top of page

Valasai Pogum Paravaikalaai - 30

30 - வானமே எல்லை!


குடும்ப உறுப்பினர்கள், சீனு, லட்சுமி, கல்யாணி மேகலா, முகிலன், ஞானி என எல்லோரும் நேரத்துக்கு வந்துவிட, விருந்தினர்கள் எல்லோரும் ஒவ்வொருவராக வந்துகொண்டிருந்தனர். குறித்த நேரத்துக்குச் சரியாக வந்து சேர்ந்தான் தேவாதிராஜன் மனைவி மரகதவல்லியுடன். (இதயத்தைத் திருடாதே படித்தவர்களுக்கு இவர்களைத் தெரிந்திருக்கும்)


ஒருபக்கம் வசந்தகுமார் மறுபக்கம் சூர்யா நின்றிருக்க நடுவில் நின்று எல்லோரையும் வரவேற்றாள் குயிலி. எல்லோரையும் உபசரிக்க அஞ்சு, தங்கம், பிரேம் மற்றும் அவர்கள் விடுதி பணியாளர்கள் எல்லோரும் பம்பரமாகச் சுழன்றுக் கொண்டிருந்தனர்.


ரிப்பன் வெட்டி அவன் புதிய கட்டிடத்தைத் திறந்து வைக்க உள்ளே சென்று தயாராக இருந்த குத்துவிளக்கை ஏற்றி விழாவைத் தொடங்கி வைத்தாள் மல்லி.


வரவேற்புரை, விவாதங்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் விருந்து எனக் களைக்கட்டிய விழா நல்லபடியாக நடந்து முடிந்தது. வசந்தகுமார் தவிர்த்து அவளுடைய அம்மா, மாமனார், மாமியார், முகிலனின் அப்பா என மூத்த தலைமுறையினர் மட்டும் வீட்டுக்குக் கிளம்பிவிட, மற்றவர் மட்டும் அங்கே மீதமாக.


அதன் பிறகு அவர்கள் குழுமத்தில் வேலை செய்பவர்களுக்கான பார்ட்டி களைகட்ட நள்ளிரவு வரை அங்கே தடபுடல்பட்டது. பிள்ளைகள் நான்கு பேர் சேர்ந்து போட்ட ஆட்டத்தை யாராலும் அடக்க இயலவில்லை. எல்லாம் முடியும் தருவாயில் இருக்க மொத்தமாகக் களைத்துப் போயிருந்தனர் அனைவரும்.


அதற்கு மேல் துளிகூடத் தெம்பில்லாமல் பிள்ளைகள் நான்கு பேரும் போய் ஓரமாக அமர்ந்துவிட, அங்கே வந்து சற்றுத் தள்ளி அமர்ந்த முகிலன், மேகலாவை மட்டும் அருகில் வரும்படி ஜாடை செய்து அழைக்க, அக்கம்பக்கம் பார்த்தவள் பூனை போல அவனை நெருங்கிச் சென்றாள்.


“ஹேய் நூடுல்ஸ், உனக்கு ஒரு சீக்ரட் சொல்லட்டுமா” என்றான் கிசிகிசுப்பாக. “ஹான்... அப்படி என்ன சீக்ரட் சொல்ல போறீங்க... சொல்லுங்க... சொல்லுங்க” என ஆர்வமாக அவளும் கிசுகிசுக்க, “அப்பா எனக்கு இன்னைக்கு ஒரு பொண்ணைப் பார்த்து சஜஸ்ட் பண்ணாங்க. நான் உடனே ஓகே சொல்லிட்டேன் தெரியுமா?” என்றான் அவளைத் திகைப்பில் ஆழ்த்தி.


“அடப்பாவிங்க முகிலா! இது எப்படி நடந்தது” என தன் வியப்பை அவள் வெளிப்படுத்த, “ஷ்.. ஷ்... கத்தாத. இப்போதைக்கு இது ஒரு சீக்ரட்” என அவன் சொல்லவும், “ஓகே... ஓகே...” என்றவள், “யாரு முகில்... அந்த கேரளா சாரி பொண்ணா! அந்தப் பொண்ணு போட்டிருந்த க்ரிஞ் மேக்கப்புக்கு உங்களுக்கு அவங்களைப் பிடிக்காதுன்னு நினைச்சேனே” எனக் கேட்டாள் ஒரு மாதிரியான குரலில்.


“யார் அது, அப்படி யார் ஃபோட்டோவையும் எங்க அப்பா எனக்கு காமிக்கலயே” என அவன் அப்பாவியாய் சொல்ல, “அப்படியா, அப்ப வேற யாரு?” என அவள் ஆவலாய் கேட்க, “வெயிட்... ஃபோட்டோவே காமிக்கறேன் பாரு?” என்றவன் தன் கைப்பேசியை இயக்கி அதை அவளது முகத்துக்கு நேராகக் காண்பித்தவாறு, “ரொம்ப நல்லப் பொண்ணு நூடுல்ஸ் இவங்க. இப்படி ஒரு பெண்ணை எங்கப்பா எனக்கு முதல்லையே பார்த்து செலக்ட் பண்ணியிருந்தா இப்ப எனக்கு உன்னை மாதிரி ஒரு மக இருந்திருப்பா. எந்த ஒரு காரணத்துக்காகவும் தன் சுயமரியாதையை விட்டுக்கொடுக்காம ஒரு கொள்கையோட வாழற பண்பான ஸ்ட்ராங் லேடி இவங்க” என்றான் சலனமே இல்லாமல். படத்தைப் பார்த்த நொடிக்குள் அவள் முகமே மாறிப் போனது, தொண்டை அடைக்க, எல்லோருக்கும் முன்பாக அழுதுவிடுவோமோ என்ற பதட்டத்தில் தடுமாறியவள், சுற்றும் முற்றும் பார்வையைச் சுழற்றி அன்னையைத் தேடினாள் அணைத்து தன்னை நிலைப்படுத்திக் கொள்ள.


அதை உணர்ந்தவனாக, தயக்கத்துடன் முகிலன் தன் கரங்களை லேசாக விரிக்க, அனிச்சையாகப் போய் தஞ்சம் புகுந்தவள் அவன் மார்பில் முகம் புதைத்து கண்ணீரால் அவனை நனைத்தாள்.


“என்னால அப்பான்னு யாரையும் கூப்பிட முடியாது. என்னைப் பொறுத்தவரைக்கும் அது ஒரு அசிங்கமான உறவு. நீங்க எப்பவுமே எனக்கு ஃப்ரெண்டா இருப்பீங்களா முகில்?!” என மேகலா தழுதழுக்க, “ஸ்யூர் மை டியர் பிரின்சஸ். அதுக்கு முன்னாடி உங்க அம்மா சம்மதம் நமக்கு வேணும்” என்று முடித்தான் முகிலன்.


“அதெல்லாம் நான் சம்மதிக்க வெச்சிடுவேன்” என்றாள் சிணுங்கலாக. என்ன என்று புரியாமல் போனாலும் மற்ற பிள்ளைகளெல்லாம் அவர்களை நோக்கி வந்து இருவரையும் சேர்த்து கட்டிக்கொண்டார்கள்.


அப்படியே ஒரு செல்ஃபீ எடுக்க அவன் தன் கைப்பேசியை அன்லாக் செய்ய கார்முகிலனின் கைப்பேசித் திரையில் ஒளிர்ந்துகொண்டிருந்தாள் தங்கமயில்.


*********


கவலையோ பயமோ பதட்டமோ எதுவுமே இல்லாமல் ஒருவரை ஒருவர் அணைத்துக் கொள்வதும், ஏதோ சிரிப்பதும், தலை கோதுவதும் என ஏதேதோ சேட்டைகள் செய்தபடி சென்னை பன்னாட்டு விமான நிலைய வளாகத்திற்குள் சுற்றிக்கொண்டிருந்தனர் பிள்ளைகள் நால்வரும்.


“ஏய் என்னடி இது, என்னவோ பிக்னிக் வந்த மாதிரி எதையாவது வாங்கித் தின்னுட்டு, செல்ஃபி எடுத்துட்டு சுத்திட்டு இருக்குங்க இந்தப் பிள்ளைங்க. இந்த மேகலா பொண்ணு வெளிநாடு போகுதேன்னு கொஞ்சமாவது வருத்தம் இருக்கா பாரு இதுங்களுக்கு” எனப் புலம்பினாள் அஞ்சு.


“லூசு, எதுக்குடி இவங்க வருத்தப் படணும்? யார் எங்க எப்படி இருக்காங்களோன்னு தெரிஞ்சுக்க முடியாம தவிக்க நம்ம காலம் மாதிரியா சொல்லு? எல்லாரும் எல்லா நேரத்துலயுமே கனக்டடா இருக்காங்க. நினைச்சா மெசேஜ் பண்ணிப்பாங்க, இல்லன்னா கால் பண்ணிப் பேசுவாங்க, தேவைபட்டா வீடியோ கால் போவாங்க. ஏன் அவளை நேர்ல பார்க்கணும்னு முடிவு பண்ணிட்டா அதைக் கூட செய்வாங்க. ஆளுக்கு ஒரு பக்கம் இருந்தாலும் ஒருத்தருக்கு ஒருத்தர் நல்ல துணையா ஆதரவா ஒன்னாவே இருப்பாங்க” என்றாள் குயிலி பெருமையுடன்.