top of page

Valasai Pogum Paravaikalaai - 28

28 - வெற்றியின் சுவை!


வரவேற்பறை சோஃபாவில் எட்டாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தைப் பிரித்து வைத்தபடி உட்கார்ந்திருந்தான் சூர்யா. அவன் மடியில் தலை வைத்துப் படுத்தவாறே அற்புத கவிதை ஒன்றை ஒப்பித்துக் கொண்டிருந்தான் சரண். தகப்பனின் கரம் மகனின் கேசத்தை வருடியவண்ணம் இருந்தது.


“ப்பா ரெடியா? சொல்லட்டுமா?’


‘ம்ம்”


“இளைய தோழனுக்கு!


‘ம்ம்’நட


நாளை மட்டுமல்ல


இன்றும்


நம்முடையதுதான்நட


பாதங்கள்


நடக்கத்தயாராய் இருந்தால்


பாதைகள்


மறுப்புச் சொல்லப்


போவதில்லை.நெய்யாய்த் திரியாய்


நீயே மாறினால்


தோல்வியும் உனக்கொரு


தூண்டுகோலாகும்!


வெற்றி


உன்னைச்சுற்றி


வெளிச்சவிதை விதைக்கும்!கவலைகளைத்


தூக்கிக்கொண்டு


திரியாதே...


அவை கைக்குழந்தைகளல்ல...ஓடிவந்து கைக்குலுக்க


ஒருவரும் இல்லையா?


உன்னுடன் நீயே


கைக்குலுக்கிக் கொள்!தூங்கி விழுந்தால்


பூமி உனக்குப்


படுக்கையாகிறது.


விழித்து நடந்தால்


அதுவே உனக்குப்


பாதையாகிறது!நீ விழித்தெழும் திசையே


பூமிக்குக் கிழக்கு!


உன் விரல்களில் ஒளிரும்


சூரியவிளக்கு!நட


நாளை மட்டுமல்ல


இன்றும் நம்முடையதுதான்


நட!எழுதியவர் கவிஞர் மு.மேத்தா”“ல,ள,ழகர உச்சரிப்புகள் பிரளாமல் தெளிவாகச் சொல்லி முடித்தவன்,. “ப்பா... ஸ்ட்ரக் ஆகாம கரக்டா சொல்லிட்டேன் இல்லப்பா’ என்று சரண் கேட்க, குனிந்து அவனது நெற்றியில் அழுந்த இதழ் பதித்தவன், ‘சூப்பர்டா கண்ணு! பர்ஃபெக்ட்!” என்றான் சூர்யா.


படக்கென எழுந்து உட்கார்ந்தவன் அப்பாவை அணைத்து அவன் கன்னத்தில் முத்தமிட்ட பின், “அப்படினா எங்க தமிழ் மிஸ் ப்ரைஸா தரேன்னு சொன்ன திருக்குறள் புக் இன்னைக்கு கன்ஃபார்ம்” என்றான் மகிழ்ச்சி ததும்ப.


“அதுல சந்தேகமே இல்ல செல்லம். உனக்குக் கண்டிப்பா கிடைக்கும்” என அவனை உற்சாகப்படுத்த, “மறுபடியும் ஒரு தடவ சொல்றேன்” என்றவன்...


“இளைய தோழனுக்கு!” என்று தொடங்கி முழுவதையும் மீண்டும் ஒரு முறைச் சொல்லி முடித்தான். இதழ்களில் பூத்த முறுவலுடன் இந்தக் கவிதையான காட்சியைப் பார்த்தது பார்த்தபடி ஒருத்தி அங்கே வந்து நிற்பதைக் கூட கவனிக்காமல் மறுபடியும் சிறு கொஞ்சல், குலாவல்தான் தகப்பனுக்கும் மகனுக்குமிடையில்.


அந்த நேரம் பார்த்து அவளுடைய கைப்பேசி ஒலிக்க அப்பொழுதுதான் இருவரின் பார்வையும் குயிலியின் பக்கமே திரும்பியது.


அடுத்த நொடி ஓடி வந்து அவளைக் கட்டிக்கொண்டான் சரண். அவளுடைய ஒரு கரம் மகனைத் தன்னுடன் நெருக்கிக்கொண்டது. “யா... யா... தங்கம்... ஷார்ப்பா எய்ட்க்கு அங்க இருப்பேன். எல்லா அரேஞ்மென்ஸும் சரியா இருக்கான்னு ஒரு ஃபைனல் செக் பண்ணிடலாம்” என அந்த அழைப்பை அவள் பேசி முடிக்கும் வரை அமைதியாக இருந்தவன், “ம்மா... தமிழ் போயம் ஒண்ண பார்க்காம ஒப்பிச்சா எங்க மிஸ் திருக்குறள் புக் ப்ரைஸ் கொடுக்கறேன்னு சொல்லியிருக்காங்க. நான் அதை மனப்பாடம் செஞ்சுட்டனே” என்றான் பெருமையாக. “குட்! அதோட மீனிங் உனக்கு புரிஞ்சதா கண்ணு” என அவள் மகனிடம் கேட்க, “ம்ம்... ஈசி வேர்டிங்க்ஸ்தான் ம்மா... எனக்கே புரிஞ்சுது. அப்பாவும் எக்ஸ்ப்ளைன் பண்ணாங்க” என்றான். சூர்யாவின் விழிகள் மனைவியின் முகத்திலேயே நிலைத்திருந்தன.


“சரி செல்லம், நீ போய் ரெடி ஆகு. அம்மா இன்னைக்கு சீக்கிரம் ஹோட்டலுக்கு போகணும். ஸோ... அப்பா இல்லன்னா தாத்தா உன்னை ஸ்கூல்ல டிராப் பண்ணுவாங்க” என்று சொல்லிவிட்டு அவளுடைய அறை நோக்கிப் போனவள் நேராகப் போய் குளித்து, துரிதமாக உடை மாற்றி வந்தாள். அதற்குள்ளாகவே வியர்த்து வழியவும் உடல் தளர்ந்து போக, ஏ.சியைப் போட்டுவிட்டு அங்கிருந்த இருக்கையில் அப்படியே அமர்ந்தாள்.


இன்று அவளுடைய வாழ்கையில் மிக மிக முக்கியமான ஒரு நாள்.


அவளுடைய உழைப்புக்கும் விடாமுயற்சிக்கும் கிடைத்த அளப்பரிய வெற்றியின் கொண்டாட்டம். அவள் ஸ்தாபித்த தொழில் சாம்ராஜ்யத்தில் அவள் மணிமுடி சூடப்போகும் நாள் என்றுதான் சொல்லவேண்டும். அதாவது சரணாலயத்தை ஐந்து நட்சத்திர விடுதியாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் போகிறாள்.


முன்பிருந்த ஹோட்டலை விஸ்தரித்துக் கட்டப்பட்டிருக்கும் புதிய கட்டிடத்தின் திறப்பு விழாவுடன் சேர்த்து இதற்கான விழாவையும் ஏற்பாடு செய்திருக்கிறாள். நகரத்தில் இருக்கும் மிக முக்கிய புள்ளிகளுக்கெல்லாம் அழைப்பு விடுத்திருக்கிறாள்.


அந்தக் கட்டடத்தைத் திறந்து வைக்க இந்தத் துறையில் தன் வழிகாட்டியாக நினைக்கும் ஆதி டெக்ஸ்டைல்ஸ் தேவாதிராஜனை சிறப்பு விருந்தினராக அழைத்திருக்கிறாள்.


எல்லா ஏற்பாடுகளும் பக்காவாக செய்து முடித்து விழாவிற்குத் தயாராக இருக்கிறது சரணாலயம். இருந்தாலும் கூட, அவளுக்கு இந்த விழா நல்லபடியாக நடந்து முடிய வேண்டுமே என்கிற படபடப்புச் சற்று அதிகமாகவே இருந்தது.


கண்களை மூடி இருக்கையில் சாய்ந்தமர்ந்து மூச்சை நன்றாக இழுத்து விட்டபடி மனதை ஒருநிலைப் படுத்த முயன்று கொண்டிருந்தாள். அது சுலபத்தில் நடந்தபாடில்லை.


அருகில் நிழலாடுவதைப் போலத் தோன்ற விழிகளைத் திறந்து பார்க்கவும், அவளுக்கான காலை உணவுடன் அங்கே நின்றிருந்தான் சூர்யா.


ஒரு கையில் தட்டை ஏந்தியபடி மறு கையால் சிறிய உணவு மேசையை இழுத்து அவளுக்கருகில் போட்டவன் அந்தத் தட்டை அதன் மீது வைத்தான்.


“ஓஹ் நோ சூர்யா! என்னால இவ்வளவு எர்லியா சாப்பிட முடியாது. ஏற்கனவே வயித்துக்குள்ள ஏதோ சங்கடம் பண்ணிட்டு இருக்கு” என்றாள் முகத்தைச் சுளித்தபடி.


மௌனமாக அவளை ஏறிட்டவன் அவளது உடலில் சிறு நடுக்கம் தெரியவும் எதையும் யோசிக்காமல் அப்படியே கையைப் பற்றி அவளைத் தூக்கி நிறுத்தி ‘என்ன’ என அவள் உணருவதற்கு முன்பே தன் மார்புடன் சேர்த்து அவளை அணைத்திருந்தான். “ஐயோ... என்ன பண்றீங்க” எனக் கிசுகிசுத்தவாறு அவள் விலக எத்தனிக்க தளர்த்துவதற்குப் பதிலாக அவனது அணைப்பு மேலும் மேலும் இறுகிப்போனது. விழிகள் மூடி தன் முகவாயை அவளது உச்சியில் பதித்து அவளைத் தனக்குள் புதைத்தபடி அசைவற்று அப்படியே நின்றான்.


ஆயிரம் வார்த்தைகளால் சொல்லி விளங்க வைக்க இயலாத ஒரு அன்பும் அக்கறையும் கலந்த அவனது அந்த அணைப்பின் ஒவ்வொரு நொடியும் இதத்தைக் கூட்ட, அவளது நடுக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து சில நிமிடங்களில் இறுக்கம் தளர்ந்து மனம் ஒருநிலைப்பட்டிருந்தது.


தன்னை நினைத்தே வியந்தவளாக, “போதும் விடுங்க சூர்யா! நவ் ஐம் ஓகே” என அவள் முணுமுணுக்கவும் அவளது அந்தச் சிணுங்கல் அவனைத் தன்வசமிழக்கச் செய்ய, தினம் தினம் பழக்கப்பட்ட பாதையில் அனாயாசமாகப் பயணம் செய்வதுபோல் அவள் முகமெங்கும் பயணித்த அவனது இதழ்கள் அவளது இதழ் தேடி இளைப்பாறியது. கிறங்கி மயங்கியிருந்தவன் இப்படி மயங்கச் செய்தவளையும் மயங்கச் செய்திருந்தான்.


ஒருசேர இருவருக்கும் மகனுடைய நினைவு வர, சில நொடி நேரத்திலேயே தோன்றி முற்றுப்பெறாமல் கலைந்து போகும் ஒரு மிக நீண்ட இனிய கனவைப் போல அந்த முத்தத் தருணம் முடிவுக்கு வர, பதறி விலகியவர்களின் விழிகள் ஒருசேர அறையின் வெளிப்புறம் பார்த்து மீண்டது.


ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் அவனை முறைத்தவள், “எந்த நேரத்துல என்ன செஞ்சிட்டு இருக்க சூர்யா” என்றாள் ஒரு செல்லக் கோபத்துடன்.


“ஹேய்! டென்ஷனா இருந்த உன்னை ரிலாக்ஸ் பண்ணேன்மா. அது கூட புரியலியா. இதை எனக்கு சொல்லிக் கொடுத்ததே நீதான” என்று அப்பாவியாய் பதில் கொடுத்தான். திருமணமான புதிதில் நடந்தவற்றை நினைவில் வைத்து அடிக்கடி அவன் சொல்லும் வார்த்தைதான் அது.


பூத்த நாணத்தை மறைத்து அவனை முறைக்க முயன்று அதில் அவள் தோற்க, “இப்படியெல்லாம் பார்த்து வைக்காத. இன்னைக்குப் பொழுதுக்கு இப்ப நடந்ததே அதிகம். ஒழுங்கா தட்டை காலி பண்ணிட்டு, சீக்கிரம் ரெடி ஆகி கீழ வா. எல்லாரும் உனக்காக வெயிடிங். இப்ப நான் போய் உன் பையன வேற ரெடி பண்ணனும்” என்றபடி அங்கிருந்து அகன்றான்.


இந்த அளவுக்கு அவனை தன் வாழ்கையில் அவள் அனுமதித்ததற்கு அவளுக்கு இரண்டு காரணங்கள் இருந்தது.


ஒன்று...


இரண்டு வருடங்களுக்கு முன் சரணின் பிறந்தநாள் விழாவை இவர்கள் தடபுடலாகக் கொண்டாடியதன் பலனாக நேராக சூர்யாவின் வீட்டில் வந்து குதித்தாள் மமதியின் அம்மா.


ஏதோ வேலை இருக்கவும், அன்று அஞ்சுவும் அங்கேதான் இருந்தாள்.


‘இவ்வளவு வருடங்களுக்குப் பிறகு சூர்யாவின் மகன் என்று சொல்லிக்கொண்டு ஒருவன் வந்து நிற்கிறானே, அதற்கு ஆதாரம் என்ன? அப்படியே அது உண்மையாக இருந்தாலும் தன் பேத்தி நிலாவின் எதிர்காலத்துக்கு உத்தரவாதம் வேண்டும்? அதற்காக இவர்கள் குடியிருக்கும் அந்த வீட்டை நிலாவின் பெயரில் எழுதிக் கொடுக்க வேண்டும்’ என்று அவள் அழிச்சாட்டியமாகப் பேச, குயிலியைப் பற்றித் தரக்குறைவானப் பொருள்படும்படி அவள் பேசிய பேச்சு சூர்யாவுக்கு அப்படி ஒரு ஆத்திரத்தைக் கொடுத்தது.


“என் மனைவியையும் மகனையும் பற்றிப் பேசும் எந்த தகுதியும் உனக்கு இல்லை! நிலாவுக்காகப் பார்த்துப் பார்த்து உன்னால் தேவையான அளவுக்குத் தொல்லைகளை அனுபவித்து விட்டோம். அவளுக்கு அடிப்படையாகச் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்துகொண்டுதான் இருக்கிறேன். ஆனால் இப்படி அதிகாரமாக மிரட்டிக்கொண்டு இனி எங்கள் வீட்டுப் படியை மிதித்தால் உன் குடும்பத்தில் உள்ள ஒருவரையும் சும்மா விடமாட்டேன். ஏற்கனவே என் மகளிடம் என்னைப் பற்றி தவறாகச் சொல்லிக் கொடுத்து அவளுக்கு என்னிடம் மதிப்போ மரியாதையோ இல்லாமல் செய்துவிட்டீர்கள். இதற்கு மேலும் இதையெல்லாம் செய்தால் கூட என்னால் அதை மீட்டெடுக்கவும் முடியாது. அதற்கான தேவையும் எனக்கு இல்லை. மரியாதையாக வெளியில் போ” என்று முகத்துக்கு நேராகப் பேசியிருக்க, மகன் பேசுவதுதான் சரி என்பதாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டு பேசாமல் இருந்துவிட்டனர் சிகாமணியும் ருக்மணியும்.


வழக்கமாகக் குற்ற உணர்ச்சி மேலோங்க எது சொன்னாலும் தன் இஷ்டத்துக்கு வளைந்து கொடுக்கும் இந்தக் குடும்பத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றம், அப்படி ஒரு அதிர்ச்சியைக் கொடுத்தது அந்தப் பெண்மணிக்கு.


தான் எதிர்பார்த்து வந்தது நடக்காமல் போனதால் உண்டான எரிச்சலில், “இப்படியெல்லாம் கூட பேசுவியா நீ? உங்க எல்லாரையும் என்ன செய்யறேன் பாரு! சொத்துல என் பேத்திக்கான பங்கைக் கேட்டு கோர்ட்ல கேஸ் போடறேன்” என அவள் தன் ஆட்டத்தைத் தொடங்க, இதையெல்லாம் பார்த்துக் கொலை காண்டிலிருந்த அஞ்சு தரதரவென அவளை இழுத்துப் போய் வெளியில் தள்ளிக் கதவை அடைத்தாள்.


“இப்படியெல்லாம் கூட பொம்பளைங்க இருப்பாங்கன்னு நான் நினைச்சு கூட பார்த்ததில்ல குயிலு. பாவம் சூர்யா சார்” என்று தொடங்கிய அஞ்சு அனைத்தையும் இவளிடம் சொல்லிப் புலம்பியிருந்தாள். அவனுடைய இந்தச் சிறு மாற்றமே குயிலிக்கு வியப்பை ஏற்படுத்தியிருந்தது.


நாட்கள் அதன் போக்கில் செல்ல, இவனும் அடிக்கடி மகனைச் சந்திக்கும் சாக்கை வைத்துக்கொண்டு குயிலியையும் பார்த்துவிட்டுப் போவான்.


அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் அறிமுகமாகிய முகிலனுடன் அவனுக்கு சிறு நெருக்கமும் உண்டாகியது. ஏற்கனவே இவர்கள் கதை தெரிந்ததிலிருந்தே முகிலனுக்கு இவனிடம் சிறு பரிதாப உணர்ச்சி வேறு இருந்துகொண்டே இருந்தது.


அவனுடன் ஏற்பட்ட பழக்கத்தில், வீட்டில் பங்கு கேட்டு மமதியின் அம்மா வக்கீல் நோடீஸ் அனுப்பியது தெரிந்து தானாகவே உதவிக்கு வந்தான் முகிலன்.


மீண்டும் அதே ரவுடியைக் கொண்டு அவன் கொடுத்தக் குடைச்சலில் அந்தப் பெண்மணி கப்பென்று அடங்கிப்போனாள்.


அத்துடன் நிறுத்தவில்லை சூர்யா. முதல் காரியமாக மகளைப் பராமரிக்கும் உரிமை கோரி, ‘அவள் பெற்ற தாயுடன் வசிக்கவில்லை, பொறுப்பற்ற முதியவர்களின் பராமரிப்பில் இருக்கிறாள், அவள் தற்பொழுது இருக்கும் சூழ்நிலை அவளுக்குப் பாதுகாப்பானதாக இல்லை, அது அவளுடைய மனநிலையைப் பாதிக்கும்’ என்பதையெல்லாம் குறிப்பிட்டு அதற்கான ஆதாரங்களுடன் வழக்குத் தொடுத்தான்.


அவன் இப்படி இடம் பார்த்து அடித்த அடியில் அவன் எதிர்பார்த்தது போலவே அவனைத் தேடி ஓடி வந்தாள் மமதி. மகள் மட்டுமே தனக்கு ஒரே ஆதரவு, அவளைத் தன்னால் யாருக்கும் விட்டுக் கொடுக்க இயலாது’ என்பதாக முதலில் மிரட்டலில் தொடங்கி அது பயனில்லாமல் போக வேறு வழி இல்லாமல் இறுதியில் கெஞ்சும் நிலைக்கு வந்து நின்றாள்.


அவளுடைய அம்மா செய்த குளறுபடிகள், இவர்களைத் தொல்லை செய்து பணம் பறிப்பது என அவன் குற்றச்சாட்டுகளை அடுக்க, தன் அம்மா செய்யும் எதுவுமே தனக்குத் தெரியாது என்றும், அவர் தனக்கு நன்மையை மட்டுமே செய்வர் என்கிற நம்பிக்கையின் பெயரில் அவர் கேட்கும் இடத்திலெல்லாம் படித்துக் கூட பார்க்காமல் கையெழுத்துப் போட்டதாகவும் சாதித்தவள், சமீபமாகதான் தன் அம்மாவின் சுயரூபத்தை அறிந்துகொண்டதாகச் சொல்லிக் கெஞ்ச,


‘நீ எங்கே இருந்தாலும், என் மகள் இனி உன்னுடைய நேரடி பாதுகாப்பில்தான் வளர வேண்டும். உன் அம்மாவின் நிழல் கூட அவள் மேல் விழாமல் அவளுக்கு எந்தப் பாதுகாப்புக் குறைபாடும் ஏற்படா வண்ணம் நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும். அனைத்தையும் விட முக்கியமாக... நீ என்ன செய்வாயோ அதைப்பற்றியெல்லாம் எனக்குக் கவலை இல்லை, ஆனால் என் மகளுக்கு என் மேல் உள்ள வெறுப்பு மாறி, என்னை அவள் இயல்பாக ஏற்றுக்கொள்ள வேண்டும். இதெல்லாம் நடந்தால் அவளை உன் பாதுகாப்பில் நீயே வைத்து வளர்த்துக் கொள்ளலாம். இல்லையென்றால் நானே பார்த்துக் கொள்கிறேன்’ என்கிற நிபந்தனைகளுடன் அந்தப் பிரச்சனைக்கு ஒரு நிரந்தர தீர்வை ஏற்படுத்தினான் சூர்யா.


அதன் பின், ஒரு வேலையைத் தேடிக்கொண்டு நிரந்தரமாக இங்கேயே வந்துவிட்டாள் மமதி. மகளையும் நல்லபடியாகக் கவனித்துக் கொள்கிறாள்.


நிலாவிடமும் என்ன சொல்லி அவள் மனதை மாற்றினாளோ, அவளிடம் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டிருக்க சூர்யாவைக் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்துகொண்டாள் அவள்.


அவளுடைய செலவுகளுக்கு மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுப்பவன் அடிக்கடிப் போய் அவளைப் பார்த்துவிட்டு வருவான். சமயத்தில் சரணும் கூட அவனுடன் செல்வான்.


‘எனக்கு ஒரு ஹாஃப் சிஸ்டர் இருக்கா! அவ பேர் நிலா. ஷி இஸ் மை குட் ஃப்ரெண்ட்’ என்று அவளை ஏற்றுக்கொள்ளும் அளவுக்குச் சரணுக்கு அவளைப் பற்றிச் சொல்லிப் புரிய வைத்திருந்தான் சூர்யா. மற்றபடி எந்த இடத்திலும் குயிலியை இழுத்து அவளுக்கு எந்தவித சங்கடமும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டான்.


இரண்டாவது...


கோர்ட்... கேஸ்... மமதிக்குக் கொடுத்த நஷ்ட ஈடு எனப் பூர்விக சொத்துக்கள் எல்லாமே அவர்கள் கைவிட்டுப் போயிருந்தன. சூர்யா லோன் போட்டு வாங்கிய அவர்கள் இருக்கும் வீடும், தெய்வசிகாமணி வாங்கிப் போட்டிருக்கும் சில மனைகளும் மட்டுமே மீதம்.


எல்லோரும் குயிலியுடனேயே வந்த பிறகு அந்த வீட்டை வாடகைக்கு விடாமல் வைத்திருந்தனர். அப்பொழுது அவர்கள் பகுதி ஏரிக்கரை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடக்க, அஞ்சுவுக்குச் சிக்கல் உண்டானது. முதலில், வேறு வீடு ஏற்பாடாகும் வரை அவசரத்துக்கு தற்காலிகமாகதான் அவர்களை அங்கே தங்கிக் கொள்ளச் சொன்னான். அந்த சமயத்தில் தங்கத்துக்கும் அவளுடைய அப்பாவால் தொல்லைகள் நேர, மனதில் என்ன நினைத்தானோ, அந்த வீட்டை இரண்டு பகுதிகளாகத் தடுத்த சூர்யா அஞ்சுவுக்கும் தங்கத்துக்கும் அதை அப்படியே கொடுத்துவிட்டான். அவர்கள் தயங்கி அதை ஏற்க மறுக்க, ‘தங்கைகளுக்கு அண்ணன் செய்யும் பிறந்த வீட்டு சீர்’ என்று சொல்லி அவர்களை ஏற்க வைத்தான்.


குயிலியைத் தாண்டி இனி தனக்கென்று எதுவுமே தேவையில்லை என்பதே அவனது ஸ்திரமான மனநிலை என்பது பிறகு ஒரு நாள் அவன் சொல்லி அறிந்துகொண்டாள் குயிலி.


அவனது ஒரே தேவை தான் மட்டுமே என்றிருக்க அவனை எப்படி விலக்கி வைக்க இயலும் அவளால்?!


அவனது குறை நிறைகளுடன் அப்படியே அவனை ஏற்றுக் கொண்டாள்.


*********


மலர்ந்த புன்னகையுடனேயே தயாராகி அவள் கீழே வர, மொத்த குடும்பமும் அவளுக்காக வரவேற்பறையிலேயே குழுமியிருந்தது. மிகப் பெரிய ஒரு பூங்கொத்தைச் சுமக்க முடியாமல் சுமந்து வந்தவன், “கங்ராஜுலேஷன்ஸ்மா” என்றபடி அவளிடம் கொடுத்தான் சரண் முகம் நிறைந்த பூரிப்புடன்.


கணவன் அம்மா, அப்பா, மாமனார், மாமியார், காவலாளி உட்பட வீட்டில் வேலை செய்பவர்கள் என அனைவரும் கைத்தட்டி ஆரவாரம் செய்ய, கண்களில் நீர் கோர்க்க, அதன் கனம் தங்காமல் தள்ளாடியபடி அதை வாங்கினாள் குயிலி. ஓடி வந்து அதைத் தானும் சேர்ந்து பிடித்தவன், அவளிடமிருந்து அதை வாங்கிப் போய் ஓரமாக வைத்துவிட்டு வந்தான் சூர்யா.


அதற்குள் அவள் உயரத்துக்கு வளர்ந்திருந்த அவளுடைய மகன் அவளை அணைத்து முகமெங்கும் முத்தமிட்டுக் கொண்டிருக்க இருவரையும் சேர்த்து அணைத்தபடி அவன் அவளுக்கு வாழ்த்துச் சொல்ல, கண்களில் நீர் திரள அந்தக் காட்சியை மனம் முழுவதும் நிரப்பிக் கொண்டிருந்தார் வசந்தகுமார்.


மகளுடைய இந்த வெற்றி அவருடைய வெற்றியும் அல்லவா?!

0 comments

Comentarios

Obtuvo 0 de 5 estrellas.
Aún no hay calificaciones

Agrega una calificación
© KPN NOVELS COPY PROTECT
bottom of page