Valasai Pogum Paravaikalaai - 25
25 - நிர்ப்பந்தம்
“ஏன் சூர்யா, அந்த வார்த்தை அவ்வளவு ஹர்ட் பண்ணுதா உங்கள? அன்னைக்கு சொன்னீங்களே ‘ஷி இஸ் ப்ரெக்னன்ட் வித் மை சைல்ட்’ன்னு... என்ன ஒரு பயங்கரமான வார்த்தைகள் அது. கேட்கும்போதே எவ்வளவு நாரசமா இருந்திருக்கும் எனக்கு? சரண் என் மகன்னு தெரிஞ்சதும் அவனுக்கு அப்பா நீங்கதான்னு நம்பறீங்க இல்ல? அந்த நம்பிக்கை உங்க விஷயத்துல பொய்யா போன போது நான் எப்படி துடிச்சேன்னு உங்களுக்குத் தெரியுமா? நான் இங்க இருந்து கனடா கிளம்பறதுக்கு முன்னாடியே எனக்கு என் பிரக்னன்சி பத்தி ஒரு டௌட் இருந்துது. இங்கயே டெஸ்ட் பண்ணி பாசிடிவ்ன்னு வந்துட்டா எங்க உங்க கிட்ட வரவிடாம இங்க இருக்கறவங்க எல்லாரும் என்னைத் தடுத்துடப் போறாங்களோன்னு பயந்தே நான் அதை செய்யல.
அங்க வந்து டெஸ்ட் பண்ணி அது பாசிடிவ்ன்னு வரும்போது அந்த சந்தோஷத்தை அனுபவிக்க நீங்க என் பக்கத்துல இருக்கணும்னு கனவு கண்டேன். ஆனா அந்தக் கனவு கலைஞ்சு போச்சு. அவ பண்ண மாதிரி என் குழந்தையை வெச்சு கார்னர் பண்ணி உங்களை என் கூடத் தக்க வெச்சுக்க நான் விரும்பல! அன்னைக்கே முடிவு பண்ணிட்டேன் அந்தக் குழந்தை எனக்கு மட்டும்தான்னு. என்னோட சம்பந்தமே இல்லாம உங்களுக்கு ஒரு குழந்தை இருக்கும்போது சரண் என் குழந்தைன்னு நான் சொல்றதுல என்ன தப்பு? ஒரு சின்னக் குழந்தைக் கைல அதுக்குப் பிடிச்ச ஒரு பொம்மையைக் கொடுத்துட்டு உடனே பிடுங்கற மாதிரி எனக்கு நடந்தது என் பிள்ளைக்கும் நடக்காதுன்னு என்ன நிச்சயம்” என முகம் சிவக்க, கண்களில் கண்ணீர் பளபளக்க, உதடுகள் துடிக்க வெறிப்பிடித்தவள் போல அவள் கேட்கவும் அவனுக்கு நெஞ்சை அடைத்தது. வேகமாகத் தண்ணீரை எடுத்துப் பருக அப்படியே புரை ஏறியது.
ஒரு நொடிக்குள் பதறிப்போனாள் குயிலி. வேகமாக எழுந்து வந்து அவனது தலையைத் தட்டி நெஞ்சை நீவி விட, அவளுடைய ஸ்பரிசமே அவனை ஆசுவாசப்படுத்தியது.
“இதுக்குதான், இதுக்குதான் அவனை உங்க கிட்ட இருந்து தள்ளி வைக்காம விட்டுக் கொடுத்துட்டுப் போயிட்டு இருக்கேன். அதை நீங்க யாருமே புரிஞ்சிக்க மாட்டேங்கறீங்க. பொதுவா அடுத்தவங்க உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுக்காம அடமென்ட்டா தான் நினைச்சதை சாதிச்சிட்டுப் போயிட்டே இருக்காங்க பாருங்க அவங்க நினைக்கறதெல்லாம் நினைக்கற மாதிரி அப்படியே ஸ்மூத்தா நடந்துடும்.
ஆனா என்னை மாதிரி டென்டர் ஹார்ட்டடா இருக்கறவங்கதான் மனசாட்சிக்குக் கட்டுப்பட்டு விருப்பு வெறுப்புகளுக்கு நடுவுல மாட்டிட்டு அவதிப் படறோம். அதையே அட்வான்டேஜா எடுத்துட்டு அவங்க அவங்க இஷ்டத்துக்கு என்னை ஆப்பரேட் பண்ண ட்ரை பண்ணிட்டு இருக்கீங்க” என அவள் படபடக்க, “சாரி குயிலி, உன் விருப்பத்தை மீறி இங்க எதுவுமே நடக்காது. இது கூட எல்லாமே உன்னைக் கேட்டுட்டுதான” என்றவனை முடிக்கக் கூட விடவில்லை அவள்.
“என்ன உன்னைக் கேட்டுட்டுதான? ஃபங்க்ஷன் பண்றோம்னு கண்ணன் மாமா கேட்டதாதான் அப்பா சொன்னாங்க. நானும் உங்க கூட உட்கார்ந்து செய்யணும்னு அப்ப அவர் சொல்லவே இல்லை. அப்பறம் ஒவ்வொன்னா இழுத்து விடறீங்க” என அவள் பொரிய, “பெரியம்மாதான்... சாரி” என்றான் அவன்.
“இன்னும் எவ்வளவு சாரி சொல்லப் போறீங்க” என்று அவள் கேட்க, பதிலே சொல்ல இயலவில்லை அவனால்.
சில நிமிடங்கள் மௌனமாக இருந்தவன், “ப்ளீஸ், இந்த தடவ மட்டும் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. இனிமேல் இப்படியெல்லாம் நடக்காம பார்த்துகறேன்” என்றவன், “என் டாட்டர் நிலா இருக்கா இல்ல” எனத் தன்னை மறந்து சொல்லிவிட்டவன், அவள் பார்த்த பார்வையில் அதை உணர்ந்து, மறுபடி “சாரி...” என்றான்.
ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு ‘சாரி’ சொல்கிறானே என மனதுக்குள் சலித்தபடி அவள் அமைதியாக கவனிக்க, “உண்மையைச் சொல்லணும்னா... அவளை என் டாட்டர்ன்னு சொல்லிக்கற உரிமை கூட எனக்கு கிடையாது. அவளுக்கு மூணு வயசு வரைக்கும் என் கைக்குள்ள வெச்சு நான்தான் அவளை வளர்த்தேன். ஆனா அதுக்குப் பிறகு எல்லாமே என் கை மீறிப் போயிடிச்சு. டைவர்ஸ், குழந்தை கஸ்டடி கேஸ்ன்னு வருஷக் கணக்கா கோர்டுக்கு அலைஞ்சேன். ஒரு ஸ்டேஜ்ல ஃப்ரஸ்ட்ரேட் ஆகி மொத்தமா விட்டுக்கொடுத்துத் தோத்துப்போய் புற முதுகு காட்டி ஓடி வந்தேன்” என அதிகம் உணர்ச்சிவசப்பட்டவன்,
“ஹை வேஸ்ல கார்ல லாங் டிரைவ் போகும்போது, சம் டைம்ஸ் நம்மள மீறி கண்ணு சொருகிடும் தெரியுமா? அந்த மாதிரி நேரத்துலதான் நிறைய அக்சிடென்ட்ஸ் நடக்கும்.
நம்ம கவனக்குறைவால நமக்கு ஏதாவது ஆனா கூட தப்பில்ல, ஆனா எதிர்ல வரவங்களுக்கு ஏதாவது டேமேஜ் ஆனா அது நம்மள குற்ற உணர்ச்சிக்குள்ள தள்ளிடும் இல்லையா.
அக்சிடென்ட் பண்ணிட்டு பயந்து போய், ஹிட் அண்ட் ரன்னுன்னு திரும்பிப் பார்க்காம தப்பிச்சு ஓடிக்கூட போயிடலாம். ஆனா அடிபட்டவனுக்குப் பெரிய இஞ்சுரி ஏற்பட்டாலோ ஏன் உயிரேக்கூட போயிட்டாலோ பாவின்னு சொல்லி இடிச்சிட்டுப் போனவன சபிக்க மாட்டாங்க.
நல்லவனா இருந்தா இதையெல்லாம் நினைச்சு காலத்துக்கும் அந்த விபத்து அவனைக் குற்ற உணர்ச்சியோடவேதான வெச்சிருக்கும்?
ஆனா நம்ம மனசாட்சி இடம் கொடுக்காம, குற்ற உணர்ச்சியைத் தூக்கிச் சுமக்க முடியாம, அதுக்கான பொறுப்பை ஏத்துட்டு முன்ன போய் நின்னா நல்லவன்னு மெடலா கொடுக்கப் போறாங்க? இல்லல்ல. அப்ப கூட தண்டனை, அபராதம் எல்லாம் உண்டுதான.
அதே நிலைமைதான் எனக்கும். நிறைய தண்டனையும் அனுபவிச்சுட்டேன். இன்னைக்கு வரைக்கும் அபராதமும் கட்டிட்டு இருக்கேன். ஆனா குற்ற உணர்ச்சியோடவும் இருக்கேன்.
இதுல எனக்கு இப்ப கிடைச்சிருக்கற சின்ன ஆறுதல் நீயும் சரணும்தான். மறுபடியும் என்னைத் தள்ளி வெச்சு எனக்கு தண்டனைக் கொடுத்துடாத குயிலி, ப்ளீஸ் ஐ பெக் யூ” எனத் தழுதழுத்தான் அவன்.
அவளுக்கு மிகவும் சங்கடமாகிப் போனது.