம் நிறைய யுவதிகள் இப்படி வந்து இருக்கின்றனர் என்றும், சிலர் ஹரிஷோடு இருக்கும் பெர்சனல் பிரச்சனையை தீர்க்க, விட்டலை சந்திக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து கலாட்டா செய்த சம்பவங்களையும், முன்னாள் சின்ன முதலாளி ஹரீஷின் மன்மத லீலைகளை மற்ற அனுபவசாலி ரிசப்ஷனிஸ்ட்டுகள் நிறைய சொல்லி கேட்டிருந்ததால், அப்படி ஒருத்தி இவள் என்ற முடிவுக்கு வந்த அந்த புது ரிசெப்ஷனிஸ்ட், இவளுக்கு என்ன மரியாதை என்ற மனோபாவத்தில், சற்று விட்டேத்தியாகவே “அதெல்லாம் பார்க்க முடியாது” என மறுத்து விட்டாள்.


“அஞ்சு வந்து இருக்கேன்னு சார்கிட்ட சொல்லுங்க, என்னை நல்லா தெரியும் அவருக்கு.’ அஞ்சுவும் விடாமல் கேட்க,...


‘இது கண்டிப்பா நாம நினைக்கற கேஸ் தான்.’ தானே முடிவு செய்த அப்பெண், மனிதர் இறந்த விஷயத்தை போட்டுடைக்காமல், “அப்பாயிண்ட்மெண்ட் இல்லைன்னா, யாரா இருந்தாலும் பார்க்க மாட்டார்!” என மீண்டும் மறுத்து விட்டாள்.


“ஒரு முறை அவருக்கு போன் செஞ்சு சொல்லி பாருங்க… அப்புறம் தெரியும் நான் யார்னு.” என்ன தான் இவள் அழைப்பை ஏற்காவிட்டாலும், பழகிய வரை விட்டல் நல்ல விதமாகவே இருந்தபடியால், கொஞ்சம் கர்வத்தோடு சொன்ன அஞ்சனாவுக்கு, நெஞ்சின் ஓரம்… நிச்சயம் பார்க்க முடியாது என்றும் புரிய துவங்கியது.


“லுக் மிஸ்., தமிழ் புரியும்ல….” அப்பெண் நக்கலாக கேட்டதும்,


கடுப்பான அஞ்சு, ‘ஏதோ அந்த பக்கி சொல்லுச்சுன்னு கிளம்பி வந்து இங்க மூக்கறுப்பட்டோம்’ என்று உள்ளுக்குள் பொருமி, நண்பனை மனதில் அர்ச்சித்தவாரே, “அப்போ சரி, இந்தக் கவரை சார்கிட்ட மறக்காம சேர்த்துடுங்க.” கையில் இருந்த என்வலப்பை அலட்சியமாக அப்பெண்ணிடம் கொடுத்து விட்டு, திரும்பி பார்க்காமல் அங்கிருந்து வெளியேற, அவள் வெளி வெராண்டாவை கடக்கும் போது எதிரே வந்த சிவா, தன்னை தாண்டி சென்றவளை கவனியாமல் ஹோட்டலுக்குள் நுழைந்து விட்டான்.


ரிசப்ஷனில் நிற்கும் பணியாளின் கவனம் அங்கில்லை என்பதை உள்ளே நுழையும் போதே கவனித்து விட்ட சிவா, அவள் முன் போய் நின்றான். 


ஒரு முறை அவன் அழைத்தும் அப்பெண் பதில் கொடுக்காத போது, அங்கே வந்த வேறு பணியாள் அப்பெண்ணை உலுக்க, தன் முன் நிற்கும் புது ஆபரேஷன்ஸ் மேனேஜரை கண்டவள், திடுக்கிட்டு விழித்து, திணறலாக…  “சார்… குட் மார்னிங் சார்… இல்ல ஆஃப்டர்நூனா?” அவசரமாக சுவர் கடிகாரத்தை பார்த்தாள்.


“வேலை நேரத்துல அதுல கவனமில்லாம, இது என்ன இப்படி பொறுப்பில்லாம கனவு கண்டுட்டு நிக்கறீங்க?” சிவா கோபமாக  இரைய,


“சார்… சாரி… சர்… அது வந்து…” பயத்தில் வார்த்தைகளை முழுங்கியவள், கையிலிருந்த அந்த கவரை சிவாவிடம் அவசரமாக நீட்டினாள்.


வெளிப்புறமாக ‘திரு. விட்டல் தாஸ்’ என்று குண்டு குண்டு கையெழுத்தில் பெயர் எழுதியிருக்க... கவரை முன்னும், பின்னும் திருப்பி பார்த்த சிவா, “அதுக்கென்ன,  விட்டல் சார் பேருல போஸ்ட் வரது நமக்கு புதுசா என்ன? ஆமா, மெயில் டிவிஷனுக்கு போக வேண்டியதை இங்க கொடுத்தது யாரு? முறையா ட்ரைனிங் கொடுத்து தானே உங்களை இங்க நிக்க வெச்சுருக்கோம்? மெயில் டிவிஷனுக்கு போஸ்ட் மேன் போகலைன்னா, அவன்கிட்ட சொல்லி, சரியான இடத்துக்கு அனுப்ப வேண்டியது உங்க டியூட்டி தானே? சின்ன வேலை கூட செய்ய தெரியாம முழிச்சா எப்படி?” எரிச்சலாக வினா எழுப்பியவனை பார்த்து, 


“ஐயோ… அது சார், இது போஸ்ட்ல வரல. அந்த பழைய பாஸ் தவறின விஷயம் தெரியாத ஒரு பொண்ணு, அவரை நேர்ல பார்க்க வந்து இருந்தாங்க. அவங்க தான் இதை சார்கிட்ட சேர்க்க சொல்லி கொடுத்துட்டு போனாங்க. அதான்... கொஞ்சம் கன்ஃபியூஸ்ஸாகி நின்னுட்டேன்.” அசடு வழிய பதில் சொன்னவளிடம்,


“டோன்ட் கிவ் ரப்பிஷ் எக்ஸ்கியூஸஸ்! ஒழுங்கா வேலையை பாருங்க…” எச்சரிக்கும் தொனியில் கட்டளையிட்ட சிவா, நடந்துக் கொண்டே அசட்டையாக அந்த காகித உறையை பிரிக்க, உள்ளே இருந்த காசோலையை கண்டவன், ஷாக்கடித்தது போல் அங்கேயே நின்று விட்டான். 


அவசரமாக ஒரு முறை அதில் இருந்த தொகையை படித்தவன், வேகமாக மீண்டும் வரவேற்பு பெண்ணிடம் வந்து, “இதை யார் கொடுத்தான்னு சொன்னே?” 


“இப்போ, நீங்க உள்ள வர முன்ன தான் சார்… ஒரு பொண்ணு வந்து கொடுத்தாங்க” என்றவளிடம், 


“யாரு…” என அவசரமாக அந்த பிரம்மாண்ட வரவேற்பு கூடத்தை திரும்பி பார்த்தான். 


“அப்போவே போயிட்டாங்க சார். காரிடர்ல உங்களை தாண்டி தான் போயிருப்பாங்க. நீங்க கவனிக்கலையா?” 


தேவையில்லாமல் அதிகப்ரசங்கித்தனமாக கேட்டவளை கோபமாக முறைத்த சிவா, “வந்தவங்க பேர், அட்ரெஸ், காண்டாக்ட் டீடெயில்ஸ் ஏதாவது குடுங்க, குவிக்...” கையை நீட்டினான். 


‘ஐயோ… அவ ஊர் கேட்டோம், மத்த விவரம் கேக்கலையே?’ என்று முழித்த அப்பணியாள், “சார்… அவங்க அடையார்ல இருந்து வந்தாங்க சார். பேரு… யெஸ்… அஞ்சு... அஞ்சலி,” என உரக்க கூறியவள், “அஞ்சலின்னு தான் நினைக்கறேன்.” என மெல்ல முணுமுணுத்திட, அஞ்சு என்ற சுருக்கத்துக்கு தானே ஒரு முழு பெயரை கொடுத்து சிவாவிடம் தகவலாக கூறி முடித்தாள்.


‘மேனேஜ்மெண்டில் மேல் தட்டு அளவில் மட்டுமே செக் விஷயம் தெரியும். இப்படி ஒருத்தி தைரியமாக, அதுவும் பட்டப்பகலில் நேரில் வந்து செக்கை திருப்பி தருவதென்றால், நிச்சயம் தவறு அப்பெண் மீது இல்லை என்பது சந்தேகமில்லாமல் ஊர்ஜிதமாகிறது. ஆனால், இத்தனை வாரங்கள் கழித்து, அதுவும் இப்போது, இந்த விஷயம் இங்கே விசாரிக்கும் வேளையில் சரியாக ஏன் செக்கை திருப்பி தர வேண்டும்? யார், என்ன… எதற்கு கொடுத்த செக்? என்றெல்லாம் சின்னவர் ஆயிரம் கேள்விகளால் துளைத்தெடுப்பாரே! அவருக்கு உரிய பதில் சொல்ல முடியாவிட்டால் நம்ம கதி அதோ கதி’ என புத்திக்கு உரைக்கவும், சிவாவுக்கு வந்த கோபத்தில்,...


“நம்ம ஹோட்டலுக்கு வந்து போறவங்க விவரம் கூட சரியா வாங்காம அடையார் அஞ்சலின்னு மொட்டையா சொல்ற நீ எல்லாம், என்ன ஹோட்டல் மேனேஜ்மென்ட்  படிச்சே! உன்னை போய் ரிஷப்ஷன்ல போட்டிருக்காங்க!” அவளை கடித்து குதறி விட்டு, எச். ஆருக்கு அழைத்து, ஒழுங்கான ஆளை வரவேற்பாளராக நியமிக்கவில்லை என சத்தமிட்டு, “கம் அண்ட் மீட் மீ” என்று கட்டளையிட்டு விட்டு வைத்தான். 


அதை கேட்ட அப்பெண்ணோ, வேலை பறி போய் விடுமோ என்ற அச்சத்தில், “சார்… சாரி, நான்” என திணற, பேசாதே என சைகை செய்த சிவா, பெரும் குழப்பத்தில் சிக்கி, ‘செக் ஏற்கனவே ஸ்டாப் பேமென்ட் செஞ்சாச்சு. இப்போ ஒரிஜினல் செக்கும் என் கையில! பேசாம இதை கிழிச்சு போட்டா, விஷயம் முடிஞ்சுது. என்ன சின்னவர்ட்ட மறைக்கணும். முடியுமா என்னால! ஐயோ இதென்ன இப்படி குறுக்கால யோசிக்குது மூளை? திட்டு வாங்க பயந்துக்கிட்டு, வாலண்டரியா கொதிக்கற எண்ணைக்குள்ள தலையை கொடுக்கறியேடா?’ என்று நினைத்துக் கொண்டவன், லேசாய் ஓடிய நடுக்கத்தை களைக்க, தலையை குலுக்கி நிமிர்ந்தான்.


அப்படி மட்டும் இந்த விஷயம் முடிந்திருந்தால், அஞ்சுவின் தலையெழுத்து வேறு விதமாக அமைந்து இருந்து இருக்குமோ!!!


ஆனால், ஆபரேஷன்ஸ் மேனேஜர் முன் வெளிப்பட்டு விட்ட தன் கவனக் குறைவை, வேலை போய் விடுமே என்ற அச்சத்தில் எப்படியாவது சரி கட்டி, பணியை தக்க வைத்து கொள்ள நினைத்து, “சாரி சார், விட்டல் சார் மறைவே தெரியாதது போல உள்ளூர் பொண்ணு பேசினதுல கொஞ்சம் குழம்பி, தப்பு செஞ்சுட்டேன். ஆனா சார்… சி.சி.டி.வி கேமராவுல அவங்க நிச்சயம் பதிஞ்சு இருப்பாங்க. பெரிய சாரை நல்லா தெரியும்னு சொன்னாங்க. நான் இங்க புது ஆளுங்கறதனால அவங்க யார்னு எனக்கு அடையாளம் தெரியலை. பழைய ரிஷப்ஷனிஸ்ட்ஸ் யாருக்காவது அவங்களை நல்லாவே தெரிஞ்சுருக்கலாம். சி.சி.டி.வி இமேஜஸ் வெச்சு ஆளை கண்டுபிடிச்சுடலாம் சார்!” அவ்வரவேற்பு பெண் தன் புத்திசாலித்தனத்தை நிரூபிக்க உத்வேகமாக வார்த்தைகளை உதிர்த்த அந்த நொடி, அஞ்சனாவின் வாழ்க்கை பாதை புது திசையில் மாற துவங்கியது.


                                                                                           கோடுகளின் சந்திப்பு…  


© KPN NOVELS COPY PROTECT
bottom of page