top of page

Valasai Pogum Paravaikalaai - 29

29 - மறுமலர்ச்சி!


பெரும் பணக்காரர்கள் வசிக்கும் பங்களாக்கள் மட்டுமே இருக்கும் தெரு அது. ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை, மூடியிருந்த மிகப்பெரிய இரும்பு கேட்டின் அருகில் நிறுத்திப் பூட்டிவிட்டு அந்த கேட்டைக் கொஞ்சமாகத் திறந்து உள்ளே நுழைந்தாள் மேகலா.


அந்த பங்களாவின் முன்பக்கம் இருக்கும் சிறு தோட்டத்தில் போடப்பட்டிருந்த மூங்கில் நாற்காலியில் அமர்ந்தபடி இமான் அண்ணாச்சியால் பிரபலமாக இருக்கும் டேபிள் மேட் மேல் தன் மடிக்கணினியை வைத்து அதில் மூழ்கியிருந்தார் ஞானி.


அருகில் ஒரு அழகிய பீங்கான் குவளையில் நுரைப் பொங்க ரம்மியமான மணத்தைப் பரப்பிக்கொண்டிருந்தது அவருக்கான காஃபி.


“என்ன ஆசானே! நான் வந்ததைக் கூட கவனிக்காம அப்படி என்ன இந்த லேப்டாப்ல பார்த்துட்டு இருக்கீங்க” என்றபடி அவருக்கு அருகில் வந்து உட்கார்ந்த மஞ்சு மடிக்கணினித் திரைக்குள் தலையை விட்டுப் பார்க்க, கேரளா புடவை அணிந்து முழு ஒப்பனையுடன் ஒரு பெண்ணின் படம் அதில் ஒளிர்ந்தது. அருகில் அவளைப் பற்றிய தகவல்கள்.


“அய்ய... வழக்கம் போல உங்க லேப்டாப் குள்ள முகிலுக்குப் பொண்ணுத் தேடிட்டு இருக்கீங்களா?” என்றாள் முகத்தைச் சுளித்தபடி.


அவனை சந்தித்த புதிதில் விவரம் புரியாமல் அவனை ‘அங்கிள்’ என்று அழைத்துவிட்டாள் மேகலா. அவ்வளவுதான், அவளைப் பார்க்கும்போதெல்லாம் பாட்டி... பாட்டி... என்றழைத்து அவளை ஒரு வழி செய்துவிட்டான் கார்முகிலன். அவனை யாராவது ‘அங்கிள்’ என்று அழைத்தாலே அவனுக்குப் பிடிக்காது. சரணோ லச்சுவோ அப்படி அழைத்தால் கூட கொஞ்சம் பொறுத்துக் கொள்வான், பதின்ம வயதிலிருந்த மேகலாவோ கல்யாணியோ அப்படி அழைத்தால் இப்படிதான் ஏதாவது இடக்காக வம்பிழுப்பான். ‘வேறு எப்படி அழைப்பது’ என அவர்கள் கேட்டபோது, “ஃப்ரெண்ட்லியா முகில்னே கூப்பிடுங்க. நம்ம எல்லாரும் சேம் ஏஜ் க்ரூப்தான?” என்று இலகுவாகவே சொல்லிவிட்டான். சொன்னதுபோல நல்ல நண்பனாகவும் நடந்துகொள்கிறான். பிள்ளைகளுக்கும் இதுவே பழகிவிட்டது.


“ஹேய்... என்ன பொழுது விடிய வீட்டுக்கு வந்து, ஏதோ ஆகாதத செய்யற மாதிரி இப்படி முகத்தைச் சுளிக்கற. பிச்சுடுவேன் பிச்சு” என அவர் செல்லமாக மிரட்ட, “அதில்ல ஆசான், நீங்க எந்தப் பொண்ணு ப்ரொஃபைல சூஸ் பண்ணி உங்கப் பிள்ளைக்கு அனுப்பினாலும், அது அப்ரூவே ஆகாது. ஒன்லி ரிஜக்டட்தான். என்னை மாதிரியே முகிலுக்கும் கல்யாணம்ன்னு சொன்னா கசப்பான கஷாயம் குடிக்கற மாதிரி கொடுமையான விஷயம் தெரியுமா?” என்றாள்.


'இவளுடைய அம்மாவின் வாழ்க்கையில் அவளுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள்தான் இவளை இப்படி நினைக்க வைக்கிறது' என்று எண்ணியவர் மென்மையாகப் புன்னகைத்தபடி, “என் பையன் வேதாளம் நான்தான் விக்ரமாதித்தன்ம்மா. அவன் கீழ இறங்கி வர வரைக்கும் நான் என் முயற்சியை நிறுத்தவேமாட்டேன்” என அவர் இலகுவாகவே சொல்ல, “ஆக... அந்த வேதாளத்தை ஏதோ ஒரு காளிக்குப் பலி கொடுக்கும் வரை ஓயமாட்டீங்க” என அவளும் விளையாட்டாகச் சொல்லவும், அவர் முகமே மாறிப்போனது.


“ஏம்மா கல்யாணம்னா பலி கொடுக்கறதா? ஏன் இப்படி நெகட்டிவா பேசற” என்றார் தீவிர பாவத்தில்.


“ப்ச்... ஏதோ ஒரு விதத்துல எல்லாருமே பாதிக்கப்படறாங்க இல்லையா தாத்தா?” என்றாள் விளங்காமல்.


“இல்லடா தங்கம், உன் கண்கள்ல பட்டதெல்லாம் அப்படி இருக்கு. வேற ஒண்ணும் இல்ல” என்றவர், “என்னையே எடுத்துக்கோ! முகிலோட அம்மா எங்களை விட்டுட்டுப் போனப்ப எனக்கு நாற்பத்தி அஞ்சு வயசு. அப்பவே இன்னொரு கல்யாணம் செஞ்சுக்க சொல்லி எல்லாரும் என்னை நெருக்கினாங்க. தோளுக்கு மேல வளர்ந்த பிள்ளையை வெச்சிட்டு என் மனசு இடம் கொடுக்கல. ஆனா அவன் வளர வளர என்னை விட்டு ரொம்ப தூரம் போயிட்டான். இப்ப ஒரே வீட்டுக்குள்ள ஒண்ணா இருந்தாலும் கூட அவனும் தனியாதான் இருக்கான். நானும் தனியாதான் இருக்கேன். கிட்டத்தட்ட முப்பது வருஷம் இப்படியே போயிடுச்சு. இளமையில் வறுமை கொடுமையானதுன்னு அவ்வையார் சொன்னாங்க இல்ல, அதனினும் கொடிது என்னன்னு தெரியுமாம்மா?” என்று கேட்டவர் அவள் உதட்டைப் பிதுக்கவும், “முதுமையில் தனிமைம்மா. அந்தக் கொடுமையை என் பிள்ளை அனுபவிக்கக் கூடாதுன்னு நினைக்கறேன். எனக்காவது மகன்னு ஒருத்தன் இருக்கான். ஆனா அவனோட எதிர்காலத்துக்கு யார் துணை?” என்று முடித்தார்.


‘என் அம்மாவின் தனிமையும் இதே போலக் கொடுமையானதுதானே?!’ என்ற கேள்வி சுருக்கென்றுக் குத்தி அவளது மனத்தைக் கிழித்தது.


“நீங்க சொல்றது ரொம்ப சரி தாத்தா” என்றவள், “நேத்து நைட் அம்மா அழுதுட்டு இருந்தாங்க தெரியுமா?” என்று சொல்ல, “ஏம்மா, நீ வெளிநாட்டுக்குப் படிக்கப் போறத நினைச்சு கவலைபட்டுட்டு இருக்காளா பாவம்?” என்று கேட்டார்.


“ப்ச்... அதுதான் தாத்தா. அப்பறம் ரொம்ப நேரம் பேசிட்டு இருந்தோம். அவங்க படிப்பைப் பாதில நிறுத்தி கல்யாணம் செஞ்சு வெச்சது. அப்பறம் அந்த ஆளால அவங்க அனுபவிச்ச கஷ்டங்கள். அந்த ஆள் செத்துப்போன பிறகு எல்லாரும் சேர்ந்து அவங்களை எக்ஸ்பிளாயிட் பண்ணது. அங்க இருக்கவே முடியாம என்னைத் தூக்கிட்டு தனியா இந்த ஊருக்கு வந்ததுன்னு நிறைய துன்பக் கதை அண்ட் முதன்முதலா நான் நடந்தது, பேசினது விளையாடினதுன்னு நிறைய ஸ்வீட் மெமரீஸ்ன்னு எல்லாமே. ‘உன்னை விட்டுட்டு எப்படி தனியா இருக்கப் போறனோ பாப்பா’ன்னு மறுபடியும் அழுதாங்க.


‘இன்னும் ஒரு அஞ்சு ஆறு வருஷம்தானம்மா, நான் திரும்ப வந்துடுவேன், தென் மறுபடியும் நாம ஒண்ண இருக்கலாம்’ன்னு என்னவோ ஆறுதல் சொல்றதா நினைச்சிட்டுச் சொல்லி வெச்சேன். ஆனா நான் எவ்வளவு செல்ஃபிஷ் இல்ல தாத்தா.


அவங்க லைஃப்ல என்னைத் தவிர வேற எந்த ஒரு விஷயமும் அவங்களுக்காக இல்லவே இல்லல்ல. சம்பாதிக்கற மொத்தப் பணத்தையும் எனக்கே செலவு பண்ணிட்டு, நல்ல சாரி கூட இல்லாம வெளுத்துப் போன பழைய சாரி கட்டிட்டு ஆஃபிஸ் போயிட்டு இருந்தாங்க” சொல்லும்போதே அவள் கண்கள் கலங்கி முகம் சிவந்தது.


“ஏன் தங்கம் போன கதையெல்லாம் பேசிட்டு. அதுதான் முன்னேற்றப் பாதைல போயிட்டு இருக்கீங்க இல்ல. பழசைப் பேசி ஒரே இடத்துல தேங்கிப் போகக் கூடாது” என்றார் கட்டளை போல்.


“இல்ல தாத்தா, தனிமைக் கொடுமைய பத்தி சொன்னீங்க இல்ல, இப்பதான் அம்மாவோட தனிமைப் பத்தி யோசிக்கறேன்” என்றவள், “ஒரு வேள நீங்க என் அம்மாவோட அப்பாவா இருந்திருந்தா ஒரு மாப்பிளை பார்த்து அவங்களுக்கு வேற ஒரு கல்யாணம் பண்ணி வெச்சிருப்பீங்க இல்ல?” என அவள் ஏக்கமாகக் கேட்க அப்படியே உருகிப் போனார் மனிதர். அவருக்கு அவளிடம் என்ன பதில் சொல்வதென்றே புரியவில்லை.


துப்பட்டாவால் தன் முகத்தை அழுந்தத் துடைத்துக்கொண்டு உறுதியான ஒரு முடிவுக்கு வந்தவளாக, “புத்திக் கெட்ட அவங்க அப்பா அம்மா செய்யாமவிட்டதை நான் ஏன் செய்யக் கூடாது?!” என்று தீவிரமாகக் கேட்டவள், “ஆசானே, இந்த மேட்ரிமனி சைட்ல் இதே மாதிரி ஒரு ப்ரொஃபைல் எங்க அம்மாவுக்கும் க்ரியேட் பண்ணனும். எனக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க” என்றாள் முடிவான முடிவாக.


“ஹேய்... என்ன நீ பாட்டுக்கு ஒரு முடிவை எடுத்துட்டு குழந்தைத்தனமா பேசிட்டு இருக்க. இதுக்கு உங்க அம்மா சம்மதிக்க வேணாமா?” என்று அவர் படபடக்க, “இந்த அஞ்சும்மா, குயிலி ஆன்ட்டி எல்லாரும் எதுக்கு இருக்காங்க. அதெல்லாம் அவங்களை சம்மதிக்க வெச்சுக்கலாம்” என அவள் முடிவாகச் சொல்ல, வியப்புடன் அவளது முகத்தை ஏறிட்டார் ஞானி. பொறியாகத் தோன்றிய ஒரு எண்ணத்தில் அவருடைய கண்கள் பிரகாசமாக மின்னியது.


அன்றைய நாள் முழுவதும் அவருடன் இருக்க வேண்டும் என்று எண்ணி வந்தவள் தன் மனதை மாற்றிக்கொண்டு அஞ்சுவையும் குயிலியையும் உடனே நேரில் பார்த்துப் பேச சரணாலயம் நோக்கிப் போனாள்.


*********


சரணாலயத்தின் புதிய கட்டடத் திறப்பு விழாவுக்குத் தேர்ந்தெடுத்த வெகு சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எல்லோருமே பெரும் முதலாளிகள், திரைத்துறைப் பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், முக்கியப் பதவியில் இருப்பவர்கள் இப்படி. அதுவே ஐநூறு பேருக்கு மேல் தேறும்.


அதன் பிறகு சரணாலயம் குழுமத்தில் வேலை செய்பவர்களுக்கான தனிப்பட்ட பார்ட்டி. அவர்கள் மட்டுமே ஆயிரம் பேருக்கு மேல் தேறுவார்கள்.


எல்லோருக்கும் ஆடம்பர விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. லேசர் திரைகளுடன் மிகப் பெரிய மேடை அமைக்கப்பட்டிருக்க, விருந்தினர் அமர்ந்து உணவுடன் விழாவைக் கண்டு களிக்க ஏதுவாகச் சதுர மேசைகளும் அதைச் சுற்றி நான்கு புறமும் நாற்காலிகளும் போடப்பட்டிருந்தன.


விழா ஒருங்கிணைப்பாளர்களும் அவர்களுடைய ஆட்களும் சுறுசுறுப்பாக வேலை செய்துகொண்டிருக்க அங்கேதான் மேற்பார்வை பார்த்தபடி நின்றுகொண்டிருந்தாள் அஞ்சு. ஒவ்வொரு இடமாக அவளைத் தேடியபடி ஒரு வழியாக அங்கே வந்து சேர்ந்தாள் மேகலா.


அவளைப் பார்த்ததும் வேகமாக ஓடி வந்தவள், “அஞ்சும்மா... அஞ்சும்மா... உங்க கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும்” என்றபடி அவளது கையைப் பிடித்து ஓரமாக இழுத்துச் சென்றாள்.


“ஏய் விடுடீ... எல்லாரும் நம்மளையே பார்க்கறாங்க” என அவளைக் கடிந்தவள், “ஆமாம் என்னவோ இன்னைக்கு ஃபுல்லா உங்க ஆசானோட இருக்கப் போறேன்னு போனவ இங்க வந்து நிக்கற?” என அஞ்சு நொடிக்க,


“நான் ஒரு பெரிய முடிவை எடுத்திருக்கேன் அஞ்சும்மா, அது நல்லபடியா நடந்து முடிய நீங்களும் குயிலி ஆன்ட்டியும்தான் எனக்கு ஹெல்ப் பண்ணனும்” என்றாள் மூச்சு வாங்க.


“ஏய், அதுக்கு இப்பவாடி நேரம் பார்த்த” என அவள் சலிக்க, “ஆமாம் அஞ்சும்மா... நல்ல விஷயத்தைத் தள்ளிப் போடக் கூடாது” என்றவள் படபடவெனத் தன எண்ணத்தைச் சொல்ல, அஞ்சுவுக்குத் தூக்கிவாரிப் போட்டது.


அவள் அதிர்ந்து பார்க்க, “இல்ல அஞ்சும்மா... யோசிக்காதீங்க! அம்மாவுக்காக இதை செஞ்சே தீரணும்” என அவள் பிடிவாதமாகச் சொல்ல, “நல்ல நேரம் பார்த்தடீ நீ... இந்த ஃபங்க்ஷன் நல்ல படியா முடியட்டும் வெயிட் பண்ணு” என அவள் சொல்லிக் கொண்டிருக்க, “என்ன மேகி... என்னை அவசரமா பார்க்கணும்னு சொன்னியாம். ஜோதிம்மா சொன்னாங்க. என்னடி விஷயம்” என்றபடி அவர்களை நெருங்கி வந்தாள் குயிலி.


அஞ்சுவிடம் சொன்னதை அப்படியே அவள் குயிலியிடம் சொல்ல, ஒரு நொடி பேச்சே வரவில்லை குயிலிக்கு. “உன்னை மாதிரி ஒரு பெண்ணைப் பெற தங்கம் கொடுத்து வெச்சிருக்கணும்டீ கண்ணு” என அப்படியே அவளை அணைத்துக் கொண்டவள், “நிச்சயமா செய்வோம் கண்ணா... கவலைப் படாத. முதல்ல இன்னைக்கு வேலையை முடிச்சிட்டு அடுத்தது உங்க அம்மா கல்யாண வைபோகம்தான்” என்றாள் உறுதியாக.


அதன் பின் அன்றைய வேலைகளில் அவர்களிருவரும் மூழ்கிப் போக, மாலை விழா சிறப்பாகத் தொடங்கியது.

2 comments
© KPN NOVELS COPY PROTECT
bottom of page