top of page

Valasai Pogum Paravaikalaai - 16

16.குற்றமுள்ள நெஞ்சு


பித்துப் பிடித்தவன் போல அமர்ந்திருந்தான் சூர்யா!


டிங்... டிங்... டிங்... என வாட்ஸ்-ஆப்பில் தகவல்கள் வந்தவண்ணம் இருந்தன.


வேறொன்றும் இல்லை, இவன் கேட்டிருந்த குயிலியின் பிரத்தியேகப் படங்கள்தான் அவை.


அவனுடைய தங்கை அவளைப் படம்பிடித்துச் சுடச்சுட அனுப்பிக்கொண்டே இருந்தாள்.


அதைத் திறந்து பார்க்கதான் கொஞ்சமும் துணிவில்லை அவனுக்கு!


பிறந்தது முதல் இன்று வரை துன்பம் என எதையுமே பெரியதாக அனுபவித்ததில்லை அவன். ஆசைப்பட்ட அனைத்தும் சுலபமாகக் கை சேர்ந்துவிடும். நினைத்தது நினைத்தபடி தப்பாமல் நடக்கும். அப்பா, பெரியப்பா, சித்தப்பா மூவருமே அவன் எள் என்பதற்கு முன் எண்ணையாக நிற்பார்கள். தப்பித்தவறி அவர்கள் சற்றே அயர்ந்தாலும் கூட பாட்டி அவர்களை ஆட்டிப் படைத்துவிடுவார். வீட்டுப் பெண் பிள்ளைகளுக்குக் கூட அவ்வளவு சலுகைகள் கிடைக்காது.


இயல்பிலேயே அவன் படிப்பில் கெட்டி. எனவே ஆசைப்பட்ட துறையைத் தேர்ந்தெடுத்துப் படிக்க முடிந்தது. விருப்பப்பட்ட வேலையும் கிடைத்துவிட உச்சாணிக் கொம்பில் ஏறி உட்கார்ந்திருந்தான்.


அவனுடைய விருப்பப்படி திருமணம் மட்டும் நடந்து முடிந்ததென்றால் அவனது வாழ்க்கையே முழுமைப் பெற்றுவிடும் என்கிற நிலையில் குயிலி அவனுக்குச் சரியான தேர்வாகத் தெரிந்தாள். அவளுடைய அடக்கமான அழகில் கொள்ளைப் போய் கனவில் மிதக்கத் தொடங்கினான். ஆனால் அந்தச் சுகமான கனவுதான் முந்தைய இரவுடன் முற்றிலுமாகக் காலாவதியாகிப் போனது.


கையில் கிடைத்தப் பொருட்களை எல்லாம் அவன் மீது விசிறி அடித்து, ரத்தம் கசியும் அளவுக்கு அவனது முகமெல்லாம் கீரி, வெறிப் பிடித்து ஆவேசம் வந்தவள் போல அவனைச் சுருட்டி அடித்துவிட்டுப் போயிருந்தாள் மமதி.


சில மாதங்களாக எந்த ஒரு காரணத்திற்காகவும் அவன் அவளைத் தொடர்புகொள்ளவில்லை. ஏன் ஒரு குறுந்தகவல் கூட அனுப்பவில்லை. அவளேதான் அவனைத் தேடி வந்தாள். மது அருந்திவிட்டு போதையின் பிடியில் வேறு இருந்தாள். அவனாக அவளை நெருங்கவும் இல்லை. அசந்தர்ப்பமாக நெருங்கியபின் அதை அவள் தடை செய்யவும் இல்லை. நடந்த குற்றத்தில் இருவரின் பங்கும் சரிவிகிதத்திலிருந்தாலும், "உன்னைப்போய் நல்லவன்னு நம்பி இங்க வந்தேனே! என் புத்தியைச் செருப்பால அடிக்கணும். மத்தவனுங்களாவது பரவாயில்லை, கேவலமா இருந்தாலும் நேரடியா அப்ரோச் பண்ணானுங்க. ஆனா நீ சந்தர்ப்பத்தை நல்லாவே யூஸ் பண்ணிட்ட" என எல்லாத் தவறுகளையும் அவன் மீதே சுமத்தியிருந்தாள்.


ஆனாலும் எதையும் அலசி ஆராயும் மனநிலையில் அவன் இல்லை. தான் சற்று விழிப்புடன் இருந்திருந்தால் இப்படி ஒரு கொடுஞ்செயல் நடந்திருக்காது எனத் தன்னை எண்ணியே அருவருத்தான்.


தன் உடல் முழுதும் எண்ணையைத் தடவிக்கொண்டு தீக்குழிக்குள் இறங்கிவிடலாம் என்று தோன்றியது.


பாலியல் வன்கொடுமைகளைப் பற்றிய செய்திகளைக் கடக்கும் போதும், ‘ச்சச்ச... ஒரு பெண்ணைப் பாலியல் பொருளாகப் பார்ப்பது எவ்வளவு கேவலம். ஒரு மிருகத்தைப் போல நடந்துகொள்ள இவர்களால் எப்படிதான் முடிகிறதோ?! இவர்களெல்லாம் மனிதப் பிறவியே இல்லை?’ என நியாயவானாகக் குரலெழுப்பும் அவனது மனசாட்சி, 'என்னதான் குடித்திருந்தாலும் தன் அக்காவோ தங்கையோ அந்த இடத்தில் இருந்திருந்தால் இப்படிதான் நடந்துகொள்ளத் தோன்றுமா?' என அவனைப் பார்த்துக் காரி உமிழ்ந்தது.


கைப்பேசியை அணைத்து வைத்துவிட்டு, வெளியுலகத் தொடர்பே இல்லாமல் ஒரு வாரம் வரை ஊன் உறக்கமின்றி அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தான். உயிர் வாழும் ஆசையே விட்டுப்போயிருந்தது. ஒரு நிலையில் எதையாவது செய்து உயிரைப் போக்கிக்கொள்ளும் எண்ணம் மேலோங்கவும் நொடி நேரத்திற்குள் சுதாரித்தவன் ஆபத்தான அந்தத் தனிமையிலிருந்து விடுபட அவசரமாகக் கிளம்பி அலுவலகம் சென்றான்.


தினமும் சந்திக்கும் மனிதர்களைப் பார்த்த பிறகு மனம் சற்றுத் தெளிந்தது. மாலை வீடு திரும்பியவன் ஊருக்கு அழைத்து எல்லோரிடமும் பேசினான். பிடித்த உணவாகச் சமைத்து முழுவதுமாக வயிற்றை நிரப்பினான். மனது சமநிலைக்கு வந்திருந்தது.


இரவு முழுவதும் யோசித்து நடுநிலையான ஒரு முடிவுக்கு வந்தவன் மமதியைத் தேடி அவளுடைய வீட்டுக்குப் போனான். இன்னும் மூன்று பெண்களுடன் சேர்ந்து அங்கே தங்கியிருக்கிறாள் என்பதால் அவனுக்குக் கொஞ்சம் சங்கடமாகதான் இருந்தது. ஆனாலும் பிரச்சனைக்குத் தீர்வு காணும் எண்ணம் மட்டுமே மேலோங்கி இருந்தது.


ஆனால் அவளோ, “வா சூர்யா! எப்படி இருக்க?!” என எதுவுமே நடக்காதது போல வெகு சகஜமாக அவனை எதிர்கொண்டாள்.


எப்படியும் இவன் தன்னைத் தேடி வருவான் என்கிற அலட்சிய பாவம்தான் அவளிடம் தெரிந்தது.


அவனை அமரச்சொல்லிவிட்டு சமையலறை நோக்கிப் போனவள் கையில் காஃபி கோப்பைகளுடன் திரும்ப வந்தாள்.


அவனுக்காகக் கொடுத்ததை அப்படியே தேநீர் மேசை மேல் வைத்துவிட்டு, “உன் ஃப்ரெண்ட்ஸ் யாரும் இல்லையா?” எனத் தயக்கத்துடன் கேட்டவன், “ஏதோ மூவி பார்க்க போயிருகாங்க” என அவள் சொன்ன பதிலில் சற்று நிம்மதியுற்றான்.


மேற்கொண்டு சுற்றி வளைக்காமல், “நாம வேணா கல்யாணம் பண்ணிக்கலாமா?” என அவன் பட்டெனக் கேட்டுவிட அவளுக்குப் பக்கெனப் புரையேறியது.


ஏதோ நகைச்சுவையைக் கேட்டவள் போலக் கண்களில் நீர் திரளும் அளவுக்குச் சிரித்தவள், “ஹேய்... கம் ஆன் மமதி. ஐம் சீரியஸ்’ என அவன் கடுப்பாகவும், “யா... ஓகே... ஓகே” எனத் தன்னை சமன் செய்துகொண்டாள்.


“அப்ப அந்த குயிலிய என்ன பண்ணபோற?” என அவள் வெகுத் தீவிரமாகக் கேட்கவும், அது வெறும் கற்பனை என்றாலும் உள்ளுக்குள்ளே குமுறியது அவனுக்கு.


“ப்ச்... அதைப் பத்தி உனக்கு என்ன கவலை? வீட்டுல வேண்டாம்னு சொல்லிக்கறேன். நீ இப்ப நான் கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லு” என்றான் கண்டனமாக.


“எனக்கு சிரிப்புதான் வருது. காமடி பண்ணாத சூர்யா” எனக் கிண்டலாகச் சொன்னவள், “அந்தப் பொண்ண உனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இல்ல! தென் ஏன் இந்த தியாக டிராமாலாம்” என்றவள் ஏதோ சொல்ல வந்தவனைத் தடுத்து, “எனக்கு முதல்ல ஷாக்காதான் இருந்துது. பட் உடனே தெளிஞ்சுட்டேன். அதனாலதான் இப்ப வரைக்கும் உன்னைத் தேடி வரல. இந்த மாதிரி ரீசன்காகல்லாம் கல்யாணம் செஞ்சுக்க முடியாது சூர்யா. மோர் ஓவர் என்னோட எதிர்பார்ப்புக்கு நீ சரியான சாய்ஸ் இல்ல. அத மொதல்ல புரிஞ்சிக்கோ.


ஒரு பத்து நிமிஷம் உன் கூட பேசினாக்கூட அதுல பாட்டி... அம்மா... அக்கா... தங்கச்சின்னு ஒரு கூட்டத்தையே கூட்டிட்டு வந்துடுவ. இதெல்லாம் எனக்கு அலர்ஜி யூ நோ! அதோட இல்லாம நீ என்னை விட வயசுல சின்னவன். ஸோ ஒரு மரியாதையோட உன்னை என்னால நடத்த முடியாது” என்று அவள் சொல்லிக்கொண்டே போக அவமானத்தில் அவனது முகம் கறுத்துப்போனது. அதை அவள் கண்டுகொள்ளவே இல்லை.


“நீ சொல்ற மாதிரி நாம கல்யாணம் செஞ்சுட்டலும் எனக்கு ஒரு ஏமாந்த ஃபீல்தான் இருக்கும். எப்படியும் நம்ம ரெண்டு பேரைப் பொறுத்தவரைக்குமே லவ்ங்கறது கல்யாணத்துக்குப் பிறகுதான்னு ஆயிடுச்சு. ரெண்டு பேரோட எக்ஸ்பெக்டேஷன்ஸும் வேற சாய்சும் வேறன்னு இருக்கும்போது உனக்கும் என் மேல லவ் வராது. எனக்கும் உன் மேல லவ் வராது. பெட்டர் நீ அந்த மயிலியையே மேரேஜ் பண்ணிக்கோ” என சர்வசாதாரணமாகச் சொல்லி முடித்தாள், இந்த வார்த்தைகளே அவர்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கு குழிபறிக்கப் போகிறது என்பதை அறியாமலேயே!


“அது மட்டும் என்னால முடியாது மமதி. கில்டி ஃபீல்லையே செத்துடுவேன் போலிருக்கு” என அவன் தன் மனதை மறைக்காமல் குரலை உயர்த்த, “நான்சன்ஸ்... நானே கில்டி ஆகல. நீ ஏன் ஆகற” என எரிச்சலுற்றவள், “எனக்கு மேரேஜ் ஃபிக்ஸ் ஆயிடுச்சு சூர்யா. ஒரு மேட்ரிமோனியல் சைட்ல பார்த்து நான்தான் சூஸ் பண்ணேன். எல்லாமே என் எக்ஸ்பெக்டேஷன் படி பக்காவா அமைஞ்சிருக்கு. அவனோட பேர் கார்முகிலன்! எம்.எஸ் படிச்சிருக்கான். இப்ப அமெரிகால இருக்கான். கிரீன் கார்ட் வாங்கிட்டு அங்கேயே செட்டில் ஆகர ஐடியலதான் இருக்கான். ஹி இஸ் எ சிங்கிள் சைல்ட். அவனுக்கு அம்மா கிடையாது. அப்பா மட்டும்தான். ஹி இஸ் அன் ஆர்த்தோ டாக்டர். அடையார்ல சொந்தமா பங்களா இருக்கு. டூ டேஸ் பேக் நேர்ல கூட மீட் பண்ணிப் பேசிட்டோம். பிடிச்சிருக்கு ஓகேன்னு சொல்லிட்டான். டூ டேசா டே அண்ட் நைட் பேசிட்டேதான் இருக்கோம். வீட்டுல மேரேஜுக்கு டேட் ஃபிக்ஸ் பண்ணிட்டாங்க. நெக்ஸ்ட் மந்த் இண்டியா கிளம்பறேன்” என அவனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சிக் கொடுத்தாள்.


“அப்படின்னா எல்லாத்தையும் அவர் கிட்ட சொல்லிட்டியா” எனக் கேட்டான் உள்ளே போன குரலில்.


“ஹேய்... லூசாடா நீ? அப்படியே உண்மை விளம்பி மாதிரி எல்லாத்தையும் எல்லார்கிட்டயும் சொல்லிட்டு இருக்கணும்னு எந்த அவசியமும் இல்ல! முதல்ல அதைப் புரிஞ்சிக்கோ. இப்ப இருக்கற லைஃப் ஸ்டைல்ல இப்படிப்பட்ட ஃப்ரீ மேரிட்டல் செக்ஸ் மாதிரியான விஷயங்கள் ரொம்ப சகஜம். ரொம்ப ஓவரா சீன் போடாம ஃப்ரீயா விடு. நீயும் இதையெல்லாம் வெளியில சொல்லிட்டு உன் வாழ்கையைக் கெடுத்துக்காத” என்றாள் சர்வ அலட்சியமாக.


அவள் பேசும் எதையும் கொஞ்சம் கூட ஜீரணிக்கவே இயலவில்லை அவனால்.


அவன் அடைந்த மன உளைச்சலில் அப்படி ஒரு ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது. “அதுதான் ரொம்ப சகஜம்னு நீயே சொல்லிட்டியே, தென் அதை மூடி மறைக்காம சொல்லிட்டே இந்தக் கல்யாணத்தை நீ பண்ணிக்கலாமேடீ. எதுக்கு இந்தப் போலி வேஷமெல்லாம்” என அவன் கொதிக்க அதில் உண்டான அவமானத்தில் அவளது கோபம் எல்லையைக் கடந்தது.


“என்ன செய்யணும் என்ன செய்யக் கூடாதுன்னு எனக்கு நல்லாவே தெரியும். உன்னோட அட்வைஸ் எதுவும் எனக்குத் தேவையில்ல. நீ வேணா உண்மை விளம்பியா இருந்துட்டு போ!, என்னை இதுல இழுத்து விடாத. இப்ப மரியாதையா வெளியில போடா” என சீறியபடி அவனது சட்டையின் காலரைப் பிடித்திழுத்து அவனை வெளியில் தள்ளியவள்தான் ஒரு நாள் தனக்கான அங்கீகாரத்தைத் தேடி அவன் வீட்டுக்குள் வந்து நின்றாள் அவனுக்கு உணர்வு ரீதியிலான ஒரு நெருக்கடியைக் கொடுத்தபடி.


*********


அவளுடைய வீட்டில் அவனுக்கு ஏற்பட்ட அவமானம் ஒரு விதத்தில் அவனைக் குடைந்துகொண்டிருந்த குற்ற உணர்ச்சியிலிருந்து வெளிவர ஒரு முக்கிய காரணமாக இருந்தது.


‘ஒரு பெண்ணே இவ்வளவு தெளிவாக இருக்கும்போது நமக்கென்ன இருக்கிறது. இதற்கு போய் ஏன் வருந்தவேண்டும்?! என்று எண்ணித் தன்னைத் தேற்றிக்கொள்வான்.


‘முதன் முதலில் மது அருந்திய பொழுதும் இப்படிதானே குற்ற உணர்ச்சிக்கு ஆளானோம். சித்தப்பாவின் முன் தலை குனித்து அதை சொன்ன பொழுது, 'உனக்கு தெரியாத நல்லது கெட்டது இல்ல தம்பி. இந்தப் பழக்கம் உன் ஹெல்த்தை அழிக்காம பார்த்துக்கோ' என நம்பிக்கை வைத்து அவர் பேசியபின் தெளிந்தொமே! அதேபோலதான் இதுவும். போகப்போக சரியாகிவிடும்’ என தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொள்வான். "ஆனாலும் இந்தப் பழக்கத்தால் வந்த பாதகம்தனே இது' என மீண்டும் மனமென்னும் இந்த வேதாளம் முருங்கை மரம் ஏறிவிடும்.


‘இவ்வளவு பெரிய விஷயத்தை இவ்வளவு சாதாரணமா பேசினாளே! துணித்து ஒருவனுக்குத் துரோகம் இழைக்கப் போகிறாளே! குடிக்கிறாள், பலருடன் பழகுகிறாள். காதல் தோல்விகள் வேறு இருக்கிறது. இவள் எப்படி கன்னி விரதம் பூண்டிருப்பாள்?’ எனக் கேவலமாக எண்ணி தன் செயலுக்கு நியாயம் தேடுவான்.


அடுத்த நொடியே, கடவுளை நிந்தித்துவிட்டு பயத்துடன் கன்னத்தில் போட்டுக்கொள்ளும் பக்தன் போல தன் குடும்பப் பெண்களை அவளுடன் ஒப்பிட்டு, செய்யும் பாவத்தையும் செய்துவிட்டு தான் இப்படியெல்லாம் நினைக்கப்போக அவர்களுக்கு எதுவும் தீமை வந்துவிடக்கூடாதே எனக் கிடந்தது மருகுவான்.


இப்படியே நாட்களை ஓட்டியவன் ஒரு நாள் துணித்து, அவனுடைய செல்ஃபோன் கேலரி முழுவதும் நிறைந்திருந்த, அதுவரைப் பார்க்காமல் விட்டுவைத்திருந்த குயிலியின் படங்களை ஒவ்வொன்றாகப் பார்த்துத் தீர்த்தான்.


ஒரு வழியாக அவனுடைய ப்ராஜெக்டும் முடிய அந்த நேரம் பார்த்து சரியாக அவனுடைய பெரியப்பாவின் அறுபதாம் கல்யாணம் வரவும் விடுப்பு எடுத்துக்கொண்டு சென்னையில் வந்து இறங்கினான்.


வெறும் மெய் நிகர் பிம்பமாக இருக்கும்போதே அவனது உயிரைக் குடித்தவள் நேரில் சந்தித்த பிறகு அவனது உடல் பொருள் ஆவி அனைத்தையும் தனதாக்கிக் கொண்டாள்.


அவனுடைய தங்கையின் திருவிளையாடலால் கமலக்கண்ணன் திருமணப் பேச்சைத் தொடங்கிவிட, அது அடுத்தடுத்த நிலைக்கும் செல்ல, மமதி செய்ததுபோல மூடி மறைத்து ஏமாற்றி அவளை மணக்க அவனது மனம் இடங்கொடுக்கவில்லை.


மனமுவந்து அவள் தன்னை மணந்தால் மணக்கட்டும் இல்லையென்றால் நடப்பது நடக்கட்டும் என்ற முடிவுடன் எப்படியோ ஒரு வழியாக மென்று விழுங்கி அவளிடம் அனைத்தையும் சொல்லி முடித்தான்.


அவனே சற்றும் எதிர்பாராத விதமாக தன்னில் சரிபாதியாக அவனை ஏற்றுக்கொண்டாள் அவள்.


அவள் தான் சொன்னதைச் சரியாகப் புரிந்துகொண்டாளா இல்லையா என்ற குழப்பம் அவனுக்குள் எழுந்தாலும் எதையும் விலாவாரியாக விளக்கிப் புரிய வைத்து அவளை இழக்க அவனுக்குத் துணிவில்லாமல் போனது.


குயிலி என்னும் சுழலுக்குள் சுகமாகத் தன்னை மூழ்கடித்துக் கொண்டான். கேரள படகு இல்லத்தில் அவளுக்குள் மூழ்கி முத்தெடுத்த நாட்களை தன் ஆயுள் முழுவதும் ரசித்து ரசித்து படிக்க தன் மனமென்னும் கல்வெட்டில் செதுக்கி வைத்தான். ஆனால் அவை மட்டுமே அவனது வாழ்க்கையின் வண்ணமயமான நாட்கள் என்று ஆகிப்போனதுதான் கொடுமை.

1 comment

1 Comment

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
Sumathi Siva
Sumathi Siva
Sep 05, 2022

Wow awesome

Like
© KPN NOVELS COPY PROTECT
bottom of page