Valasai Pogum Paravaikalaai - 23
23 - வாழ்க்கையின் அர்த்தம்!
சூர்யா குயிலி இருவரின் குடும்பத்திற்கும் நடுவிலிருந்து கமலக்கண்ணன்தான் எல்லா பேச்சுவார்த்தைகளையும் நடத்திக் கொண்டிருந்தார்.
வசந்தகுமாரை அழைத்து, “சரணுக்கு ஆயுஷ் ஹோமம் செய்யணும்னு அண்ணி ஆசைப்படறாங்க” என அவர் தொடங்கியதுமே, "எதுக்கு கண்ணா இப்ப இதெல்லாம், குயலி மனசுல என்ன இருக்குன்னே தெரியல. வேலை வேலைன்னு ஓடிட்டு இருக்கா. நிதானமா உட்கார்ந்து பேசலாம்னா, அதுக்குக்கூட அவளுக்கு நேரமில்ல. அவளை இப்ப எந்த விதத்துலயும் டிஸ்டர்ப் பண்ண முடியாது. எல்லாத்துக்குமே கொஞ்சம் அவகாசம் வேணும்" என்று தயங்கினார் அவர்.
"தப்பா நினைச்சுக்காத வசந்தா. எங்க குடும்பத்துல எல்லாரும் சரண நேர்ல பார்க்கற ஆவல்ல இருக்காங்க. கெட் டூ கெதர் மாதிரி ஏதாவது ஒண்ணு ஏற்பாடு செய்யலன்னா தினமும் ஒவ்வொருத்தரா வந்து உன்னைத் தொந்தரவு பண்ண ஆரம்பிப்பாங்க. எப்ப யார் என்ன பேசுவாங்கன்னு ஒண்ணும் சொல்ல முடியாது. அது பிள்ளை மனசை பாதிக்கும், அதனாலதான்.
சும்மா ஒரு கெட் டூ கெதர் அப்படிங்கறத விட ஆயுஷ் ஹோமம் பண்ணலாம்னு சொல்லி ருக்கு அண்ணி சொன்னாங்க. சூர்யாவும் உடம்பு சரியில்லாம போய் பிழைச்சு வந்திருக்கான் இல்ல, அதனால ஒரு பரிகார பூஜையும் செய்யலாம்னு சொல்றாங்க. உனக்கு இதுல எல்லாம் பெரிய ஈடுபாடு கிடையாதுன்னு எனக்குத் தெரியும். ஆனாலும் சில விஷயங்களை அவாய்ட் பண்ணிட்டுப் போக முடியல. மத்தவங்க இழுக்கற இழுப்புக்குப் போக வேண்டியதா இருக்கு” என அவர் அதற்கு விளக்கமும் கொடுக்க மகளிடம் கேட்டுச் சொல்வதாகச் சொல்லிவிட்டார் வசந்தன்.
அன்றே அழைத்து, அவள் சம்மதம் சொல்லி விட்டதாகவும் சொன்னார். ஆனால் அதன் பிறகுதான், சூர்யா குயிலி இருவரும் சேர்ந்துதான் இதையெல்லாம் செய்ய வேண்டும் என ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் அவர்களுடைய பெரிய அண்ணி. கூடவே குலதெய்வ வழிபாடு என்று வேறு இழுத்து விட, ஒவ்வொன்றாக நீண்டு கொண்டே போனது. கொஞ்சம் தருமசங்கடமாக இருந்தாலும் அவர்கள் வாழ்க்கையைச் சீர்படுத்துவது தனது கடமை என்ற எண்ணத்தில் கமலக்கண்ணன் தன்னாலான வரை இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கிறார்.
தங்கள் குடும்பத்து வாரிசுக்காக முதன்முதலில் செய்யப்போகும் ஒரு விசேஷம் என்பதால் பெரிய திருமண மண்டபம் ஏற்பாடு செய்து தடபுடல் செய்துகொண்டிருந்தார் சிகாமணி.
சூர்யா இந்த நிலைமையில் இருக்கும்போது கூட இவர்களுடைய பேத்தி நிலாவின் மஞ்சள் நீராட்டு விழாவை வீம்பாக நடத்தி முடித்திருந்தாள் மமதியின் அம்மா, அதுவும் இவர்கள் இல்லாமலேயே. அந்தச் செலவுகளுக்கான பணத்தையும், கழுத்தில் கத்தி வைக்காதக் குறையாக சிகாமணியிடமிருந்துதான் பிடுங்கியிருந்தாள். மகன் இருக்கும் நிலையில் வேறு எந்த மன உளைச்சலும் வேண்டாம் என அவரும் அவள் கேட்ட பணத்தைக் கொடுத்துவிட்டார். அந்தப் புகைச்சலை, பேரனுக்குச் செய்து அழகு பார்த்துத் தணித்துக்கொள்ள அவர்கள் முயன்று கொண்டிருந்தார்கள் என்று கூட சொல்லலாம்.
இனிமேலாவது மருமகள் மகனுடன் சேர்ந்து நல்லபடியாக வாழ வேண்டும் என்கிற பிரார்த்தனையும் நிறையவே இருந்தது.
மகனுடன் தினமும் பேசிக்கொண்டிருக்கிறான், வழக்கம் போல அலுவலகம் போய் வருகிறான் அவ்வளவுதான். அதைத் தாண்டி சூர்யாவிடம் பெரிதாக எந்த மாற்றமும் தெரியவில்லை.
நீண்ட வருடங்களுக்குப் பிறகு அவர்கள் வீட்டில் நடக்கும் விழா என்பதால் ருக்மணியும் சிகாமணியும் உற்சாகம் பொங்க ஓடி ஓடி எல்லாவற்றையும் செய்துகொண்டிருந்தனர்.