top of page

TIK-35

இதயம்-35

மல்லியின் அலறலில் அவளை நோக்கி ஓடிய சுமாயா, “மேம் என்னாச்சு” என்றவாறு அவளது கைகளை பிடித்துக்கொள்ள, மல்லியின் உடல் நடுங்கிக் கொண்டிருந்தது. தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடைப்பட்ட நிலையில், தான் எங்கே இருக்கிறோம் என்பதே புரியவில்லை மல்லிக்கு. அதுவும் அங்கே சுமயாவைப் பார்த்தவள் வெகுவாகப் பதறிப்போனாள். அம்முவின் நிலையும் ஆதி மருத்துவமனையில், அந்த அறையில் உணர்வின்றி படுத்திருப்பது போல் கனவில் அவள் கண்ட கட்சிகளும் மட்டுமே மனதில் இருக்க, “அம்மு! மாம்ஸ்!” என்று மறுபடி மறுபடி சொல்லிக்கொண்டே கதறி அழத் தொடங்கினாள் மல்லி. அவளைச் சமாதானம் செய்யமுடியாமல் சுமாயா திகைத்துப்போய் நிற்க, அவளது கைப்பேசி ஒலித்தது. ஆதிதான் அழைத்திருந்தான். “ஒண்ணுமில்ல சுமா கனவு கண்டிருக்கா. நீங்க போனை ஸ்பீக்கர்ல போட்டு அவளிடம் கொடுத்துட்டு கீழே போய் அவளுக்குக் குடிக்க ஏதாவது எடுத்துட்டு வாங்க” என்று அவன் சொல்ல, அவன் சொன்னது போலவே கைப்பேசியை அவளிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றாள் சுமாயா. “மல்லி! எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லைப்பா. இன்னும் கொஞ்ச நேரத்துல நான் அங்கே வந்துடுவேன் கவலைப்படாதே!” என ஆதி சொல்லவும், அவனது குரலில் கொஞ்சம் உணர்வுக்கு வந்தவள் சுற்றும் முற்றும் பார்க்க அப்பொழுதுதான் நிலைமை புரிந்தது மல்லிக்கு. அதற்குள் சுமாயா பழரசத்தை அவளிடம் நீட்டவும், அவள் ஏன் இங்கே இருக்கிறாள் என்று புரியாமல் அவளது முகத்தைப் பார்த்துக்கொண்டே அதை வாங்கிப் பருகினாள் மல்லி. “மாம்ஸ்! எப்ப வருவீங்க எனக்கு ரொம்ப பயமா இருக்கு!” மல்லி சொல்லவும் மற்றொரு கைப்பேசியின் திரையில், கண்காணிப்பு கேமரா வழியாக அவளைப் பார்த்துக்கொண்டே ஆதி அழுத்தத்துடன், “முக்கியமான வேலை ஒண்ணு இருக்கு மல்லி. முடிச்சிட்டு இன்னும் ஒன் ஹார்ல வந்திடுவேன். மெடிசின் எடுத்திருக்க மல்லி. அதனால இன்னும் கொஞ்ச நேரம் தூங்கு” என்று கூறி விட்டு சுமாயாவிடம், “டேக் கேர் சுமா நான் வர வரைக்கும் மல்லியை பாத்துக்கோங்க” என்று கூறி விட்டு அழைப்பைத் துண்டித்தவன், கோபாலை நோக்கி, “சொல்லு கோபால் நீ எப்படி வினோத் கூட சேர்ந்த?” என மிரட்டலாகக் கேட்டான் ஆதி. சொல்லத் தொடங்கினான் கோபால். வினோத் அவனை அங்கிருந்து, விரட்டவும் கார் பார்க்கிங் பகுதியை அடைந்த கோபால் காரில் ஏறி உட்கார்ந்துகொண்டு அதன் உள்ளே பதுக்கிவைத்திருந்த மது பாட்டிலைத் திறந்து அதை குடிக்கத் தொடங்கினான். ஒன்று இரண்டு என மூன்று குவார்ட்டர்களை அவன் உள்ளே ஊற்றிக்கொள்ள, போதையில் தள்ளாடியபடி அமர்ந்திருந்தவன், “ஏய் அம்மு! நீ என்ன பெரிய இவளாடி மினிஸ்டர் பையன் செஞ்ச கொலையெல்லாம் தெரிஞ்சிவச்சிருக்க! அந்த டாக்டர் உன்ன காப்பாத்தினா கூட எப்படியாவது இதை அந்த மினிஸ்டர்கிட்ட சொல்லி உன்னை போட்டுத்தள்ளல நான் கோபால் இல்லடி” என்று உளறத் தொடங்க, திறந்திருந்த கண்ணாடி வழியாக அவன் சொன்னது அனைத்தும் அங்கே நின்று கொண்டிருந்த ரத்தினத்தின் காதுகளில் தவறாமல் விழுந்தது. அவனை நெருங்கி அவனது கன்னத்தில் தட்டியவன், “என்னடா அந்த ஆதி தங்கையை பத்தியா பேசற?” என ரத்தினம் கேட்க போதையில் நடந்த அனைத்தையும் அவனிடம் உளறினான் கோபால். பின்பு அவனுடைய ஆட்கள் மூலம் அங்கிருந்து அவனை அப்புறப் படுத்தினான் ரத்தினம். அங்கே அந்த மருத்துவமனையிலேயே எதோ ஒரு அறையில் அவனை அடைத்துவைத்திருந்தனர். அடுத்த நாள் அவன் சுய நினைவிற்கு வரும் நேரத்தில் அம்மு என்ற ஒரு பெண் இல்லாமலேயே போயிருந்தாள். குணாவுடன் அவன் இருந்த அறைக்குள் வந்த ரத்தினம், அம்மு இறந்த செய்தியை அவனிடம் சொல்லி, அம்மு பேசிய காணொளியை அவனிடம் காண்பிக்கவும் முதலில் பயந்துதான் போனான் கோபால். “ஐயோ! இதெல்லாம் பொய்ங்க அந்த மாதிரில்லம் எதுவும் கிடையாது என்னை விட்டுடுங்க” என அவன் கெஞ்சவும், “அது எங்களுக்கும் தெரியும் தம்பி. ஆனா நீ இதை பொய்னு போய் வெளிய சொன்ன, அந்த ஆதி உன்னை உயிரோட கொளுத்திடுவான். அதனால உண்மைன்னு ஓத்துக்கோ. உன்னையும் போட்டுடலாம்னு தான் ரத்தினம் அய்யா சொன்னாங்க. தேவை இல்லாம சந்தேகம் வரும்னு டாக்டர்தான் வேண்டாம்னு சொல்லிட்டாரு. அதனால நீ பொழைச்ச. உன் கல்யாணத்துக்கு பணம் கொடுப்பாங்க, அதை வாங்கிட்டு நீ இப்படியே ஓடிப் போயிரு. இல்ல உனக்குக் கல்யாணம் நடக்காது கருமாதிதான் நடக்கும்” என குணா மிரட்ட, அந்தச் சூழ்நிலை தனக்கும் சாதகமாக அமையவே அவர்கள் சொன்னதற்கு ஒத்துக்கொண்டான் கோபால். அன்றே ஒரு கணிசமான தொகை ரொக்கமாக அவன் கைகளுக்கு வந்து சேரவும் சந்தோஷத்தில் வானத்தில் பறக்கத்தொடங்கினான். துக்க வீட்டில் எதையும் காட்டிக்கொள்ளாமல் இயல்பாகவே இருந்தான் கோபால். அம்முவின் மரணத்திற்குப் பிறகு இரண்டு தினங்களில், கோபாலின் திருமண ஏற்பாடு குறித்து தெரிய வர, தன் எதிர்காலம் குறித்து நம்பிக்கை இழந்த அன்னம், அருளாளன் உபயோகப் படுத்தும் தூக்கமாத்திரைகளை அவளது வீட்டிற்கு எடுத்துச்சென்று உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றாள். அவள் மயக்கமாக இருக்கிறாள் என்று நினைத்து கோபாலைத்தான் உதவிக்கு அழைத்தார் ராணி. அன்னத்தை அந்த நிலையில் கண்டு பயந்துபோனவன், அவள் மெலிதாக சுவாசிப்பது தெரியவும் அவர்கள் வீட்டிற்கு அருகிலேயே இருந்த வினோத்திற்கு சொந்தமான சிறிய மருத்துவமனைக்கு ஆட்டோவில் போட்டு அவளைத் தூக்கிச் சென்றான். பயத்திலும் தயக்கத்திலும் ராணி வெளியிலேயே நின்றுவிட, அங்கே இருந்த பரிசோதனை அறைக்குள் அன்னத்தை தூக்கிக்கொண்டு நுழைந்தான் கோபால். அந்த நேரத்தில் அங்கே நோயாளிகளைப் பரிசோதித்துக்கொண்டிருந்த வினோத், முதலில் கோபாலை பார்த்து அதிர்ந்து, பின்பு அவனைத் தனியாக அழைத்துச்சென்று, “எதுக்கு இங்கேயெல்லாம் வந்துட்டு இருக்க திமிரா?” என பல்லைக் கடிக்க, “ஐயோ! இல்ல சார் அந்த பொண்ணுக்கு எதோ உடம்பு சரியில்ல மயக்கமாயிடிச்சி அதுக்கு எதாவது ஆச்சுன்னா பிரச்சனை ஆயிடும் சார்!” என கோபால் நிலைமையை விளக்கவே, அன்னத்தைப் பரிசோதித்தான் வினோத். அதற்குள் அவளது உயிர் பிரிந்திருந்தது. ஏற்கனவே இதயம் ராஜவேலுவிற்கு பொருத்தப் பட்டிருக்க, அம்முவின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட மற்ற உறுப்புகள், கேர் ஃபார் லைஃப்பில் வைத்து வெளிநாட்டவர் நான்குபேருக்குப் பொருத்தப்பட்டிருந்தன. பிரச்சனை இல்லாமல் அதைச் சட்டப்பூர்வமாக மாற்ற என்ன செய்யலாம் என்று வினோத் யோசித்துக்கொண்டிருக்க, அன்னத்தின் மரணம் அவனுக்கு அனுகூலமாகப் போனது. அவளுக்கு மாரடைப்பு என்று ராணியை நம்பவைத்த வினோத், “உங்க பொண்ணுக்கு பெரிய ஹாஸ்பிடல்ல வச்சு ட்ரீட்மென்ட் கொடுத்தால்தான் அவளைக் காப்பாத்த முடியும். நான் வேலை செய்யும் ஹாஸ்பிடலுக்கே எடுத்துட்டு போகலாம். செலவைப் பத்தி கவலை படாதீங்க நான் பார்த்துக்கறேன்” என்று அவருக்கு சாதகமாக பேசவும், அதற்கு ஒப்புக்கொண்டார் ராணி. அன்னத்தின் உடலை ஆம்புலன்ஸ் மூலம் கேர் ஃபார் லைஃப் எடுத்துச்சென்று, சிகிச்சை பலனின்றி அவள் இறந்துவிட்டதாகச் சொன்னான் வினோத். ராணியிடம் சில காகிதங்களில் கையெழுத்தைப் பெற்றுக்கொண்டு அன்னத்தின் உடலை அவளிடம் ஒப்படைத்தான் அவன். மகளின் ரத்த வகையைக்கூட அறியாத அந்தப் பெண்மணி, வினோத் பெரியதாக உதவிசெய்ததுபோல் நம்பி என்னவென்றே தெரியாமல் மகளது உடல் உறுப்புகளை தானம் செய்வதற்குச் சம்மதிப்பதாக அந்தக் காகிதங்களில் கையெழுத்திட்டாள். அன்னத்தின் உடலில் சிறிய கீறல் கூட படாமல் அவளது உடல் அடக்கம் செய்யப்பட்டது. கோபால் வாய் திறந்து ஏதும் பேச முடியாதபடி, தனது அனைத்துச் செயல்களுக்கும் அவனை உடந்தையாக ஆக்கிய விநோத், அதன் பிறகு வந்த நாட்களில் தனது நிழல் வேலைகளுக்கு கோபால் மற்றும் குணா இருவரையும் பயன்படுத்திக்கொண்டான். ஆதி கோபாலை மிரட்டி கேட்டபொழுதுகூட அவன் பதில் ஏதும் சொல்லவில்லை. ஆதியிடம் வேலையிலிருந்து விலகியவன், பின்பு வந்த நாட்களில் திலகாவை மணந்துகொண்டு, தனியாகக் கால் டாக்ஸி ஓட்டத் தொடங்கினான். இதற்கிடையில் ராஜவேலு குணமடைந்து வர, சந்தோஷத்தின் உச்சியில் இருந்த தங்கவேலுவிற்கு புத்திசாலித்தனத்துடன், மாட்டிக்கொள்ளாமல் வினோத் செய்த காரியங்களினால் அவன் மீது நம்பிக்கை அதிகமாகிவிட்டது. மேலும் மருத்துவமனையை முழுவதுமாக அவனுக்குக் கொடுக்க மனம் வராமல், தாமரையை அவனுக்கே திருமணம் செய்துவைத்து அதன் பங்குகளை இருவருக்கும் சமமாக எழுதிவைத்துவிட்டார். மகன்களைக் காட்டிலும் வினோத்தையே முழுமையாக நம்பத் தொடங்கினார் தங்கவேலு. உயிருடன் இருக்கும்பொழுதே ராஜவேலு செய்த மாபாதகச் செயலை ஏற்க முடியாமல் துடித்த அம்முவின் இதயம், அவளைக் கொன்று அவனுக்குப் பொருத்தப்பட்ட பின்பு அவனுக்குள் தான் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல், அவனை எதிர்த்துப் போராடி, மெள்ள! மெள்ள! தனது துடிப்பை நிறுத்திக்கொண்டு, மெல்ல! மெல்ல! அவனைக் கொன்று தனது பழியை தீர்த்துக்கொண்டது. ஒரு சமயம் தாமரையிடம் சிகிச்சைக்கு வந்த ஒரு பெண்ணிற்கு கரு முட்டை தேவைப் படவும், அதற்காக அதிக தொகை கொடுக்க அவர்கள் தயாராக இருப்பது அப்பொழுதுதான் வினோத் மூலமாக கோபாலுக்குத் தெரிய வந்தது. பேராசை துளிர்க்க அவன் அம்மா சரசுவைத் தூண்டி, மறுக்க முடியாத நிலைக்குக் கொண்டுவந்து, திலகாவையே அதற்குப் பயன்படுத்திக்கொண்டான் கோபால். அதுவே நாளடைவில் தொடர்கதையாகிப் போனது. நாட்கள் அதன்போக்கில் சென்று கொண்டிருக்க ஒரு சமயம் வெளிநாட்டவர் ஒருவருக்கு மாற்றுச் சிறுநீரகம் தேவைப்பட, திலகாவின் தூரத்துச் சொந்தமான கிட்டுவின் நிலை தெரியவரவும் அவரைக் கரைத்து சிறுநீரகம் கொடுக்க சம்மதிக்க வைத்தான் கோபால். ஆனால் கடைசி நிமிடத்தில் அவர் அதற்கு மறுத்து அங்கிருந்து சென்றுவிட, அந்த நோயாளி இறந்துவிடவும் அது பெரும் பிரச்சினை ஆகிப்போனது வினோத்திற்கு. அதுவும் ஆதி வேறு தாமரையின் முன்னிலையிலேயே அனைத்தையும் கேட்கவும் கொதிநிலைக்கே போயிருந்தான் வினோத். அவர்களது மருத்துவமனையில் இருந்த கண்காணிப்பு கேமராவின் பதிவுகளை ஆராய, மல்லியின் முகம் ஒரே ஒரு இடத்தில் மட்டும் பதிவாகியிருந்தது. ஏனோ அப்பொழுது அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை வினோத். ஆனால் கிட்டு மறுத்துச் சென்றதற்கு மல்லிதான் கரணம் என்பது சில நாட்கள் கழித்து கோபாலுக்கு தெரியவரவும், அடிக்கடி அம்மு சொல்லிக்கொண்டே இருக்கும் மல்லி இவள்தானோ என்ற சந்தேகம் எழ அதை வினோத்திடமும் சொன்னான் கோபால். அவளைப் பற்றி வினோத் விசாரிக்கத் தொடங்க, அம்முவுடன் விடுதியில் தங்கி படித்த அவளது உயிர்த் தோழி மரகதவல்லிதான் அந்த மல்லி என்பது வினோத்திற்கு தெள்ளத்தெளிவாகத் தெரிந்து போனது. அம்மு என்ற அப்பாவிப் பெண்ணின் உயிரைக் குடித்து அவன் எழுப்பிவைத்திருக்கும் அவனது கண்ணாடி மாளிகை, மல்லியால் சிதைந்துவிடுமோ என்ற பயம் அவனது மனதில் எழ அவளை கண்காணிக்கத் தொடங்கினான் வினோத். அதுவும் ஆதி டெக்ஸ்டைல்சிலேயே அவள் வேலைக்குச் சேர்ந்திருப்பது அவனுக்குத் தெரிய வரவும் பதறித்தான் போனான். இருந்தாலும் ஆதியுடன் அவள் நேரடித் தொடர்பில் இல்லாமல் இருப்பது தெரிய வர ஆதியின் கண்களில் அவளைத் தாழ்த்தி காட்டவும் அங்கிருந்து அவளை அப்புறப்படுத்தவும் முடிவு செய்து நேரத்தை எதிர்பார்த்து அவன் காத்திருக்க, அந்த முயற்சிக்கு உதவுவதுபோல் காஞ்சனா அவனுக்குக் கிடைத்தாள். குணா மூலமாக அவளிடம் தொடர்புகொண்டு குறிப்பிட்ட ஒரு மாத்திரையை அவளுக்குக் கொடுத்து அவளை வேறு விதமாக சமூக வலைத்தளங்களில் சித்தரிக்க முடிவு செய்திருந்தான் வினோத். மேலும் அவள் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துகொண்டால் அவனுக்கு இன்னும் வசதியாகப் போய்விடும் என்பதால் அந்த முடிவை எடுத்திருந்தான். ஆனால் காஞ்சனா அந்த மாத்திரையை மல்லிக்குக் கொடுத்த அன்றைய தினம் அனைத்துமே மாறிப்போனது. அதுவும் ஆதியின் வாய் வார்த்தையாகவே மல்லி அவனுக்கு, “ரொ ம்பவே ஸ்பெஷல்தான்!” என்று கேட்கவும் அவனது வஞ்சத்தின் அளவு எகிறிப்போனது. அது ரத்தினத்தின் ஆட்கள் மூலம் லாரியை வைத்து அவளைக் கொலை செய்யும் வரைக்கும் போனது. அதில் தப்பிப் பிழைத்தாள் மரகதவல்லி. அடுத்து கண்ணுக்குப் புலப்படாத எதிரியின், நிழல் கூட அவளை நெருங்க முடியாத வண்ணம் பாதுகாப்பு கோட்டையையே உருவாக்கிவிட்டான் தேவாதிராஜன். அன்று அம்முவை அழிவிலிருந்து காக்கவேண்டுமானால் யாரும் இல்லாமல் போயிருக்கலாம். ஆனால் மல்லியின் உணர்வுகளில் கலந்து அவளை வழிநடத்த அமிர்தவல்லி இருக்கிறாள் என்பதையும், அவள் மரகதவல்லியின் மூலமாகவே உண்மைகளை தேவாதிராஜனுக்கு உணர்த்துவாள் என்பதையும், காலம், அவன் மூலமாக கனவிலும் நினைக்கமுடியாத ஒரு தண்டனையை வினோத்திற்குக் கொடுக்கக் காத்திருக்கிறது என்பதையும் அறிந்திருக்கவில்லை அந்த அறிவிலி!

© KPN NOVELS COPY PROTECT
bottom of page