top of page

Valasai Pogum Paravaikalaai - 5

5

வசந்தம்


வசந்தகுமார் ஒரு அரசுப்பள்ளி ஆசிரியர். பிறந்த உடனேயே குப்பையோடு குப்பையாகத் தூக்கி வீசப்பட்ட அவருக்கு ஒரு தொண்டு இல்லம் அடைக்கலம் கொடுத்தது. ஆரம்பக்கல்வி வரை அங்கேயே கிடைத்துவிட அதன் பிறகு அவர் போராடி தன் தகுதியை வளர்த்துக்கொண்டார்.

அந்தத் தொண்டு நிறுவனத்தின் நடைமுறைப்படி பதினெட்டு வயதானதும் தற்காலிகமாக ஒரு வேலையைத் தேடிக்கொண்டு அவர் வெளியில் வந்துவிட, அதன் பிறகு அவர் தங்கியிருந்தது சென்னை சைதாப்பேட்டையிலிருந்த ஒரு மேன்ஷனில்தான்.


தண்ணீர் பிடிக்கவென வெளியில் வரும்பொழுது அறிமுகமாகி எதார்த்தமாக ஏற்படும் ஒரு ஈர்ப்பினால் வலியப்போய் கற்பகத்திடம் பேச்சுக் கொடுக்கப் போக அவரிடமும் ஒரு இணக்கம் தெரியவும் அது முற்றிப்போய் காதலாகக் கனிந்தது.


ஒரு வெறியுடன் அவர் தன் தகுதியை மேலும் வளர்த்துக்கொள்ள அந்தக் காதலே காரணமாகவும் ஆகிப்போனது.


அன்றைய தினத்தில் அப்பா தவறிப்போயிருக்க அம்மா மட்டுமே கற்பகத்துக்கு. ஆணும் பெண்ணுமாக அரை டசன் பிள்ளைகளில் அவர்தான் கடைக்குட்டி.


சொந்த வீடு என்ற ஒன்றைத் தவிரப் பெரிதாகச் சொல்லிக்கொள்ளும்படி சேமிப்பு எதுவும் இல்லை. உடன் பிறந்தவர்களெல்லாம் திருமணமாகி அவரவர் வாழ்கையை அவரவர் பார்த்துக்கொள்ள அவரை அதிகம் படிக்க வைக்கக் கூட யாரும் முயற்சியெடுக்கவில்லை.


அரசு வேலையுடன் ஒருவன் வந்து உங்கள் பெண்ணை விரும்புகிறேன் என்று சொல்லவும் அவர்களிடமிருந்து ஊசி முனை மறுப்பு கூட கிளம்பவில்லை. கற்பகத்தின் அம்மா வசந்தகுமாரிடம் மகளின் கையைப் பிடித்துக் கொடுத்துவிட்டார்.


அவருடைய முதல் பணி நியமனம் விழுப்புரம் அருகில் ஏதோ ஒரு கிராமத்தில் போடப்பட்டிருக்க, திருமணம் முடிந்து அங்கேதான் வாழ்கையைத் தொடங்கினர்.


திருமணம் முடிந்ததும் முதல் காரியமாக மனைவியைப் படிக்க வைக்கும் முயற்சியில்தான் இறங்கினார் வசந்தன்.


தூசுத் தும்பில்லாமல் வீட்டைப் பராமரிப்பதிலும் விதவிதமாகச் சமையல் செய்து கணவனின் வயிற்றை நிரப்புவதிலும் இருக்கும் ஆர்வம் கற்பகத்துக்குத் துளி அளவு கூட படிப்பில் இல்லாமல் போனது.


வசந்தன் ஆனவரை முட்டி மோதியதுதான் மிச்சம். மனைவியிடம் அவருடைய ஆசிரியர் வேலை ஒன்றும் செல்லுபடி ஆகவில்லை. ஒரு நிலையில் அவரே சலித்துப்போய் விட்டுவிட்டார்.


அதன் பிறகு அவர்களுடைய காதல் வாழ்க்கையின் பரிசாய் குயிலி பிறந்தாள். அவள் வளர வளர அவர்களுடைய வாழ்க்கை மேலும் அர்த்தமுள்ளதாக ஆனது.


அரசுப்பள்ளியில் சேர்ந்து தன்னிடம் கல்வி கற்கும் மாணவர்கள் எந்தவிதத்திலும் யாருக்கும் குறைந்தவர்களில்லை என்ற எண்ணத்துடன் தன் மகளைத் தனித்து அடையாளம் காண்பிக்க விரும்பாமல் தான் வேலை செய்யும் பள்ளியிலேயே அவளைப் படிக்க வைத்தார் வசந்தன்.


ஒரு பக்கம் இப்படிப் போக, மற்றொரு பக்கம் தன் சுற்றுப்புறத்தில் தான் வேலை செய்யும் பள்ளியில் என தன் கண்ணுக்கு எதிரில் நடக்கும் சிறு சிறு அநியாயங்களைக் கூட பொறுக்க முடியாமல் வசந்தன் எதிர்த்துக் கேள்வி கேட்கத் தொடங்கவும் பணியிட மாறுதல் என்பது அவருடைய வாழ்க்கையில் தவிர்க்க இயலாத ஒன்றாக ஆகிப்போனது.


*********